திங்கள், செப்டம்பர் 09, 2013

யானை எலியின் மீது ஏறியது ஏன்?!


பிள்ளையார் சாமி நம்ம அப்பாக்கள் போல ரொம்ப சிம்பிள். அவர் உருவம் செய்ய தங்கம், வெள்ளின்னு மெனக்கெடாம, கொஞ்சூண்டு மஞ்சள் இல்லாட்டி பசுஞ்சாணத்துல ஒரு பிடி பிடிச்சு வச்சா பிள்ளையார் ரெடி. கொஞ்சம் மெனக்கெட்டு ஆத்தோரம் போய் களி மண்ணு (அங்க ஏன் போகனும்?! உன் மண்டைக்குள்ளயே நிறைய இருக்கேன்னு!! யாரோ சொல்லுறவங்களுக்கு பதில்..., சாரி, அந்த களி மண்ணு அதுக்கும் உதவாது!!)

அலங்காரம் பண்ண, காடு மலை ஏறி பூக்கள் கொண்டு வர வேணம். வீட்டுக்கு பின்னாடி இருக்கும் அருகம்புல்லும், எருக்கம்பூ மாலையும் போதும். அதேப்போல! அவருக்கு படைக்க ரொம்ப க்ஷ்டமான அதிரஷம்,  முறுக்கு, ஜாங்கிரின்னுலாம் வேர்த்து விறுவிறுத்து செய்ய வேண்டியதில்லை. ஈசியான சுண்டலும், கொழுக்கட்டையும், பொரி, அவல் போதும்.

அவருக்கு கோயில் கட்ட பளிங்கு கல் கொண்டு கோவில இழைக்க வேணாம், ஆத்தங்கரை, அரசமர நிழல், தெருமுக்குன்னு நம்ம வீட்டு குழந்தை எங்கெல்லாம் ஓடி ஆடுமோ!! அங்கெல்லாம் உக்காந்து அருள் புரிவார். 


வேழ முகத்து விநாயகனைத்
 தொழு, வாழ்வு மிகுந்து வரும்- 
ன்னு ஔவை பாட்டி பாடி இருக்காங்க.  விநாயக பெருமான் வித்தியாசமான கடவுள், இந்து மதத்தில் எத்தனையோ கடவுள்கள் இருக்கு, ஆனாலும், விநாயகர் மிகவும் வித்தியாசமான கடவுள். இந்து மதத்தில் எத்தனையோ கடவுள்கள் இருந்தாலும் இவரோட எளிமைக்காகவே அந்த எளிமைக்காகதான்  உலகமெல்லாம் அவரை முதன்மை கடவுளா கும்பிடுது!!!

இவரை வழிப்பட 32 வகை விநாயக மூர்த்தங்களை நம்ம முன்னோர்கள் ஏற்படுத்தி இருந்தாலும், நம்ம அப்பா எப்படி பல ரூபமெடுப்பாரோ!! அதுப்போல, செல்போன் பேசிக்கொண்டு, கிரிக்கெட் விளையாடிக்கிட்டு, லேப்டாப் வச்சுக்கிட்டுன்னு விதம் விதமா பிள்ளையார் சிலைகள் மார்க்கெட்டுக்கு வந்திருக்கு!!

ஒவ்வொரு வருடமும் ஆவணி மாத சுக்லபஷ்ச சதுர்த்தியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. 

யானை முகம்: 

விநாயகருக்கு யானை முகம் வந்ததுக்கு பல காரணம் சொல்றாங்க. அதுல ஒண்ணு, ”கஜமுகாசுரன்”ன்ற அசுரன், பிரம்மாவிடம் ஆண், பெண் சம்பந்தமில்லாமல் பிறந்த ஒருவனாலேயே தனக்கு அழிவு வரனும்ன்னு வரம் கேட்டான். ஆண், பெண் சம்பந்தமின்றி, உலகில், குழந்தை பிறப்பு என்பது சாத்தியம் இல்லை ன்னு அவன் போட்ட கணக்கு.  அவன் நினைச்ச மாதிரியே அப்படி யாருமே உலகில் பிறக்கலை. எனவே, அவன் சர்வலோகங்களையும் வளைத்து, தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தான்.


தேவர்களை வதைத்தான். அவர்கள், துன்பம் தாளாமல் தவித்தனர். அவர்களது துன்பம் தீர்க்க லோகமாதாவான பார்வதிதேவி முடிவு செய்தாள். தன் மேனியில்  பூசியிருந்த மஞ்சளை(அழுக்குன்னும் சிலர் சொல்றாங்க. நல்லதையே எடுத்துப்போமே)  வழித்தெடுத்து உருண்டையாக்கினாள். உறுப்புகளையும், உயிரையும் கொடுத்தாள். அந்தக் குழந்தைக்கு, பிள்ளையார் என பெயர்  சூட்டினாள். அந்தப்பிள்ளை தன் அன்னையின் அந்தப்புர காவலனாக இருந்தான். சிவபெருமான் அங்கு வந்தார். அவர் மனதில் தேவர்கள் படும் துன்பத்தை  நினைத்து கருணை உண்டாயிற்று. இதற்காக ஒரு திருவிளையாடல் செய்தார்.

அம்மையார் குளிக்கும்போது, உள்ளே போக முயன்றார். அப்போது காவலுக்கு  இருந்த பிள்ளையார் தடுக்க,  என் அந்தப்புரத்தில் இருக்கும் நீ யாரடா? எனக் கேட்டு, பிள்ளையாரின் கழுத்தை  வெட்டிவிட்டார். தன் பிள்ளை மாண்டு கிடப்பதை பார்த்த பார்வதி தேவி, தன் மகனை மீண்டும் உயிர்ப்பிக்க சிவனை வேண்டி நின்றாள். “வடக்கு நோக்கி யார் படுத்திருந்தாலும் அவர் தலையை கொண்டு வந்தால், மீண்டும் உன் பிள்ளையை உயிர்ப்பிக்குறேன்னு வாக்கு கொடுத்தாராம் சிவன்.

அதன்படி, உலகை சுற்றி வந்தாள் பார்வதி தேவி, வடக்கு நோக்கி தலை வைத்து படுப்பது தனக்கும், தான் வாழும் உலகத்துக்கும் ஆகாது என்பதை  உணர்ந்த எல்லா ஜீவன்களும் அப்படி படுக்கலை. என்னை போல சொல்பேச்சு கேளாத ஒரே ஒரு யானை மட்டுமே வடக்கு நோக்கி படுத்திருந்தது. அதன் தலையை கொய்து கொண்டு வந்து சிவப்பெருமானிடம் தர, சிவன் மீண்டும் பிள்ளையாரை உயிர்பித்ததா ஒரு வரலாறு இருக்கு.

மனிதனின் வாயும், உதடும் தெளிவாக வெளியே  தெரிகிறது. மற்ற மிருகங்களுக்கும் கூட அப்படித்தான். ஆனால், யானையின் வாயை தும்பிக்கை மூடிக் கொண்டிருக்கிறது; அது வெளியே தெரியாது.  தேவையின்றி பேசக்கூடாது என்பதும், தேவையற்ற பேச்சு பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதும்உலகத்துக்கு உணர்த்தவே இப்படி ஒரு திருவிளையாடல்ன்னு அன்னையை சமாதானம் செய்தார் சிவன். 

யானை எலியின் மீது ஏறியது ஏன்?!

தன் பிறப்பின் நோக்கம் அறிந்து கஜமுகன் மீது படை எடுத்து சென்று அவன் மீது போர் தொடுத்தார். விநாயகரிடமிருந்து தப்பிக்க எலி உரு கொண்டு தப்பிக்க பார்த்தான். அவனை வதம் செய்து. அவனின் வேஎண்டுக்கோளுக்கிணங்கி,  தன் வாகனமாக்கி கொண்டார்.


அருகம்புல் மாலை:

அனலாசுரன் என்ற அசுரன் தேவர்கள் மனிதர்களை துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பபர்களை அனலாய் மாறி தகித்து விடுவான், அவனை பிரம்மா, இந்திரனால் கூட அடக்க முடியவில்லை.  சிவனிடம் சென்று முறையிட்டனர். சிவன், பிள்ளையாருக்கு கட்டளை இட்டார், பிள்ளையார் அசுரனிடம் மோதினார். ஆனால், அவனை வெற்றி கொள்ள முடியலை,

பிள்ளையாருக்கு கோவம் வந்து அனலாசுரனை விழுங்கி விட்டார். வயிற்றுக்குள் போன அனலாசுரன் அனலாய் தகிக்க தொடங்கினான், குடம் குடமாக கங்கை நீர் கொண்டு வந்து பிள்ளையார் மீது ஊற்றியும் பலனில்லை. இந்நிலையில் ஒரு முனிவர் ஒரு அருகம்புல்லை கொண்டு வந்து பிள்ளையார் தலையில் வைக்க அனல் மறைந்து அனலாசுரனும் ஜீரணமாகி விட்டான், தன்னை அருகம்புல் கொண்டு அர்சிக்க வேண்டுமென ஆணையிட்டார்,

எங்க வீட்டு பிள்ளையார்:


எங்க வீட்டுல சதுர்த்தி அன்னிக்கு காலைல எழுந்து வீட்டை மொழுகி செம்மண் இட்டு மணை இல்லாட்டி துலக்கின தாம்பாளத்தட்டுல விநாய்கரை வாங்கி வருவாங்க. சிலர் வீட்டில் அச்சு பிள்ளையார், சிலர் வீட்டில் கைப்பிடி பிள்ளையார். பிள்ளையார் வாங்கும்போது ஒரு கொஞ்சம் களிமண் தருவாங்க கடையில். அதை கொண்டு, நான் பிள்ளையார் செய்வேன். பிள்ளையார்தான் நம்ம சாமியாச்சே! அழகா, அம்சமா சிலையாகிடுவார். இந்த எலி மட்டும் எனக்கு செய்யவே வரது, எல்லாரும் பிள்ளையார் பிடிக்க குரங்காகிட்டுதுன்னு சொல்வாங்க, நான் எலி பிடிச்சா டைனோசர் மாதிரி பயமுறுத்தும். ஒரு வழியா சிலைகள் ரெடியாகிடும்.

அப்பா. காகித குடை வாங்கி வருவாங்க, கல்யாணம் ஆகும் முன் நமக்கு சமையல் பொறுப்பில்லாததால, நானே எருக்கம்பூ. அருகம்பூ கிள்ளி வந்து மாலை கட்டுவேன். அப்பா பிள்ளையார் வாங்கி வந்ததும் சந்தனம், குங்குமமிட்டு வீட்டில் இருக்கும் நகையெல்லாம் எடுத்து மாட்டி, நெல், பூ, பாசி மணி வச்சு அலங்காரம் பண்ணுவோம்.

பெண்ணை பெற்றதால எங்கப்பா கண்ணுக்கு தெரியாம சேர்க்கனும்ன்னு ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தி போதும் தங்க கால்காசு வாங்கி வந்து, பிள்ளையார் தொப்பையில் வைப்பார். அம்மா, கொழுக்கட்டை, எள்ளுருண்டை, சுண்டல்லாம் செய்வாங்க.

சாமிக்கு படைச்சுட்டு அக்கம் பக்கம்லாம் கொடுத்துட்டு ஹாயா டிவி பார்ப்போம். மூணு இல்ல நாலு நாட்கள் கழிச்சு செவ்வாய், வெள்ளி இல்லாத நாட்களில் பிள்ளையாருக்கு போட்ட நகை, கால்காசுலாம் எடுத்துட்டு அவர் தொப்பையில ஒரு ரூபாய் வச்சு கற்பூரம் ஏத்தி கிணத்துல கொண்டு போய் கரைச்சுடுவோம்.

இப்போலாம், வீதில ஊர்வலம் வந்து வாங்கி போய் கரைக்குறாங்க. அவங்க அப்படி கரைக்கும்போது சிலைஅயை காலால் மிதிப்பதும், உடைப்பதுமாய் இருப்பதை பார்த்த என் அம்மா, வீட்டுலயே பக்கெட் தண்ணில பிள்ளையாரை ஊற வச்சு, அந்த தண்ணியை மரத்துக்கோ இல்ல செடிக்கோ ஊத்திடுவாங்க.

இதாங்க, எங்க வீட்டு பிள்ளையார் சதுர்த்தி! சரிங்க எனக்கு நேரமாகிட்டுது,. நான் போய் சுண்டல், கொழுக்கட்டைலாம் செய்யனும். வர்ர்ர்ர்ர்ர்ட்டா!

ல்லாருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!

 இறைவன் அருளால் எல்லா வளமும் எல்லோருக்கும் கிடைக்கனும்ன்னு   உங்களுக்கும் சேர்த்து வேண்டிக்குறேனுங்க.

23 கருத்துகள்:

 1. முப்பத்தியிரண்டு விநாயக மூர்த்தங்கள்=

  உச்சிட்ட கணபதி
  உத்தண்ட கணபதி
  ஊர்த்துவ கணபதி
  ஏகதந்த கணபதி
  ஏகாட்சர கணபதி
  ஏரம்ப கணபதி
  சக்தி கணபதி
  சங்கடஹர கணபதி
  சிங்க கணபதி
  சித்தி கணபதி
  சிருஷ்டி கணபதி
  தருண கணபதி
  திரயாக்ஷர கணபதி
  துண்டி கணபதி
  துர்க்கா கணபதி
  துவிமுக கணபதி
  துவிஜ கணபதி
  நிருத்த கணபதி
  பக்தி கணபதி
  பால கணபதி
  மஹா கணபதி
  மும்முக கணபதி
  யோக கணபதி
  ரணமோசன கணபதி
  லட்சுமி கணபதி
  வர கணபதி
  விக்ன கணபதி
  விஜய கணபதி
  வீர கணபதி
  ஹரித்திரா கணபதி
  க்ஷிப்ர கணபதி
  க்ஷிப்ரபிரசாத கணபதி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னிக்கு காலைலதான் உங்களை நினைச்சேன். யாருக்கிட்ட கேக்குறதுன்னு ஒரு குழப்பம். திரும்பி வந்ததுக்கு நன்றி!! என்ன ஆச்சுன்னு போஸ்ட் போடவும் ப்ளீஸ்!

   நீக்கு
  2. நான் போட்ட பதிவை ஒழுங்காக படித்து இருந்தால் குழப்பம் வந்திருக்காதே . உங்களை எல்லாம் ஊர் வந்து பார்க்காம என் உயிர் பிரியாதுங்க..

   நீக்கு
 2. ஒவ்வொரு பிள்ளையாரும் அழகு.... படத்தில இருக்கிற கொழுக்கட்டை எந்த வருஷம் செய்தது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது போன வருசம் செஞ்சது. நான் இன்னிக்கு புதுசா செஞ்சு வைக்குறேன்.. சாப்பிட்டு மயக்கமாகவும்!

   நீக்கு
 3. அருகம்புல் மாலை பற்றிய விளக்கம் நன்று...

  பதிலளிநீக்கு
 4. கொழுக்கட்டையை எனக்காக எடுத்து வைக்கவும்.எலி தின்றால் நான் பொறுப்பல்ல

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பா எடுத்து வைக்குறேன் எலிக்கிட்ட சண்டை போட்டு!!

   நீக்கு
 5. நல்ல திருவிளையாடல்...

  விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 6. பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 7. தங்கள் பதிவு மிக்க சிறப்புடைத்து.

  விநாயகனை வணங்க வினைகள் யாவும் தீரும் என்பது பெரியோர் வாக்கு.

  விநாயகன் உருவத்தை களிமண்ணால் நாமே செய்வது தாம் சிறப்பு.
  எங்கள் கிராமத்தில் விநாயக உருவம் எல்லோருமே செய்வார்கள்.
  இந்த பழக்கம் இப்போதெல்லாம் இல்லை.

  நீங்களே விநாயக உருவச் சிலையை செய்கிறீர்கள் என்று தெரிந்து உங்கள் சிரத்தை புரிந்து கொள்ள முடிகிறது.

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் விநாயகன் என்றென்றும் எல்லாவிதமான பாக்யங்களையும் வழங்குவார் என்பது திண்ணம்.

  ஆசிகளுடன்.
  சுப்பு தாத்தா.
  www.vazhvuneri.blogspot.com

  பதிலளிநீக்கு
 8. Pala vivarangal sekarithu indha padhivai. Pottirukkum ungalukku paaraattukkal. Vinaayagar chadhurthy vaazhthukkal

  பதிலளிநீக்கு
 9. சிரத்தையா செஞ்சு பூஜை முடிச்சு பதிவும் போட்டுட்டீங்க அழகா.
  படிக்க சுவராஸ்யமாக இருந்தது. எத்தனை முறை ,புராண
  வரலாற்றை படித்தாலும் திகட்ட மாட்டேன் என்கிறது.

  பதிலளிநீக்கு
 10. தங்கள் பதிவு எளிமையான கொழுக் கட்டை போல மிகவும் சுவையாக உள்ளது! சுவை தேன்!

  பதிலளிநீக்கு
 11. ராஜி, ராஜேஸ்வரியாக மாறிவிட்டார்.
  விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 12. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அக்கா

  பதிலளிநீக்கு
 13. ஆனைமுகத்தானே சரணம். பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 14. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 15. பொய் சொல்லக் கூடாது நான் எப்போது எலிக்கு மேல ஏறினான் ?...
  ஒ .....நீங்க mr கணபதியைச் சொன்னீர்களோ :)))))) .அது சரி உங்களுக்கு எப்படித் தெரியும் மோதகம் சாப்பிட்டால் எனக்கு பத்து மோதகம் சாப்பிடத்தான் பிடிக்குமென்று ?...அச்சா அக்கா என் பாசமான அக்கா (ரொம்பவே ஐசு வச்சிற்றமோ :)) )அந்தத் தட்டை அப்படியே இங்க கொடுங்கள் பார்க்கலாம் .பகிர்வினைப் போல மோதகமும் சுவை தானப்பா ..ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ........வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் mr கணபதி எல்லா நலனும் வளமும் அருளட்டும் .

  பதிலளிநீக்கு
 16. சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும்
  விநாயகர் குறித்த கதைகள் சொல்லிச் சென்றது
  அருமை தெரியாத இரண்டு .கதைகள்
  தங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்
  இனிய சதுர்த்தி தின நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 17. \\இப்போலாம், வீதில ஊர்வலம் வந்து வாங்கி போய் கரைக்குறாங்க. அவங்க அப்படி கரைக்கும்போது சிலைஅயை காலால் மிதிப்பதும், உடைப்பதுமாய் \\

  உண்மைதான், நானும் பார்த்து வேதனை பட்டிருக்கிறேன். உங்கள் அம்மா செய்தது நல்ல ஐடியா !!

  பதிலளிநீக்கு