Friday, April 26, 2019

ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு 600 ஆண்டுகால முற்பிறவி ரகசியத்தை உணர்த்திய மலை

சித்ரா பௌர்ணமிக்கு பல சிறப்புகள் உண்டு. அம்மா! தாயே! சித்ரா பௌர்ணமி முடிஞ்சு ஒரு வாரமாச்சு!! இன்னிக்கு பதிவு போடப்போறியான்னு கேக்காதீக! இது அதுபத்திய பதிவு இல்ல. தேர்தல் லீவுக்கு வந்திருந்த மகனார், கார் எடுத்து ஒரு மாசமாச்சுது. எங்கிட்டாவது போகலாம்ன்னான். சித்தர்லாம் கிரிவலம் வருவாங்களாம். திருவண்ணாமலைக்கு போகலாம்டா...ன்னு சொன்னால்,  எனக்கு லீவ்  இல்லம்மா, கிரிவலம் வந்துட்டு மறுநாள் என்னால ஆபீசுக்கு போகமுடியாதுன்னு பெரியவ ஜகா வாங்க,  சரி காஞ்சிபுரம் சித்ராகுப்தன் கோவிலுக்கு போகலாம்ன்னா, தேர்தல் நடக்குது.   எதாவது கலவரம் வந்தால் என்ன பண்ணுவீங்க! வேணாம். இது அம்மா.  கார் எடுத்து ஒரு மாசமாச்சு. இன்னிக்காவது எங்காவது போங்க! இது அப்பா... ரொம்ம்ம்ம்ப யோசனைக்குபின் சுமார்  25 கிமீ தூரத்திலிருக்கும் இஞ்சிமேடு சிவன் கோவிலுக்கு போகலாம்ன்னு முடிவாகிட்டுது.  லாங்க் ட்ரைவ் போகலாம்ன்னா விடுறீங்களான்னு முணுமுணுத்திக்கிட்டே காரை எடுத்தான்.
கிராமங்கள் சூழ்ந்த இடம்ங்குறதால வயல்வெளிகள், டிராபிக், வாகனப்புகைலாம் இல்லாம இயற்கையை ரசிச்சுக்கிட்டே வந்தாரு மகனார். சின்ன மேடம் எப்பவும்போல செல்பி...  மாலை 5 மணிக்கு கோவிலுக்கு போய் சேர்ந்தோம்.   இந்த கோவிலுக்கா கூட்டி வந்தே?!ன்னு மகனார் ஒரு முறைப்பு..

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்னு சொல்வாங்க. ஆனா, இந்த குன்றை அப்பாவுக்குன்னு  முருகன் விட்டுக்கொடுத்திட்டாரு போல! வெற்றிலை, பாக்கு, சூடம்லாம் விற்கும் திடீர் கடைகள்  ரெண்டு மூணு இருந்துச்சு.  என்ன வேணும்ன்னாலும் வாங்கிக்கோம்மான்னு சொன்னார் மகனார்.  என்னைய கலாய்க்குறாராம்.  பூஜைக்கூடையை வாங்கிட்டு  மொத்தம் 60 படிகளை ஏற ஆரம்பித்தோம்.  
60 படிகளுக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் வழித்துணையாய் வரவேண்டுமென  அங்கிருந்த வழித்துணை வினாயகரை வேண்டிக்கிட்டு படிகள் ஏறினோம்.

சில படிகள் ஏறினதும் வலது பக்கமா பிரிஞ்ச பாதையில் அகத்தியர் கோவில் இருக்கு.  சிவன் - பார்வதி திருமணத்திற்காக ரிஷிகள், முனிவர்கள், தேவர்கள், பூதகணங்கள் எல்லாம் கயிலாயத்தில் குடி இருந்தனர். சிவன் அகத்தியரிடம் பூமியை சமநிலை செய்யுமாறு  கூறி அனுப்பினார்.  வான்வழியே அகத்தியர் வந்துக்கொண்டிருந்தபோது கயிலாயத்திற்கு இணையாக ஒரு பெரிய மலை இருப்பதை கண்டு அதன்மீது ஏறி நின்றார்.  

