Wednesday, September 25, 2013

டி லனாய் கோட்டை, உதயகிரி - மௌனசாட்சிகள்

மௌனசாட்சிகளா நின்னு பல கதைகளை சொன்ன பத்மனாபபுரம் அரண்மனை பத்தி போன வாரம் பார்த்தோம். பார்க்காதவங்க இங்க போய் பார்த்த்ட்டு சட்டு புட்டுன்னு சீக்கிரம் வாங்க. இன்னிக்கு வேற ஒரு இடத்துக்கு போலாம். 


இன்னிக்கு, உங்களைலாம் ”திருவிதாங்கூர்”  மன்னர் ”மார்தாண்டவர்மாவி”ற்கு 37 ஆண்டுகள் விசுவாசமாகவும்,  நம்பிக்கை நண்பராகவும் இருந்த ”டி லனாய்”ன்ற டச்சு தளபதி இருந்த ஒரு கோட்டைக்குகூட்டி போகப்போறேன். எல்லாரும் ரெடியா?! போலாமா!? நாம இப்ப  சரித்திர காலத்திற்கு  போக  போறோம்.

ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஸ்டாப்! ஸ்டாப்! நம்ம இடம் வந்தாச்சு!! ”நாகர்கோவில்”ல இருந்து ”திருவனந்தபுரம்” செல்லும் வழியில இருக்கிற ”புலியூர்குறிச்சி” ன்ற இடம்தான் இன்னிக்கு நம்மோட டூரிஸ்ட் பாய்ண்ட்.
    

இதுதான் உதயகிரி கோட்டை.  நாம,  இப்ப கருங்கல் சுவர்களை கொண்ட பிரம்மாண்டம்மான கோட்டையோட வெளிப்பக்கம் நின்னுட்டிருக்கோம். இது கோட்டைக்கு செல்லும் வழி.  சீக்கிரம் வாங்க. பிரபல பதிவர்கள்லாம் வர்றாங்களேன்னு நம்மை வரவேற்க மழை ரெடியா இருக்கு. அதோட அன்பு மழையில நனைஞ்சு திக்கு முக்காடி போறதுக்குள்ள கோட்டைக்குள்ள போய்டலாம்!!

ஸ்ஸ் அப்பாடா! ஒரு வழியா மழையோட அன்புல முழுசா நனையாம கோட்டைக்குள்ள வந்துட்டோம். இங்க செண்பகவள்ளி,  சுடலைமாட சுவாமி , குலசேகர தம்புரான் கோவில்கள் இருக்கு.  எல்லோரும் நல்லா இருக்கனும்ன்னு சாமியை கும்பிட்டுக்கோங்க.

நம்மோட இந்த பயணம் நல்ல படியா அமைய, தொல்பொருள் இலாகாவும் , வனத்துறையும் சேர்ந்தே இந்த கோட்டையை பராமரிக்கிறாங்க.  இங்க ஒரு மூலிகை பண்ணையும், ஒரு அக்வாரியமும் இருக்கு.  இந்த கோட்டை வேணாடு அரசரான வீரரவிவர்மா (கி பி 1595 கி பி 1607)காலத்தில் மண் கோட்டையாக கட்டப்பட்டட்டு, ”மார்த்தாண்டவர்மா”(கி பி 1729 கி பி 1758) காலத்தில கற்கோட்டையாக மாற்றியதாகவும் சொல்றாங்க. 

பத்பநாபபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த திருவிதாங்கூர் மன்னர்களின் முக்கியமான படைதளங்களில் இதுவும் ஒன்று.  இந்த கோட்டை16 அடி உயர கருங்கல் சுவர் கொண்டது. கோட்டை 90 ஏக்கர் பரபளவில் 200 அடி உயரம் உள்ள ஒரு குன்றைசுற்றி கட்டப்பட்டுடிருக்கு. 

இனி, இந்த கோட்டைக்கு ஏன் டி லனாய் கோட்டைன்னு அழைக்கபடுதுன்னு தெரிஞ்சுக்கலாம். வாங்க...
     
மன்னர் முன்பு டச்சு தளபதி சரணடைவது குறித்த ஓவியம்  

1741 ம் வருஷம் குமரி மாவட்டம்.  அப்போது இருந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் மார்த்தாண்டவர்மா ஆட்சி செய்து கொண்டு இருந்த காலத்தில டச்சு கிழக்கிந்திய கம்பெனி "குளச்சல் கோட்டையை" அவர்கள் வசம் வைத்து அங்க ஏராளமான வீரர்களுடன் வைத்து ஆட்சி செஞ்சிருக்காங்க.  

அப்ப மன்னருக்கும், டச்சு காரர்களுக்கும் பகை இருந்த சமயம். சில தளபதிகளின் மூலம் டச்சு படையை தோற்கடித்து, டச்சு வீரர்களை சிறை பிடித்து,  நாம நிற்கிற இந்த உதயகிரி கோட்டையில் காவலில் வெசிருக்காங்க.  அவங்கள்ல முக்கியமானவர்தான் டச்சு தளபதி யுஸ்டேஷியஸ் -டி- லனாய் அவரது மனைவி மர்கெரெட்டா மகன் ஜான் டி லனாய் அவரது இராணுவத்தளபதி பீட்டர் ப்ளோரிக்.

இவர்களை மார்த்தாண்டவர்மாவின் தளபதி வேலுத்தம்பி கைது செய்திருக்கிறார்.  அப்ப நடந்த பேச்சு வார்த்தையில் ஐந்து வருஷம் கழித்து  டச்சு வீரர்களை விடுதலை செய்ய மார்த்தாண்டவர்மா ஒப்புகொண்டாராம் . அப்ப டி லனாய்மார்த்தாண்டவர்மாவின் படையில் சேர விருப்பம் தெரிவித்திருக்கிறார்.  அந்த நேரத்துல அவருக்கு வயது 26 தான் ஆச்சு.

 போர் தளவாடங்கள் செய்வதிலும், பீரங்கி குண்டுகள் செய்வதிலும், போர் பயிற்சி அளிபதிலும் சிறந்து விளயங்கியதுனால மன்னர் மார்த்தாண்டவர்மா அவரை படைத்தளபதியாக நியமிச்சிருக்கிறார்.  அதன் பிறகு தளபதி டி லனாய் மன்னர் மார்த்தாண்டவர்மாவிற்கு நம்பிக்கையான படைதளபதிய்யகவும், நண்பராகவும் 37 ஆண்டு காலம் இருந்து தன்னுடைய 62 வயதில் மரணமடைந்திருக்கிறார்.

 திருவிதாங்கூர் அரச வீரர்களுக்கு தற்கால போர் தந்திரங்களை, துப்பாக்கி போன்ற ஆயுதங்களை கையாளுவதற்கும் இவர்தான் பயிற்சி அளித்திருக்கிறார். அவருடைய கல்லறையில் தமிழிலும், இலத்தீன் மொழியிலும் இதெல்லாம் குறிக்கப்பட்டிருக்கு.  தன்னுடைய வாழ்நாளின் பெரும் பகுதியை இந்த கோட்டையை சீரமைப்பதிலும், கட்டுவதிலும் செலவிட்டிருக்கிறார்.  
   
இப்ப கோட்டையை சுற்றி பார்க்கலாம் வாங்க.  இங்க தெரிகிற இந்த நீர் நிறைஞ்ச குளத்தை சுத்த படுத்தும் போது நிறைய பீரங்கி குண்டுகள் கிடைச்சிருக்கு.  ஏன்னா இந்த கோட்டை பீரங்கி துப்பாக்கி போன்ற போர் ஆயுதங்கள் செய்யும் தொழில் கூடமாகவும், ஆயுத சேமிப்பு கிடங்காகவும் இருந்திருக்கு.
நாம போறவழியெல்லாம் மூங்கில் காடுகளும், இயற்கை சூழ்நிலையும் மனசை கொள்ளை கொள்ளுது.  நடைபாதைகள் எல்லாம் அழகாக கட்டப்பட்டு இருக்கு.  காட்டு பகுதியையும், மான்களையும் பார்க்கும் போது பிரமாண்டமான அரண்மனைகள் இல்லாமலும், கோட்டை எளிமையாக வும் அதே நேரத்துல அழகாவும் காணபடுது .


மான்களை எல்லாம் பார்த்துக்கிட்டே தொல்பொருள் துறையினரால் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பத்பநாபபுரம் கோட்டைக்கு செல்லும் சுரங்க பாதையையும்,  இங்கே அமைக்க பட்ட குகை மூலம் ஆரல்வாய்மொழி என்னும் இடத்தில உள்ள காற்றாடி மலையடிவாரத்திற்கும்,     அங்க இருந்து களக்காடு மலைக்கு சென்று டி லனாய் மூலமா போர் பயிற்சி கொடுக்கபாட்டதா சொல்லப்படும்  அந்த சுரங்க பாதையையும் பத்தின குறிப்புகளை காண மலையடிவாரத்திற்கு வந்துவிட்டோம்.  

புதுசா வர்றவங்க தயவு செய்து யாரும் இந்த மலையில் ஏறி செல்லவேண்டாம் சுரங்க வாயில்கள் எல்லாம் புதர்மண்டி மண்மூடி இருக்கு. தவறி விழ வாய்ப்பு அதிகம்ன்னு சொல்றாங்க. போகிற வழியெல்லாம் காடு. வழியெல்லாம் புதர்மண்டி காணபடுது. அதைவிட அங்க இருக்கிற மலை உச்சிக்கு செல்லும் பாதை மிகவும் ஆபத்தானது.செங்குத்தா செல்லும் பாறையின் மேல் சிறிய தடத்துடன் கம்பி பிடியுடன் அமைக்கப்பட்டிருக்கு.  எந்த பிடிமானமும் இல்லாம ரொம்ப சாய்வா இருக்கு ’ . மேலே செல்ல , செல்ல அந்த கம்பி பிடிகளும் கூட இல்லை. உச்சியில் ஒரு சாஸ்தா கோவில் இருந்தாக சொல்றாங்க.
சிதிலமடைந்த ஒரு செங்கல் கட்டிடம் மட்டும் இடிபாடுகளுடன் அங்க இருக்கு. மேலும், நாங்க போன போது மழை மேகம் திரண்டு இப்ப கொட்ட போறேன்னு பயமுறுத்துன நேரம். மேகப்பொதிகள் நம் தலையில் மோதி செல்வதை போல் போனது அற்புதமான காட்சி.
இந்த மாதிரி சூழ்நிலைகள்ல மின்னல் தாக்கும் அபாயம் அதிகம்ங்குறதால சீக்கிரம் கீழ போய்டலாம் வாங்க. கீழே இறங்கும் போது பார்த்து கவனமா இறங்குங்க. கொஞ்சம் கால் ஸ்லிப் ஆனாலும் அவ்வளவுதான். பிடித்து இறங்கும் கம்பிகளும் அவ்வளவா பாதுக்காப்பு இல்லை. மேலும் அவ்வளவு உயரத்திலிருந்து ஒரு சிறிய கம்பியினை மட்டும் பிடித்து இறங்கும் போது உடம்பில் ஒரு பதட்டம் ஏற்படும். அதனால, ஒருத்தர் கை ஒருத்தர் பிடிச்சுக்கிடு கீழ இறங்கலாம். இந்த பாறை மேல எதும் இல்ல, அதனால, இங்க இம்புட்டு கச்டப்பட்டு ஏறி வர்றது வேஸ்ட். என்ன சுத்திலும் இருக்குற ஊர்லாம் சின்னதா தெரியும் அழகையும், மேகக்கூட்டம் மூஞ்சில மோதும் அனுபவத்துக்காக போகலாம்.
நாம இந்த அடர்ந்த காடுகளுக்கிடையில போலாம் வாங்க, சுத்திலும் மரம், செடி, கொடிலாம் புதர் எல்லாம் மண்டி கிடக்கு. பார்த்து வாங்க. எதாவது பாம்பு கீம்பு வரப்போகுது. இப்படியே போனா, நாம பார்க்கவேண்டிய முக்கியமான இடத்துக்கு போய்டலாம்.
இந்த வழி ரொம்ப தொலைவு மாதிரி இருக்கும். நடக்க முடயாதவங்க இங்க வாடகைக்கு வைத்திருக்கும் சைக்கிளை எடுத்து சுற்றலாம். 1 மணிநேரத்துக்கு மணிகூர் 20 ரூபாய். எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாதேன்னு சொல்றவங்க சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கிட்டு தள்ளிக்கிட்டே வாங்க. சீக்கிரம் போய்டலாம்.
இதுதான் தளபதி டி லனாய்கல்லறை. சர்ச் வடிவில் இருக்கும் தோற்றத்தில் வெளியே தமிழ் மற்றும் இலத்தீன் வாசகங்களுடன் கல்வெட்டு குறிப்புக்கள் காணப்படுது
அந்த குறிப்பு என்னன்னா வேணாட்டுஅரசர் மார்த்தாண்ட வர்மா காலத்திலும், அவருக்கு பின் வந்தகார்த்திகை திருநாள் ராமவர்மா காலத்திலும், முன்னர் டச்சு படை தளபதியாயிருந்த டி லனாய்என்பவர் காயங்குளம் முதல் கொச்சி வரையுள்ள நமது எதிரிகளை கீழ்படுத்தி நம்முடைய வலிய தம்புரானுக்கு விசுவாசமாயிருந்து 62 வயசும் 5 மாசமும் 1777 ஜூன் மாசம் 1 நாள் மரணத்தை அடைந்து இந்த இடத்தில அடக்கம் செய்ய பட்டு இருக்கிறார். அவருடைய மகன் ஜான் டி லனாய் களக்காடு சண்டையில் காயம் பட்டு இறந்து போனதாகவும் கல்வெட்டில் குறிக்க பட்டுள்ளது. அவரது மனைவி மர்கெரெட்டா அவரது அடுத்தநிலை இராணுவத்தளபதி பீட்டர் ப்ளோரிக் ஆகியோரது கல்லறைகளும் காணபடுது. இந்த இடத்தை சுத்தி கல்லறைகளுக்கே உண்டான ஒரு விதமான ஒரு அமைதி காணபடுது.

இந்த கோட்டை உருவான பின்னரே சுற்றியுள்ள ஊர்களில் அமைதி திரும்பியதாகவும், மன்னர் மார்த்தாண்டவர்மாவும் தளபதி டி லனாய் நிறைய பணிகள் இங்கே இருக்கிற மக்களுக்கு செய்ததாகவும், பொன்மனை என்னும் இடத்தில அணைக்கட்டு ,கால்வாய் கட்டியதாகவும் அதனால் விளை நிலங்கள் செழித்து விவசாயம் நல்ல படியாக இவரது காலத்தில் இருந்ததாகவும் கல்வெட்டு குறிப்புகள் சொல்லுது.


நாம பார்க்கிற இந்த பகுதி ராஜா மார்த்தாண்ட வர்மா (1729-1758) காலத்தில் பீரங்கி குண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் செய்யும் உலைகளத்தின் சிதைந்த பகுதிகள். சமீபததில் தொல்பொருள் ஆய்வுத் து‌றையினர் கோட்டையின் அருகே ஒரு சுரங்கப்பாதையினை கண்டுபிடிச்சிருக்காங்க. அந்தப் பாதை கோட்டையிலிருந்து‌ பத்மநாபபுரம் அரண்மனைக்கு ஆபத்து காலங்களில் ரகசியமா போய் வர கட்டியிருக்கலாம்.
18 ம் நூறாண்டின் இறுதி பகுதியில் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரா போரிட்ட திப்புசுல்தானின் வீரர்கள் இந்த கோட்டையில் கைதிகளா காவலில் வைக்கப்பட்டதாக சொல்லபடுது. 19 ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இந்தக்கோட்டையில் கிழக்கிந்திய கம்பெனியின் ராணு‌வபடைகள் நிறு‌த்திவைக்கப்பட்டதாகவும் கூறப்படுது‌.
தற்போது வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் உதயகிரி கோட்டையில் பல்லுயிர்மம் பூங்கா ஒன்று பராமரிக்கபடுகிறது. அட ஏன் இப்படி முழிக்குறீங்க!, ”ஜூன்னு தமிழ்ல சொன்னாதான் உங்களுக்குலாம் புரியுமோ!! சில மான்கள், வெள்ளை எலிகள் கூண்டுக்குள் அடைக்கப்பட்டு இருக்கு. லவ் பேர்ட்ஸ் மற்றும் மயில்களும், மீன் காட்சியகமும் இருக்கு.
மரக்குடிலில் ஏறுதல், பர்மாபாலம் வலையில் ஏறுதல் போன்ற வீர விளையாட்டுகள் இங்க இருக்கு. இதுக்கு தனி கட்டணம் உண்டு. இதெல்லாம் முடித்து விட்டு வெளியே வரும் போது ஒரு குதிரை நம்மளையே பார்க்குதே!! அது ஏன்னுதான் தெரியலை!!

கோட்டையின் நல்லா சுத்தி பார்த்தாச்சா!? இங்க தெரியுறது தான் நாகராஜா கோவில். இது கோட்டையின் நுழைவு வாயில் பகுதியிலேயே அமைந்து இருக்குஒருவழியா வரலாற்று சிறப்பு மிக்க கோட்டையை சுற்றி பார்த்தாச்சு இப்ப அதன் வரலாறும், அதுகண்ட போராட்டங்களும் உங்களுக்கு தெரிந்திருக்கும். இதுல கவனிக்க பட வேண்டிய முக்கியமான் விஷயங்கள் என்னனா...,.

நுழைவு கட்டணம் 10 ரூபாயும், ஸ்டில் கேமராவிற்கு 30 ரூபாயும், வீடியோ கேமராவிற்கு 50 ரூபாயும் வசூலிக்கபடுது .சில முறை கேடுகள் நடந்தாலும் , இங்க பெரும்பான்மையான இடம் வனபகுதிகளா இருக்குறதால காதலர்களாய் இல்லை நண்பர்களாய் வரும் ஆண் -பெண்களுக்கு அனுமதியில்லை. குடும்பத்துடன் வருபவர்களுக்கும் தனியாய் வரும் ஆண்கள் தனியாய் வரும் பெண்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படுது (அப்ப தனித்தனியா போய் ஜாய்ன் பண்ணிக்கலாமான்னு குதர்க்கமா யாரும் கேள்வி கேக்காதீங்கப்பா! ஏன்னா, பதில் சொல்ல அக்காவுக்கு தெரியாது.
அடுத்த வாரம், மௌனசாட்சியாய் நிக்கும் வேற ஒரு இடத்துக்கு போகலாம்..,


17 comments:

 1. //மழையோட அன்புல முழுசா நனையாம கோட்டைக்குள்ள//

  தப்பிச்சது தம்பிரான் புண்ணியம்ன்னு சொல்லுங்க

  ReplyDelete
  Replies
  1. கேமராவை மழையில இருந்து காப்பாத்துறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிட்டுது.

   Delete
 2. // காதலர்களாய் இல்லை நண்பர்களாய் வரும் ஆண் -பெண்களுக்கு அனுமதியில்லை//

  விவரமா தான் இருக்காய்ங்க..

  ReplyDelete
  Replies
  1. அப்படி விவரமா இருந்தும்தான் ஆயிரம் தப்புகள் நடக்குதே நம்ம நாட்டுல!!

   Delete
 3. நேரில் பார்த்து வந்த மன நிறைவை தருகிறது பதிவு.....யப்பாடா!...காசு மிச்சம்!

  ReplyDelete
  Replies
  1. அப்படிலாம் சொல்லப்படாது. டூர் போனதுல பாதி காசை கொடுத்தாதான் ஆச்சு

   Delete
 4. உங்கள் பாணியில் உதயகிரி கோட்டை தகவல்கள் அனைத்தும் அருமை... படங்கள் சூப்பர்...

  ReplyDelete
  Replies
  1. வருகை தந்து ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி அண்ணா!

   Delete
 5. சுட்டதுஅருமை

  ReplyDelete
  Replies
  1. சுட்டேனா!? படத்தைதானே சொன்னீங்கண்ணா!?

   Delete
 6. உதயகிரி கோட்டையை உங்களுடன் வந்து பார்த்தோம்.
  கவனமாய் அழைத்து சென்றீர்கள். நன்றி.
  குதிரை ஏன் அப்படி பார்க்கிறது! அதன் முன்னோர்கள் வீர தீரமாய் வாழ்ந்த இடத்தை பார்க்க வந்து இருக்கிறார்களே என்றுதான்.

  ReplyDelete
 7. நல்ல பதிவு உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் உண்மையில் கோட்டையை பற்றிஅழகாக விளக்கி உளீர்கள் இதை படித்துவிட்டு அடுத்த முறை செல்லும் போது அதன் முழு அழகையும் ரசிக்கலாம்

  ReplyDelete
 8. // (அப்ப தனித்தனியா போய் ஜாய்ன் பண்ணிக்கலாமா// இதுக்கு பேருதான் 'நாசூக்கா' சொல்றதா?

  வரலாற்று சிறப்பு மிக்க இடமா இருக்கே. ஒரு ட்ரிப் போடணும்

  ReplyDelete
 9. அழகான தகவல்களுடன் அருமையான பதிவு

  ReplyDelete
 10. அழகான படங்கள். சிறப்பான தகவல்கள் என ஒரு அருமையான சுற்றுலா..... மிகவும் ரசித்தேன்.

  ReplyDelete
 11. குமரி மாவட்டத்தை வலம் வந்திட்டிருக்கீங்க போலிருக்கு. டிக்கெட் வாங்காமலேயே எங்க ஊர்ப்பக்கத்தைச் சுத்திக்காமிச்சதுக்கு நன்றி.

  ReplyDelete
 12. கோட்டை பற்றி அறிந்துகொண்டோம். நன்கு சுற்றிப் பார்த்தோம். நன்றி.

  ReplyDelete