இன்னிக்கு விஷ்ணு பகவான் கூர்ம அவதாரமெடுத்த தினம். கூர்மம்ன்னா ஆமைன்னு அர்த்தம். ஆமை புகுந்த வீடு உருப்படாதுன்னு நம்மூர்ல சொல்வாங்க. ஆனா, அந்த கடவுளே ஆமையாய் அவதாரமெடுத்திருக்காரே! அந்த அவதார படத்தை வீட்டுல வச்சு எப்படி கும்பிடுவாங்கன்னு யோசனை எப்பயுமே எனக்குண்டு. கடவுள் படைப்பில் உயர்வென்றும் தாழ்வென்றும் இல்லை. அதான் அந்த அவதாரமெடுத்திருக்கார்ன்னும், பழமொழில வரும் ஆமை இல்லாமை, கல்லாமை, இயலாமை....மாதிரியான ஆமைகள்ன்னு இத்தனை நாள் நினைச்சுக்கிட்டிருந்தேன். ஆனா, அப்படி இல்லன்னு இன்னிக்குதான் தெரிஞ்சுது.
குழந்தை, குட்டியோட வசிச்சிட்டிருக்கும் ஆமைக்குடும்பத்தை பிரிச்சு குழந்தைன்னும் தாய்ன்னும் பிரிச்சு வேறவேற இடத்துல வசிக்க வச்சாலும், குட்டி நினைப்பாவே தாய் ஆமை இருக்குமாம் குட்டி சாப்பிட்டிச்சோ! இல்லியோன்னு... இந்த நினைப்பே குட்டி ஆமையோட வயிறு நிறைய வச்சிடுமாம். அதுப்போலதான், குடும்பத்தலைவர்கள் எங்கிருந்தாலும் தன் குழந்தைகள் நினைவோடும், அவர்தம் நலன்மேல அக்கறையாவும் இருக்கனும்ங்குறதை உணர்த்தவும், அந்த ஆமைப்போல காக்கும் கடவுளான தானும், தன் குழந்தைகளான உலக உயிர்கள்மேல் எங்கும், எப்பவும் அக்கறை கொண்டிருப்பேன்னும் நமக்கு உணர்த்தவே கூர்ம அவதாரமெடுத்தாராம்.
எந்த விலங்குக்கும் இல்லாத ஒரு சிறப்பு என்னன்னா எதாவது ஒரு தீங்குன்னா ஆமை ஓட்டுக்குள் கை, கால், தலைன்னு ஐந்து உறுப்புகளை அடக்கிக்கொள்ளும். அடக்கம் என்பது பயத்தினால் வருவதால் அல்ல. அடக்கம்ன்னா பணிவாகும். எத்தனை உயரத்துக்கு போனாலும் அடக்கத்தோடு நடக்க வேண்டுமென ஆமை உணர்த்துது. ”ஒருமையுள் ஆமைப்போல் ஐந்தடக்கம் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து”ன்ற வள்ளுவர் கூற்றுக்கேற்ப கண், வாய், செவி, மூக்கு, உடல்ன்னு ஐம்புலனை அடக்கி ஆள வேண்டுமெனவும், குடும்பம்ன்னா ஏற்ற தாழ்வுகள் வரும். அம்மாதிரியான நேரங்களில் தலைமை பொறுப்பிலிருப்பவர்கள்தான் குடும்பத்தை தாங்கி வழிநடத்தி நல்ல நிலைக்கு கொண்டு செல்ல வேண்டுமெனவும் கூர்ம அவதாரம் நமக்கு உணர்த்துது.
அதுமட்டுமில்லாம மற்ற எல்லா அவதாரத்தைவிடவும் கூர்ம அவதாரத்துக்கென தனிச்சிறப்பு ஒன்றுண்டு. அது என்னன்னா, மத்த அவதாரங்கள் தீயவர்களை அழிக்க எடுக்கப்பட்டதாகும். வயலுக்கு பாயும் நீர் வரப்பு புல்லுக்கும் பாய்வதுப்போல தீயவர்களோடு சேர்ந்து பல அப்பாவிகளும் இறந்தனர். ஆனா, கூர்ம அவதாரம் தீயது நடக்கும்போது காத்ததோடு ஏகப்பட்ட நல்லவற்றை நமக்கு அளித்தது. மகாவிஷ்ணுவின் இரண்டாவது அவதாரமே இந்த கூர்ம அவதாரம்.
சித்தவித்யாதர மகள் என்ற தேவலோக கன்னி, கலைமகளை வணங்கி நின்றபோது, அவள் பக்தியை மெச்சி தனது வீணையில் சுற்றியிருந்த மலர்மாலையை சித்தவித்யாதர மகளுக்கு சரஸ்வதி தேவி கொடுத்தாள். பெருமகிழ்ச்சியோடு அம்மாலையை வாஅங்கிக்கொண்டு வரும்போது துர்வாச முனிவர் எதிர்பட, அவருக்கு மரியாதை செய்யும்விதமாய் தன்னிடமிருந்த கலைமகள் தந்த மாலையை அவரிடம் கொடுத்தாள்.
அம்மாலையோடு துர்வாச முனிவர் தேவலோகம் செல்லும்போது, இந்திரன், தன் வாகனாமன யானை மீதேறி எதிரில் வந்துக்கொண்டிருந்தார். உள்ளன்போடு இந்திரனுக்கு மலர்மாலையை கொடுத்தார் துர்வாச முனிவர். அதைப்பெற்றுக்கொண்ட இந்திரன் அலட்சியமாய் யானையின் தலைமீது வைத்தான். யானையோ அதன் மதிப்பை உணராமல் தும்பிக்கையால் அம்மாலையை எடுத்து கீழே போட்டு காலால் மிதித்து பாழாக்கியது.
இதனை கண்ட துர்வாச முனிவர் தன்னை இந்திரன் அவமதித்துவிட்டதாக எண்ணி, தேவேந்திரா! செருக்கோடு நடந்துக்கொண்ட உன் செல்வசெழிப்பெல்லாம் இருக்குமிடம் தெரியாமல் ஒழிந்துப்போக வேண்டும்’ என சாபமிட்டார். முனிவர் சாபம் உடனே பலித்தது. இந்திரன் செல்வமனைத்தும் ஒரு நொடியில் மறைந்தது. யானை மதம் பிடித்து ஓடியது. தேவாதிதேவர்கள் அனைவரும் சோபை இழந்ததோடு யானைக்கு பயந்து ஓடி ஒளிந்தனர். தேவர்களின் நிலை அறிந்த அரக்கர்கள் தேவலோகத்தை கைப்பற்ற இதுதான் தக்க சமயமென்று எண்ணி இந்திரனோடு போரிட்டனர். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் கடும்போர் நடந்தது. அசுரர்கள் போரில் வீழ்ந்தாலும், அசுர குரு சுக்ராச்சாரியார் தன்வசமுள்ள சஞ்சீவி மந்திரத்தைக்கொண்டு அசுரர்களை பிழைக்கவைத்துக்கொண்டே இருந்தார். இதனைக்கண்ட இந்திரன் பிரம்மன் தயவை நாடினான். பிரம்மன், மகாவிஷ்ணுவிடம் கூட்டி சென்றார்.
இந்திரனின் இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்த மகாவிஷ்ணு மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி என்னும் பெரிய நாகத்தை கயிறாக்கி பாற்கடலை கடைந்து வரும் அமுதத்தை பருகினால் இழந்த அனைத்து செல்வத்தையும் மீட்கலாம் என்று யோசனை சொன்னார். பலமனைத்தும் இழந்த நிலையில் இருக்கும் தேவர்களால் இச்செயலை செய்ய முடியாது என்றெண்ணிய இந்திரன் அசுரர்களுக்கும் அமுதம் தருவதாக கூறி ஒப்பந்தம் போட்டுக்கொண்டு பாற்கடலை கடைய ஆரம்பித்தான்.
அவ்வாறு பாற்கடலை கடைந்துக்கொண்டிருக்கும்போது மத்தாக இருந்த மந்தாரமலை அங்குமிங்கும் நிலைக்கொள்ளாமல் அலைந்ததால் கடைவதில் சிரமேற்பட்டது. மீண்டும் மகாவிஷ்ணுவை சரணடைந்தான் இந்திரன். அவனுக்கு உதவும் பொருட்டு மகாவிஷ்ணு மிகப்பெரிய ஆமையாய் உருவெடுத்து மந்தார மலையை தன் கூட்டின்மீது தாங்கி நிலைக்கொள்ள செய்தார். மீண்டும் பாற்கடலை கடையும் முயற்சியில் அனைவரும் ஈடுபட்டனர். மலையிலுள்ள பாறைகள், மரங்களால் காயப்பட்டும், உடல் இறுக்கத்தாலும் கடும் வலியால் அவதிப்பட்ட வாசுகி பாம்பு ஆலகால விஷத்தை கக்கியது. அந்த விஷம் உலகத்தையே அழித்துவிடுமென்பதால் நந்தியம்பெருமானை கொண்டு அவ்விஷத்தை திரட்டி சிவபெருமான் உண்டார். இதனைக் கண்ட பார்வதிதேவி சிவபெருமானின் கண்டத்தில் கைவைத்து அழுத்த அவ்விஷம் கழுத்திலேயே நின்று திருநீலகண்டன் என பெயர் உண்டாக காரணமானது. ஆலகால விஷத்தின் நச்சுத்தன்மை சிவபெருமானையே சிறிது நேரத்துக்கு மயக்கத்துக்குள்ளாக்கியது. அவ்வாறு மயங்கிய சிவபெருமானை எழுப்ப முனிவர்களும், ரிஷிகளும் வழிபட ஆரம்பித்தனர். சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டது திரயோதசி திதி , மாலை 4.30 டூ 6.00 மணியாகும். அந்நேரமே பிரதோஷ வழிபாடாக மாறி இன்றளவும் நினைத்தது ஈடேற இறைவனை வழிபட உயரிய நேரமாய் கூர்ம அவதாரத்தினால் நமக்கு கிடைத்தது.
மீண்டும் பாற்கடலை கடைய ஆரம்பித்தபோது, முதலில் வேண்டியதை தரும் வல்லமைக்கொண்ட காமதேனு என்றழைக்கப்படும் பசு வெளிவந்தது. இது பார்வத்தேவியிடம் சேர்ந்தது. அடுத்து பொன்போல ஜொலிக்கும் உச்சைசிரவஸ் என்ற குதிரை தோன்றியது. இந்த குதிரை நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடத்தில் கொண்டு செல்லும் ஆற்றல் கொண்டது. இதும் இந்திரனிடம் சென்றது. அடுத்து தூய வெண்ணிறத்தில் நான்கு தந்தங்களோடு ஐராவதம் தோன்றியது. இதும் இந்திரன் எடுத்துகொண்டான்.
இவற்றையடுத்து பஞ்ச தருக்கள் என அழைக்கப்படும் அரிசந்தனம், கற்பகம், சந்தனம், பாரிஜாதம், மந்தாரம் என ஐந்து மரங்கள் தோன்றியது. இதில் கேட்டதை கொடுக்கும் சக்திக்கொண்ட கற்பகமரத்தின் கீழ் இந்திரன் அமர்ந்துகொண்டான்.
அடுத்து, அணிபவர்களுக்கு ஆற்றலையும் வெற்றியையும் தரக்கூடிய கவுஸ்துபம் என்ற மணிமாலை தோன்றியது. இதனை திருமால் அணிந்தார். அதற்குப்பின் ஜேஷ்டாதேவி தோன்றினாள். இவளை மூதேவி என்றார்கள். (மூத்த தேவியே மூதேவி ஆனாள்.) இவளை யாரும் ஏற்காததால் பூலோகம் வந்தடைந்தாள். இவளுக்கு மிக அழகான அறுபது கோடி தேவலோகப் பெண்கள் தோன்றினார்கள். இவர்களை தேவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அடுத்து தோன்றியது மது! இந்த மது தோன்றும்போது அதன் அதிதேவதையான சுராதேவியுடன் மதியை மயக்கும் அழகு மங்கையர்கள் கணக்கற்ற தோழியர்களுடன் தோன்றினார்கள். அவர்களை அசுரர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
இதற்குப்பின் தோன்றியவள்தான் ஸ்ரீதேவி எனப்படும் மகாலட்சுமி. தாமரைமலர் மாலையை ஏந்தியவளாய் அவதரித்த இவள் தனக்குத் தகுந்த மணாளன் மகாவிஷ்ணுவே என்பதனை அறிந்து, மகாவிஷ்ணுவிற்கு மாலை அணிவித்து திருமாலின் தேவியானாள். அடுத்து வெண்ணிற வலம்புரி சங்கு தோன்றியது. அதை மகாலட்சுமி ஏற்றுகொண்டாள்.
விஷக்கொடுமையை போக்கும் மூலிகையுடனும், காம சாஸ்திரத்திடனும், கைகளில் நீலோத்பலர் மலர் தாங்கி சந்திரன் தோன்றினான். பூரண ஒளிக்கிரணங்களோடு ஸ்யமந்தகமணி என்றும் அழைக்கப்படும் சிந்தாமணி தோன்றியது. இதனை சூரியன் ஏற்றான். கடைசியில் நான்கு கைகளுடனும், கைகளுக்கொன்றாக சீந்தில்கொடி, அட்டைப்பூச்சி, அமிர்தகலசம், கதாயுதத்தோடு தன்வந்திரி அவதரித்தார். இவர் மருத்துவர்களின் தேவதை ஆனார்.
தன்வந்திரி பகவானின் கையிலிருக்கும் அமிர்தகலசத்தைப் பெறுவதில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பலத்த போட்டி எழுந்தது. இதனை அறிந்த மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அமிர்தத்தைப் பங்கிட்டுத் தரும் வேளையில் அசுரன் ஒருவன் குறுக்கு வழியில் சூரிய - சந்திரர்களுக்கு இடையில் அமிர்தம் பெற முயற்சிக்கையில், மோகினி ரூபத்திலிருந்த மகாவிஷ்ணு அமிர்தம் வழங்கிக்கொண்டிருனத கரண்டியால் அவனை வெட்டினார். அமுது உண்டதால் தலையும் அழியவில்லை, உடலும் அழியவில்லை. இதைப் பார்த்த பிரம்மன், ஒரு பாம்பை துண்டாக்கி துண்டிக்கப்பட்ட பாம்பின் தலையோடு ஒரு அசுரனின் உடலையும், பாம்பின் உடலோடு அசுரனின் தலையையும் பொருத்தி இணைத்தார். இவ்வாறு ராகு - கேது அவதாரம் நிகழ்ந்தது. இதற்கிடையில் மோகினியின் அழகில் சிவபெருமான் மயங்கியதால் ஹரிஹரன் என்றழைக்கப்படும் ஐயப்பன் அவதரித்தார்.
மகாவிஷ்ணு எடுத்த கூர்ம அவதாரத்தினால் எத்தனை அரிய பொருட்கள் கிடைத்தன. அதேசமயம் பல நிகழ்வுகளும் நடைப்பெற்றன. அனைத்தும் சுபமான நிகழ்வுகள் ஆகும். மகாவிஷ்ணுவின் கூர்ம அவதாரக் கோலத்தினை வழிபட சனியின் தாக்கம் குறையும் என்பர்.
இந்திரன், துர்வாசரை அவமதித்ததால் இந்த நிகழ்வுகள் அனைத்தும் நடந்தது. அனைத்தும் சுபமாய் முடிந்தாலும் பெரியோரை அவமதித்ததால் பெரும்போர் நிகழ்ந்தது. பெரியோரை அவமதித்தால் பெருங்கேடு வந்து சேரும் என உணர்த்தும் கூர்ம அவதாரம் ஆனி மாதத்து தேய்பிறை ஏகாதசையன்று நிகழ்ந்தது. அந்த தினம் இன்று. இன்றைய தினம் மூத்தோர் பாதம் தொட்டு வணங்கி, குடும்பத்தை மனதிலிருத்தி இறைவனை வேண்டிக்கொண்டாலே போதும். இதற்கென தனியாய் விரதமிருக்க தேவையே இல்ல. கூர்ம அவதார புராணத்தை கேட்டும் , படிப்போருக்கும் சகல சௌபாக்கியங்கள் கிடைக்கும்..
சனிபகவானால் பாதிக்கப்பட்டவர்கள் கூர்ம அலங்காரத்தில் விஷ்ணுவை வழிப்பட்டு வந்தால் நன்மை பயக்கும்... கூர்ம ஜெயந்தி மந்திரம்
ஓம் தராதராய வித்மஹே
பாசஹஸ்தாய தீமஹி
தன்னோ கூர்ம ப்ரசோதயாத்
நன்றியுடன்,
ராஜி.
அறிந்ததும் அறியாததுமாய் பல தகவல்கள் அறிந்தோம் ...
ReplyDeleteதுளசி, கீதா
வருகைக்கும் கருத்துக்கும் இருவருக்கும் நன்றி
Deleteஆமையின் பின்னால் இவ்வளவு கதையா? வியப்பாக உள்ளது. கூர்மத்தில் தொடங்கி அரிகரன் வரை அதிகமான செய்திகளை அறிந்தோம். நன்றி. வலம்புறி என்றுள்ளது, வலம்புரி என்றிருக்கவேண்டும் என நினைக்கிறேன்.
ReplyDeleteகவனிக்கலைப்பா. கணினிக்கு வரும்போது திருத்தறேன்.
Deleteதிருத்திட்டேன்ப்பா. தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றிப்பா
Deleteகூர்மத்தைப்பற்றி இன்றுதான் அறிந்தேன் நன்றி
ReplyDeleteத.ம.4
எனக்கும் இன்னிக்குதான் டிவி பார்த்ததுல தெரிஞ்சுக்கிட்டேன்ண்ணே.
Deleteகதையை முழுமையாகச் சொல்லிவிட்டீர்கள் என்று நினக்கிறேன்.
ReplyDeleteநன்றி.
ஆமாம்ப்பா. ’கதையை’ முழுசா சொல்லிட்டேன்.
Deleteமலைக்க வைக்கும் பதிவு
ReplyDeleteஎப்படி இத்தனை தகவல்களை
ஒன்றாகச் சேகரித்து அருமையாக
உங்களால்மட்டும் தர முடிகிறது
உங்கள் பதிவுகளை மட்டும்
தொடர்ந்துப் படித்தாலே
பண்டிதனாகி விட வாய்ப்புண்டு
வாழ்த்துக்களுடன்...
எங்க வீட்டு பக்கத்துல சிவன் கோவில் இருக்குப்பா. அங்க திங்கள்தோறும் வாரவழிபாடு நடக்கும். அந்த வாரத்துல வரும் ஆன்மீக நாட்கள் பற்றி சொல்வாங்க. அங்க கேட்டது போக, அங்க ஆன்மீக புத்தகங்கள் வரும் அதுலயும், மிச்சத்தை கூகுள்ளயும் எடுத்து பதிவேன். அம்புட்டுதான்பா பதிவின் ரகசியம்.
Deleteவரிசையாய் எத்தனை எத்தனை விவரங்கள்.....! ரசிக்க வைத்தது.
ReplyDeleteவருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் நன்றிங்க சகோ
Delete