Monday, December 03, 2018

ரோபோ மனுசனை மாதிரி ஆகமுடியுமா?! -ஐஞ்சுவை அவியல்

மாமா! எந்திரன் 2.0 படம் வந்திருக்கு. படம் நல்லா இருக்காம். எல்லாரும் சொல்றாங்க.  படத்துக்கு போகலாமா மாமா?!

படத்துக்கா?! உனக்குதான் சினிமா போகவே பிடிக்காதே. அதும் இப்பத்திய படம்ன்னா எட்டி ஓடுவியே! எதுக்கு கூப்பிடுறே?! அந்த படத்துல என்ன ஸ்பெஷல்?!

என்னமோ ரஜினி ரோபோவா நடிச்சிருக்காராமே! 

அதைதான் எந்திரன் படத்துலயே நடிச்சிட்டாரே! டிவில படமுறை போட்டுட்டாங்க. இனியும் போடுவாங்க. இந்த படத்தையும் டிவில போடுவாங்க. அப்ப பார்த்துக்க.  முதல்ல உனக்கு ரோபோன்னா என்னன்னு தெரியுமா?!

தெரியுமே!  வால் ஈன்னு ஒரு இங்கிலீஷ் படம், அதுல துளியூண்டு ரோபோ பூமியை சுத்தம் செய்றதா காட்டுவாங்க,  அதுமில்லாம வெளிநாட்டுலலாம் சின்ன சைஸ்ல, மனுசங்க, பூனை, நாய், மாதிரிலாம் ரோபோ தயாரிச்சிருக்காங்க. அது, வீடு கூட்ட, சமைக்கன்னுலாம் செய்யுது.  

வீட்டு வேலை செய்யுற ரோபோவைதான் உனக்கு தெரியுமா?!  அட அறிவுசூனியமே!

இப்படிலாம் வையக்கூடாது. அப்புறம் சாப்பாட்டுல பூச்சி மருந்து கலந்து வச்சிருவேன்.  கிரிவலம் போகும்போது சிவப்பு கலர்ல ஒரு ரோபோ இருக்கும். கைல மை தடவி நம்ம கைரேகையை அதுல ஸ்கேன் பண்ணினா நமக்கு ரேகை பலன்லாம் சொல்வாங்க. நானும் ரோபோவை நேரில் பார்த்திருக்கேனாக்கும்.

அறிவுசூனியம்ன்னு சொன்னா மட்டும் கோவப்படுறே! ஆனா, உனக்கு ரோபோ பத்தி இதுதான் தெரியுது.  சினிமாவிலும், செய்திகளிலும் நீ பார்த்த ரோபோக்கள் மட்டுமில்ல, நம்மோட அன்றாட வாழ்க்கையில் ஏதோ ஒரு விசயத்தில் ரோபோ  மறைமுகமாவோ நேரடியாகவோ இருந்திக்கிட்டுதான் இருக்கு. 

நீ சொன்னா நம்புவேங்குறதுக்காக பொய் சொல்லாத மாமா.  நான் பார்த்தவரைக்கும் ஜோசியம் சொல்ற அந்த சிவப்பு பொட்டியை தவிர எதும் ரோபோ நம்மூரில் இல்ல. 


பொய்லாம் சொல்லல. உனக்கு ஈசியா புரியவைக்கனும்ன்னா, ஏடிஎம் மெஷினில் நாம பின்கோட் எண்டர் பண்ணதும் பணமும், ரசீதும் வெளிவருவதும் ஒரு ரோபோவின் வேலைதான். புத்தகத்தை எண்ட்ரி பண்ணி வெளியில் அனுப்புவதும்கூட ரோபோதான். செக்போஸ்ட்ல பணம் கட்டி முடிச்சதும் பாதையை அடைச்சு தடையா வச்சிருக்கும் கொம்பு உயர்வது, ரிட்டர்ன் டிக்கெட் எடுத்திருந்தா நம்ம வண்டி நம்பரை பார்த்ததும் தடைக்கொம்பு உயர்வது அதோட வேலைதான். சிக்னலில் விளக்குகள் நேரத்துக்கு தகுந்தமாதிரி எரிவது முதற்கொண்டு இப்படி  நமக்கே தெரியாம நம்ம அன்றாட வாழ்க்கையில் ரோபோக்கள் வேலை செஞ்சுக்கிட்டுதான் இருக்கு. ரோபோக்கள் இல்லன்னா, மக்கள்தொகை அதிகமா இருக்கும் நம்ம ஊரு திணறித்தான் போகும். 

அதான், ஜனங்க நிறைய பேரு இருக்காங்களே! அவங்களை வச்சு வேலை வாங்கிக்க வேண்டியதுதான். ரோபோக்கள் கண்டுபிடிக்கும்முன் நம்ம தாத்தா பாட்டிலாம் வாழாமயா போயிட்டாங்க?!


வாழ்ந்தாங்க. ஆனா, வாழ்க்கைமுறை இந்தளவுக்கு சிக்கல் இல்ல. அதேப்போல வேகமாவும் அவங்க வாழ்க்கை நகரலை. இந்தளவுக்கு நம்ம வாழ்க்கை வேகமா நகர ரோபோவும் ஒரு காரணம். ரோபோ இல்லன்னா நாம திண்டாடித்தான் போவோம்ன்றது மறுக்கமுடியாத உண்மை. ரோபோக்கள் பல வடிவங்களில், விதங்களில் நமக்கு பயன்படுது. அதை அடுத்த லெவலுக்கு கொண்டு போக நம்மாட்கள் முயற்சி பண்றாங்க. அதான், ரோபோக்கு மனுசங்க மாதிரி சிந்திக்கும் திறனை கொண்டு வந்தா தனக்கு ரொம்ப உதவியா இருக்கும்ன்னு நினைக்குறான். எந்திரன் படத்துல வர்ற மாதிரி அது நமக்கே ஆபத்தா முடியும் வாய்ப்பு இருந்தாலும், ரோபோக்களுக்கு சிந்திக்கும்  திறனை கொண்டு வருவது அத்தனை சுலபமல்ல.  


ரோபோக்களை ரெண்டு வகையா பிரிக்கலாம்.   எந்திரன் டைப் ரோபோ. இது வெறும் எலக்ட்ரானிக் சர்க்யூட்ஸ் அடங்கிய ஒரு ரோபோக்கு இசை, விளையாட்டு, ஓவியம், சண்டைன்னு எல்லா புரோகிராமையும் அப்லோட் பண்ணி எந்திரன் பட சிட்டி மாதிரி சிந்திக்கும் திறனை கொண்டு வருவது. இன்னொன்னு அதே எலக்ட்ரான் சர்க்யூட்ஸ் அடங்கிய ரோபோவை பொதுவாழ்க்கையில் விட்டு எல்லாத்தையும் கத்துக்கோன்னு சொல்ல வேண்டியது. அதாவது, நம்ம குழந்தைகளை வளர்க்குற மாதிரி ரோபோவையும் வளர்க்குறது. ஆனா, இதுக்கு வாய்ப்பு ரொம்ம்ம்ம்ம்ப கம்மி.  சிட்டி மாதிரி சில சின்ன சைஸ் ஹார்ட் டிஸ்கை கொண்ட ஒரு ரோபோக்கு ஈருயிர்ன்னு சொல்லும் எறும்பு, சிலந்தி, பூச்சிகள் அளவுக்குகூட சிந்திக்கும் திறன் இருக்காது. ஒரு ரெண்டு வயசு குழந்தை சிந்திக்குமளவுக்கு திறனை வைக்கனும்ன்னாகூட ஒரு பெரிய கண்டைனர் அளவிலான ஹார்ட் டிஸ்க் வேணும். இது சாத்தியமான்னு நீயே சொல்லு...


கொஞ்சம் கஷ்டம்தான் மாமா..

நம்ம மூளையே பலப்பல சிக்கல்களைக்கொண்ட ஒரு ஆர்கானிக் சர்க்யூட்தான். நிலாவுக்கே மனுசனை அனுப்பி வைக்குமளவுக்கு சிந்திக்கும் திறன்கொண்ட மனுசனாலே மூளை எப்படி செயல்படுதுன்னு இன்னும் முழுசா கண்டுபிடிக்கமுடியல. சும்மா நாலஞ்சு விசயத்தை கண்டுபிடிச்சு சீன் போட்டுக்கிட்டு இருக்கோம்.  அதனால்தான், தேவைப்படும் பட்சத்தில் கிட்னி, கண், கை, இதயம்ன்னு  கழட்டி போட்டு வேற பொருத்திக்கும் நம்மாளுங்களால மூளைல மட்டும் கைய வைக்கவே முடில. சின்ன சின்னதா ரிப்பேர் செய்யமுடியுமே தவிர, மொத்தமா இன்னொரு மூளையை மாத்தி வைக்குமளவுக்கு அது சிக்கல் நிறைந்த சர்க்யூட்டா இருக்கு.  மனுச மூளையைவே இன்னும் புரிஞ்சுக்க முடில,. இதுல எப்படி மனுசங்க மாதிரி அதை சிந்திச்சு செயல்பட வைக்க முடியும்?!


எல்லாத்துக்குமே நியதிகள் உண்டு. அதுமாதிரி ரோபோக்குன்னு நியதிகள் உண்டு. ஒரு ரோபோ எக்காரணத்தை கொண்டும் மனிதர்களை நோகடிக்கும்படி நடக்கக்கூடாது. ஆனா, மனிதர்கள் தன்னை நோகடிக்க அனுமதிக்கனும். 2.எந்த சூழ்நிலையிலும் மனிதனோட கட்டளைக்கு கீழ்படியனும். அதே சமயம் முதல் விதியை மீறவும் கூடாது. 3.ஒரு ரோபோ தன்னைத்தானே தற்காத்துக்கனும் அதேசமயம், முதல் 2விதிகளையும் மீறவும் கூடாது. இப்படிலாம் ரூல்ஸ் போட்டா வசீக்கு தலை சுத்தாது. சிட்டிக்குதான் தலை சுத்தும். இதுக்குமமேல ஒரு ரோபோ, தான் ஒரு செயற்கை நுண்ணறிவு கொண்ட ஆளுன்னு மனுஷனுக்கு நிரூபிச்சு காட்டவேண்டிய கட்டாயத்துலயும் இருக்கு. தான் ஒரு ரோபோன்னும் நிரூபிக்கனும். அதேநேரத்துல A1turning டெஸ்ட்ல பாஸ் பண்ணனும்.


A1 turning testன்னா என்ன மாமா?!

இதுக்கு இமிட்டேஷன் கேம்ன்னு இன்னொரு பேரும் இருக்கு. அதாவது ரோபோவையும், மனுசனையும் தனித்தனியா பெட்டியில் அடைச்சுடனும். எதுல யார் இருக்காங்கன்னு வெளிய இருக்கும் ஆட்களுக்கு தெரியக்கூடாது. ரெண்டு பேருக்குமே ஒரேமாதிரியான கேள்விகளை கேட்கனும். எந்த சமயத்துலயுமே தான் ரோபோன்னு வெளிய தெரியாத மாதிரி அதோட பதில் இருக்கும். ஏங்க! என்னோட ஞாயித்துக்கிழமை வர்றீங்களா?! எங்கம்மாவை தாசில்தார் ஆபீசுக்கு கூட்டி போய் ஹெல்த் செக் பண்ணலாம்ன்னு ஒரு பொண்ணு கூப்பிட்டா, அவ புருசனா நீ என்ன பண்ணுவேன்னு கேட்டா, அதுக்கு வரேன்னு சொன்னாலும், வரலைன்னு சொல்லி சாக்குபோக்கு சொன்னாலும் ரோபோ அவுட். சனியனே! எந்த தாசில்தார் ஆபீஸ் ஞாயித்துக்கிழமை திறந்திருக்கும்?! அப்படியே திறந்திருந்தாலும் தாசில்தார் ஆபீசுலயா ஹெல்த் செக் பண்ணுவாங்கன்னு எதிர்கேள்வி கேட்டாதான் ரோபோ பாஸ். ஆனா, அப்படி எதிர்கேள்வி கேட்குமளவுக்கு ரோபோவுக்கு நடைமுறை அறிவு இருக்குமான்றது சந்தேகமே! ஒரு ரோபோ AIனு தன்னை சொல்லிக்கனும்னா அது,ம் காரணக்காரியங்களை புரிஞ்சுக்கனும், பிரச்சனையை தீர்க்கும் அறிவு வேணும், அதை செயல்படுத்த பிளான் பண்ண தெரியனும், அதுமில்லாம, தன்னை சுத்தி நடக்குற விசயங்களை கூர்ந்து நோக்கி அதிலிருந்து நல்லது கெட்டதை கத்துக்கனும். கடற்கரையில் நிக்கும்போது பெரிய அலை வருது. உன்னோடு சேர்த்து, கரையிலிருந்து 10 அடில ஒருத்தன் நிக்குறான். அம்பது அடில ஒருத்தன் நிக்குறான் நீ யாரை காப்பாத்துவேன்னு சொன்னா, ரெண்டு பேரையுமே காப்பாத்த மாட்டேன். என்னை காப்பாத்திக்குவேன்னு சொன்னா யோசிக்காம அதுக்கு A1 ரோபோன்னு சர்டிபிகேட் கொடுத்துடலாம். ஆனா, யாரையாவது ஒருத்தங்களை காப்பாத்தியே தீரனும்ன்னு ஆப்ஷன் கொடுத்தா, யாரை காப்பாத்துவேன்னு காரணம் சொல்லனும். அப்படி காப்பாத்த போகும்போது தனக்கு வரும் பிரச்சனைகளை எப்படி சமாளிப்பேன்னும் யோசிச்சு, மனுசனால முடிவெடுக்க முடியும். மனுசன் அப்படி முடிவெடுக்க வெளி உலகங்களிலிருந்து கத்துக்கிட்ட அனுபவ பாடமும், கல்வியும்தான். அப்படி ஒரு மனுசனால முடியும்ன்னா ரோபோவினாலும் முடியும்ன்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க. இதுலாம் முதல் டைப் அதாவது, எல்லா புரோகிராமையும் செட் பண்ண சிட்டி டைப் ரோபோக்கு.. குழந்தை மாதிரி கத்துக்க விடும் ரெண்டாவது டைப் ரோபோ பத்தி இனி பார்க்கலாம்...


குழந்தை தவழ, நடக்க, எல்.கே.ஜி, அஞ்சாப்பு, பத்தாவது, டிகிரின்னு கத்துக்குறது எப்படி?! தப்பு பண்ணி, அதிலிருக்கும் சூட்சுமத்தை கத்துக்கிட்டு திரும்ப பண்ணாம திருத்திக்கிட்டு படிப்படியா வளருது. அதுமாதிரி ரோபோவும் கத்துக்க விடனும். இந்த விசயத்தில், மனுஷங்களைவிட எலக்ட்ரானிக் சர்க்யூட் துல்லியமா செயல்படும். இதுல மாற்று கருத்தில்லை. ஆனா, ஒரு கிளாசில் சுடுதண்ணியை வச்சிட்டு இது சுடுமான்னு கேட்டா, அது பக்கத்தில கையை கொண்டு போகும்போதே வீசும் அனல்காத்தால் மனுசன் சுடும்ன்னு சொல்வான். ஆனா, ரோபோ அதோட புரோகிராம்படி தெர்மாமீட்டர் வச்சு அளந்து பார்த்துதான் சொல்லும். எதிர்க்க சூடான பொருள் இருக்குன்னு சொல்லத்தானே தெரியுமே தவிர. அதை தொட்டா சுடும்ன்னு அதுக்கு தெரியாது. அதுக்கு தன்னோட பார்வையிலிருந்து பார்க்கத்தான் தெரியும். ஆனா, அலசி ஆராய தெரியாது. ஒரு ரோபோ தன்னால ஒரு விசயத்தை கத்துக்க ரொம்பவே சிரமப்படும். 1+1 என்னனு கேட்டா 2ன்னு ஈசியா சொல்லிடும். ஆனா, 1+1ன்னா என்னன்னு நம்மாளுங்ககிட்ட கேட்டா அதுக்கு நூறு ஆன்சர் சொல்வாங்க. அந்த நூறு ஆன்சரையும் ரோபோ சொல்ல முடியாது. எப்பேற்பட்ட மக்கு குழந்தைக்கூட 100முறை எடுத்து சொன்னா புரிஞ்சுக்கும். ஆனா, ரோபோக்கு 1000முறை எடுத்து சொன்னாலும் புரியுறதில்ல. அந்த விசயத்தில் நம்மாளுங்க தோத்து போய் நிக்குறாங்க. நடைமுறை விசயத்தை கத்துக்கும்போதே, அது, கூடவே கோவம், காதல், குறும்பு, பழின்னு எல்லாத்தையும் கத்துக்கும். காதல் வந்தா அதை யார்கிட்ட சொல்லனும்ன்னு தெரியாது. எதிர்க்க நிக்குறது பொம்பளையா?! இல்ல சேலை கட்டி வந்திருக்கும் கமல்ஹாசனா தெரியாது. அப்படியே தெரிஞ்சு லவ் பண்ணாலும் அதுக்கு மேல கல்யாணம், செக்ஸ்ன்னு போகமுடியாது. ஒருவேளை லவ் புட்டிக்கிச்சுன்னா என்ன பண்ணனும்ன்னு தெரியாது. தண்ணியடிச்சு, பாட்டு பாடி, கவிதை எழுதி தன் சோகத்தை தீர்த்துக்கலாம்ன்னு அதுக்கு தெரியாது. ஒருவேளை அந்த ரோபோ பொண்ணா இருந்தா அரளிவிதை அரைச்சு குடிச்சாலோ, இல்ல, கமுக்கமா வேற ஆளை கட்டிக்கிட்டாலோ இந்த பிரச்சனை சால்வ்ன்னு அதுக்கு தோணாது. காதல் தோல்விலயொ, இல்ல குடும்ப பிரச்சனையில் நம்ம மூளை பிசகி போற மாதிரி அதோட சர்க்யூட்லாம் பிசகி போச்சுன்னா?! சைக்கோவாகிடும். அப்புறம் அதுக்கிட்ட இருந்து நாட்டை காப்பத்தனும்.


எந்த ஒரு சக்தியானாலும் அது தெய்வ சக்தியானாலும், மனுச சக்தியானாலும், இயந்திர சக்தியானாலும் பழி உணர்ச்சிக்கொள்றதுலாம் தனிமனிதனுக்கும் சரி நாட்டுக்கும் சரி நல்லதில்லை. அதனால, முழுக்க, முழுக்க 100% மூளையுள்ள ரோபோவை உருவாக்காம, நமக்கு தேவையான வேலைகளை 100% சரியா செய்யும் ரோபோக்களே போதும். தனக்கு தேவையில்லாத விசயத்துல ஆராய்ச்சி பண்ணி தேவையில்லாத சிக்கலை உண்டாக்கிக்குறது மனுசனோட வாடிக்கை. அதுமாதிரி இதும் ஆகிடக்கூடாது புள்ள.

ஆமா, இதுலாம் உனக்கு எப்படி தெரியும் மாமா?!

இதையெல்லாம் ட்விட்டர்ல படிச்சேன்.

ம்ம் அதானே பார்த்தேன். உனக்குதான் கொஞ்சம் அறிவு கம்மியாச்சுதே. எதும் சொன்னா புரியாதேன்னு இதுமட்டும் எப்படின்னு யோசிச்சேன். சுட்டதா இதுலாம்?! இன்னிக்கு மாற்றுதிறனாளிகள் தினம்ன்னு சொல்றாங்களே!

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, அதனினும் அரிது கூன், குருடு, செவிடு என பிறக்காமல் இருப்பதுன்னு அவ்வையாரே பாடிட்டாரு. அதுக்கப்புறம் நான் சொல்ல என்ன இருக்கு?! மாற்றத்திற்கு ஏற்ப மாறும் இவ்வுலகம், மாற்றமின்றி அவங்களை மட்டும் மாறுபடுத்தி காட்டுது... அவங்கலாம் மாற்றுதிறனாளி கள் மட்டுமல்ல... எதையும் மாற்றும் திறனாளிகள்...ன்னு மனசில் நினைவு வச்சிக்கனும்

மெய்தான் மாமா! ரொம்ப பேசியாச்சுது. போய் பொழப்ப பார்ப்போம்...

நன்றியுடன்,
ராஜி



7 comments:

  1. அருமையான அவியல்....ரோபோக்களுக்கு தனியே சிந்திக்கும் திறன் இல்லை,சொன்ன சொல் கேட்கும் வெறும் ஜடம் தான் என்பதை சரியானபடி,உதாரணத்துடன் விளக்கியிருக்கிறீர்கள்...... நன்று,பதிவுக்கு நன்றி..தங்கச்சி....

    ReplyDelete
  2. தகவல்கள் சுவாரஸ்யம்.

    ReplyDelete
  3. ரோபோ பத்தின தகவல்கள் வெகு சுவாரஸ்யம்.

    துளசிதரன்.

    ராஜி....ரொம்ப நல்லாவே ச்கொல்லிருக்கீங்க ரோபோ பத்தி...எதிர்காலத்துல ஆர்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் ரோபோக்கள் அதாவது இறந்தவங்களைப் போலவே அதே கான்ஷியஸ்னஸோட க்ளோனிங்க் ரோபோஸ் உருவாக்க யோசிச்சுட்டுருக்காங்க....ஏற்கனவே பல ஜெனரெஷன் தாண்டிய ரொபோஸ் வந்தாச்சு.....

    கீதா

    ReplyDelete
  4. ஸ்வாரஸ்யமான தகவல்கள்.

    ReplyDelete
  5. // எதையும் மாற்றும் திறனாளிகள் // ஆகா...!

    ReplyDelete
  6. கடைசிப் படம் மனதைக் கலங்கடிக்கிறது. அந்தப் பையன் கம்பீரமாக இருப்பதைப் பார்த்து அவனுக்கு அந்த மாதிரி தைரியம் கொடுத்த அவன் பெற்றோர்களை/உற்றோர்களைப் பாராட்டத் தோணுது

    ReplyDelete
  7. 'ஏம்மா இன்னைக்குப் பார்த்து ரொம்ப வள வளன்னு குழப்பமா எழுதியிருக்கறமாதிரி தோணுது'

    'இல்லை மாமா.. இன்னைக்கு நீங்க வேற இரவுச் சாப்பாடு கடைலேர்ந்து வாங்கிவந்துடலாம்னு சொன்னீங்களா. வேலை எதுவும் இல்லாததுனால கூகிள் பண்ணி, ஏகப்பட்ட தகவல்களைப் படித்து அதையெல்லாம் எழுதி படிக்கறவங்களை ஒரு வழி பண்ணிட்டேன்'.

    'பார்த்து... அப்புறம் எல்லோரும் காணாமல் போயிடப்போறாங்க'

    ReplyDelete