Saturday, December 29, 2018

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை - கிராமத்து வாழ்க்கை 5

இன்னிக்கு ரெண்டு மூணு மொபைல், இணையம், வாகன வசதி, பொருளாதார முன்னேற்றம், சாப்பிட, உடுத்த, பயன்படுத்தன்னு எதும் சட்டுன்னு கிடைக்கும் காலத்தில் இருந்தாலும் 80, 90களில் வாழ்ந்த நிம்மதியும், திருப்தியும் இருக்கான்னு கேட்டா இல்லைன்னுதான் சொல்வேன். பணமும், வசதி வாய்ப்புகளும் ஒரு மனிதனை திருப்திபடுத்திடாது. அதையெல்லாம் தாண்டி,  அவனை உயிர்ப்போடு வைக்க நிறைய விசயங்கள் இருக்கு.  இப்ப நாமலாம் வாழ்ந்துக்கிட்டுதான் இருக்கோம். ஆனா, உயிர்ப்போடு இருக்கோமான்னு கேட்டா இல்லைன்னுதான் சொல்வேன். இதுதான் உயிரோடு இருப்பதற்கும் உயிர்ப்போடு இருப்பதற்கும் மலையளவு வித்தியாசம் உண்டு. அப்படி உயிர்ப்போடு இருந்த நாட்களின் நினைவு மீட்டலாய் சில பதிவுகளே இந்த கிராமத்து வாழ்க்கை தொடர்...
இந்த தலைமுறை பிள்ளைகளுக்கு மாவாட்டும் உரல்கூட தெரிஞ்சிருக்கும்.  நிறைய டிசைன்ல இப்பலாம் கிடைக்குது. பூண்டு இடிக்க சின்ன சைஸ் உரல் கிடைக்குது. அதனால்கூட பிள்ளைகளுக்கு உரல் எப்படி இருக்கும்ன்னு தெரிஞ்சுடும். ஆனா தானியங்கள் இடிக்கும்,உரலும், உலக்கையும் தெரிஞ்சிருக்காது.  மாவாட்டும் உரலுக்கும், இடிக்கும் உரலுக்கும் வித்தியாசம் உண்டு. ஒரு கல்லில் கொஞ்சம் குழைவா இருக்கும் பரப்பில், நடுவில் பள்ளமா இருந்தா அது அரைக்கும் உரல். முழுக்க முழுக்க ஆழமான பள்ளமா இருந்தா அது இடிக்கும் உரல்.மாவரைக்கும்போது மாவு சிந்தாம சிதறாம இருக்க பரவலான இடம் வேணும். ஆனா இடிக்கும்போது தானியங்கள் வெளிய சிதறாம இருக்க, ஆழம் அதிகமா வேணும். 

உலக்கை.
கிட்டத்தட்ட ஆளுயரத்துக்கு 2.1/2 அங்குல விட்டம்கொண்ட மரக்கம்பு  ஒன்னுல நுனியிலும் இரும்பினால்  கவசம் மாதிரி பூண் போட்டு வச்சிருப்பாங்க. அது எதுக்குன்னா மரத்தில் தானியங்களை குத்தினா தானியங்கள் உடையாது. அதுக்குதான்.. பண்டிகைகளில் அம்மா சமைக்க, நான் மாவு இடிச்சு கொடுத்திருக்கேன். அம்மா, அத்தை, பெரியம்மாலாம் சேர்ந்தாங்கன்னா, ரெண்டு பேர் சேர்ந்து இடிப்பாங்க ஒருவர் உலக்கை இடிக்க. இன்னொருவர் உலக்கை தூக்க... இப்படி போகும். சரியான கவனிப்பும், ஒத்துழைப்பும், டைமிங்கும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். தமிழக பெண்களுக்கு பிறப்புலயே இதுலாம் வந்திருக்கு. இப்பதான் வாழ்க்கைமுறைலாம் மாறி பிள்ளைக தறிக்கெட்டு போகுது :-(
சைக்கிள் ரிக்‌ஷா..
80களில் ஆட்டோக்கள் சின்னஞ்சிறு நகரங்களிலும் வர ஆரம்பிச்சது. ஆனாலும், 10, 20கிமீன்னாலும் நடக்க, சைக்கிளில்போக வெசனப்படாத ஆட்களா இருந்ததாலும்,  ஆட்டோ கட்டணமும் ஆட்டோக்களை உபயோகப்படுத்த மக்கள் யோசிச்சாங்க. எங்க போனாலும் நடையும், சைக்கிளும்தான். உடம்பு சரியில்லாதபோது, கைக்குழந்தைக்காரி, நிறைமாத கர்ப்பிணி, புதுசா கல்யாணமானவங்க... இப்படி ஒருசில ஆட்களுக்காக இருந்தது சைக்கிள் ரிக்‌ஷா.  மணிலாம் தொங்கவிட்டு, ரேடியோன்னு கலர் கலரா அழகா இருக்கும். முன்னலாம், கடை, சினிமா, கட்சி விளம்பரத்துக்கு இந்த சைக்கிள் ரிக்‌ஷா பயன்பட்டிருக்கு. 

அஞ்சு பைசா..
நம்ம ரேஞ்சுக்கு இதுவே அதிகம்... பெரும்பாலும் வீட்டில் அம்மா பண்டம்லாம் அடிக்கடி செய்வாங்க. கொடுக்காப்புளி, சீதாப்பழம், கொய்யாப்பழம், நுங்கு, பனம்பழம் இப்படி எல்லாமே நம்ம வீட்டில், அக்கம்பக்கத்து வீட்டில் கொடுத்துடுவாங்க.  ஆனா இந்த தேன்மிட்டாய், புளிஜாம் , குருவிரொட்டி, கலர் அப்பளம் இதுலாம் கிடைக்காதே. அஞ்சு பைசா கொடுத்தா தேன்மிட்டாய் கைநிறைய கொடுப்பார் கடைக்காரர். வெளியூரிலிருந்து வந்து குடியிருக்கும் அரசு ஊழியர்ன்னா அந்த ஊரில் அம்புட்டு மரியாதை கிடைக்கும். கம்பு, வேர்க்கடலை, சோளம், அவரைக்காய், கத்திரிக்காய்ன்னு வீட்டில் விளையும் பொருட்களில் ஒரு பங்கு வீட்டுக்கே கொடுத்துவிடுவாங்க. அந்தமாதிரி மத்த பிள்ளைகளைவிட எனக்கு அதிகமா கடைக்காரர் கொடுப்பார். 
பத்து பைசா
அலுமினியத்திலும் இருக்கும், கொஞ்சம் கனமா பித்தளையிலும் இருக்கும் இந்த பத்து பைசாவைகொண்டு கடையில் பொருட்கள் வாங்குனதைவிட இதன்மேல் பேப்பரை வச்சி பென்சிலைக்கொண்டு கிறுக்கினா பத்து பைசாவின் அச்சு பேப்பரில் வரும். பூமாதிரி அழகா இருக்கும் இந்த பத்துபைசாவை வரைய அத்தனை பிடிக்கும்.
பைசா கிடைச்சா ஒன்னு பசங்க வாங்கி திம்பாங்க. இல்லன்னா, உண்டியல்ல சேர்த்து வைப்பாங்க. ஆனா, நான் இந்த இருபது பைசா கிடைச்சா, பத்திரப்படுத்தி வச்சுப்பேன். நாங்க இருந்த ஊரிலிருந்து வேற ஊருக்கு போக லெவல் கிராசிங்கை கிராஸ் பண்ணிட்டுதான் போகனும்.  அந்த ஊர் பஸ் போகும்போதுதான் ட்ரெயின் வரும். அப்ப காத்திருக்கும்போது, ரயில் வாரும்போது இருபது பைசாவை தண்டவாளத்துமேல வச்சி ரயில் ஏறிப்போக காத்திருப்பேன்.  அந்த இருபது பைசாமேல ட்ரெயின் ஏறி இறங்கினா அது காந்தமா மாறிடும்ன்னு ஒரு கூமுட்டை சொன்னதை கேட்டு பல இருபது பைசாக்கள் பாழானதுதான் மிச்சம்.  வடிவேலு காமெடி மாதிரி புடுங்குறது மொத்தமே தேவையில்லாத ஆணின்னு விதிச்சிருக்கு போல:-(
கயிற்று கட்டில்...
பச்சை பனை  ஓலையை வெட்டி, அதன் மட்டையிலிருந்து உரித்து எடுக்கப்பட்ட நாரை தண்ணில ஊற வச்சு கயிறாக்கி, அந்த கயிற்றில் பின்னப்பட்ட கட்டில்.  புதுசுல முண்டும் முடிச்சுமா இருக்கும் படுத்தா முதுகுலாம் வலிக்கும்.  ஆனா, நாளாக நாளாக சரியாகிடுமான்னு கேட்டா அப்படியில்ல அதுவே பழகிடும்.  கயிறு பிஞ்சு போச்சுன்னா வேற பின்னிப்பாங்க.  என் பாட்டி வீட்டில் இருக்கும். அது கழனில போட்டு படுத்துக்கும் ஆனா, பாட்டி இதுல படுக்க விடாது. பாட்டி இல்லாதபோது ஏறி குதிச்சு கட்டில்காலையெல்லாம் உடைச்சு விட்டிருக்கேன். அதனால் நான் ஊருக்கு போனாலே   அதை  பம்ப்செட்டுக்குள் வச்சி பூட்டிடும்.   இந்த கட்டில் கயிற்றை பின்ன எல்லாருக்கும் தெரியாது, சிலருக்கு மட்டுமே பின்ன தெரியும். அப்படி பின்னுறவங்களை கூப்பிட்டா ஏக கிராக்கி பண்ணுவாங்க. சாப்பாடு, டீ, பைசான்னு கொடுத்து தாஜா பண்னுவாங்க.
தெருவுக்கு தெரு பொதுக்கிணறு இருக்கும். ஊருக்கு நாலு நல்ல தண்ணி கிணறு இருக்கும். ஊர்பயணத்தின்போது எங்காவது அலைஞ்சு திரிஞ்சா காலாற திண்ணையும் தாகம் தீர்க்க பானை தண்ணியும் கொடுத்த மனிதர்களும் இருந்தாங்க. வயிறு வலிக்கு பன்னீர் சோடா, வயித்து போக்குக்கு சோடா, செரிமானத்துக்கு சோடாவை உடைச்சதும் உள்ளிருக்கும் காத்து வெள்யேறும் முன் உப்பு போட்டு கொடுப்பாங்க. விருந்தாளிங்க வந்தா பச்சை கலரு...  கலரை குடிக்கவே அடிக்கடி வயிறுவலிக்குதுன்னு பொய் சொல்வேன். அம்மாவும் வாங்கி தருவாங்க. என்ன ஒரு இம்சைன்னா, அடிக்கடி வயிறு வலிக்குதே, வயித்துல நாக்குப்பூச்சி இருக்கோன்னு அம்மா மாசத்துக்கு ரெண்டு தரம் ஓமத்தண்ணி வாங்கி தரும். கருமம் அது ஒரே புளிப்ப்ப்ப்ப்ப்ப்பா இருக்கும். கலர்தண்ணி கிடைக்கனுமேன்னு அதையும் குடிச்சு வைப்பேன். இன்னிக்கு பெப்சி கோக்ன்னு குடிச்சாலும் அந்த திருப்தி வருவதில்லை. கோலி சோடாவை குடிக்கவும் திறமை வேணும். எந்த பக்கம் வேணும்ன்னாலும் குடிச்சுட முடியாது., கோலி வந்து அடைச்சுக்கிட்டு கலர்தண்ணி வராது. பாட்டிலின் வெளியில் ஒருபக்கம் பள்ளமா இருக்கும். அது உள்ளுக்குள் மேடாய் இருக்கும். அப்படி மேடாய் இருக்கும் பக்கம் குடிச்சாதான் கலர்தண்ணி வரும். இல்லன்னா வராது.

