Friday, April 12, 2019

அன்பிற்காய் தலை தாழ்ந்து நின்றை இறைவன் - புண்ணியம் தேடி

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்கூட அன்பே கடவுள்ன்னு சொல்வாங்க. அன்பால் ஆகாதது எதுவுமே இல்லை. அன்பு ஆக்கவும் செய்யும் அழிக்கவும் செய்யும். அன்பு காத்திருக்க செய்யும், ஆசிட் அடிக்க செய்யும், சாதனை படைக்கவும் செய்யும், பிச்சியாக்கி அலையவும்   அப்பேற்பட்ட அன்பு வேறேன்னலாம் செய்யும்?! அந்த இறைவனையே தலை தாழ்த்தி நிற்க செய்யும். என்னது?! இறைவன் தலை தாழ்த்தி நிற்பானா?! இதென்ன ராஜி, புதுசா கதை உடுதுன்னு ஜெர்க் ஆகுறவங்க இன்னிக்கு பதிவை படிங்க. அப்புறம் நான் சொன்னது நிஜம்ன்னு புரியும். 

 சோழ மன்னன் ஒருவன் தினந்தோறும் சிவனை தரிசித்தபின்னரே தனது அன்றாட அலுவல்களை ஆரம்பிப்பது வழக்கம். அவ்வாறு, ஒருநாள் இறைவனை வணங்க வருகையில், கோவில் கருவறையில் இருந்த சிவலிங்கம் தலை சாய்ந்திருப்பதை கவனித்தார். நேற்றுவரை நன்றய் இருந்த லிங்கம் தலை தாழ்ந்து இருப்பது எப்படி என யோசித்தவாறே,  அந்த லிங்கத்தை நிமிர்த்தி நேராய் வைக்க பூசாரிகளுக்கு கட்டளை இட்டார். பூசாரிகள் எத்தனை முயன்றும் முடியாமல் போகவே, பல குதிரை, யானை, என பலவாறாய் முயன்றும்  லிங்கம் தலை நிமிர்ந்த பாடில்லை.  

லிங்கத்திருமேனி தலை நிமிராத தகவல்,  அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான குங்கிலியக்கலய நாயனாருக்கு தகவல் போனது. அங்கு வந்த குங்கிலியக்கலய நாயனார், அரசனின் வேண்டுகோளை ஏற்று,  சிவலிங்கத்தின்மீது கயிற்றின் ஒரு நுனியும், தனது கழுத்தில் மறு நுனியும் இறுக்கி கட்டிக்கொண்டு, ஐயனே! ஒன்று நீங்கள் நிமிர வேண்டும் அல்லது எனது உயிரை தங்கள் திருவடி சேர்ப்பிக்க வேண்டும் எனக்கூறி இழுக்க சிவலிங்கம் நேராகியது.  

சிவலிங்கம் நேராய் வந்ததில் மன்னன் மனது திருப்தியடைந்தாலும், ஏன் இப்படி லிங்கம் தலை தாழ்ந்து நின்றது?! பல  யானை, குதிரைகள் கட்டி  இழுத்தும்  லிங்கம் தலை நிமிர்ந்த பாடில்லை. ஆனால் தங்களது முயற்சிக்கு எப்படி தலை நிமிர்ந்தது என  குங்கிலயக்கலய நாயனாரிடம் கேட்டார்.


அரசே! இந்த ஊரில்  ஒரு பெண் இருக்கிறாள். அந்த  பெண்ணுக்கு தாடகைன்னு(ராமாயண தாடகை இல்லை) பேரு. திருமணமாகி ரொம்ப நாளாகியும் அவளுக்கு குழந்தை இல்லை. குழந்தை இல்லன்னா சும்மா நம்மாளுங்க விடுவாங்களா?!  எல்லாரும் அந்த பொண்ணை மலடின்னு ஒதுக்க ஆரம்பிச்சாங்க.  திக்கற்றவருக்கு தெய்வமே துணைன்னு தன்னோட மன உளைச்சலை போக்கிக்க தினத்துக்கும்  வீட்டுக்கு பக்கத்திலிருக்கும்  சிவன் கோவிலுக்கு போனாள்.  மனுஷங்கக்கிட்ட தன் மனக்கஷ்டத்தை சொல்லி பிரயோசனமில்லைன்னு அந்த சிவன் கோவிலில் இருக்கும் சிவனிடம் தன்னோட கஷ்டங்களை சொல்லி புலம்பிக்கிட்டே  விளக்கேற்றுவது, மாலை தொடுப்பது, கோவிலை கூட்டி பெருக்குவதுன்னு வேலை செய்வது அவளது வழக்கம் . 

ஒருநாள் முல்லை, செவ்வந்தி, மரிக்கொழுந்து, பன்னீர் பூ என எல்லா பூக்களையும் கொண்டு மாலை தொடுத்தாள். என்னிக்குமில்லாம அந்த மாலை செம அழகா இருந்துச்சு. அந்த மாலையை சிவனுக்கு போட முயலும்போது அவளோட சேலை நழுவ ஆரம்பிக்குது. இப்ப மாதிரி சேப்டி பின்லாம் இல்லாத காலம் அது.  அழகான மாலையை சாமிக்கும் போடனும். அதேநேரம் நழுவுற சேலையை பிடிக்க முடியாம அவ திணறுறா. கோவில்ல யாரும் இல்லைன்னாலும் சிவன் ஒரு ஆம்பிள்ளைதானே?!ன்னு அவளுக்கு வெக்கமும் தயக்கமும் வந்து என்ன செய்யுறதுன்னு தடுமாறுறா. ஆடையைச் சரி செய்ய பூமாலையைக் கீழே வைக்க வேண்டும் இல்லாவிடில் மேலாடை சரிந்து பெண்மை அவமானப்படனும்ன்னு அவளுக்கு கலக்கம். அப்பதான்  அவள் மேலும் கையை உயர்த்தாமலிருக்க,   லிங்க ரூபத்தில் இருக்கும் சிவன், தலை தாழ்த்தி தாடகை கையிலிருக்கும் மாலையை ஏற்றுக்கொள்கிறார். தன் அன்புக்கு தலை தாழ்ந்து நின்ற இறைவனை எண்ணி தாடகை மனம் மகிழ்ந்ததோடு அவள் விரும்பிய குழந்தைச்செல்வமும் கிடைத்து  நல்வாழ்வு வாழ்ந்தாள். அன்றிலிருந்துதான் இந்த ஊருக்கு தாடகைஈச்வரம்ன்னு பேர் உண்டானது என குங்கிலயக்கலயனார் தல வரலாற்றை அரசனுக்கு எடுத்து சொன்னார்.  

தாடகையின் மானம் காக்கவும், அவளின் அன்புக்காகவும்,  தலை தாழ்ந்த இறைவன், குங்கிலியக்கலயனார் அன்புக்காக தலை நிமிர்ந்தான். ஆனாலும் தாடகைக்காக தாழ்ந்து ,குங்கிலயக்கலயனாருக்காக நிமிர்ந்ததால் இன்றும் அந்த சிவலிங்க வடிவின் பாணம் ஒரு முறுக்கிய துணியின் வடிவிலே இருப்பதை பார்க்கலாம். தாடகைஈச்வரம் என்றழைக்கப்பட்டு வந்த இவ்வூர்  இப்பொழுது திருப்பனந்தாள் என அழைக்கப்படுகிறது. இப்படி அழைக்கவும் ஒரு காரணம் இருக்கிறது.

இந்த கோவிலின் தல விருட்சமாய் இரு ஆண் பனை மரங்கள் இருக்கின்றது.  முன்பு இவற்றில் 5 கிளைகள் இருந்ததாம். பனை+தாள்(ஏடு)  அடியில் சிவன் கோவில் கொண்டதால் பனந்தாள் எனப்பட்டு, திரு என்ற அடைமொழியோடு இன்று திருப்பனந்தாள் என்றழைக்கப்படுகிறது. 
 தல விருட்சமான பனை மரத்தில் மஞ்சள் கோர்த்த மஞ்சள் சரட்டை கட்டினால் திருமணம் கைக்கூடுமென்பது நம்பிக்கை. பனை ஓலையை குறிக்கும் வடமொழிச்சொல்லாள், இத்தலத்து இறைவனும், இறைவியும் தாலவனேஸ்வரர், தாலவனேஸ்வரி என அழைக்கப்படுகிறார்கள்.  பிரம்மன், திருமால், இந்திரன், ஐராவதம், அகத்தியர், சூரியன், சந்திரன், ஆதிஷேசன், நாககன்னிகை போன்றோர் வழிபட்டு, சாபம் தீர்ந்த  தலம்.
குங்கிலியக்கலயரின் மகன் இறந்துவிட, அந்த உடலை தகனம் செய்ய இடுகாட்டுக்கு எடுத்துப்போகும் வழியில் பிள்ளையார் வழிமறித்து செஞ்சடையப்பர் கோவிலில் இருக்கும் நாககன்னிகைத் தீர்த்தத்தில் குங்கிலியக்கலயனாரையும், அவரது மகனின் உடலையும் தீர்த்தமாடி வீடு திரும்பச் சொல்கிறார். அப்படி நீராடி மகனின் உடலோடு வீடு சென்றபின் இறந்த மகன் உயிர் பெற்று எழுகிறான். இடுகாட்டுக்கு செல்வதை தடுத்து ஆண்டதால் இத்தலத்து வினாயகருக்கு  ஆண்ட விநாயகர்ன்னு பேர்.  . 


இக்கோவில் ராகு-கேது பரிகார தலமாகவும் விளங்குகிறது. கீழப்பெரும்பள்ளம், காளகஸ்தி, திருநாகேஸ்வரம்லாம் ஆண் நாகம் வழிபாடு செய்த தலமாகும். திருப்பனந்தாள் பெண் நாகம் (நாககன்னி) வழிபாடு செய்து சாப விமோசனம் பெற்ற தலமாகும்.  சக்தி வாய்ந்த துர்க்கை இங்கு அருள்பாலிக்கிறாள். 
அருணகிரிநாதரின் திருப்புகழில் இத்தலத்து முருகப்பெருமான்மீது பாடப்பட்ட பாடலும் இருக்கு.  இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு முகத்தோடும், நான்கு கைகளுடனும், மயிலினருகில் நின்ற திருக்கோலத்தில் இருபுறமும் வள்ளி தேவசேனாதேவி சமேதராக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். ஒரு உற்சவர் மூலவரைப் போன்றும் மற்றொரு உற்சவரான முத்துக்குமாரசாமி மயிலின்றியும் காட்சி தருகின்றனர். 

இந்த கோவில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது செஞ்சடையப்பர் கோவில்.  ஏழு நிலை ராஜ கோபுரம். ராஜ கோபுரத்தை கடந்ததும் உள்ளே நுழைந்ததும் 16 கால் மண்டபம் இருக்கிறது. கிழக்கில் 5 நிலை கோபுரம், மூன்று பிரகாரகங்களுடன் கோயில் உள்ளது. 

இம்மண்டபத்தின் கீழ்பக்கமாக நாககன்னிகை தீர்த்தம் இருக்குது. நாகலோகத்தில் வாசுகி என்ற பாம்பு தன் மகள் சுமதிக்கு திருமணம் செய்விக்க எண்ணியது. அதற்கு, சுமதி, தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என கூறி,   கன்னி மாடத்தமர்ந்திலிருந்தாள். இறைவன் அவளது கனவில் தோன்றி *‘நீ தாலவனமடைந்து பூசிப்பாய்’* எனக்கூற,  சுமதியும் அவ்வாறே இக்கோவிலின் பிலத்தின்(கிணற்றின்) வழியாக வந்து அம்மையார் சந்நிதானத்திலுள்ள கூபத்தில் தோன்றி இறைவனை வழிபட்டு வந்தாள்.
தலயாத்திரை செய்து வந்த அரித்துவசன் என்னும் அரசனும் இத்தலத்தையடைந்தான். சுமதி அவனைக் கண்டு விருப்பமுற்று, நாகலோகத்திற்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டாள். சிலநாள் அங்கிருந்து மீண்டும் பிலத்தின் வழியாக வந்து அம்மையாருக்கு மேல்புறம் ஓர் குளம் உண்டாக்கி வழிபட்டு வந்தாள்.  அரித்துவசனும் ஆலயத்திற்குத் தென்பால் ஓர் தடாகமும் லிங்கமும் அமைத்தான். இவ்வாறு இருவரும் பூசித்துப் பல திருப்பணிகளும் செய்து முத்தி அடைந்தனர் என்பது வரலாறு. 

கோவிலின் வெளிப்பிரகாரத்தின் கீழ்ப்பக்கத்தில் ஸ்தல விருட்சமான பனைமரமும், அதனருகில் தாடகை வழிபட்ட சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்குது. மூலவர் செஞ்சடையப்ப்ர் சந்நிதி மேற்கு நோக்கி இருக்கு. இதற்கு வடக்கில் மேற்கு நோக்கிய பிரஹந்நாயகியின் சந்நிதி இருக்குது. 
நல்ல விசாலமான பிரகாரங்களை கொண்டது இக்கோவில்.  பல இடங்களில் கோவில் சிதிலமடைய ஆரம்பித்திருந்தாலும், கோவில் வெகு சுத்தமாய் இருக்கு. செஞ்சடையப்பர், நெடிதுயர்ந்த சிவனின் முடியை கண்டதாய் பொய்யுரைத்த பிரம்மனுடைய சாபத்தை நிவர்த்தி செய்து அவனுக்குரிய பதவியையும், பெருமையையும் திரும்பத் தந்தார். அதனால் பதவி உயர்வு வேண்டுபவர், வேலை கிடைக்க, வேலையில் தொல்லைகள் இருந்தாலும் இத்தலத்து இறைவனை வேண்டிக்கொண்டால் பிரச்சனைகள் தீரும். 
பசியோடு வருந்திய  காளமேகப் புலவருக்குச் சிவாச்சாரியார் வடிவத்தில் வந்து அன்னத்தை அளித்தவர் இத்தலத்து ஈசன்.   அழகும், பெருமையும் இழந்து, தேய்ந்து, சிறுத்துப் போய், குருவின் மனைவியை விரும்பிய சந்திரனுடைய சாபத்தைத் தீர்த்துப் பொலிவும், பெருமையும் தந்தவர் இத்தல இறைவன். அதனால் சந்திர தோஷம் உள்ளவர்கள் இத்தலத்து ஈசனை வழிபட்டால் தோஷம் நீங்கும். 
அனைத்தும் அறிந்த அன்னை பார்வதிதேவி பஞ்சாட்சரத்தின் பெருமையை அறிய விரும்பினாள். அவளுக்குப் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசித்த ஞானகுருவாக இருந்தவர் இந்த  செஞ்சடையப்பர். அதனால் குருதோஷ நிவர்த்திக்கும் இத்தலத்து சிவனை வணங்கலாம். 
தல விருட்சத்தின் பக்கத்தில் உள்ள சிவலிங்கத்தையடுத்துள்ள கிணறு, நாககன்னிகை பிலம் எனப்படும். இதன் வழியாகத்தான் நாககன்னியர் வந்து இறைவனை வழிபட்டதாக சொல்லப்படுது. இக்கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் மேற்கு கோபுரத்தின் தென்பால், குங்குலியக்கலய நாயனாரின் கோயில் உள்ளது. இந்நாயனாரின் மனைவியின் பெயர் நீலாயி என்று கல்வெட்டு கூறுகிறது. சித்திரை மாதம் சில நாட்கள் மூலவர் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழுகின்றன.
தேவலோகத்தில் கேட்டதெல்லாம் கொடுக்கக்கூடியது காமதேனு, கற்பக விருட்சம்,  சிந்தாமணி. இந்த மூன்றும் இருப்பதே தேவலோகத்துக்குப் பெருமை.  கேட்டதெல்லாம் கொடுக்கக்கூடிய, நினைத்ததையெல்லாம் நிறைவேற்றக்கூடிய மரமாங்களான  கற்பக மரம், பாரிஜாத மரம், ஹரிசந்தன மரம், மந்தார மரம் என்றை 5 மரங்களை பஞ்ச தருக்கள்ன்னு சொல்வாங்க. இதில் கற்பக மரத்தை தவிர மற்ற எல்லாமே பூலோகத்தில் உண்டு. மருந்தாய், உணவாய், எழுத, நிலத்தடியை பலப்படுத்த, இப்படி பலவகையில் மனிதனுக்கு உதவி பூலோகத்து கற்பக மரமாய் பனைமரம் விளங்குது. அந்த பனைமரமே இத்தலத்து விருட்சமாய் இருப்பது இக்கோவிலின் சிறப்புகளில் ஒன்று. 
பிருந்தையைப் புணர்ந்த திருமாலுக்கு அருள் செய்து,  தக்கனுடன் கூடிச் சிவத்துரோகத்தில் ஈடுபட்ட சூரியனுக்கு அத்துரோகத்தால் உண்டான பாவத்தைத் தீர்த்தது. தேவேந்திரனின் வாகனமான ஐராவதத்திற்கு பூலோகத்தில் உள்ள ஒரு யானைமீது காதல். அந்த யானையை சந்திக்க அடிக்கடி பூலோகத்திற்கு வரும். அப்படி வந்திருக்கும்போது, அசுரர்கள் படையெடுத்து வந்தபோது தேவேந்திரனுக்கு ஐராவதத்தின் தேவை ஏற்பட்டது.  ஆனால் ஐராவதம் தனது காதலியை சந்திக்க போய் இருந்ததால்  இந்திரன் போருக்கு செல்ல முடியவில்லை,. தனது தேவைக்கு பயன்படாத ஐராவதம், தனது தெய்வீக சக்தியை இழந்து பூலோகத்திலேயே இருக்கக்கடவது என இந்திரன் சாபமிட்டான். அவனின் சாபம் பலித்து அழகிழந்து,  காடு மலையெல்லாம் அலைந்து திரிந்த ஐராவதம் நாரதர் யோசனைப்படி இத்தலத்து இறைவனை வழிபட்டு தனது சாபம் தீர்ந்து பழையபடி தேவலோகம் சென்றது. 
இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்டது இக்கோவில், ராகு-கேது பரிகார தலமாய் விளங்குகிறது. கூட்ட நெரிசல் இன்றி அமைதியாய் இறைவனை வழிபட ஏற்ற கோவில். இக்கோவில் கும்பகோணம்- அணைக்கரை பக்கத்தில் இருக்கு. காரில் போனதால் வழித்தடம் தெரியல.

நன்றியுடன், 
ராஜி.

8 comments:

  1. தகவல்கள் இவ்வளவையும் எப்படி திரட்டுகிறீர்கள்...?

    நன்றி சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. கோவிலுக்கு போகும்போதே தல வரலாற்றை படிப்பேன். அங்க இருக்கும் தகவல் பலகைகளை படிப்பேன், எல்லாத்தையும் நினைவில் வச்சுக்க முடியாதுன்னு படமெடுத்துப்பேன். கோவில்ல இருக்கவுங்களை விசாரிப்பேன். மீண்டும் பதிவெழுதும்போது விக்கிப்பீடியா,, ராஜேஸ்வரி தலத்தில் கிராஸ் செக் பண்ணிப்பேன்.
      இதான் பதிவின் ரகசியம்ண்ணே

      Delete
  2. அருமையான படங்களும் ...தெளிவான செய்திகளும் ...


    நன்றி ராஜிக்கா

    ReplyDelete
    Replies
    1. சமீபத்துலதாம்மா போய் வந்தோம்.

      Delete
  3. தகவல்கள் மற்றும் படங்கள் சிறப்பு.

    பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. படங்கள் நான் எடுத்தது. அதான் நல்லா இருக்குண்ணே

      Delete
  4. தகவல்கள் அனைத்தும் சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. இருவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete