Tuesday, May 29, 2018

பலாக்கொட்டை பொரியல் - கிச்சன் கார்னர்

இப்ப பலாப்பழ சீசன். ஆனாலும் விலை குறைச்சலா இருக்கான்னு தெரில. கிலோ 80ரூபா வரை பலாச்சுளை விக்குறாங்க.  எனக்கு பலாப்பழம்ன்னா ரொம்ப பிடிக்கும். போனவாரம் அப்பாக்கு அவரின் பண்ருட்டி நண்பர் முழுசா ஒரு பலாப்பழ தர, வெட்டி, அக்கம்பக்கம் கொடுத்தது போக, மிச்சம்மீதியை பாயாசம், சாலட்ன்னு தின்னு தீர்த்தாச்சு. பலாக்கொட்டையை என்ன செய்ய?!

முன்னலாம் விறகடுப்பு இருக்கும். அம்மா சமையல் செய்து முடிச்சதும் மிச்சம் மீதி இருக்கும் நெருப்பில் பலக்கொட்டையை போட்டு மூடி வேக வச்சு கொடுப்பாங்க. அதுக்கப்புறம் வாணலில போட்டு வறுத்து கொடுப்பாங்க. எந்த மசாலாவும் இல்லாமயே ருசி தூக்கலா இருக்கும். அதில்லாம, குச்சிகளை எரியவிட்டு நாங்களே பசங்களாம் சேர்ந்து பலாக்கொட்டையை சுட்டு சாப்பிடுவோம்.  இப்ப அப்படிலாம் செய்ய வெசனமா இருக்கு. குருமாவில், உருளைக்கிழங்கில் பலாக்கொட்டைய போடுவேன்.  ஆனா, இப்ப அதிகமா இருந்ததால், பலாக்கொட்டையில் பொரியல் செஞ்சாச்சு.

தேவையான பொருட்கள்...

பலாக்கொட்டை
வெங்காயம்
தக்காளி
கடுகு,
எண்ணெய்
பட்டை, லவங்கம்,சோம்பு
இஞ்சி பூண்டு பேஸ்ட்
மிளகாய் தூள்
மஞ்சள் தூள்
உப்பு’
மிளகு தூள்
சீரக தூள்

பலாக்கொட்டையை  வேக வச்சு மேல இருக்கும் கடினமான தோலை எடுத்து சின்ன சின்னதா வெட்டிக்கனும்.  வெங்காயம் தக்காளியை பொடிசா நறுக்கிக்கனும்.

வாணலில எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் கடுகு, பட்டை லவங்கம் போட்டு பொரிய விடனும்...
பொடியா நறுக்கி வச்சிருக்கும் வெங்காயம் போட்டு வதக்கிக்கனும்..

இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கிக்கனும். கொஞ்சம் உப்பு சேர்த்துக்கிட்டா அடிப்பிடிக்காது.


பொடிசா நறுக்கிய தக்காளிய போட்டு வதக்கனும்...
தக்காளி வெந்து மசிஞ்சதும் மிளகாய் பொடி போட்டுக்கனும். 
அடுத்து மஞ்சப்பொடி போட்டு வதக்கிக்கனும்..
மிளகு பொடி சேர்த்துக்கனும்..
சீரகப்பொடி சேர்த்து வதக்கிக்கனும்.. 
தேவையான அளவு தண்ணி ஊத்தி கொதிக்க விடனும். 
மிளகாய் தூள் வாசனை போனதும் வெட்டி வச்சிருக்கும் பலாக்கொட்டையை சேர்த்துக்கனும்.


நல்லா சுருள வதக்கி, கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கிக்கனும். பலாக்கொட்டை பொரியல் ரெடி. பலாச்சுளையாகட்டும், பலாக்கொட்டையாகட்டும் அதிகமா சாப்பிட்டா ஜீரணிக்காம வயத்து வலி வரும். கேர்ஃபுல்.

நன்றியுடன், 
ராஜி 

18 comments:

  1. இந்த முறையும் நல்லா இருக்கும் போலயே...

    ReplyDelete
    Replies
    1. நல்லா இருக்கும்ண்ணே.

      Delete
  2. வாவ்........ நியூ மெதர்ட்........../// நானு பலாக்கொட்டை பொரியல்னா,எண்ணெயில போட்டு பொரிச்சு எடுக்குறது தானே,இதுக்கு எதுக்கு செய்முறைல்லாம் தங்கச்சி மெனக்கெடுதேன்னு பார்த்தேன்......// நான் பலாக்கொட்டையை ரெண்டா வெட்டி,உப்பு+மொளகாத் தூள் போட்டு,கொஞ்சம் நேரம் விட்டு,எண்ணெய்ல போட்டு பொரிச்சுக்குவேன்........

    ReplyDelete
    Replies
    1. நீங்க செய்வது பேச்சிலர் சமையல்ண்ணே. இது ஃபேமிலி சாப்பாடு

      Delete
  3. அய்யய்யோ... அதிகமானால் வாயு அதிகம்...!

    ReplyDelete
  4. பலாக்கொட்டை சுட்டு சாப்பிட்டிருக்கேன், அப்புறம் சாம்பார் வைப்போம். இது மாதிரி செய்ததில்லை. செய்துடலாம்.

    ReplyDelete
    Replies
    1. சீக்கிரம் செஞ்சு சாப்பிடுங்க. இல்லன்னா சீசன் மாறிடும்

      Delete
  5. அட! பலாக்கொட்டை கூட்டில், சாம்பாரில் போடுவதுண்டு. நிறைய இருந்தால் இப்படிப் பொரியல் செய்வதுண்டு. தக்காளியும், மசாலா சாமானும் போடாமல் வெங்காயம் மட்டும் போட்டுச் செய்வதுண்டு...தேங்காய் துருவிப் போட்டும் போடாமலும். பிற காய்களுடன் சேர்த்தும் பொரியல் செய்வதுண்டு. சுட்டும் சாப்பிடுவதுண்டு. பலாப்பழம் அதிகம் பழுக்கும் முன் அல்லது பழுத்த ஆனால் கெட்டியாக இருக்கும் பலாப்பழச் சுளைகளைப் போட்டு கொட்டையும் தட்டிப் போட்டு கூட்டு செய்வதுண்டு. நேற்று அந்தக் கூட்டுதான் வீட்டில். நன்றாக இருக்கும்...

    நீங்கள் செய்வது போல செய்வது எல்லாம் சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள ராஜி....சாதத்திற்கு என்றால் மேற் சொன்னபடி....

    குறித்தும் வைத்துக் கொண்டேன்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க கீதாக்கா

      Delete
  6. ராஜி சின்ன வெங்காயம் சேர்த்து செஞ்சா சுவை வித்தியாசமா ரொம்ப நல்லாருக்கும்...ஆனா உரிச்சு வைக்கணுமே...அதான்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. உரிக்குறதுல பிரச்சனை இல்ல. ஆனா, எங்க ஊர்பக்கம் சின்ன வெங்காயம் கிலோ 60ரூபாக்கு குறையாது. அதனால இங்கலாம் பெரிய வெங்காயம்தான் பயன்படுத்துறது

      Delete
  7. சுவையா இருக்கு

    ReplyDelete
  8. ஒரு முக்கிய விஷயம் கவனிக்கவேண்டும். காலில் மூட்டு வலி -ஆர்த்ரைட்டிஸ் -உள்ளவர்கள் பலாக்கொட்டையின் பக்கமே போகக்கூடாது. போனால் வலி நிரந்தரமாக அதிகமாகிவிடும். பலாச்சுளை சாப்பிடலாம். பாதகமில்லை. மங்களூரில் ஏழு வருடம் இருந்தேன். சீசனில் மூன்று மாதங்கள் எல்லா கொங்க்கணி, துளு, ஓட்டல்களில் பலாக்குழம்பு, பலாச்செதிள் ஊறுகாய், பலாப்பழ பஜ்ஜி, பலாக்கொட்டை குருமா - என்று ஒவ்வொருவேளைக்கும் மூன்று நான்கு வகையான உண்பொருட்கள் தவிர்க்கமுடியாமல் இருக்கும். பலன் மூட்டு வலி. எனவே உள்ளூர்க்காரர்கள் இவற்றை இலாவகமாகத் தவிர்ப்பதுண்டு.

    -இராய செல்லப்பா சென்னை

    ReplyDelete
    Replies
    1. முட்டி வலிக்குமா?! இது எனக்கு புது தகவல்ப்பா

      Delete
  9. எதையும் வீணாக்காமல் உபயோகிப்பது நல்லதே இது ஒரு சீசனல் வரைட்டி

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்ப்பா. கொடுக்காப்புளி சீசனில் அதுல பொரியல் செய்வோம். பெரும்பாலும் அந்தந்த சீசனை தவிர்க்க அதுக்கேத்த உணவுகளை இயற்கை நமக்கு கொடுத்துக்கிட்டுதான் இருக்கு, நாமதான் அலட்சியப்படுத்திடுறோம்,

      Delete