Friday, April 17, 2020

யாழ்ப்பாணம் ஸ்ரீகதிர்வேல் சுவாமிகள்,பிருந்தாவனம் நகர் -பாண்டிச்சேரி சித்தர்கள்.

பாண்டிச்சேரி சித்தர்கள் வரிசையில் இன்று பார்க்கப்போறது யாழ்ப்பாணம் ஸ்ரீகதிர்வேல் சுவாமிகள்பாரதியார் யாழ்ப்பாணத்து சித்தரை பற்றி  பாடியுள்ளார். ஆனா,   அவர் பாடியது ஸ்ரீகதிர்வேல் சுவாமிகளை பற்றின்னு உறுதியா சொல்ல முடியலை.  அது நிஜமான்னு கூகுளில் தேடினால் இன்னும் சில யாழ்ப்பாணத்து சித்தர்கள் பற்றி படிக்க முடிஞ்சது.  அவர்களை பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்... 

போனவராம் நாம சற்குரு மகான் ஸ்ரீகணபதிசுவாமிகள் ஜீவசமாதியினை தரிசனம் செய்தோம். இந்தவாரம் நாம பார்க்கபோறது யாழ்ப்பாணம் ஸ்ரீகதிர்வேல் சுவாமிகள் ஜீவ சமாதியினை..  நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு கொஞ்ச நாள் வரை சித்தர்கள்ன்ற வார்த்தையே புதுசு. சித்தர்கள் யார்ன்னு கேட்டால், அந்த காலத்து மருத்துவர்கள், அவர்கள் உருவாக்குனதுதான் சித்த வைத்தியம்ன்னு சொல்வாங்க. ஆன்மீகத்துல ஈடுபாடும், இலக்கியங்களை படிக்கும் ஆர்வமும் இருக்கும் சிலருக்கு பாம்பாட்டி சித்தர், போகன், காகபுஜண்டர்ன்னு சிலரை தெரியும். இணையமும், மக்களிடையே பணப்புழக்கமும் அதிகரித்து, உலகம் சுருங்கி வீட்டுக்குள் வந்தப்பிறகு, நிறைய பேருக்கு சித்தர்களை பற்றி தெரிய வந்தது.  விருப்பமுள்ளவர்கள் தேடித்தேடி படிக்க ஆரம்பித்தனர்.  அப்படி படிக்க ஆரம்பித்தவர்களுக்கு பதினெண் சித்தர்களையும்,   108-சித்தர்களையும் தெரிய வந்தது.  இவர்கள் எல்லோருமே காலத்தால் மிகவும் முந்தியவர்கள். 1800-களில் வாழ்ந்த பாண்டிச்சேரி சித்தர்களின் வரலாறுகூட செவிவழியாக சொல்லித்தான் நமக்கு தெரியவருகிறது. இதேப்போல் ஈழத்து சித்தர்கள் பரம்பரை என ஒன்று இருந்திருக்கிறது. அவர்களும் காலத்தில் பிந்தியவர்கள் மற்றும் இந்தியாவில் இருக்கிற அளவு சித்தர் வழிபாடு ஈழத்தில் அவ்வளவாக இல்லாமல் போனதால் அவர்களை பற்றிய குறிப்புகளும் பெரிய அளவில் கிடைக்காமல் போவிட்டன. ஸ்ரீலங்காவை எடுத்துக்கொண்டால் அந்த தேசத்தின் நான்கு  திசைகளிலும், நான்கு பெரும் சித்த சமாதிக் கோவில்கள் இருக்கு.
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் கடையிட் சுவாமிகள் ஜீவசமாதிகிழக்கே காரை தீவில் சித்தனைக் குட்டி சுவாமிகள் ஜீவசமாதி, மேற்கே கொழும்பு முகத்துவாரத்தில் பெரியானைக் குட்டி சுவாமிகளின் ஜீவசமாதிதெற்கே நாவலப்பிட்டியில் நவநாத சித்தர் சமாதியும் இருக்கிறது அதேபோல் ஈழத்து சித்த மரபியலில் ஈழத்து பதினெண் சித்தர்கள் வரிசையில்
1)கடையிற்சுவாமிகள்.
2)பரம குரு சுவாமிகள்
3)குழந்தை வேற் சுவாமிகள்.
4)அருளம்பல சுவாமிகள்.
5)யோகர் சுவாமிகள்
6)நவநாத சுவாமிகள்
7)பெரியானைக் குட்டி சுவாமிகள்
8)சித்தானைக் குட்டி சுவாமிகள்
9)சடைவரத சுவாமிகள்
10)ஆனந்த சடாட்சர குரு சுவாமிகள்
11)செல்லாச்சி அம்மையார்
12)தாளையான் சுவாமிகள்
13)மகாதேவ சுவாமிகள்
14)சடையம்மா
15)நாகநாத சித்தர்
16)நயினாதீவு சுவாமிகள்
17)பேப்பர் சுவாமிகள்
18)செல்லப்பா சுவாமிகள்.
இப்படி ஈழத்து பதினெண் சித்தர்கள் வரிசை செல்கின்றது...
எதுக்கு திடீர்ன்னு இலங்கை பத்தி இத்தனை விவரம்ன்னா, இன்னிக்கு நாம பார்க்கப்போகும் ஸ்ரீகதிர்வேல் சுவாமிகள்   யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். நிறைய சித்தர்களைப்போல் இவருக்கும் தாய் தந்தை யார்?பிறந்த வருடம் எதுவென்று யாருக்கும் தெரியாது. ஆனால் இந்த கதிர்வேல் சுவாமிகள் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஆன்மீக யாத்திரை வந்தவர்ன்னு மட்டும் தெரியுது. ஆன்மீக யாத்திரையாக வந்த இடத்தில் வடலூரில் வள்ளலாரை சந்தித்தார்வள்ளலாரின் தெய்வீக ஆற்றாலால் கவரப்பட்ட கதிர்வேல் சுவாமிகள். தமிழகத்திலேயே தங்கி தன்னுடைய ஆத்ம பயணத்தை தொடங்க எண்ணினார். அப்படி அவர் தமிழகத்தில் தன்னுடைய ஆத்மவேள்விக்கு இடம் தேடினார். அப்பொழுதான் அவருக்கு இந்த புதுவையை பற்றி தெரிய வந்தது. பல ஞானிகளையும் தன்னகத்தே ஈர்க்கும் சக்தி படைத்த புதுச்சேரிகதிர்வேல் சுவாமிகளையும் தன்னகத்தே ஈர்த்தது. இவர் வாழ்ந்த காலகட்டத்தில் மாபெரும் துறவியர் கூட்டம் புதுவையிலும் புதுவையை சுற்றியுள்ள ஊர்களிலும் தங்கி இருந்து ஆத்ம சாதனைகளை செய்துவருவதை கண்டார். இதனால் கதிர்வேல் சுவாமிகள், தான் தங்க இந்த புதுவைதான் சரியான இடம் என முடிவெடுத்து புதுவையில் உள்ள  சித்தன்குடின்ற ஊரை தேர்ந்தெடுத்து அங்கேயே தங்கி விட்டார்.
இவர் இருக்கும் இடத்தில யாரவது பசியோடு இருந்தால் இவர் பொறுத்துக்கொள்ள மாட்டாராம். எங்கிருந்தாவது அவர்களுக்கு உணவு வழங்கிவிடுவாராம். ஏழ்மையில் வாடியவர்களை கண்டால் அவர்களுக்கு பொருளுதவி செய்வாராம். சிலசமயம் வறுமையில் வாடுபவர்களுக்கு தேங்காயை உடைத்து அதன் ஓடுகளை நாணயமாக மாற்றி அவைகளை கஷ்டப்படுபவர்களுக்கு கொடுத்து உதவுவாராம். இரக்ககுணமும் சித்து விளையாட்டுகளும் இவரை ஒரு பெரிய மாகானாக அந்த ஊர் மக்கள் போற்றும்படி ஆக்கியது. நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும்தீராத வியாதிகளினால் அவைதிப்படுவோருக்கும்இவர் வைத்திருந்த பச்சிலைகள் மூலம் குணப்படுத்திவிடுவாராம். இவரது  அற்புதம் என்றவென்றால்தன்னிடம் இருந்த பச்சிலயை கொண்டு ஒருவருடைய தொழுநோயை குணப்படுத்தி இருக்கிறார். மக்களுக்கு வரும் எல்லா வியாதிகளையும் போக்கும் அற்புத மருத்துவராக அந்த இடத்தில் வாழ்ந்திருக்கிறார். கதிர்வேல் சுவாமிகள். பசியெடுக்கும்போது முத்தியால்பேட் வருவாராம். அங்க இருக்கும் ஒரு மூதாட்டியிடம் ஒரு கிழங்கை கொடுத்து அதைப்பக்குவமாக சுட்டுத்தர சொல்லுவாராம். அந்த மூதாட்டியும் பக்குவமாக நெருப்பில் சுட்டு கொடுக்கும் அந்த கிழங்கைமூன்று அல்லது நான்கு நாட்கள் வரை உணவாக வைத்துக்கொள்வாராம்.
கதிர்வேல் சுவாமிகள் 25-05-1837-ம் ஆண்டு வைகாசி மாதம் 15-ம் நாள் ஜீவ சமாதியான குரு சித்தாந்த சுவாமிகள் பீடத்திற்கு வந்துஅங்கு ஆத்மதவத்தில் ஈடுபட்டார். பலநாள் செய்த கடுமையான தவத்தினால் ஞானம் கைவரப்பெற்றார். அந்த சமயத்தில் புதுவைக்கு விஜயம் செய்த வள்ளலாரை சந்தித்து ஆசிப்பெற்றார். அதுவரை கதிவேல் சுவாமிகள் ஒன்றிரண்டு வார்த்தைகள்தான் பேசுவாராம். வள்ளலாரை தரிசித்தபின் பேசுவதை அறவே விட்டுவிட்டார். எப்பொழுதும் மௌனமாகவே இருப்பாராம். இவர் சாலையில் செல்லும்போதுபின்னோக்கித்தான் நடந்து செல்வாராம். இவர் வருவதை பார்த்தால் அந்தப்பாதையில் செல்லும் பொதுமக்கள் இவருக்கு வழிவிட்டு ஒதுங்கி செல்வார்களாம். ஏன் பிரெஞ்ச் போலீஸார்கூட இவரை பார்த்ததும் தொப்பியை கழட்டி சல்யூட் அடித்து செல்வார்களாம். சுவாமிகளின் அளவற்ற ஆற்றலை கண்ட பொதுமக்கள் இவரிடம் ஆசிகள் பெற்று செல்வார்களாம். அவரைச்சுற்றி இருந்தவர்கள் மனநிம்மதியுடன் எந்தவித பிரச்னையும் இல்லாமல் வாழ்ந்துவந்தனர். இப்படியே நாட்கள் சென்றன. கதிவேல் சுவாமிகள் தான் இறைவனுடன் இரண்டற கலக்கும் நாள் வந்துவிட்டதை தனது ஞானத்தால் அறிந்துகொண்டார். உடனே சித்தன் குடிசையிலே உள்ள மாந்தோப்பின் நடுவே தனக்காக அறுகோண வடிவில் ஒரு மண்டபம் அமைத்து அதன் நடுவே தன்னுடைய உருவச்சிலையை மரத்தால் அமைத்து அதை தன்னுடைய நினைவிடமாக அமைக்கவேண்டும் என்று தனது பக்தர்களிடம் கூறினார்.
அவர் சொன்ன அந்த நாளும் வந்தது 01-02-1904 ம் ஆண்டு தை  மாதம் 19ம் நாள்திங்கட்கிழமை பூச நட்சத்திரம், பௌர்ணமி திதி அன்று பரம்பொருளுடன்  இரண்டற கலந்துவிட்டார். அவர் ஜீவசமாதியான தை மாதம் பௌர்ணமி தினம் ஒவ்வொரு வருடமும் அவரது குருபூஜையாக இன்றும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருது. இந்த சுவாமிகள்மீது பாரதியார் அளவற்ற பாடல்களை பாடியுள்ளார்ன்னு  சொல்றாங்க. ஆனால் இன்றளவும் புரியாத புதிராக உள்ளது பாரதியார் சந்தித்த யாழ்பாணத்து சுவாமிகள் இவர்தானா?! என்பது தான். ஏன்னா 1961ம் ஆண்டு திரு.கந்தசாமி என்பவர் ஸ்ரீலங்கா ஆகஸ்ட் இதழில் ஞானம் வளர்த்த புதுவைஎனும் கட்டுரையில் பாரதி கூறும் யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் யார்? என்னும் கேள்வியினை எழுப்பிவிட்டு சென்றாரே தவிர அவர் யார் என்று சொல்லவும் இல்லை அதற்கு தகுந்த ஆதாரமும் கொடுக்கவில்லை. இதற்கு பிறகு 1962-ம் ஆண்டு யாழ்ப்பாணத்து சுவாமிகளது அன்பரான திரு.பொ.சபாபதிப்பிள்ளை அவர்கள் ஸ்ரீலங்கா 04.1962ல் எழுதிய கட்டுரையில் யாழப்பாணத்து சுவாமிகள்தான்  அருளம்பல சுவாமிகள் எனக் கூறியிருந்தார். அதைத்தவிர 07.05.1963 இல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அருளம்பல சுவாமிகளே பாரதியாரால் போற்றப்பட்ட யாழ்ப்பாணத்துச் சுவாமிஎன அங்கு நடந்த விழாவில் அருளம்பல சுவாமிகளின் சமாதிகோவிலின் அருகில் பாரதியின் ஞானகுரு யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் நினைவாக இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நிறுவியது எனும் வாசகம் பொறித்த நடுகல் நாட்டினர். 
இந்த விழாவினை முன்னிட்டு அன்றைய தினகரன் பத்திரிகையில் பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி போன்றோரின் கட்டுரைகளும், யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் புதுவையில் வெளியிட்ட காற்றை நிறுத்தக் காணுவன் விடையைஎனும் துண்டுப்பிரசுரமும் வெளியிட்டனர். தினகரன் என்றால் நம்மூர் பத்திரிக்கைன்னு நினைச்சுராதீங்க தினகரன் இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகும் ஒரு தேசியத் தமிழ் நாளிதழ் ஆகும். இப்பத்திரிகை 1932 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் நாள் அன்று முதன் முதலாக வெளியிடப்பட்டது. இலங்கையின் முன்னணி வெளியீட்டு நிறுவனமான லேக் ஹவுஸ் நிறுவனம் இதனை வெளியிட்டு வருகிறது. 1948 மே 23 முதல் தினகரன் வாரமஞ்சரி ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியானது. இந்தபத்திரிகையின் முதலாவது ஆசிரியராக கே. மயில்வாகனம் பணியாற்றினார். அவருக்குப் பின்னர் வி. ராமநாதன்,    எஸ். ஈஸ்வர ஐயர்,எஸ். கிருஷ்ண ஐயர், ஆர். எஸ். தங்கையா, வீ.கே.பீ.நாதன்,   பேராசிரியர் க.கைலாசபதி,ஆர்.வகுருநாதன்  ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர்.இவர்கள் எல்லாம் பாரதியை சம்பந்த படுத்தி துண்டுபிரசுரம் வெளியிட்டனரே தவிர எந்த ஆதாரத்தையும் மேற்கோள் காட்டவில்லை.
இந்த சந்தேகத்தை தீர்க்க ,லென்ஸ் எடுத்திட்டு கூகுள்  மேப்பின் துணையுடன் அருளம்பல சுவாமிகள் ஜீவசமாதியை தேடி  சென்றோம். அருளம்பல சுவாமிகள் வேலுப்பிள்ளை, இலட்சுமி அம்மாள் ஆகியோரின் புதல்வராவார். இவர் இலங்கையிலே யாழ்ப்பாணத்திலுள்ள வியாபாரிமூலை என்னும் கிராமத்தில் பிறந்தார். இவரே பாரதியாரின் ஞானகுருவான யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் என செல்லப்படுகிறார் என்று அங்கு செவிவழியாக சொல்லப்படுகின்றன. சுவாமிகளின் பிறந்த தினம் இதுதான் என திட்டவட்டமாக சுட்டிக்காட்டக் கூடிய சான்றுகள் இல்லாவிடினும் வியாபாரிமூலையிலுள்ள மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாசாலையில் கிடைக்கப்பெற்ற அக்காலத்து ரெஜிஸ்டர்படியும், சுவாமிகளது கையெழுத்துப் பிரதியின்படியும் சுவாமிகள் ஏறத்தாழ 07.05.1880ல் பிறந்ததாக கொள்ள முடிகின்றது. (தமிழ் நாட்காட்டியின் படி சித்திரை மாதம் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தார்).

வீட்டு சூழ்நிலை காரணமாக இளம் பருவத்திலிருந்தே பாட்டியார் காளியம்மையின் ஆதரவில் வியாபாரிமூலையிலேயே வளர்ந்தார். இவர் 23.10.1894 வரை மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாசாலையில் கல்வி கற்றார். சதாவதானி கதிரவேற்பிள்ளை அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். இளமையிலே விவசாயம் செய்த சுவாமிகள் பின்பு திரு.த.பரமுப்பிள்ளை அவர்களின் கம்பளைக்கடையில் அவருக்கு உதவியாளராக இருந்தார். பின்பு மட்டக்களப்பில் வியாபாரம் செய்து நட்மடைந்தார். திருவருள் கூடவே நிஷ்டை கற்க சிதம்பரம் சென்றவர் நாகபட்டணத்து நாகை நீலலோசனி அம்பாள் ஆலயத்தில் தங்கினார். நீலலோசனி அம்பாளின் தரிசனப்பிரகாரம் அம்பாள் முன்பாக நான்கு ஆண்டுகள் நிஷ்டையில் இருந்தார். நிஷ்டை கைகூடியதனால் சித்தரானார்.


சுவாமிகள் நாகையில் நாகப்பட்டணம் சுவாமி, நாகை மௌன சுவாமி, மௌனகுரு, யாழ்ப்பாணத்துச் சுவாமி, பூந்தோட்டத்து ஐயா எனப்பலராலும் அழைக்கப்பட்டார். இவர் தலயாத்திரையின் பொருட்டு வேதாரண்யம்அகத்தியாம்பள்ளி, மாயவரம்பாண்டிச்சேரி(புதுவை) ஆகிய இடங்களுக்குச் சென்றார். புதுவையில் சிறிதுகாலம்  தங்கினார். அதேசமயம் 1908 ஆம் ஆண்டு முதல் 1918 ஆம் ஆண்டுவரை மகாகவி சுப்பிரமணிய பாரதியார் புதுவையில் வாசஞ்செய்தார். குவளைக்கண்ணன் சுவாமிகளுடனும் நட்பு பூண்டிருந்தார். புதுவையில் தங்கியிருந்த யாழ்ப்பாணத்துச் சுவாமிகளை குவளைக்கண்ணன் சுவாமிகள் பாரதியாரிடம் அழைத்துச் சென்றார். பாரதியார் யாழ்ப்பாணத்துச் சுவாமிகளின் மௌன நிலையில் ஈர்க்கப்பட்டார். பாரதியார் 1918-ம் ஆண்டு புதுவைவிட்டு நீங்கி மனைவியின் ஊரான கடையத்திற்குச் சென்றார்.  1921-ம் ஆண்டு செப்ரம்பர் 12 இல் பாரதியார் அமரத்துவம் எய்தினார்.
இங்க கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா கதிர்வேல் சுவாமிகள் 1904 -ம் வருடமே  அதாவது பாரதியார் புதுவைக்கு வருவதற்கு முன்னாடியே ஜீவ சமாதியாகிவிட்டார். அதனால பாரதியார் சந்திச்ச யாழ்ப்பாணம் சுவாமிகள் அருளம்பல சுவாமிகளாகவே இருக்கணும். உண்மை என்னன்னு அந்த பாரதியாருக்கும் சித்தருக்கும் மட்டுமே வெளிச்சம். இந்த யாழ்பாணத்து சுவாமிகளான அருளம்பல சுவாமிகள் பத்தி நாம விரிவாக ஒரு பதிவில் பார்க்கலாம். பராதியார் இவரை பற்றி பாடிய அநேக பாடல்களில்
யாழ்ப்பாணத்து சுவாமியின் புகழ்
கோவிந்த சாமிபுகழ் சிறிது சொன்னேன்;
குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பா ணத்தான்,
தேவிபதம் மறவாத தீர ஞானி,
சிதம்பரத்து நடராஜ மூர்த்தி யாவான்,
பாவியரைக் கரையேற்றும் ஞானத் தோணி,
பரமபத வாயிலெனும் பார்வை யாளன்;
காவிவளர் தடங்களிலே மீஙள் பாயும்
கழனிகள் சூழ் புதுவையிலே அவனைக் கண்டேன்.40

தங்கத்தாற் பதுமைசெய்தும் இரத லிங்கம்
சமைத்துமவற் றினிலீசன் தாளைப் போற்றும்
துங்கமுறு பக்தர்பலர் புவிமீ துள்ளார்;
தோழரே!எந்நாளும் எனக்குப் பார்மேல்
மக்களஞ்சேர் திருவிழியால் அருளைப் பெய்யும்
வானவர்கோன்,யாழ்ப்பாணத் தீசன் தன்னைச்
சங்கரெனன் றெப்போதும் முன்னே கொண்டு
சரணடைந்தால் அது கண்டீர் சர்வ சித்தி. 41

என்று சில வரிகள் வருகின்றன.பாரதியார் பாடிய யாழ்ப்பாணத்து சித்தர் கதிர்வேல் சுவாமிகளா இல்ல அருளம்பலசுவாமிகளா?! யார்ன்னு  இப்பாடல்களை எழுதிய பாரதியாருக்கும், கடவுளுக்குமே வெளிச்சம்.
இதைபோல் திருப்புறம்பயம், கும்பகோணம், தஞ்சை மாவட்டத்திலும் ஒரு யாழ்ப்பாணம்  ஆறுமுகசுவாமி சித்தர் ஜீவசமாதி உள்ளது. இவர் யாழ்ப்பாணத்திலிருந்து  தமிழகம் வந்து மதுரை திருஞானசம்பந்தர் திருமடம் ஆதீனத்தில் சந்நியாசம் ஏற்று கட்டளைத் தம்பிரானாக இருந்திருக்கிறார். பின்னர் அங்கிருந்து வெளியேறிய யாழ்ப்பாணம் சுவாமிகள் கும்பகோணம் வந்து, அறுபத்து மூவர் குருபூஜை திருமடம் கி.பி.1843-ல் ஸ்தாபித்தார்கள். இம்மடத்தில் 63 நாயன்மார்களின் படங்கள் அவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுடன் படங்களாக வரையப்பட்டிருந்தன. ஒவ்வொரு நாயன்மார் குருபூஜையின் போதும் மடத்திற்கு அருகில் இருக்கும் பேட்டை நாணயக்கார தெருவிலிருந்தும் அடியவர்கள் பொறுப்பேற்று. குருபூஜை அன்று அதற்குரிய நாயன்மாரின் வரலாற்றைப் படித்து பூஜை நடத்தி வந்தனர். இவ்வாறு மடம் சிறப்புற விளங்கி வரும் நாளில் கும்பகோணத்தை அடுத்த திருபுவனத்தில் இருந்த மௌனசாமிகளை நாணயக்காரத்தெரு அன்பர்கள் கும்பகோணம் அறுபத்துமூவர் குருபூஜை மடத்திற்கு எழுந்தருளச் செய்தனர். மௌனசாமிகளின் அதீத ஆற்றலால் மடத்தின் புகழ், எங்கும் பரவியது.
இந்நிலையில் கும்பகோணத்திலிருந்து வெளியேறிய யாழ்ப்பாணம் சுவாமிகள் மதுரை ஆதீனத்திற்குப்பட்ட ஸ்ரீசாட்சிநாதர் ஆலயம் இருக்கும் திருப்புறம்பயம் (கும்பகோணத்திற்கு வடமேற்கே பத்து மீட்டர் தொலைவு) கிராமத்திற்குச் சென்றார்கள். அங்கு மடம் அமைத்து அடியார்களை பேணி அறப்பணியாற்றினார்கள். அப்பகுதியில் அருளாளராக விளங்கியயாழ்ப்பாணம் சுவாமிகள் தமது திருமடத்திலேயே பரிபூரணமானார்கள். அவரது ஸ்தூலத் திருமேனி மடத்தின் கீழ்பகுதியில் குகை செய்விக்கப்பட்டது. சமாதிமீது சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கிழக்குப் பார்த்த சந்நதி அதற்கு எதிரில் அவருடைய சீடர்கள் மூவரின் (சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னர்) ஜீவசமாதி உள்ளது. மற்றும் இந்த மடத்தில் 3 அடியார்கள் சமாதி  அடைந்துள்ளார்கள்.
திருப்புறம்பயம் மடம் இருக்கும் தெருவிற்கு யாழ்ப்பாணம் சாமி மடத்து சந்து என்றே பெயர் வழங்குகிறது.23.12.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை பூஜையின்போது நாகஜோதி ரூபமாக காட்சி கொடுத்தார்கள். 04.12.2014 குருவாரமான வியாழக்கிழமை பிரதோஷ நன்னாளில் யாழ்ப்பாண ஆறுமுக சுவாமி சித்த ஜீவசமாதி சிவலிங்க திருமேனியின்மீது கார்த்திகை திங்கள் 18 ஆம் தேதி நாகராஜா தன் சட்டையை உரித்து மாலையாக அணிவித்து அன்று இரவு வரை பக்தகோடிகளுக்கு அங்கேயே காட்சி கொடுத்தார். இத்தகைய சிறப்பு பெற்ற ஜீவசமாதியில் குருபூஜை விழா கடந்த வருடம் சித்திரை மாதம் 23ம் நாள்(6.5.2019) திங்கள் கிழமை நடைபெற்றது.


இதேபோல் குரு வாரமான 29.8.2019 ஆவணி12ம் நாள் வியாழக்கிழமை இரவு8.மணிக்கு யாழ்ப்பாண ஆறுமுகசுவாமி சித்தர் ஜீவசமாதி கருவறையில் நாகராஜார்(நல்லபாம்பு) பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார் சிவலிங்கத் திருமேனி அருகில் வலம் வந்து காட்சியளித்திருக்கிறார். இத்தலம் வந்து வேண்டுபவர்க்கு குழந்தை பாக்கியம்திருமண பாக்கியம்சர்ப நாக தோஷம்செவ்வாய் தோஷம்ராகு தசை நடப்பவர்கள் மகான் யாழ்ப்பாண ஆறுமுகசுவாமி சித்தர் ஜீவசமாதியில் தீபம் ஏற்றி வழிப்பட்டாலே சகல நிவர்த்திக கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. 

பாண்டிச்சேரியில் ஆரம்பித்து யாழ்ப்பாணம் சென்று கடைசியில் கும்பகோணம் வரை உள்ள யாழ்ப்பாணத்து சித்தர்களை தரிசனம் செய்துவிட்டோம் மீண்டும் அடுத்தவாரம் வேறு ஒரு சித்தர் ஜீவசமாதியில் இருந்து உங்களை சந்திக்கிறேன்.
படங்கள் உதவி :முகநூல் 
நட்புடன்
ராஜி 

9 comments:

 1. வணங்குகிறேன்

  ReplyDelete
  Replies
  1. சித்தரின் அருள் கிடைக்க பிரார்த்திக்கிறேன் ....

   Delete
 2. விளக்கங்கள் அருமை சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க அண்ணா...

   Delete
 3. நன்று. விரிவான தகவல்கள்.

  ReplyDelete
  Replies
  1. தகவல்கள் இனியும் தொடரும்...தொடர்ந்து வாங்க அண்ணே ...

   Delete
 4. யாழ்பாணத்து அருளம்பல சுவாமிகள் பற்றி ஆதாரங்களுடன் தந்துள்ளீர்கள். இவர் எமது அண்மைய கிராமத்தை சேர்ந்தவர்..சிறுவயதிலிருந்தே இவரின் சமாதிக்கு சென்று வணங்கியிருக்கிறேன்.
  சித்தர்கள் பற்றிய சிறப்பான பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப சந்தோசம் மாதேவி,நாங்களெல்லாம் போகமுடியவில்லையே என்று ஏங்கிக்கொண்டு இருக்கும் இடத்திற்கு நீங்கள் சென்று தரிசனம் செய்து இருக்கிறீர்கள்.மிக்க மகிழ்ச்சியும் மனநிறைவையும் தருகிறது,எல்லாம் அந்த சித்தரின் அருள்தான் மாதேவி..உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ..

   Delete
 5. குருவே சரணம்

  ReplyDelete