கலாக்காய்
ஏரி, ஆறு, குளத்தின் பக்கத்து வீதிகளில் இருக்கும் செடியில் கிடைக்கும். பச்சையும், வயலட் கலரும் சேர்ந்த நிறத்தில் கிடைக்கும் இந்த காய்க்கு பேரு எங்க ஊரில் கலாக்காய்.. இளம்புளிப்பா இருக்கும் இதன் சுவை. இதை அப்படியேயும் சாப்பிடலாம், இல்லன்னா, உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து சாப்பிட்டா டாப் கிளாஸ். கிராமத்துல இருக்கும்வரைக்கும் பறிச்சு சாப்பிட்டது, நகரத்துக்கு வந்தபின் ஒரு கூறு ஒரு ரூபான்னு வாங்கி சாப்பிட்டிருக்கேன். ரொம்ப நாள் கழிச்சு இப்ப சாப்பிட்டேன். செம்ம்ம்ம்ம்ம்ம...


கோரைப்பாய்...
கட்டில், கலர்கலரா பிளாஸ்டிக் பாய், மெத்தைன்னு ஆயிரமிருந்தாலும், கோரைப்பாய்க்கு ஈடாகாது. சுருட்டி கதவுக்கு பின்னாடி வச்சிருக்கும் இந்த பாயை தூக்கிவர அத்தனை சிரமப்படுவேன். அதை விரிச்சு போட கையாலாகாது. தினத்துக்கும் அம்மா திட்டுவாங்க. ஒழுங்கா பாயை விரிக்கைலைன்னு.... ஏன்னா, பிஞ்சு வந்திடாம இருக்க குச்சிகளை மடிச்சு ஓரத்துல தைத்து வச்சிருப்பாங்க.  அப்படி தச்சு வச்சிருக்கும் பக்கத்தை மேல வர்றமாதிரி விரிச்சு படுத்தா குச்சிகள் குத்தும்., இதை தெளிவா சொல்லிக்கொடுத்திருந்தா புரிஞ்சிருக்கும் :-( . இப்பயும் இந்த கோரைப்பாய்தான் எனக்கு. என்ன ஒன்னு! அப்ப இருந்த நீளம் அகலம், தடிமன்ல இப்ப வர்றது இல்ல. ரொம்ப மெல்லிசா இருக்கு.

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனைன்னு பழமொழி சொல்வாங்கல்ல அந்த பழமொழிக்கு காரணம், பாய் முடைய கற்பூர புல், கோரை புல்ன்னு ரெண்டு வகை புல் பயன்படுது. இதுல கற்பூரபுல் விலை ஜாஸ்தி. கற்பூரபுல்ன்னால நெய்யப்பட்ட பாய்ல, கற்பூர வாசனை வருமாம்.  பணக்காரங்கதான் வாங்குவாங்க. கோரைப்புல்லுக்கு இன்னொரு பேரு கழு.  அதனால, கற்பூர புல்லினால் பாய் நெய்றவங்களும், பயன்படுத்துறவங்களும், ‘கழு’ தைக்க வருமா கற்பூர வாசனைன்னு கேட்க,,, அதுவே மருவி இன்னிக்கு அதுவே கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனைன்னு ஆகிட்டுது. கழுதைக்கு மட்டுமில்ல நமக்கு நாட்டு பாய்களின் அருமை தெரில:-(

கிராமத்து வாழ்க்கை தொடரும்...

நன்றியுடன்,
ராஜி

18 comments:

  1. இந்த இருபது பைசா கூட புதுசு.

    தங்க நிறத்தில் ஒருபக்கம் தாமரை மலருடன் இருக்கும் இருபது பைசா பார்த்திருக்கிறீர்களா?

    ReplyDelete
    Replies
    1. ம்ஹும் நினைவில் இல்லை சகோ. இதுதான் நினைவிலிருக்கு. அதும் ரயிலுக்கு பறிகொடுத்ததால் பசுமையாய் மனதில் இருக்கு.

      Delete
    2. அதே!! ஸ்ரீராம் ....ஒரு பைசா கூட உண்டு அஞ்சு பைசா வடிவில். ஒரு பைசா செல்லுபடியாச்சுனா பார்த்துக்கோங்க நம்ம பொருளாதாரம் எவ்வளவு நல்லாருந்துச்சுன்னு...அப்ப ஒரு பைசாவின் வேல்யூ அதிகம். சிலர் சொல்லுவாங்க அப்ப ஒரு பைசா மாதிரி இப்ப ஒரு ரூபா அல்லது 2 ரூபா அப்படின்னு. ஆனா பணவீக்கம் அதிகம் அப்படின்றதுதான் உண்மை...

      கீதா

      Delete
  2. இப்போது கஜா புயலின்பின் பொதுக்கிணற்றின் அருமையை நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். அவற்றைப் புதுப்பிக்க ற்பாடுகள் செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம் இது செய்தி... நல்ல விஷயமில்லையா..சூப்பர்...

      கீதா

      Delete
    2. நல்ல செய்திதான் கீதாக்கா. ஊர்க்கதை பேசலாம்... முடி பிடிச்சு சண்டை போடலாம்... அழகு குறிப்பு முதற்கொண்டு வரன் பார்க்குறதுவரை எல்லாமே கிணத்தடியில் முடிச்சுக்கலாம்.

      Delete
  3. ஓரளவு எல்லாமே தறிக்கெட்டுப் போச்சு... எங்க ஊர் தறியும் கெட்டுப் போச்சி...

    ReplyDelete
    Replies
    1. எங்க ஊர் தறியும் கெட்டுப்போச்சுதுண்ணே.

      Delete
  4. இனிய நினைவுகளை.

    தாமரை போட்ட இருபது பைசா எங்கள் வீட்டில் இன்னும் இருக்கிறது. அர்ச்சனை மலராக அந்த நாணயத்தினை பயன்படுத்தும் வழக்கம் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. பதிவா போடுங்கண்ணே. எனக்கு மறந்துப்போச்சுது.

      Delete
  5. என் அடுத்த பதிவு FUTURE SHOCK என்னவெல்லாமோ மாற்றங்கள்

    ReplyDelete
    Replies
    1. மாற்றம் ஒன்றே மாறததுப்பா

      Delete
  6. இக்காசுகளையும் கோலி சோடாக்களையும் பார்த்து வெகுகாலமாகிவிட்டது சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. கோலி சோடாக்கள் இப்பயும் கிடைக்குதுண்ணே. நான் வாங்கி சாப்பிடுவேன். எனக்கு பெப்சி கோக் பிடிக்காது. சர்பத் குடிக்க பிடிக்கும்.

      Delete
  7. சூப்பர் ராஜி! கொசுவத்தி ஏத்தி வச்சுடீங்களே !!!!!

    ReplyDelete
    Replies
    1. கொசுவர்த்தி அப்பப்போ ஏத்தறுதான்ம்மா..

      பழசுலாம் மறக்கக்கூடாதுல்ல!

      Delete
  8. இதுல நீங்க சொல்லிருக்கறது எல்லாமே அனுபவம் உண்டு ராஜி. எவ்வளவோ நினைவுகள். களாக்கா சென்னைல கிடைக்கும்...நான் கூட ஊறுகாய் போட்டிருக்கேன். நீங்க சொல்றாப்புல சாப்பிட்டும் இருக்கேன் சூப்பரா இருக்கும்..
    கோரைப்பாய் இப்பவும் உண்டு

    கீதா

    ReplyDelete
    Replies
    1. கெளாக்காய்ல ஊறுகாய் போடலாமா?! தகவல் புதுசா இருக்கு கீதாக்கா

      Delete