Monday, February 04, 2019

தை அமாவாசை விரதம் யாரெல்லாம் இருக்கலாம்?! - ஐஞ்சுவை அவியல்

இந்தா புள்ள! இன்னிக்கு அமாவாசை அதுமா அசைவம் சாப்புடுறியே! இதுலாம் சரியா?!

ம்க்கும். எனக்குதான் அம்மா, அப்பா இருக்காங்களே! அப்படி இருந்தா அமாவாசை விரதம் இருக்க தேவையில்லைன்னு சொல்வாங்க மாமா., அதான் சாப்பிடுறேன்.

அம்மா, அப்பா இருந்தாலும் தாத்தா, பாட்டி, கொள்ளு தாத்தா, பாட்டின்னு இருபத்தியொரு தலைமுறை பெரியவங்க, அவங்களோட தாகத்துக்கும், பசிக்கும் உன்னைதான் எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருப்பாங்க. இது தெரியுமா?!
 இதென்ன புதுக்கதையா இருக்கு?!
No photo description available.
புதுக்கதைலாம் இல்ல. அமாவாசை தினத்தன்னிக்கு நம்முடைய 21 தலைமுறைக்கான முன்னோர்களின் பசியையும், தாகத்தையும் தீர்க்க கறுப்பு எள் கலந்த தண்ணீரைக்கொண்டு தர்ப்பணம் செய்யனும். ஒருவேளை, நம்மைவிட அப்பா, அம்மா, அண்ணன்ன்னு இருந்தால் நாம தர்ப்பணம் கொடுக்கக்கூடாதுன்னுதான் சொல்லி இருக்காங்களே தவிர விரதம் இருக்கக்கூடாதுன்னு சொல்லல. அமாவாசையன்னிக்கு அசைவம், மதுலாம் சாப்பிடக்கூடாது.  காலையில் எழுந்து குளித்து, வீட்டை சுத்தம் பண்ணி, அருகிலிருக்கும் நீர்நிலைகளுக்கு போய் எள்கலந்த சாதத்தை தர்ப்பணம் செஞ்சுட்டு வீட்டில் முன்னோர்களுக்கு பிடித்தமான சாப்பாட்டு வகைலாம் செஞ்சு படைக்கனும். சாப்பாட்டில் வாழைக்காய் அவசியம் இருக்கனும். இப்படி மாதந்தோறும் வரும் அமாவாசையில் விரதமிருந்து முன்னோர்களை வணங்கினால், அவர்களின் தாகம், பசி நீங்கி  ஆசி வழங்குவாங்க என சாஸ்திரம் சொல்லுது.
Image may contain: night and sky
எல்லா அமாவாசையின்போதும் விரதம் இருக்கமுடியாத சூழலில் இருக்கவுங்க, ஆடி, புரட்டாசி, தைமாதத்தில் வரும் அமாவாசையில் விரதமிருந்து வழிப்பட்டால் அந்த வருடம்முழுவதும் விரதமிருந்த பலன் கிடைக்குமென சாச்திரம் சொல்லுது. இந்த மூன்று அமாவாசைக்கும் மஹாளய அமாவாசைன்னு பேரு.   அதுமட்டுமில்லாம மாதந்தோறும் வீட்டிலிருந்தபடியே அமாவாசை விரதம் இருக்கவுங்க, ராமேஸ்வரம், கன்னியாக்குமரி, பவானி, திருச்செந்தூர் மாதிரியான புண்ணிய தலத்திலும், அருகிலிருக்கும் மூன்று ஆறுகள், கூடுமிடத்திலோ அல்லது நீத்தார் கடனுக்குன்னு புகழ்வாய்ந்த திருத்தலத்தில் ஆடி, புரட்டாசி தை அமாவாசையில்  தினத்தில் தர்ப்பணம் கொடுப்பாங்க.  

ஒரு வருடத்தில் ஆடிமாதம் முதல் மார்கழி முடிய உள்ள காலம் தேவர்களுக்கு இரவு நேரம் என்பதால் ஓய்வுக்குச் சென்றுவிடுவார்கள். அந்த நேரத்தில் நம்முடைய முன்னோர்கள் நம்மைக் காப்பாற்றுவதற்காக பித்ருலோகத்தில் இருந்து வரவேண்டும் என்பதற்காக நாம் அவர்களுக்கு ஆடி அமாவாசையன்று தர்ப்பணம் கொடுக்கிறோம். நம்முடைய தர்ப்பணத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு பித்ருலோகத்திலிருந்து புறப்படும் நம் முன்னோர்கள் புரட்டாசிமாத மகாளய அமாவாசையன்று பூமிக்கு வர்றாங்க. எனவே, புரட்டாசி மாதம் நாம் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கனும். பிறகு தைமாதம் அவர்கள் மறுபடியும் தங்களுடைய லோகத்துக்குத் திரும்புகிறார்கள். தேவர்களின் ஓய்வுக் காலத்தில் பூமிக்கு வந்து நம்மை ஆசிர்வதித்து காப்பாற்றியதற்காக அவர்களுக்கு நன்றி சொல்லி வழியனுப்பும் விதமாக தை அமாவாசையன்னிக்கு  தர்ப்பணம் கொடுக்கனும்ன்னு சொல்லுது சாஸ்திரம்.

