Friday, September 06, 2013

திருப்பதிசாரம் ”திருவாழ்மார்பன்” திருக்கோயில் - புண்ணியம் தேடி ஒரு பயணம்

சென்னையை சுtத்தி இருக்குற கோயில்களையே பார்த்துட்டு இருந்தா எப்படி?! மத்த ஊருலாம் சுத்தி பார்க்க வேணாமான்னு யோசிச்சு , வண்டியை ரைட்டு எடுத்து....,  லெஃப்ட்ல கட் பண்ணி....,  நேரா போய்...,  யூ டர்ன் எடுத்து....,  நின்ன இடம் நாகர்கோவிலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்துல இருக்கும் “திருப்பதிசாரம்”ன்ற ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு ”திருவாழ்மார்பன்” திருக்கோயில்.  இது ”திருவெண்பரிசாரம்”ன்னும் அழைக்கப்படுது. இக்கோவில் 3000 வருடங்கள் பழமை வாய்ந்தது ன்னும் ராமாயண கால பழமை வாய்ந்ததுன்னும் சொல்றாங்க. இது 108 வைணவ திவ்விய தேசங்களுள் ஒண்ணாம்.

எல்லா ஊரிலிருந்தும், நாகர்கோயிலுக்கு ட்ரைன் வசதியும், பஸ் வசதியும் இருக்கு. நாகர்கோயிலிலிருந்து ஓட்டாபீஸ் ( இங்கே பழைய காலத்தில் ஓடு உற்பத்தி செய்யும் தொழிற்கூடம் இருந்ததால இந்த பேரு) ன்ற பஸ் ஸ்டாப்புல இறங்கி ஆட்டோல போலாம். ஆனா, வேணாம், ஏன்னா, நடந்து போற தூரத்தில்தான் கோவில் இருக்கு.  ஒரு வழியா கோவிலுக்கு போன பிறகுதான் தெரிஞ்சுது.  நாகர்கோயில் பஸ் ஸ்டேண்டுல இருந்து திருப்பதிசாரத்திகுகு நேரடியா பஸ் வசதி இருக்காம்.

இந்தகோவிலில் ராஜகோபுரம் இல்லை.  நுழைவாயிலின் மேலே ஸ்ரீதேவி- பூதேவி சமேத நாராயணன்ராமன், லட்சுமணன், கருடாழ்வார் மற்றும் நம்மாழ்வார் ஆகியோரது  சிற்ப உருவங்கள் இருக்கு. பார்க்க அழகாவும் இருக்கு.
கோவிலுக்கு உள்ளே நுழைந்ததும் கொடி மரம். அடுத்து ஆனந்த மண்டபம். இங்குராமன் மற்றும் கருடாழ்வார் சந்நிதிகள் எதிரெதிரே இருக்கு. ஸ்ரீராம பட்டாபிஷேகம் முடிந்து இலங்கை திரும்பும் வழியில் இங்கு வந்த விபீஷணன், சோமலட்சுமி தீர்த்தத்தில் நீராடி, திருவாழ்மார்பனை வழிபட்டாராம் . அத்துடன்  ராம பட்டாபிஷேகத்தை மீண்டும் காணும் பாக்கியத்தைத் தருமாறும் பெருமாளிடம் வேண்டினாராம் .அதை ஏற்று விபீஷணருக்குராமனாக நின்ற கோலத்தில் காட்சி தந்தாராம் திருவாழ்மார்பன்! எனவே, இங்கு  ராமரின் எதிரில் அனுமனுக்குப் பதிலாக கருடாழ்வார் சந்நிதி கொண்டுள்ளார். தவிர, விஷ்வக்சேனர் மற்றும் நம்மாழ்வார் ஆகியோர் சந்நிதிகளும் உள்ளன .அவைகளை போட்டோ எடுக்க அனுமதியில்லை

திருமணத்தடை நீங்கவும், கல்வி, கேள்விகளிலும்,  செல்வச்செழிப்புடனும்     இருக்க  இங்குள்ள இறைவனிடம் பிரார்த்தனை செய்றாங்க.



வாங்க! வெளிப்பிரகாரத்தை சுத்திக்கிட்டே இந்த கோவிலோட வரலாறு பத்தி பேசலாம். 

இந்தத் தலத்தில் எம்பெருமானின் மார்பிலேயே உறைவதால், தாயார் கமலவல்லி நாச்சியாருக்குத் தனிச் சந்நிதி கிடையாது.


 இங்குள்ள மற்றொரு சிறப்பம்சம் திருவள்ளுவர் சந்நிதி. உள்ளே மனைவி வாசுகி மற்றும் சீடர்கள் புடை சூழக் காட்சித் தருகிறார் திருவள்ளுவர். திருக்குறள் இயற்ற, அப்பனாக இருந்து வள்ளுவருக்கு அருளியவர் ஆதலால் திருவாழ்மார்பனுக்கு, 'திருக்குறளப்பன்' என்ற பெயரும் உண்டு.அவை  உள்பிரகாரத்தில் அமைந்துள்ளதால் புகைப்படம் எடுக்க முடியலை 


திருப்பதி பெருமாளுக்கு நேர்த்திக்கடன் செய்ய வேண்டிக் கொண்டவர்கள் , திருப்பதிக்கு போக முடியாத சூழலில் அதை இத்தல பெருமாளுக்கு  செய்யலாமாம். அதற்குதான் இதற்கு ”திருப்பதியினுடைய சாரம் என்பதால் ”திருப்பதிசாரம்”ன்னு பேர் வந்துச்சாம்.
  
இரண்யகசிபுவை கொன்ற நரசிம்மரின் உக்கிரம் தணிந்த பாடில்லை. தன் நாயகரை நெருங்க இயலாமல் தவித்த மகாலட்சுமி, தவத்தில் ஆழ்ந்தாள். அப்போதும்  நரசிம்மரின் உக்கிரம் குறைய வில்லை. தேவர்களும் செய்வதறியாது திகைத்தனர். அப்போது சிறுவன் பிரகலாதன் பயமின்றி பக்தி பரவசத்துடன் பெருமாளின் கீர்த்தனைகளைப் பாட... சினம் தணிந்தார்  நரசிம்மர். பிறகு, திருமகள் தவம் புரியும் இந்தத் தலம் வந்து, 'திரு'வாகிய அவளை தன் மார்பில் ஏற்று, திருவாழ்மார்பனாக அருள் புரிந்தார். எனவே, இத் தலம் ”திருப்பதிசாரம்” ஆனதாகவும் ஒரு வரலாறு உண்டாம்.


நாம யாரு ராஜியாச்சே! கேள்வி கேட்குறதுல மட்டும் புலியாச்சே! ..அப்ப ”திருவெண்பரிசாரம்”ன்னு ஏன் பேர் வந்துச்சுன்னு கேள்வி கேட்டதுக்கு, ”பரி' என்றால் குதிரை. ஒரு முறை குலசேகர மன்னனின் பட்டத்துக் குதிரை (வெண் குதிரை) காணாமல் போய் விட. அதை, இந்தத் தலத்தின் சோமலட்சுமி தீர்த்தக் கரையில் கண்டடைந்தாராம். எனவே, இந்தத் தலத்துக்கு திருவெண்பரிசாரம் என்று பெயர் (திருவாழ்மார்பனை தரிசித்த மன்னர் குலசேகரன், திருக்குளப் படித்துறை உட்பட கோயிலுக்கும் பல்வேறு திருப்பணி செய்துள்ளாராம்). வெண் குதிரையுடன் பகவான் எடுக்கப் போகும் கல்கி அவதாரத்தின் சாரமாக திகழும் தலம் ஆதலால், 'திருவெண்பரிசாரம்' எனப் பெயர் வந்ததாகவும் அங்கிருந்த பெரியவர் விளக்கம் கூறினார். 


ஆனந்த மண்டபத்தை அடுத்து மூலவர் சன்னதி.  மூலவரான ”திருவாழ்மார்பர்ன்” நான்கு கைகளுடனும்சங்கு சக்கரமேந்தி அபய ஹஸ்தத்துடன்அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். ஒன்பது அடி உயரமுள்ள இவ்விக்ரகம் "கடு சர்க்கரை யோகம்என்ற கூட்டினால் உருவாக்கப்பட்டதாம் (கல்லும்சுண்ணாம்பும் சேர்ந்து செய்யப்பட்ட உருவத்தின் மேல்கடுகும் சர்க்கரையும் சேர்ந்த ஒருவித பசையினால் பூசப்படும் முறைக்கு கடுசர்க்கரை யோகம் என்று சொல் வார்களாம்) அதனால் மூலவருக்கு  அபிஷேகமோ, அரளிப்பூ மாலை சார்த்துவதோ கிடையாதாம் புனுகு மட்டுமே சார்த்தப்படுகிறதாம். உற்சவருக்கே அபிஷேகம் நடைபெறுமாம் இந்தத் தலத்தில் எம்பெருமானின் மார்பிலேயே உறைவதால், தாயார் கமலவல்லி நாச்சியாருக்குத் தனிச் சந்நிதி கிடையாது


கோவிலின் வெளிபிரகரத்தை வலம்வந்து,  மூலவருடைய கோபுர தரிசனம் முடிந்து, ஆனந்த மண்டபத்தின் கலை வேலைப்பாடுகளையும், தூண்களில் உள்ள சித்திரங்களையும், அனுமன் சிலையையும், வணங்கி சாரி, சாரி ஃபோட்டோ எடுத்துட்டு கோவில் பூஜை பொருட்கள் விற்பனை நிலத்தில் தேவையானவறறை வாங்கி விட்டு கோவிலின் வெளிப்பக்கம் வந்தோம்.


இந்த நரசிம்ம மூர்த்தியை வழிபட்டு,அருள் பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர் ”திருவாழ்மார்பன்”. இத்தல மூலவர் நரசிம்மரின் பெயரையே தனதாக்கிக் கொண்டவர். இவரின் மகள், உடையநங்கைக்கும்,  திருக்குறுங்குடியை சேர்ந்த ”காரி” என்பவருக்கும் திருமணம் நடந்தேறியது. இல்லறம் இனிதே நடந்தது. ஆனால், குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. இருவரும் குழந்தை வரம் வேண்டி இந்தத் தலத்தில் 41 நாட்கள் விரதம் அனுஷ்டித்தனர். இதன் பலனாக அவர்கள் பெற்றெடுத்த குழந்தையே நம்மாழ்வார்.தமிழர் முறைப்படி மகப்பேறுக்காக தாய் வீடான திருவண்பரிசாரத்துக்கு அனுப்பப்பட்டாள். வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பவுர்ணமி திதியில் நம்மாழ்வார் இவ்வுலகிலே அவதரித்தாராம திருப்பதிசாரம் நம்மாழ்வாரின் அவதார தலமாகவும், ஆழ்வார் திருநகரி அவர் ஞானம் பெற்ற ஸ்தலமாகவும் சொல்லபடுகின்றன 


( இந்த நுழை வாயில் வழியாகத்தான் ஜடாயு புரீஸ்வரர் திருகோவிலுக்கு போகனும்)


வடக்கு ரதவீதியில் இவர்கள் வசித்த வீட்டை, 'நம்மாழ்வார் தாயகம்' என்ற பெயரில் இன்றும் இருக்கிறது . விஷ்ணு பக்தரான திருவாழ்மார்பன், இங்குள்ள மூலவருடன் ஐக்கியமானதாகச் செவி வழிச் செய்தி உண்டு! இவரின் சகோதரியான திருப்பதிநங்கைக்கும் இந்த ஆலயத்தின் அருகே தனிக் கோயில் உண்டு.

கோவிலின் எதிரே கிழக்கு பாகத்தில் சோமலட்சுமி தீர்த்தக் குளம் கம்பீரமாக அமைந்துள்ளது.


தீர்த்தகுளம் பார்க்க அழகாக படிக்கட்டுகளுடன் காணப்படுது

தூரத்தில் இருந்து பார்க்க மிகவும் அழகான காட்சி அமைப்புடன் நீர் நிறைந்து காணப்படுது

சாமி பேரால ஏன் அடிச்சிக்குறீங்கன்னு அந்த கடவுளே சொல்லுற மாதிரி, சைவ- வைணவ ஒற்றுமைக்குஎடுத்துக்காட்டாக இந்தக் கோவில் விளங்குது. இதன் மேற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில், பழையாற்றங்கரையில் உள்ள தலம் ஜடாயுபுரம்.  ராவணனால் வெட்டப்பட்ட ஜடாயுவின் இறக்கை விழுந்த பூமி.

 இங்கு, ஜடாயுக்கு மோட்சம் அளித்த  ராமபிரான், ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டாராம். இந்த சிவலிங்கத் திருமேனிக்கு 'ராமலிங்க ஸ்வாமி' என்று பெயர். வருடந்தோறும் சித்திரை இக்கோயிலில் திருவிழா நடைபெறுமாம்.இதன் 5-ஆம் நாளன்று நடைபெறும் வெள்ளி கருட சேவை மற்றும் 'அத்தான்- மைத்துனன் (சிவன்- திருமால்) சந்திப்பு வைபவம் சிறப்பாக நடை பெறுமாம். 

இதுக்கு மேல இங்கயே நின்னுட்டு இருந்தா பதிவு இன்னும் நீளமாகும். அதனால, நாம பக்கத்தில் இருக்கும் 'ராமலிங்க ஸ்வாமி' கோவிலுக்கு போகலாம். வாங்க!!  அங்க போய் சேர அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வரை நாம நடக்கனும், அதுக்கு தேவையானதையெல்லாம் எடுத்துக்கிட்டு, சுவாரசியமா மத்த கதையெல்லாம் பேசிக்கிட்டே போகலாம் வாங்க!!!

24 comments:

  1. பதிவர் சந்திப்பு முடிந்த கையோட கோவில் உலாவா.

    நல்ல தீர்மானம்தான்.எங்களுக்கும் ஸ்வாமி தரிசனம் கிடைக்கிறதே.நல்லதொரு பகிர்வு ராஜி.

    ReplyDelete
    Replies
    1. இதுப்போன்ற ஆன்மீக பதிவுகள் முன்னமயே போட்டிருக்கேனே! நீங்க பார்க்கலியாம்மா!!

      Delete
    2. இல்லையே அம்மா. இனி வருவேன்.

      Delete
  2. சிறப்பு... படங்கள் மிகவும் அருமை... வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அண்ணா!

      Delete
  3. திருவாழ்மார்பன் திருக்கோவில் தரிசனம் அருமை.
    சிறுவயதில் நாகர்கோவிலில் இருக்கும் போது பார்த்தது.

    ReplyDelete
    Replies
    1. சிறு வயது நினைவு வந்துட்டுதாக்கும்!!

      Delete
  4. சிறப்பாக விளக்கி உள்ளீர்கள் தொடரட்டும் உங்கள் புண்ணிய உலா .

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ராஜன்

      Delete
  5. வெள்ளிதோறும் உங்கள் பதிவுகள் தெரியாத கோவில்களை பற்றி தெரிந்து கொள்ளவும் அந்த கோவில்களுக்கு நேரே சென்று சேவிச்சுகிட்டதை போல் உங்கள் போடோஸ் தெளிவாகவும் அழகாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் தோழி

    ReplyDelete
  6. //இந்தத் தலத்தில் எம்பெருமானின் மார்பிலேயே உறைவதால், தாயார் கமலவல்லி நாச்சியாருக்குத் தனிச் சந்நிதி கிடையாது.//
    மிக அரிது என எண்ணுகிறேன்!அருமையான பகிர்வு

    ReplyDelete
  7. நம்மாழ்வார் சுவாமியின் பகதன் என்ற முறையில் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  8. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க ராஜி.

    நாகர்கோவிலில் இருந்து மூணே கிலோமீட்டரா? அடடா..... தெரியாமப்போச்சே..... 2009 இல் அந்தப்பக்கங்களில் சுத்திக்கிட்டு இருந்தேனே.........

    ReplyDelete
  9. ஆலய தரிசனம் அற்புதம் அழகான படங்களுடன் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  10. I have not heard about "Thirukuralappan" . This is a great News. Appreciation for this

    ReplyDelete
  11. சிறப்பான கோவில் தரிசனம். அந்தப்பக்கம் போகும் போது செல்ல வேண்டும். தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  12. இது எங்க ஊர் பக்கம் உள்ள கோவில். ஒருமுறை இங்கு சென்றிருக்கிறேன். விளக்கங்கள் நல்லாருக்கு.

    ReplyDelete
  13. சில இடங்களில் படமெடுக்க அனுமதிஇல்லை என்றாலும் கூட குறையாகத் தெரியவில்லை. மற்ற இடங்களில் எடுத்த படங்கள் நன்றாக உள்ளன.

    ReplyDelete
  14. எங்க பக்கத்துக்கோயிலைப் பத்தி அருமையா எழுதியிருக்கீங்க. நன்றீஸ்..

    ReplyDelete
  15. அருமையான பதிவு. படங்களுடன் விளக்கங்கள் அற்புதம்.
    நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. மிக சிறப்பு. நிழற்படங்கள் அனைத்தும் அந்த அந்த இடத்திற்கே அழைத்து சென்றது. விவரித்த விதமும் அருமை.

    ReplyDelete
  17. நம்மாழ்வார் அவதார ஸ்தலம் என அறிந்து பக்தியுடன் பணிகிறேன்

    ReplyDelete
  18. நம்மாழ்வார் அவதார ஸ்தலம் என அறிந்து பக்தியுடன் பணிகிறேன்

    ReplyDelete