Sunday, October 14, 2018

ஈயம் பூசலையோ ஈயம் - கிராமத்து வாழ்க்கை 5

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தனிமையில்  பழசை நினைச்சு பார்த்து பழசை  சிலாகிச்சு, முடிவில் ஏக்கப்பெருமூச்சு விட்டு நகர்ந்து போகாதவங்க யாருமே இருக்க மாட்டாங்க. அந்த சிலாகிப்பை, ஏக்கத்தை அப்படியே எழுத்தில் கொண்டு வரமுடியலைன்னாலும், ஏதோ கொஞ்சமாய் கொண்டு வரமுடியுதான்னு பார்ப்போம்
 டேப்ரெக்கார்டர் பத்தி நிறைய சொல்லியாச்சுது. அதனால் இந்த முறை கேசட்டை பத்தி பார்ப்போம். இத்துனியூண்டு மெமரி கார்ட்ல ஆயிரக்கணக்குல பாட்டு இறக்கும் காலமிது. ஆனா, அந்த காலத்தில் அதிகபட்சமா பக்கத்துக்கு எட்டு பாட்டுன்னு மொத்தமா 16 பாட்டுதான் இறக்க முடியும். அதனால், பிடிச்ச பாட்டை மட்டும் எழுதி இறக்கிட்டு வந்து கேப்போம். ஒரிஜினல் கேசட்ல, ஒரே ஒரு படத்தோட பாட்டு மட்டுமே வரும். சில கேசட் கம்பெனிக்காரங்க 2 இல்ல 3 படத்தோட பாட்டுக்களையும் சேர்த்து வெளியிடுவாங்க. டேப்ரெக்கார்டர்க்குள் இருக்கும் நாடா சிலசமயம் சிக்கிக்கும். கேசட்டை பிரிச்சு பொறுமையா திரும்ப சுத்தி பாட்டு கேப்போம்.  
ஸ்க்ரூ ட்ரைவர், விரல்ன்னு வச்சு நாடாவை சுத்தினாலும், ரெனால்ட்ஸ் பென் தான் அதுக்கு பொருத்தமா இருக்கும். வெள்ளை உடலும், நீலக்கலர் மூடியோடும் இருக்கும் பேனா அது. எழுத பயன்பட்டதைவிட இப்படி நாடாவை சுத்த பயன்பட்டதே அது.  முதன்முதலா வந்த பால் பாயிண்ட் பேனா இது.உள்ளிருக்கும் மைக்குச்சியை மாத்தி போட்டுக்கலாம். இப்பலாம் பால் பாயிண்ட் பேனாவுல மைக்குச்சிகூட மாத்த வெசனப்பட்டுக்கிட்டு தூக்கி போட்டுடுறோம்.

மூணாப்பு வரை பல்பமும், சிலேட்டும். அதுக்கப்புறம் பென்சில், அஞ்சாப்பு போதுதான் பேனாவை வாங்கி கொடுப்பாங்க. பெரும்பாலும் கேமலின் பேனாதான் கிடைக்கும். மரப்பேனாவும் பார்த்திருக்கேன். அப்பாக்கள்லாம் ஹீரோ பேனா வச்சிருப்பாங்க, தொட்டாலே அடி விழும்.  எக்சாமுக்கு முதல் நாளே மை பேனாவை கழுவி, எழுதும்  முனையை பிளேடால் கீறி நுனியில் இருக்கும் பிளவை சரிப்பண்ணி, ஸ்மூத்தா எழுத வச்சாலே பரிட்சையில் பாசான மாதிரி ஒரு ஃபீல் வரும். பாட்டில்லதான் அப்பா இங்க் வாங்கி தருவார். 25காசுக்கு தண்ணி கலந்த இங்க் கடையில் கிடைக்கும். எங்க வீட்டில் சிவப்பு, கருப்பு, ப்ளூன்னு மூணு கலர்ல இங்க் இருக்கும். 
அப்பா மருத்துவ துறைங்குறதால, அதிலும் தொழுநோய் ஆய்வாளர்ங்குறதால, அடிக்கடி விழிப்புணர்வு படம்லாம் போடுவாங்க. முடிவில், எதாவது ஒரு சாமி படம் இல்லன்னா சிவாஜி படம் போடுவாங்க. ஒரு ஸ்க்ரீன் கட்டி புராஜக்டர்லாம் வச்சி, எல்லாரும் கீழ உக்காந்திருக்க, நான் அப்பாவோடு சேர்ல உக்காந்து படம் பார்க்கும்போது என்னமோ தியேட்டருக்கே ஓனர் மாதிரி ஒரு கெத்தா இருக்கும்.
மொபைல், டேப், லாப்டாப்ன்னு படம் பார்த்தாலும் அன்னிக்கு சாலிடர் டிவில படம் பார்த்த திருப்தி இல்ல. ஊரில் நாலஞ்சு டிவி இருந்தாலும், என் ஃப்ரெண்ட் வீட்டில் சாலிடர் டிவி வாங்கும்போது ஒரு மகிழ்ச்சி, அப்ப அரசு டிவியான தூர்தர்ஷன் மட்டுமே. செவ்வாய்ல நாடகம், வியாழன்ல வயலும் வாழ்வும், வெள்ளில ஒளியும் ஒலியும், சனி இந்தி படம், ஞாயிறுல பிராந்திய மொழி படம்ன்னு இருக்கும். மொழி புரியலைன்னாலும் டிவி முன்னாடி உக்காரனும்ன்னு இந்தி படம் பார்ப்போம். சம்பந்தமே இல்லாம  வயலும் வாழ்வும் பார்ப்போம். அட, இம்புட்டு ஏனுங்க! நேயர் கடிதம்லாம் உக்காந்து பார்த்திருக்கோம்னா பாருங்களேன். முதன் முதலா ராமாயணம் இந்தில ஒளிபரப்பானது. ராமர்ன்னா இப்படிதான் இருப்பாரோன்னு அத்தனை ஈர்ப்பு, அவருக்கு கற்பூர தீபாரதனைலாம் நடந்திருக்கு. ராமரா, சீதையா நடிச்சவங்க தேர்தலில் நின்னு ஜெயிச்சு எம்.பியாலாம் ஆனாங்க. அடுத்து மகாபாரதம், அந்த கிருஷ்ணரே நேரில் வந்த மாதிரி அந்த குறும்பு சிரிப்பிலும், மயக்கும் விழிகளிலும் வீழ்ந்த பெண்கள் ஏராளம். படம் பார்க்குறதைவிடவும். இதிலிருக்கும் கதவை திறந்து மூடவே எனக்கு பிடிக்கும்.

இன்னிக்கு மொபைல்லயே படம் பார்த்தாலும், அன்னிக்கு டிவி பார்க்க உபயோகப்பட்டது இந்த ஆண்டனா, அலுமினிய குழாய்கள் சுமார் பத்தை இணைச்சு, ஒரு தடிமனான கம்பில பொருத்தி வீட்டு கூரை மேல நிக்க வச்சு அங்கிருந்து வயரை கொண்டு வந்து அப்புறம் படம் பார்ப்போம். சிலசமயம் காத்துல ஆண்டனா திரும்பிட்டாலோ இல்ல சிக்னல் சரியில்லனாலோ படம் சரியா தெரியலைன்னா, ஸ்க்ரூவை தளர்த்தி அப்பா அந்த ஆண்டனாவை அப்படி இப்படி திருத்த, அம்மா டிவி பக்கத்துல இருந்து படம் வரலை, ஆங் வந்துச்சுன்னு சொல்ல, அதை அப்படியே நான் எதிரொலிக்க, அஞ்சு நிமிசக்கழிச்சு ஆஆஆ படம் வந்திருச்சு, அப்படியே நிறுத்த சொல்லுன்னு அம்மா சொல்ல, அப்பா அப்படியே செய்ய...  வடிவேலு காமெடி மாதிரி ஒரே கூத்துதான் போங்க. 
பயாஸ்கோப். எனக்கு அதிகம் பரிச்சயமில்லாதது. ஓரிரு முறை பார்த்திருக்கேன்.  ஒரு மரப்பெட்டி, அதை தாங்க மூணு மரக்கொம்பினால் ஆன ஸ்டாண்ட். அதுல கண்ணாடி வழியா உள்ளுக்குள் பார்த்தா படம் தெரியும். வசனம் கேட்குமான்னு நினைவில் இல்லை. 
சப்பாத்தி கள்ளி பழம். இதன் ருசி எனக்கு பிடிக்காது. ஆனா, பசங்களோட போய் பறிச்சுக்கிட்டு வந்து லிப்ஸ்டிக் போல உதட்டுக்கு பூசிப்போம்.,
  மறக்காம வீட்டுக்கு போகும்போது அழிச்சுட்டு போய்டுவோம். அப்படியும் சட்டையில் பட்ட கறை வீட்டில் காட்டி கொடுக்க, இப்பத்திய அம்மா மாதிரி கறை நல்லதுன்னு சொல்லாம அப்பத்திய அம்மா புரட்டி எடுப்பாங்க.
 இன்னிக்கு விதம் விதமா பவுச்கள், ட்ரெஸ்சுக்கு மேட்சிங்கா பென்சில் பாக்ஸ்ன்னு பிள்ளைகள் கொண்டு போகுது. ஆனா, அன்னிக்கு இந்த ஜியாமிண்ட்ரி பாக்ஸ்தான் எங்க ஸ்னாக்ஸ் பாக்ஸ், காயின் பாக்ஸ், பென்சில் பாக்ஸ்ன்னு எல்லாமே. எட்டாவதுலதான் ஜியாமிண்டிரி பாக்ஸ் வாங்கி கொடுப்பாங்க. இதில், ஒரு பாகைமாணி ஸ்கூல் திறக்கும்போது இதை  வாங்கி கொடுத்தா, முதல் பருவத்தேர்வு வரும்போதே 1 பாகை மானி!, 1 காம்பஸ், 1 கவராயம், ஒரு ஸ்கேல், 1 ரப்பர், 1 அரை பென்சில் இருக்கும். செவ்வக வடிவில் இன்னும் இரண்டு இருக்கும். அதுக்கு பேர் தெரில, தெரிஞ்சா சொல்லுங்க. அதில்லாம பல்பம், சாக்பீஸ், பிஸ்கட், சாக்லேட், பணம், லவ்லெட்டர், பென்சில் தூள்ன்னு கண்ட கருமாந்திரமும் அதில்தான் இருக்கும்.
ஈயம் பூசலையோ ஈயம்ன்னு கத்திக்கிட்டே ஒருத்தர் வருவார். ஊருக்கு பொதுவா ஓரிடத்தில் தரையில் பள்ளம் தோண்டி, வித்தியாசமான அடுப்பை அவரே அமைப்பார். அதில் அடுப்பக் கரியை போட்டு நெருப்பு மூட்டி, அடுப்பை ஊதுவதற்கு ஆட்டுத்தோலால் செய்த ஒரு துருத்தி இருக்கும்.  அதால் ஊதி, ஊதி ஓட்டை விழுந்த தவளையை ஒட்ட வைக்குறதும், உடைஞ்சு போன வாளியை பத்த வச்சு ஒன்னு சேர்க்குறதும்ன்னு இருப்பார். அதுப்போல, புதுசா வாங்கின பித்தளை பாத்திரத்தின் உள்ள ஈயம் பூசுவார். அப்படி பூசாம அந்த பித்தளை, செம்பு சாமானை பயன்படுத்த மாட்டாங்க. உடலுக்கு ஆகாதுன்னும், பாத்திரம் சீக்கிரம் பாழாகிடும்ன்னு ஈயம் பூசுவாங்க. இப்பலாம் சாமான் எடுக்கும் கடையிலேயே ஈயம் பூசி கொடுத்துடுறாங்க. ஈயம் பூசுறவர் வந்தா அன்னிக்கு முழுக்க அங்கேதான் டேரா போட்டிருப்போம். துருத்தியின் வாய் பிளந்து, மூடி, அமுக்கினா, அதிலிருக்கும்  காத்து அடுப்புக்குள் போய் கரி குமையுறதை பார்க்க அம்புட்டு ஆர்வமாவும் அதிசயமாவும் இருக்கும். 

பிரிமணை... இரண்டு கைகளில் தலா பத்துக்கு மேல வைக்கோலைஎடுத்திக்கிட்டு  ஒருமாதிரி நேக்கா ஒன்னோடு ஒன்னா முறுக்கும்போது கயிறு மாதிரி வரும். அதைக்கொண்டுதான் அப்பலாம் வைக்கோல் கட்டி சிந்தாம சிதறாம கொண்டு போறது, விறகு வெட்டி கட்டுறதுன்னு செய்வாங்க.
அதேப்போல அந்த வைக்கோல் கயிற்றால் வட்ட வடிவில் பிரிமணைன்னு ஒன்னு செய்வாங்க. அந்த பிரிமணைதான் தண்ணீர் தவளை, அரிசி அண்டா, பருப்பு குண்டா வைக்கும் ஸ்டாண்ட்.
 சந்தோசம்ங்குறது சின்ன சின்ன விசயங்களில்தான் இருக்கு. ஆனா, சந்தோசம்ங்குறது சின்ன விசயமில்லைன்னு சொல்வாங்க. அதுமாதிரி செலவில்லாத விசயங்களே அன்னிக்கு என்னைலாம் சந்தோசமா வச்சிருந்தது.
தென்னை ஓலையால் வாட்ச், வளையல், பின்னலில் சொருக ஜடை, பெட்டின்னு பக்கத்து வீட்டண்ணா செஞ்சு கொடுப்பார். காய்ஞ்சு கருவாடா போனாலும் அதை அப்படியே பத்திரப்படுத்தி வச்சிருப்போம். இன்னிக்கு இரண்டாயிரம் ரூபா வாட்சையே ரிப்பேர் செய்யாம தூக்கி போட்டுடுதுங்க. 
 உசிரையே கொடுக்கும் நட்புதான் ஆனாலும் சண்டை வந்திட்டா, இனி என் மூஞ்சில முழிக்காதன்னு கட்டி புரண்டு சண்டை போட்டு அவனுக்கு வாங்கி கொடுத்ததை நானும், எனக்கு கொடுத்ததை அவனும் சொல்லிக்காட்டி, உன் டைரில இந்த நாளை குறிச்சு வச்சுக்கோன்னு  சபதம் போட்டு காய் விட்டு பிரிஞ்ச நட்புதான்.  ஆனா,  புளியாம்பழம் பொறுக்க போகும்போது வெக்கமே இல்லாம துணைக்கு ஆள் வேணும்ன்னு பழம் விட்டு கூட்டாளி ஆனக்கதைலாம் உண்டு. 
 மிச்சம் மீதி துணில கைத்தையலால் ஒரு பை தச்சு அதுல டைலர்கிட்ட கெஞ்சி கேட்டு வாங்கி வந்த துண்டு துணிலாம் போட்டு செஞ்ச டஸ்டர். இது கிளாஸ் லீடர்கிட்டதான் இருக்கும். என்னிக்காவது ஒருநாள் நம்மக்கிட்ட வந்தா அத்தனை சந்தோசம்.  இதை கடனா கேட்டு வாங்க பக்கத்து கிளாசிலலாம் போய் கால்கடுக்க நின்ன பரிதாபம்லாம் நடந்திருக்கு. 
 
 நன்றியுடன்,
ராஜி

8 comments:

  1. இனி இதுபோன்ற அனுபவங்கள் வரும் தலைமுறையினருக்குக் கிடைக்குமா

    ReplyDelete
    Replies
    1. நமக்கே கிடைக்கலியாம்.

      Delete
  2. இந்த வயதில் நினைத்து அசைபோட எவ்வளவோ விஷயங்கள்

    ReplyDelete
    Replies
    1. இந்த பிளாக் இல்லன்னா நினைவே கொன்னுடும்.அப்படிதானேப்பா?!

      Delete
  3. ஆமாம் எதிரொலி பார்த்திருக்கோம். கண்ணன் ரொம்ப பேமஸ் அதில். நான் மதுரை ரேடியோவில் நேயர் கடிதம் வாசித்திருக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. பார்ரா! இந்த கதைலாம் தெரியாதே!

      Delete


  4. //ஓட்டை விழுந்த தவளையை ஒட்ட வைக்குறதும்,//

    அடடே....

    சுவாரஸ்யமான நினைவுகள்தான்.

    ReplyDelete
    Replies
    1. அடடே
      ////////////
      இதுல என்ன கேலி?!

      Delete