நினைவு சின்னம் என்பது, சம்பந்தப்பட்ட மனிதர், பின்னாளில் அன்று நடந்த நிகழ்வுகளை நேரடியா நினைவுக்கூர்வதற்கான உண்டான அமைப்பாகும். நம் இந்திய திருநாடு நீண்ட நெடிய வரலாற்றை கொண்டது. உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த கட்டிடங்களும்,கோயில்களும் இந்தியா முழுக்க நிறைந்திருக்கின்றது. இந்த நினைவு சின்னங்கள், எந்த சூழ்நிலையில் உருவாக்கப்பட்டது, அப்பகுதி மக்களின் வாழ்க்கை முறை, மன்னனின் குணநலன்கள், வீரம், கொடைத்தன்மை, இறைநம்பிக்கை ஆகியற்றை எடுத்து சொல்லும் மௌன சாட்சிகளாகும்.
ரொம்ப நாளுக்குமுன் என் மகளின் கல்லூரிக்கு அருகில் இருக்கும் டெல்லி கேட்(ஆற்காடு) பற்றி எதேச்சையாய் என் மகள் சொல்ல, அதை பதிவாக்க குறிப்புகளை தேடும்போது ஆற்காடு, ராணிப்பேட்டை சுற்றி ஏகப்பட்ட வரலாற்று சின்னங்கள் இருக்குன்னும் தெரிஞ்சுக்கிட்டேன். முக்கியமா பாலாற்றின் கரையில் செஞ்சிக்கோட்டையின் தலைவனான தேசிங்குராஜாவின் சமாதியும், அவனோடு உடன்கட்டை ஏறிய அவன் மனைவி ராணிபாயின் சமாதியும் ராணிப்பேட்டையில் இருக்குன்னும் தெரிஞ்சதும் ஆற்காடுக்கு தனியாய் பயணமானேன். ஆற்காடு பாலாற்றங்கரை மேம்பாலத்தின் கீழ்தான் அவ்விரு சமாதிகளும் இருக்கு. உள்ள போக அங்கிருந்தவங்களை அனுமதி கேட்க, உள்ளயே விடலை. அவங்க குடிச்சிருந்ததால் இன்னொரு நாளில் தகுந்த துணையோடு வரலாம்ன்னு வந்திட்டேன். வந்ததுக்கு ஆற்காட்டில் இருக்கும் ராஜா ராணி குளம்ன்னு சொல்லப்படும் ஆலம்பனா கோட்டையையும், பச்சைக்கல் மசூதியை பார்த்துட்டு போகலாம்ன்னு போனேன். ராஜா ராணி குளத்தினை பார்த்து பதிவும் போட்டாச்சு.
அடுத்து பயணமானது பச்சைக்கல் மசூதிக்கு... மசூதியாச்சே! ஒரு பெண்மனியை அதும் இந்து மதத்தை சேர்ந்தவளை உள்ள விடுவாங்களான்னு யோசனையில் தயக்கத்தோடுதான் உள்ளே போனேன். பதிவு எழுதுறதையும், என் வலைப்பூவையும் மொபைலில் காட்டியபிறகு உள்ள போக விட்டாங்க. அதுலாம் காட்டலைன்னாலும் அனுமதி கொடுத்திருப்பாங்கன்றது வேற விசயம்!!! ச்ச்ச்சும்மா ஒரு விளம்பரத்துக்காக...
மசூதின்னு சொன்னாலும் இது ஒரு சமாதி. ஆற்காடு நவாப் முதலாம் சதயத் உல்லாகானின் சமாதி இது. சதயத் உல்லாகான் என்றால் பலருக்கும் தெரியாது. தேசிங்குராஜாவை எதிர்த்து போரிட்டவர்ன்னு சொன்னால் வரலாற்று பிரியர்களுக்கு ஓரளவுக்கு தெரியும். இவர் காலத்தில்தான் ஆங்கிலேயர்கள் மொகலாயர்களின் துணையோடு இந்தியாவில் காலூன்ற ஆரம்பிச்சாங்கன்றது கூடுதல் தகவல்.
கலிபா உமர் இப்னு அல் கத்தாப் அவர்களின் வழிவந்தவர்கள்தான் ஆற்காடு நவாப்கள். இவர்கள் 1692 ஆம் ஆண்டு மொகலாய சக்கரவர்த்தி ஔரங்கசீப்பால் கன்னட தென்னிந்திய பகுதிகளில் வரிவசூல் செய்ய இவர்கள் நியமிக்கப்பட்டனர். இவ்வாறு நியமிக்கப்பட்ட முதல் நவாப் சுல்பிக்கார் அலி . இவர் மராத்திய, விஜயநகரப் பேரரசுகளை முறியடித்தார். மேலும் தனது ஆட்சிப்பகுதியை கிருஷ்ணா ஆறு வரை பரப்பினார். பின்பு வந்த நவாப் தோஸ்த் அலி (1732–1740) என்பவர் தனது அரசை 1736 இல் மதுரை வரையில் விரிவுபடுத்தினார்.
1690 முதல் 1801 வரை கர்நாடக பகுதிகளை ஆண்ட மொகலாய மன்னர்களை கர்நாடக நவாப்புகள் என ஆங்கிலேய அரசால் பின்னாளில் அழைக்கப்பட்டனர். பங்காளி சண்டையால் பிரிந்திருந்தவர்கள் ஒருவரை ஒருவர் வீழ்த்த ஆங்கிலேயர்களுடன் கூட்டு சேர்ந்து மெல்ல மெல்ல நாடு,ஆட்சி அதிகாரத்தை இழந்து ஆங்கிலேயர்களுக்கு அடிபணியும் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர். அவ்வாறு கர்நாடக நவாப்புகளில் கடைசி ஆளுநர்தான் முகம்மது சையது. சதயத் உல்லாகான்ற ன்றபேரில் நியமிக்கப்பட்டார். சதயத் உல்லாகான்ற பேர் திரிந்து சாதத்துல்லாக்கான்,சதத்துல்லாகான் என மக்களால அழைக்கப்பட்டு அதுவே வரலாற்றிலும் இடம்பெற்றது.
கி.பி 1714ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி தனக்கு கப்பம் கட்ட மறுத்த செஞ்சியின் மன்னர் ராஜா ஜெய்சிங்ன்ற தேசிங்கு ராஜாமீது நவாப் சதயத் உல்லாகான் போர் தொடுத்தார். இப்போரில் ராஜா தேசிங்கு வீர மரணமடைந்தார். இத்துயர செய்தியை கேட்ட ராஜா தேசிங்கின் மனைவியான ராணிபாய் உடன் கட்டை ஏறி தன் உயிரையும் நீத்தார். இதை கேள்விப்பட்ட சதயத் உல்லாகான் மனம் வருந்தினார். இருவரின் தியாகத்தை போற்றும் விதமாக தேசிங்குராஜாவிற்கும்,அவரது மனைவியான ராணிபாய் ஆகிய இருவருக்கும் ராணிப்பேட்டை பாலாற்றங்கரையில் பச்சை பளிங்கு கற்களால் சமாதி எழுப்பி, ராணிபாயின் பதிபக்தியை மெச்சி அப்பகுதிக்கு ராணிப்பேட்டை என பெயர் வைத்தார்.
கொஞ்ச நாள் செஞ்சியை தலைநகராக அறிவித்து ஆட்சி செய்தார். தனக்கு முன்பிருந்தவர்களைப்போலவே தெற்குப்பகுதியில் கவனம் செலுத்த வசதியாய் தலைநகரை ஆற்காட்டிற்கு மாற்றினார். அன்றிலிருந்து கர்நாடக நவாப்புகள் ஆற்காடு நவாபுகளாகினர். இடைவிடாது போரில் ஈடுபட்டு ஸ்ரீரங்கப்பட்டணம் வரை இவரது அதிகாரம் சென்றது.அதனால் கப்பம் எனப்படும் பேஷ்காஷ்ன்ற திரைப்பணத்தையும் தன் அதிகாரத்திற்குட்பட்ட ஆட்சியாளார்களிடம் வசூலித்தார்.
சதயத் உல்லாகான் சமாதி?!
இந்தியாவை தன்வசப்படுத்த நினைத்த ஆங்கிலேயர்களின் எண்ணம் தெரியாமல் 1708ல் கிழக்கிந்திய கம்பெனிக்கு 5 கிராமங்களை குத்தகைக்கு கொடுத்தார். குத்தகை பணம் சரிவர வராததால் 1711 ஆம் ஆண்டில் அந்த 5 கிராமங்களை திரும்ப நவாப் கேட்டாா். ஆனால் இதை ஆங்கிலேயா்கள் எதிா்த்தது மட்டுமல்லாது போருக்காவும் தயாரானாா்கள். போர் வேண்டாம், தான் கொடுத்த 5 கிராமங்களுக்கு பதிலாக, எழும்பூர், தண்டையார்பேட்டை, புரசைவாக்கம் என இன்று அழைக்கப்படும் கிராமங்களை கொடுக்கும்படி சதயத் உல்லாகான் கேட்டார்.
முதலில் கிழக்கிந்திய கம்பெனி மறுக்க, கிழக்கிந்திய கம்பெனியின் முக்கிய பொறுப்பிலிருந்த சுன்குராமா, ராயாகம் பாபையா என்ற இரு வணிகர்கள்மூலம் சதயத் உல்லாகானின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு அத்துடன் பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்பட்டது.
ஔரங்கசீப் காலத்திற்குபின் வலிமையான தலைமை இல்லாததால் முகலாய மன்னர்களில் பிளவு ஏற்பட்டதன் விளைவு டில்லியை தங்கள் கட்டுப்பாட்டிலிருந்து இழந்தது. மேலும் சதயத் உல்லாகானுக்கு குழந்தைகள் இல்லாததால் தனது சகோதரர் குலாம் அலி கானின் மகனான தோஸ்த் அலி கானை தன் வாாிசாக நியமித்தார். நவாப்களின்மீது நிசாமின் மேலாதிக்கம் தொடா்ந்தாலும், கர்நாடக பகுதியில் நவாபின் அதிகாரத்தை பரம்பரையாக மாற்றுவதைத் தடுக்க முடியவில்லை. எனவே அவர் தனது நியமனம் தொடர்பாக முறையான அங்கீகாரத்தை வழங்குவதற்கு உரிமையைக் கோரினாா். இவ்வாறு சதாதுல்லா கானின் ஆதிக்கமானது தெற்கில் திருவாங்கூர் வடக்கில் இருந்த நாராயண நதிவரையில் இருந்து அதாவது கிழக்கு தொடா்ச்சி மலைகளிலிருந்து கிழக்கில் கடலுக்கிடையே உள்ள கர்நாடக பகுதியில் தன்னாட்சி மற்றும் சுதந்திர பெற்ற ஆட்சியாளராக மாறினாா். 1717 ஆம் ஆண்டில் திருவொற்றியூர், சத்துங்காடு, காதிகாக்கம், வியாசர்பாடி மற்றும் நுங்கப்பாங்கம் என்று அழைக்கப்படும் இடங்களுக்கு ஆளுநர்களை நியமித்து ஆட்சி செலுத்தி வந்தார்.
சதயத் உல்லாகான் தனது ஆட்சிக்காலத்தில் தினம் ஒரு மசூதிக்கு சென்று வழிபாடு நடத்த ஆற்காட்டை சுற்றி 365 மசூதிகளை கட்டினார். தன்னோட 81வது வயதில் 28 செப்டம்பர் 1732ல் மறைந்தார். அவரது உடல் ஆற்காட்டில் அவர் எழுப்பிய மசூதிகளில் ஒன்று அடக்கம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. செஞ்சியிலும் சதயத் உல்லாகானுக்கு ஒரு சமாதி உண்டு. எந்த சமாதியில் அவரது உடல் இருக்கு என்பது அவருக்கே வெளிச்சம்.
நெட்டில் சுட்டது.
நவாப் சதயத் உல்லாகான் உடல் உள்ள மசூதி பச்சக்கல் மசூதின்னு அழைக்கப்படுது. முழுக்க முழுக்க பச்சை நிற பளிங்கு கற்களைக்கொண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடம் இந்திய இஸ்லாமிய கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. மசூதியின் நுழைவுவாயில் பாரசீக மொழியில் ஏதோ வாசகம் தென்படுது. என்ன வாசகம்ன்னு அங்கிருந்தவங்களை கேட்டதுக்கு தெரிலன்னு சொல்லிட்டாங்க. இப்ப அங்க ஒரு அரபி ஸ்கூலோட ஹாஸ்டல் இருக்கு. நான் போன நேரம் பிள்ளைங்க மாலை நேரத்துக்கான தொழுகைக்கு ரெடியாகிட்டு இருந்துச்சு. ஹாஸ்டல், ஸ்கூலோட படம் எடுக்கக்கூடாதுன்னு முன்கூட்டியே சொல்லிட்டாங்க.
இந்த பச்சைக்கல் மசூதிக்கான கற்கள் ஆற்காடு, வேலூர் பகுதி மலைகளிலிருந்து கற்களை வெட்டி எடுத்துவந்து பாலிஷ் செய்து கட்டப்பட்டதாகும். இதே கற்களைக்கொண்டுதான் தேசிங்குராஜா, அவன் மனைவி ராணிபாயின் சமாதியும் கட்டப்பட்டிருக்கு. எத்தனை பேரின் உழைப்பு இந்த கட்டிடத்தின்பின் இருக்கு. ஆனா, கவனிப்பாரின்றி தகுந்த பராமரிப்பின்றி கட்டிடங்கள் பழுதடைய ஆரம்பிச்சிருக்கு. எத்தனை நாள் தாக்குப்பிடிக்கும்ன்னு தெரில!! இப்படியே போனால் மௌன சாட்சிகளுக்கு கட்டிடமே இல்லாமல் போகும்போல!!
நன்றியுடன்,
ராஜி
வரலாற்று தகவல் அருமை...
ReplyDeleteஅனைத்தும் அழிப்பதற்கு தான் இன்றைய ஆட்சி...
நமக்கும் பழமையின் அருமை தெரியவில்லை.
Deleteவரலாற்றினை எடுத்து சொல்லாதது நம் முன்னோர்களின் பிழையே!
மௌன சாட்சிகள் சிறப்பு. படங்கள் நன்று.
ReplyDeleteஉங்க அளவுக்கு வராதே! ச்ச்சும்மா நானும் படமெடுத்தேன்னு இருக்கு என் படங்கள்
Deleteஅருமையான பதிவு ...வாழ்த்துகள்
ReplyDeleteவரலாறு அறிந்தோம்
இது முழுமையான வரலாறு இல்லீங்க சகோ. சதயத் உல்லாகானின் முழுவிவரம் அங்கு யாருக்கும் தெரில. நெட்டில் தேடி கண்டுபிடிச்சவையே இவை. இதுலும் எது உண்மை?! எது பொய்ன்னு தெரில
Deleteசுவாரஸ்யமான தகவல்கள்.
ReplyDeleteவரலாற்று எச்சங்களில் பராமரிப்பு இல்லாதது வேதனையே
ReplyDeleteமௌன சாட்சிகள் பதிவு அருமை. வரலாற்றுத் தகவல்கள் ஸ்வாரஸ்யம். படங்களும் சிறப்பாக இருக்கின்றன.
ReplyDeleteதுளசிதரன், கீதா
ராஜி வரலாறுனாலே கொஞ்சம் மண்டைல ஏறுவது கஷ்டம். எம்புட்டு உருப்போட்டுருப்போம் ஸ்கூல்ல ஹா ஹா ஹா .. பெயர்கள்தான் மண்டைல டக்குனு பதிய மாட்டேங்குது. நல்ல காலம் எக்ஸாம் இல்லப்பா...வாசிச்சுட்டேன்!!!!!!!!!!! படங்கள் ரொம்ப நல்லா இருக்கு
கீதா
நவாப் களின் ஆட்சி பச்சைகல் மசூதி கண்டு கொண்டோம்.
ReplyDelete