Wednesday, December 26, 2018

ஆண்கள் அடிமைகளாக இருந்த அல்லி ராஜ்ஜியம் 2 -தெரிந்த கதை, தெரியாத உண்மை


நான்லாம் சின்ன வயசா இருக்கும்போது, அடக்கம் ஒடுக்கமா இணைபிரியா இருக்கும் அக்கா தங்கச்சிகளை சூலமங்கலம் சகோதரிகள்(அதிகாலையில் ஒலிக்கும் கந்தசஷ்டி பாடலை  பாடினது இவங்கதான்.)  கொஞ்சம் அடங்காம அடாவடியா திரியும் அக்கா தங்கச்சிகளை மனசுக்குள் பெரிய ஆரவல்லி சூரவல்லின்னு நெனப்பு..ன்னு கிண்டல் பண்ணுவாங்க. அந்தளவுக்கு ஆரவல்லி, சூரவல்லி சகோதரிகள் அன்றாட வாழ்க்கையில் சாமானிய மக்கள் மனசில் பதிஞ்சு போயிருந்தனர். மகாபாரத கதையிலிருக்கும் கிளைக்கதை ஒன்று மக்களிடையே பரவக்காரணம் அன்றைக்கு விழாக்களில் போடப்பட்ட தெருக்கூத்துகள், தோல்பாவை, கர்காட்டம், பொம்மலாட்டம், கதாக்காலட்சேபம், பஜனைகள்... இவையெல்லாம், வெறும் கடவுள் பக்தியை மட்டும் மனசுக்குள் பதிய வைக்கல. மூதாதையர்களின் வாழ்க்கை முறைகளையும், கலாச்சாரம், பண்பாடுகளை மக்கள் மனசில் பதிய வச்சாங்க.  தெருக்கூத்து மாதிரியான கிராமத்து கலைகள் மெல்லமெல்ல வெளியேறி டிவி, ரேடியோ, செல்போன், இணையம்ன்னு நுழைஞ்சு நம்ம வாழ்க்கைமுறையையே மாற்றிவிட்டது. மூன்றாவது தலைமுறை தாத்தா, பாட்டி பேர்களும், ஒன்றுவிட்ட அத்தைக்கு எத்தனை பிள்ளைகள்ன்ற விவரமே இந்த தலைமுறையினருக்கு தெரியாதபோது, மகாபாரத, ராமாயண கதைகளில் வரும் கதாபாத்திரங்கங்களா தெரியப்போகின்றது?! வசதி வாய்ப்புகள் அதிகரிக்க அதிகரிக்க மனித உறவுமுறை வட்டம் குறைந்துபோனது வேதனையே!

ஆரவல்லி சூரவல்லி கதை தெரியாதவங்களுக்கும், போன பதிவை படிக்காதவங்களுக்கும் ஒரு சின்ன அறிமுகம்.  ஆரவல்லி , சூரவல்லி சகோதரிகள் மொத்தம் ஏழு பேர். முதல் இருவர் தவிர மத்த 5 பேர் அந்தளவுக்கு பிரபலம் ஆகல. மந்திர தந்திர கலைகளில் கைதேர்ந்த இந்த சகோதரிகளுக்கு ஆண்வாடையே ஆகாது.  அரண்மனை பணிகள், போர்படைகள்ன்னு எல்லா பணிகளிலும் பெண்கள் மட்டுமே. ஆரவல்லி சாம்ராஜ்ஜியத்தில் ஆண்களுக்கு இடம் கிடையாது. இவர்களின் ராஜ்ஜியத்துக்கு பேரு அல்லி சாம்ராஜ்ஜியம். இந்த சாம்ராஜ்ஜியத்துக்குள் நுழையும் ஆண்களுக்கு போட்டி வைத்து தோற்றுப்போகும் ஆண்களை சிறையில் தள்ளுவது இவர்கள் வழக்கம். மந்திர தந்திரத்தில் தேர்ந்த இவர்களை வெல்ல யாராலும் முடியவில்லை.

