Thursday, October 18, 2018

ஆயுதங்களுக்குலாம் ஒரு பூஜையா?! - அறிவோம் பண்டிகை


சரஸ்ன்னா நீர், ஒளின்னு அர்த்தம், சரஸ்வதி பிரம்மனின் நாவில் இடம்பெற்றிருப்பதால் அவளுக்கு நாமகள்ன்னும் பேரு. இவள் மூல நட்சத்திரத்திற்கு சொந்தக்காரி. பிரம்மனின் மனைவி எனப் பொருள்படும்படி பிராஹ்மின்னு சொல்வாங்க. இதில்லாம, கலைமகள், கலைவாணி, கலையரசி, கலைச்செல்வின்னு அழகான தமிழால் இவளுக்கு பேர்கள் அனேகம். ஒட்டக்கூத்தர்ன்ற புலவரால் கூத்தனூரில் சரஸ்வதிக்கு ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. இந்திய அரசின் ஞானபீட விருதுக்கு  வாக்தேவி என்று பெயர். குமரகுருபரர் இயற்றிய சரஸ்வதி துதிக்கு சகலகலாவல்லி மாலை என்றும்,  கம்பர்,  சரஸ்வதிதேவி பற்றி பாடியதற்கு சரஸ்வதி அந்தாதி என்றும் பெயர்.

ஒருமுறை பிரம்மனின் சாபத்தால் பேசும் சக்தியை இழந்தாள் கலைவாணி. இதையடுத்து பூலோகத்துக்கு வந்த கலைவாணி, ஈசனை  வேதங்கள்  வழிப்பட்ட தலமான வேதாரண்யத்துக்கு வந்து ஈசனை வழிப்பட்டாள். அப்போது வேதாரண்யம் அம்பாளிடம் வீணையை இசைத்துக்காட்ட வந்தாள். அங்கு வந்தப்பின் அம்பாளின் குரலை கேட்க நேர்ந்தது. வீணையின் இசையைக்காட்டிலும் அம்பாளின் குரல் இனிமையானதாய் இருந்ததால், தனது வீணையை மூடி வைத்து விட்டாள். அதனால், வேதாரண்யம் அம்பிகையின் பெயர் யாழைப் பழித்த மென்மொழியாள் என்று விளங்கலாயிற்று.


இந்த நிலையில் தன் சாபத்தால் பேசும் சக்தியை இழந்த கலைவாணியை காண பிரம்மன் சத்தியலோகத்திலிருந்து பூலோகம் வந்தார்.   சிருங்கேரின்ற தலத்திலிருந்து கலைவாணி தவம் செய்துக்கொண்டிருந்தாள்.  அவளை சமாதானம் செய்து  அங்கிருந்து, வேலூர் அருகிலிருக்கும் வாணியம்பாடி என்ற தலத்திற்கு அழைத்து வந்தார். அங்குள்ள அதிதீஸ்வரரையும், பெரியநாயகி அம்பாளையும் வணங்கி  கலைவாணிக்கு மீண்டும் பேச்சு வர வேண்டினார்.  பிரம்மாவின் வேண்டுதலை நிறைவேற்ற எண்ணிய அதிதீஸ்வரரும், பெரியநாயகி அம்பாளும் பிரம்மன் முந்தோன்றி,  ஹயக்கிரீவர் முன் கலைவாணியை வீணை வாசிக்க அருளினர்.  மேலும் கலைவாணிக்கு பேசும் சக்தியையும் அருளினர்.  கலைவாணி வீணையை இசைத்துக்கொண்டு  பாடல் பாடியதால் இத்தலத்திற்கு வாணியம்பாடி என்றானது. 


