Wednesday, October 17, 2018

கல்யாணமாம்!!! கல்யாணம்!!! .... அறுபதாம் கல்யாணம்.......

போன மாசம் 28ந்தேதி என் மூத்தாருக்கு 60வயது முடிஞ்சு 61 வயது ஆரம்பிச்சுது. நாலு தம்பிகள் கல்யாணம் கட்டி செட்டில் ஆகும்வரை கூடவே இருந்தவங்க என் மாமாவும், அக்காவும்..  இன்னிக்கும் மாமியார் மாமனாரை பார்த்துக்கிட்டு, நல்லது கெட்டதை எடுத்து சொல்லி, முதல் ஆளாய் நின்னு எங்க வீட்டு விசேசங்களை நடத்தி வைக்குறவங்க அவங்கதான்.  சில மனஸ்தாபங்கள் மனசுக்குள் இருந்தாலும் என் அக்காவின் உழைப்பு என்னை பிரமிக்க வைக்கும்.  அதனால், என்ன செய்யலாம்ன்னு எல்லா தம்பிகளும், அவரது பிள்ளைகளும் சேர்ந்து யோசிக்க திருக்கடையூர் போய் வரலாம்ன்னு முடிவாகிட்டுது. சரின்னு கட்டுசோத்தை கட்டிக்கிட்டு ரெடி ஆகிட்டுது. 

சனிக்கிழமை 30 பேர் கொண்ட எங்க குடும்பத்தோடு காலை பத்து மணிக்கு வேன் கிளம்பிட்டுது. ஆரணி, விழுப்புரம், நெய்வேலி, கடலூர் வழியா திருக்கடையூர் போறதா ஐடியா.  எப்பயுமே கலகலப்பா போகும் பயணம் மொத்தம் 8 குட்டீஸ் இருந்தும் பயணம் இந்தமுறை கலகலப்பாகல. அதுக்கு காரணம், எங்களோடு வந்திருந்த பெருசுங்க மகாபாரதத்தை வேன்ல ஓடவிட்டதுதான். குட்டீசுக்குலாம் சுதி இறங்கி போச்சுது. ஒருசிலர் தவிர யாரையும் மகாபாரதம் ஈர்க்கலை. சூதாட்டத்திலிருந்து போட்டிருந்தாலாவது கொஞ்சமாச்சும் பார்த்திருப்பாங்க. அதைவிட்டு பீஷ்மர் அப்பா கதைலாம் போட்டா?!  

பேச்சு எங்கெங்கோ சுத்தி, அறுபதாம் கல்யாணம்ன்னா என்னன்னு வந்து நின்னது.  ஏன் எதுக்குன்னுலாம் யாருக்கும் தெரில. ராஜிக்கிட்ட கேட்டா தெரியும். அவதான் புத்திசாலி, எல்லாம் தெரிஞ்ச ஆளுன்னு ஆளுக்காள் சொல்ல, சரி, சரி சொல்றேன் சொல்லும்போது  மதிய சாப்பாட்டு நேரமும் பண்ருட்டியும் வந்திடுச்சு. பண்ருட்டி - கடலூர் சாலையில்  ஒரு முந்திரி தோப்பு பக்கம் வண்டிய நிறுத்தி சாப்பாட்டு கடைய விரிச்சோம். 

ஆளுக்காள் அழகி, ஒன்பது ரூபா படத்தை பத்தி சொல்லி, அவரவர் நினைவுகளை அசைப்போட நமக்குதான் எந்த நினைவும் பண்ருட்டிலயும், முந்திரி, பலாதோட்டத்தில் இல்லியே!  அதனால், எல்லாருக்கும் பரிமாறிட்டு, நான் சாப்பிடும் இடைப்பட்ட கேப்பில் சட்டுன்னு கூகுளார்கிட்ட அறுபதாம் கல்யாணம்ன்னா என்ன?!ன்னு கூகுளாண்டவர்கிட்ட கேட்க, அவர் தகவலா கொட்ட, ஓரளவுக்கு மனப்பாடம் பண்ணியாச்சுது. எப்பப்பாரு மொபைலை நோண்டிக்கிட்டுன்னு சின்ன மாமனார் மண்டையிலேயே கொட்டு வைக்க, இணைப்பிரியாத இணையத்தை பிரிய வேண்டியதாகிட்டுது.  வண்டில ஏறினதும் அறுபதாம் கல்யாணம்ன்னா என்னன்னு கேட்டாங்க.  அது என்னன்னு நீங்களும் அவங்களோடு தெரிஞ்சுக்கோங்க. 
 கஜ பூஜையும், வரவேற்றலும்...

ஆணோட 59 வயது முடிஞ்சு 60வயது ஆரம்பிக்குற நேரத்துல செய்யும் சடங்குக்கு பேருதான் அறுபதாம் கல்யாணம்ன்ற மணிவிழா. 59 வயது முடிஞ்சு 60 வயசு ஆரம்பிக்கும்போது செய்யப்படும் சடங்குக்கு உக்ர ரத சாந்தின்னும், 60வயது முடிஞ்சு 61 வயது ஆரம்பிக்கும்போது செய்யப்படும் சடங்குக்கு "ஷஷ்டியப்த பூர்த்தி"ன்னும் சொல்லப்படுது. இதேமாதிரி  70 வயசிலிருந்து 75வயசுக்குள் செய்யப்படும் சடங்குக்கு  பீமரதசாந்தின்னும், 80லிருந்து  85முடிய செய்யப்படும் சடங்குக்கு சதாபிஷேகம்ன்னும்,  90 வயதில் காலா ஸ்வரூப ஷௌரி சாந்தியும், 95ல் த்ரயம்பக மஹாரத சாந்தியும்,  100வயது துவக்கத்தில் மகா மிருத்யுஞ்ஜய சாந்தின்னும் பேரு
எங்களுக்காக செய்யலை. வேற யாரோ செஞ்சதை சுட்டிங்க்...


இதுலாம் செய்ய எதாவது ஒரு கோவிலுக்கு போகனும்ன்னு அவசியமில்ல. வீட்டிலேயே செய்யலாம். ஏன்னா, ஒரு வருசத்துல 12 கும்பாபிசேகம் செஞ்சா ஏழு பிறவி பாவம் போகுமாம். அதுமாதிரி 12 வருசம் 12 கும்பாபிஷேகம் பார்த்த பலனை ஒரு சஷ்டியப்த பூஜையை பார்த்தா கிடைக்கும்.. 12 சஷ்டியப்த பூஜையை பார்த்த பலனை ஒரு பீமரத சாந்தி  கொடுக்கும், 12 பீமரத சாந்தி பார்த்த பலனை ஒரு சதாபிஷேகம் கொடுக்கும். அதனால், இதுமாதிரியான விஷேசங்களை   பலபேரோட பாவத்தை போக்கிய புண்ணிய பலன் சிந்தாம சிதறாம ஸ்கோர் பண்ணலாம். அதில்லாம, நம்மூரை சார்ந்தவங்களுக்கு நம்ம கையால் விருந்து வைக்கலாம். அப்படி சாப்பாடு போட்ட பலனும் வந்து சேரும். ஆனா, கோவில்ல பண்ணாதான் திருப்தின்னு அதுக்குன்னு இருக்கும் சில கோவில்களுக்கு போறாங்க.



சஷ்டின்ற வார்த்தைக்கு சமஸ்கிருதத்தில்  அறுபத்துன்னும், “அப்த”ன்னா முடித்தல்ன்னும் பொருள்.  தமிழ் வருடங்கள் மொத்தம் 60. வருடங்களின் சுழற்சி 60ல் முடிஞ்சு மீண்டும் 1லிருந்து ஆரம்பிப்பதால்  இதற்கு பிறகு வரும் நாட்களை ஒரு மறுபிறப்பு நிகழ்ச்சியாகவே கருதப்படுது. இதுவரை வாழ்ந்த வாழ்க்கையின் மறக்கமுடியாத திருப்புமுனையாகவும், இதுவரை வாழ்ந்த வாழ்க்கையை ஒரு நினைவூட்டி பார்க்கவும் இந்த சடங்கு நிகழ்த்தப்படுது.  .சஷ்டியப்தபூர்த்தி கொண்டாட்டங்கள்லாம் சாந்தி மற்றும் கிராந்தி என இரண்டு முக்கிய அம்சங்களை கொண்டது. சாந்தி சாஸ்திரங்களின்படியும் மற்றும் கிராந்தி இயற்கையின் வழியின்படியும் செய்யப்படுது.

உக்ரரத சாந்தி எனச்சொல்லப்படும் சடங்கு இதுவரை வாழ்ந்த காலத்தில் சந்தித்த கடுமையான நேரத்தை குறிப்பவையாகும். ஒரு நூறாண்டு கால மனிதனின் வாழ்வில் முந்தய அறுபது ஆண்டு காலம் என்பது பொருள்சார்ந்த தேடலை பின்தொடரும் ஒரு காலம். அறுபதுக்கு பின்வரும் ஆண்டு காலம்மென்பது ஆன்மீக முயற்சியின் தேடலை தொடரும் காலமா கருதப்படுது. பிந்தைய ஆண்டு காலம் ஆன்மீக பணி நிறைவேற்றும் பொருட்டு செய்யப்படும் சாந்தியானது சொர்க்கத்திற்கு அனுப்பப்படும் ஒரு பிரார்த்தனையாகும்.

தமிழ் வருட சுழற்சிப்படி ஒருவர் பிறந்த ஆண்டு  மீண்டும் வரும்போது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளால் செய்விக்கப்படும் இந்த சடங்கு.  இந்த வாய்ப்பு எல்லாருக்கும் அமைஞ்சிடாது.  ரஜினி பாட்சா படத்துல சொன்னமாதிரி எட்டு எட்டா மனுச வாழ்க்கையை சரிவர நடத்தினவங்களுக்குதான் இந்த வாய்ப்பு கிடைக்கும். சரியான வயசில் படிப்பை முடிச்சு, சரியான வயசில் வேலைக்கு போய், கல்யாணம் கட்டி, குழந்தை பெத்து, அதை வளர்த்து, அதுக்கு சரியான நேரத்தில் கல்யாணம் கட்டி...  இப்படி செலவு செய்ய மகன், மகன்(ள்), மருமகள்(ன்)க்கு செலவழிக்க மனசும் நேரமும் வாய்ச்சு.... இப்படி எல்லாமே சரியான நேரத்தில் நடந்தாலும், சிலருக்கு 60வயதில் தன் வாழ்க்கைத்துணை இருக்காது., அந்த துணையும் உடனிருந்து இப்படி அறுபதாம் கல்யாணம் நடந்தா அது எத்தனை சிறப்பாய் இருக்கும்ன்னு நினைச்சு பாருங்க.  தெய்வ அருளும், உடல் ஆரோக்கியம், மனஆரோக்கியம்ன்னு எல்லாமே பொருந்தி வரனும்.

அறுபது வயசுவரை,  தான், தனது குடும்பம்ன்னு வாழ்ந்து வந்த மனிதன், அதற்குப் பிறகு ஞான மார்க்கத்தை நாடி தனது இந்த பிறப்பிற்கான அர்த்தத்தைத் தெரிந்து கொள்ள, தன்னைச் சுற்றியுள்ளோருக்கு வழிகாட்டியாக திகழ  இந்தப் பிறப்பினில் அவரது ஆயுள் நீடித்திருக்கனும்ன்னுதான் இந்த சடங்கு செய்விக்கப்படுது. அதுமட்டுமில்லாம வயசில் மட்டுமில்லாம குணத்துலயும் சீனியர் சிட்டிசனா ஆகனும்ன்னும் நினைவுப்படுத்தும் விழாவாகவும் இது கொண்டாடப்படுது. ஆயுஷ்ஹோமம் மாதிரியான சில பூஜை முறைகளைதான்  சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கே தவிர, அன்னிக்கு மாங்கல்யதாரணம்ன்னு சொல்லப்படும், புதுத்தாலி கட்டிக்கனும்ன்னு சொல்லல.  இது சம்பிராதயப்படி வந்த நிகழ்வாகும். இப்படி தாலிக்கட்டும் நிகழ்வு நடக்குறதாலதான் மணிவிழாவுக்கு அறுபதாம் கல்யாணம்ன்னு பேர் வந்துச்சு. ஒருவேளை,  பெண்ணின் மாங்கல்ய பலத்தினால் கணவனின் ஆயுள் நீடிக்கும்ன்ற நம்பிக்கையில் இந்த பழக்கம் வந்திருக்கலாம்.  கல்யாணம்ன்ற வார்த்தைக்கு பலபேர் கூடி ஒன்றாக இணைந்து செய்கின்ற மங்களகரமான நிகழ்வுன்னுதான் பொருள். 

ஆனா, நம்மை பொறுத்தவரைக்கும் கல்யாணம்ன்னா, ஆணையும், பெண்ணையும் இல்லறத்தில் ஈடுபடுத்துவது என்பதாகிட்டுது.  அதனால்தான், இந்த விழாவையும், திருமண விழா மாதிரியே முதல்நாள் மாப்பிள்ளை அழைப்பு, மாங்கல்ய தாரணம், மாலை மாற்றுதல்ன்னு தேவையில்லாத சடங்குகளை செய்றாங்க. சஷ்டி அப்த பூர்த்தி சாந்தி என்பது அவசியம் செய்யப்பட வேண்டிய ஒன்றுதான்.  ஆனா, இப்ப கொண்டாடும்படி இல்ல.  அறுபது வயதை நெருங்குபவர் பிறந்த  தமிழ் மாத தேதி, நட்சத்திரம், ராசிப்படி நாள் குறிக்கப்பட்டு, இரண்டு நாளைக்கு இந்த சடங்கை நடத்தனும். 

முதல் நாள் மாலை கஜ(யானை,) மேளதாளத்தோடு தம்பதியரை வரவேற்கனும். அடுத்து கோ பூஜை செய்விக்க சொல்லனும்.. அதிதேவதைகளுக்கு பூரண கும்பங்கள் வைத்து பூஜைகள் செய்யப்படனும். மேலும் கலச பூஜையும் செய்யனும். தங்கள் வசதிக்கேற்ப 16, 32, 64  கலசங்களை வைத்து பூஜிக்கப்படனும். அடுத்து, அக்னி கார்யம், ஸ்ரீகணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மிருத்யுஞ்ஜய ஹோமம், ஆயுஷ் ஹோமம், 108 பொருட்களால் ஆன தன்வந்தரி ஓளஷத ஹோமம், துர்கா ஹோமம், சுதர்ஷன ஹோமம், அஷ்ட லக்ஷ்மி ஹோமம், மகா விஷ்ணு ஹோமம், சஷ்டியப்தபூர்த்தி / பீமரத / சதாபிஷேக ஹோமம், முழு குடும்ப உறுப்பினர்களின் நட்சத்திரங்களுக்கான ஹோமம் செய்விக்கனும். 
வீட்டில் செய்றதுன்னா, இத்தோடு முடிஞ்சிடும். இதுவே திருக்கடையூர்ல செய்றதுன்னா, மேளதாளத்தோடு அருகிலிருக்கும்  மணல்மேடு ஸ்ரீ மார்கண்டேயர் கோவிலில், சுவாமி அம்பாள் திருகல்யாண உற்சவமும், கங்கா பூஜையும் அதைத்தொடர்ந்து குடும்ப நலனுக்காக விளக்கு பூஜை செய்விக்கப்படும். மற்றும் பிற சிறப்பு பூஜைகள் செய்யனும். மறுநாள் காலை கிராந்தி பூஜை நடக்கும். சம்பந்திகள் சீர்வரிசை வைக்க, யாகம் வளர்த்தி, அதிதேவதைகளுக்கு பூஜை செய்து, கலசத்திலிருக்கும் நீரை தம்பதியருக்கு ஊத்தனும். சின்னவங்க, பெரியவங்க, கல்யாணம் கட்டினவங்க, கட்டாதவந்தன்னு எந்த பாகுபாடுமில்லாம இதை செய்யலாம். மகன்(ள்), மருமகள்(ன்) ஜல்லடை பிடிக்க, உறவினர்கள்  தம்பதியருக்கு கலச நீரை ஊத்துவாங்க.
தாய்வீட்டிலிருந்து சீராய் வரும் உடைகளை உடுத்தி தம்பதியர் வர, அக்னி வளர்த்து மாங்கல்யதாரணம் நடக்கும். 
மாங்கல்ய தாரணம் முடிஞ்சதும், தன்னைவிட பெரியவங்க காலில் தம்பதியர் விழுந்து வணங்குதலும், தன்னைவிட இளையவங்களுக்கு ஆசி வழங்குதலும் நடக்கும்.
இதுமாதிரி இங்க கல்யாணம் செஞ்சுக்குற தம்பதியர்கிட்ட அவங்க உறவுக்காரங்க மட்டுமில்லாம, கோவிலுக்கு வர்றவங்களும் விழுந்து ஆசி வாங்கலாம். தப்பில்ல.  அப்படி வருபவங்களுக்கு அவங்கவங்க வசதிப்படி சாக்லேட், மஞ்சள், குங்குமத்தோடு ஆசியும் வழங்குவது வழக்கம். ஏன்னா, இந்தமாதிரியான விசேசங்களை காண்பதெல்ல்லாம் தெய்வ அனுக்கிரகம் இருந்தால்தான் முடியும். எல்லாம் எளிதான இந்த காலத்தில் இப்பலாம் இது எளிதா இருக்க மாதிரி தோணும். ஆனா, இப்படி ஒரு வாய்ப்பு கிடைப்பதென்பது அரிதிலும் அரிது. அதனால் வாய்ப்பு கிடைச்சா கலந்துக்க தவறவிடக்கூடாது.
எல்லாம் சரி, அதென்ன ஆணை முன்னிறுத்தியே இந்த சடங்குகள் செய்யப்படுதே ஏன் ராஜி?!