இந்நாளில் தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து அவர்களின் தாகத்தை தீர்க்கவேண்டும். இவ்வாறு செய்தால் அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி, அவர்களுக்கு முக்தி பேறு கிட்டுமென்பது ஐதீகம். மேலும் அன்றைய தினம் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம், துணி தானம் செய்யலாம்.  நம்ம முன்னோர்கள்  காகத்தின் வடிவில்  நம்ம வீட்டுக்கு வருவதாக ஐதீகம். அதனால் காகத்துக்கு சாப்பாடு வைப்பது முக்கியம். அன்று காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்கனும். காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுக்கனும்.  ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது. மதியவேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை தெரிஞ்சு வச்சுக்கிட்டு அவற்றை சொல்வது மிக முக்கியம். 
Image may contain: one or more people, people sitting and food
தர்ப்பணம் செய்தபின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, வடக்கு கிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாத்த வேண்டும். முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்து விளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை முன்தினமே ஊறவைத்து பசுவிற்கு தானமாக கொடுக்கலாம். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளைக்கூட  ஒத்திவைப்பது நல்லது. தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளை செய்யலாம். சாமி பூஜையையே அமாவாசை வழிபாட்டுக்காக தள்ளி வைக்கும்போது. சுபநிகழ்ச்சிகளில் மனம் ஈடுபட்டால் விரதம் கெடும்ன்னுதான் அமாவாசையன்னிக்கு சுபநிகழ்ச்சிகள் செய்விக்க தடை விதிக்கப்பட்டிருக்கு. அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு, முள்ளங்கி, சோம்பு மாதிரியான வாசனை பொருட்களை சமையலில் தவிர்க்கனும். 
Image may contain: 1 person, on stage
 தர்ப்பணம் செய்யும் போது கறுப்பு எள்ளை, மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது. நீரில் இருந்துக்கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதைப்போல் கரையில் இருந்துக்கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்கனும்.  இப்படி ஏகப்பட்ட விதி இருக்கு. இந்நாளில்தான் அபிராமி பட்டர் வாய் தவறி சொன்ன சொல்லை காப்பாற்ற அன்னை அபிராமி  தனது மூக்கு புல்லாக்கை கழட்டி வீசி அமாவாசையை பௌர்ணமிதினமா மாற்றினது. இன்னிக்குதான் சூரியபகவானுக்கு திருமணம் நடந்தது. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் லட்சதீபம் ஏற்றப்படும். 
ஸ்ஸ்ஸ்ஸ் அபா! போதும் மாமா இப்பவே எனக்கு கண்ணை கட்டுது. நான் செத்து போயிட்டா எனக்கு நீ இதுலாம் செய்வியா?! இல்ல  இம்சை ஒழிஞ்சுதுன்னு அக்கடான்னு இருப்பியா?!

யாருக்கு யார் செய்றதுன்னு இறைவன் வகுத்திருப்பான். அதுப்படிதான் நடக்கும். அப்படி இருக்க தேவையற்ற பேச்சு ஏன்?!

சரி தேவையான பேச்சுக்களையே பேசுறேன்.. என் விடுகதைக்கு பதில் சொல்லு பார்க்கலாம்... 

காலையில் தலையை இழக்கும்... இரவில் தலை மீண்டும் முளைக்கும் அது என்ன?!

விடுகதைக்கு பதில் யோசிக்குறேன். நீ அதுக்குள் வாட்ஸ் அப்ல வந்த இந்த ஜோக்கையும், இந்த வீடியோவையும் பாரு..உடை, தோற்றத்தை வச்சுதான் இந்த உலகம் நம்மை எடைப்போடும்ன்றதுக்கு இந்த படமே சாட்சி.. பார்க்க எத்தனை கஷ்டமா இருக்குன்னு பாரு. ஏற்றத்தாழ்வு இல்லா சமுதாயம் மலரும் நாள் என்னிக்கு வரும்ன்னுதான் தெரில மாமா. மாமோய்! விடுகதைக்கு விடை யோசிச்சுட்டியா?!

எனக்கு தெரில! இன்னும் கொஞ்சம் டைம் கொடேன்...

மாமா யோசிச்சு சொல்றதுக்குள் நீங்க விடைகளை சொல்லுங்க சகோ! டிடி அண்ணா தவிர யார் வேணும்ன்னாலும் பதிலை சொல்லலாம்..

நன்றியுடன்,
ராஜி

12 comments:

 1. தை அமாவாசை விரதம் பற்றிய விளக்கம் மிகவும் அருமை சகோதரி...

  குழந்தை Anano தோற்றத்திற்கே இப்படியா...? முடிவில் நொந்துபோய் பேசுவது வேதனை...

  அப்புறம் ஒரு க்ளு :- வெளியூருக்கு செல்லும் போது, இது இல்லாமல் சிலருக்கு தூக்கம் வராது... சிலருக்கு கைகளே துணை...!

  ReplyDelete
  Replies
  1. டிடி அண்ணா தவிர்த்து யார் வேணும்ன்னாலும் பதில் சொல்லலாம்ன்னு சொல்லி இருக்கேன்.

   Delete
 2. அமாவாசை விடயங்கள் அறிந்தேன் சகோ.

  ReplyDelete
 3. தை அம்மாவாசை விஷயங்களை பகிர்ந்தமைக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 4. சிறப்பான தகவல்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 5. சகோதரியாரே நலம்தானே
  கடந்த ஒருமாத காலமாக வலைக்குள் வரஇயலா நிலை
  இனி தொடர்வேன்

  ReplyDelete
  Replies
  1. உங்க அன்பினாலும்,ஆசியினாலும் பரிபூர்ண நலம்ண்ணே! மெதுவா வாங்க. வருடங்கள் கடந்து வந்தாலும் உங்கள்மீதான அன்பும், மரியாதையும் மாறாதுண்ணே.

   Delete
 6. சிறப்பான தகவல்கள்....அந்தக் காணொளி விஷயம் ரொம்ப வேதனை...

  தலையணையா?!!

  துளசிதரன், கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கீதாக்கா, துளசி சார்

   Delete