Tuesday, September 10, 2013

கை கொடுத்திருப்பாயா சகோதரா?!


அன்புள்ள சகோதரனே!

நலமா?! நீண்ட நாட்களாக உனக்கு கடிதம் எழுத வேண்டும் என நினைப்பேன். ஆனா, ஏனோ எழுதியதில்லை!! இப்பொழுது எழுதியே ஆக வேண்டிய மன உளைச்சலுக்கு ஆளிவிட்டேன்! அதான் உடனே கடிதமும் எழுதி விட்டேன். 

தாயின் கருவறை என்னும் இருட்டறையில் பத்து மாதம் தனித்திருந்தேனே!! அப்போது துணைக்கு வரவில்லை, உயிரமுதத்தை போட்டியிட்டு பருகவும் நீ வரவில்லை..,

தத்தி நடக்கும்போது விரல்பிடித்து நடைப்பழக்கவும், ஓடி விளையாடும்போது கீழே விழும் என்னை தாங்கி பிடிக்கவும் நீ வரவில்லை, கொட்டாங்கச்சியில் மணலைக் கொட்டி சுட்ட இட்லியையும், கருவேல மரத்து இலையை அரைத்து வைத்த சட்னியை உண்ணவும், இன்னொரு இட்லி கேட்டு நீ அடம்பிடிக்க நான் தர மறுக்க, காலால் இட்லியை சிதைக்கவும் நீ வரவில்லை!!



பள்ளியில் பல்பத்தை தின்றதையும் , சிலேட்டை எச்சிலால் அழித்ததையும், சைக்கிள் பழகி பாவாடைக் கிழித்துக் கொண்டு வந்து அம்மாக்குத் தெரியாமல் மறைத்ததையும் அம்மாவிடம் போட்டுக் குடுத்து நான் அடிவாங்குவதைக் கண்டு ரசிக்கவும் நீ வரவில்லை.., ,

என் உண்டியல் காசை நீ திருடி சினிமா பார்த்ததையறிந்து, உன்னைக் கண்டிக்க, அப்பிடித்தாண்டி செய்வேன் னு நறுக்கென்று என் தலையில் கொட்ட, வலித்தாங்காமல் அழும் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அப்பாவிடம், நிலைப்படியில் இடிச்சுக்கிட்டேன்பா எனப் பொய்ச்சொல்லி உன்னை நான் காப்பாற்ற.., கண்களால் நன்றியுரைக்க நீ வரவில்லை..,
 

 சடங்காகி "குச்சி வீட்டுக்குள்" அமர்ந்திருக்கையில், அவளைத் தீண்டதேடானு சொன்ன கோடி வீட்டு ருக்குப் பாட்டிக்கு தெரியாமல் உள் நுழைந்து, எனக்கு தந்த பலகாரங்களையெல்லாம் என் வாய் பொத்தி திண்ணவும் நீ வரவில்லை!!

தெருமுனையில் காலிப் பசங்க கிண்டல் பண்றாங்க, நீ துணைக்கு வாடா பயமா இருக்குனு உன்னை கெஞ்ச, ஆமாம் இவ பெரிய உலக அழகி இவளைப் பார்க்க வர்றாங்..,  ,ச்சீப் போடின்னு துரத்திவிட்டு, என் பின்னாடியே வந்து, அவர்களைப் புரட்டி எடுக்க நீ வரவில்லை!!

பரிட்சைக்கு செல்கையில் பாசாகி என் மானத்தை காப்பாத்துடின்னு விபூதியிட்டு, என்னை பரிட்சை எழுத அனுப்பிவிட்டு, பள்ளி வாசலில் நான் வரும்வரை கால்கடுக்க காத்திருக்க நீ வரவில்லை!!

இந்த மாப்பிள்ளையதான் நீ கட்டிக்கிடணும்னு சொல்லி அப்பா அதட்ட, நான் விசாரிச்சுட்டேன், இவன் சரியில்லை, அவ நல்லா இருக்கனும்ன்னா எப்படிப்பட்ட மாப்பிள்ளை பார்க்கனும்ன்னு எனக்கு தெரியும். அந்த வேலை உங்களுக்கு வேணாம்ன்னு பரிந்துப் பேச நீயில்லை!!

மசக்கையில் வாந்தி எடுக்கும்போது கையிலேந்திப் பிடிக்கவும்.., ஒன்பதாம் மாதம் பூமுடிக்கையில் எங்கோ ஒரு மூலையில் சாம்பார் வாளியைக் கையில் ஏந்திக்கொண்டு என் மேடிட்ட வயிற்றைக் கண்டுப் பூரிக்கவும்.., பிரசவ வேதனையில் துடிக்கும்போது, நான் இருக்கேண்டா பயப்படாதேடா னு என் கைப்பிடித்து ஆறுதல் சொல்லவும் நீ வரவில்லை!!

மருமகப் பிள்ளையை நடுங்கும் விரலுடனும், கண்ணீர் துளிகளுடனும் ஏந்திக் கொள்ளவும், மடியிலிருத்தி காது குத்தவும், தங்கை மகளுக்கு "குச்சுக் கட்டி சீர் செய்யவும்" நீ வரவில்லை!!


இதையெல்லாம் நீ இல்லாமல் தாங்கிக்கொள்ள முடிந்த என்னால் ....,

தரையில் படுக்க வைத்தால் ஈ, எறும்பு கடிக்குமென மார்மீதே உறங்க வைத்து, பாராட்டி, சீராட்டி வளர்த்த நம் அன்னை இன்று "படுத்த படுக்கையில்"...,,

மகளேயானாலும், அருகிலிருந்து கவனித்துக் கொள்ள வக்கற்று,  தத்தளித்து , தடுமாறி, தோள்சாய ஆளின்றி தவிக்கிறேன்,

ஒருவேளை இன்று நீ என்னருகில் இருந்திருந்தால்..,

 கை கொடுத்திருப்பாயா??!! சகோதரா?



இப்படிக்கு,
உன்னுடன் பிறந்து , உன் விரல் பிடித்து வளர்ந்து வாழும் பாக்கியத்தை இழந்த,
துரதிர்ஷ்டசாலியான சகோதரி!!

33 comments:

  1. சகோதரர்கள் பலர் இருக்க கவலை ஏன் சகோதரி...?

    ReplyDelete
  2. விரைவில் நம் அன்னை நலம் பெற வேண்டுகிறேன்...

    ReplyDelete
  3. //உன் விரல் பிடித்து வளர்ந்து வாழும் பாக்கியத்தை இழந்த,துரதிர்ஷ்டசாலியான சகோதரி!!//

    விரல் பிடித்து வளர்ந்து வாழும் பாக்கியத்தை இழந்ததினால்தான் நீ உன் சுய "நம்பிக்கை" என்ற கையை பிடித்து வளர்ந்து வந்திருக்கிறாய் சகோதரி, நீ துரதிர்ஷ்டசாலியான சகோதரி இல்லை அதிர்ஷ்டசாலியான சகோதரிதான் நீ

    ReplyDelete
  4. அன்னைய காக்க மகன் வேண்டுமென்று அவசியமில்லை மரு மகன் அந்த பொறுப்பை அழகாக எடுத்து செய்வார் கவலை கொள்ளாதே சகோதரி

    ReplyDelete
  5. //இதையெல்லாம் நீ இல்லாமல் தாங்கிக்கொள்ள முடிந்த என்னால் ....,

    தரையில் படுக்க வைத்தால் ஈ, எறும்பு கடிக்குமென மார்மீதே உறங்க வைத்து, பாராட்டி, சீராட்டி வளர்த்த நம் அன்னை இன்று "படுத்த படுக்கையில்"...,,

    மகளேயானாலும், அருகிலிருந்து கவனித்துக் கொள்ள வக்கற்று, தத்தளித்து , தடுமாறி, தோள்சாய ஆளின்றி தவிக்கிறேன்,//

    வலியின் வரிகள் ..வாவ் ..சூப்பர்..

    ReplyDelete
  6. கட்டுரையின் கருவும், அதற்கான படங்களும் மிக அருமை... இப்படியொரு வித்தியாச சிந்தனையும், அதற்கான வார்த்தைகளையும் கோர்த்து கட்டுரை எழுதுவது மிக அபூர்வம்தான்... மனதார பாராட்டுகிறேன்...

    (இது வெறும் கட்டுரை மட்டும்தான் என்று நம்புகிறேன்... ஒருவேளை உண்மையிலேயே உங்கள் அன்னைக்கு உடல் நலமில்லை என்றால் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்...)

    ReplyDelete
  7. சகோதரர்கள் இப்படி எல்லாம் தான் இருப்பார்களா
    யோசிக்க வைத்த கவிதைத் தொகுப்பு.

    ReplyDelete
  8. அண்ணன் நான் இருக்கேன்"ம்மா கவலைகள் வேண்டாம், அம்மா விரைவில் குணமாவார்கள் நாங்கள் எல்லாரும் பிரார்த்திக்கிறோம்.

    ReplyDelete
  9. சொல்லிச் சென்றவிதம் கண்கலங்க வைத்தது
    அவள் துரதிஷ்டசாலி இல்லை
    இத்தனை சுகங்களையும் உடனிருந்து அனுபவித்து
    மகிழத்தெரியாத அவன் தான் நிச்சயம் துரதிஷ்டசாலி
    மனம் தொட்ட பதிவு

    ReplyDelete
  10. மனம் நெகிழ்ந்தேன். அன்னை குணமடைய பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  11. ஒரு சகோதரன் இருந்திருந்தால் அவன் என்னென்ன செய்திருப்பான் என எதையும் விடாமல் பட்டியலிட்டு எழுதியிருக்கும் விதம் அருமை. (சென்னையில் அத்தனை சகோதரர்களைப் சந்தித்ததால் வந்த ஏக்கமா இது? )

    ReplyDelete
  12. வலிகளை வார்த்தையால் கோர்த்துப் போனவிதம் பார்த்து உறைந்திருக்கின்றேன்.

    உண்மையா இது தோழி! எதுவாகினும் துயரகற்றத் தோழமையாக
    இங்கு பலரிருக்கின்றோம். துணையிருப்போம்!

    விரைவில் யாவும் நலமாய் இருக்க வேண்டுகிறேன் தோழி!

    த ம.6

    ReplyDelete
  13. மனம் கலங்க வைத்த கடிதம்! பழைய நினைவுகள் தானே தோழி...

    ReplyDelete
  14. ஆதரவுக்கரம் தேடும் ஒரு சகோதரியின் ஏக்கம் உங்கள் பதிவில் இழைந்தோடுகிறது... செம டச்சிங்

    ReplyDelete
  15. எல்லாம் சரி சகோ ...இதுதான் கொஞ்சம் இடிக்குது..:-)

    // ,ச்சீப் போடின்னு துரத்திவிட்டு, என் பின்னாடியே வந்து, அவர்களைப் புரட்டி எடுக்க நீ வரவில்லை!!//

    திட்டம் போட்டு மாட்டி உடுற மாதிரி இருக்குது.:-)

    ReplyDelete
  16. This post made me to feel very much about the absence of your brother and also your willingness to meet him at least during the last days of your (his?) mother.

    ReplyDelete
  17. நெகிழவைத்த பதிவு.
    அவர்கள் உண்மைகள் சொல்வது போல் மரு மகனும் உதவலாம் உங்கள் தாய்க்கு. நன்றாக சொன்னார் அவர்.

    சகோதரன் உறவுக்கு ஏங்கும் உள்ளம் தெரிகிறது பதிவில்.

    ReplyDelete
  18. தாய் விரைவில் நலம்பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. என் விழியினோரம் எட்டிப்பார்க்கிறது கண்ணீர் துளிகள்....!
    சில தங்கைகளை நினைத்து...!

    ReplyDelete
  20. தைரியத்தோடு இருங்கள்... இது பல அண்ணன்களுக்கு சமம்...

    ReplyDelete
  21. உணர்வு ததும்பும் வரிகள்...

    ReplyDelete
  22. ஏனோ இந்தப்பதிவில் தங்களை கலாய்க்க மனம் வரவில்லை.... சகோதரர்கள் உண்டு ஏராளம்... தாயின் உடல் நலத்தைப் பார்த்துக்கொள்ளவும்... (இந்தப் பதிவு கற்பனையாகவே இருக்கவேண்டும்)

    ReplyDelete
  23. மிகவும் உருக்கமான வரிகள். நானும் கற்பனை என்றே என் மனதிற்கு சொல்லிக்கொள்கிறேன்

    ReplyDelete
  24. படித்ததும் ஏனோ மனம் கலங்குகிறது..அம்மா விரைவில் நலம்பெற ப்ரார்த்த்னைகள்!!

    ReplyDelete
  25. பதிவர் விழாவிலே எல்லோரையும் தங்கள் அறிமுகத்தின் போது குலுங்க குலுங்கச் சிரிக்க வைத்த நீங்களா இன்று எங்கள் எல்லாரையுமே அழ வைத்துக்கொண்டு
    இருக்கீறீர்கள் ?

    இது கற்பனையா ? கண் முன்னே நடப்பதா ?
    நடந்ததின் வர்ணனையா ?

    அன்னை உடல் நலம் பெற்று உங்கள் முகம் மலர
    நானும் இறைவனை வேண்டுகிறேன்.

    இருக்கட்டும்.

    நடப்பது எதற்குமே நாம் சாட்சி தான்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  26. என்ன மேடம் பின்னி எடுக்கறீங்க. கண்ணுல தண்ணி நம்ம கேக்காமயே வந்தும் போல இருக்கு.

    ReplyDelete
  27. என் அம்மா எங்கள் ஆத்தாவுக்கு (அம்மாச்சிக்கு) ஒரே பெண் குழந்தை தான். ஆனால் எங்கள் ஆத்தா வயது முதிர்ந்த காலத்தில் புத்தி பேதலித்திருந்த போதிலும் கடைசிவரை அவர்களை எங்கள் அம்மா தான் பார்த்துக் கொண்டார்கள். கூடவே மகனாய் என் தந்தையும், இதற்க்காகவே படிப்பை தொடராமல் என் அக்காவும்.

    அவருக்கு ஒரு மகன் இருந்திருந்தால் கூட அவரை அப்படி கவனித்திருப்பார என எனக்கு தெரியவில்லை.

    My Mom is still a strong woman. I have seen you. You too...

    ReplyDelete
  28. அன்னை விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன்...

    ReplyDelete
  29. கலங்கி நிற்கிறேன். மகனிருந்தும் முதியோர் இல்லங்களுக்கு விரட்டப்படும் துர்பாக்கியப் பெற்றோருக்கு மத்தியில் மகளே மகனாய் நின்று காக்கும் பேறும் மனோதிடமும் பெற்ற தங்களை எண்ணி அவர்கள் நிச்சயம் பெருமைப்படுவார்கள். மனந்தளராதீர்கள் ராஜி.

    ReplyDelete
  30. கவலை வேண்டாம் சகோதரி ! நல்லதே நடக்கும் !

    ReplyDelete
  31. intha pathivai padikum pothu kan kalangukirathu . naanum ungalai pola thurathesda saliye . annan, akka , thambi, thangai illatha ungalil naanum oruval

    ReplyDelete
  32. மனம் நெகிழவைத்த பதிவு ராஜி. இறந்துப்போன என் அண்ணா நினைவுக்கு வந்துவிட்டார் இந்த பதிவு படிக்கும்போது...

    எத்தனை உறவுகள் உடன் இருந்தாலும் நம் கைப்பிடித்து நம்மை தூக்கி கொஞ்சிட அண்ணா வேண்டும்...

    அம்மாவின் உடல்நலம் இப்போது தேவலையா ராஜி?

    ReplyDelete