 அடுத்த கணம் இமயமலைக்கு நிகராக இருந்த பெரியமலை பூமியில் அழுந்த, அதன் நுனி மட்டும் வெளியில் நின்றது. அன்றுமுதல் இந்த பெரியமலை “தென் கயிலாயம்” என அழைக்கப்படுகிறது. கொஞ்ச நாள் இங்கு தங்கி இருந்து சிவனை வழிபட்ட பின்னரே பொதிகை மலைக்கு அகத்தியர் சென்றாராம். 
அந்த அகத்தியர் கோவிலில் நாங்க போன நேரத்துல ஒரு சாமியார் கோ பூஜை செய்துக்கிட்டிருந்தார். இன்னிக்கு சடைமுடி, விபூதி, காவி உடையோடு இருக்கும் இவர் ஒரு ஐ.ஏ.எஸ்ன்னு சொன்னா யாரும் நம்பமாட்டோம். ஒரு ஐ.ஏ.எஸ் சாமியாரா மாற 600 ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்த நிகழ்வே காரணம்.   இவர் பெயர் பெருமாள்.  இவர் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி. இஞ்சிமேட்டில் பிறந்து வளர்ந்தவர். 1982ல் ஐ.ஏ.எஸ் கர்நாடகா பேட்ஜ்ல அதிகாரியானார்.   பல்வேறு இடங்களில் பணியாற்றி மக்களின்  நன்மதிப்பை பெற்று, எடியூரப்பாமீது கொண்ட மதிப்பின் காரணமாய் அவரது கட்சி சார்பா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.   ஆரம்பத்திலிருந்தே ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட இவர் இங்க வந்து தன் மனைவியோடு சாமியாராகிட்டார். அவரோட மகளும் ஐ.ஏ.எஸ் அதிகாரிதான்.   ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி எப்படி சாமியாரானார்ன்னு பார்க்கலாம். வாங்க. 

இந்த மலையில் சிலாதரன்ன்ற முனிவர் ஒரு மூலிகை லிங்கத்தை நிறுவி வணங்கி வந்தார். முனிவரது பக்தியை சோதிக்க நினைத்த இறைவன், ஒரு யானையை அனுப்பினார். முனிவர் தியானத்தில் இருந்தபோது, அந்த யானை அருகிலிருந்த குளத்திலிருந்து நீரை எடுத்து முனிவரின்மேல் தெளித்து விளையாடியது. ஆனால், அவரது தியானம் கலையவில்லை. யானை முனிவரின் அருகே சென்றபோது, ஒரு நெருப்பு வளையம் உண்டாகி, அருகில் செல்ல விடாமல் தடுத்தது. தவத்தை மெச்சிய சிவன், முனிவரின் முன்பு தோன்றி வரம் கேட்க சொன்னார். “பெரியமலையில் இருந்து அருள் புரிய வேண்டும்” என முனிவர் வேண்டிக் கொண்டார். இறைவனும் பெரியமலையில் தங்கினார்.
திருமணிச்சேறை உடையார் (உடையார்ன்னா அரசன் என அர்த்தம்)
சிலாத்தியர் என்ற முனிவர் தனது கடும் தவத்தால் உடலுடனேயே சொர்க்கம் செல்லும் வரத்தை சிவனிடம் பெற்றார். வழியில் இவரைப் பார்த்த நாரதர், “உமது மூதாதையர்களுக்கு யாரும் சரிவர திதி கொடுக்காததால் ஆவியாக அலைந்து கொண்டிருக்கின்றனர்” என்றார். சிலாத்தியர் “மிஞ்சி” என்ற தர்ப்பை புல்லை வைத்து, மூதாதையர்களுக்கு திதி கொடுத்தார். இந்த இடமே காலப்போக்கில் மிஞ்சி மருவி “இஞ்சி” மேடானது ன்னு சொல்கிறார்கள். அன்று முதல் மூதாதையர்களுக்கு, அமாவாசை தோறும் திதி கொடுக்கும் முறை வழக்கத்திற்கு வந்தது. 
யார் பெரியவர்ன்ற போட்டியில் அடியை காண விஷ்ணுவும், முடியைக்காண பிரம்மனும் புறப்பட,  ஒருக்கட்டத்தில் முடியை காண முடியாதென உணர்ந்த பிரம்மன் தன் தோல்வியை ஒப்புக்கொள்ள மனமில்லாமல் என்ன செய்யலாமென தவித்திருக்கும்போது , இறைவனின் முடியிலிருந்து வந்துகொண்டிருந்த தாழம்பூவை தான் முடியை கண்டதுக்கு நீ சாட்சி சொல்ல வேண்டுமென சொல்லி  அழைத்து வந்து சிவனிடம் பொய்யுரைக்கின்றனர்.
 உண்மையை உணர்ந்த சிவன், தாழம்பூவை இனி தனது பூஜைக்கு தகுதி கிடையாதென சொல்லி சாபமிட, தனது தவறுக்கு வறுந்திய  தாழம்பூ   சாபவிமோஷனம் வேண்டி நிற்க இஞ்சிமலைக் குன்றின்மேல் தாழையாக உருவெடுத்து தவம் செய். உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்!’ என்று ஈசன் அருளினார். அந்தத் தாழை மரமே  இங்கு ஸ்தல விருட்சமாகத் திகழ்கிறது .
இங்குதான்  முதன்முதலில் எம்பெருமானை சுமக்கும் பாக்கியத்தை நந்தி பகவான் பெற்றார்.  சிலாதர மாமுனிவரின் புதல்வராக பிறந்த  சிற்சபேசன் , இங்கு தவமிருந்து சிவபெருமானின் வாகனமாய் மாறினார். முதன்முதலில் நந்தி பகவான் தோன்றிய இடமென்பதால் இங்கிருக்கும் நந்தி பகவான் உருவம் வளர்ந்த காளை யாய் இல்லாமல் கன்றுக்குட்டியாய் இருக்கும். இக்கோவிலுக்காக எத்தனை நந்தி சிலைகள் செய்தாலும் அது கன்றின் உருவத்திலேயே அமைகிறது. 

