Friday, October 27, 2017

வேலுண்டு.... வினையில்லை...

முருகனை பத்தியும் அவன் குடிக்கொண்டுள்ள பல தலங்களையும், சஷ்டி விரதத்தின் மகிமைகளையும்,  விரதம் கடைப்பிடிக்கும் முறைகளையும், சூர சம்ஹாரம் பத்தியும் போன பதிவுகளில் பார்த்தோம். முருகனை நினைக்கும்போது அவன் கையிலிருக்கும் வேல் நினைவுக்கு வராம போகாது.  முருகன் சிவன் அம்சம்... அவன் கையிலிருக்கும் வேலோ அன்னை பராசக்தியின் அம்சம்.. அவளின் சக்தியை கொண்டு வந்ததாலே அது வெற்றிவேலாய், வீரவேலாய் நின்று பகைவரை அழித்ததோடு பக்தர்களின் துயர் துடைக்கவும் செய்யுது. 
பொதுவா நம்ப பழக்கம் புகழ்பெற்ற கோவிலுக்கோ அல்லது இடத்துக்கோ போனால், அந்த இடத்தை மட்டும் சுத்தி பார்த்துட்டு வந்திடுவோம். ஆனா, அந்த இடத்துக்கு சம்பந்தமான இன்னொரு முக்கியமான இடம் அங்கனயே  பக்கத்துலதான் இருக்கும், ஆனா, போகமாட்டோம். எனக்குக்கூட, தஞ்சை கோவில் விமானம் கட்ட சாரம் அமைச்ச ஊர் சாரப்பள்ளம்?! பக்கத்துல இருக்குன்னு கேள்விப்பட்டு போய் பார்க்கனும்ன்னு ஆசை. ஆனா, என் அப்பா அதான் சாமியை பார்த்தாச்சுல்லன்னு இழுத்துட்டு வந்திடுவார். பொறுமையா எல்லாத்தையும் பார்க்கனும்ன்னு விடமாட்டார். அதேமாதிரி கன்யாகுமரி போனால் கோவில், காந்தி மண்டபம், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் பாறைன்னு கூட்டி போவார். ஆனா, சன் செட் பாயிண்டுக்கு இதுவரை கூட்டிப்போனதில்ல பாருங்க.. ட்ராக் மாறுது...  அதுமாதிரிதாப்ன். திருச்செந்தூர் போனாலும், கோவில் கடல், வள்ளிக்குகை, சித்தர் சமாதி, நாழிக்கிணறு பார்த்துட்டு வந்திருவோம்.  ஆனா, அங்க இன்னொரு முக்கியமான கோவில் இருக்கு. அதை பார்க்காமயே வந்திருவோம். அந்த இன்னொரு கோவிலைதான் இன்னிக்கு பார்க்கபோறோம். இதும் சஷ்டி பத்தின பதிவுதான்...

கந்தப்புராணத்தின்படி சூரனை வதம் செய்ய முருகன் திருச்செந்தூர் வருவதற்கு முன்பாகவே அன்னை பராசக்தி இங்கு கோவில் கொண்டு தன் மகனுக்காக காத்திருந்தாள். முருகனுக்கு தன் அவதார நோக்கம் தெரியவந்ததும், அசுர வதத்திற்கு தக்க தருணம் வாய்த்ததும், திருச்செந்தூர் வந்து தன் அன்னையிடம் வணங்கி ஆசி பெற வந்தார். 

அன்னையும் முருகனுக்கு ஆசி வழங்கும்பொருட்டு   பார்வதிதேவி, தன் சக்தியை கொண்டு வேல் ஒன்றை உருவாக்கி தன் மகனுக்கு பரிசளித்தாள். இந்த வேலின் துணைக்கொண்டு அசுரர் படைகளை சம்ஹாரம் செய்தார் முருகன். அதுமட்டுமில்லாம, அன்னை சூட்சும வடிவம் கொண்டு தன் மகனுக்கு போரில் பலவாறாய் உதவினாள் என்பது தலப்புராணம்.  வெற்றி தரும் வேலை வழங்கியதால் வேல்+உகந்த+அம்மன் = வேலுகந்தம்மன் என இவளுக்கு பெயர் உண்டானது. கால மாற்றம், அம்மன் பெயரை வெயிலுகந்தம்மனா மாத்திடுச்சு.

அசுரனை அழிக்க உதவிய அன்னைக்கு மரியாதை செலுத்தும் விதமா, திருச்செந்தூர் முருகப் பெருமானுக்கு ஆவணி மற்றும் மாசி மாதத்தில் நடைபெறும் திருவிழாக்களுக்கு முன்னதாக, இந்த வெயிலுகந்தம்மனுக்கு பத்து நாள் உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுது.  சூரசம்ஹாரம் நடைப்பெறும் நாளுக்கு முந்தைய நாள் இரவு முருகப் பெருமான், சூட்சும உருவில் அம்மன் திருக்கோயிலுக்கு வந்து அன்னைக்கு பூஜைசெய்து அருளாசி பெற்று வேல் வாங்கிச் செல்வதாக ஐதீகம். அதனால, முருகன் தன் அன்னைக்கு பூஜை செய்யும் பொருட்டு பூஜைக்கு தேவையான பொருட்களை ஆலய கருவறைக்குள் வைத்து பூட்டி விடுவர்.

இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு இங்கிருக்கும்  வதனாரம்பத் தீர்த்தத்தமாகும். இந்த தீர்த்தம் 1200 ஆண்டுகளுக்கு முன்பு, வரகுண பாண்டியன் என்னும் மன்னன் புத்திர பாக்கியம் இல்லாதிருந்து .திருச்செந்தூர் வந்து சஷ்டி விரதம் இருந்த பின் மன்னனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.   அக்குழந்தையின் முகம் குதிரையின் முகமாகவும் உடல் மனித உருவிலும் இருந்தது கண்டு மன்னன் மேலும் மனம் வெறுத்துபோனான்.  கந்தனிடம் தன் குறையை சொல்லி  வேண்டி நின்றான். அவனது கனவில் காட்சிகொடுத்த கந்தப்பெருமான், “அன்னை பார்வதி தேவியால் மட்டுமே போக்க முடியும். எனவே, நீ அன்னையிடம் போய் நில்; அபயம் அளிப்பாள்” என்று சொன்னார். அதன்படி மன்னனும் காடுமலை கடந்து வெயிலுகந்தம்மன் திருத்தலத்தை அடைந்தான். அங்கே அன்னையிடம் தனது மகளின் குறைதீர வேண்டுதல் வைத்தவன், அங்கேயே குடில் அமைத்துத் தங்கிக் கடும் விரதமும் மேற்கொண்டான்.

மன்னனது  வேண்டுதலுக்கிணங்கி வந்த அன்னையவள், “ஆடிச் செவ்வாயில், என்னெதிரே இருக்கும் இந்தக் கடலில் இறங்கித் தீர்த்தமாடினால் உன் குழந்தை சுய உருவம் பெறுவாள்” என்று அசரீரியாய் அருள்வாக்கு தந்தாள். அதுபடியே அன்னையை நெஞ்சில் நிறுத்திக் கையில் குழந்தையுடன் கடலில் இறங்கினான் மன்னன். அதுவரை ராட்சத அலைகளால் ஆர்பரித்துக்கொண்டிருந்த கடல் சாந்தமானது. மன்னன் கடலில் மூன்று முறை மூழ்கி எழுந்தபோது குழந்தையின் முகம் மனித முகமாக மாறியிருந்தது.
குழந்தையின் வதனம் அழகாய் மாறிய இடம்ன்றதால இந்த இடம் ‘வதனாரம்ப தீர்த்தம்’ ன்னு பேர் வந்துச்சு. மகளின் அழகு முகம் பார்த்து ஆனந்தம் கொண்ட பாண்டியன், குழந்தையின் உடம்பில் மஞ்சளும் குங்குமமும் கலந்த நலங்கு மாவு பூசி, அரளி மாலை அணிவித்து அலங்காரம் செய்து அன்னையை தரிசிக்கச் சென்றான். சன்னிதிக்குப் போனதும் அன்னையின் முகம், குதிரை முகமாக மாறி இருந்தது கண்டு திடுக்கிட்டான். அரசன் இதயம் நெகிழ்ந்து பதறி அம்மனிடம் கேட்டான்.

இங்குவந்து அம்மா என்றழைக்கும் எனது குழந்தைகளுக்கு அவர்கள் கேட்பதை என்னால் கொடுக்காமல் இருக்க முடியாது. நீ செய்த கர்ம பலன்படி அனுபவிக்க வேண்டிய துன்பங்களை நான் ஏற்றுக் கொண்டேன். உனது கர்ம பலன் தீர்ந்ததும் இதோ எனது இந்த குதிரை முகமும் மாறிவிடும்” என்று கூறினாள். அதன்படியே சிறிது காலம் கடந்த பின் அன்னையின் முகம் மாறியது. அதன்பிறகு வரகுண பாண்டியன் அம்மனுக்குக் கோயில் எழுப்பி நிலங்களை மானியமாக எழுதிவைத்தான்.


இன்றைக்கும் வதனாரம்ப தீர்த்தத்திற்கு அந்த மகத்துவம் இருப்பதாக நம்பப்படுது.  ஆடி செவ்வாய்களில் அதிகாலையில் பெண்கள் வதனாரம்பரத் தீர்த்தத்தில் நீராடி நலங்கு மஞ்சள் அணிந்து செவ்வரளி மாலை அணிந்து அன்னையை வணங்கினால் முகம் அழகு வடிவம் பெறுவதோடு தீர்க்க சுமங்கலிகளாகவும் இருப்பார்கள் என்பது நம்பிக்கை. 

இன்றைக்கும் திருச்செந்தூரின் வடபுலத்தில் வீற்றிருக்கும் வெயிலுகந்தம்மனுக்கு  ஆவணி, மாசி மாதங்களில் பத்து நாள் திருவிழா களைகட்டுகிறது. அப்போது அன்னை சப்பரத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வருவாள். இரண்டு திருவிழாக்களிலும் பத்தாம் நாள் உற்சவத்தின்போது அன்னைக்குக் கடலில் தீர்த்தவாரி நடக்கும். பிறகு, திருச்செந்தூர் முருகப் பெருமானுக்கு எதிரே உள்ள சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளி, புதல்வனுக்கு அருளாசி வழங்குகிறாள் அன்னை. வாய்ப்பு கிடைக்கும்போது இந்த கோவிலுக்கும் போய் வரனும்... நான் என்னைய சொன்னேன்.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை....
நன்றியுடன்,
ராஜி.

11 comments:

  1. படித்தேன் , ரசித்தேன், தரிசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆண்டவன் அருள் கிடைத்தது உங்களுக்கு

      Delete
  2. அந்த குழந்தை படம் மிகவும் அருமை.

    ReplyDelete
  3. உண்மைதான், வேலுண்டு வினையில்லை.

    ReplyDelete
    Replies
    1. அவனின்றி எதுமில்லைப்பா

      Delete
  4. வேலுகந்தம்மன் வெயிலுகந்தம்மனா மாறியது ரொம்ப அதிகம் எவ்வ்ளவு வித்யாசமான மாற்றம்
    அடுத்து ஒரு குட்டி ஆன்மிக கதையே வந்தாச்சு ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. எல்லா சாமிக்கு பின்னாடியும் ஒரு கதை இருக்கு...

      Delete
  5. வேல் வெற்றிவேல்!

    ReplyDelete
  6. வேலுகந்தம்மன் ....

    தகவல்களும்...படங்களும் மிக சிறப்புக்கா..

    அம்மன் மனம் வைத்தால் நாமும் வணங்கி வரலாம்...

    ReplyDelete