Tuesday, February 12, 2019

ஏழு ஜென்ம பாவம் போக்கும் ரத சப்தமி வழிபாடு


கணவனுக்காக, பிள்ளைகளுக்காக, படிப்புக்காக, பணத்துக்காகன்னு ஆயிரம் விரதங்கள் இருக்கு. ஆனா, ஆரோக்கியத்துக்கு?! அதுக்கும் ஒரு விரதம் நம் இந்து சமயத்துல இருக்கு...  நாம், நம் குடும்பம் ஆரோக்கியத்தோடு வாழ  ”ரத சப்தமி”ன்னு ஒரு விரதமிருக்கு.. தை மாதத்தில் இவ்விழா அனுஷ்டிக்கப்படுது. எல்லா தெய்வத்துக்கும் ஜெயந்தி தினம் உண்டு.. சூரியனுக்கும் அப்படி ஒரு தினத்தை வைத்து கொண்டாடும் நாளே ”ரத சப்தமி” தை அமாவாசையிலிருந்து ஏழாவது நாள் சூரியன் ஜெயந்தி கொண்டாடப்படுது. அன்றிலிருந்தே சூரியன் தன் வெப்பக்கதிர்களை சிறிதுசிறிதாய் கூட்டுகிறான்.


தெற்குப் பாதையில் பயணிக்கும் சூரியன்,  வடக்கு வழியில் திசை திரும்பிப் பயணிக்க ஆரம்பிக்கும் நாளும் ”ரத சப்தமி” எனக்கொண்டாடப்படுது. சூரியனின் ரதத்திலுள்ள சக்கரமே காலச்சக்கரம்  என்றும், ஏழு குதிரைகளே வாரத்தின் ஏழு நாட்கள் என்றும், சூரியன் தான் காலத்தின் கடவுள் என்றும்  ரிக்வேதம் கூறுகிறது.ஒவ்வொரு மாதமும் சூரியன் ஒவ்வொரு பெயரைப்பெறுகிறான்; தன் ஒளிக்கிரணங்களின் சக்தியை கூட்டியும் குறைத்தும் பயணிக்கிறானென்று புராணங்கள் கூறுகின்றது.  அதனை அறிவியலும் ஏற்கிறது.

சித்திரை மாதத்தில் விஷ்ணுன்ற பெயரில் 1000 கதிர்களுடனும், வைகாசியில் அர்யமான்ன்ற பெயரில் 1300 கதிர்களுடனும், ஆனியில் விஸ்வஸன்ற பெயரில் 1400 கதிர்களுடனும், ஆடியில் அம்சுமான்ன்ற பெயரில் 1500 கதிர்களுடனும், ஆவணியில் பர்ஜன்ன்ற பெயரில் 1400 கதிர்களுடனும்,  புரட்டாசியில் வருணன்ன்ற  பெயரில் 1300 கதிர்களுடனும்,  ஐப்பசியில் இந்திரன்ன்ற பெயரில் 1200  கதிர்களுடனும், கார்த்திகையில் தாதான்ற பெயரில்100 கதிர்களுடனும், மார்கழியில் நண்பனாக 1500  கதிர்களுடனும் தையில்  பூஷாவான்ன்ற பெயரில் 1000 கதிர்களுடனும், மாசியில் பகன்ன்றபெயரில் 1000 கதிர்களுடனும், பங்குனியில் துவஷ்டான்ற பெயரில் 1100  கதிர்களால் அனைவரையும் மகிழ்ச்சியூட்டுகிறான்.

Lord Surya on His Seven Horses Chariot
ரதசப்தமி விரதம் மிக எளிதானது.. சூரிய உதயத்தின்போது ஏதாவது ஒரு நீர்நிலைக்கு சென்று நீராட வேண்டும். அவ்வாறு செய்ய இயலாதவர்கள் அவரவர் இல்லத்திலேயே சிறிதளவாவது சூரிய ஒளி படும் இடத்தில் நீராட வேண்டும்.
தலையில் ஒன்று, கண்களில் இரண்டு, தோள்பட்டையில் இரண்டு, கால்களில் இரண்டு என மொத்தம் ஏழு எருக்கம் இலைகளை வைத்து நீராட வேண்டும். தலையில் வைக்கும் இலையில் பெண்கள் மஞ்சள்பொடி, அட்சதையும், ஆண்கள் வெறும் அட்சதம் மட்டும் வைத்து நீராட வேண்டும். இவ்வாறு நீராடுவதால் உடல் ஆரோக்கியமும்   செல்வ வளமும் கிட்டும் என்பது ஐதீகம். அர்க்கன் என்றால் சூரியன் என்று பொருள். அர்க்கன் இலை என்பதே எருக்கம் இலை என மாறிவிட்டது. சூரிய கதிர்களை கிரகிக்கும் சக்தி எருக்கம் இலைக்குண்டு. சூரிய கதிர்களில் உள்ள நல்ல சக்திகளை உடலுக்குள் செலுத்தும்.


இப்படி செய்வதால் நாம் ஏழு பிறவிகளில் செய்த பாவங்கள் விலகி மறைந்து போகும், புண்ணிய பலன்கள் பெருகும். அன்றைய தினம் குளித்து முடித்து சூரியனை நமஸ்கரிக்க வேண்டும். அதற்குப்பின் நமக்கு தெரிந்த சூரிய துதிகளை சொல்ல வேண்டும்.
எந்த தெய்வத்தை வழிப்படுகிறோமோ அந்த தெய்வத்தின் திருக்கரங்களில் நீர் வார்ப்பது போன்றது அர்க்கியம் விடுவது. எனவே “ரத சப்தமி”யன்று சூரியனுக்கு அர்க்கியம் விடுவது முக்கியத்துவம் வாய்ந்தது. சூரிய பகவானுக்கு உகந்தது சர்க்கரை பொங்கல் நிவேதனம்.
Image result for ரத சப்தமி 2019

பொங்கல் வைத்து அதன் சூடு ஆறும் முன் நிவேதனம் செய்திடல் வேண்டும். சூரியனுக்கு படைத்தப்பின் சர்க்கரை பொங்கலை பிறருக்கு விநியோகிப்பது சிறப்பான பலன் தரும். “ரத சப்தமி”யன்று வீட்டுவாசலிலும், பூஜை அறையிலும் தேர்க்கோலம் போடுவது வழக்கம். இந்த கோலத்தினை வீட்டு வாசலில் போட்டு அதன் வடமாக ஒரு கோட்டினை தெருவரை நீளும்படி வரைவதுண்டு. நாராயணனின் அம்சமே சூரியன் என்பதால் “ரத சப்தமி” பெருமாள் ஆலயங்களில் சூரிய பிரபையில் எம்பிரான் எழுந்தருள்வார்.

அன்றைய தினம் விரதம் இருப்பது நீடித்த ஆயுளும், குறையாத ஆரோக்கியமும் அளிக்கும் என்பது நம்பிக்கை. இவ்விரதம் இருப்பது சுமங்கலித்துவம் நிலைக்கச்செய்யும் எனவும் ஐதீகம்.. ரதசப்தமி தினத்தில் வழிப்படும்போது சூரியனை நோக்கி...

”ஓம் நமோ ஆதித் யாய... ஆயுள்ஆரோக்கியம்புத்திர் பலம் தேஹிமேசதா'' 

என்று சொல்லி வணங்கனும்.உலகத்துக்கே ஒளி வழங்கும் சூரியனை, சிவ அம்சமாக கொண்டு சிவசூரியன் என்றும், விஷ்ணுவின் அம்சமாய் சூரிய நாராயணன் என்றும் சொல்வர். இவர் சிவபெருமானின் வலது கண்ணாக இருப்பதாக சிவாகமங்கள் கூறுகின்றன. சூரிய சக்தியால்தான் அனைத்து ஜீவராசிகளும் உயிர் வாழ்கின்றன. ஜீவராசிகள் உயிர் வாழ்கின்றன. பருவக்காலமாற்றங்களும் சூரியனை மையமாய் வைத்தே நிகழ்கின்றது. சிவபெருமானை நோக்கி சூரியன் கடுந்தவம் செய்து கிரகபதம் எனும் பேறு பெற்றார். மேலும் ஆயிரம் கிரகணங்களோடு ஒளி மண்டலத்தில் உலாவரும் உயர்வையும் பெற்றார். இதனால் இருளை அழிக்கவும், ஒளியை உண்டாக்கவும் வெப்பத்தை தரக்கூடிய வல்லமையை பெற்றார். காசிப முனிவருக்கும், அவரது மனைவி அதிதிக்கும் விசுவான் முதலான 12 சூரியர்கள் பிறந்தனர். அதிதி அன்னையின் புத்திரர்களானதால் பன்னிரு சூரியர்களையும் ஆதித்தர் என்பர். சூரியன் மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு ராசிகளுக்கும் செல்வார். அவர் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்லும் சமயமே மாதப்பிறப்பு நிகழ்கிறது. சூரியன் சஞ்சரிக்கும் ராசியின் பெயரைக்கொண்டே அந்தந்த மாதங்களுக்கு பெயர்கள் வழங்கப்படுகின்றன.
Shri SURYA DEV
ஆயிரம் நாமங்கள் சொல்லி என்னை எவரொருவர் என்னைத் துதித்து வழிப்படுகிறார்களோ அவர்களின் எண்ணங்களை முழுமையா பூர்த்தி செய்வேன். ஆயிரம் நாமாவளி சொல்ல இயலாதவர்கள் இருபத்தியொரு நாமங்கள சொன்னாலும் போதும் என சூரிய பகவான் அருளிய இருபத்தியொரு நாமாவளி.

"ஓம் விகர்த்ததோ விவஸ்வாம்ஸ்ச
மார்த்தாண்டோ பாஸ்கரோ ரவி
லோகப் பிரகாசஸ்ரீமாம்
லோக சாக்ஷி த்ரிலோகேச:கர்த்தா ஹர்த்தா 
தமிஸரஹ'தபனஸ் தாபனஸ் சைவ
 கசி:ஸப்தாஸ்வ வாஹன
கபஸ்தி ஸ்தோஹ ப்ரம்மாச
ஸர்வ தேவ நமஸ்கிருத:"

மேற்கண்ட இருபத்தியொரு நாமாவளியை செபித்து உடல், மன ஆரோக்கியத்தோடும், செல்வ வளத்தோடும் பல்லாண்டு மகிழ்ச்சியோடு வாழ்வோம். 

நன்றியுடன்,
ராஜி.

12 comments:

 1. நல்ல விளக்கம் சகோதரி...

  ReplyDelete
 2. நல்ல பகிர்வு. தலைநகர் வந்த பிறகு பல பண்டிகைகள் கொண்டாட முடிவதில்லை.

  ReplyDelete
  Replies
  1. வாழ்க்கைமுறை அப்படியாகிப்போனது. ஒன்றும் சொல்வதற்கில்லைண்ணே. ஊரில் இருப்பவங்ககூட பல விரதங்களை, பண்டிகைகளை கொண்டாடுவதில்லை என்பதே உண்மை

   Delete
 3. என்னதான் தெரிந்த விவரங்களாய் இருந்தாலும் அந்தந்த நாளில் அதைப் படித்துக் கொள்வது ஒரு சிறப்பு.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோ. இப்படி ஒரு விரதம் இருப்பதே பலருக்கு தெரியாது.

   Delete
 4. நல்ல விவரங்கள் சகோதரி/ ராஜி

  ReplyDelete
  Replies
  1. இருவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 5. தெளிவான கருத்துகள்
  பாராட்டுகள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 6. கேள்விப்படாத விரதம். நன்றி சகோ

  ReplyDelete
  Replies
  1. நாளுக்கொரு விரதமிருக்கு சகோ. நமக்குதான் நிறைய விசயம் தெரில

   Delete