Wednesday, December 12, 2018

தொட்டிப்பாலமா?! தொட்டில்பாலமா?! - மௌனச்சாட்சிகள்

கோட்டைகள், புகழ்பெற்ற கட்டிடங்கள், இடிஞ்சுபோன வரலாற்று சின்னங்கள், சமாதிகள்ன்னு மௌனசாட்சிகளில் பார்த்திருக்கோம். கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரத்துல மட்டுமில்ல நம்மாளுங்க நீர் மேலாண்மைல வெளுத்து வாங்கி இருக்காங்கன்னு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?! எல்லாம் தெரியும். முல்லை பெரியாறு அணை, சாத்தனூர் அணைன்னு நீயே பதிவு போட்டிருக்கே ராஜின்னு நீங்க எதிர்வாதம் செய்யலாம்.  காசும், இடமும், வசதி வாய்ப்பும் இருந்தால் இன்னிக்கு எத்தனையோ அணைகளை கட்டமுடியும். ஏன்னா இன்னிக்கு அறிவியல் அந்தளவுக்கு வளர்ந்திருக்கு. ஆனா, அந்த காலத்தில் அந்தரத்தில் ஒரு பாலத்தை கட்டுறதே அதிசயம். அந்த பாலத்துல தண்ணி ஓடுதுன்னா?! எத்தனை பாராட்டுக்குரிய விசயம்?! நான் எந்த இடத்தை சொல்ல வரேன்னு இந்நேரத்துக்கு பலர் யூகிச்சிருப்பீங்க. எஸ் அதே இடம்தான். குமரி மாவட்டத்தின் மாத்தூர் தொட்டிபாலம்தான்.
செங்கோட்டை டூ கொல்லம் ரயில்பாதை
வருசா வருசமும் மலைக்கு போய்வரும் அப்பா ஒருவாரத்துக்கு தான் போய் வந்த இடங்கள் பத்தி கதைகதையாய் சொல்வார். அந்த கதைகளில் தவறாமல் இடம்பெறும் இடங்களில் முக்கியமானது குற்றாலம் செங்கோட்டையிலிருக்கும் ஒரு ஓடையும், செங்கோட்டை டூ கொல்லம்  ரயில்பாலமும்( இந்த பாலம் நிறைய சினிமாவில் வந்திருக்கு)......  மாத்தூர் தொட்டிப்பாலமும்....  என் அப்பா ஒவ்வொரு இடமா  சிலாகிச்சு சொல்லச்சொல்ல  நேரில் பார்த்தமாதிரியே இருக்கும். கூடவே, அந்த இடங்களுக்குலாம் போகனும்ன்னு ஆசை வரும். 
குமரி மாவட்டத்திலிருக்கும் மாத்தூர் தொட்டிப்பாலம் ஆசியாவிலேயே மிகப்பெரிய தொட்டிப்பாலம். கேரள-தமிழக எல்லையில் இருப்பதால் இந்த இடம் கேரளத்தின் சாயலில் இருக்கும். தொட்டி மாதிரி அமைப்புள்ள பல பகுதிகளையும் இணைச்சு பாலமாக்குனதால தொட்டிப்பாலம்ன்னும், இரு மலைகளுக்குமிடையே ஒரு தொட்டில்மாதிரி இந்த பாலம் இருக்குறதால தொட்டில்பாலம்ன்னு பேர் வந்து இப்ப தொட்டிப்பாலம்ன்னு ஆகிடுச்சு. இதுக்கு பேர் வந்துச்சு.  
மலையும் மலை சார்ந்த இடமுமாய் இருந்த மாத்தூர் பகுதியிலிருக்கும்  கணியான்பாறைன்ற மலையையும் கூட்டுவாயுப்பாறைன்ற  மலையையும்  இணைச்சு, பறளியாற்று நீரை கொண்டுச்செல்ல கட்டப்பட்ட பாலமிது.  இரண்டு மலைகளை இணைச்சு கட்டப்பட்டிருக்கும் இந்த பாலத்தின் நீளம் 1204 அடி, தரைமட்டத்திலிருந்து 104அடி உயரத்தில் கட்டப்பட்டிருக்குது. 
இந்த பாலம் பெரியப்பெரிய தொட்டியா  கட்டி, அவைகள் தொகுக்கப்பட்டு தண்ணீர் செல்லும்  பாலமா மாறி இருக்கு. அந்த பகுதிகள் ஏழு அடி அகலமும், ஏழு அடி உயரமென கட்டப்பட்டிருக்கு.   இந்த பாலத்தை தாங்க மொத்தம் 28தூண்கள் கட்டப்பட்டிருக்கு.  ஒவ்வொரு தூணின் சுற்றளவும் 32 அடியாகும்.  இந்த பாலத்தின் நடுப்பக்கத்திலிருந்து கீழ பார்த்தா, ஆத்து தண்ணியும், அதைக்கடக்க ஒரு சாலையுமென அழகா காட்சியளிக்கும் இந்த இடம்.  

இந்தப் பாலத்தின் வழியா போகும் தண்ணி குமரி மாவட்டத்தின் கல்குளம், விளவங்கோடு வட்டத்திலிருக்கும் ஊர்களின் நீர்ப்பாசனத்துக்கு உதவுது. அணையிலிருந்து வரும் தண்ணி முதலில் மாத்தூர் பாலத்திற்கும் அதன்பின் செங்கோடி, வடக்குநாட்டு பாலங்கள் வழியா தேங்காய்ப்பட்டணம், அதைச் சுற்றியுள்ள கிராமத்திற்கும் பாயுது.

ஒரு டூவீலர்ல சமாளிச்சு ஓட்டுமளவுக்கு  இந்த பாலத்தின் அகலத்தில் குறுகிய பாதையில் பாலத்தின் இந்த முனையிலிருந்து அந்த முனைவரை செல்லலாம். இரு மலைகளுக்கிடையே, மேலிருக்கும் நீலவானம், பறந்து செல்லும் மேகம், கீழிருக்கும் அடர்ந்திருக்கும் தென்னை, ரப்பர் மரங்கள்,   சலசலத்து ஓடும் ஆறு என இயற்கை எழிலை கண்டு ரசிக்கலாம்.  என்னை மாதிரியான உயரத்தை கண்டு பயப்படுறவங்க இந்த இடத்தை தவிர்த்துடலாம். அதனால்தானோ என்னமோ என்னால் இதுவரை இந்த இடத்துக்கு போகமுடில.     
என்னைமாதிரி பயந்தாங்கொள்ளிங்களும், கால்வலி எடுத்தவங்களும் பாதியிலேயே கீழிறங்க, பாலத்தின் பக்கத்திலிருக்கும் படிக்கட்டுக்களால் கீழ வரலாம்.   பாலத்துக்கடியில் நதிக்கரையில் குழந்தைகள் விளையாட சின்னதா ஒரு பூங்கா இருக்கு.  கன்னியாக்குமரியின் விளவன்கோடு, கல்குளம், அதைச்சுற்றியுள்ள பகுதிகள்லாம் ஒருகாலத்தில் வறண்டிருந்தது. அப்பகுதிகளுக்கென நீர்ப்பாசன வசதிகளை செம்மைப்படுத்தினால் விவசாயம் நடந்து இப்பகுதி வளம்படும்ன்னு எண்ணிய பெருந்தலைவர் காமராஜர்  முயற்சியால் இந்த பாலம் 1962ல கட்ட ஆரம்பிச்சு,  1966ம் ஆண்டு கட்டப்பட்டது. மாத்தூர் தொட்டிப்பாலத்தின் பயனாக பல ஹெக்டர் விவசாய நிலங்கள் பயன்பெற ஆரம்பிச்சு கன்னியாக்குமரி மாவட்டம் விவசாயத்தில் தன்னிறைவு அடைஞ்சுது.
இந்த பாலம் திருவட்டாறிலிருந்து 3கிமீலும், கன்னியாக்குமரிலிருந்து 60கிமீலும், நாகர்கோவிலிலிருந்து 45கிமீ தூரத்திலும் இருக்கு.  சாலைமார்க்கமாவும், ரயில் மார்க்கமாவும் போகலாம். ஆகாயமார்க்கமா போகனும்ன்னா திருவனந்தபுரம்வரை போயிட்டு அங்கிருந்து சாலை மார்க்கமா 70கிமீ பயணிச்சா இந்த பாலம் வரும். எல்லாரும் ஒருக்கா போய் பார்க்கவேண்டிய இடம்ன்னு  அப்பா சொல்வார். எனக்குதான் இதுவரை அமையவே இல்ல. 

நம் பாட்டனின் கட்டிடக்கலை, நிர்வாகத்திறன், திட்டமிடுதல், நீர்மேலாண்மை, விவசாயத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம்ன்னு பலவிசயங்களை இன்றைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டும் விதமா மௌனமாய் நின்றுக்கொண்டிருக்கிறது இந்த மாத்தூர் தொட்டிப்பாலம்.

படங்கள்லாம் நெட்ல சுட்டது....

நன்றியுடன்,
ராஜி

14 comments:

  1. படங்களும் பதிவும் அருமை
    ஒருமுறை அவசியம் சென்று பார்த்தே ஆகவேண்டும் என்ற ஆவலைத் தங்களின் பதிவு ஏற்படுத்தியுள்ளது
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. போகும்போது சொல்லுங்கண்ணே. நானும் வரேன்,. எனக்கும் இந்த இடங்களை பார்க்கனும்ன்னு கொள்ளை ஆசை

      Delete
  2. பதிவின் தலைப்பில் எழுத்துப் பிழை உள்ளதோ?

    ReplyDelete
    Replies
    1. உள்ளதோ இல்ல இருக்குண்ணே. தவறுகளை உரிமையாய் சுட்டிக்காட்டலாம். நான் கோவிக்க மாட்டேன்.

      Delete
  3. கல்யாணத்துக்கு முன்னாடி, என் சித்தியின் தோழியை சித்தி பார்க்க போனபோது, சித்தி என்னையும் அம்மாவையும் அண்ணனையும் கூட்டிக்கொன்டு போயி காட்டினார்கள், அப்போது அவ்வளவாக ரசிப்புத்தன்மை கிடையாது ஆனால் கீழே இறங்கியபோது ஆற்றில் குதித்தே விட்டேன், அண்ணனும் குதிக்க சில்லென்ற தண்ணீர் அடடா...

    நாங்க குதிக்குறதை பார்த்துட்டு அம்மாவும் சித்தியும் குளிக்க வர, அந்த சொர்க்க நாட்கள் இப்போதும் நினைவில் பசுமையாக இருக்கிறது.

    இந்த படங்களிலே நிறைய மாற்றங்கள் வந்திருக்கிறது, நாங்கள் பார்க்கும்போது இருந்தது வேற ஸ்டைல்.

    ReplyDelete
    Replies
    1. மாற்றம் ஒன்றே மாறததுண்ணே

      Delete
  4. படங்கள் ஒவ்வொன்றும் ஆகா...!

    தகவல்களும் அருமை...

    ReplyDelete
    Replies
    1. படங்கள்லாம் முகநூலில் சுட்டதுண்ணே.

      தகவல்கள் விக்கிப்பீடியாவில், வர்ணனைகள் என் அப்பாவின் எண்ணங்கள்

      Delete
  5. நாங்க நேரில் பார்த்தப்போ அப்படியே பிரமிச்சு போய்டோம் கா...

    என்ன ஒரு அழகு ன்னு ...

    ReplyDelete
    Replies
    1. நான் இன்னும் பார்க்கலைப்பா :-(

      Delete
  6. அதிசயமாகவும் வியப்பாகவும் இருந்தது. நான் பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலில் சேர்த்துவிட்டேன். செல்லும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கூடவே என்னையும் கூட்டிப்போங்கப்பா!

      Delete
  7. போகாமல் இப்படி வர்ணித்து சிறுவர் பூங்காவை கூட விடாம எழுதியிருக்கிங்க அப்போ போனா இன்னும் பக்கம் பக்கமா எழுதுவிங்க போல

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம் எழுதுவேன். நான் போகலியே தவிர, என் அப்பா வருசந்தவறாமல் இந்த இடத்தை பத்தி சொல்வார். அவர் சொல்லிச்சொல்லி நேரில் பார்த்த குறையே தெரில. அதான் இப்படி.

      நான் போய்வந்தபின் இன்னொரு பதிவு எழுதுவேன். அதையும் பாருங்க.

      Delete