Friday, December 07, 2018

சீதாஹரன்-லட்சுமணன் ரேகா(கை) -ஷீரடி பயணம்

நாம  பஞ்சவடியையும், அதைச்சுத்தி நிறைய கோவில்களை பார்த்துட்டோம். இன்னும் சில இடங்கள் மீதி இருக்கு.  தகவலுக்காக நாங்க தேடித்தேடி அலைஞ்சமாதிரி புதுசா போகும் யாரும் அவச்தைப்படக்கூடாதுன்னுதான் இந்த பதிவு. போனவாரம் காலாராம் மந்திர், லட்சுமணன் சேஷ்நாக் அவதார் பத்தி பார்த்துட்டோம். இந்தவாரம் சீதாஹரன்ங்கிற இடத்திலிருந்து நம்ம பயணத்தை தொடங்கப்போறோம். மாரீசன் மாயமான் உருக்கொண்டு ராம, லட்சுமணரை காட்டுக்குள் வெகுதூரம் திசைமாற்றி இழுத்துச்சென்று அன்னை சீதாதேவி கடத்தப்பட்ட சம்பவம் நடந்த இடம் இதுதான்னு  சொல்லப்படுது .
காட்டுக்குள் சென்ற இராமனை மாரீசன் போக்குக்காட்டி நேரத்தை கடத்த... அண்ணன் சென்று வெகுநேரமானதால் கவலைகொண்ட இளவல் சீதாதேவியின் ஆணைப்படி அண்ணனை தேடி செல்கிறான். சீதாதேவியின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் அன்னை சீதாதேவி இருக்கும் குடிலை சுற்றி ஒரு பாதுகாப்பு கோட்டை கிழித்து, எக்காரணங்கொண்டும் இந்த கோட்டை தாண்டவேண்டாம் என எச்சரித்துவிட்டு அண்ணனை தேடி இளவல் சென்றான் .
இராமர், சீதை, லட்சுமணன் இவர்கள் மூவரைத்தவிர யார் இந்த பாதுகாப்பு கோட்டை தாண்டினாலும், அக்னிஜுவாலை அவர்களை அழிக்குமாறு ஏற்பாடு ஒன்றினை செய்துவிட்டு லட்சுமணன் சென்றதும், இராவணன் பிட்சை எடுக்கும் சந்நியாசி மாதிரி வேடந்தரித்து சீதாப்பிராட்டியாரிடம் யாசகம் கேட்கிறான். யாசகம் கொடுப்பவர், வாங்குபவரிடையே எந்த தடையோ அல்லது அரணோ இருக்கக்கூடாதெனச்சொல்லி, சீதாதேவியை கோட்டைத்தாண்டி வந்து பிட்சை போடும்படி சொல்கிறான். எந்தவித சந்தேகமுமில்லாமல், பிட்சை போட சீதாப்பிராட்டியார் கோட்டை தாண்டுகிறாள். உடனே, சீதாதேவியை இராவணன் அபகரித்து செல்கிறான். இதுமாதிரியான  சீதாதேவியை இராவணன் கடத்தப்பட்ட சம்பவத்தை நினைவுக்கூறும்  பல சிலைகளை இங்க வச்சிருக்காங்க .
லட்சுமணன் கோடு கிழித்த நிகழ்ச்சி ஆனந்த இராமாணயத்தில் கூறப்பட்டுள்ளது: அதாவது சீதை ஆசைப்பட்டு கேட்ட, புள்ளிமானை துரத்திக்கொண்டு வெகுதூரம் சென்ற ராமரின் குரல்போல ஓர் குரல் கேட்டதும், லட்சுமணனை அவ்விடத்திற்கு சென்று பார்த்து வருமாறு சீதை அனுப்புகிறாள். ஆனால் லெக்ஷ்மணன் அது ராமரின் குரல் இல்லையென லட்சுமணன் எவ்வளவோ எடுத்துக்கூறியும், அதைக்கேட்காமல் சீதை அவனை கடிந்து பேசுகிறாள், அதனால் ராமனைத்தேடி புறப்பட லட்சுமணன் ஆயத்தமானான். தன்னுடைய வில்லின் நுனியினால், தரையில் மூன்று கோடுகளைக் கிழித்து, “எக்காரணங்கொண்டும் இக்கோடுகளைத்தாண்ட வேண்டாமென சீதையிடம் கூறிச்செல்கிறான். இராவணன் சந்நியாசி வேடத்தில் வந்தபோது, அவனுக்கு பிட்சையிட சீதை அந்தக்கோட்டை தாண்டியபோதுதான், இராவணனால் கடத்தப்பட்டாள் என்று ஆனந்த ராமாயணம் கூறுகிறது. வால்மீகி, கம்பர், துளசிதாசர் ஆகிய மூவரில் ஒருவர்கூட இதுபற்றி எதுவும் சொல்லவில்லை. ஆனந்த ராமாயணத்தில்தான் லட்சுமணன் கோடு கிழித்த நிகழ்ச்சி சொல்லப்படுது. இந்த முரண்பாட்டை அசைப்போட்டவாறே லட்சுமணன் ரேகா(கை)வுக்கு அருகில் சென்றோம்.
எங்களுக்கு ஒரே அதிர்ச்சி... அங்கிருப்பதுதான் லட்சுமணன் வரைந்த கோடென்றால் இராம, லட்சுமணர் எவ்வளவு பெரிய உருவமாக இருந்திருப்பார்கள். மேலிருக்கும் படத்திலிருக்கும் ஒரு வாய்க்கால் மாதிரியான அமைப்பே லட்சுமணன்ரேகா(கை).  லட்சுமணன் கிழிச்ச கோடுன்னு சொல்லி கூட்டிட்டு வந்து வாய்க்காலை காட்டுறாங்களேன்னு ஆச்சர்யமும், நம்பிக்கையின்மையும் ஒருசேர ஆட்கொண்டது. அந்த வாய்க்காலை போன்ற இடத்தினுள் ஒரு சிறிய குடில் ஒன்னு வச்சிருக்காங்க.  லட்சுமணன்ரேகா(கை) என்பது  ஒரு கோடில்லை. அந்தக்குடிலில் சீதாதேவியின் சிறிய சிலை ஒன்னும் இருக்குது. குறுங்கனவாயைத்தாண்டி இராவணனின் மண்ணாலான சுதைச்சிற்பம் ஒன்னு இருக்கு. 
அதுலாம் பார்த்துட்டு மிகமுக்கியமான இடமான பஞ்சவடியின் மிகவும் சிறப்பு பெற்ற  தபோவனத்திற்கு வந்து சேர்ந்தோம். இந்த தண்டகாருண்ய வனத்தின் மகிமைகளைப் பற்றி நமது கடந்த பதிவுகளில் பார்த்துட்டோம். கபிலமுனிவர் தவம் செய்த இந்த இடத்தின் மகிமையை சொல்லவும் வேண்டுமா?! இந்த இடத்தில்தான் கபில -கோதாவரி நதிகள் சங்கமம் ஆகுது. இங்க, மிகவும் சிறப்புமிக்க  பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வர குண்ட் இருக்குது. இது, சீதாதேவி நீராட பயன்படுத்திய குண்டம்ன்னும், அதேசமயம் சீதாதேவி அக்னிப் பிரவேசம் செய்த இடம்ன்னும் சொல்றாங்க .
இங்க நமக்கு விவரித்து சொல்ல அந்தந்த குடிலுக்கு பக்கத்துல சில பண்டிட்கள் இருக்காங்க. ஆனா, மராத்தி, இந்திலதான் சொல்றாங்க. கொஞ்சநாளாய் வடநாட்டில் சுத்தியதால் இந்தி இந்தி தோடா தோடா மாலும். அதனால்,  அவங்க சொல்லுறது தெளிவா புரியுது. அவர் சொன்னது இந்த இடத்தில்தான் சீதாதேவி குளிக்க பயன்ப்படுத்திய குண்டம் இருக்குதுன்னு  இறங்கி காட்டினார். ஒரு ஆள் உள்ள போனால்  உள்ள ஆள் இருப்பது வெளிய இருக்கவுங்களுக்கு தெரியவே தெரியாது. இங்க ராமர், லட்சுமணர், சீதாதேவி என தனித்தனியாய் எல்லோருக்கும்  குண்டங்கள் இருந்ததாகவும், இங்கதான் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்ததாகவும், பிற்காலத்தில் நாம நம்ம பதிவில் தரிசித்த அந்த இடத்தில் கொண்டுபோய் லட்சுமணன் கோவிலை உருவாக்கிவிட்டனரென்றும் கூறினார். அடுத்து சீதாமாதா அக்னிகுண்ட் என இன்னொரு இடத்தை காட்டினார் .
இந்த இடத்தில்தான் சீதாதேவி அக்னிபிரவேசம் செய்தார் எனக்கூறினார். இங்க,  பிரம்மா, விஷ்ணு, மகேஷ் தின்குண்ட் என்று சில இடங்களையும் காட்டினார் அவர் சொன்னதுலாம் படா, படாவா இருந்ததால் எனக்கு அதன் பொருள்  சரியாக விளங்கலை(ஸ்ஸ்ஸ் அபா! எப்படிலாம் சமாளிக்க வேண்டியிருக்கு). தெரிந்தவர்கள் இங்கே பதிவிடலாம். கோதாவரி நதி மிகவும் வேகமா ஓடுது.  இதுவும் சுற்றுலா தலமாக இருப்பதால் இங்கும் ,வழக்கமான ஜூஸ் கடைகளும், குதிரை ஏற்றம், ஊசி பாசி மணி மாலை கடைகளும்  இருக்கு. 
வாழ்க்கையில் சந்தர்ப்பம் கிடைத்தால் ஒவ்வொருவரும் சென்று பார்க்கவேண்டிய இடங்கள் இவை. இராமாயண காவியத்தை நாம் கதைகளிலும், டிவியிலும் மட்டுமே பார்த்திருக்கோம்.  ஆனா அந்தந்த பாத்திரங்கள் நேரடியாக வாழ்ந்த இடங்களை நாமும் பார்க்க கொடுப்பினை இருந்ததோடு அவர்கள் காலடிப்பட்ட இடங்களில் நாமும் நிற்கின்றோம் என நினைக்கும்போது அந்த இறைவனுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.  மாலைநேரம் நெருங்கி மெல்ல இருட்ட தொடங்கியது. தபோவனத்தை விட்டு சூரியன் மெல்ல மெல்ல மறைந்துகொண்டிருந்தான் .
நேரமின்மையால் ஸ்ரீராம் பரண்குடிக்கு செல்லமுடியாமல் போனது அடுத்தமுறை இங்க வரனும். விடுபட்ட இடங்களை தரிசித்து அதுபத்தி  விரிவா எழுதனும். அதற்கு அந்த இறைவன்தான் துணைபுரியவேண்டுமென வேண்டுகோள் வைத்து நாங்களும் ,அடுத்த கோவிலுக்கு பயணமானோம்....
இந்தக்கோவில் லட்சுமிநாராயண் மந்திர். இராமாயணத்திற்கும் இந்த இடத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை. இது பிற்காலத்தில் தோன்றியதென சொல்லப்படுது. இந்தக்கோவில் மிகப்பெரிய வளாகத்தை கொண்டுள்ளது இங்க மார்பிள் கற்களான லட்சுமிநாராயணன், விநாயகர், அனுமான், சிவன் இராம லட்சுமணர்,  சீதாதேவியின் சிலாரூபங்கள் இருக்கு. இங்க நிறைய பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன. நாம் நமது கையால் அவைகளுக்கு உணவு வழங்கலாமாம்!! ஆனா  மாலை மங்கி இருள் சூழந்ததால் அங்கயும்  போகமுடியலை. கோவில் வளாகம் மிகதூய்மையாகவும், அழகாகவும் பராமரிக்கப்படுது.  விருப்பம் இருக்கவுங்க பசுக்களுக்கும், கோவில் அன்னதானத்திற்கும் டொனேஷன் கொடுக்கலாம். எங்களோடு வந்தவங்களும் அப்படி கொடுத்தாங்க. ஒருவழியாக அன்றைய தரிசனம் முடிச்சாச்சுது.  இனி அடுத்தவாரம் மிகவும் பிரசித்திப்பெற்ற 12  ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றான திரியம்பகேஸ்வரர் கோவிலிலிருந்து சந்திக்கலாம் .
நட்புடன்
ராஜி 

8 comments:

 1. லகஷ்மன் ரேகா என்ற ஒன்று இல்லை என்று .சொல்பவர்களும் உண்டு. சுவாரஸ்யமான விவரங்கள், படங்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோ,எல்ல இடமும் விவாதங்கள் ஆகி போய்விட்டன.ஒரு பட்டினமன்றமே வைக்கலாம் போல...

   Delete
 2. //அங்கிருப்பதுதான் லட்சுமணன் வரைந்த கோடென்றால்// - நீங்க சரியானதைத்தான் படமெடுத்திருக்கீங்களா? பார்க்க நம்ம ஊர் க.நீ வாய்க்கால் மாதிரி (தெரு ஓரங்களில் இருப்பது) பக்காவாக கட்டப்பட்டிருக்கிறது?

  ஆனாலும் விவரங்களும் படங்களும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. அங்கிருப்பவர்கள் .இதுதான் லெக்ஷ்மண் ரேகை என்றார்கள்.நானும் நம்பிட்டேன் நீங்களும் நம்பனும் இல்ல சாமி குத்தம் ஆகிடும் .சரி சரி அவசர அவசரமா பயணம் போனதால சில இடங்களில் அலசி ஆராய முடியவில்ல.அடுத்ததடவை,உங்க டவுட்டை கிளியர் பண்ணிடுறேன்.சகோ ...

   Delete
 3. நீங்கள் சொல்லி தான் சிலது அறிய முடிகிறது சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்ண்ணே....

   Delete
 4. படங்களும் பகிர்வும் அருமை
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ...

   Delete