Friday, June 02, 2017

விதைநெல்லையும் சமைத்தவர் - நாயன்மார்கள் கதைகள்


இளையான்குடின்ற ஊர்ல வேளாளர் குலத்திலே உலகத்துக்கே சோறு போடும் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் இந்த  மாறனார். சிவனடியார்கள்மேலும், சிவன்மேலும் தீராத அன்பு கொண்டவர். இவர் தன்னோட வீட்டுக்கு வர்றவங்க எந்த குலத்தவரானாலும் மலர்ந்த முகத்தோடு வரவேற்று, அவர்களுக்கு பாதபூஜை செய்து, சிரமப்பரிகாரம் செய்வித்து அறுசுவை படைப்பது அவர் வழக்கம்.


சிவபூஜையை தவறாது செய்ததால் அவர் இல்லத்தில் அனைத்து செல்வங்களும் குறைவின்றி நிறைந்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார். செல்வம் இருப்பதால இப்படி கைங்கர்யம் செய்கின்றாரா அல்லது வறுமையிலும் இப்படி செய்வாரா என அறியும் பொருட்டு மாறனாரின் செல்வத்தை படிப்படியாக வற்ற செய்து கடைசியில் மாறனாரை வறுமையின் பிடியில் தள்ளிவிட்டார் சிவப்பெருமான்.


கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே’ன்ற பெரியோர் கூற்றுக்கேற்ப வறுமையிலும் தன் கைங்கர்யத்தை மாறனார் தொடர்ந்தார்.   வீடு, வாசல், தோட்டம், காடு, கழனி, பொன், பொருள் அனைத்தும் இழந்து ஒரு குடிசையில் வாழ்ந்தும், ஒரு காணி நிலத்தில் உழுதுண்டும் வாழ்ந்து வந்தனர் மாறனாரின் குடும்பம்.   அடுத்தவர் வயலில் கூலிக்கு வேலை செய்யவும் போவார். அவர் மனைவி, தங்கள் குடிசை வீட்டின் பின்புறத்தினில் கீரைகளை பதியனிட்டு அதை சமைத்து பிள்ளைகளுக்கு கொடுத்து உயிர்வளர்த்து வந்தனர்.

மாறனார் மனைவி மிகுந்த புத்திசாலி. கீரையை மொத்தமாக கிள்ளாமல் முதல்நாள் நுனிக்கொழுந்து, மறுநாள் கொஞ்சம் வளர்ந்த கீரைகள், மூன்றாம் நாள் தண்டுப்பகுதி, நான்காம் நாள் வேர்ப்பகுதி என சமைப்பதை வழக்கமாக்கி கொண்டிருந்தாள்.


அது ஒரு மழைக்காலம். இடியும், மின்னலும், மழையும் நிறைந்த ஒரு இரவுப்பொழுது மழைக்காலமாதலால் வேலை எதும் கிடக்காதபோதும் முதல் நாலு நாள் கீரைகளை வைத்த்து சமாளித்தாள். ஐந்தாவது நாள் வேலை எதும் கிடைக்காத காரணத்தால் மாறனாரின் குடும்பம் பட்டினியோடு உறங்க சென்றது.  சிவப்பெருமான் சிவனடியார் வேடம்ங்கொண்டு மாறனார் இல்லம் வந்தார். அவரை வரவேற்று பாதை பூஜை செய்து உடல் ஈரம் போக துடைத்து ஆசனத்தில் அமர வைத்து பணிந்து நின்றார்கள் மாறனாரின் குடும்பம்.  மிகுந்த பசியாய் உள்ளது. போஜனம் செய்ய வேண்டுமென சிவனடியார் உணவு கேட்டார்.

வீட்டில் ஒற்றை அரிசி இல்லை. காய்கறின்னு எதுமில்லை. அக்கம் பக்கத்தாரிடம் கேட்கவும் வழியில்லாத நேரம் இது. அதனால என் செய்வது என மாறனாரின் குடும்பம் விழிபிதுங்கி நின்றது.  காலையில் வயலில் விதைத்த நெல் மாறனாரின் நினைவுக்கு வந்தது. பின் மனைவியை உள்ளழைத்து நீ சமைக்க ஆயத்தமாகு. வயலில் விதைத்த விதைநெல்லை கொண்டு வருகிறேன் என்று கூறி கூடையை தலையில் கவிழ்த்தப்படி வயலை நோக்கி சென்றார். மழை நேரம்.... கும்மிருட்டு..... வழியில் என்னவென்று தெரியாமலிருந்தாலும் தடவி தடவி சென்றார். மழைநீர்ல தேங்கி நிற்கும் விதை நெல்லை கைகளால் துழாவி வாரி கூடையை நிரப்பிக்கொண்டு இல்லம் நோக்கி வந்தார்.


மாறனாரின் மனைவி இந்நெல்லை வாங்கி சேறு, மண் போக நன்றாக கழுவி, மாறனாரை நோக்கி, சுவாமி! இந்நெல்லை வேக வைக்கை வீட்டில் விறகில்லை எனக்கூறினாள்.  உடனே சற்றும் யோசியாமல் குடிசை வீட்டின் உத்திரத்தை பிடுங்கி அடுப்பெரிக்க தந்தார்.  முளைநெல்லை வேகவைத்து, பின் அரிசியாக்கி அதை உலையிலிட்டு சோறாக்கினாள். பின், சுவாமி சோறு தயார். கறிக்கு என்ன செய்வோம் என வருத்தப்பட்டாள்.  புறக்கடை தோட்டத்திலிருக்கும்   முளைத்து வரும் கீரைகளை பறித்து சேறு போக கழுவி எடுத்து வந்தார்.  அக்கீரையையே வெவ்வேறு விதமாய் சமைத்து வைத்தாள் மாறனாரின் மனைவி. எல்லாம் சமைத்து முடித்ததும், மாறனாரை நோக்கி சுவாமி, அடியாரை அழைத்து வாருங்கள். திருஅமுது செய்விக்கலாம் என சொன்னாள். மாறனாரும் அடியாரை அழைக்கச்சென்றார்.

திண்ணையில் உறங்கிக்கொண்டிருந்த சிவனடியாரை எழுப்பும் தோரணையில், அடியாரே!  உணவு சமைத்தாகிவிட்டது திருவமுது செய்ய எழுந்தருளுங்கள் என எழுப்பினார். உணவு சமைக்க சிறிது நேரம் ஆகிவிட்டது. மன்னித்து அருளுங்கள் என்று எழுப்பினார்.

அடியார் படுத்திருந்த இடத்தில் பெருவெளிச்சத்தோடு   இறைவனும், இறைவியும் இடப வாகனத்தில் தோன்றினர்.  இறை தம்பதியை கண்டதும் மாறனாரும், அவரின் குடும்பமும் திகைத்து நின்றனர்.  எத்தனை சோதனை வந்தபோதிலும், நீங்கள் பசித்திருந்தபோதும் எனக்கு அமுது செய்விக்க உங்கள் விதைநெல்லைக்கூட பதம் செய்து அமுது செய்தீர். ஆகவே, நீயும், உம் குடும்பத்தாரும் என் பதத்தை அடைந்து பேரின்பத்தை அனுபவித்துக்கொள் என திருவாய் மலர்ந்தருளினார் இறைவன். அன்றிலிருந்து மாறனாரும் இளையான்குடி மாறனார் என பெயர் பெற்றார்.

இவரின் குருபூஜை ஆவணி மாதம் மகம் நட்சத்திரம் ஆகும்....

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை தெரியாதவங்களுக்காக...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1462003

நன்றியுடன்,
ராஜி.

13 comments:

 1. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 2. நாயன்மார்கள் பற்றி அறிந்து கொண்டோம். புகைப்படத்துடன் பதிவு செய்ததற்கு நன்றி. மிகவும் பயனுள்ள பதிவு. வாழ்க வளமுடன்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 3. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ

   Delete
 4. நாயன்மார்களைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு அருமையான பதிவு

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ

   Delete
 5. சிறுவயதில் ஆர்வமாக படித்திருக்கிறேன் இந்தக் கதைகளை..நினைவுபடுத்தியமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. இப்ப படிச்சு பாருங்க. யோசிக்க வைக்கும்

   Delete
 6. இதை அன்றே வாசித்துவிட்டோம். கமென்ட் போட முடியவில்லை...

  நல்ல கதை...

  --துளசி, கீதா

  ReplyDelete