Monday, December 17, 2018

வாழ்க்கையை வண்ணமாக்கும் வண்ண கோலங்கள் - ஐஞ்சுவை அவியல்

காலங்காத்தால என்ன வெட்டி முறிச்ச மாதிரி ஒய்யாரமா சோபாவில் உக்காந்து ரெஸ்ட் எடுத்திக்கிட்டு இருக்கே!.  பிள்ளைகளை அனுப்பனுமே! சமையல் செய்யலியா?!

ம் செய்யனும்.  இப்ப  மார்கழி  ,மாசமாச்சுதே! அதான் தெருவை அடைச்சு கோலம் போட்டு, கலர்பொடி தூவி முடிக்க ஒன்றரை நேரமாச்சுது. இடுப்புலாம் வலிக்குது மாமா. அதான் கொஞ்ச நேரத்துக்கு ரெஸ்ட். 

மார்கழி மாசத்துல மட்டும் ஏன்டி வாசலை அடைச்சு கோலம் போடுறாங்க?! 

மார்கழி மாசம் முழுக்க காத்துல ஏதோ ஓசோன் காத்து இருக்குதாம் மாமா. அதை சுவாசிக்கத்தான் இப்படி ஒரு ஏற்பாடுன்னு கேள்விப்பட்டிருக்கேன். 

கரெக்டாதான் சொல்லி இருக்கே. இந்துக்கள் கலாச்சாரத்தில் கடைப்பிடிக்கப்படும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு. சில பழக்க வழக்கங்களின் பின் மறைந்துள்ள பல அறிவியல் அர்த்தங்கள் காலப்போக்கில் மறந்துப்போய் இந்தக்காலத்து பெண்கள் மூடநம்பிக்கைன்னு நிறைய விசயங்களை ஒதுக்கினாலும் கோலம் போடுறதை மட்டும் நம்ம பொண்ணுங்க இன்னும் ஒதுக்கல. அறிவியல் காரணம் புரிஞ்சு செய்யுறாங்களோ இல்லியோ! ஆனா, வீடு அழகா இருக்கவாவது விதம்விதமா போடுதுங்க. ஆனா புள்ளி வச்சு கோலம் போடாம ரங்கோலின்னு கிறுக்கி வைக்குதுங்க.  எது எப்படியோ கோலம் போடுதுங்களா?! அதுவரைக்கும் சந்தோசம். 


தொடர்ந்து  21 நாட்களுக்கு தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் பழக்கவழக்கம் அதுக்கப்புறம் மறந்துபோகாம, நம்ம வழக்கத்துலயே வந்திடும். அந்த வகையில் மார்கழி முழுக்க அதிகாலையில் எழுவதை வழக்கமா வச்சிக்கிட்டா அதுவே பழக்கமாகி அதிகாலையில் எழுந்துப்போம். அதிகாலையில் எழுந்துக்குறதால பல நன்மைகள் உண்டாகும். சோம்பேறித்தனம் அண்டாது. உடலும் மனசும் ஃப்ரெஷ்சா இருக்கும். அந்தநேரத்துல ஆக்சிஜனைவிட ஓசோன் வாயு அதிகளவில் கலந்திருக்கும். இந்த ஓசோன் வாயு   காயங்களை ஆற்றவும், இதய, நுரையீரல், கண், தோல் மற்றும் மூட்டு நோய்களைக் குணப்படுத்தவும், வயோதிகத்தைக் குறைக்கவும் செய்யும்.
குளிர்காலத்தில் இழுத்து போர்த்திக்கிட்டு தூங்கத்தான் தோணும். இந்த மாசத்துல இயற்கையாகவே தூக்கமும், சோர்வும் சற்று அதிகமாகவும், வளர்சிதை மாற்றங்கள் (Basal Metabolic Rate) குறைவாகவும் உடலில் மாறும் என்பது அறிவியல் கண்டெடுத்த உண்மை. மாதம் முழுவதும் தொடர்ச்சியாக வைகறையில் நோன்பு நோற்கும்போது, மனித உடலுடன் இயைந்து விடுகிறது மார்கழி மாசத்தைய குளிர். ஆக, உடலிலும், உள்ளத்திலும் சுறுசுறுப்பை அளித்து, வளர்சிதை மாற்றங்களை சீரமைத்திட நமது முன்னோர்கள் தொடங்கிய ஏற்பாடுதான், விடியலுக்கு முன்பே வேக நடையுடன் கூடிய மார்கழி நோன்பும், பஜனையும்... 

ஓசோன் காற்று மண்டலத்தின் மேற்பகுதியில் அமைந்திருக்கும் stratosphereன்ற ஓசோன்வளியில் காணப்படும்.. இந்த ஓசோன், உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக்கதிர்கள் பூமிக்கு வராமல் வடிகட்டி ஒளியை மட்டும் பூமிக்கு அனுப்பும் வேலையை செய்யுது. காற்று மண்டலத்தில் நிறைந்திருக்கும் இந்த மாசுகளற்ற ஓசோன், சூரியனுக்குக் கீழுள்ள அனைத்து உயிர்களையும் பாதுகாப்பதுடன், விடியற்காலை வேளையில் வாக்கிங் போகும்போது, நுரையீரலுக்குப் புத்துணர்ச்சியும், சரும நோய்களிலிருந்து பாதுகாப்பும் அளிக்கும். இந்த  ஓசோன் படலம் எளிமையா எல்லோருக்கும் புரியவைக்கும்படியான ஒரு புராணக்கதை உண்டு. 
பாற்கடலில் அமுதத்தைக் கடைந்து,  அதைத் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் பங்கிடும்போது ஏற்பட்ட சண்டையில் சூரியன் கோபங்கொண்டு, `` இனி நான் ஓரிடத்தில் மட்டும் நின்று, இந்த உலகைச் சுட்டெரிப்பேன்.." என சபதமெடுத்தார். ஏழுலகமும் அவரின் வெப்பம் தாளாமல் தவித்தது. அகில உலகத்தை காக்கவேண்டி, பிரம்மா, சூரியனுக்கும்., பூமிக்குமிடையில் ஒரு திரையை உண்டாக்க நினைத்தார். ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்ச், சிவப்பு என ஏழு நிறத்தாலான குதிரைகளை உண்டாக்கி சூரியன்முன் நிறுத்தி, அந்த தேருக்கு சாரதியாய்  கருடனின் அண்ணனான அருணனை அழைத்து, ``சூரியனை ரதத்தில் உட்காரவைத்து, நீ முன்னால் நின்று ரதத்தை ஓட்டுவாயாக..!" என சொல்ல அன்றுமுதல், வண்ணக்குதிரைகளும், தேரும், அருணனும் ஒரு கவசமாய் நின்று  சூரியனின் வெப்பம் பூமியில் நேரடியாய் விழாமல் பூவுலக ஜீவராசிகளை காப்பாற்றப்பட்டனர். சூரியன் முழுமையாய் வெளிவரும்முன் வானில் தோன்றும் வர்ணஜாலத்தையே அருணோதயம்ன்னு சொல்றோம். தவம், தியானம் மாதிரியான காரியங்களுக்கு உகந்த நேரமது. இதனால்தான் சூரியனுக்கு புத்திரகாரகன்னு பேர் வந்தது. 

அருணன் பத்தி இன்னொரு பதிவில் பார்க்கலாம். இப்ப மார்கழி மாசக்கோலம் பத்தி பார்க்கலாம் மாமா.  இப்பவே பதிவு நீண்டுட்டுதுன்னு குறை சொல்வாங்க.

எல்லா நாளிலும் எல்லா கோலத்தையும் போட்டுடக்கூடாது புள்ள. பிறந்த குழந்தையை தொட்டில்ல போடும்போதும், முதன்முதல்ல வீட்டுக்கு கூப்பிட்டு வரும்போது தொட்டில் கோலம் போடனும்.  சுபிட்சத்தை வரவைக்க ஹிர்தய கோலம், கல்யாணம் செய்து வரும் புத்தம்புது தம்பதிகளை வரவேற்க மனைக்கோலம்ன்னு.. வட்டக்கோலம், கம்பிக்கோலம், புள்ளிக்கோலம், தந்திரிக் கோலம், ரங்கோலி கோலம்ன்னு விதம் விதமா இருக்கு. ஆனா, இறப்பு நடந்த வீடு, திதி, அமாவாசை தினங்களில் வாசலில் கோலம் இடக்கூடாது.. கோலத்தை சுத்தி பார்டர் கோலம் போடுறதும், செம்மண் இழுப்பதும், தீய சக்திகள் அந்த கோலத்தினை தாண்டி அந்த வீட்டுக்குள் நுழையவிடாம தடுக்குறதுக்காகத்தான்.

கோலமென்பது வெறும் அழகுக்காக, புள்ளிகள், கோடுகளால் ஆனது மட்டுமில்ல. தெய்வீக சக்தியை வரவைக்கும் எந்திரமாகும். அதனாலதான் அவை வீட்டுவாசலிலும், பூஜையறையிலும் வரையப்படுது. மேலும் மார்கழியில் அதிகாலையில் கோலமிடுவதும் அவசியம்ன்னு நம் முன்னோர்கள் சொல்வர். அதற்கு காரணம் மார்கழி மாதத்தில் பூமத்திய ரேகையில் பல மாற்றங்கள் நிகழுமாம் மார்கழி அதாவது டிசம்பர் மாதத்தில் சூரியன் தெற்கிலிருந்து வடக்கிற்கும், ஜூன் முதல் நவம்பர் வரை வடக்கிலிருந்து தெற்கிற்கும் சூரியனின் ஓட்டம் மாறுகிறது. இந்த மாற்றத்தின்போது பூமினுடைய சக்திநிலையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மார்கழியில் சூரியன் தட்சிணாயணத்திலிருந்து உத்தராயணத்திற்கு நகர்கிறது. இந்த சக்தி மாற்றத்தின்போது தேவையான அறிவு, ஞானம் இருந்தால், அப்போது ஏற்படும் சக்தி சூழ்நிலையை, நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளவே இந்த ஏற்பாடு. அதில் ஒரு வழிமுறைதான் இந்த கோலமிடுதல். காலையில் எழுந்து வாசலில் சாணம் பூசுவது, தூசி பறக்கும் மண்ணை திட்டமாக்குவதுலாம் கோலம் கலையாமல் இருக்க உதவுவதோடு நம உடலுக்கு ஒரு உடற்பயிற்சியாவும் இருக்கும். அதேநேரம்,  சாணம் ஒரு கிருமிநாசினியும்கூட. இது நம் வீட்டு வாசலில் இருக்கும் கிருமிகளை போக்கும்.

சூரிய உதயத்திற்குமுன் வாசலில் கோலமிடுவது நம் உடலுக்கு தேவையான முழுமையான பிராணவாயுவை நம் உடல் முழுக்க பரவுது. இதனால் ரத்த ஓட்டம் சீராகுது. மேலும் அந்நேரத்தில் வாகன போக்குவரத்து இல்லாம ஓரளவுக்கு சுத்தமான காத்து சுவாசிக்க கிடைக்கின்றது. இது நாள் முழுக்க நம்மை சுறுசுறுப்பா வச்சிருக்க உதவுது.  குனிஞ்சு நிமிர்ந்து கோலம் போடும்போது இடுப்பெலும்பு வலுப்பெறுது.   கோலம் போடும்போது செருப்பு போட்டுக்கிட்டு கோலம் போடக்கூடாது. வளைந்து செல்லும் கோடுகள் இறுதியில் அழகான கோலத்தினை உண்டாக்கும். இது,  வாழ்க்கை நெளிவு சுளிவுகளை உணர்த்துது. அந்த நெளிவு, சுளிவுகளை பக்குவமாய் கையாண்டால் அழகான வாழ்க்கை கிடைக்கும் என உணர்த்துது.
புள்ளியிட்டு கோலம் போடும்போது நம்முடைய சிந்தனை ஒருநிலைப்படுது. நம்முடையை சிந்தனை சிதறலையும் தடுக்கும் இது ஒருவித பயிற்சியாகும். மேலும் புள்ளிக்கோலம் போடும்போது புள்ளிகளை உற்று நோக்கும்போது கண்பார்வை அதிகரிக்குது. இதனாலதான் சாகும்வரைகூட சில பாட்டிங்க கன்ணாடி போட்டதில்ல.

அரிசிமாவுக்கொண்டு கோலம் போடுவது எறும்பு மாதிரியான சிறு பூச்சிகளுக்கும், குருவி மாதிரியான சிறு பறவைகளுக்கும் உணவாகுது. கோலம் என்பது மனிதனின் உடலுக்கு நன்மை அளிக்கும் அதேவேளையில் விலங்குகளுக்கும் உணவாகட்டும் எனற தத்துவம் இந்தியர்களின் பகுத்துண்டு வாழும் உயரிய பண்பினை காட்டுது.கோலம் போடுறதால ஐந்து குணநலன்கள் பெண்களுக்கு கைவரும்.  

நேர மேலாண்மை..
என்னதான் திட்டமிட்டிருந்தாலும் காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது பலருக்கு குதிரை கொம்புதான். ஆனா, ஏதோ ஒரு காரணம் இருந்தால் நிச்சயம் எழுந்திருக்க தவறமாட்டோம். அந்தக் காரணம் கோலமாக வச்சுக்கலாம். ஒவ்வொரு கோலத்திற்கு எவ்வளவு நேரமாகும் என நேரத்தினை திட்டமிடும் வழக்கம் நம் அன்றாட நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கு உதவும்.
2. படைப்பாற்றல்
கோலம் போடுறது என்ன கவிதையா இல்ல கதை எழுதுறதா இதுல படைப்பாற்றல் வெளிப்படன்னு   நினைக்கலாம். உண்மையில் அவற்றைப் போலவே ஒரு கலைதான் கோலம் போடுவதும். கோலப் புத்தகம் பார்த்து போடுவது, இணையதளங்கள் உதவியோடு சில நாட்களையே தள்ள முடியும். ஒரு கட்டத்தில் நாமே புதிதான கோலம் போட்டால் என்ன யோசனை வரும். அப்போது இதுவரை நாம் போட்டிருக்காத கோலம் என யோசிக்க தொடங்கும்போது, உங்களுக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் படைப்பாளியையும் எழுப்பி விடுகிறீர்கள்.
3. சிக்கலைத் தீர்க்கும் பொறுமை ....
 32 புள்ளிகள் வைத்து, அதனை யொட்டி நேர்புள்ளி, ஊடு புள்ளிகள் வைத்து முடிப்பதற்குள்ளேயே முக்கால் மணி நேரமாகியிருக்கும். அதற்கு அடுத்து, கவனமாக பூக்கோலம் அல்லது சிக்கு கோலமாக போடுவோம். அதற்கு முக்கால் மணிநேரம். இந்த ஒன்றரை மணிநேரத்தில் கவனமும் நிதானமும் இருந்தால் மட்டுமே உங்கள் மனதில் இருக்கும் கோலம் வாசலுக்கு வரும். இதுவே தினசரி செய்யும்போது அந்த கவனமும் நிதானமும் உங்களின் இயல்பு குணமாக மாறிவிடும். இது இரண்டும் இருந்தாலே எவ்வளவு பெரிய சிக்கலையும் தீர்த்துவிடலாம்.
முடிவெடுக்கும் திறன்...
இன்று இந்த பூக்கோலமா?! சிக்கு கோலமா என்ற முடிவு எடுக்கிற திறனைச் சொல்லலை. சிறப்புத் தினங்களுக்கு ரங்கோலி ஸ்டைலில் புதிதாக ஏதேனும் முடிவு செய்வோம். அதற்கு எந்த டிஸைன் எல்லோருக்கும் பிடிக்கனும், என்ன கலர் கொடுக்கலாம்.. அது பொருத்தமா இருக்குமான்னு முடிவு செய்யுறோமில்லையா அதைதான் சொல்றேண்.  இது உங்களுக்கு ரசனையை மட்டும் கொடுக்கலை. சரியான இடத்தில் பொருத்தமான முடிவெடுக்கும் திறனையும் கொடுக்கும். அது நீங்கள் ஜவுளி கடையில் புடவை தேர்வு செய்வதிலிருந்து அலுவலகத்தில் எடுக்கும் முடிவு வரை நீளும்.
5. போட்டி மனப்பான்மை:

'நான் யாருக்கும் போட்டி இல்லை.. எனக்கு யாரும் போட்டி இல்லன்னு சினிமா டயலாக்குலாம் சொல்லாம நான் எந்த போட்டியை சொல்றேன்னு புரிஞ்சுக்கனும். ஆரோக்கியமான போட்டி சொல்றேன். நாம தினமும் கோலம் போடுவதைப் பார்த்து அக்கம் பக்கத்து வீடுகளிலும் கோலம் போட ஆரம்பித்துவிடுவார்கள். நல்ல பழக்கத்தை அவர்களும் தொடங்குவது நல்லதுதான். அவர்களைவிட சிறப்பான கோலம் போடும் மனநிலையை உங்களுக்கு தரும். இது, வேலை செய்யும் இடங்களிலும் பிரதிபலிக்கும். உங்களுக்கு பதவி உயர்வையும் பெற்றுத் தரும்
இனியும்  வீட்டு வாசல்ல ஸ்டிக்கர் கோலத்தை அலங்காரத்திற்கு ஒட்டாமல், அர்த்தமுள்ள அரிசி கோலத்தைப் போடலாம்.  கோலம் போட்டு முடியும் திசையை வைத்து கூட அன்றைய பொழுது எப்படி போகும்ன்னு சொல்வாங்க. கோலம் மேற்கு, கிழக்கு நோக்கி முடிந்தால் நல்லது. இப்படி கோலத்தினை பத்தி ஏகத்துக்கும் சொல்லிக்கிட்டே போகலாம். இனி கோலங்களை பத்தி அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம் புள்ள.

பார்க்கலாம் மாமா.. நான் போய் சமைக்க ஆரம்பிக்குறேன். பிள்ளைகளுக்கு டைமாச்சுது. நீ கோவிலுக்கு போய்ட்டு வந்து சாப்பிடு.
நன்றியுடன்,
ராஜி

10 comments:

 1. அதிகாலை எழுதலையும், ஆரோக்கியத்தையும், கோலங்களையும் அலசி காய போட்டு விட்டீர்கள்!

  ReplyDelete
  Replies
  1. இன்னமும் இருக்கு சகோ

   Delete
 2. கோலகோலமா கோலாகலமா இருக்கு சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. பதுவு நல்லா இருந்தால் சரிதான் அண்ணே.

   Delete
 3. மிக அருமை

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 4. கோலத்துக்குள் இவ்வளவு விசயங்களா ?

  ReplyDelete
  Replies
  1. இன்னமும் விசயம் இர்க்குண்ணே

   Delete
 5. அருமையான தகவல்கள், கோலங்கள் என்று கலக்கல் பதிவு!

  இருவரின் கருத்தும்....

  ReplyDelete
  Replies
  1. கோலம் பத்திய தகவல்கள் இன்னும் வரும் கீதாக்கா,, துளசி சார்

   Delete