ஏன்னா, அந்த காலத்தில் பெண்ணுக்கு ஜாதக்குறிப்பு எழுதி வைக்குறது அபூர்வம், அப்படியே எழுதி வச்சாலும் அது புகுந்த வீடு வரைக்கும் போகாது. அப்படியே போனாலும், ரொம்ப நாளுக்கு இருக்காது. அப்புறம் எங்கிருந்து அந்தம்மாவோட பையன் வரைக்கும் ஜாதகம் வரும்?! அதுமிட்டுமில்லாம, பெண்ணோட வாழ்நாள் அந்த காலத்தில் ரொம்ப குறைச்சல், பேறுகாலம், நோய் தொற்றுக்களில் பெண்கள் பிழைத்திருப்பது அபூர்வம். அறுபது வயசுவரைக்கும் உசுரோடு இருந்தாதானே சஷ்டியப்த பூஜைலாம் செய்யமுடியும்?! அதுமட்டுமில்லாம துணை இல்லாத ஆணுக்கும் இந்த சடங்கு செய்றதில்லை. ஆனா, இப்பலாம் ஆண், பெண் யாருக்கும் துணை இல்லன்னாலும் 80 வயசில் சதாபிஷேகமும், 100வயசில் கனகாபிஷேகமும் செய்றாங்க.  

இதுக்குதான் நம்ம ராஜி நம்மோட இருக்கனும்ன்னு சொல்றது. பாரு. எல்லாத்தையும் புட்டு புட்டு வைக்குறா பாரு.

ஆமா, ஆமா இப்படியே உசுப்பேத்தி, உசுப்பேத்தி என் சோலிய முடிச்சுடுவாங்க போல! சடங்குலாம் முடிச்சுட்டு, பூம்புகார் கடற்கரைக்கும், சிதம்பரம் கோவிலுக்கும் போகலாம்ன்னு ஐடியாவுல இருக்கோம். அதனால, இப்பவே பூம்புகார், சிதம்பரம் பத்தி தெரிஞ்சுக்கிட்டாதான் உங்களுக்கும், உறவுக்காரங்களுக்கும் சொல்லமுடியும்.  
அதனால வர்ர்ர்ர்ர்ர்ட்ட்ட்டா?!

திருக்கடையூர் தலவரலாறு தனிப்பதிவா வரும்....

நன்றியுடன்,
ராஜி

11 comments:

  1. //ராஜிக்கிட்ட கேட்டா தெரியும். அவதான் புத்திசாலி, எல்லாம் தெரிஞ்ச ஆளுன்னு ஆளுக்காள் சொல்ல//

    சந்தடி சாக்குல இப்படியும் அடிச்சு விடுறீங்களே....

    பதிவில் நிறைய விடயங்கள் அறிந்தேன் சகோ.

    ReplyDelete
    Replies
    1. ஒரு விளம்பரந்தான்.....

      ஆனாலும் பல விசயங்களை சொல்லி இருக்கேன்ல!

      Delete
  2. சிறப்பான தகவல்கள். இப்போதுதான் என் சகோதரர் 60 முடிந்தது. வரும் மாதம் எங்கள் மாமாவுக்கு சதாபிஷேகமும், அடுத்த மாதம் என் கடைசி மாமனுக்கு 60ம் நடக்க இருக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. மாமனாருக்கு இப்ப 84 வயசாகுது. அடுத்த வருசம் சதாபிஷேகம் செய்யலாம்ன்னு ஒரு ஐடியாவில் இருக்கோம்.

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  3. வணங்குகிறேன் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. இப்படிலாம் சொன்னா உங்களுக்கு வயசு கம்மின்னு நினைச்சிடுவேன்ன்னு நினைக்குறீங்களாண்ணா?!

      Delete
  4. அழகான பதிவு.....அறுபதாம் கலயாணம்னா,தாலி கட்டி/கல்யாணம் பண்ணி 60 வருஷம் ஆனப்புறம் பண்றதுன்னு இது நாள் வரைக்கும் நெனைச்சிட்டிருந்தேன்...... நன்றி தங்கச்சி,பதிவுக்கு.

    ReplyDelete
    Replies
    1. இந்த தொண்ணூறு வயசிலாவது தெரிஞ்சுக்கிட்டா சரிதான்.

      Delete
  5. வணங்குகிறேன் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. அக்கா, மாமாவின் ஆசி உங்களுக்கும் உண்டுண்ணே

      Delete
  6. மிக்க நன்று.

    ReplyDelete