Thursday, September 28, 2017

நரசிம்மர் பார்த்து மகிழ்ந்த லட்சுமி தேவியின் நரசிம்மி கோலம்....

நவராத்திரியின் எட்டாவது நாளான இன்று நாம் வணங்க வேண்டியது நரச்சிம்மகியை... ஆணுமல்லாது பெண்ணுமல்லாது.. மிருகமுமல்லாது மனிதனுமல்லாது.... விண்ணிலுமல்லாது, தரையிலுமல்லாது... எந்தவித ஆயுதத்தாலுமல்லாது தன் உடலிலிருந்து வீழும் ஒவ்வொரு துளி ரத்தத்திலிருந்தும் தன்னைப்போல ஒருவன் உருவாகவேண்டுமென்று வரம் வாங்கிய ரத்தபீஜனை, தன் மடியிலிருத்தி, தன் கூரிய நகங்களால் கிழித்து அவன் ரத்தத்தை நரசிம்மகி குடித்த தினம் இன்று... இவள் நரசிம்மரின் அம்சம்.  கரும்பு வில் பிடித்திருக்க, சுற்றிலும் அனிமா சுள்ளிட்ட சக்திகள் எழுந்திருக்க, பார்க்க கொடூரமாய் இருந்தாலும் கருணையே வடிவானவள் இவள். இந்த அலங்காரத்தில் அன்னையை வழிப்பட்டால் சகல சௌபாக்கியமும் கிட்டும். 

இன்றைய தினம் அஷ்டமி. வளர்பிறை அஷ்டமி... இறைவழிபாட்டுக்கு உகந்த தினம். இதுவரை நவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்காதவர்கள்கூட இன்றிலிருந்து அன்னையை வழிபட ஆரம்பித்தால் நவராத்திரி முழுக்க விரதமிருந்த பலன்கள் கிட்டுமென்பது நம்பிக்கை.  இன்றைய தினம் அம்மனை வரவேற்கும் விதமாக  நாணயங்களைக் கொண்டு பத்மக்கோலம் போடலாம். பூ வகைகளில் மருதோன்றி, ரோஜா, சம்பங்கி, வெண்தாமரை ஆகியவற்றை பயன்படுத்தி கோலமிடலாம்.  பால் சாதம், தேங்காய் சாதம், புளியோதரை ஆகியவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். சிலர் இன்று சொஜ்ஜி அப்பம் படைத்து வழிபடுவது உண்டு. இலை வகைகளில் பன்னீர் இலையையும், பழவகைகளில் திராட்சையையும், சுண்டல் வகைகளில் மொச்சை சுண்டலையும் பயன்படுத்தலாம்.  புன்னாகவராளி ராகத்தில் பாடி, அம்மனை வழிபட்டால் அச்சம் நீங்கும் என்பது ஐதீகம். அதுபோல இன்று 9 வயது சிறுமியை மகாகவுரியாக அலங்கரித்து பூஜித்தால் நமக்கு இஷ்டசித்தி உண்டாகும்.  பாசிப்பருப்பு, கடலை பருப்பு சேர்ந்த பாயாசத்தை படைத்து வடையுடன் நிவேதனமாக வைத்து வழிபட்டால், நாம் கேட்கும் வரத்தை எல்லாம் அம்மன் தருவாள். அது மட்டுமின்றி வாழ்க்கையில் எட்டாததையும் எட்டச் செய்து தேவி நமக்கு ஏற்றத்தைத் தருவாள்.

எவ்வளவு கஷ்டமான காரியமென்றாலும் சிரமம் இல்லாமல் செய்து முடிக்கும் ஆற்றலை இவள் கொடுப்பாள்.  ஆரணியிலிருந்து 15கிமீ, வந்தவாசியிலிருந்து 30கிமீ, சேத்பட்டிலிருந்து 15கிமீ, செய்யாறிலிருந்து 30கிமீ தூரத்தில் இருக்கு ஆவணியாபுரம் என்ற சின்ன கிராமம். தட்சண சிம்மாசலம் தட்சிண அகோபிலம் என்று சொல்லப்படும் இத்திருத்தலம்  சிறிய மலைக்குன்றின்மீது இருக்கின்றது.  இங்கு நாராயணன் சிங்க முகத்துடன் நரசிம்மராக அருள்பாலிப்பதால் ஆவணி நாராயணபுரம் என்றழைக்கப்பட்டு ஆவணியாபுரம் என்று இன்று அழைக்கப்படுது. 




இந்த தலம் பஞ்சதிருப்பதிகளில் ஒன்று. திருப்பதி வெங்கடாஜலபதி, ஸ்ரீரங்கம் அரங்கநாதன், காஞ்சிபுரம் வரதராஜபெருமான், சோளிங்கர் நரசிம்மர், ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் என ஐந்து எம்பெருமான்கள் இங்கு எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். இந்த ஆலயங்களில் முதல் நான்கு ஆல்யங்கள் மலைமீது அமைந்துள்ளது. லட்சுமி நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் அருளும் ஆலயம் மலையின் பாதியில் ஒரு குகைக்குள் அமைந்துள்ளது. அவரது இடதுப்புறம் அன்னை நரசிம்மகியாக இங்கு அமர்ந்தகோலத்தில் காட்சியளிக்கிறாள். உற்சவ மூர்த்தி மட்டும் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். இச்சன்னிதியின் எதிரில் இருக்கும் கருடாழ்வாரும் சிம்ம முகத்தோடவே காட்சியளிக்கிறார், இது எங்கும் காணக்கிடைக்காத அரிய காட்சி. இங்கிருக்கும் ஆஞ்சிநேயர் வில்லேந்தி காட்சியளிக்கிறார். 


திருவோணம் நட்சத்திரம்,  சனிப்பிரதோஷம், புரட்டாசி சனி, ஏகாதசி உட்பட அனைத்து சனிக்கிழமைகளில்  எம்பெருமானை வழிபட கூட்டம் அலைமோதும்.  நரசிம்ம மூர்த்திகளை வணங்கி நம்பிக்கையுடன் இந்த நாட்களில் தங்களது வேண்டுதலை வைக்க அவை நிறைவேறும் என்பது நம்பிக்கை. இங்கு அருள் புரியும் மகாலட்சுமிதேவி இங்கிருக்கும் நரசிம்மர் போலவே சிங்கமுகத்துடன் காட்சியளித்து நரசிம்மி என்ற பெயருடன் விளங்குகிறாள். தன்னைப்போலவே காட்சியளிக்கும் நரசிம்மி தேவியை முதன்முதலில்  பார்த்த நரசிம்மர்  மிகவும் மகிழ்ச்சியடைந்தாராம். அவரும் ஏதாவது வரம் கேட்கும்படி சொல்ல தேவி நரசிம்மி அவரிடம் அவரது விசுவரூப தரிசனம் பார்க்க ஆசையாக இருப்பதாக தெரிவித்தாராம். அதன்படி தன்னுடைய விஸ்வரூப தரிசனத்தை தேவிக்கு காட்ட தேவி மிகவும் மகிழ்ந்து போனாளாம். அதனால் இந்த இடத்தில் இருக்கும் மக்கள் எந்தப் புது வேலையானாலும் இந்த தேவியிடம் வந்து சொல்லி ஆசிகள் பெற்று செல்லுகின்றனர். புது வண்டி. புது வீடு, நிலம், சொத்து என்று எதுவாக இருந்தாலும் நரசிம்மியிடம் வந்து சொல்லி ஆசிகள் பெறுகின்றனர். குழந்தை பிறந்ததும் அன்னையின் மடியில் வைத்து ஆசி பெறுகின்றனர்.

திருவண்ணாமலை கிரிவலம்போல் இங்கும் பல சித்தர்கள் வந்து இவர்களிடம் அருளைப் பெறுகின்றனராம். எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்ரீஅகத்திய முனிவரும் சூட்சும வடிவில் இங்கு வந்து கிரிவலம் செய்கின்றார் என்றும் மக்கள் சொல்கின்றனர். குபேரனும், தான் முன்பு இழந்த பதினாறு வகை நிதிகளை இங்கே வந்து கிரிவலம் சென்று மீண்டும் திரும்பப் பெற்றதாகக் கூறுகிறார்கள். அதனால் இங்கு கிரிவலம் செய்ய அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம், திருவோணம், சனிக்கிழமை போன்ற நாட்களில் மக்கள் வருகின்றனர். நரசிம்மி தேவியின் அருளைப் பெறுகின்றனர். இந்தகோயிலின் கருட தரிசனமும் பல இன்னல்களைக் களைகிறது. நிலையான செல்வம் தருகிறது. ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற ஒலி தென்றலில் வந்து மோதுகிறது. கிரிவலத்தின்போது பலர் ‘ஓம் நமோ நரசிம்மாய’ என்று சொல்லியபடி கிரிவலம் செய்கின்றனர். முன்னலாம் திருப்பதி சென்று நேர்த்திக்கடன் செய்ய இயலாதவங்க இங்கயே நேர்த்திக்கடனை செலுத்துவர். துலாபாரம் முதற்கொண்டு அனைத்து விதமான நேர்த்திக்கடங்களும் இங்கு செலுத்தப்படுது. ஆரணி, வந்தவாசி, செய்யாறு, சேத்பட்டை இணைக்கும் அனைத்து பேருந்துகளும் ஆவணியாபுரம் வழியே செல்லும். மெயின்ரோட்டிலிருந்து மலைக்கோவில் சுமார் ஒரு கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. மலைக்கோவிலுக்கு நடந்து செல்லலாம் அல்லது ஷேர் ஆட்டோக்களும் உண்டு. 


"ஓம் நமோ நரசிம்மி சமேத ஸ்ரீநரசிம்மாய" 

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை....
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1473029
நன்றியுடன்,
ராஜி.

19 comments:

  1. சிலையையும் ,வரலாறையும் படித்தால் நம் முன்னோர்களுக்கு நல்ல கற்பனாசக்தி என்றே தோன்றுகிறது :)

    ReplyDelete
    Replies
    1. இப்படியே எகனை மொகனையாய் பேசிக்கிட்டே இருங்கண்ணே. ஒருநாளைக்கு சாமி கண்ணை குத்தபோகுது

      Delete
    2. அந்த நல்ல நாளை எதிர்பார்க்கிறேன் :)

      Delete
  2. சுவாரஸ்யமான தகவல்கள். பகவான் ஜி.. கல்பனா சக்தியோ இல்லையோ.. கலையுணர்வு என்று சொல்லலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமா சகோ. பண்டிகை வச்சு ஆன்மீகம் வளருதோ இல்லியோ ஈகை, வர்த்தகம் வளருது. கடவுளால் மகிழாத மனசு பண்டிகையால் மகிழ்ந்தால் சந்தோசமே!

      Delete
    2. ஸ்ரீராம், ராஜி உங்கள் இருவரது கருத்துக்களையும் மிகவும் ரசித்தேன். ஆமாம் பண்டிகைனா ஒரு மகிழ்ச்சிதான்..ஆர்ட், கலைநயம், கைவேலைகள் என்று உயிர்ப்புடன் வைத்திருக்கும் நிகழ்வுகள்....எங்கு பார்த்தாலும் கலர்ஃபுல் தோரணங்கள், கோயில்களில் விழாக் கோலம், பலருக்கும் பிழைப்பு நடக்கிறது....என்று இந்த இடத்தில் இராமகிருஷ்ண பரமஹம்சரின் வாக்கு நினைவுக்கு வருகிறது.

      கிராமத்துல திருவிழா எல்லாம் வேஸ்ட் எவ்வளவு செலவு என்று யாரோ சொன்னதற்கு பரமஹம்ஸர் சொன்னாராம், வளையல் காரர், பலூன் காரர் மிட்டாய்காரர் என்று பல சிறு வியாபாரிகளுக்கும் சீசனல் வருமானம் அவர்கள் குடும்பத்திற்கான வருவாய். என்று..

      எனக்கு இதுவும் தோன்றும் அதாவது. சுத்துப்பட்டு கிராமங்களுக்கு என்ன ரூபாய் செலவழிச்சு பெரிய பெரிய ஊருக்குச் சுற்றுலாவா போக முடியும்? அவர்கள் இப்படி அருகிலுள்ள கிரமாத்துக் கோயில் திருவிழானா ஒரு சுற்றுலா மாதிரி, பொங்கல் வைச்சு எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டு ஆத்துலயோ குளத்துலயோ குளிச்சுனு குடும்பமே போகும். பொழுது போக்கிற்கு பொழுது போக்கு, குடும்ப மகிழ்ச்சி, சாமி கும்பிடல் என்றும் குழந்தைகளுக்கு ஒரு குதூகலம்...திருவிழாவில் ரிப்பன் வாங்கினாலோ, கலர்கண்ணாடி, பலூன், பீப்பீ, மிட்டாய் என்று வாங்கினால் அது ஒரு மகிழ்ச்சி....எல்லாம் சின்ன வயசுல எவ்வளவு அனுபவிச்சுருக்கோம். இருவரின் கருத்தும் பல நிகழ்வுகளை நினைவூட்டியது.

      கீதா

      Delete
  3. நாளையோடு முடியுமா த ம 4

    ReplyDelete
    Replies
    1. நாளை மறுநாளோடு முடியுதுப்பா. ஏன் போரடிக்குதோ?!

      Delete
  4. புதுத்தகவல்கள் பல அறிகிறேன்.. நரசிம்மரைப் பார்த்தாலே பயம்ம்ம்ம்மாக்கிடக்கே:).

    ReplyDelete
    Replies
    1. தப்பு செய்யுறவங்கதான் பயப்படனும். நாம ஏன் பயப்படனும்?! பயப்படாதீங்க ஆதிரா! கடவுள் கருணை நிறைந்தவர்.

      Delete
  5. நரசிம்மகி...இன்றுதான் அறிந்தேன். நம்மவர்களின் பெருமையே பெருமை. நாம் அறிந்துகொள்ளவேண்டியன இன்னும் எவ்வளவோ உள்ளது என்பதை உணர்த்துகின்ற பதிவு.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்ப்பா. சிறு தெய்வ வழிபாடு நம்மவர்கிட்ட மறைந்தே போச்சு.

      Delete
  6. நரசிம்ம உருவம் பார்த்தாலே ஒரு வீரம் தரும்...! படங்களும் குறிப்புகளும் அருமை !

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம் அதுக்குதான் உக்கிரமான கடவுள்கள் உருவாக்கப்பட்டது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  7. ராஜி இந்தப் பதிவுத் தகவல்கள் அனைத்துமே எனக்குப் புதிது. இதுதான் முதன்முறை இப்படியொரு தேவி பற்றி அறிவது. நான் பொதுவாகவே இறைவனுக்கு எந்த உருவமும் இல்லை அந்தப் பரம்பொருள் மாபெரும் சக்தி..அந்தச் சக்திக்கு ஈடு இணை எதுவும் இல்லை...எல்லாம் அந்தச் சக்தியின் செயலே என்று டோட்டல் சரண்டர்... என்று நினைத்து வணங்குவேன்.

    இந்தப் பதிவில் கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு கருத்தைத்தான் சொல்லியிருக்கிறீர்கள். எந்த ரூபமும் இல்லாத தேவி...அருமை!!! குறித்துக் கொண்டேன். இதுவரை கேள்விப்பட்டதுமில்லை சென்றதுமில்லை இவ்வூர்ப்பக்கம்...
    மிக்க நன்றி ராஜி...
    கீதா

    ReplyDelete
    Replies
    1. கடவுளுக்கு ரூபமில்லைதான் கீதா. ஆனா, நமக்கு கொஞ்ச, கெஞ்ச, அலங்கரித்து அழகு பார்க்க, வழிபட உருவம் வேணுமே அதுக்குதான் இத்தனை ரூபம். எல்லா கடவுளையும் உடைச்சு பார்த்தா சக்தி என்ற பெண் சக்தியும், சிவம் என்ற ஆண் சக்தியும் இருக்கும். ஆணும் பெண்ணும் இணைந்ததே வாழ்க்கை, உலகம். ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து, மனசாட்சிபடியும், நேர்மையோடும அனுசரிச்சு செல்லனும்.. தீமையை கண்டா பொங்கனும். இதை உணர்த்துவதே இக்கடவுள்கள்.

      Delete
    2. இந்த கோவில் எங்க வீட்டிலிருந்து 15கிமீ தூரத்தில் இருக்குப்பா... வரும்போது சொல்லுங்க. சந்திக்கலாம் கீதாக்கா

      Delete
  8. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete