ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட கதைகளை படித்தவர் குறைவு. படித்தவர் சொல்ல கேட்டவர் நிறைய பேர். அப்படி சொல்பவர்கள் மொத்த கதையினையும் சொல்வது கிடையாது. சில இடைச்செருகல்கள், சில மறைக்கப்பட்டவை, மறந்தவைன்னு அக்கதையில் இருக்கும்.. அந்த மாதிரி நமக்கு தெரிந்த கதையில் தெரியாத தகவல்களை பற்றித்தான் நாம தெரிந்த கதை.. தெரியாத உண்மை தொடரில் பார்த்துக்கிட்டு வர்றோம்...
நட்புக்கு இலக்கணம்ன்னு சொல்லப்படும் கிருஷ்ணர் குசேலர் கதை நம்ம எல்லோருக்கும் தெரியும். அது விஷ்ணு பகவானின் கிருஷ்ணர் அவதாரத்தில் சொல்லப்படும் கதை. கிருஷ்ண அவதாரக்கு முந்தி விஷ்ணு பகவான் ராமராய் அவதரித்தார். அந்த ராம அவதாரத்திலும் ராமனாய் அவதரித்த விஷ்ணுவின் அருள்பெற்ற ஒரு குசேலன் இருந்தான். ராமாயணத்தில் அவன் பெயர் அனந்தன். ராமனுக்கு பிடித்தமான அனந்தனை பற்றிதான் தெரிந்த கதை.. தெரியாத தகவல்ன்ற தொடரில் பார்க்கப்போறோம்.
தசரத மகாராஜாவின் புதல்வர்களான ராமன், லட்சுமனன், பரதன், சத்ருக்னன் ஆகிய நால்வரும் வசிஷ்டரின் ஆசிரமத்தில் தங்கி சகல கலைகளையும் கற்றுக்கொண்டிருந்தனர் ஒருநாள் ராமன் தனது சகோதரர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். வசிஷ்டர் ஆசிரமத்தில் ஒரு பரம ஏழை தங்கி இருந்து வசிஷ்டருக்கு சேவைகள் செய்துக்கொண்டிருந்தான். அவன் பெயர் அனந்தன். வசிஷ்டருக்கு மட்டுமல்லாது ராம-லட்சுமணர், பரதன், சத்ருக்னருக்கும் சேவைகள் செய்வது வழக்கம். இப்பணியை அவன் விரும்பியே ஏற்றுக்கொண்டான். ராம- லட்சுமண சகோதரர்களுக்குத் சேவைகள் செய்வதில், அனந்தன் பேரானந்தம் கொண்டான். குறிப்பாக, ஸ்ரீராமன்மீது அவன் வைத்த பற்றும் பாசமும் அளவு கடந்ததாக இருந்தது. பதிலுக்கு அனந்தனிடம் ராமனும் பேரன்பு காட்டினான். இருவரின் நட்பினை கண்ட குருகுலத்தார் அவர்கள் இருவரையும் அனந்தராமன் என அழைப்பது வழக்கமானது.
ராமனுக்கு ஏடுகளை எடுத்து வைத்தல், எழுத்தாணியைக் கூராக்குதல், வில்லைத் துடைத்தல், அஸ்திரங்களை எடுத்து வைத்தல், உணவு பரிமாறுதல் என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து அனந்தன் செய்வான். வகுப்புகள் இல்லாதபோது ராமனும், குருகுலத்தில் வேலைகள் இல்லாதபோது அனந்தனும் ஒன்று சேர்ந்து நேரம் போவது தெரியாமல் கதை பேசிக்கொண்டிருப்பர். இப்படியே நாட்கள் சென்றுக்கொண்டிருந்தபோது, ராமனை ஒருநாள் காணவில்லை என்றாலும், அனந்தன் மனம் ஏங்கித் தவிக்கும்.
மாதத்தில் சில நாட்கள் காட்டினுள் சென்று அந்த மாதத்திற்கு தேவையான தர்ப்பைப்புற்களை பறித்துவருவது அனந்தனின் வழக்கம். அந்த சிலநாட்களுக்கு ராமனை சந்திக்க முடியாமல் இருவரும் தவிப்பர். அதுப்போனறதொரு அனந்தன் வனத்துக்குச் சென்றிருந்த நாட்களில், ராம-லட்சுமண சகோதர்களின் குருகுலம் முடிந்து, குருவிடம் விடைபெற்று சகோதரர்களுடன் அயோத்திக்குச் சென்றுவிட்டான். வனத்தில் இருந்து திரும்பி வந்த அனந்தன் விவரம் அறிந்து தாங்கமுடியாத வருத்தம் கொண்டான். ராமனை காணாத ஏக்கம் ஒருபுறம். இனி பார்க்கவே முடியாதென்ற நிதர்சன உண்மை முகத்தில் அறைய துடிதுடித்து போனான் அனந்தன்.
ராமனை காணாத ஏக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தது. இனி தாமதிக்கக்கூடாது என உடனே புறப்பட்டு, அயோத்திக்கு வந்தான். ராமனை காண ஆவலுடன் ராமனின் அரண்மனைக்குச் சென்றான். ஆனால் அவனுக்கு அங்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அனந்தன் வந்த நேரம், மகரிஷி விஸ்வாமித்திரரின் யாகத்தை காக்க ராம-லட்சுமணன் இருவரும் விஸ்வாமித்திரருடன் காட்டுக்குப் புறப்பட்டுச் சென்று விட்டிருந்தனர். இதை கேள்விப்பட்டதும் அனந்தனுக்கு தொண்டையை அடைத்தது. ராமனை காணமுடியாததைவிட ஒன்றும் அறியாத பாலகனான ஸ்ரீராமன் காட்டுக்குசெல்ல நேர்ந்ததை எண்ணியே அனந்தன் கலங்கினான். ராமனை காட்டுக்கு அனுப்பிய தசரதனையும், ராமனை அழைத்துப்போன விஸ்வாமித்திரரையும் மனத்துக்குள் கடிந்துகொண்டான்.
ராமன் காட்டில் என்ன செய்வான்? அரண்மனையில் வாழ்ந்த அவன் எப்படி காட்டுமேட்டில் நடப்பான்?! ராமன் பூஜை செய்ய மலர்களை யார் தொடுத்து கொடுப்பர்?! பஞ்சு மெத்தையில் உறங்கிய ராமன் எப்படி உறங்குவான்?! என்ன சாப்பிடுவான் என பல்வேறாய் ராமனை பற்றியே அனந்தன் சிந்தித்துக்கொண்டிருந்தான். எப்படியாவது ஸ்ரீராமனைத் தேடிக் கண்டுபிடித்து, ராமனுக்கு சேவை செய்ய வேண்டும். ராமன் இனியும் கஷ்டப்படக்கூதாது என்ற முடிவுக்கு வந்த அனந்தன் வசிஷ்டரிடம்கூட சொல்லாமல் ராமனை தேடி காட்டுக்குள் சென்றான்.
அடர்ந்த காட்டில், தன்னந்தனியாய் ராமா!! ராமா!! என கத்தியவாறே, ராமனைத் தேடி அலைந்தான். வழி தவறி காட்டினுள் இருண்ட பகுதி ஒன்றினுள் அனந்தன் மாட்டிக்கொண்டான். எத்தனை முயன்றும் அவனால் காட்டிலிருந்து வெளிவரமுடியவில்லை. அதனால், அங்கயே உக்காந்து ராஆ! ராமா!ன்னு ஜெபிக்க ஆரம்பிச்சுட்டான். நாளடைவில் அனந்தனை சுற்றி கரையான் புற்று எழும்பியது...
நாட்கள் வாரமாகின.. வாரம், மாதமாகியது..... மாதங்கள், வருடங்களாகியது... ஆனாலும், அனந்தன் தன்னுடைய ஜெபத்தினை விடவில்லை. அன்ன ஆகாரமின்றி அப்படியே அமர்ந்திருந்தான். காலச்சக்கரம் தன்பாட்டுக்கு சுழன்றுக்கொண்டிருந்தது. இதற்கிடையில் ராமன் சீதையை மணமுடித்து, கைகேயி வரத்தினால் ராமன், சீதை, லட்சுமணனுடன் காட்டுக்கு சென்றது.. ராவணன் சீதையை சிறை எடுத்தது, பின்னர் ராமன் அனுமன் உட்பட வானர படையின் உதவியுடன் ராவணனை வீழ்த்தி சீதையை மீட்டது என அனைத்தும் நடந்தேறியது. ராமன் அயோத்திக்கு திரும்பி வந்ததை நாடே கொண்டாடிக்கொண்டிருந்தது. ராமனுக்கு முடிசூட்ட வேண்டி பட்டாபிஷேகத்துக்குண்டான ஏற்பாடுகள் தடபுடலாய் நடந்துக்கொண்டிருந்தது. இது எதுவுமே ராமனின்மேல் தீராத அன்பு கொன்றிருந்த அனந்தனுக்கு தெரியாது. இருண்ட அந்த காட்டினுள் ராமா! ராமா! என உச்சரித்தவாறே ராமன் வருவான் என காத்திருந்தான்.
பட்டாபிஷேகத்தின் பொருட்டு சிற்றரசகர், பெரு வணிகர்கள், மன்னாதி மன்னர்கள், பொதுமக்கள், அதிகாரிகள் என அனைவரும் அயோத்திக்கு வந்துக்கொண்டிருந்தனர். பட்டாபிஷேகத்தில் கலந்துக்கொள்ள மகரிஷிக்களும், முனிவர்களும் கூட்டமாய் புறப்பட்டனர். அவர்கள் அனந்தன் தவம் செய்துக்கொண்டிருந்த காட்டு வழியாய் பயணத்தனர். களைப்பு தெரியாமல் இருக்க, . அதில் ஒருவரது கால் பட்டு அனந்தனை மூடியிருந்த புற்று இடிந்து விழுந்தது. தவம் கலைந்து எழுந்த அனந்தன், ராமா! ராமா! எங்கே இருக்கிறாய்?! என் ராமா! எப்படி இருக்கிறாய்?! என கதறினான். மகரிஷி கூட்டத்திலிருந்த ஒரு ரிஷி அனந்தனை கூப்பிட்டு, யார் நீ என விசாரித்தார். ராமனுக்கும் தனக்குமான உறவினை சொல்லி, ராமனை தேடி வந்ததும், அவனை காணாமல் இந்த காட்டினுள் மாட்டிக்கொண்டதையும் சொல்லி வருத்தப்பட்டான். கூடவே, என் ராமன் நான் இல்லாமல் என்ன செய்கிறானோ?! அவனுக்கு யார் சேவைகள் செய்கின்றனர்?! என புலம்பியவாறே இருந்த அனந்தனை மகரிஷிகள் தேற்றினர். ராமன் - சீதா திருமணம் முதற்கொண்டு, அயோத்திக்கு ராமன் திரும்பியது வரை எல்லா நிகழ்வையும் அனந்தனிடம் சொன்னனர்.
ராமனுக்கு ஏற்பட்ட துன்பங்களைக் கேட்டு கண்ணீர் வடித்தான் அனந்தன். அவனை தேற்றிய மகரிஷிக்கள் ராமனுக்குப் பட்டாபிஷேகம் நடக்கப்போகும் விவரத்தை சொல்ல, துயரம் மறைந்து மகிழ்ச்சி கொண்டான். பட்டாபிஷேகத்தை காணவே தாங்கள் செல்கிறோம். நீ விருப்பப்பட்டால் எங்களுடன் வரலாம் என அனந்தனை மகரிஷிக்கள் அழைத்தனர். பட்டாபிஷேகத்தை காணும் ஆவலில் மகரிஷிகளுடன் அனந்தன் அயோத்தி புறப்பட்டான்.
வீட்டுக்கு வெள்ளையடித்து, வண்ணக்கோலமிட்டு, பூக்களை கொண்டு அலங்கரித்து, மாவிலை தோரணம் கட்டி, புத்தாடை அணிகலன்கள் அணிந்து எல்லோரும் பட்டாபிஷேகத்திற்கு தயாராகிக்கொண்டிருந்தனர். வீதிகளில் மங்கல இசை ஒரு பக்கம், நாட்டியம் இன்னொரு பக்கம், யாகங்கள் இன்னொரு புறம் அயோத்தியே அல்லோகலப்பட்டுக்கொண்டிருந்தது. ராமனும் அதிகாலையிலேயே எழுந்து புனித நதிகளிலிருந்து கொண்டு வந்த நீரினால் நீராடி, ஆடை அணிகலன்கள் அணிந்து, தன் குலதெய்வமான சூரிய தேவனையும், தாயார் மூவரையும் வணங்கிய பின்னர் சகோதர்களும், அனுமன் புடைச்சூழ சீதையுடன் ராமன் கொலு மண்டபம் நோக்கி கம்பீரமாக நடந்து வந்தான். எல்லோரும் உள்ளம் மகிழ்ந்திருந்த சூழலில் ”அடேய் ராமா! இத்தனை காலம் எங்கிருந்தாயடா? உன்னை எத்தனை காலமாய் தேடுகிறேனடா?” எனக் குரல் கொடுத்தபடியே ராமனை நோக்கி ஓடி வந்தான் அனந்தன். அனந்தனின் குரல் கேட்டு சபையினர் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்து விக்கித்து செய்வதறியாமல் நின்றனர். அனந்தனை ராமன் இறுகத் தழுவிக் கொண்டான்.
அழுக்கான உடல், ஜடா முடி, நைந்து போன உடையுடன் பரதேசியான ஒருவன் ராமனை அடேய் என்று அழைத்ததையும், கட்டிப்பிடித்ததையும், பட்டாபிஷேகம் நேரம் நெருங்குகிறதே என்ற பதைபதைப்பில் காவலர்கள் அவனை பிடித்து இழுத்தனர். காவலர்களை தடுத்து நிறுத்திய ராமன் அனந்தனை தழுவி, அவன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து, ”என்னை மன்னித்துவிடு அனந்தா!” ”உன்னிடம் சொல்லாமலே குருகுலத்திலிருந்து வந்துவிட்டேன். என் பிரிவினால் நீ எவ்வளவு துயரம் அடைந்திருப்பாய் என்பதை நான் அறிவேன். என் தவற்றை மன்னித்துவிடு” என்று அனந்தனை சமாதானம் செய்தான். அப்போது ”ராமா! உன்னை இப்படி அதிகாரமாய் அழைக்கும் இவர் யார்?” வசிஷ்டர் எனக்கேட்க, ”யார் இவர் என உங்களுக்கும் தெரியலையா குருதேவா? இவன் என் பள்ளித் தோழன். தங்கள் குருகுலத்தில் சேவை செய்த சீடன் அனந்தன். இத்தனை பெரிய அவையில் எல்லோரும் என்னைப் ‘பிரபு’ என்றும் ‘மகாராஜா’ என்றும்தான் அழைக்கிறார்கள். என்னை ‘அடே ராமா’ என்று அழைக்க என் தந்தை தசரதன் இல்லையே என ஏங்கினேன். அந்தக் குறையைத் தீர்த்து வைத்ததன்மூலம் என் தந்தைக்கு நிகரானவன் ஆகிவிட்டான் இந்த அனந்தன்!” என்று கூறினான் ஸ்ரீராமன். வசிஷ்டரும் அனந்தனை அடையாளம் கண்டு, அவனை ஆசீர்வதித்தார். ராமனிடம் தான்தான் மிகுந்த பக்தி கொண்டிருந்ததாய் இதுநாள்வரை எண்ணியிருந்த அனுமன் தன்னைப்போலவே இன்னொருவரும் ராமன் மேல் பக்தி கொண்டிருப்பதை எண்ணி கர்வம் குறைந்து ஆனந்த கண்ணீர் விட்டான்.
”இத்தனை நாட்கள் எனக்காகத் தவமிருந்து, இடையறாமல் என் நாமத்தை ஜபித்து, என்னைத் தேடிக் கண்டுபிடித்த இவனுக்கு நான் இந்த அவையில் மரியாதை செய்யக் கடமைப்பட்டுள்ளேன்” எனக்கூறிய ராமன் அனுமனை நோக்கி, ‘உன்னைப் போலவே என்னை நேசிக்கும் இவனுக்கு என்ன கௌரவம் தரலாம்?” என ராமன் கேட்டான். ”பிரபு! தங்கள் தந்தைக்குச் சமமானவர் இவர் என நீங்களே கூறினீர்கள். தாங்கள் சிம்மாசனத்தில் அமரும் முன்பு, இவரை அதில் அமர்த்தி மரியாதை செய்வது இவருக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்குமே பெருமை!” எனக்கூறினான் அனுமன். எல்லோரும் அனுமனின் சொல்லை ஆமோதித்தனர். இப்பேற்பட்ட மரியாதைக்குத் தான் தகுதியானவனா என்றெண்ணிக் கூனிக் குறுகினான் அனந்தன். அவன் வேண்டாமென தடுத்தும் கேளாமல் அனந்தனை சிம்மாசனத்தில் அமர்த்தி, மாலை அணிவித்து மரியாதை செய்து, பாதபூஜையும் செய்தான் ஸ்ரீராமன். அதன் பின்பே, ஸ்ரீராமன் பட்டாபிஷேகம் ஆரம்பமானது.
தூய அன்பும், அன்பு கொண்டவர்களின்மீது நம்பிக்கையும் கொண்டிருந்தால் எத்தனை காலமானாலும் அன்புக்குரியவர்களை சந்திப்போம் என்பதற்கு ஒரு உதாரணம். அனந்தனின் அன்பு அவதார புருஷனான ராமனையே பாதம் தொட வைத்தது. ஒருமுறை எடுத்து சொன்னால், திருந்துற ஆட்களா நாம்?! அதனால்தான் அதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்க கிருஷ்ண அவதாரத்தில் குசேலராய் அவதரித்தார் போல!!
தெரிந்த கதை.. தெரியாத தகவல்... தொடரும்....
நன்றியுடன்
ராஜி
அனந்தராமன் - ராமனின் நட்பான அனந்தன் பற்றிய தகவல்கள் சிறப்பு.
ReplyDeleteதொடரட்டும் கதைகள்...
தொடர வேண்டும் என்பதே என் விருப்பமும்...
Deleteகாலமும் அதற்கு துணை நிற்க வேண்டுமே!
அறியாத கதை.
ReplyDeleteநானும் அறிந்ததில்லை. சமீபத்துலதான் இக்கதையை அறிந்துக்கொண்டேன் சகோ
Deleteஅன்புள்ள இறை அன்பருக்கு , செய்த தவறை பொறுத்து அருளுமாறு வேண்டி கேட்டு கொள்கின்றேன். முடிந்தவரை நிறைய இடங்களில் திருத்தி விட்டேன். இன்னும் நாளை திருத்த முயற்சிக்கின்றேன் !இப்படிப்பட்ட அற்புதமான எழுத்தாளர் மனதை புண்படுத்தியதற்கு வருந்துகின்றேன் . இனிமேலும் தவறுகள் வராமல் பார்த்துக்கொள்கிறேன்இப்படித்தான் பதிவு செய்துள்ளேன் "ராஜி அவர்களின் பதிவை அப்படியே பகிர்ந்துள்ளேன் 14 வருடங்களுக்கு மேலாக ராமனுக்காக காத்திருந்தது சீதை மட்டுமல்ல!! அனந்தனும்தான்!! - தெரிந்த கதை தெரியாத உண்மை= ராஜி அவர்களின் பதிவை அப்படியே பகிர்ந்துள்ளேன் . அவர்களுக்கு மிக்க நன்றி !
Deleteஸ்ரீ ராமஜெயம் " நன்றி ஸ்ரீ ராமஜெயம்
This comment has been removed by the author.
Deleteஎன் கருத்தை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றிண்ணே
Deleteநட்பும் சகோதர பாசமும் தொடரட்டும் .வாழ்த்துக்கள் சகோதரி
Deleteஅருமையான ஒரு பதிவு. அசுர உழைப்பு உங்களது! மிக்க நன்றி!
ReplyDeleteவேறொரு தலத்தில் படித்ததை பட்டி டிங்கரிங் செய்து பகிர்ந்துள்ளேன். அம்புட்டுதான்
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ.
அருமை சகோதரி...
ReplyDeleteநன்றிண்ணே
Deleteஅருமை சகோதரி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே
Delete