Friday, August 11, 2017

பிரிந்த தம்பதிகளை ஒன்று சேர்க்கும் காமாட்சி அம்மன் - ஆடி நான்காவது வெள்ளி


ஆடி நாலாவது வெள்ளிக்கிழமை காமாட்சி அம்மனுக்கு உகந்தது. காமம்ன்னா வெறும் உடல் இச்சை சார்ந்தது மட்டுமில்ல. காமம்ன்னா ஆசை, விருப்புன்னு  பொருள். ’அட்ச’ன்னா அன்பு, கருணைன்னு பொருள். காமாட்சின்னா அனைத்து சிற்றின்ப  ஆசைகளையும் தனது அருள் பொங்கும் கண்களால்  வேரறுத்து நமக்கு முக்தியை அளிக்கவல்லவள் என்று பொருள்.  
அன்னை பராசக்தியின் பரிபூர்ண அருள் நிறைந்து இருக்கும் இடங்கள் மொத்தம் மூன்று . காஞ்சி காமாட்சி,  மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி ஆலயங்களே ஆகும்.   இந்தியாவில் உள்ள சக்தி பீடங்களுள் காமக்கோடி பீடம்ன்னு சொல்லப்படும் காஞ்சிபுரம் முக்கிய இடம் பெறுது. இங்கு ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரியின் பூரண பிம்ப சொரூபிணியாக அருள்மிகு அன்னை காஞ்சி காமாட்சி விளங்குகிறாள். அன்னை காமாட்சி  கலைமகளையும் (சரஸ்வதி), திருமகளையும் (லட்சுமி) தன் இரு கண்களாகக் கொண்டவள்.   
வைரக்கல்லை பொதிஞ்சு வைக்க தங்கத்தை தேர்ந்திடுக்குற மாதிரி இத்தனை சிறப்பு வாய்ந்த காமாட்சி அம்மன் ஆலயம் கொள்ள தேர்ந்தெடுத்த இடமும் மிக பவித்திரமானது.  புகழ்மிக்க நம் பாரதக்கண்டத்தில் மோட்சத்தை அளிக்க  அயோத்தி, மதுரா, மயா, காஞ்சி, காசி, அவந்திகா, துவாரகான்னு மொத்தம் ஏழு இடங்கள் இருக்கு. அதுல, நடுநாயகமா காஞ்சி இருக்கு. காஞ்சியில் மொத்தம் சின்னதும் பெருசுமாய் 1008 சிவாலயங்களும் 108 விஷ்ணு ஆலயங்களும் , சித்திரகுப்தன் ஆலயமும், இதுமட்டுமில்லாம விநாயகர், முருகன்ன்னு ஏகப்பட்ட தெய்வங்களின் கோவில் இருக்கு.  காமாட்சி அம்மன் வரலாற்றையும், அம்மன் காஞ்சியில் எழுந்தருள காரணமான நிகழ்வினை இனி பார்க்கலாம். 
பந்தகாசுரன்ன்ற அசுரன் கடுமையான தவம் புரிந்து பிரம்மாவிடம் அரிய வரம் வாங்கி, வரம் தந்த மமதையால் தேவர்கள், முனிவர்கள் உள்ளிட்ட மூவுலகையும் ஆட்டிப்படைத்தான்.  பந்தாகாசுரனின் தாக்குப்பிடிக்க முடியாத நிலையில்,  அதிக துன்பமுற்ற தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று தங்கள் துன்பத்தைக் கூறி முறையிட்டார்கள். பிரம்மாவின் வரங்களைப் பெற்றதால் பந்தகாசுரன் மிகுந்த வலிமை பெற்றிருப்பதை உணர்ந்த சிவபெருமான், ” அந்தப் பந்தகாசுரனை அழிக்கும் ஆற்றல் அன்னை பராசக்தி தேவிக்கு மட்டும்தான் உள்ளதெனக்கூறி, அவர்களைப் பராசக்தியிடம் அனுப்பி வைத்தார்.
தேவர்கள், முனிவர்கள் வந்த நேரம், அன்னை பராசக்திதேவி, பூலோகத்திலுள்ளா   காமக்கோட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், கிளி வடிவம் கொண்டு, ஒரு செண்பக மரத்தில் அமர்ந்து சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்து கொண்டிருந்தாள். தேவர்களும், முனிவர்களும் அன்னை இருக்கும் இடத்துக்கு வந்து, அவளை வழிபட்டுத் தங்கள் துயரங்களைக் கூறினார்கள். சகல ஜீவராசிக்கும் அன்னையல்லவா அவள். அவர்களின் துன்பத்தை கேட்ட மாத்திரத்தில் அவள் மனம் இளகியது. 

பந்தகாசுரனைக் கொன்று, அவர்களின் துயரத்தைத் தீர்ப்பதாக உறுதியளித்தாள். அன்னை பந்தகாசுரனை தேடும்போது, பந்தகாசுரன் கயிலாயத்தில், ஒரு இருண்ட குகையினுள்ளே, ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதை அறிந்து, அவனைக் கொல்ல அதுவே தருணம் என்று முடிவு செய்த அன்னை, பதினெட்டுக் கரங்களில், பதினெட்டு வகையான ஆயுதங்களைத் தாங்கிய பைரவ ரூபிணியாக, உக்கிர உருவம் கொண்டாள். பந்தகாசுரனின் கழுத்தில் ஒரு பாதத்தையும், மார்பில் ஒரு பாதத்தையும் வைத்து, அவனது தலையை அறுத்து, ஒரு கையில் தூக்கிப் பிடித்தபடி காஞ்சிபுரம் வந்தடைந்தாள். உக்கிர கோப ரூபத்தில் வந்த அன்னையைக் கண்ட தேவர்களும், முனிவர்களும் பயத்தில் நடுங்கி மயங்கி வீழ்ந்தனர்.
அவர்களின் பயத்தைப் போக்க விரும்பிய அன்னை, உடனே, அழகிய பட்டாடை அணிந்த சிறு பெண்ணின் உருவத்தில், புன்னகை தவழும் முகத்துடன் அவர்களுக்குக் காட்சியளித்தாள். அத்தரிசனம் கண்டு, மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத்த தேவர்களும், முனிவர்களும் அவளைப் பலவாறும் போற்றிப் புகழ்ந்து மகிழ்ந்தார்கள்.
அப்போது, அன்னை அவர்களைப் பார்த்து, அந்த இடத்தில் ஒரு பள்ளம் தோண்டுமாறும், பந்தகாசுரனை அந்தப் பள்ளத்தில் இட்டுப் புதைத்து, புதைத்த இடத்தில் வெற்றித் தூண் ஒன்றை நிறுவுமாறும் கூறினாள். அன்னையின் கட்டளைப்படி தேவர்கள் அந்த இடத்தில் ஒரு பள்ளம் தோண்டியபோது, மல்லகன் என்ற கொடிய அரக்கன் அங்கே மறைந்திருப்பதைக் கண்டார்கள். அந்த அரக்கனை அழித்துத் தங்களைக் காக்கும்படி, மகாவிஷ்ணுவிடம் வேண்டினார்கள். தேவர்களின் கோரிக்கையை ஏற்று, மகாவிஷ்ணு மல்லகனுடன் போரிட்டார். ஆனால், மல்லகனின் உடலிலிருந்து வெளியாகும் ஒவ்வொரு துளி இரத்தமும் ஒரு அரக்கனாக உருமாறிப் போர் புரிந்தது. இவ்வாறு அங்கே மாபெரும் அரக்கர் படையொன்று உருவாக்கி மகாவிஷ்ணுவுடன் கடுமையான போர் புரிந்தது. அரக்கனின் உடலிலிருந்து வெளிவரும் இரத்தத் துளிகள் ஒவ்வொன்றும் ஒரு அரக்கனாக உருவெடுப்பதைக் கண்ட மகாவிஷ்ணு, தம் உதவிக்குச் சிவபெருமானை அழைத்தார். சிவபெருமான் போர்க்கோலத்தில், ருத்ர மூர்த்தியாக அங்கே வந்தார். அவர் இரண்டு பூதங்களை உருவாக்கி, மல்லகனின் உடலிலிருந்து வெளிவரும் இரத்தத் துளிகள் எல்லாவற்றையும் பூமியில் விழாதபடி குடிக்கும்படி கட்டளையிட்டார். பூதங்கள் அப்படியே செய்தன. இவ்வாறு, மேலும் அரக்கர்கள் தோன்றாமல் தடுத்ததும், மகாவிஷ்ணு தம் சக்கராயுதத்தால் அந்த அரக்கனை அழித்தார்.
அதன்பின், அன்னை கட்டளையிட்டபடி, பந்தகாசுரனை புதைத்த இடத்திற்கருகில், இருபத்து நான்கு தூண்களை நிறுவி, காயத்ரி மண்டபம் அமைத்து, அந்த மண்டபத்தினுள்ளே, அழகிய பீடம் அமைத்து, அன்னையின் உருவம் ஒன்றைச் செய்து வைத்து வணங்கினார்கள். பின்னர், கதவை மூடிவிட்டு வெளியில் இருந்து அன்னையைத் துதித்துக்கொண்டிருந்தார்கள். மறுநாள் அதிகாலை, சூரியன் உதய வேளையில், மிகுந்த பயபக்தியுடன் அவர்கள் அந்தக் கதவைத் திறந்தார்கள். என்ன ஆச்சரியம்? அங்கே அவர்கள் கண்ட அற்புதமான காட்சியைக் கண்டு மெய்சிலிர்த்து, மகிழ்ந்து நின்றார்கள். ஆம், அந்தக் காயத்ரி மண்டபத்தின் நடுவில், அவர்கள் நிறுவிய சிலை உருவத்துக்குப் பதிலாக, அன்னை காமாட்சி தேவி அழகிய திருக்கோலத்தில் காட்சியளித்தாள்.
அந்தக் காயத்ரி மண்டபத்தின் நடுவில் அன்னை தென் கிழக்காக, நான்கு கரங்களுடன், பத்மாசன கோலத்தில் காட்சியளித்தாள். அவளது நான்கு திருக்கரங்களில் பாசம், அங்குசம், ஐந்து மலர், அம்பு, கரும்பு வில்லோடு, லட்சும், சரஸ்வதி பக்கமொருவராய், பத்மாசனத்தில் அமர்ந்தவாறு காட்சியளித்தாள்.  அன்னையின் அழகையும், கருணையையும் கண்டு பக்திப் பரவசமாகி மகிழ்ந்த தேவர்களும், முனிவர்களும், அன்னையை நோக்கி, அங்கேயே அமர்ந்து உலகம் வாழ அருள்புரியுமாறு வேண்டிக்கொண்டார்கள். அவர்களின் பிரார்த்தனைக்கிணங்கி, காமாட்சி அன்னை, இருபத்து நான்கு தூண்களாலான அந்தக் காயத்ரி மண்டபத்தின் மத்தியில் அழகிய பீடத்தில் அமர்ந்து அருளாட்சி செய்கின்றாள்.
இங்கு அம்பாள் மூன்று ரூபத்தில் காட்சியளிப்பது மிகச்சிறப்பு. எல்லா கோவில்களிலும் அம்பாள் எதாவது ஒரு ரூபத்தில் மட்டுமே காட்சியளிப்பாள். பத்மாசனத்தில் சாந்தசொரூபிணியாகவும், எதிரில் ஸ்ரீசக்கரத்தில் எந்திர ரூபாமாகவும், பக்கத்தில் உள்ள பிலாசாகத்தில் காரணரூபிணியாக காட்சியளிக்கிறாள். இங்கிருக்கும் ஸ்ரீ சக்கரத்தை ஆதிசங்கரர் நிறுவியதுன்னு நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியனும்ன்னு அவசியமில்லை.  காமாட்சி அன்னைக்கு மகாதேவி, திரிபுரசுந்தரி, ராஜராஜேஸ்வரி, காமேஸ்வரி, லலிதா, ஸ்ரீசக்கரநாயகின்னு பலப்பேர் உள்ளது. காஞ்சிபுரத்திலுள்ள எல்லா சிவாலயங்களுக்கும் காமாட்சி அம்பாளே மூலவர் அம்பாளாக இருக்குறதால காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் அம்பாளுக்கென தனிச்சன்னிதி கிடையாது. 
மூலமூர்த்தியான காமகோடி காமாட்சியின் இடது பக்கத்தில் வட திசை நோக்கியவாறு அரூப லட்சுமியாகிய அஞ்சன காமாட்சி காட்சியளிக்கின்றாள். இது அன்னையின் சூட்சும வடிவமாகும். இந்த அன்னைக்கு வடிவம் கிடையாது. ஆனால், இவளது மேனியில் தடவப்படும் அர்ச்சனை குங்குமத்தின் மகிமையால் இவள் ஒரு அழகிய வடிவத்தைப் பெறுகின்றாள். இந்த அஞ்சன காமாட்சி தவம் புரியும் கோலத்தில் காட்சியளிக்கின்றாள்.
அம்மன்அமர்ந்திருக்கும் நாற்காலியின் நான்கு கால்களாக  பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், ஈஸ்வரன் ஆகிய நால்வரும் இருக்கின்றனர். சதாசிவன் பலகையாகவும் இருக்கின்றனர்.  காஞ்சியில் அம்மன் குடியிருக்கும் ஆலயத்தில் அம்பாள் வீற்றிருக்கும் மண்டபத்தின் பெயர் காயத்திரி மண்டபமாகும். காயத்திரி மந்திரத்தின் 24 எழுத்துகளும், 24 தூண்களாக இருப்பதால் காயத்திரி மண்டபமென பெயர்பெற்றது. 

 இந்துக்களின் உட்பிரிவான சைவத்துக்கு ஈஸ்வரன், வைணவத்துக்கு விஷ்ணு, சாக்தம்க்கும் காளிகாம்பாள், கௌமாரத்துக்கு சுபிரமணியர், கானாபாத்யத்திற்கு வினாயகர், சௌரத்திற்கு சூரியன் ஆகிய கடவுளரின் கோவில்கள், காமாட்சி அம்மனின் ஆலயத்தை சுத்தி அமைந்திருப்பதால் எல்லா கடவுளுக்கும் மூலம் அம்பாளே என்பது புலனாகிறது.  காமாட்சி அம்மனை வணங்கினால் சகல சௌபாக்கியமும் கிட்டும். முக்கியமாக பிரிந்திருக்கும் கணவன் மனைவி ஒன்று சேர்ப்பார்.  கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம், தாம்பத்யம், ஒருத்த‌ர் ஒருத்தரு‌க்கு இடையே வேறுபாடுகளை மறப்பது, கணவன்-மனைவிக்குள் ஒற்றுமையை உண்டாக்கக் கூடிய அம்பாள் காமாட்சி அம்மன்.
பிரிந்தவர் தம்பதிகள் ஒன்று சேர ....

சந்த்ராபீடாம் சதுரவதனாம் சஞ்சலா பாங்கலீலாம்
குந்தஸ்மேராம் குசபரநதாம் குந்தளோத்தூத ப்ருங்காம்
மாராராதே: மதனஸிகினம் மாம்ஸளம் தீபயந்தீம்
 காமாக்ஷீம் தாம் கவிகுலகிராம் கல்பவல்லீமுபாஸே

இதன் பொருள்....
சந்திரனை சிரசில்  ஆபரணமாகத் தரித்தவளும், அழகிய திருமுகத்தையுடையவளும், சஞ்சலமான கடாக்ஷ லீலையையுடையவளும், குந்தபுஷ்பம்போல் அழகை உடையவளும், ஸ்தன பாரத்தினால் வணங்கிய சரீரத்தை உடையவளும், முன் நெற்றி முடியினால் விரட்டப்பட்ட கருவண்டுகளை உடையவளும், மன்மதனை சாம்பலாக்கிய ஈசனுக்கு காமாக்னியை விருத்தி செய்கிறவளும், கவிகளின் கூட்டத்தின் வாக்கிற்கு கல்பவல்லியுமான காமாக்ஷி தேவியை வணங்குகிறேன்.
காமாட்சி அம்மனை வணங்குவோம்.... நல்லருள் பெறுவோம்..
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை... .
;
நன்றியுடன்,
ராஜி.

20 comments:

 1. நல்ல விளக்கம் சகோதரி... தலைப்பில் உள்ள பிழையை திருத்தவும்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. கவனிக்கலைண்ணே! திருத்திடுறேன். வருகைக்கும் கருத்துக்கும், தவறை சுட்டிக்காட்டியமைக்கும் நன்றிண்ணே

   Delete
 2. #சிற்றின்ப ஆசைகளையும் தனது அருள் பொங்கும் கண்களால் வேரறுத்து நமக்கு முக்தியை அளிக்கவல்லவள்#
  பிறகெதுக்கு பிரிந்த தம்பதிகளை ஒன்று சேர்க்க உதவணும்:)

  ReplyDelete
  Replies
  1. அப்ப புருசன் பொஞ்சாதின்னா செக்சுக்காக மட்டும்தானாண்ணா?! அதைத்தாண்டி எத்தனையோ விசயம் இருக்கே. ஆனா சிற்றின்பம் என்பது வெறும் செக்சை மட்டும் கொண்டதல்ல. அடிக்கடி காஃபி குடிக்குறதுக்கூட ஒருவகை சிற்றின்பம்தான்... சீரியல் பார்க்குறது, பிக்பாஸ் பார்க்குறது இளையராஜா பாட்டு கேக்குறதும்கூட சிற்றின்பத்துலதான் சேரும்.

   Delete
 3. நிறைய தகவல்கள்!! படங்களும் அழகு!

  (இப்படி பெயரில்லாம வந்துச்சுனா துளசி + என் கருத்து ஓகேயா...தனித் தனி கருத்துனா பேர் வந்துரும் ஓகேயா...)

  ReplyDelete
 4. தகவல்கள் பிரமிப்பாக இருக்கிறது சகோ

  ReplyDelete
  Replies
  1. கேட்டடதை பகிர்ந்துக்கிட்டேன். அவ்வளவ்தான்ண்ணே

   Delete
 5. சிறப்பான தகவல்கள். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

   Delete
 6. ரொம்பவே மெனக்கெட்டு எழுதிய பதிவு படங்கள் சூப்பர் விவரங்களும் நன்றாக உள்ளது

  ReplyDelete
  Replies
  1. அப்படிலாம் இல்லீங்க அருணா. சும்மா கேட்டதையும், வாசித்ததையும் பகிர்ந்துக்கிட்டேன்.

   Delete
 7. வழக்கம்போல படங்களும், பதிவும் சுவாரஸ்யம்.

  ஆறாம் வாக்கு.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 8. விவரங்கள் சேகரிப்பும், படங்களின் சேகரிப்பும் அருமை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா

   Delete
 9. நிறைய முயற்சி எடுத்து தகவல்கள் திரட்டித் தந்தமைக்கு நன்றி !

  ReplyDelete
 10. படங்கள் அழகுத ம 10

  ReplyDelete
 11. அருமையான பயனுள்ள வரலாற்று பதிவு, இவை தொடரட்டும்...

  ReplyDelete