Friday, August 31, 2018

ஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி பொற்கோவில் - அறிவோம் ஆலயம்



முன்னலாம் வேலூர்ன்னதும் கோட்டையும், வெயிலும்தான் நினைவுக்கு வரும். ஆனா, இப்ப பஞ்சாப்பில் சீக்கியர்களுக்கான பொற்கோவில் இருக்குறது மாதிரி  இந்துகளுக்கு தமிழகத்தில் ஒரு பொற்கோவில் இருக்கு.  பொதுவா சாமியார், சாமியார் மடம்ன்னா டூ இல்ல ட்வெண்டி ஸ்டெப் பேக் அடிக்கும் ஆளு நான். ஆனா, எனக்கு இந்த கோவிலுக்கு போக பிடிக்கும். ஏன்னா, அந்த காலத்து டி.ஆர் பட செட் மாதிரி பிரம்மாண்டமான கோவில். கோவிலின் சுத்தம், நீர் மேலாண்மை, குப்பைக்கழிகளின் மறுசுழற்சி, கழிவுநீரை சுத்திகரித்து அதனை விவசாயத்துக்கு பயன்படுத்துதல், குறைந்த செலவில் மருத்துவம்ன்னு  சில விசயங்கள் பிடிக்கும். இக்கோவிலில் பிடிக்காத விசயம் கோவிலை வியாபார தலமாக்கியது.

சமீபத்துல உருவான இந்த கோவில்  வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட  மலைக்கோடி என்னும் இடத்தில் இருக்கு. இந்த கோவிலுக்கு நாராயணி பீடம் ன்னு பேரு. இந்த கோவிலை நிர்மாணிக்க காரணமானவர் சக்தி அம்மா.  இக்கோவில் முழுக்க முழுக்க தங்கத்தகட்டினால் வேயப்பட்டது.  இந்த கோவில் நால்வகை வேதத்தை வெளிபடுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முழுக்க முழுக்க தங்கத்தாலான கோவில்களில்  இது இரண்டாவது கோவில். இந்த தங்கக்கோவில் சுமார் 5,000 சதுர அடிப்பரப்பளவு பரந்து விரிஞ்சிருக்கு, . தங்க கோவிலில்  ‘நாராயணி அம்மன்”. வீற்றிருக்கிறாள். இவள் லட்சுமி தேவியின் அம்சம்.  
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் நாராயணி அம்மன் இப்பகுதியில் சுயம்புவாய்  தோன்றி இருக்கிறாள்.  சிறிய குடிசை அமைத்து இப்பகுதி மக்கள் வழிப்பட்டு வந்திருக்கின்றனர்.  மலைக்கோடி ஒரு காலத்தில் ஆள் அரவமற்ற காடாக இருந்தது. இங்கு சித்தர்களும், யோகிகளும் தியானம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. நாராயணி அம்மன் உபாசகரான சக்தி அம்மாவின் விருப்பத்தின்பேரில் 20 ஆண்டுகளுக்கு முன் இந்த இடத்தில்  பொற்கோவில் கட்ட ஆரம்பித்து  2007ல்  கோவில் கட்டுமானப்பணி முடிவடைந்தது.

500 ஆண்டுகால பழமையான கோவிலாய் இருந்தாலும்,  நெடிதுயர்ந்த நுழைவுவாயிலில் மெட்டல் டிடெக்டர், சிசிடிவி கேமரா, ஆன்லைன் புக்கிங் என டிஜிட்டல் மயமாவும் இருக்கு இக்கோவில். வழக்கமான கோவில் உண்டியலுக்கு பதிலாய் கோட் சூட் அணிந்த இளம்பெண்கள் மானிட்டர் முன் நின்று கிரெடிட் கார்டை தேய்த்து நன்கொடைகளை வசூலிக்குறாங்க. 
கோயில் வளாகத்திலேயே அன்னலட்சுமி சைவ உணவகம் நாலு மாடி யில் நமக்கு பசியாற்றுது. நாராயணி அம்மனின் லட்டு பிரசாதம் ஒன்று ரூபா பத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.  கோவிலை சுத்தி அகழி ஒன்னு இருக்கு. 

