Friday, September 27, 2013

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் - புண்ணியம் தேடி ஒரு பயணம்

இன்னிக்கு “உலக சுற்றுலா தினமாம்”.  தினமும் ஆஃபீஸ், மீட்டிங், மேலதிகாரிக்கு பதில் சொல்லின்னு இம்சை படும் ஆண்கள் ரிலாக்ஸ் பண்ணிக்கவும், ஸ்கூல், ஹோம் வொர்க், டியூஷன்னு வதைப்படும் குழந்தைகள் என்ஜாய் பண்ணவும், சமையல், பாத்திரம் கழுவுறது, துணி துவைக்குறது, மாமியார், மாமனாருக்கு பதில் சொல்லி, சீரியல் பார்த்து அழுகைன்னு இருக்கும் பெண்களுக்கு விடுதலையும் கொடுக்கனும்ன்னா வருசத்துக்கு ஒரு ரெண்டு நாளாவது குடும்பத்தோட எங்காவது போய் வரலாம். இதனால, மனசும்,  உடம்பும் புத்துணர்ச்சி ஆகுது.  

டூர் போகும்போது அரண்மனை, ஜூ, டேம், கோவில்ன்னு எல்லா இடமும் கலந்து கட்டி இருக்கனும்.. அப்பதான் எல்லோரையும் திருப்தி படுத்த முடியும்.  அப்பா, அம்மாக்குலாம் பிடிச்ச கோவில்கள், நமக்கு பிடிச்ச மாதிரி டேம், அர்ண்மனை, பசங்களுக்கு பிடிச்ச மாதிரி ஜூ, பார்க்ன்னு போகனும். நாங்க அடிக்கடி இப்படி டூர் போவோம்அப்படி போகும் போது போன ஒரு கோவில் பத்திதான் இன்னிக்கு பார்க்க போறோம்.

புண்ணியம் தேடி போற பயண”த்துல இன்னிக்கு நாம பார்க்க போற கோவில்.., கன்னியாகுமரியில இருக்குற, பெண்களின் சபரி மலைன்னு சொல்ற ”மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில்”.கடற்கரை ஓரமா இருக்கிற, கேரள கட்டிட கலை பாணில கட்டப்பட்ட கோவில் இது.


நாகர்கோயில்ல இருந்து நேரடியாவும், தமிழகம், கேரளாவில இருந்தும் பல்வேறு இடங்களிருந்தும் பேருந்து வசதி இருக்கு. இந்த கோவிலில் தமிழ் நாட்டிலிருந்து தரிசனம் பண்ண வந்தவங்களை விட, கேரளா செட் புடவையும்,  நெத்தில சந்தன பொட்டோட,  கேரள சேச்சிகள்தான் அதிகமா இருந்தாங்க.   மேற்கூரை கேரளா பாணியில் சிவப்பு ஓடுகளால் ஆனது. மேற்கூரையை தாங்கும் பெரிய தூண்களுடன் அழகாக காட்சியளிக்குது இக்கோவில். பிரமாண்டமா இல்லாம எளிமையா அதே நேரத்துல அழகாவும் இருக்கு கோவில்.

கோவில் நுழைவாயிலினுள் மேடை போன்ற ஒரு அமைப்பு இருக்கு. அதில் பக்தர்கள் அமர்ந்து அம்மனை தரிசிக்கவும், பாடல்களை பாடுவதுமா இருந்தாங்க.  நாங்களும் கொஞ்ச நேரம் அங்க உட்கார்ந்து அம்மனை தரிசித்தோம்.  அழகா அலங்கரிக்கப்பட்டு இருந்த அம்மனை பார்க்கும்போதே பரவச நிலையை தந்தது. சிலர் அங்கே இருந்த கடைகளில் சின்ன, சின்னதான தலை, கால், மண்டை போன்ற உருவங்கள் செஞ்ச தகட்டை வாங்கி காணிக்கையா செலுத்தினாங்க. அதனால உடல் நோய்கள் குறையும் ன்னு ஒரு ஐதீகம் . மேலும் தீராத தலைவலி தீர்வதற்கு பச்சரிசி மாவு வெல்லம் சேர்த்து ”மண்டையப்பம்” என்னும் வகையான உணவு செய்து அம்மனுக்கு நைவேத்தியம் பண்ணினால் தீராத தலைவலி குணமாகும் என்பதும் ஐதீகம்.

கோவிலின் இடப்பாகத்திலும், வலப்பாகத்திலையும் அம்மன் கோவில்கள் காணபடுது. அந்த வளாகத்தினுள் நிறைய நேர்த்திகடன் பொருட்கள் விற்பனை செய்யபடுது. கோவிலிலுக்கு வெளியிலேயும், உள்ளேயும் அம்மனுக்கு பூக்கடைகள் விற்கிறாங்க.  நாங்களும் பூக்களை வாங்கி கொண்டு அம்மனை தரிசிக்க போனோம்.

 பூஜைகள் எல்லாம் 4 கால பூஜைகளாக   கேரளா பாணியில் இருக்கு. நாங்க போன நாள் வெள்ளிகிழமை. அதனால ”புட்டமுது”ன்னு ஒரு பிரஸாதம் கொடுத்தாங்க.  ரொம்ப சுவையா இருந்துச்சு. அதெல்லாம் சாப்பிட்டு கொண்டு அங்க இருந்தப்ப ஒரு வயதான அம்மா இருந்தாங்க. அவங்க அடிக்கடி,  ”அம்மே பகவதி அனுகிறகிகனே”ன்னு சொல்லி கிட்டு இருந்தாங்க. அவங்க கிட்ட அம்மா இந்த கோவில் பத்தி கொஞ்சம் சொல்ல முடியுமான்னு கொறைச்சு கொறைச்சு மலையாளத்துல விளிச்சதை கேட்டு நொந்து போய் நீங்க தமிழா!?ன்னு கேட்டு அசடு வழிய வச்சு கோவிலின் ஸ்தல வரலாற்றை சொன்னாங்க.

400 வருஷத்துக்கு முன்பு இருந்த சங்கராச்சார்யர்ல ஒருத்தர், தன்னுடைய கேரள சீடர்களோட தங்கி இருந்த குடில்ல, ஒரு ஸ்ரீ சக்ரம் வச்சு வழிபட்டு வந்தாராம்.  ஒருநாள் ஸ்ரீசக்ரம் திரும்ப வரவே இல்லையாம்.  எடுத்து பார்த்தும் வரவே இல்லையாம். அதனால, அங்கயே அவர் தங்கியிருந்து பல சித்துக்கள் செய்து சமாதியாகிட்டாராம்.  அந்த ஸ்ரீ சக்ரம் இருந்த இடத்தில புற்று வளர ஆரம்பிச்சுச்சாம்.

 அப்ப அங்க விளையாடிகிட்டு இருந்த சிறுவர்கள் அதன்மேல் தடுக்கி விழ அதிலிருந்து இரத்தம் வந்துச்சாம்.  உடனே ஊர் மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மாவிடம் சொன்னாங்களாம் . மன்னரும்,  நம்பூதிரிகளை வர வச்சு தேவ பிரசன்னம் பார்த்ததில் அங்க தேவி குடியிருப்பது தெரிஞ்சதாம்.

 உடனே மன்னர் அதை சுற்றி சிறிய கோவில் கட்டினாராம். காலபோக்கில் அம்மன் சக்தி அறிந்து பெரிய கோவிலாக கட்டினார்களாம். ஆரம்பத்தில மந்தைகாடுன்னு ஆடு மாடு மேய்க்கும் இடமா இருந்துச்சாம்.அதுதான் காலப்போக்கில் மருவி ”மண்டைக்காடு” ன்னு பெயர் வந்துச்சாம்.  இங்க இருக்கும் புற்று வளர்ந்து கிட்டே இருக்கிறதாம். இப்ப 15 அடிக்கு மேல அந்த புற்று வளர்ந்திருக்குதாம். 
 காலைல மட்டும் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுமாம். பங்குனி சித்திரை மாதங்கள்ல பத்து நாள் விரதம் இருந்து கருப்பு உடை தரித்து இருமுடியில் பூஜைக்கு வேண்டிய பொருட்களை கட்டிக்கொண்டு இங்க கடலில் கால் நனைத்து கொண்டு வழிபடுவார்களாம். இங்க சிறப்பு என்னன்னா, இங்க இருக்கிற கிறிஸ்துவ மத பெண்களும் அம்மனை வழி பட்டு வந்தார்களாம் .

”மண்டைக்காடு” இந்த பகுதிகள்ல வந்த ஒரு மத கலவரம்,  மத நல்லிணக்கதோடு வாழ்ந்த மக்களை பிரிவினையாக்கிவிட்டதாம். அம்மன் அருளால, இப்ப எந்த பிரச்சனையும் இல்லாம அமைதியா காணப்படுது. 

 இந்த கதை எல்லாம் கேட்டுட்டு , கோவிலுக்கு வெளிய வரும்போது  அங்க “வெடி வழிப்பாடு”ன்னு தனியே பட்டாசு வெடித்து ஒரு வழிப்பாடு கோவிலுக்கு வெளியே இருக்கும் மண்டபத்தில் நடத்துறாங்க.  அதையெல்லாம் பார்த்துட்டு கோவிலின் இடபக்க வழியாக கடற்கரை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

போற வழியில ஒரு மீனவ கிராமமும், ஒரு சர்ச்சும் இருக்கு.  அங்க மணற்பரப்பில் நிறைய ஆண்களும், பெண்களும் மீன் வலைகளை சரி பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அதெல்லாம் தாண்டி கடற்கறை வந்து சேர்ந்தோம்.  நீல வானை தொட்டு அழகா காட்சியளித்தது கடற்கரை  அதை ஒட்டி கரையில் வீடுகள் இருக்கு. ஓயாத கடல் இரைச்சல், உப்பு தண்ணி காற்றில் கலந்து ஈரமா இருக்கும் காற்று இவைகளையெல்லாம் பார்த்துக்கிட்டே கடற்கரையை அடைந்தோம்.

இங்க தெரியுற சாய்வான பகுதி வரை சிலசமயம் கடல் தண்ணி வருமாம் . சிலசமயம் பல அடி நீளத்திற்கு கடல் உள்வாங்குமாம்.  அப்படி நிறைய தண்ணீர் வந்தால் கடற்கரையை ஒட்டி இருக்கிற வீடுகள் நிலைமை என்னவாகும்!?ன்னு யோசனை வரும்போதே வேதனை மனசை வாட்டுது.


சரி நம்மளால சுற்றி வந்து இறங்கி கால் நனைக்க முடியாததுனால பக்கத்துல கீழே இறங்கி நின்ன ஒரு பெண் என் நிலைமையை புரிந்து கொண்டு அகத்திய முனிவர் தீர்த்தம் கொடுத்தமாதிரி கொஞ்சம் தண்ணி எடுத்து கொடுத்தார். நாங்களும் தலையில தெளிச்சுக்கிட்டு, மேற்கு வானில் மறைந்து கொண்டிருந்த சூரியனை பார்த்துக்கிடே பக்கத்தில் இருந்த ஒரு மீனவ பெரியவர்கிட்ட பேச்சு கொடுத்தோம்.

இங்கே அம்புக்குறி இட்டு காட்டி இருக்கிற இடத்தை ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜூம் பண்ணி பார்த்தீங்கன்னா சின்ன, சின்னதா 2 பாறைகள் இருக்குறது தெரியும்.  இருங்க சிரமப்படாதீங்க. உங்களுக்காக நானே ஜ்ஜ்ஜ்ஜ்ஜூம் பண்ணி காண்பிக்கிறேன்!!

அந்த பாறைக்கு பேரு ”ஆடு மேச்சான் பாறை”யாம் 200 வருஷத்துக்கு முன்னாடி அங்க இருக்கிற பாறையில நின்னு ஆடு மேய்ச்சாங்களாம் . நிலப்பரப்பு அங்க வர இருந்துச்சாம். கடல் மெல்ல மெல்ல நிலபரப்பை ஆக்கிரமிச்சு.., இப்ப, இங்க வரை வந்திருக்குன்னு அந்த பெரியாவர் சொன்னார்  கடைசியா வந்த சுனாமில கூட கொஞ்ச நிலபரப்பு கடலுக்குள்ளே போய்டுச்சுன்னு சொன்னார். எல்லாத்தையும் பதிவு தேத்த குறிச்சுக்கிட்டு அங்கே இருந்து கிளம்பினோம்.

இன்னிக்கு பகவதி அம்மன் அருள் பெற்று புண்ணியம் தேடிக்கிட்டோம்! அடுத்த வாரம் வேறொரு கோவிலுக்கு போய் புண்ணியம் சேர்த்துகலாம்!!


9 comments:

  1. நாங்கள் பல முறை இங்கே போயிருக்கிறோம் சக்தி வாய்ந்த அம்மன்..

    ReplyDelete
  2. இருமுறை சென்றதுண்டு... அழகான கோயில்... படங்களுடன் விளக்கங்கள் அட்டகாசம்...

    ReplyDelete
  3. மனஅமைதிகிடைக்கட்டும்

    ReplyDelete
  4. மனஅமைதிகிடைக்கட்டும்

    ReplyDelete
  5. அருமையாக சொன்னீர்கள் கோவிலைப்பற்றி. ஒரு முறை போய் தரிசனம் செய்ய வேண்டும்.
    படங்கள் எல்லாம் மிக நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  6. படங்களும் கோவில் பற்றிய தகவல்களும் மிக நன்று.

    ReplyDelete
  7. அரோகரா...... வேலை முடிந்து இப்போது தான் வீடு திரும்பினேன் .சாமிக்கு விளக்குக் கொளுத்தும் நேரம் வந்து விட்டது :))) படங்கள் அருமையாக உள்ளது மிகுதி திரும்பி வந்து சொல்கின்றேன் .இப்ப நான் போகாட்டி சாமி கண்ணக் குத்திடும் கிர்ர்ர் :)))

    ReplyDelete
  8. மண்டைக்காடு பகவதி கோவிலுக்கு போனதில்லை. அந்தக்குறை தீர்ந்து விட்டது ராஜி இப்ப உங்கள் பதிவு படித்த பின். ஆடு மேய்ச்சான் பாறைப் பற்றிய செய்திகள் கொஞ்சம் அச்சம் தருபவை. எப்ப வேண்டுமானாலும் கடல் நம்மை உள் வாங்கும் என்று மிரட்டல் விடுகிறதோ?

    ReplyDelete