Saturday, February 02, 2019

சந்தைக்கு போகலாமா?! - கிராமத்து வாழ்க்கை 6

எப்பவோ வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் தரும் ஊர்க்காசு, அப்பா, அம்மா  எப்பவோ ஒருதரம் தரும் அஞ்சு பைசாவும், பத்து பைசாவும் தேவைகளை தீர்த்த காலம் பொற்காலம்.  இப்ப, எல்.கே.ஜி பையன்கூட சாக்லேட் வாங்க பத்து ரூபா கேக்குது.  காசில்லைன்னாலும் மகிழ்ச்சியுடன் இருந்த காலக்கட்டம் அது. ஆனா, இப்ப ஐநூறும் ரெண்டாயிரம் ரூபாய் நோட்டாய் கையில் புரண்டாலும் திருப்தி இல்லை. அன்றைய நாளில் உயிர்ப்போடு இருந்தோம். இந்நாளில் உயிரோடு இருக்கோம். அம்புட்டுதான். நினைவுகளை மீட்டெடுக்கும் ஒரு சின்ன முயற்சியான கிராமத்து வாழ்க்கையின் ஆறாவது பாகம். 

Image may contain: 1 person
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு கிழமையில் சந்தை போடுவாங்க.  நாங்க சின்ன வயசில் குடியிருந்த ஊரில் திங்கட்கிழமையில் சந்தை போடுவாங்க. ஆடு, மாடு, கோழி முதற்கொண்டு, கருவாடு, விதைகள், பொம்மை, ஊசி, பாசிமணி, சொம்பு, தட்டு,  கோலப்பொடி, மண்பானைன்னு சகலமும் கிடைக்கும் திறந்தவெளி சூப்பர் மார்க்கெட். ஒருவாரத்துக்கு தேவையான காய்கறிகளை வாங்கிட்டு வந்து வச்சுப்பாங்க. பக்கத்து நிலத்தில் விளைஞ்சதை சந்தைக்கு விவசாயிகளே கொண்டுவந்து விற்பதால், இடைத்தரகர்கள் இல்லாததால் விலைலாம் குறைச்சலா இருக்கும். இப்பயும் எங்காவது போகும்போது சந்தை இருந்தால் வீட்டுக்கு தேவையானதை வாங்கிப்பேன். மார்க்கெட், சூப்பர் மார்க்கெட், கடைகளைவிட விலையும் குறைவு, அளவும் அதிகம்.
Image may contain: sky, tree, outdoor and nature
வயல்வெளிகளில் அறுவடையான கரும்பினை ரோட்டோரத்தில் அடுக்கி வச்சிருப்பாங்க. அந்த பக்கம் போவோர் வருவோர் எடுத்துகிட்டு போனது மிச்சம்தான் விலைக்கு போகும். வண்டிகளில் கரும்பு போச்சுன்னா பின்னாடியே ஓடிப்போய் ஒன்றிரண்டு கரும்பை இழுத்துட்டு வந்தால்தான் திருப்தியே! அப்படி எடுக்குறவங்களை கண்டும் காணாம ஓட்டிக்கிட்டு போய்டுவாங்க. இப்பயும் எங்காவது வண்டி நின்னா கரும்பை எடுத்துக்கிட்டுதான் வருவேன். 
தென்னை மர பிஞ்சில், தென்னை துடைப்பம் குச்சிகளை, படத்திலிருக்குறமாதிரி சொருகி, சுழற்றும்போது டகடகடகன்னு ஒருமாதிரி சப்தம் வரும். பைசா இல்லாமயே பொழுது போனது.. மகிழ்ச்சியோடு...
Image may contain: food and text
அமாவாசை, கிருத்திகை, பண்டிகை நாட்களில் சாமி கும்பிடும்போது யாருக்கும் தெரியாம தேங்காயை ஒரு கடி கடிச்சுட்டு, சத்தம் காட்டாம அப்படியே வச்சிட்டு எலியார்மேல் பழிபோட்டது நான் சின்ன வயசில் செஞ்சது. அதுக்கு பழிவாங்க எலியார் என் கைவிரலை கடிச்சு, அதுக்காக ஊசி போடச்சொல்ல, ஊசிக்கு பயந்து அழுதிக்கிட்டே ஹாஸ்பிட்டலில் அங்குமிங்கும் ஓட, அப்பா அடிக்க, கைவளையல் உடைஞ்சு ரத்தம் வந்து காயமாக, அதுக்கும் சேர்த்து ரெண்டு ஊசியாய் போட்டுக்கிட்டது நான் அனுபவித்தது. 
மஞ்சள், ஆரஞ்ச், பச்சைன்னு பாட்டிலில் இருக்கும் திரவத்தின்மீது அத்தனை ஆசை. எலுமிச்சையை வெட்டி, பிழிஞ்சு, சர்க்கரை தண்ணி, சோடா சேர்த்து, இந்த கலர் தண்ணியை ஊத்தி, சில ஐஸ்கட்டிகளை போட்டு மிதக்கவிட்டு தருவாங்க.  சும்ம்மா சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு மண்டைக்குள் ஏறி வரும்பாருங்க ஒரு புத்துணர்ச்சி... இருங்க! ஃப்ரிட்ஜ்ல நன்னாரி சர்பத் இருக்கு. ஒரு டம்ப்ளர் போட்டுக்கிட்டு வரேன். 
கொஞ்சம் வளர்ந்தபின் (வளர்ந்துட்டியா?! உடம்பால் சரி, மனசால், அறிவால்ன்னு யாரும் நமுட்டு சிரிப்பு சிரிக்கப்படாது) சபரிமலைக்கு போய்வரும்போது அப்பா வாங்கி வந்த விளையாட்டு சாமான்.  பொழுதன்னிக்கும் இதோடுதான். ரெண்டாவது முறை வாங்கி வரும்போது லைட்டோடு இருக்க மாதிரி வாங்கி வந்தார்., இன்னிக்கு ராத்திரியில்  மொபைலில் ஃபேஸ்புக் நோண்டுறமாதிரி,அன்னிக்கு இதோடு மல்லுக்கட்டிக்கிட்டிருந்தேன். 

மீண்டும் ஒரு நினைவு மீட்டலோடு சந்திக்கிறேன்..

நன்றியுடன்,
ராஜி

15 comments:

 1. சும்ம்மா சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு மகிழ்ச்சியான நிகழ்வுகள் மண்டைக்குள் ஏறி வந்து நிக்குது...! ம்...

  // அன்று உயிர்ப்போடு... இன்று உயிரோடு... // உண்மை...

  ReplyDelete
  Replies
  1. நான் என்னிக்குமே உண்மையதான் சொல்வேன்ண்ணே.

   Delete
 2. அந்த சந்தைக்குள் நுழையும்போது வரும் வாசமிருக்கே...சொல்ல வார்த்தைகளே இல்லை !

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. நான் செட்டிநாடு சிமெண்ட் பேக்டரியில் வேலையில் இருக்கும்பொழுது எங்கள் மெஸ்க்கு, சந்தைக்கு சென்று காய்கறி வாங்கி வந்ததை நியாபகப்படுத்தி விட்டது இந்த பதிவு .

  எங்களுக்கு கொடுக்காமல் நீங்கள் மட்டும் குடிக்கறது என்ன நியாயம்?

  நாங்களும் இங்க குடிக்கிறோம் இல்ல. (நான் தான் அதை இந்தியாவிலிருந்து இங்கு ஏற்றுமதி செய்கிறேன்)

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி சகோ.

   Delete
 5. நினைவுகள் சங்கீதமாய்....

  ReplyDelete
  Replies
  1. ரசிக்கத்தக்க மெல்லிசையாய்...

   Delete
 6. இந்த ஊர்க்காசை வைத்து குடும்பத்தில் அஞ்சு பைசா அம்மு என்றொரு தொடர் சிரிப்பு கார்ட்டூன் வரும் நினைவிருக்கிறதா?

  ReplyDelete
  Replies
  1. ம்ஹூம். நினைவில்லை சகோ

   Delete
 7. சர்பத் நினைவுகளில் நன்னாரி சேர்ப்பதையும் சப்ஜா விதை சேர்ப்பையும் சொல்ல விட்டு விட்டீர்கள்...

  ReplyDelete
  Replies
  1. அதான் பக்கம் பக்கமா படிப்பதிலிருந்து விடுதலைன்னு சொல்லிட்டேனே! அதான் சுருக்கமா சர்பத்ன்னு சொல்லிட்டேன்

   Delete
 8. மாமியார் ஊரில் சனி தோறும் சந்தை உண்டு க்கா ...சொந்தங்களை அங்கே கண்டு பேசுவதும் மகிழ்ச்சி தான் ...

  ....ஃப்ரிட்ஜ்ல நன்னாரி சர்பத் இருக்கு. ஒரு டம்ப்ளர் போட்டுக்கிட்டு வரேன்.....


  இதோ நானும் போறேன் சர்பத் போட..

  ReplyDelete