இத்தல அதிதீஸ்வரர் சுயம்புவாய் தோன்றியவர். மேற்கு நோக்கி அமர்ந்து நமக்கு அருள்புரிகிறார்.  பெரியநாயகி அம்பாள் தெற்கு நோக்கி அமர்ந்து அருள்பாளிக்கிறாள்.  இங்கு சரஸ்வதி தேவிக்கென தனிச்சன்னிதி இருக்கு..  இவர் கிழக்கு நோக்கி அமர்ந்து,  மடியில் வீணையுடன், இடது காலை மடித்து ஒய்யாரமாய்  காட்சி தருகிறாள். இத்தலத்தில் சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணன் கோலத்தில் காட்சியளிக்கின்றனர்.   இங்கு, பைரவர், தட்சிணாமூர்த்தி ஆகியோரும் தனித்தனி சன்னிதியில் அருள்புரிகின்றனர். அத்தீஸ்வரர், பெரியநாயகி அம்பாள். சரஸ்வதி தேவி ஆகியோருக்கு தனித்தனியே ஐந்து தீபங்கள் ஏற்றி வழிப்பட்டால்  கல்வி அறிவு பெருகும்,  கல்வியிலும் பேச்சாற்றலிலும், நேர்முகத்தேர்விலும் வெற்றி பெறும் ஆற்றலை அருள்வாள்.  வேலூரிலிருந்து 65கிமீ, ஜோலார்பேட்டையிலிருந்து 16 கிமீ தூரத்திலும் இத்தலம் அமைந்துள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் கடலங்குடியில் உள்ள சிவன்  கோவிலில் வளையல், கொலுசு அணிந்தபடி  சரஸ்வதிதேவி காட்சியளிக்கிறாள். சிருங்கேரியில்  ஒரு மாணவிபோல படிக்கின்ற கோலத்தில் காட்சியளிக்கிறாள் சரஸ்வதி.  வேதாரண்யம்,  திருக்கோடிக்கா ஆகிய தலங்களில் வீணை இல்லாத சரஸ்வதியை காணலாம்.   கர்நாடகா மாநிலம் பேலூர் என்ற கலைப்பொக்கிஷத்தில் நடனமாடும் கோலத்தில் இருக்கும் சரஸ்வதி தேவியை காணலாம்.
ஜப்பானியர்கள் ‘பென் டென்’ என்னும் பெயரில் சரஸ்வதிதேவியை வழிபடுகின்றனர்.  டிராகன் என்ற அசுர பாம்பு வாகனத்தில் இத்தேவி சிதார் வாசிக்கிறாள்.  இந்தோனேசியா, பாலித்தீவிலும் புத்தகங்களை அலங்கரித்ஹ்டு பூஜிக்கும் வழக்கம் இருக்கிறது. இப்பூஜைக்கு ‘கலஞ்சன்’ என்று பெயர்.  விஜயதசமி நாளில் பாலித்தீவில் தாம்பாத்ஸரிம் என்னும் குளத்தில்  நீராடி புத்தகங்களை வழிப்பட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது அங்குள்ள மக்களின் நம்பிக்கை.

ஆயுதங்களின் உண்மையான பயனையும், அதனை நேர்வழியில் பயன்படுத்த வேண்டுமென்பதை உணர்த்தத்தான் ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது.  உயிர்ப்பொருள்கள், உயிரற்றப் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற இறைபொருள் நீக்கமற நிறைந்துள்ளது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதமா அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜையாகும். 
ராமாயணத்தில் ராமர் கொண்டாடிய ஆயுத பூஜை
ஆயுத பூஜையன்று, வீட்டை தூய்மைப்படுத்தி, பூஜை அறையில் சுத்தமான வெள்ளைத்துணியை விரித்து, அதில் மஞ்சளால் சரஸ்வதி உருவம் செய்து, இல்லன்னா, சரஸ்வதி படத்தினை வைத்து, வெள்ளைத்தாமரை அல்லது வெள்ளைமலர்களால் அலங்கரித்து, வெற்றிலை பாக்கு, பழம் வைத்து, ஒருபக்கம் புத்தகம், நோட்டு மாதிரியான கல்வி சம்பந்தமான பொருட்களும், நெசவு, விவசாய தொழில் சார்ந்த கருவிகளோ அல்லது, தங்களது தொழில் சார்ந்த கருவிகள் மட்டுமில்லாம வீட்டிலிருக்கும் சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லாவகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாக துடைத்து, தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணைப் போட்டு, விபூதி பூசி,  மஞ்சள் குங்குமம் வைத்து பூஜைக்கு தயார்ப்படுத்தனும். ஒரு வாழை இலையில் பொரி, கடலை, அவல், வெல்லம், சுண்டல், சர்க்கரை பொங்கல், எலுமிச்சை சாதம், புளிசாதம், பழங்கள், இனிப்புகள் வைத்து, சாணத்தால் பிடிச்ச பிள்ளையாரும். செம்மண்ணால் ஆன அம்மன் உருவத்தையும் வைத்து பூஜிக்கனும். அன்றொரு நாள் ஆயுதங்களுக்கு ஓய்வு கொடுத்து, பிறகு, மறுநாள் எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்தனும்.   பூஜையின்போது, கலைவாணிக்குண்டான பாடல்களை பாடுவதோடு எல்லா ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு மட்டுமே இந்த உபகரணங்கள், ஆயுதங்களை பயன்படுத்துவோம், மற்ற அழிவு செய்கைகளுக்கு பயன்படுத்தமாட்டோம் என உறுதி எடுத்துக் கொள்வோம். 
பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் போனதுலாம் நம் அனைவருக்கும் தெரிந்ததே.  நாடிழந்து, பெருமை இழந்து, வனவாசம் மேற்கொண்ட பாண்டவர்கள் தங்களின் ஆயுதங்களை ஒரு வன்னிமர பொந்தில் மறைத்து வச்சிருந்தாங்க.  பின்னர் 14 வருட வனவாசத்திற்கு பிறகு நாடு திரும்பிய பாண்டவர்கள், அதை நினைவுக்கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் தாங்கள் உபயோகித்த அந்த ஆயுதங்களை வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்வதை வழக்கமாய் கொண்டிருந்தனர். அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர். பாண்டவர்கள் ஆயுதங்களை வைத்து வணங்கியதால் இவ்விழாவுக்கு ஆயுதபூஜை எனப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி, ஒவ்வொரு மன்னனும் போருக்கு செல்லும் முன்னும், சென்று வந்த பின்னும் தங்களின் போர்ப்படை ஆயுதங்களுக்கு பூஜை போடுவதை வழக்கமாய் கொண்டிருந்தனர். இதுக்கு நாம படிக்கும் தமிழ் இலக்கியம்ங்களே சாட்சி. நமக்கு பலவிதங்களில் உதவும் ஆயுதங்களை சரிவர, நேர்வழியில் மட்டுமே பயன்படுத்துவோம். 
அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்.
நன்றியுடன்,
ராஜி

9 comments:

  1. இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துகள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் மற்றும் சுற்றத்தார்,நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் எனது இனிய ஆயுத பூஜை திருநாள் வாழ்த்துக்கள் சகோ ...

      Delete
  2. வழக்கம்போல அனைத்து விவரங்களையும் கலெக்ட் செய்து கொடுத்து அசத்தி விட்டீர்கள்.

    சரஸ்வதி பூஜை / ஆயுத பூஜை வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்களுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி ..இனிய ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள் சகோ ..

      Delete
  3. விழாக்கால வாழ்த்துகள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. பண்டிகை கால சந்தோஷ வாழ்த்துக்கள் அண்ணா ...

      Delete
  4. அருமையான செய்திகள் அடங்கிய பதிவு.
    சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. நாங்கள் மஞ்சளால் அம்மன் செய்து தான் கும்பிடுவோம்.
    என் கணவர் பல வருடமாய் சந்தனத்தில் செய்கிறார்கள்.
    மழைக் காலத்தில் கண் கொசு அம்மன் முகத்தை சுத்தி வருவதைப் பார்த்து சந்தனமாய் மாற்றி விட்டார்கள். எங்கள் குடும்பத்தில் நாங்கள் மட்டும் சந்தனம், மற்ற்வர்கள் மஞ்சள்.
    அடுத்த வருடம் அன்னை நல்லபடியாக வீட்டுக்கு வர வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. எல்லாவருடமும் அன்னை நிச்சயம் எழுந்தருள்வாள்,பக்தர்கள் குறை கேட்க ஓடோடி வருபவள் அல்லவா நம் தாய் ...இனிய ஆயுத பூஜை வாழ்த்துக்கள் சகோ ...

      Delete