அன்னை திருமணி நாயகி...
அக்காலத்தில்  பண்டமாற்று வியாபாரமே இருந்தது. வியாபாரத்துக்காக பொன்னையும் நவரத்தினங்களையும் எடுத்துக்கிட்டு கங்கை நதி பக்கமா  தென்னாட்டைச் சேர்ந்த 49  வணிகர்கள்  புறப்பட்டாங்க. விண்ணுலகில் இருந்து பொன்னையும் பொருளையும்  பார்த்த நட்சத்திரக் கூட்டத் தலைவனான துருவனுக்கு அதன்மீது ஆசை வந்தது அதை அவனும் நட்சத்திர பட்டாளத்தோடு  வந்து வியாபாரிகள்கூட போர் செய்தனர்.  மனுஷங்கன்னு நினைச்சு வியாபாரிகள் போரிட்டு 48 பேர் இறந்தனர். மிச்சமிருந்த ஒரு வியாபாரி, தன்கிட்ட இருந்த பொன் , நவரத்தினங்களை எடுத்துக்கொண்டு தப்பியோடி, இறுதியில் இஞ்சிமேட்டில் வந்தடைந்தான். அந்த வியாபாரி, முற்பிறவியில் தேவதூதன்ன்ற பேரோடு இறைவனுக்கு சேவை செய்துக்கொண்டிருந்தான். அப்போது ஏழ்மை நிலையிலிருந்த அந்த தேவதூதன் அடுத்த பிறவியில் உனக்கு நான் கோவில் எழுப்ப அருளவேண்டுமென வேண்டிக்கொள்ள, அதன்படி நடக்க ஈசனும் அருளினார். முற்பிறவி பயன்படி இங்கு வந்து சேர்ந்த வியாபாரி தன்னிடமிருந்த நவரத்தினங்களையெல்லாம் அந்த லிங்கத்தின் அடியில் வைத்துவிட்டு தப்பித்து ஓடினான். சிறிது நாள் கழிச்சு வந்து லிங்கத்தினை எடுத்து அருகிலிருந்த கிணற்றில் போட்டுவிட்டு, தஞ்சையிலிருந்து லிங்கத்திருமேனி வரவழைத்து லிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிறியதொரு கோவிலை கட்டி வணங்கி வந்தான். 












நாட்கள் போனது. சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதி சிற்றரசனின் ஆட்சிக்கு இப்பகுதி இருந்தது. மடமும், மடாதிபதியும் தோன்றி இந்த கோவிலை நிர்வகித்தனர். சிவலிங்கத்தின் அடியில் நவரத்தினங்கள் இருப்பதை அறிந்த இளைய மடாதிபதி, பதவிக்கும், பொருளுக்கும் ஆசைப்பட்டு பெரிய மடாதிபதியை கொன்றான்.   சாகும் தறுவாயில் பெரிய  மடாதிபதி உன்னையே நினைத்திருந்த என்னை கைவிட்டாயே என சிவனை நொந்தபடியே உயிரை விட்டார்.   சிற்றரசனுக்கும், ஆதிக்க வெறிக்கொண்ட வேற்று அரசருக்கும் போர் மூண்டது. எதிரிகளின் தேவாலயங்களை சிற்றரசன் இடிக்க, பதிலுக்கு எதிரிப்படைகள் மலைக்கோவிலை இடித்து தரைமட்டமாக்கி, சிவனை மண்ணுக்குள் புதைத்து சிற்றரசனை கொன்றனர். மீண்டும் பிறந்து வந்து இந்த சிவன் கோவிலை நானே கட்டுவேன் என சிவனை பார்த்தபடியே   உயிர் விட்டான் சிற்றரசன். 
கோவில் பாதிப்புக்குள்ளானாலும் லிங்கத்திருமேனிக்கு எந்த சேதாரமும் ஏற்படவில்லை. பரிவாரை தேவைகள், கோவில், பூஜைகள் ஏதுமின்றி வெற்று பிரதேசத்தில் இருந்தார். லிங்கத்தின்மீது அமர்ந்து ஆடு மாடுகள் மேய்ப்பது சிறுவர்களின் வழக்கம். ஆடுமாடுகளை கட்டி வைக்கவும் சிவலிங்கம் பயன்பட்டது. 
இம்மலைமீதிருக்கும் ஒரு குகைக்குள் பாம்பாட்டி சித்தர்  தியானத்தில் இருந்ததாகவும், இப்பொழுதும் பாம்பு ரூபத்தில் இருப்பதாய் நம்புகின்றனர்.   இந்த குகையிலிருந்த பாம்பாட்டி சித்தரை கண்ட இப்பகுதியில் வாழ்ந்த ராஜா என்பவருக்கு கல் லிங்கத்திருமேனி புலப்பட, லிங்கத்திருமேனியை சுத்தம் செய்து பாம்பாட்டி சித்தரின் வழிகாட்டுதலின்படி நெய்தீபம் ஏற்றி வந்தார். ராஜா சுவாமிக்கு நெய்தீப முனிவர்ன்னு பேர் உண்டானது.  ராஜா சுவாமிகளோடு அவரது ஏழு வயது மகனும் நெய்தீபம் ஏற்ற செல்வது வழக்கம்.   கோவிலில் தங்கி இருந்த ஒரு நாள் பச்சை உடை உடுத்திய பெண் ஒருத்தி சலங்கை ஒலிக்க கையில் சூலாயுதத்துடன் நடக்க, அவரை சுற்றி ஏழு பெண்கள் கையில் விளக்கினை சுமந்து செல்லும் காட்சியை கண்டாராம். கோவிலின் நிலையை கண்ட அந்த சிறுவன், நான் வளர்ந்து வந்தபின் உனக்கு கோவிலை கட்டுவேன்னு வேண்டிக்கிட்டானாம். 
சிறுவன் வளர்ந்து ஐ.ஏ.எஸ் அதிகாரியாகி, தன்  பணியில் சிறந்து நல்ல பேரை வாங்கினார். அவருக்கு திருமணமாகியது. அவருக்கு சின்ன வயசிலிருந்தே அம்மன் பக்தையான அவருக்கு சாமியாடும் பழக்கம் இருந்திருக்கு. கணவனும் மனைவியும் ஒரு அம்மன் கோவிலுக்கு போகும்போது சாமி வந்து ஆடினாங்க. அதும் பச்சை பட்டு உடுத்தி, பாம்பு மாதிரி நெளிஞ்சு ஆடி இருக்காங்க. அதன்பிறகு இப்படி சாமியாடுவது வழக்கமாகிட்டுது. இஞ்சிமேட்டுக்கு விடுமுறைக்கு வந்து தங்கி இருந்தபோது வாசலில் வந்த சாமியாடி ஒருவர் மூலமாய் சிறுவயதில் கோவில் கட்டுவதாய் சொன்ன சொல்லும், முன் ஜென்மத்தில் ராஜனாய் இருந்து. இறக்கும்போது, இந்த கோவிலை திரும்ப கட்டுவேன்னு சொன்னதும்  நினைவுக்கு வந்தது.


அதன்பிறகு திருமணிச்சேறை உடையார் திருக்கோவில் கட்டும் பணி வெகுவேகமாய் நடந்தது. கோவில் எழும்பனும்ன்னு விதி இருந்தால் அதுக்கு ஏன் 600 ஆண்டுகாலம்ன்னு நினைக்கலா?! பெரிய மடாதிபதியின் சிவனை நொந்ததன் விளைவே இத்தனை காலம். முனிவரின் சாபம் 600 ஆண்டுகாலம் உயிர்ப்போடு இருக்குமாம். முற்பிறவியில் சிற்றரசனாய் பிறந்தவர் இப்பிறப்பில் பெருமாள் என்னும் ஐ.ஏ.எஸ் ஆபீசராய் பிறந்து பெருமாள்சாமியாரானார். ஐ.ஏ.எஸ் பதவியும் கிட்டத்தட்ட சிற்றரசர் பதவி போலதான். மக்களுக்கு தேவையான குடிநீர், சாலை வசதி, பாதுகாப்பு, வரிவசூல் என எல்லாமும் இருவராலும் செய்யமுடியும். ஆனா தனித்து இயங்கமுடியாது.  முருகன்,  சண்டிகேஸ்வரர், துர்க்கை, கால பைரவர் என தனித்தனி சன்னிதிகளில் வீற்றிருக்க கோவில் எழுப்பினார். மலைக்கு கீழே, தங்களுக்கு சொந்தமான இடத்தில் சிறு திருமண மண்டபம் எழுப்பினார். வெளியூர் பக்தர்கள் தங்கி செல்ல, திருமணம், காதுகுத்து மாதிரியான நிகழ்ச்சிகள் நடக்க  இது பயன்படுது. பௌர்ணமிதோறும்இங்கு சிறப்பு வழிபாடும் அன்னதானமும் நடைப்பெறுகிறது, பிரதோசம், பௌர்ணமி, அமாவாசை, சிவராத்திரி, கார்த்திகை தீபம் உள்ளிட்டா சிவனுக்குண்டான எல்லா விசேசங்களும் இங்கு  நடக்கும்.

இங்கு, சங்கு தீர்த்தம் எனப்படும் நவபாஷாண தீர்த்தம் இருக்கு. இது சர்வரோக நிவாரணி என சொல்லப்படுது. இந்த தீர்த்தத்தில் நீராட சப்த கன்னியர் பௌர்ணமி இரவு நேரத்தில் வருவதாய் சொல்லப்படுகிறது.  இந்த தீர்த்தம் பாம்புகடி, தேள்கடி மாதிரியான விஷக்கடிகளுக்கு சிறந்த மருந்து. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பௌர்ணமி இரவுகளில் இக்கோவிலில் தங்கி இத்தீர்த்தத்தை குடித்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.


  நவபாஷாண சிலையை வியாபாரி இந்த சுணையில் போட்டததால்தான் இத்தீர்த்தம் மருந்தாய்  மாறியதாய் சொல்றாங்க. பாகீரதி நதிக்கு ஒப்பானது இது.,  இந்த தீர்த்தத்தினை கொண்டுதான் திருமணிச்சேறை உடையாருக்கு அபிஷேகம் செய்விக்கப்படுகிறது.  குழந்தைகளின் வயிற்று உபாதையை தீர்க்க உரைப்பான் எனப்படும் வசம்பினை உரைத்து ஊற்றுவது வழக்கம். அதை விளக்கு வைத்தபின்னும், வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் கடைகளில் கொடுக்க மாட்டாங்க. அந்த நாட்களில் குழந்தைகளின் உடல்நலத்துக்காக இரவில்கூட இந்த தீர்த்தத்தினை கொண்டு செல்வாங்களாம். 


இங்கிருக்கும் நவக்கிரக சன்னிதியில் நவக்கோள்கள் தங்களது வாகனங்களோடு காட்சி தருவது தனிச்சிறப்பு.. 





முதலில் ஸித்தி விநாயகர். பரோடா சமஸ்தானத்தில் செய்யப்பட்டது. பரவசப்பட வைக்கும் பளிங்கு உருவம்.  
மலைமீதிருந்த சிவலிங்கத்துக்கு முதன்முதலில் யாரால் கோவில் எழுப்பப்பட்டது என எந்த குறிப்புகள் ஏதுமில்லை. ஆனால் ஸ்ரீவிக்ரமாதித்த சோழன் இக்கோவிலுக்கு 7 திருக்களிற்று படிகளை கட்டினான் என்னும் ஒரே ஒரு கல்வெட்டு மட்டுமே கிடைத்துள்ளது. 
Image may contain: 1 person
பேஸ்புக்கில் சுட்ட படம்..
திருக்களிற்று படின்னா, படிகளின் ஓரத்தில் யாழி அல்லது  யானை முகம் கொண்ட யாழியின் உருவம் செதுக்கிய படிகள் என அர்த்தம். இந்த ஏழு படிகளை எந்த சேதமுமின்றி தனித்து தெரியும்படி அப்படியே விட்டுவிட்டு படிகளை உயர்த்தி  கட்டி இருக்கிறார்கள். 


பாம்பாட்டி சித்தர் வசித்த குகையில் தீய எண்ணத்துடன் நுழைபவர்கள் உயிரோடு திரும்பியதில்லை என சொல்லப்படுகிறது.  இக்குகையினுள் பத்து பேர்வரை அமர்ந்து தியானம் செய்யலாம். இக்கோவிலுக்கு வந்தவாசி, திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, சேத்பட்டிலிருந்து நேரடி பேருந்து உண்டு. பெரணமல்லூர் வரை வந்து அங்கிருந்து ஆட்டோக்களிலும் வரலாம்.  பெங்களூர் ஆட்சியரா இருந்ததால்  பெங்களூரிலிருந்து தினமும் ஒரு நேரடி பேருந்தும் முன்பு இருந்தது. இப்ப இருக்கான்னு தெரில. இக்கோவில் நடை காலை 6 மணிமுதல், முற்பகல் 11 வரையும், மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரையும் திறந்திருக்கும். பௌர்ணமி தினங்களில் திருவண்ணாமலை மாதிரியே இங்கும் வலம் வருவது வழக்கம். ஏன்னா, திருவாரூரில் பிறந்தால் முக்தி,  காசியில் இறந்தால் முக்தி, தில்லையில் தரிசித்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி. அந்த வரிசையில் இஞ்சிமேடு திருமணிச்சேறை உடையாரை வணங்கினால் முக்தி.... 

பெரணமல்லூரில் இருந்து வரும் வழியில் சாலை ஓரத்தில் புதுசா ஒரு ஆஞ்சினேயர் கோவில்  வந்திருக்கு. பார்க்க அத்தனை அழகா இருக்கு. 


யாருக்குலாம் முக்தி வேணுமோ அவங்கலாம் வணங்கினாலே முக்தி தரும் இக்கோவிலை வாய்ப்பு கிடைக்கும்போது ஒருமுறை வந்து வணங்கி முக்தி பெறுங்கள்.

நன்றியுடன்,
ராஜி 

4 comments:

  1. பயன்மிக்க பக்திப் பரவசம் மிகுந்த பதிவிது

    ReplyDelete
  2. எத்தனை சிறப்புகள் இந்தக் கோவிலுக்கு? சுவாரஸ்யமான விவரங்கள்.

    ReplyDelete
  3. படங்களும் பகிர்வும் அருமை

    ReplyDelete
  4. நிறைய கதைகள். விவரணங்கள். கோயில் இருக்கும் இடம் அழகாக இருக்கிறது.

    எத்தனை தென் கைலாயங்கள் இருக்கும்!!!!!!!!

    கீதா

    ReplyDelete