Wednesday, December 19, 2018

ஆண்கள் அடிமைகளாக இருந்த அல்லி ராஜ்ஜியம் 1 -தெரிந்த கதை, தெரியாத உண்மை

மாகாபாரத்தில்  பல கிளைக்கதைகள் உண்டு. அதில் வரும் ஒரு கிளைக்கதையே இந்த ஆரவல்லி, சூரவல்லி கதை. என்னுடைய சின்னவயசுல என் தாத்தா இந்தக்கதைலாம் சொல்லுவாரு. அவர் காலத்துல தெருக்கூத்து , தோல்பாவை கூத்துலலாம்  இந்த ஆரவல்லி, சூரவல்லி கதை மிகப்பிரதானமாக இடம்பெறுமாம். நம்மிடையே இப்பொழுது நம்தலைமுறையினருக்கு பெயரளவில்கூட தெரிந்திராத  ஆரவல்லி சூரவல்லியின் வீரசாகசங்களை தாத்தா சொன்னதையும், பரிமேலழகர் எழுதிய உரையையும் வைத்து இன்று நம்முடைய மௌனச்சாட்சிகளில் பார்க்கலாம் .
பஞ்சபாண்டவர்களுக்கும், துரியோதனனுக்கும் சண்டை மூள்வதற்கு முன்பே தருமனின் தலைமையில் அவர்கள் நாடாண்ட  காலத்தில் நடைபெற்றதாக சொல்லப்படுது. மகாபாரதத்தின் கிளைக்கதையில் வரும் இந்த கதை ஆரவல்லி சூரவல்லி, வீரவல்லி உள்ளிட்ட ஏழு சகோதரிமார்களை பற்றியது.   எழுவரில் ஆரவல்லியும், சூரவல்லியுமே முக்கியமானவர்கள்.  அவர்களோடு அழகான வீரவல்லி என மூவரைப் பற்றியே எல்லா குறிப்புகளிலும் இருக்குது. ஆனா, அவர்களுக்கு இளையவர்களான முத்துசாலை, மிந்தசாலை, நாகதாளி மேலும் ஒருவர் (பெயர் சரியாக நினைவில் இல்லை). மூத்த சகோதரிகளான மூவருக்கும் இணையாக வீர தீர, மந்திர, தந்திரக்கலைகளில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள். அவர்களை எதிர்த்தவர்கள் அனைவரும் தோல்வி கண்டனர். எல்லா நட்டு அரசர்களையும் வெற்றிக்கொண்டு அவர்களை அடிமையாக்கி வேலை வாங்கினர். அவர்கள் கொட்டத்தை அடக்க கிருஷ்ண பரமாத்மா தருமனின் சபையில் ஒருவேண்டுகோளை வைத்தார். கொடிய எண்ணங்கொண்ட அந்த சகோதரிகளை அடக்கி, அவர்கள் நாட்டில் அடிமைகளாக இருக்கும் அரசர்களையும், இளவரசர்களையும் மீட்கவேண்டுமென வேண்டினார். இதைக்கேட்ட தருமன் கிருஷ்ணனிடம்,  அந்த சகோதரிகள் நமக்கு எதிராக எதுவும் செய்யவில்லை. பந்தயமும் கட்டவில்லை. அப்படியிருக்கையில் நாம் ஏன் வீணாக அவர்களிடம் சண்டைக்கு போகவேண்டும்?!,அது தெருவில் வீணே கிடக்கும் வாளை  எடுத்து, தன் கையை கிழித்துக்கொள்வதற்கு சமமாகுமே என தருமன் கூறினான்.
அப்பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களை விடுவிக்க நாம்தான் முயற்சியெடுக்கவேண்டும் என கிருஷ்ணன் சொல்ல, பீமனும், ஆரவல்லி சூரவல்லி இருந்த நெல்லூர் பட்டணத்திற்கு செல்வதாகச் சொல்லி அண்ணனை வணங்கி நின்றான். அப்பொழுது தருமன், பீமனிடம் ஆரவல்லி, சூரவல்லி  இருந்த நெல்லூர் பட்டணத்தைப்பத்தியும் ஆரவல்லி சகோதரிகளை பற்றியும் பீமனிடம் கூறினான். மந்திர, தந்திர வித்தைகளில் ஆரவல்லி, சூரவல்லியை வெல்ல இந்த உலகத்தில் யாருமில்லை. சூனிய வித்தைகளில் கைதேர்ந்த அவர்களை எதிர்த்த ராஜாக்களெல்லாம் அழிந்து போனார்கள். மீதி உள்ளவர்கள்லாம் சிறைபிடிக்கப்பட்டார்கள். அதனால், அந்த நாட்டிற்கு யாரும் செல்வதில்லை என்று தருமன் கூறினான். இதைக்கேட்டு வெகுண்டெழுந்த பீமன். அண்ணா! நம்மைவிட அவர்கள் பராக்கிரமசாலிகளா?! அண்ணா! பராக்கிரமசாலிகள் என்று நீங்கள் சொல்லும் அவர்களால் இந்த காயம் அழிந்து கயிலாயம் சென்றாலும் பரவாயில்லை நான் முன்வைத்த காலை பின்வைக்கமாட்டேன் ,என்றுக்கூறி நெல்லூர் பட்டணத்திற்கு புறப்பட்டான் .
பீமன், ஆரவல்லி தேசத்திற்கு வந்துக்கொண்டுருப்பதைக்கண்ட, நாரதர் உடனே ஆரவல்லி நாட்டிற்கு விரைந்துச்சென்று ஆரவல்லி! உன் கொட்டமெல்லாம் அடங்கப்போகின்றது.  உன்னை வெல்ல தருமனின் தம்பி மதயானைப்போன்ற  பீமன் வந்துக்கொண்டிருக்கிறான் எனச்சொன்னார். அதைக்கேட்டு நகைத்த ஆரவல்லி, அதையும்தான் பார்த்துவிடுவோமென அலட்சியமாய் கூறியதோடு, நம் நகருக்குள் புதியதாக யாரும் வந்திருக்கிறார்களா என கண்காணிக்க தன் தங்கையருக்கும், தோழியருக்கும் உத்தரவிட்டாள். அப்பொழுது கார்மேகங்கள் ஒன்றாய் சூழ்ந்ததுப்போல் கர்ஜனைக்கொண்டு பீமன் புயலென வந்துகொண்டிருந்தான். உடனே ஆரவல்லி தன்னுடைய பெண்படைகளை  உருமாறும் மந்திரப்பொடிகளை கொண்டு மாயவித்தைகள் செய்து கரடிகளாக உருமாற்றி போர்செய்யலாகினர். 

முக்கியமான ஒரு விசயத்தை சொல்ல மறந்துட்டேனே! ஆரவல்லி சகோதரிகளுக்கு ஆண்வாடையே ஆகாது. அதனால், அரண்மனை முழுக்க  மந்திரி, சமையல்கலைஞர், சேவகம், என அனைத்து பணிகளுக்கும் பெண்பணியாளர்களே! போர்ப்டையில்கூட முழுக்க முழுக்க  பெண்கள்தான்.  வந்த கரடியை தன்னுடைய கதாயுதத்தினால் தாக்கி அழித்துவிட்டு, வெற்றிக்களிப்போடு நிற்கும்போது, ஆரவல்லியின் சூன்யப்படைகள் உடனே கோட்டைக்குள் சென்று மந்திரப்பெட்டிகளை எடுத்துவந்து மந்திரங்களை ஓதினார்கள். அதிலிருந்து பயங்கர வெறியுடன் வேங்கைகள் சீறிப்பாய்ந்து வந்தன. அதனைக்கண்ட பீமன், ஐயோ! அண்ணனுடைய சொல்கேளாமல் தனியே வந்து மாட்டிகொண்டோமே! இந்த வேங்கைகளை எப்படி எதிர்கொள்வது என சிந்திக்கலாயினான்
சரி என்னவானாலும் பரவாயில்லை. முன்வைத்த காலை பின்வைக்க வேண்டாமென வேங்கைகளுடன் மோத ஆரம்பித்தான். கஷ்டப்பட்டு வேங்கைகளை எதிர்கொண்டபின் பயந்தோடிய அவை ஆரவல்லியிடம் தஞ்சமடைந்தன.  கோபங்கொண்ட ஆரவல்லி நம் மந்திர தந்திரத்துக்கு அடிப்படியாத ஒருவனா?! எனத்திகைத்து, இன்னும் கடுமையான மந்திரங்களை உச்சரித்து, தேவலோகத்திலும் காணக்கிடைக்காத அழகான பெண்களை உருவாக்கி பீமனுக்கு  எதிராக யுத்தம் செய்ய அனுப்பினாள். வந்த பெண்களின் அழகைக்கண்டு, மதிமயங்கி நின்றான் பீமன். நாகலோகத்திலும் இந்திரலோகத்திலும் இதுப்போன்ற அழகான பெண்கள் உண்டோ என வியந்து நோக்கிநின்றான். ஆனால் அவர்கள் வாளுடன் யுத்தத்திற்கு வந்த மாயகன்னியர்கள் என்று பின் தெளிந்து,  அவர்களுடன் யுத்தம் செய்து கொன்று வீசலானான். தப்பிப்பிழைத்து மீதி இருந்தோர், ஆரவல்லியை நோக்கி தஞ்சம் புகுந்தனர். .நெல்லூரையே நிர்மூலமாக்கிடுவான்போல எனக்கூறி ஆரவல்லியை வணங்கி நின்றனர். சரி, இனி அவனை தந்திரமாகத்தான் வெல்லவேண்டுமென்று ஆரவல்லி முடிவெடுத்து பீமனை பந்தயத்துக்கு வருமாறு சவால் விட்டனுப்பினாள்.

முதலில் எங்களுடன் மோதும்முன் எங்கள் சேவலுடன் உன் சவாலை காட்டு என ஆரவல்லி கொக்கரித்து,  தன் தங்கை சூரவல்லியிடம் நமது சேவலை கொண்டுவா என கர்ஜித்தாள். அப்பொழுது அவள் கொண்டுவந்த இரு சேவலில் ஒன்றை தன்னிடம் வைத்துக்கொண்டு, இன்னொன்றை பீமனிடமும் தந்தாள். இரு சேவலுக்கும் போட்டி வைப்போமென சொல்லி, தன்னிடமிருந்த மாயசேவலின்முன், பதினோரு கலம் பச்சரிசிவைக்க அதை ஒரே மூச்சில் தின்று தீர்த்தது .அதைக்கண்டு சந்தோஷப்பட்ட ஆரவல்லி அதைத்தடவிக்கொடுத்து ஏதோவொரு பானத்தினை ஊட்டிவிட்டாள். இதை கண்ட பீமன் தன்னுடைய சேவலின்முன், சிறுசம்பா அரிசியெடுத்து குவித்து வைக்க , பீமனது சேவல் அதை திங்க ஆரம்பிக்கும்போது ஆரவல்லியினுடைய சேவல் பாற்கடலை கடைந்தபோது எழுந்த அலையின் ஓசையைப்போல் பேரிரைச்சலுடன் கூவ ஆரம்பித்தது. அதைக்கேட்டு அரசவையே நடுநடுங்கிற்று. அத்தோடு பீமனிடமிருந்த சேவல்,   கதிகலங்கி மயங்கி விழுந்தது. இதைக்கண்ட பீமன், அந்த சேவலை தூக்கி, மயக்கம் தெளிவித்து தூக்கிப்பிடிது நிறுத்தி வைத்தான். அதைப்பார்த்த ஆரவல்லி ,எள்ளிநகையாடினாள். எங்களை வந்து வெற்றிக்கொண்டு யாரும் சென்றதில்லை. மாண்டவர் போக மீதி உள்ளவர்கள் எங்கள் சிறையில் அடிமைகளாக இருக்கின்றார்கள்.  எங்களுக்கே சவால் விடுகிறாயா என எள்ளிநகையாடினாள்...... .

பீமன் என்னவானான்?! ஆரவல்லி சகோதரிகளின் மந்திரம், தந்திரம் என்னவானது என அடுத்த பதிவில் பார்க்கலாம்..

நன்றியுடன்,
ராஜி 

6 comments:

  1. மகாபாரத கிளைக்கதைகள் எப்போதுமே சுவாரஸ்யம். சின்ன வயதில் எங்கள் வீட்டில் இருந்த மகாபாரத புத்தகம் ஒன்றில் ஏகப்பட்ட கிளைக்கதைகளுடன் பெரிய புத்தகமாக இருந்தது. அதை இப்போது காணோம். இந்தக் கதை படித்த நினைவில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஆரவல்லி கதை தெரியாதா?! சோ சேட். பண்டரிபாய், காக்கா ராதாக்கிருஷ்ணன் நடிச்சிருப்பாங்க. ரொம்ப பழைய படம் சகோ. ஒரே வெட்டில் மூணு துண்டு விழனும்ன்னு போட்டி வைப்பாங்க. வாளை வளைச்சு வெட்டுவாங்க. சின்ன சைஸ் வளையத்தை கொடுத்து உள்ள நுழைஞ்சு வரச்சொல்வாங்க. ஒரு மூலிகையை தடவி வளையத்தை பெருசாக்கி வருவார் ஹீரோ. அதுக்குப்பின் இந்த இரு காட்சிகளும் ஜெமினி கணேசனும், எம்.ஜி.ஆரும் தங்கள் படத்தில் வச்சிருப்பாங்க. அடுத்த பதிவில் லிங்க் கொடுக்கிறேன் சகோ

      Delete
  2. உங்கள் எதிர்பார்ப்பை பொய்யாக்க மாட்டேன்ண்ணே

    ReplyDelete
  3. ஆரவல்லி சூரவல்லி கதையா ஏப்போதோ படித்த நினைவு கொஞ்சூண்டு இருக்கு...தொடர்கிறோம்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இருக்கா?! அப்பச்சரி. இந்த பதிவை வாசிச்சா முழுசா நினைவுக்கு வந்திடும் கீதாக்கா

      Delete
  4. எனக்கு இந்த புத்தகம் வேண்டும் பதிவிறக்கமுடியும

    ReplyDelete