குருஷேத்திர போரில் வெற்றிப்பெறுவதற்கு அல்லி சாம்ராஜ்ஜியத்தை வென்று, ஆரவல்லி சூரவல்லி சகோதரிகளை கொட்டத்தை அடக்கனும்ன்னு தர்மரிடம் கிருஷ்ணர் கேட்டார். வீண்வம்புக்கு போவானேன்னு தருமர் கேட்க, அடிமையாய் இருக்கும் ஆண்களை மீட்கவே இந்த விண்ணப்பம்ன்னு கிருஷ்ணர் சொல்ல தருமர் மறுத்தும் கேளாமல் பீமன் அல்லி ராஜ்ஜியத்துக்கு கிளம்பினார்.  பீமனின் வருகையை நாரதர் மூலமாய் ஆரவல்லி சகோதரிகள் அறிந்து பீமனை ’தக்க’முறையில் வரவேற்று அரசவைக்கு கொண்டுவந்து போட்டி வைத்தனர்.  வீரத்தினால் அவனை வெல்லமுடியாது என உணர்ந்த சகோதரிகள் குறுக்கு வழியில் யோசித்தனர். போட்டியில் ஜெயித்தது யார்ன்னு இந்த வாரம் பார்க்கலாமா?!

ஆண்களை வம்புக்கு இழுக்க அவர்களிடமிருந்த துருப்பு சீட்டு இளைய சகோதரியான அலங்காரவல்லி என்னும் பல்வரிசை. (இவளை ஆரவல்லியின் மகள்ன்னும் சொல்வாங்க. ஆண்வாடையே ஆகாத ஆரவல்லிக்கு எப்படி குழந்தைன்னு புரில. ஒரிவேளை தத்துப்பெண்ணாய் இருக்குமோ!!) மிகச்சிறந்த அழகி இவள். இவளை மணக்கனும்ன்னா தான் வைக்கும் போட்டியில் ஜெயிக்கனும்ன்னு சொல்லி  பெரிய இரும்பு குண்டை பொடியாக்கனும், சேவல் கோழியோடு சண்டைன்னு கடின போட்டிகளை வைத்தனர். அழகுக்கு ஆசைப்பட்டு வந்து தோற்ற ஆண்கள் சிறையில் அடைத்தனர்.

அந்த சூழலில்தான் பீமன் அல்லி ராஜ்ஜியத்திற்குள் வந்தான். மாயவடிவில் வந்த அழகிகளுடனும், சேவல் சண்டையிலும் பீமனே ஜெயித்தான். அடுத்த போட்டி, வாளினால் ஒரே வெட்டில் மூன்று துண்டாய் உடைக்கனும்ன்னு சொல்லி ஒரு இரும்புக்கம்பியை நீட்டினர். வீரம் இருக்கும் இடத்தில் விவேகம் இருக்காதுன்னு நிரூபிக்குற மாதிரி பீமனுக்கு மூளை வேலை செய்யலை. எத்தனை யோசிச்சும் அவனால் மூன்றாய் உடைக்க முடியாமல் இரண்டாய் மட்டுமே உடைத்து, தோற்று சிறைப்பட்டான்.
எப்பயும்போல, கிருஷ்ணன் பெருச்சாளி (யானைன்னும் சொல்வாங்க) வடிவமெடுத்து பீமனை சிறையிலிருந்து வெளிக்கொணர்ந்தார். ஆனா, தர்மவழியில் நடக்கும் தர்மர் அதனை தடுத்து நேர்வழியில் பீமனை மீட்டு வந்தால் போதும். இல்லையென்றால் சிறையிலேயே கிடக்கட்டுமென பீமனை மீண்டும் சிறைக்கே அனுப்பி வைத்தார்.  அல்லி சகோதரிகளை ஜெயிக்க வழி என்னன்னு சாஸ்திரக்கலையில் வல்லவனான சகாதேவனிடம் கேட்க, அவனும் வான சாஸ்திரத்தில் பார்த்து பல்வரிசையின் கணவன் அல்லிமுத்துவென இருக்கிறதாய் சொன்னான். அல்லிமுத்து பஞ்சபாண்டவர்களின் சகோதரியான சங்கவதியின் மகன். இது கிருஷ்ணனுக்கு வசதியாய் போயிற்று.

அல்லிமுத்துவை வரவைத்து அவனை அல்லி ராஜ்ஜியத்துக்கு அனுப்பி வைத்தனர். போகும்போது தனது  தனது இஷ்ட தெய்வமான வனபத்ரகாளியை வணங்கி அல்லி ராஜ்ஜியத்துக்குள் செல்ல காளிதேவியிடம் அனுமதி கேட்டான். அப்போது காளி, அவன் முன்தோன்றி, மந்திரித்த திருநீறையும்,  ஒரு நீண்ட வாளையும் தந்து, ‘ வெற்றி பெற்று வரும்வரை, இவை இரண்டையும் எந்ததருணத்திலும் மறந்து விடாதே” இது உனக்கு உதவுமென வாழ்த்தி அனுப்பி வைக்கிறாள். அல்லிமுத்துவின் வருகை அரசவையில் தெரிவிக்கப்பட்டது.  வழக்கம்போல் அலங்காரவல்லி என்னும் பல்வரிசையை அவன்முன் காட்டி மொத்தம் மூன்று போட்டிகள் என அறிவித்தாள் ஆரவல்லி.
பார்த்ததுமே பல்வரிசையை அல்லிமுத்துவுக்கு பிடித்துபோனது. அல்லிமுத்துவை பல்வரிசைக்கும் பிடித்துபோனது. முதல் போட்டி, சேவல் சண்டை. ஆரவல்லியின் மந்திர கட்டிலிருந்த சேவலை, அல்லிமுத்துவின் சேவல் எதிர்கொண்டது. சேவல் வீரம் மட்டும் இதற்கு போதாதென உணர்ந்த அல்லிமுத்து காளிதேவியை துணைக்கு அழைத்து காளிதேவியின் மந்திரங்களை உச்சரிக்க ஆரவல்லியின் மந்திரக்கட்டிலிருந்து சேவல் வெளிவந்தது.அதோடு  அல்லிமுத்துவின் சேவல்  மோதி, வீழ்த்தி வெற்றியும் கொண்டது. 

அடுத்து, ஒரே வெட்டில் மூன்று துண்டுகள் விழவேண்டுமென இரும்பு கம்பியை நீட்டினர்.  இரும்பை வாளால் ஒரே துண்டில் வெட்டுவதே கடினம். இதில் எப்படி மூன்று துண்டுகள் என மலைத்து நின்று மனதிற்குள் வனபத்ரகாளியம்மனை வேண்டினான். வனபத்ரகாளியம்மன் அளித்த நீண்ட வாள் நினைவுக்கு  வந்தது. அதை எடுத்து அப்படி இப்படியென ஆராய்ந்து பார்த்தான். வழக்கத்துக்கு மாறாய் அந்த வாள் மிகவும் நீண்டதாய் இருந்தது. அதை வளைத்து இரும்பு கம்பியை ஓங்கி வெட்ட, மூன்று துண்டாய் உடைந்து வீழ்ந்தது. இரண்டாவது போட்டியிலும் அல்லிமுத்து வென்றான்.

அடுத்து, அரையடி விட்டம்கூட இருக்காத, இரும்பு வளையத்தை நீட்டி இதில் நுழைந்து இந்தப்பக்கமிருந்து அந்தப்பக்கம் வரனும்ன்னு அல்லி சகோதரிகள் சொன்னாங்க. அந்த வளையத்தில் ஓரிரு வயசுக்கொண்ட குழந்தையால்கூட வரமுடியாது. இதில் எப்படி தான் நுழைவதுன்னு அல்லிமுத்து யோசித்தான்.வழக்கம்போல காளிதேவியை வணங்க, அவள் தந்தனுப்பிய விபூதி நினைவுக்கு வந்தது. அதை அந்த இரும்பு வளையத்தில் தேய்க்க, வளையம் பெருசாக ஆரம்பித்தது. வளையம் போதுமான அளவுக்கு பெருசானதும் அல்லிமுத்து வளையத்துக்குள் நுழைஞ்சு வெளியேறி, மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்றான். வேறு வழியின்றி பல்வரிசைக்கும், அல்லிமுத்துவுக்கும் திருமணம் செய்விக்க சம்மதித்தாள் ஆரவல்லி.

சினிமாவில்தான் காதல் கைகூடுச்சுன்னா  எல்லாமே நல்லபடியா நடக்கும்ன்னு சுபம் போட்டுடுவாங்க. ஆனா, அதுக்கப்புறம்தான் பல பிரச்சனைகள் உண்டாகுது. அதுமாதிரிதான் அலங்காரவல்லி, அல்லுமுத்துவின் கதையிலும் நடந்துச்சு. தன்னோடு, அலங்காரவல்லியை அழைத்துக்கொண்டு பாண்டவர்களிடம் சென்று, தன் மாமன்களின் தலமையில் திருமணம் செய்துக்கனும்ன்னு  செல்ல முடிவெடுத்தான் அல்லிமுத்து.  அதுக்கு முதல்ல ஒப்புக்காத ஆரவல்லி சகோதரிகள் அலங்காரவல்லியின் வற்புறுத்தலுக்காக அவளை அனுப்ப சம்மதித்தனர். ஆனால் அவளுக்கே தெரியாம விஷம் கலந்த நீரை தந்து, உன் கணவன் தாகம் தீர்க்க இதை கொடு எனச்சொல்லி  வழியனுப்பி வைத்தனர். 

போகும்வழியில் அல்லிமுத்துவுக்கு தாகமெடுக்க, அலங்காரவல்லி விஷங்கலந்த நீரை தருகிறாள். அதை குடித்தபின் அல்லிமுத்து இறந்து போகிறான்.   நடந்த சூது அறியாத அலங்காரவல்லி, அவனை அங்கேயே விட்டுவிட்டு ஆரவல்லி,சூரவல்லியிடம் வந்து நடந்ததைச் சொல்லி புலம்புகிறாள். ஆரவல்லியோ மனம் மகிழ்கிறாள். அலங்காரவல்லி இறந்த தன் கணவனுக்காக புலம்பிக்கொண்டே இருக்க, அல்லிமுத்துவின் குதிரை, பஞ்சபாண்டவர்களிடம் சென்று விவரம் சொல்ல, அபிமன்யு மேலுலகம் சென்று,  அல்லிமுத்துவை மீட்டுவருகிறான்.
மீண்டும் உயிர்ப்பெற்று வந்த அல்லிமுத்து, நடந்தவற்றையெல்லாம் கேள்விப்பட்டு அல்லி ராஜ்ஜியத்தின்மீது போர்தொடுத்தான்.  ஆரவல்லி, சூரவல்லி சகோதரிகளில் ஒருவள் மட்டும் தப்பிக்க, மற்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களும் பிற்காலத்தில் சிறையிலிருந்து தப்பி கேரளாவுக்கே தப்பி சென்றனர். மந்திர தந்திரகலைகளில் கைதேர்ந்தவர்களும், சாகாவரம்பெற்றவர்களுமான அல்லி சகோதரிகள் கேரளாவில் இருப்பதால்தான்  கேரளா மாந்தீரக, தாந்தீரகத்தில் பேர்போனதாய் இருப்பதாக சொல்லப்படுது. 
அலங்காரவல்லிக்கும் நடந்த சூதுக்கும் எந்த தொடர்புமில்லையென உணர்ந்த  அல்லுமுத்து அவளையே திருமணம் செய்து மகிழ்ச்சியோடு வாழ்ந்தான். திருமணத்தையொட்டி சிறைப்பட்டிருந்த ஆண்களை விடுதலை செய்து அவர்களை அவரவர் நாட்டுக்கு அனுப்பி வைத்தான்., இப்படியாக பெண்களால் நடத்தப்பட்டு வந்த அல்லி ராஜ்ஜியம் அழிவை சந்தித்தது...

சொன்ன சொல்லை காப்பாத்திட்டேன் கீதாக்கா. 
நன்றியுடன்,


11 comments:

  1. சுவாரஸ்யமான கதைதான்.

    ReplyDelete
    Replies
    1. ஆமா. ஆனா, அபிமன்யு அல்லிமுத்துவின் உயிர் மீட்டு வந்த கதை மறந்து போச்சு. அதும் சுவாரசியம்தான். அதில்லாம பதிவும் நீண்டுக்கிட்டே போகுமேன்னு ஒரு பயம்.

      Delete
    2. Anna முத்தால் ராவுத்தர் யார் வரலாறு

      Delete
    3. முத்தால் ராவுத்தர் கதையும் இதே போல்தான். அது அல்லிமுத்து மல்லிகாவதி திருமணம்.
      மல்லிகாவதியை நந்தவனத்தில் பார்த்து ஆசைப்பட்ட அல்லிமுத்து மணம் முடிக்க மாமாக்களை அழைக்க பாண்டவர்கள் முத்தால் ராவுத்தரின் மந்திர சக்தியால் சிறைபடுகின்றனர். திரௌபதி போத்தராசனுடன் சென்று ராவுத்தரை அடிமையாக்கி அல்லிமுத்து மல்லிகாவதி திருமணத்தை நடத்தி வைக்கின்றனர்.

      Delete
  2. நல்லவேளை ஆரவள்ளி, சூரவள்ளி மாதிரி மனைவி எனக்கு வாய்க்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பில்லைண்ணே வாய்ப்பில்லை. ஆரவல்லி, சூரவல்லிக்குதான் ஆண்வாசனையே ஆகாதே!! அப்புறம் எப்படி கல்யாணம் ஆகி பொண்டாட்டியாகி இருப்பாங்க?!

      Delete
  3. இதை வைத்து நவீன திரைப்படம் தயாரித்து விடுவோமா சகோதரி...?

    ReplyDelete
    Replies
    1. கருப்பு வெள்ளையில் வந்திருக்கு, இப்ப யார் இந்த கதாபாத்திரங்களுக்கு பொருந்துவாங்க?! ஆரவல்லி, சூரவல்லி கேரக்டருக்கு ரம்யா கிருஷ்ணனும், ராதிகாவும், திமிரு படத்துல வில்லியா வரும் பொண்ணும் நல்லா இருப்பாங்க. அழகான இளவரசி பல்வரிசையாக அனுஷ்கா, நயன் நல்லா இருப்பாங்க. கிருஷ்ணனாக யாரை போடலாம்?! அபிமன்யூ?! அல்லிமுத்து?! சொல்லுங்கண்ணே படத்தை எடுத்திடலாம்.

      Delete
  4. Aaravalli appadinnu oru pazhaya padamay irukku keezha youtube link !

    https://www.youtube.com/watch?v=Zkb56r3YL64

    ReplyDelete
    Replies
    1. பதிவிலேயே லிங்க் கொடுக்கனும்ன்னு நினைச்சேன், மறந்துட்டேன் சகோ. எடுத்துக்கொடுத்தமைக்கு நன்றி

      Delete
  5. சுவாரசியமான தகவல்கள்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete