நவம்ன்னா ஒன்பதுன்னு அர்த்தம். அன்னை சக்தி தேவியை 9 நாட்களும் வெவ்வேறு ரூபங்களில் வழிபடும் மக்கள், மகிஷாசுரனை தேவியானவள் 9 நாட்கள் போரிட்டு வெற்றிவாகை சூடிய நாளை விஜயதசமியாகக் கொண்டாடி மகிழ்கின்றனர். மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை வென்றதையே விஜய தசமி பண்டிகை குறிக்கிறது. விஜய்ன்னா வெற்றி, தசமி ன்னா பத்து (தசம் என்றால் பத்து). இதனையே விஜயதசமின்னு சொல்றோம். எனவே 9 நாட்களும் விரதமிருந்து வழிபடுவோர், 10ம் நாளான இன்று அன்னையின் வெற்றியைக் கொண்டாடி விரதத்தை முடித்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
விஜயதசமிக்கு மற்றொரு பொருளும் உண்டு. நவராத்திரியின் ஒன்பது நாளும் விரதமிருந்து தூய்மையான உள்ளத்துடனும், பக்தியுடனும் வழிபட்டவர்கள் இல்லம் தேடி, பத்தாம் நாளான தசமி அன்று அம்பாள் விஜயம் செய்யும் நாளே ’விஜயதசமி’என்றும் கூறப்படுகிறது. அன்று அம்பாளே நம் இல்லம் தேடி வருகிறாள் என்றால் இந்நாளின் சிறப்பு பற்றி சொல்லவும் வேணுமோ?!
நவராத்திரியின் ஒன்பதாவது நாளான மகாநவமி என்று சொல்லப்படும் ஆயுத பூஜையன்று தொழில்களையும், கல்வியையும், கலைகளையும் போற்றும் விதமாகவும், அதற்கடுத்த நாள் விஜயதசமி என்று வெற்றித் திருநாளாகவும் உலகெங்கும் உள்ள இந்துக்கள் ஆதிக்காலம் தொட்டுக் கொண்டாடி வருகின்றார்கள். இத்திருநாளில் ஏடு தொடங்குதல், புதிய வியாபாரம், புதிய தொழில் ஸ்தாபனங்கள் போன்றன ஆரம்பிப்பதால் வெற்றியும் புகழும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
குழந்தைகளுக்கு விஜதசமி தினத்தன்று ஆரம்பக் கல்வியை இந்த நாளில் ஆரம்பித்து வைப்பது தொன்று தொட்டு நடந்து வருகிறது. மேலும் இன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும் என்பது ஐதீகம். தவிர, உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா பண்டிகையும் விஜய தசமி நாளில்தான் கொண்டாடப்படுது. தேவியின் வெற்றியைக் கொண்டாடும் விழாவாகவே தசரா பண்டிகை திகழ்கிறது. மைசூருவில் நடைபெறும் தசரா பண்டிகை ரத ஊர்வலத்தைக் காண இந்தியா மட்டுமில்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் அங்கு கூடுவார்கள். மைசூரு தசரா பண்டிகையைப் போன்று தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் நடைபெறும் தசரா பண்டிகையும் மிகப் புகழ்பெற்றது. அங்குள்ள அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் இந்த பண்டிகையையொட்டி ஆயிரக்கணக்கானோர் கூடுவார்கள்.
மகிஷாசுரன், சண்ட முண்டர்கள், சும்ப நிசும்பர்கள் ஆகிய கொடிய அரக்கர்களை அன்னை பராசக்தி அழித்து வெற்றி கொண்ட திருநாள். தீமையின் உருவான பத்து தலை ராவணனை ஸ்ரீராமன் போரில் வென்ற திருநாள். இதன் நினைவாகவே வடநாட்டில் ராம்லீலா நிகழ்ச்சி நடத்தப்படுது. பாண்டவர்கள் தர்மத்தின் வெற்றிக்காக தங்கள் ஆயுதங்களையும், அன்னை துர்க்கையையும் வழிபட்டது இந்நாளில்தான்....
.
நவராத்திரியில் ஸ்ரீதேவியைத்(திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு தேவி சகல சௌபாக்கியங்களையும் வழங்குவாள் என்பது ஐதீகம். தேவியானவள் அனைத்து உருவத்திலும் எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கிறாள் என்பதைக் குறிக்கும் விதமாகவே அனைத்து உருவ பொம்மைகளையும் கொலுவாக வைத்து வணங்கும் கலாச்சாரம் வழக்கத்தில் உள்ளது.
பிரம்மதேவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான் மகிஷன் என்னும் அசுரன். அவனது தவத்தைக் கண்டு மனம் இரங்கிய பிரம்மதேவர், அசுரனின் முன்பு தோன்றினார். அவரைக் கண்டதும் மகிஷன் மகிழ்ச்சியில் திளைத்தான். பின்னர் தனக்கு அழிவில்லாத வரத்தைத் தருமாறு பிரம்மதேவரிடம் கேட்டான். ஆனால் பிறந்த அனைவருக்கும் இறப்பு நிச்சயம். எனவே வேறு வரம் கேட்கும்படி பிரம்மதேவர் கூறினார். இதையடுத்து, ‘தனக்கு அழிவு என்று ஒன்று வந்தால், அது பெண்ணாலேயே வர வேண்டும்’ என்ற வரத்தை மகிஷன் கேட்டான். பிரம்மதேவரும் அவன் கேட்டபடியே வரம் அருளி மறைந்தார். மகிஷனின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. பெண்கள் மென்மையானவர்கள். அவர்களால் நமக்கு ஆபத்து வர வாய்ப்பில்லை என்பது மகிஷனின் எண்ணம்.
பெண்ணால் மரணம் வராது என்ற தைரியத்தில் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என அனைவரையும் கொடுமைப்படுத்தினான். மகிஷனின் தொல்லையால், தேவர்கள் அனைவரும் துன்பத்தில் ஆழ்ந்தனர். துன்பம் எல்லை கடந்ததால் அவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று மகிஷனிடம் இருந்து தங்களைக் காத்தருளும்படி வேண்டி நின்றனர். ‘மகிஷனுக்கு பெண்ணால்தான் மரணம் என்று உள்ளது. எனவே நீங்கள் அன்னை பராசக்தியிடம் சென்று வேண்டுங்கள்’ என்று கூறி தேவர்களை அனுப்பிவைத்தார் மகாவிஷ்ணு. தேவர்கள் சக்தியை நோக்கி வழிபட்டனர். அதன் பயனாக அவர்கள் முன்பு மகாலட்சுமி தோன்றினாள். ‘மகாலட்சுமி’ என்பதற்கு எல்லாவிதமான லட்சணங்களையும் கொண்டவள் என்பது பொருளாகும். அவளிடம் தேவர்கள் வைத்த வேண்டுகோளுக்கு இணங்க, தேவர்களை காக்கும் பொருட்டு தேவியானவள் போருக்கு ஆயத்தம் ஆனாள்.
சிவபெருமான், அன்னைக்கு சூலத்தை வழங்க, விஷ்ணு பகவான் சக்கரத்தைக் கொடுத்தார். அக்னி தனது சக்தியையும், வாயு வில்லாயுதத்தையும் வழங்கினர். இப்படியாக ஒவ்வொருவரும் அவரவர் ஆயுதத்தை வழங்கினர். அவற்றைப் பெற்றுக்கொண்ட அன்னை, மகிஷாசுரனை அழிப்பதற்காக புறப்பட்டுச் சென்றாள். போர்க்களம் புகுந்ததும் தன் நின்ற மகிஷனைப் பார்த்து அன்னைக்கு இரக்கம் ஏற்பட்டது. அவனைக் கொல்வதை விடுத்து முதலில் பாசத்தை வீசி தன் வசப்படுத்த நினைத்தாள். ஆனால் அது முடியாமல் போனது. ஏனெனில் தீயவை எதுவும் நல்லதை விரும்பாது. என்ன செய்தாலும் அது தீவினையை மட்டுமே சார்ந்திருக்கும். அதற்கு அழிவு மட்டுமே முடிவு என்பதை உணர்ந்து கொண்ட அன்னை, 9 நாட்கள் போரிட்டு 10–ம் நாளில் மகிஷாசுரனை அழித்தாள். அப்போது தேவர்கள் அனைவரும் மேலுலகில் நின்று பொம்மை போல் பார்த்துக் கொண்டிருந்தனர். அதில் இருந்துதான் கொலு வைக்கும் வழக்கம் ஏற்பட்டதாகவும் ஒரு கூற்று நிலவுகிறது.
கொடியவனான மகிஷாசுரன் அழிந்ததால் தேவர்கள் அனைவரும் மகிழ்ந்தார்கள். மகிஷாசுரன் அழிந்த தினத்தை, அன்னை வெற்றிபெற்ற நாளை விஜயதசமியாக கொண்டாடி மகிழ்ந்தனர். மகிஷன் வதத்தின் நினைவாகவே நாமும் விஜயதசமியை கொண்டாடுகின்றோம்.பொதுவாக கோவில்களில் வில்வம், வேம்பு, அரச மரங்களைப் பார்க்கலாம். இதில் அரசமரத்தை மட்டுமே வலம் வருவது மரபு. ஆனால், விஜயதசமியன்று வன்னி மரத்தை வலம் வந்தால் சிறந்த பலன் கிடைக்கும். பாண்டவர்கள் காட்டில் மறைந்து வாழும் போது, நவராத்திரி காலம் வந்தது. அவர்கள் தங்களது ஆயுதங்களை வன்னி மரம் ஒன்றின் கீழ் ஒளித்து வைத்தனர். பத்தாம் நாள் பராசக்தியை வழிபட்ட பிறகு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு போருக்கு புறப்பட்டனர். அந்த நாளே விஜயதசமி. இந்த நாளில் வன்னி மரத்தை 21 முறை வலம் வந்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
பார்க்க கொடூரமாய் இருந்தாலும் வரங்களை வாரி இறைப்பதில் அவளுக்கு நிகர் அவளே! ராவணனை கொன்ற ராமரும், கர்ணனை கொன்ற அர்ஜுனனும் தங்கள் பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிப்பட்டது துர்க்கையைதான். இவளை வணங்க ராகுகாலம் உகந்தது. அமாவாசை, அஷ்டமி, நவமி ஆகிய நாட்களும் இவளை வணங்க ஏற்ற நாட்கள். இவளை வணங்குவதால் ராகுதோஷம் நீங்கும். திருமணம் கைக்கூடும். வெற்றியை அளித்து வாழவைப்பதில் விஷ்ணு அம்சம், பக்தர்களின் தேவைகளை புதிதாய் படைப்பதில் பிரம்மன் அம்சம், பக்தர்களுக்கு நேரும் துன்பங்களை அழிப்பதில் சிவனின் அம்சம் இவள்.
துர்க்கையை வணங்குவோம்... வாழ்வில் எல்லா வளமும் பெறுவோம்...
துர்காதேவியின் மூல மந்திரம்...
ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யா குமரீச தீமஹி
தந்நோ துர்க்கிப் ப்ரசோதயாத்
ராஜி.
எங்கள் ப்ளாக் ஶ்ரீராம் சொல்லி இங்கே வந்தேன். அருமையான இடுகை. அனைத்து விஷயங்களையும் சுருக்கமாகவும் அழுத்தமாகவும் சொல்லும் வல்லமை உள்ளது. வாழ்க! வாழ்த்துகள்.
ReplyDeleteசத்தமில்லாம ஒரு விளம்பரம் நடக்குதா?! வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க கீதாம்மா
Deleteஅருமை நிறைய விடயங்கள் வாழ்த்துகள் சகோ
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே
Deleteமகிஷனை வணங்குபவருமிருக்கிறார்கள் என்று சில நாட்களுக்கு முன் படித்தேன்
ReplyDeleteம்ம்ம் அவங்கவங்க நம்பிக்கை அவங்கவங்களூக்குப்பா
Deleteஆஹா அப்போ முதலில் பெண்ணின் வீரத்தை வெளியே பறைசாற்றியது மகிஷனையே சாறுமா ....படங்கள் அருமை
ReplyDeleteஆமா, பெண்ணை ஏளனமாய் நினைச்சு மகிஷன் வரம் கேட்டான். கடவுளும் அப்படியே தந்தான்
Deleteசக்தி இல்லையேல் சிவமில்லை என்று தெரிந்திருந்தும் மகிஷாசுரன் தேவியை இப்படி நினைத்துவிட்டானே!! ம்ம்ம் இறுதியில் அழிந்தான்...நல்ல பல விஷயங்கள் அறிந்தோம்....
ReplyDeleteஎல்லா செயலுக்கும் ஒரு உள்ளர்த்தம் உண்டு
Deleteதுர்க்கையம்மன். நான் வணங்கும் இஷ்ட தெய்வம். என் குடும்பத்தாரும்கூட. அவ்வப்போது பட்டீஸ்வரம் துர்க்கையைக் கண்டுவருவேன், வருகிறேன்.
ReplyDeleteம்ம்ம் எங்க வீட்டுல அம்மா போய் வருவாங்க.
Deletetha.ma.5
ReplyDelete