Monday, April 08, 2019

இப்படிப்பட்ட ஒரு ஆசிரியர்கள்தான் இப்போதைக்கு தேவை - ஐஞ்சுவை அவியல்

மாமா!  விஷ்ணு கையிலிருக்கும் சுதர்ஷ்ண சக்கரத்துக்கும், பூமிக்கும் ஒற்றுமை இருக்குன்னு டிவில ஒருத்தர் சொல்றார். நிஜமா மாமா?!

நிஜம்தான் புள்ள! விஷ்ணு கையிலிருக்கும் சக்கரத்தை சிவபெருமான் விஷ்ணுவுக்கு கொடுத்ததாய் புராணங்கள் சொல்லுது.

இதென்ன புதுக்கதை மாமா?! விஷ்ணுவுக்கு சிவபெருமான் ஏன் சுதர்ஷ்ண சக்கரம் கொடுக்கனும்?! ஒருவேளை விஷ்ணுவின் தங்கை பார்வதியை கல்யாணம் கட்டி கொடுத்ததாலா?!
ம்ஹூம். இந்த கிண்டல்தானே வேணாங்குறது. தினந்தோறும் சிவனை நோக்கி ஆயிரம் பூக்களை கொண்டு பூஜிப்பது விஷ்ணு பகவானின் வழக்கம். அப்படி பூஜித்து வந்த ஒருநாள், ஆயிரத்துக்கு ஒரு பூ குறையவே, தன்னோட இரண்டில் ஒரு கண்ணை பெயர்த்தெடுத்து சிவன் திருவடியில் சமர்பிக்க, விஷ்ணுவின் பக்தியை மெச்சி தன் கையில் வைத்திருந்த சுதர்ஷ்ண சக்கரத்தை விஷ்ணுவிற்கு கொடுத்தார் என்கிறது புராணங்கள்.  சிவனுக்கு எப்படி சக்கரம் வந்தத்துன்னு பார்த்தா, இந்திரன் ஒருமுறை சிவனை தரிசிக்க, கயிலாயத்துக்கு போய்க்கிட்டிருந்தார். அவரை சோதிக்க எண்ணிய சிவன், மகா ருத்ர சொரூபமெடுத்து, இந்திரன் முன் நின்றார். வந்தது சிவன் என்பதை உணராத இந்திரன் ருத்ரன்மீது தனது வஜ்ராயுதத்தை ஏவினார். சிவன்மீது வஜ்ராயுதம் மோதியதில் சிவன் உடல் சிலிர்த்து கோபாக்னி உண்டாகியதன்மூலம் ருத்ரனுக்கு வேர்த்து கொட்டியது. அதன்பின்னரே வந்தது சிவன் என உணர்ந்த இந்திரன் அவரிடம் மன்னிப்பு கேட்டார்.  ருத்ரனின் வியர்வை துளிகள் கடலில் சிந்தியது.   


கடலில் விழுந்த ருத்ரனின் வியர்வைத் துளிகள் ஒன்று சேர்ந்து அரக்கனாக உருவானது. பிரம்மதேவனால் ஆசீர்வதிக்கப்பட்டு, சமுத்திரராஜனால் வளர்க்கப்பட்ட அந்த அசுரன், ஜலந்தரன் என அழைக்கப்பட்டான். ருத்ரனின் வியர்வையால் தோன்றியதாலும், பிரம்மாவால் ஆசீர்வாதிக்கப்பட்டவன் என்பதாலும் ஜலந்தரனுக்கு  தலைக்கணம்  ஏறியது. எல்லார்மீதும் போர் தொடுத்து எல்லாரையும் வெற்றிக்கொண்டான். தன்னை மிஞ்ச ஆள் இல்லை என ஆணவத்தில் அகில உலகத்தையும் ஆட்டி படைத்தான். முடிவில் சிவனையும் வெற்றிக்கொள்ள கிளம்பி, சிவனை போருக்கு இழுக்க கயிலாயம் நோக்கி போனான். அப்படி போகும்போது வழியில் ஒரு வயசான ஆள் ஒருத்தர், ஜலந்தரனை பார்த்து, யார் நீ?! எங்க போறேன்னு விசாரிச்சார். நான் ஜலந்தரன்!! கயிலாயத்தை வெல்ல வந்தேன் என்றான் ஆணவத்துடன். கயிலாயத்தை வெல்லும் வலிமை உனக்கு இருக்கா என நான் சோதித்து பார்க்கவேண்டுமென சொல்லி தரையில் ஒரு சக்கரத்தை வரைந்தார். இதை முழுசாய் எந்த விள்ளலும் இல்லாம பெயர்த்தெடுத்தால் உனக்கு வலிமை இருக்குன்னு நான் ஏத்துக்குறேன்னு கிழவர் சொன்னார்.

கேவலம் மண்ணை பிளந்து எடுப்பதுலாம் ஒரு பரிட்சையா என எண்ணி, சக்கர வடிவத்தை நகத்தால் கீறி, சக்கர வடிவத்தின் நகத்தால் கீறி அடியில் விரல்களை நுழைத்து தூக்க முயற்சித்தான். அப்படி எடுத்ததும்தான் தாமதம் சக்கரம் தரையிலிருந்து விடுபட்ட உடனேயே அதி வேகமாக சக்கரம் சுழல துவங்கியது. அது சுழன்று ஜலந்தரனை வீழ்த்தி, சிவன் கையில் தஞ்சமடைந்தது சுதர்ஷ்ண சக்கரம்.


இந்த சுதர்ஷ்ண சக்கரத்தினை வேண்டிதான் விஷ்ணு சிவனை நோக்கி தவமிருந்தார். அப்படி தவமிருக்கவும் ஒரு காரணம் இருந்தது. அது என்னன்னா, . திருமாலின் சேவையே பெரிதெனக் கருதி வாழ்ந்தவள் துளசிதேவி. அவள் ஒரு சாபத்தால், பூவுலகில் 'பிருந்ததை’ என்பவளாக, மிக்க அழகுடன், காலநேமி என்கிற அரக்கனுக்கு மகளாகப் பிறந்தாள். அவளே ஜலந்தரனின் மனைவியானாள். அவளது பதிவிரதா சக்தியால்தான், அழியா வரம் பெற்றிருந்தான் ஜலந்தரன். முடிவில், சிவபெருமானால் அவன் அழிந்ததும், பிருந்ததை தீக்குளித்தாள். எப்போதும் திருமாலுடன் வாசம் செய்யும் வரம் பெற்று, மீண்டும் துளசியாகி, சேவையாற்றி வந்தாள். ஜலந்தரனுடன் வாழ்ந்தவள் துளசி. எனவே, அவன் உறைந்திருக்கும் மகா சுதர்சனச் சக்கரத்தையும் தன் திருக்கரத்தில் வைத்து, பிருந்தா- ஜலந்தர சங்கமத்தைத் தன்னுள் நிகழ்த்த விரும்பினார் திருமால். மேலும் பூவுலகில், தர்மத்தினை நிலைநாட்ட  சுதர்சனத்தின் பங்கு இருப்பதை அறிந்து சிவனை நோக்கி தவமிருந்து விஷ்ணு பெற்றார் என்கிறது புராணங்கள். 

புராணக்கதைகள் போதும் மாமா! நான் கேட்டதுக்கு பதில் இல்லியே! பூமிக்கும் சக்கரத்துக்கும் என்ன சம்பந்தம்?!

இரு அடுத்து அதுக்குதான் வரேன். 

மணலிலிருந்து சக்கரத்தினை பெயர்த்தெடுத்ததும் சக்கரம் சுழன்றதா சொன்னேன்ல! இயக்கத்தில் இருக்கும் ஒரு பொருள், அதிலிருந்து பிரியும் பொருளும் மூலப்பொருளின் இயக்கத்திலேயே இயங்கும் என்பது இயற்பியல் விதி. இதுக்கு எடுத்துக்காட்டா பலது சொல்லலாம், பஸ்சிலிருந்து இறங்கும்போது கூடவே கொஞ்ச தூரம் ஓடுறதும், மிக்சில அரைக்கும்போது மூடி கழண்டுட்டா அதிலிருக்கும் பொருட்கள் சுழன்றுக்கிட்டே சிந்துறதும் தினத்துக்கும் பார்க்கிறோம். அதுமாதிரிதான், அதுவரை இருந்த மண்சக்கரம் சலந்தரனால் பூமியிலிருந்து விடுபட்டதும்  பூமியின் வேகத்தில் சுழன்றது. அப்படி அந்த மண்சக்கரம் வினாடிக்கு 30கிமீ வேகத்துல சுத்துனதா சொல்றாங்க. பூமி சுத்துற வேகமும் அதுதான்ன்னு ஆராய்ச்சிகள் சொல்லுது. இதுதான் சுதர்ஷ்ண சக்கரத்திற்கும், பூமிக்குமான ஒற்றுமை.

ஓ! புரிஞ்சுக்கிட்டேன் மாமா. நல்லது, கெட்டது என உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தினர்ன்னு எல்லாரும் சேர்ந்து சாப்பிடுறதை பந்தின்னு சொல்றோமே ஏன்னு தெரியுமா?!

தெரியாதே! நீதான் சொல்லேன்...

சமஸ்கிருதத்தில் பங்க்தின்ற வார்த்தைதான் தமிழ்ல பந்தின்னு ஆனது. பங்க்தின்னா சேர்ந்து சாப்பிடுறதுன்னு பொருள். மனத்தூய்மையான ஒருத்தர் பந்தியில் சாப்பிட்டா, அந்த சாப்பாடுலாம் சுத்தமாகவும், புனிதமாகவும் மாறிடும் என்பது ஐதீகம். அதனால் அப்படிப்பட்ட மனத்தூய்மையானவரை பங்க்தி பாவனர் என சொல்வாங்க. நம்மோடு சேர்ந்து சாப்பிடுறவங்க குணம் பக்கத்திலிருக்கவுங்களுக்கும் பரவி எல்லோருமே நல்ல மனசுக்காரங்களாகிடனும்ன்னு உருவானதுதான் சமபந்தியின் நோக்கம்.
சாப்பாட்டை சாப்பிடுறதில்கூட நல்ல விசயத்தை புகுத்த பார்த்த நம்ம முன்னோர்கள் வாழ்ந்த நாட்டில்தான் சக உயிர்கள் வாழ இயலாததா ஆக்கி வச்சிருக்கோம்.
இந்த பூமி நமக்கானது மட்டும்தான்னு நினைச்சு எல்லாத்தையும் பாழ்படுத்தி வச்சிருக்கோம். இந்த படத்தை பார்த்ததும் மனசு நொந்துட்டுது மாமா. 

நல்லது, கெட்டதை எடுத்து சொல்ல சரியான ஆட்கள் நம்மிடையே இல்ல. இதோ இந்த ஆசிரியை மாதிரி சொல்லிக்கொடுத்து வளர்த்திருந்தா நாம ஏன் இப்படி பூமியை பாழ்ப்படுத்தி வச்சிருக்கோம்?!

மாற்றத்துக்கான நேரம் வந்திட்டுது மாமா!

மாற்றம் எல்லோரிடத்திலும் வரனும். அப்பதான் எல்லாருமே நலமோடு வாழ்வோம். 

நன்றியுடன்,
ராஜி

12 comments:

 1. //அப்படி அந்த மண்சக்கரம் வினாடிக்கு 30கிமீ வேகத்துல சுத்துனதா சொல்றாங்க//
  அப்பவே மீட்டரு குலோமீட்டரெல்லாம் இருந்துருக்கு.

  ReplyDelete
  Replies
  1. அப்ப குலோமீட்டரெல்லாம் இல்ல. கிமீ கணக்கீடுலாம் இப்பதான் வந்துச்சு. அப்ப இருந்தது வேற கணக்கீடு.

   Delete
  2. அப்ப எப்படி 30 கிலோமீட்டர் வேகத்துல சுத்திச்சாம்?

   Delete
 2. இப்படி கதையுட்டும் பாழ்ப்படுத்தி வைச்சிருக்கோம்...?!

  ReplyDelete
  Replies
  1. பெரியவங்க சொல்றதை கேட்டு கொள்ள வேண்டியதை கொண்டு, தள்ள வேண்டியதை தள்ளி வாழ்க்கையை வாழ்ந்துட்டு போகனும்ண்ணே

   Delete
 3. நல்லதொரு பகிர்வு. எத்தனை எத்தனை கதைகள்.....

  ReplyDelete
  Replies
  1. இடத்துக்கு இடம் கதைகள் மாறுபடும்.

   Delete
 4. ரசித்தேன் சகோதரியாரே

  ReplyDelete
 5. ஐஞ்சுவை அவியல் சூப்பர் ரசித்தோம்.

  துளசிதரன், கீதா

  ReplyDelete
  Replies
  1. இருவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete