Monday, August 14, 2017

கண்ணா வருவாயா?! ராதை கேட்கிறாள்?! - க்ருஷ்ண ஜெயந்தி


எங்கெல்லாம் நன்மை அழிந்து தீமை அதிகரிக்கின்றதோ அங்கெல்லாம் நான் அவதரிப்பேன் என நமக்கு உணர்த்தவே  கோலாகல பகவான் மகாவிஷ்ணு பூமியின் பாரம் குறைப்பதற்காகவும், தீயவர்களை அழித்து நல்லவர்களைக் காப்பதற்காகவும் ஆவணி மாதத்தில் நடு இரவில் தேய்பிறை அஷ்டமி திதி உள்ள நாளில் ஸ்ரீகிருஷ்ணராக அவதாரம் எடுத்தார். இந்தியா முழுவதும் இந்த விழாவானது கோகுலாஷ்டமி, ஸ்ரீஜெயந்தி, கிருஷ்ணர் ஜெயந்தி, ஜென்மாஷ்டமி என்று பலவிதமான பெயர்களில் கொண்டாடப்படுகிறது
மதுரா சிறைச்சாலையில், வசுதேவர் தேவகி தம்பதியருக்கு எட்டாவது குழந்தையாக கண்ணன் அவதரித்தான். அவதாரம் என்ற வடமொழிச் சொல்லுக்கு கீழே இறங்கி வருதல் எனப் பொருள். இப்படி மகாவிஷ்ணு நீதியை நிலை நாட்டும் பொருட்டும், கம்சனை வதம்செய்யும் பொருட்டும் இப்பூவுலகில் அவதரித்தார்.
துவாபர யுகத்தில் இராமயண காலத்தில் உருவான ஊர் மதுரா. இங்கு யது வம்ச போஜகுலத்தில், உக்ரசேன மன்னனின் மகனாக கம்சன் பிறந்தான். இவன் தன் தந்தையையே சிறை வைத்து, அரசை தானே ஆண்டு வந்த கொடியவன். இவனுக்கு கம்சை, தேவகி என்ற இரு தங்கைகள். தேவகிமீது கம்சன் மிகுந்த பாசம் வைத்திருந்தான். வசுதேவருக்கு தேவகியை மணம் முடித்து இருவரையும் தன் தேரில் ஏற்றிக் கொண்டு தானே ஓட்டி வந்தான் கம்சன். அப்போது வானில் அசரீரி, ""கம்சா! தேவகியின் எட்டாவது மகன் உன்னைக் கொல்வான்'' என்றது.
ஆத்திரமடைந்த கம்சன் தேவகியைக் கொல்ல முயல, அவனை வசுதேவர் தடுத்தார். ""கம்சா! தேவகியின் எட்டாவது மகன்தானே உன்னைக் கொல்வான்? நாங்கள் எங்களுக்குப் பிறக்கும் எல்லா குழந்தைகளையும் உன்னிடம் தந்துவிடுகிறோம் தேவகியை விட்டுவிடு'' என்று மன்றாடினார். அதை ஏற்றுக்கொண்ட கம்சன் இருவரையும் மதுரா சிறையில் அடைத்தான். வசுதேவர்- தேவகி தம்பதியருக்குப் பிறந்த குழந்தைகளை இரக்கமின்றிக் கொன்று தீர்த்தான் கம்சன். இவ்வாறு ஆறு குழந்தைகள் கொல்லப்பட்ட நிலையில், தேவகி ஏழாவது முறை கருவுற்றாள். கரு ஏழு மாதங்கள் வளர்ந்திருந்த நிலையில், அது மாயையின் உதவியால் கோகுலத்திலிருந்த வசுதேவரின் முதல் மனைவி ரோகிணியின் வயிற்றுக்கு மாற்றப்பட்டது. அந்தக் குழந்தையே பலராமன். (கரு கலைந்துவிட்டதாக கம்சனிடம் கூறிவிட்டனர்).
அடுத்து எட்டாவது முறையாக சூலுற்ற தேவகி, அஷ்டமி திதியில் நள்ளிரவு 12.00 மணிக்கு கண்ணனை ஈன்றெடுத்தாள். அந்த நேரத்தில் மாயையின் பிடியில் சிக்கி மதுராவிலிருந்த அனைவருமே உறங்கிக் கொண்டிருந்தனர். வசுதேவர், தேவகி, சந்திரன் ஆகிய மூவர் மட்டுமே விழித்திருந்தனர். மகாவிஷ்ணு உணர்த்தியபடி, வசுதேவர் குழந்தையை ஒரு கூடையில் வைத்துக்கொண்டு யமுனைக் கரைக்குச் சென்றார். அப்போது மழை பொழிய, ஆதிசேஷன் குடைபிடித்தபடி அவர் கள் பின் சென்றது. யமுனை நதி இரண்டாகப் பிளந்து வழிவிட, வசுதேவர் அக்கரையிலிருந்து ஆயர்பாடியான கோகுலம் சேர்ந்தார். அங்கே நந்தகோபரின் மனைவி யசோதையின் அருகே குழந்தையை வைத்துவிட்டு, யசோதைக்குப் பிறந்திருந்த பெண் குழந்தையை எடுத்துக்கொண்டு சிறைச்சாலை வந்து சேர்ந்தார்.
அப்பொழுது மாயை விலக, அனைவரும் கண் விழித்தனர். குழந்தையின் அழுகுரல் கேட்டு, செய்தி கம்சனுக்குத் தெரிவிக்கப்பட்டது. தன்னை அழிப்பதற்காகப் பிறந்திருக்கும் குழந்தை இதுதானே என்று ஆக்ரோஷமாகப் புறப்பட்டு வந்த கம்சன், பெண் குழந்தையென்றும் பாராமல் அதைக் கொல்ல முயல, அவன் பிடியிலிருந்து விலகி அந்தரத்தில் நின்று சிரித்த குழந்தை, ""கம்சா! உன்னைக் கொல்லப் பிறந்தவன் கோகுலத்தில் வளர்கிறான்'' என்று கூறி மறைந்துவிட்டது. அது காளிதேவி. பெருங்கோபம் கொண்ட கம்சன் தன் அசுரப் படைகளை அழைத்து, எந்த வடிவிலாவது சென்று கண்ணனைக் கொன்றுவிடுமாறு கட்டளையிட்டான்.

 வண்டிச் சக்கரமாக வந்த சகடாசுரன், கடத்த வந்த தீப்திகன், பாலூட்ட வந்த பூதகி, கொக்காக வந்த பகன், பாம்பாக வந்த ஆகா சுரன், கழுதையாக வந்த தேனுஜன், இடையர்களாக வந்த பிரம்பலன்- வியோமன், காளையாக வந்த அரிஷ்டன், குதிரையாக வந்த கேசி என பலரும் வஞ்சகமாக கண்ணனைக் கொல்ல வந்தனர். அத்தனை பேரையும் குழந்தைக் கண்ணன் விளையாட்டாகக் கொன்றான்.
தன்னை கொல்ல வந்த  காளிங்கனை மட்டும் அடக்கி மன்னித்துவிட்டான். கண்ணனுக்கு இப்படி பல இடையூறுகள் வருவதைக் கண்ட ஆயர்பாடியினர் ஐந்து வயதான கண்ணனை அழைத்துக்கொண்டு பசுக்கூட்டங்களுடன் பிருந்தாவனம் சென்று விட்டனர். எவ்வளவு முயன்றும் கண்ணனைக் கொல்ல முடியவில்லையே என்று ஆத்திரமுற்ற கம்சன், வேறொரு உபாயம் செய்தான். அதன்படி கண்ணனை தன் அரண்மனைக்கே வரவழைத் தான். அரண்மனை வாயிலில் ஒரு யானையிடம் இரும்பு உலக்கையைக் கொடுத்து, அதைக் கொண்டு கண்ணனைக் கொல்ல ஏற்பாடு செய்திருந்தான். ஆனால் பலராமனும் கண்ணனும் அந்த யானையையே கொன்று விட்டனர்.

பிறகு சானுகன், கூடன், சலன், முஷ்டிகன், தோகலன் என்னும் மல்யுத்த வீரர்கள் ஐவரை அனுப்பினான் கம்சன். அவர்களையும் கொன்றான் கண்ணன். இதைக் கண்டு பெருஞ்சினங்கொண்ட கம்சன் தன் படை வீரர்களை நோக்கி, ""இந்த இரு பயல்களையும் உடனே கொல்லுங்கள். அத்துடன் சிறையிலுள்ள வசுதேவன், தேவகி, உக்கிரசேனன் என எல்லாரையும் கொல்லுங்கள்!'' என்று கர்ஜித்தான். அதைக்கேட்ட கண்ணன் சிம்மாசனத்திலிருந்த கம்சனை இழுத்து தரையில் கிடத்தி, அவன்மீது ஏறி அமர்ந்து, தன் கைகளால் கம்சனின் மார்பில் குத்தியே கொன்றான். அதன்பின்னர் கம்சனின் தந்தையும் கண்ணனின் தாத்தாவுமான உக்கிரசேனர் அரியணை ஏறினார்.
பலராமனுக்கும் கண்ணனுக்கும் உபநயனம் செய்வித்து, சாந்திபணி என்ற குருவிடம் குருகுலக் கல்விக்கு அனுப்பி வைத்தார் உக்கிரசேனர். அங்கு 64 கலைகளையும் கற்ற அவர்கள், குருவின் மகனை மீட்டு குரு காணிக்கையாகச் செலுத்திப் பெருமை கொண்டனர். பின்னர் பூமாதேவியின் பாரம் தீர்க்க பாரதப்போர், உலக மக்கள் நற்கதி பெற கீதோபதேசம் என பல அருஞ்செயல்கள் புரிந்த கண்ணன் துவாரகையில் அரசு புரிந்துவந்தார். இறுதியில் தன் அவதார காலம் முடிவுறும் தருணம் நெருங்கிவிட்டதை உணர்ந்து, ஒரு மரத்தடியில் சென்று கால்நீட்டிப் படுத்தார்.
அப்போது வேடன் ஒருவன் மறைந்திருந்து எய்த அம்பின் விஷ நுனி கண்ணனின் காலில் பாய்ந்தது; கண்ணன் உயிர் பிரிந்தது. வைகுண்டம் சேர்ந்தார் பரமாத்மா. கண்ணன் மனைவிகள் ருக்மணி, சத்யபாமா, காளிந்தி, ஜாம்பவதி, விக்ரந்தை, சத்யவதி, பத்தரை, லட்சுமணை என பட்டத்தரசிகள் எட்டு பேர். இவர்களன்றி பதினாயிரம் இளவரசிகள். ஒவ்வொருவருக்கும் பத்துப் பிள்ளைகள். கண்ணனின் பல பிள்ளைகளில் 18 பேர் கீர்த்தி பெற்றவர்கள். பிரத்யும்னன், அனிருத்ரன், தீப்திமான், பானு, ப்ருஹத்பானு, சாம்பன், விருகன், அருணன், புஷ்கரன், வேதபாஸு, ஸ்ருததேவன், சுனந்தனன், இந்திரபாஸு, விருமன், கவி, நிகரோதனன், சித்திரபானு, மது என்பவர்களே இவர்கள். கண்ணனின் காலம் கண்ணனின் பூலோக சஞ்சாரம் 125 வருடங் கள் . கி.மு. 3102 பிப்ரவரி 18-ல்- 125 வருடம், 7 மாதம், 6 நாட்கள், பிற்பகல் 2 மணி, 27 நிமிடம், 30 வினாடியில் கிரு ஷ்ணாவதாரம் முடிந்ததாகக் கூறப்படுகிறது. இதுப்பற்றி நாம விரிவா நம்ம பதிவில் பார்த்திருக்கோம்.  பார்க்காதவங்களுக்காக ஒரு சின்ன விளம்பரம்....

கண்ணன் அவதரித்த ஆவணி மாதம் அஷ்டமி திதியில். அந்நன்னாளைத்தான் கோகுலாஷ்டமியாக இமயம் முதல் குமரி வரை அனைவரும் கொண்டாடுகின்றனர். கண்ணன் பிறந்தது மதுரா என்ற வடமதுரை; கண்ணன் வளர்ந்தது ஆயர்பாடியான கோகுலம். இவ்விரு தலங்களும் யமுனையின் எதிரெதிர் கரையில் அமைந்துள்ளன.
ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஆனவன் கிருஷ்ணன். கோகுலாஷ்டமி கொண்டாடும் விதம் அன்று இல்லங்களைத் தூய்மை செய்து, செம்மண் இட்டு, கோலம் வரைந்து மாவிலை தோரணம் கட்டி, வாயிற்படியிலிருந்து பூஜையறை வரை கண்ணனின் திருப்பாதங்களை மாக்கோலத்தால் வரைந்து அழகு பார்ப்பார்கள். கண்ணனே தன் திருப்பாதங்களைப் பதித்து பூஜையறைக்கு வந்து நாம் வைத்துள்ள நிவேதனப் பட்சணங்களை ஏற்றுக்கொள்வதாக நம்புகின்றனர்.
பூஜையறையில் கண்ணன் விக்ரகம் அல்லது படம் வைத்து அலங்கரித்து, இருபுறமும் குத்துவிளக்கேற்றி, பூஜைப் பொருட்களான தேங்காய், வெற்றிலை, பாக்கு, பூ, பழம் வைத்து, நிவேதனப் பொருட்களான வெல்லச் சீடை, சீடை, முறுக்கு, தேன்குழல், மைசூர்பாகு, லட்டு, பால்கோவா, அல்வா, பாதாம் கேக் போன்ற பட்சணங்களுடன் நாவல்பழம், கொய்யாபழம், வாழைப்பழம், விளாம்பழம் போன்றவற்றையும் வைக்க வேண்டும்.
முன்னதாக கிருஷ்ணன் பாடல்களைப் பாடி, பிறகு தூபதீபம் காட்டி நிவேதனம் செய்ய வேண்டும். பின்னர் ஆலயம் சென்று இறைவனை வணங்கி, அங்கு நடக்கும் உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் பார்த்து மகிழ்ந்து, இல்லம் திரும்பி பட்சணங்களை அனைவருக்கும் கொடுத்தபின் நாம் உண்ண வேண்டும். 
கோகுலாஷ்டமி தினத்தன்று கிருஷ்ண பகவானை வழிபடுபவர்களுக்கு சந்தான பாக்கியம் ஏற்படும். நீண்ட காலம் குழந்தையில்லாத தம்பதிகள் இவ்விரதம் இருந்தால் குழந்தை வரம் கிடைக்குமென்பது நம்பிக்கை.

தமிழ்மணம் ஓட்டு பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1469382
Krishna
நன்றியுடன், 
ராஜி. 

19 comments:

  1. விளம்பர இணைப்புகளும் நன்று...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  2. அருமை!படங்கள் கொள்ளை அழகு த ம 2

    ReplyDelete
  3. அடேங்கப்பா கண்ணனின் லீலைகள் எவ்வளவு விடயங்கள்.

    ReplyDelete
    Replies
    1. இது கடுகளவு சுருக்கிய சுருக்கம்தான்ண்ணே. கோபியர்களோடு போட்ட ஆட்டம், நந்தவனத்தில் நடத்திய லீலைகள், குருசேத்திர போர், குசேலருக்கு அருளியதுன்னு இன்னும் எத்தனையோ இருக்கு

      Delete
  4. கண்ணன் ஜொலிக்கிறாரே!!! அழகு!

    ReplyDelete
  5. நீண்ட கதை........அருமை.கண்ணனில் லீலைகள் அற்புதம்... நன்று, நன்றி.......

    ReplyDelete
  6. வசீகரமான படங்களுடன்...கண்ணனின் வரலாற்று பதிவு...மிகவும் சிறப்பு...

    ReplyDelete
  7. கண்ணனின் வரலாறும் கண்கவர் வண்ணப்படங்களும் அருமை

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  8. தலைப்பில் நினைவு படுத்தியுள்ள பாடலும் நன்று.

    7 ஆம் வாக்கு!

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் பிடிச்ச பாட்டு சகோ

      Delete
  9. கண்கவர் படங்கள் அருமை . ஆன்மிகப் பதிவர் ராஜேஸ்வரி அவர்களின் பதிவைப் பார்த்தது போல் உள்ளது

    ReplyDelete
    Replies
    1. அவங்களைப்போல ஆகனும்ன்னுதான் முயற்சி பண்றேன்ண்ணே! ஆனா, அவங்களைப்போல எந்த கிழமை என்ன விசேசம்ன்னுதான் தெரிஞ்சுக்கமுடில

      Delete
  10. அழகான படங்கள். சிறப்பான தகவல்கள். பாராட்டுகள்.

    த.ம. +1

    ReplyDelete