Friday, April 05, 2019

வேலுண்டு வினையில்லை- 16 வகை வேலாயுதத்தின் பெயர்கள்

முருகனை குழந்தையாய், ஆண்டியாய், ராஜனாய், குடும்பஸ்தனாய், தீமைகளை சம்ஹாரம் செய்பவனாய் ... இப்படி பலகோலத்தில் ரசித்து வழிபட்டிருப்போம். ஆனால், அவன் கையிலிருக்கும் வேலை எத்தனை விதமாய் ரசித்திருப்போம்?! வேல்ல கூரிய முனை, இரும்பினால் அல்லது தங்கம் அல்லது வெள்ளி, கல் பதித்தது.. இப்படிதான் பார்த்திருக்கோம். அதை தாண்டி முருகன் கையிலிருக்கும் வேலில் ரசிக்க என்ன இருக்கு?!ன்னு யோசிப்பவர்களுக்குதான் இந்த பதிவு..இவ்வகையில் அசுரனை அழிக்க தனது சக்திகளையெல்லாம் ஒன்று திரட்டி வேலினை படைத்து முருகனுக்கு கொடுத்ததாகவும், இந்த வேலின் துணையுடனேதான் சூரபதுமனை வீழ்த்தியதாகவும் கந்த புராணம் சொல்கிறது. அதன் அமைப்பை ஒட்டி சக்திவேல், வஜ்ரவேல், இலைவேல், நெடுவேல் என்ற பெயர்களைப் பெற்றுள்ளது. சக்திவேல் சக்தியின் வடிவாகவும், வஜ்ரவேல் வைரம் பதித்ததாகவும் இருக்கும்.
cbsimmons: The spear in front of the Subrahmanya temple in Tiruttani.

சில வேல்களின் இலைப்பகுதியில் மந்திரங்கள் எழுதப்பட்டிருக்கும். இப்படி அமைக்கப்படும் மந்திரச் சக்கரங்கள், மந்திர வடிவங்களையொட்டி அது மந்திரவேல் எனப்படுகிறது. உயர்ந்த ரத்தினங்கள் இழைக்கப்பட்டு செய்யப்பட்ட வேல் நவரத்தினவேல் என்றும், மாணிக்கம் பதித்த வேல் மாணிக்கவேல் என்றும், வைரக்கற்களைக் கொண்டு இழைத்த வேல் வைரவேல் என்றும், தங்கத்தால் செய்யப்பட்ட வேல் தங்கவேல் என்றும், முத்துக்கள் பதிக்கப்பட்ட வேல் முத்துவேல் என்றும் அழைக்கப்படும்.

வேலின் பல்வேறு வடிவங்களில் ஒன்று சக்தி வேலாயுதம். மூன்று முக்கோணங்கள் ஒன்றின்மேல் ஒன்றாக அமைந்தது போன்றதே இதன் அமைப்பு.. முருகன் நாற்கரங்களோடு திகழ்கையில், சக்தியாயுதத்தைத் தனது இடது மேற்கரத்தில் ஏந்துவார். சக்திவேல் என்பது சக்தி ஆயுதத்தை நீண்ட தண்டின் முனையில் பொருத்தி அமைக்கப்பட்டதாகும். வேலாயுதத்தைப் போலவே சக்தி வேலாயுதமும் தனிச்சிறப்புடன் போற்றப்படுகிறது. சக்தி ஆயுதம் அக்னிக்குரிய அடையாளமாகும். அதையொட்டிேய அக்னியில் உதித்தவரான முருகன் சக்திவேலை ஏந்துகின்றார்.
தணிகை முருகன் சக்தி ஆயுதத்தை ஏந்தியிருப்பதால், ஞானசக்திரர், சக்திரர் என்றே அழைக்கப்படுகின்றார். சிக்கல் சிங்காரேவலர், சுவாமிமலை சுவாமிநாதன், வைத்தீஸ்வரன் கோயில் முத்துக்குமார சுவாமி போன்ற முருகன் வடிவங்களுக்கு, உயர்ந்த கல்லிழைத்த சக்தி வேலாயுதம் சாத்தப்படுகிறது. முருகன் மேற்கரங்களில் வஜ்ரம், சக்தி ஆகிய இரண்டையும் தாங்கியுள்ளார் என்றாலும் அவற்றுடன் சக்திவேலையும் தாங்குகின்றார். வேலாயுதத்தை முருகப்பெருமானாகவே கொண்டாடுவதால் அதைப் படைக்கலமாக அமைக்காமல் அதனையொத்த சக்தி ஆயுதத்தைப் படைக்கல வழிபாட்டிற்கு வைத்துள்ளனர். 

 
பொதுவான நிலையில் வேலின் மையத்தில் ஒரு வட்டத்தை வரைந்து அதனுள் அறுகோணத்தை இட்டு அதன் மையத்தில் ஓம் எனும் பிரணவத்தையும், சுற்றியுள்ள ஆறு முக்கோணங்களில் ச, ர, வ, ண, ப, வ என்னும் ஆறு எழுத்துகளையும் எழுதி வழிபடுகின்றனர். மேலும், சடாட்சர சக்கரம், சத்ரு சம்ஹார சக்கரம், சக்தி நிலைய சக்கரம் போன்ற சிறப்பு நிலையில் அமைந்த சக்கரங்களையும் வேல் வழிபாட்டில் பார்க்கலாம்.

உத்தண்ட வேல்
நீண்ட ஒரு தடியை தண்டம் என்பர். தீயவரைத் தண்டித்து உயர்ந்தவரைக் காப்பதால், வேலுக்கும் தண்டம் என்பது பெயர் வந்தது. வேலைச் சிறப்பித்துக் காட்டும் வகையில் உத்தண்ட வேலன் என்றும் அழைக்கப்படுகிறார். பழனி முருகனுக்குத் தண்டாயுதபாணி என்ற பெயர் வழங்குகிறது. சக்திவேல், வஜ்ரவேல் போன்று உத்தண்ட வேல் என்பது வேலின் வடிவங்களில் ஒன்றாகும். நீண்ட தண்டாயுதமே உத்தண்ட வேல் எனப்படுகிறது.

முத்துவேல்
முத்துக்கள் பதித்த வேல், முத்துவேல். முத்து என்ற வார்த்தைக்கு  உயர்ந்த, தரமான, அழகானஎன பொருளாகும். முத்துவேல் என்பது மனதைக் கவரும் அழகு படைத்ததும், உயர்ந்ததும், ஆற்றல் மிக்கதுமான வேல் என்ற பொருளைத் தருகிறது. 

மந்திரவேல்
முருகன் ஏந்தும் வேல்களில் மந்திரவேலும் ஒன்றாகும். கல்லாடம் எனும் நூல் வேலாயுதத்தை, ‘உள்ளத்திருளும் இடைபுகுந்து இருள் துடைத்த மந்திரத் திருவேல்’ என்று போற்றுகிறது. மந்திரம் என்பதற்கு நீங்காது உடனிருந்து காப்பது என பொருள். தன்னை வணங்கும் அன்பர்களை விட்டு நீங்காது காத்து அருள்புரிவதால் இந்த வேலுக்கு மந்திரவேல் எனப்பேர் வந்ததா, . ‘வேலும் மயிலும் துணை’ என்பது மகாமந்திரம். கந்தர்சஷ்டி கவசத்தில் ‘மந்திர வடிவேல் வருக வருக’ என்று பாலதேவராயர் வேலை அழைப்பதைக் காண்கிறோம். 
ரத்தினவேல்
ரத்தினவேல்  நவரத்தினங்களில் உயர்ந்ததான ரத்தினத்தை பதித்த வேல் என்பதால் இதற்கு ரத்தினவேல் எனப்பேர் வந்தது.  நவரத்தினங்களால் ஆன வேலாயுதங்களை முருகனின் தம்பியரான நவவீரர்கள் ஏந்துகின்றனர். இவர்கள் அன்னை பராசக்தியின் பிரதி பிம்பத்திலிருந்து தோன்றிய நவரத்தின மங்கையராகிய 1) மாணிக்கவல்லி 2) முத்துவல்லி 3) புஷ்பராகவல்லி 4) கோமேதகவல்லி 5) வைடூர்யவல்லி 6) வைரவல்லி 7) மரகத வல்லி, 8 ) பவள வல்லி 9) நீலவல்லி ஆகிய ஒன்பதின்மரின் குமாரர்களாவர். முருகன் தன் தாயிடமிருந்து வேலாயுதத்தைப் பெற்றதைப் போலவே இவர்களும் தத்தம் தாயிடமிருந்து வேலாயுதங்களைப் பெற்றனர். அவையே நவரத்தினவேல்களாகும் - மாணிக்க வேல், முத்தவேல், புஷ்பராக வேல், கோமேதக வே, வைடூர்ய வேல், வைர வேல், மரகத வேல், பவள வேல், நீல வேல். இந்த ஒன்பதின்மரும் தமக்குரிய வேலுடன் முருகனோடு விளையாடி மகிழ்ந்தனர். இதற்கு பழைய கால ஓவியங்களே சாட்சி.  மக்கள் முத்துேவல், மரகதேவல், மாணிக்கவேல், மற்றும் பொதுவாக ரத்தினவேல் என்று பெயர்களை வைப்பது வழக்கம்.
 .
வஜ்ர வேல்
வஜ்ரம் என்பது இந்திரனின் ஆயுதம். இது இரண்டு சூலங்கள் தம்முன் இணைந்ததுபோல் இருப்பது. வஜ்ரம் என்பதற்கு அறுக்க முடியாதது, துளைக்க முடியாத, உடைக்க முடியாத  எதனாலும் சேதப்படுத்த முடியாதது என பொருள். எளிதில் வெல்ல முடியாததும், அழிக்க முடியாததுமான உறுதிமிக்க ஆயுதமாக மேல் இருப்பதால் இதற்கு வஜ்ரவேல் எனப்பெயர் வந்தது. மற்ற வேலினைப்போல் வெளித்தோற்றத்தினை வைத்து பெயரிடாமல்,  உறுதி, திண்மை, திறமையின் காரணமாக வேலுக்கு இந்த பெயர் அமைந்தது. 
தங்கவேல்
தங்கத்தால் செய்த வேலினையும்,  அன்பர்களின் வாழ்வில் செல்வ நலன்கள், வளம், மேன்மை போன்றவற்றை எந்நாளும் தங்கி இருக்கும்படி அருள்புரிவதாலும் இரு காரணங்களுக்காக வேலுக்கு தங்கவேல் எனப்பெயர் வந்தது. ஆலயங்களில் தங்கத்தால் ஆன வேலாயுதத்தைச் செய்து முருகனுக்குச் சாத்தியுள்னர். அதில் மேலும் அழகூட்ட உயர்ந்த ஜாதி வண்ணக் கற்களைப் பொருத்தியுள்ளனர். வேல் வழிபாடு மனதில் மகிழ்ச்சியைத் தங்க வைக்கும் வழிபாடாக இருக்கிறது.

வெள்ளி வேல்
வெள்ளி தூய்மையான உலோகம். அதனாலேதான் வெள்ளியினைக் கொண்டு பூஜைப்பொருட்களைச் செய்கின்றனர். பெரும்பாலான ஆலயங்களில் வெள்ளியால் செய்த வேலாயுதமும் சேவற்கொடியும் முருகனுக்குச் சாத்தப்படுகின்றன. அன்பர்கள் வெள்ளி வேலை காணிக்கையாகச் செலுத்தி மகிழ்கின்றனர். 

எஃகு வேல்
என்னதான் தங்கம், வெள்ளி, ரத்தினம், முத்துக்கள் விலை உயர்ந்தவையாக இருந்தாலும்,  அனைத்து தொழிலுக்கும் உதவும் ஆயுதங்களாகச் செய்து பயன்படுத்தத் தகுதியற்றவை. அவை கவர்ச்சியும், மதிப்பும் மிக்க அணிகலன்களைச் செய்ய மட்டுமே பயனாகும். இரும்பு எளிய உலோகமாக இருந்தாலும், வாழ்விற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் உருவாக்குவதற்குத் தேவையான கருவிகளைச் செய்வதற்கு ஏற்ற உலோகமாக இருக்கிறது. எஃகு இரும்பு உறுதியும், எளிதில் வளையாததும், கூர் மழுங்காததும், துருப்பிடிக்காததுமான தன்மைகளைக் கொண்டது.  அதனால் போர்த்தளவாடங்களை எஃகினால் மட்டுமே செய்வர். குறிப்பாக, விரைந்து சென்று இலக்கைத் தாக்கும் வேலாயுதங்களை எஃகால் செய்தனர். அதனால் வேலுக்கே எஃகம் என்பது பெயராயிற்று. ஆதியில் திருப்படைக் கோயில் எனப்படும் வேல் கோயில்களில் அமைத்து வழிபடப்பட்ட வேல்கள் யாவும் எஃகினால் செய்யப்பட்டவையே.

வேலுண்டு வினையில்ல என்ற வார்த்தை வெறுமனே ஏற்பட்டதில்லை. வேலின் மகத்துவத்தினை உணர்ந்து வழிபடுவோம். வாழ்வில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ்வோம்.
நன்றியுடன், 
ராஜி

12 comments:

 1. வெற்றி வேல்! வீர வேல்....

  சிறப்பான தகவல்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

   Delete
 2. //தை தாண்டி முருகன் கையிலிருக்கும் வேலில் ரசிக்க என்ன இருக்கு?!ன்னு யோசிப்பவர்களுக்குதான்//

  நான் அப்படி யோசித்ததே இல்லை. முருகன்.... என் இஷ்ட தெய்வம். சந்தோஷ தருணங்களிலும், சங்கட தருணங்களிலும் "முருகா" தான்...

  ReplyDelete
  Replies
  1. நானும் உங்க கட்சிதான் சகோ. பெருமாள் கோவில்ல நின்னு முருகனை கூப்பிடும் மக்கு நான்

   Delete
 3. "முத்துவேல் ரத்தினவேல் முருகன் கை வேலாகும்" பாடல் நினைவுக்கு வருகிறது. வேலைப் பற்றி இத்தனைத் தகவல்கள் எனக்குப் புதிது.

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் புதிதுதான். அதான் பகிர்ந்துக்கொண்டேன்

   Delete
 4. சிறப்பான விளக்கங்கள்...

  ReplyDelete
 5. வேல் பற்றிய தகவல்கள் எல்லாமே புதியதாய் அறிகிறோம்.

  முருகன் மனதைக் கொள்ளை கொள்ளுகிறார். முருகன் என்றாலே அழகு என்ற அர்த்தம்தானே!

  துளசிதரன், கீதா

  ReplyDelete
 6. வெல் வெல் வெற்றி வெல் வெல் பற்றிய அரிய தகவல்கள் நன்று

  ReplyDelete