கோவிலை பறவையின் பார்வையில் பார்க்கும்போது சுதர்சன சக்கர அமைப்பில் இருக்கு. சக்கரத்தின் நடுவில் நாராயணி அம்மன் வீற்றிருக்கிறாள். சுமார் இரண்டு கிமீ தூரத்துக்கு நட்சத்திர அமைப்பில்  அமைந்த பாதையை சுற்றி வந்து அம்மனை தரிசிக்கனும். கோவில் வளாகம் முழுக்க பச்சை பசேலென புல்வெளிகளும், மரங்களும் நிறைந்து நமக்கு சுத்தமான காற்றை அளிக்குது. அத்தோடு நடக்குற கஷ்டம் தெரியாம இருக்க ஆங்காங்கு முயல், மான், மயில் மாதிரியான சிற்பங்களும்,  துர்க்கை அம்மன், சரஸ்வதி தேவி சிற்பங்களும், செயற்கை நீரூற்றுகளும், செயற்கை குன்றுமென ஒரு சினிமா செட்டிங்க்க்குள் வந்த மாதிரி இருக்கு. 

நட்சத்திர வட்டத்தை சுற்றி முடித்து இறுதியாக தங்கக் கோயிலை அண்மித்தோம்.சூரிய ஒளிபட்டு அந்த இடமே ஜொலித்து கொண்டிருந்தது. மனிதனுடைய காமம், குரோதம், மதம், லோபம், சாத்வீகம், அகந்தை, டம்பம், ராஜஸம், தாமஸம், ஞானம், மனம், அஞ்ஞானம், கண், காது, மூக்கு, நாக்கு, மெய்யென வகையான குணங்களை தாண்டி இறைவனிடம் போவதை உணர்த்தக்கூடிய வகையில் 18 நுழைவு வாயில்கள் அமைச்சிருக்காங்க. 

ஆங்காங்கு சக்தி அம்மன் படமும், அவரின் அருளுரைகளையும் நம் கவனத்துக்கு கொண்டு வர பொறிச்சு வச்சிருக்காங்க. சாண்டிலியர் விளக்குகள், பழங்கால மாட கல் விளக்குகள்  இங்க இருக்கு. இதுலாம் இரவை பகல் போல மாற்றுது. ஜொலிக்கும் மகாமண்டபத்தில் நின்று  அம்மனை தரிசித்தால் அஷ்ட ஐஸ்வரியங்களும், 16 வகையான செல்வங்களும் பெற்று மகிழ்வான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. 

வேலூரிலிருந்து  6 கி.மீ தொலைவில் உள்ள திருமலைக்கொடி என்கிற   ஸ்ரீபுரம் அமைந்திருக்கு. ஸ்ரீன்னா மகாலட்சுமின்னு அர்த்தம். மகாலட்சுமி வாசம் செய்யும் ஊர் என்பதால் ஸ்ரீபுரம்ன்னு பேர் உண்டானதாம்.  1000 ஏக்கர் நிலப்பரப்பில் 55000 சதுர அடியில் கோவில் அமைந்துள்ளது. 

இக்கோவிலை அமைக்க திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து 400 பொற்கொல்லர்கள் மற்றும் செப்பு வேலை செய்பவர்கள் ஆறு வருடங்கள் அயராது உழைத்தனர். இந்திய ரூபாய் 600 கோடி செலவில் கோவில் எழுந்து உள்ளது. கோவில் சுவர்களில் செப்புத் தகடுகள் அடிக்கப்பட்டு பின் தங்கத் தகடுகள் 09 அடுக்குகளாக வேயப்பட்டிருக்கு. 

எத்தனை நேரமானாலும் கோவில் அழகை கண்ணாற கண்டு ரசிக்கலாம். ஆனா தொட்டு பார்க்க முடியாத மாதிரி தடுப்பு உண்டாக்கி வச்சிருக்காங்க.  சிறப்பு தரிசனத்துக்கு 250ரூபான்னு வசூலிக்குறாங்க. 

இங்கு நவராத்திரி, சிவராத்திரி, புரட்டாசி சனிக்கிழமை, கோகுலாஷ்டமின்னு அத்தனை விசேசமும் கொண்டாடப்படுது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் கோ பூஜை செய்விக்கப்படுது. இதில் அனைத்து பக்தர்களும் கலந்துக்கொள்ளலாம்.

சதீஷ் (ஸ்ரீசக்தி அம்மா) என்பவர் தன் பெற்றோர்களுடன்   அரியூர்-மலைக்கோடியில் ஒரு வீடு கட்டி குடியேறினார்கள். வீட்டின்முன் புதர் மண்டிக்கிடந்தது. அதற்குள் ஒரு புற்றும் இருந்தது. புற்று  இருந்தா பாம்பு தொல்லை இருக்குமென பயந்த பெற்றோரிடம்,  பாம்பு சக்தியின் அம்சம், அதனால் அதை ஒன்றும் செய்ய வேண்டாமென சதீஷ் சொல்லியும் கேட்காமால் பாம்பு புற்றை இடிக்க ஆட்களை கூட்டி வந்தனர். ,  புற்றை இடிக்க வந்தவர், பாம்பின் வாசனையை அறிய (புற்றில் பாம்பு  இருந்தால் மல்லிகைப்பூ வாசனை வரும்) மூக்கை வைத்து முகர்ந்து பார்த்தார். அவ்வளவு தான்.. .. பாம்பு பிடிப்பவர் அப்படியே தூக்கி வீசப்பட்டார்.

நடுங்கியபடியே எழுந்த அவர்,  இந்த புற்று சாதாரண புற்று இல்ல, தெய்வசக்தி நிறைந்த புற்று. இந்த புற்று இங்கேயே இருப்பது நல்லது. இதனால் இந்த  பகுதிக்கு நன்மை கிடைக்கும். எனவே, அகற்ற வேண்டாம் என்ற கூறியபடி புற்றை பார்த்து கைகூப்பி வணங்கினார். அருகிலிருந்த பெற்றோர்கள் மெய் சிலிர்த்தனர். ஸ்ரீசக்தி அம்மா சொன்னது சரிதான் என்று புரிந்துகொண்டனர். இந்த புற்றுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஸ்ரீசக்தி அம்மா  பூஜை செய்து வந்தார்கள். புற்றின் அருகில் அமர்ந்தபடி நாடிவந்த பக்தர்களுக்கு ஞானவாக்கு அருளினர். இன்றும் அருளி வருகிறார்.
பொற்கோவிலின் எதிரே ரோட்டைக் கடந்து சென்றால், ஒரு குடிசைக்குள் சுயம்பு நாராயணியும், இதை ஒட்டிய கற்கோவிலில்மற்றொரு நாராயணியும் அருள்செய்கின்றனர். இந்தக் கோவிலைதான் ‘நாராயணி பீடம்”ன்னு சொல்வாங்க. . இங்குதான்  கோவிலின் நிறுவனரான ‘சக்தி அம்மா” இருக்கிறார். அவர் தினமும் பூஜை செய்ய 75 கிலோ தங்கத்தால் ஆன சுவர்ணலட்சுமி சிலை இருக்கு.   இந்த அம்மன் எதிரே 27 அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன 10 அடுக்கு கொண்ட ஆயிரம் திரிகள் ஏற்றக்கூடிய விளக்கு உள்ளது.
இந்த அம்மனுக்கு இங்கு வரும் அனைத்து பக்தர்களும் தங்கள் கைகளால் அபிஷேகம் செய்விக்கலாம்.   

 16 கால்களைக் கொண்ட ஸ்ரீசகஸ்ரதீப மண்டபமும், 45 அடி உயரம் கொண்ட ஸ்ரீமகள் நீர்வீழ்ச்சியும், திறந்தவெளி கலையரங்கமும், புல்வெளியும், நீரூற்றுகளும், பூங்காக்களும் இங்கு உள்ளன. இந்த கோயிலில் உலகின் மிகப் பெரிய வீணையும், 10008 திருவிளக்கும் இங்க இருக்கு இது ஆசியாவிலேயே மிகப் பெரிய பொற்கோயிலாகும். 



மக்கள் அனைவரும் எளிதில் கோயிலுக்கு வருவதில்லை.  ஆன்மிக கருத்துக்களை சொன்னாலும் மக்கள் விரும்பி கேட்பதுமில்லை. மக்களை ஈர்க்கும் பொருட்டு பிரம்மாண்டமான கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இப்பிரம்மாண்டத்தை காண வரும் பக்தர்கள் இந்த கோயிலில் அருள்பாலிக்கும் மகாலட்சுமியை தரிசிப்பதோடு உள்ளே எழுதப்பட்டிருக்கும் ஆன்மிக தத்துவங்களையும் படித்து செல்வார்கள் என்ற நோக்கத்துடன் இந்த கோயிலை கட்டியதாக சக்தி அம்மா சொல்வார்.

பாதுகாப்பு காரணமாய் செல்போன், கேமராவை கோவிலுக்குள் கொண்டு செல்ல தடை போட்டிருக்காங்க. அதிக தூரம் நடக்க முடியாதவர்களுக்கென சக்கர நாற்காலி வசதி உண்டு. 
வேலூரிலிருந்து 6கிமீ தூரத்தில் இக்கோவில் இருக்கு. வேலூரிலிருந்து டவுன் பஸ் போகும். 15 ரூபா கொடுத்து ஷேர் ஆட்டோக்களிலும் போகலாம். கோவிலை சுத்தி பார்த்துட்டு வரும்வரை நம்முடைய உடைமைகளை பாதுகாக்க லாக்கர் வசதி இங்க இருக்கு. அம்மனை தரிசிச்சுட்டு வர்றவங்க பசியாற அன்னதானமும் நடக்குது.

சாதி, மத பேதமில்லாம எல்லோரும் அம்மனை தரிசிக்கலாம். காலை 8 மணி முதல் இரவு 9 வரை கோவில் திறந்திருக்கும். ஐந்து கால பூஜை நடைப்பெறும். படங்கள் அனைத்தும் ஸ்ரீ நாராயணி பீடத்து முகநூல் பக்கத்திலிருந்து எடுத்தது.
நன்றியுடன்
ராஜி. 

13 comments:

  1. ரொம்பவே பாப்புலர் கோவில் தான். எல்லா இடங்களிலும் தங்கம் - என்ன சொல்ல. இதுவரை இந்தப் பக்கம் வந்ததில்லை. வந்தால் செல்ல வேண்டும் என்ற எண்ணம் உண்டு. ஆனால் காமிராவுக்கு அனுமதி இல்லை என்பது வர யோசிக்க வைக்கிறது! :)

    ReplyDelete
    Replies
    1. இங்கு உங்க மூன்றாவது கண்ணுக்கு வேலையே இல்லண்ணே. ஆனா பார்க்கலாம்

      Delete
  2. போகவேண்டும் என்று நெடுநாட்களாய் நினைத்திருக்கும் கோவில்தான். ஆர்ப்பாட்டமாய் இருக்கும் போல! பக்தி குறைவாய்த்தான் வருமோ!

    ReplyDelete
    Replies
    1. பக்தியா?! அதுக்கு வாய்ப்பே இல்ல. சும்மா சுத்தி பார்க்க போகலாம்

      Delete
  3. ஒரு முறை சென்று வந்துள்ளேன்...

    ReplyDelete
    Replies
    1. மாலை 4 மணிக்கு போகனும் அப்பதான் பகல், இரவு இரண்டு வேளைகளிலும் இக்கோவில் எப்படி இருக்குன்னு பார்க்கலாம்

      Delete
  4. தகவல்கள் பிரமிக்க வைக்கிறது சகோ.
    வேலூர் என்றால் மனதில் ஜெயிலும் நிழலாடும்.

    ReplyDelete
    Replies
    1. அடடா! வேலூர்ல எம்புட்டு விசயமிருக்கு. ஜெயில்தானா நினைவுக்கு வரனும்?!

      Delete
  5. இக்கோயிலைப் பற்றி கேள்விப்பட்டுள்ளேன். நாயன்மார்களால் பாடப்பெற்ற கோயில்களையும், மங்களாசாசனம் பெற்ற கோயில்களையும் பார்த்து வந்த நிலையில் இதுபோன்ற அண்மையில் உருவான கோயில் சற்றே வித்தியாசமாகத் தெரிவதை உணர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இங்க போறது சாமி கும்பிட இல்லப்பா. சும்மா பொழுதை போக்கி பிரம்மாண்டத்தை கண்டு ரசிக்க...

      Delete
  6. இந்த கோவிலில் தொட்டதுக்கெல்லாம் காசு என்பதும் உங்களுக்கு தெரியுமா ,இறைவன் என்பவன் எல்லோருக்கும் பொது ,எப்படி இறைவனின் அம்சமான சூரியன் ,நல்லவர்களுக்கும் ,கெட்டவர்களுக்கும்,சந்தனநீருக்கும் ,சாக்கடை நீருக்கும் ,விளைநிலங்களுக்கும் ,தரிசு நிலங்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் ஒளிவீசுகின்றானோ அப்படி இருக்கவேண்டும் .அதைவிட்டுவிட்டு ,காசு உள்ளவன் ,அருகிலும் ,காசில்லாதவன் தூரத்திலும் நின்று கும்பிடுவதுதான் இங்குள்ள இறை தத்துவமா ,எதற்காக அறையினுள் அடைத்து காக்கவைத்து தரிசனம் கொடுக்கவைக்கிறார்கள் ,கூட்டத்தை காட்டுவதற்காகவே ,ஒரு சுற்றுலா தலத்திற்கு செல்லும் உணர்வுதான் ,இறைவனை உணர்ந்த ஆன்மீகதிக்கு இந்த கோவிலுக்கு செல்லும் போது வரும் ,சக்தியின் படத்திற்கு அருகில் எதற்காக அற்ப மானிடப்பிறவிகளின் படங்களை இணைத்து வெளியிடுகின்றனர் .அது தவறில்லையா ,மேல்மருவத்தூரிலும் இதேதவரை செய்கின்றனர் .மாயபிறபருக்கும் மன்னன்னடி போற்றி.என்று இறைவனை வணங்கி பாவச்செயல்களிலிருந்து விடுபட்டனர்,உண்மையை உணர்ந்த மனிதர்கள் ,ஆனால் ,இங்கே மனிதனையே வாங்கவைத்து ,இந்த கோவிலுக்கு வரும் மானிடர்களை மேலும் அறியாமையில் சிக்கவைக்கின்ற்னர் .மற்றபடி நீங்கள் இந்த கட்டுரையை விளக்கிய விதம் அருமையாக இருக்கிறது .

    ReplyDelete
    Replies
    1. ஹலோ ஹலோ ரொம்ப பொங்காதேள். நானும் இதை சொல்லி இருக்கேன். தொட்டதுக்கெல்லாம் காசு கேப்பாங்க. சினிமா செட்டிங்க் மாதிரி இருக்குன்னு சொல்லிட்டேன். சாமி கும்பிட கோவிலுக்குதான் போகனும்ன்னு இல்ல. மனசு ஒருநிலைப்பட்டா கழிவறையிலும் கும்பிடலாம். இது ஒரு பொழுது போக்குத்தலம் மட்டுமே. இங்க மனசு நிலைப்படாது. சும்மா சுத்தி பார்க்க குடும்பத்தோடு போகலாம். பக்கமிருந்தும் நானே இதுவரை இருமுறை மட்டுமே போய் இருக்கேன்.

      இந்த கோவிலை பிடிக்கும்ன்னு சொன்னதுக்கு காரணம் சுத்தம், கழிவுப்பொருட்களை மறுசுழற்சி செய்வது, குறைஞ்ச செலவுல மருத்துவம்ன்னு இதுலாம்தான். மத்தபடி சக்தி அம்மா மீது பக்தி இல்ல, மத்தபடி இந்த சாமியார்கள்ன்னாலே எனக்கு அலர்ஜி. பங்காரு அடிகளார், சக்தி அம்மா, ரத்னகிரி பாலமுருகனடிமை, சாயிபாபா கோஷ்டி, அமிர்தானந்தம்மா கோஷ்டி, ஈஷா கோஷ்டின்னாலே எனக்கு பிடிக்காது. எல்லாரும் பிராடுங்கன்னு ஐ நோ,

      இதே சக்தி அம்மாவின் மறுபக்கம் என்னால் எழுத முடியும். ஆதாரத்தோடு எழுதட்டுமா?! பங்காரு அடிகளார் பத்தி உங்களைவிட எனக்கு நல்லாவே தெரியும். என் பொண்ணு பங்காரு அடிகளார் கல்வி குழுமத்தில்தான் படிக்குறா. அவள் தோழிக்கு நேர்ந்த கதி தெரியுமா உங்களுக்கு?! சொல்லவா?! இன்னும் எட்டு மாசம் இருக்கு என் படிப்பை முடிக்க. அவளை பாதுகாக்க தினத்துக்கு மூணு மணிநேரம் செலவிட்டு கூட்டி போய் விட்டு கூட்டி வரேன். அதோடு, அங்க என் முறைப்பையன் வேலை செய்யுறார். அவர் பொழுதன்னிக்கும் இவளை கண்காணிச்சிட்டிருப்பார்.

      உங்களைவிட சாமியார்ன்னு சொல்லி வேசம் போடும் பயலுகளை பத்தி எனக்கு நல்லாவே தெரியும்.

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
    2. நீங்க சொல்லும் திருவண்ணாமலையும் கூட்டம் வியாபாரமாகிட்டு நிஜமாவே சாமி கும்பிடனும்ன்னு நினைச்சா வீட்டில் உக்காந்து கும்பிட்டா போதும்ன்னு என் அப்பா சொல்வாங்க.

      Delete