Tuesday, September 12, 2017

மூன்று தலைமுறைக்கும் இனி கிட்டவே கிட்டாத பாக்கியம் - காவேரி மகாபுஷ்கரணி

நீரின்றி அமையாது உலகுன்னு உலக பொதுமறையாம் திருக்குறள்ல சொல்லி இருக்கு. அதேப்போல, நதிக்கரைகளில்தான் நாகரீகம் தோன்றியதுன்னு அறிவியல் சொல்லுது. அந்த நதிகளை புனிதத்தன்மையா கருதி பெண் கடவுளாய் பாவித்து வணங்குது இந்தியா.  நதி, நீர்களை கொண்டு ஏராளமான விழாக்கள் கொண்டாடப்படுது. கும்பமேளா, மகாமகம், தீர்த்தவாரின்னு ஏராளமானது இருந்தாலும் 144 வருசத்துக்கொருமுறை கொண்டாடும் மகாபுஷ்கரணி விழாவும் ஒண்ணு. 
காவிரி நதியின் கதை....

இன்னிக்கு குடகுமலைன்னு சொல்லப்படும் சஹ்யாசலம்ன்ற இடத்துல கவேரர்ன்ற மன்னன்  தன் மனசாட்சிக்கு கட்டுப்பட்டும், இறைவனுக்கு பயந்தும் நீதி தவறாமல்  ஆண்டு வந்தான். தனக்கு இப்பிறவியே போதுமென எண்ணிய மன்னன் முக்தியை பெற வேண்டி பிரம்மாவை நோக்கி கடுந்தவம் இருந்தான்.   அவன் முன் தோன்றிய பிரம்மா தனக்கு முதியை தரும் அதிகாரமில்லை. ஆனால், முக்தியை தரக்கூடிய வழியை காட்ட முடியுமெனக்கூறி  தன்னுடைய மானச புத்திரியான ஒரு பெண்குழந்தையை சாமுத்திரிகா லட்சணப்படி படைத்து  காவேரர் மன்னனுக்கு தத்து கொடுத்தார். அவள்தான் காவேரி.  இவளால் உனக்கு முக்தி கிடைக்குமெனக்கூறி மறைந்தார். காவேரியும், காவேரர் மன்னனின் அரண்மனையில் சீரும் சிறப்போடு மிகுந்த அன்புக்காட்டி வளர்த்து வந்தாள்.
தன்னுடைய ஐந்தாவது வயதில் மகாவிஷ்ணுவை நோக்கி,  தலைக்காவேரி என்று இன்று அழைக்கப்படும் இடத்தில் தவமிருந்தாள். பிரம்மாவின் மானச புத்திரி என்பதால் மகாவிஷ்ணு, காவேரிக்கு தாத்தா முறையாகும். அதனால், ஓடோடி வந்து, விளையாட்டு குழந்தையான நீ தவமிருக்க என்ன காரணம்?! உனக்கு என்ன வரம் வேண்டுமென மகாவிஷ்ணு கேட்டார். அதற்கு,  காவிரி குழந்தை ’என் பெயருக்கு உள்ள மகிமைகளை எனக்கு வரமாக வேண்டும்’ என கேட்டார்.  அதாவது கா என்றால் பாவத்தை போக்குபவள். வே என்றால் விருப்பங்களை நிறைவேற்றுபவள். ரி என்றால் முக்தியை தருபவள். இந்த மகிமையை எனக்கு வரமாக வேண்டும் என கேட்டாள்.  மகாவிஷ்ணு மிகவும் மனமகிழ்ந்து அகில உலகத்திலும் 5 வயதில் பரோபகரமான சிந்தனையுடன் லோகத்திற்கே பயன்படும் வரத்தை, இதுவரை யாருமே கேட்டிராத வரத்தை நீ கேட்டதனால் இன்று முதல் நீ லோபா முத்திரை என்ற பெயருடன் விளங்குவாய். தகுந்த நேரத்தில் அகத்திய பெருமான் உன்னை மணமுடிப்பார். அவர் மூலம் உன்னுடைய வரங்கள் நிறைவேறும் என அருளினார்.

மணமுடிக்கும் பருவம் வந்ததும்  அகத்திய பெருமான்,  லோபா முத்திரையை மணமுடித்தார். அவரிடம் தான் 5 வயதில் வரம் பெற்றதை சொல்லி அகத்தியரும் லோபா முத்திரையும் 5 வயதில் தவம் செய்த இடத்திற்குச் சென்றார்கள். இருவரும் மகாவிஷ்ணுவை தியானம் செய்ய மகாவிஷ்ணு அவர்களிடம் நீ தவம் செய்த இடத்தில் நான் நெல்லி மரமாக மாறுவேன்.  லோபா முத்திரையான உன்னிலிருந்து ஒரு (அம்சம்) கூறு பிரிந்து நெல்லி மரமான என்னுடைய வேர் பாகத்திலிருந்து (பாதகமலம்) காவேரி எனும் புனித நதியாக வருவாய் என அருளினார். பிறகு மகாவிஷ்ணு நெல்லி மரமாக மாற, லோபா முத்திரையின் ஒரு கூறு காவேரி நதியாக மாறியது. நதியான காவேரி, அகத்திய முனிவரை வணங்கி புனித நதியாக தனக்கு பூரணத்துவத்தை தரும்படி வேண்டினார். 

அனைத்து புண்ணிய நதிகளுடைய பாவங்களை நீக்கும் ஆற்றலையும், விரும்பியவற்றை தரும் ஆற்றலையும், முக்தியை தரும் ஆற்றலையும் தரும்படி வேண்டினார். அகத்தியர்,  காவேரி நதியை கமண்டலத்தில் அடக்கி பூரணத்துவம் பெற தவத்தில் வைத்தார். நீண்ட நெடுங்காலமாக தவத்தில் ஆழ்ந்து விட்டார். நாட்டில் புண்ணிய நதிகள் இல்லாமையால் பாவங்கள் பெருகி மழையின்றி வறுமையால் மக்கள் வாடினார்கள்.  அதே நேரத்தில்   தமிழகத்தை ஆண்ட காந்தமன் எனும் சோழ மன்னன் தன் நாட்டிற்கு வற்றாத ஜீவநதி வேண்டும் என திருமாலை துதித்து தவமிருந்தான். அதேசமயத்தில் சீர்காழியில் சாபம் பெற்ற இந்திரன் மூங்கில் காட்டில் சிவனை வழிபட்டு வந்தார். பூஜைக்கு நீரும் மலர்களும் இல்லாததால் அவரும் நீருக்காக வேண்டினார். திருமாலும், சிவபெருமானும் கணபதியை வேண்டும்படி வழிகாட்ட கணபதியும் அகத்தியர் தவம் செய்த இடத்திற்கு சென்றார். என்ன செய்தும் அகத்தியர் தவம் கலையாததால்,  கமண்டலத்தில் பூரணத்துவம் பெற்றிருந்த காவிரியை காகம் உருக்கொண்டு பூமியில் ஓட விட்டார். நதியின் தண்ணீரில் சத்தம் கேட்டும் துளிகள் பட்டும் அகத்தியர் தவம் கலைந்தது. நீண்ட கால தவத்தில் ஆழ்ந்ததால் கணபதியின் அருளால் காவிரி பூமியில் பெருகி ஓடுவதை கண்டு ஆசீர்வதித்தார். 

காவிரித்தாய் அகத்தியரை வணங்கி தான் சோழ மன்னன் பெற்ற வரத்தின் காரணமாக தென்னகம் நோக்கி சென்று கடலில் சங்கமிக்கும் வரை தன்னை வழி நடத்தி, தான் போகும் பாதை முழுமையும் சிவாலயங்களையும், விஷ்ணு ஆலயங்களையும் அமைக்க வேண்டினார். அதன்படியே, இருவருக்கும் ஆலயங்களை அமைத்த  அகத்தியரும் தான் சந்தியாவந்தனம் செய்யும் இடமெல்லாம் சிவபெருமான் சுயம்புவாக தோன்ற வேண்டிக்கொண்டு அதன்படி சிவன் அருள, தேவார பாடல் பெற்ற 269 தலங்களில் 190 தலங்களும், 108 திவ்ய தேசங்களில் பெரும்பான்மையான தலங்களும், காவிரி நதியினுடைய தென்கரையிலும், வடகரையிலும் அமைந்துள்ளன. அதேப்போல வைணவத்தின் 108 திவ்ய தேசங்களில் பெரும்பான்மையானது காவிரிக்கரையில்தான் இருக்கு . தென்னகத்தை ஆண்ட சோழ மன்னன் ஜீவ நதி வேண்டித் தவம் இருந்து வரம் பெற்ற காரணத்தால் சோழநாடு சோறு உடைத்து எனும் பெருமையை காவிரித்தாயால் பெற்றது. பொன்னி வளநாடு எனும் பெயரும் பெற்றது.  
நெற்கதிரில் நெல்மணிகள் நிறைந்து கதிர் கொள்ள முடியாமல் தலை சாய்த்துக் கொட்டிய கதிர்கள்,  கரை புரண்டு ஓடும் காவேரியில் கொட்டி,  நீர் தெரியாமல் தங்கபாலம் விரித்தது போல் காவேரி முழுமையும் நெல் மணி நிறைந்து ஓடியதால் இந்த பகுதியில் காவேரி பொன்னி என பெயர் பெறுகிறாள். 

மக்களின் பாவத்தை தீர்ப்பதோடு மட்டுமில்லாம,  நதிகளின் பாவத்தைத் தீர்ப்பதற்கு வரம் வாங்கியதால் துலாமாதமான ஐப்பசி மாதத்தில் புனித நதியான கங்கையும் காவிரியில் 30 நாளும் வாசம் செய்து தன் ஒரு வருட பாவத்தை நீக்கிக் கொண்டு தன்னுடைய இருப்பிடம் செல்கிறாள் என்பது ஐதீகம். கங்கையே காவிரி நதியில் வாசம் செய்வதால் 66 கோடி புண்ணிய தீர்த்தங்களும் காவிரியில் வாசம் செய்து தங்கள் பாவத்தை போக்கி கொண்டு தங்கள் இருப்பிடம் செல்கின்றனர். இவ்வளவு பெருமை வாய்ந்த காவிரி தாயினுடைய மகா புஷ்கர நாட்களில் காவிரித் தாய்க்கு மாலையில் லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ர நாமம், பாராயணங்களும், தேவாரம், திருவாசகம் திவ்விய பிரபந்த பாராயணங்களும் நடைபெறும். மாலை 6 மணிக்கு தினமும் காவிரி தாய்க்கு தீப ஆரத்தி செய்யப்படும்.
குரு கிரகம் ஒரு ராசிக்குள்  பிரவேசிக்கும் காலம் தொடங்கி 12 நாட்கள் முடிய புண்ணிய நதிகளில் நீராடுவதை  "புஷ்கரம்" ன்னு சொல்லப்படுது. அதை தொடர்ந்து குரு நின்ற காலம் முழுவதும் "புஷ்கர ஆண்டு" என நதியில் நீராடி முன்னோர்களுக்கு திதி, தர்பணம்செய்து தான தர்மங்ககளை செய்வதாகும்
அந்த வகையில் குருகிரகம் துலா இராசியில் 12.9.2017 செவ்வாய் அன்று காலை 6:51 மணிக்கு பிரவேசிக்கிறார் அன்று முதல் 23.9.2017 வரை புஷ்கரம் எனும் நீராடல் வைபவம் காவேரி நதி பாயும் அனைத்து ஊர்களிலும் கொண்டாடப்படும். 
புஷ்கரம் கொண்டாடப்பட காரணம்...


நவக்கிரகங்களில் ஒன்றாக குருபகவான் பிரம்மனை நோக்கி கடுந்தவம் செய்தான். அவனின் தவத்தை மெச்சிய பிரம்மன் தோன்றி, "உனக்கு என்ன வேண்டும்" எனக் கேட்டார்.  " எனக்கு தங்களுடைய புஷ்கரன்  வேண்டும்" என குருபகவான் கேட்டார். புஷ்கரன் என்பது அனைத்து ஈரேழு உலகத்திலும் உள்ள 66 கோடி தீர்த்தங்களின் அதிபதி. இவர் அமிர்த கலசம் ரூபம்கொண்டு பிரம்மன் கைகளில் இருக்கிறார்.  குருபகவானின் விருப்பப்படியே தன்னிடமுள்ள புஷ்கரனை அவருக்கு அளிக்க பிரம்மன் ஒப்புக் கொண்டார்  ஆனால் புஷ்கரன்,  பிரம்மனை விட்டுப் பிரிந்து குருபகவானிடம் செல்ல மறுத்தது. இதனால் தர்ம சங்கடமான பிரம்மன் புஷ்கரனிற்கும், குருபகவானுக்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்தினார். அதன்படி மேஷ ராசி முதல் மீன ராசி வரை 12 ராசிகளிலும் அந்தந்த ராசிக்கு உகந்த புண்ணிய நதிகளில் புஷ்கரன் இருக்க முடிவு செய்யப்பட்டது. 
அதன்படி புஷ்கரன் மேஷம் ராசியில் (கங்கை நதியிலும்), ரிஷபம் ராசியில் (நர்மதை நதியிலும்), மிதுனம் ராசியில் (சரஸ்வதி நதியிலும்), கடகம் ராசியில் (யமுனை நதியிலும்), சிம்மம் ராசியில் (கோதாவரி நதியிலும்) கன்னி ராசியின் போது (கிருஷ்ணா நதியிலும்), துலாம் ராசியில் (காவேரி நதியில்) விருச்சிக ராசியில் (தாமிரபரணி ஆற்றிலும்), தனுசு ராசியின் போது (சிந்து நதியிலும்), மகரம் ராசியில் (துங்கபத்திரா ஆற்றிலும்), கும்பம் ராசியில் (பிரம்ம நதியிலும்), மீனம் ராசியில் (பிரணீதா ஆற்றிலும்) என குருபகவான் எந்தெந்த ராசியில் பெயர்ச்சி செய்கிறாரோ அந்தந்த நேரத்தில் புஷ்கரன் அங்கு தங்கி இருப்பார் அப்போது பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன் முதலான முப்பது முக்கோடி  தேவர்கள் எல்லாம் இந்நதியில் தங்கியிருப்பார்கள் என்று உடன்படிக்கை செய்யப்பட்டது. 
பிரம்மனின் அருளாலும் குருப்பெயர்ச்சியாலும், புஷ்கரன் நதியில் கலக்கும்போது  66கோடி தீர்த்தங்களும் கலப்பதாய் ஐதீகம். இந்த குருப்பெயர்ச்சியின் போது குருபகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம்பெயர்கிறார். துலாம் ராசிக்கான நதி காவிரியாகும். அதனால், கர்நாடகாவின் குடகு மாவட்டம் பிரம்மகிரி தொடங்கி, ஸ்ரீரங்கப்பட்டினம், சிவன்சமுத்திரம், ஒக்கேனக்கல், மேட்டூர் பவானி பள்ளிப்பாளையம், கொடுமுடி, திருச்சி, ஸ்ரீரங்கம், திருவையாறு, சுவாமிமலை, கும்பகோணம், பூம்புகார் வரையிலான அனைத்து காவிரிக்கரை மக்கள் இந்த காவேரி புஷ்கரணியை மிகச்சிறப்பாய் கொண்டாடுகின்றனர்.

இந்த புஷ்கரணியை நம் அப்பா, நாம், நம் பிள்ளைகள் உள்ளிட்ட மூணு தலைமுறையும் அடுத்த புஷ்கரணி விழாவை கண்டு களிக்கவும், நீராடி புண்ணியம் பெறவும் முடியாது. அதனால வாய்ப்பு கிடைக்குறவங்க இன்று முதல் செப் 23 வரை காவிரி நதியில் நீராடி இறை அருள் பெறுவோம். பண்டிகை என்பது வெறும் கொண்டாட்டமன்று. அந்த நன்னாளில் நம்மால் முயன்றளவு இயலாதவர்களுக்கு தான தர்மங்களை செய்வதும்க்கூட.... 

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1471475

நன்றியுடன்,
ராஜி.

16 comments:

 1. கடைசிப்படம் மிகவும் அருமை சகோ,

  ReplyDelete
  Replies
  1. இதுல ஏதோ உள்குத்து இருக்குற மாதிரி இருக்கே!

   Delete
 2. வழக்கம்போல அழகிய, பொருத்தமான படங்களுடன் பதிவு சுவாரஸ்யம். கில்லர்ஜிக்கு கடைசிப்படம் பிடித்தது பல, எனக்கு வயதானவர் கைகூப்பி அமர்ந்திருக்கும் படம் பிடித்தது.

  நான்காம் வாக்கு.

  ReplyDelete
  Replies
  1. என்னப்பா எல்லாரும் படத்தை பத்தியே பேசிக்கிட்டு...

   Delete
 3. படங்கள் அருமை சகோதரியாரே
  தம+1

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 4. பதிவில் தங்களின் மெனக்கெடல் தெரிகிறது அக்கா...
  சிறப்பான பகிர்வு... அதற்கு மெருகேற்றும் படங்கள்...

  ReplyDelete
  Replies
  1. எந்த விசயமா இருந்தாலும் நம்மோட ஸ்பெஷல் டச் இருக்கனும்தானே சகோ!

   Delete
 5. படத்தோடு பதிவு நன்று த ம 6

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

   Delete
 6. படங்கள் எங்கிருந்து தேர்வு செய்கிறீ்ர்கள் அருமை பதிவும் மிக அருமை த.ம வாக்குடன்

  ReplyDelete
  Replies
  1. கூகுளாண்டவரை நம்பினோர் கைவிடப்படார்... சொன்னா நம்புவீங்களான்னு தெரியாது.. பதிவு டைப்ப அரை மணிக்கூர்ன்னா.. படம் எடுக்க அரை நாள் ஆகும். அப்பயும் திருப்தி வருவதில்லை... பேசாம படம் வரைய கத்துக்கனும் ...

   Delete
 7. அழகிய படங்களுடன்....பல பல அருமையான தகவல்கள் ராஜிக்கா...

  காவிரியின் வரலாறு ...மிக அருமை..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனு

   Delete
 8. இன்றுதான் பதிவினைக் கண்டேன். பெருமைப்படவேண்டிய விழா, பதிவு.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்ப்பா. நான் கலந்துக்க கிளம்பிட்டேன். நீங்க?!

   Delete