ஒருவழியாக ஸ்ரீகிரிஸ்னேஸ்வரர் திருக்கோவிலை தரிசித்து முடிச்சுட்டு, அப்படியே அங்க ஒரு புகழ்பெற்ற ஹனுமான்ஜி கோவில் இருக்கிறது போகலாமான்னு வழிக்காட்டி கேட்டார்.கூடுதலா ஒரு பதிவு கிடைக்குற ஆர்வத்துல ரெடி, ஜூட், ஒன்,டூ,த்ரீ.. வண்டிய எடுங்கன்னு சொல்லவும், வண்டி பத்ரமாருதி கோவிலுக்கு சென்றது இந்த குஹுல்டாபாத் பற்றி சொல்லனும்னா இந்த ஊரின் பழமையான பெயர் பத்ராவதி, மொகலாயர்கள் இந்த இடத்தை ஆக்கிரமித்தபோது இந்த ஊரின் பெயரை குஹுல்டாபாத்ன்னு மாத்திட்டாங்களாம்!! இந்தியில் பத்திராவதின்னா பவித்திரமான தலம்ன்னு பொருளாம்! (அப்படியா வெங்கட் அண்ணா, கீதாக்கா!) மொகலாயர்களின் வழக்கத்தில் இருந்த பார்சி மொழியில் சொர்க்கத்தின் நுழைவாயில் ன்னும் பொருளாம். எந்த மொழியில் பார்த்தாலும் எப்படி பார்த்தாலும் இது பவித்திரமான தலம்தான் என்பதை நேரில் போய் பார்த்தால் நாமே ஒத்துக்குவோம்.
இந்த கோவிலை ஸ்லீப்பிங் ஹனுமான்ஜி கோவில்ன்னு சொல்றாங்க. அதாவது, ஹனுமன் படுத்திருக்கும் நிலையிலிருக்கும் கோவில்ன்றதால இந்த பேராம். இதுப்போன்ற தோற்றத்தில் ஹனுமன் கோவில் கொண்டிருப்பது இந்தியாவில் வெகுசில இடங்களில் மட்டுமே! இதேப்போல் மத்திய பிரதேசம் மாநிலம் சிந்துவாடாவில் உள்ள சாம்வலின்ற இடத்துல இதேமாதிரி ஸ்லீப்பிங் ஹனுமான் மந்திர் கோவில் மலைமீது இருக்குது. இங்கு ஹனுமான் அருகில் கதாயுதம் இருக்க, அரைக்கண் மூடியிருக்க, கால்மேல் கால் போட்டுக்கொண்டு அரைத்தூக்க நிலையில் அனுமன் உள்ளார். இராம-ராவண யுத்தம் மற்றும் ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் முடிந்த பின்னர், இங்கு வந்து ஆஞ்சனேயர் ஓய்வெடுப்பதாக ஐதீகம்.’
முதலில் இந்த கோவிலில் வழிபட வந்த பக்தர்கள், ஹனுமன் சிலை நின்றக்கோலத்தில் இருந்திருக்கலாம். பின்னர் இயற்கை சீற்றத்தில் விழுந்திருக்கலாமென்றும், தூக்கி பழையபடி நிறுத்துவதற்கு முயற்சி செய்தபோது, எத்தனை தரம் தூக்கி நிறுத்தினாலும் அந்த ஹனுமார் திரும்பத்திரும்ப நழுவிப் படுத்துக்கொண்டாராம். ஆகையால், அவரை அப்படியே வைத்து வழிபடத் தொடங்கிவிட்டனராம் .
இதேப்போல் மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் நகரிலிருந்து சுமார் 170 கிமீ தூரத்தில் உள்ள புல்தா மாவட்டத்தில் உள்ள லோனார்ன்ற பகுதியில் ஸ்ரீவராஹர் கோயில் உள்ளது. இங்கிருந்து சுமார் 2 கிமீ தூரத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் எரிநட்சத்திரப்பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்ட மண்டபத்தில் தரைமட்டத்தில் சிவபெருமான் லிங்க வடிவில் தரிசனம் தருகிறார். இந்த மலைக்கோயிலின் வெளிப்புறத்தில் உள்ள பாறையில் 8 அடி நீளத்தில் சயனத்திருக்கோலத்தில் கண்களை நன்றாக மூடிக்கொண்டு ஹனுமன் நன்றாக உறங்கிக்கொண்டிருக்கும் காட்சியை காணலாம். உறங்கும் கோலத்தில் ஹனுமன் காட்யளிக்கும் சில கோவில்களில் இதுவும் ஒன்று என சொல்லப்படுது. இந்தக்கோவிலை சோபில்லா மாருதி மந்திர்ன்னு சொல்றாங்க. அதேசமயம் இங்க வழிபடுறவங்களும் சத்தம் எழுப்பாம வழிபட்டுட்டு செல்வாங்களாம் இதேபோன்ற அமைப்பு கொண்ட ஒரு கோவில்தான் இந்த பத்ரமாருதி மந்திர்.
கோவில் வளாகத்தினுள்ளும் சரி, வெளியேயும் சரி நிறைய இடங்கள் இருக்கின்றன. நம் கார் நிறுத்துவதற்கும் ,உள்ளே அமர்ந்து ஓய்வெடுப்பதற்கும் பெரிய மண்டபம் போன்ற அமைப்பு இருக்கிறது. இந்த கோவிலினுள் போட்டோ எடுத்தாலும் யாரும் ஒன்றும் சொல்லவில்லை. அது ஏனோ தெரியவும் இல்லை. நிறைய பேர் செலஃபி, போட்டோன்னு சாமிய கும்பிடுவதைவிட மொபைலை பார்த்துக்கிட்டு போஸ் கொடுத்துக்கிட்டு நிற்பதுதான்அதிகம். நீ ஏன்மா படமெடுக்கிறேன்னு என்னைய கேட்கக்கூடாது. நான் பதிவு தேத்தி பதிவிட்டு சமூக கடமை ஆத்தோ ஆத்துன்னு ஆத்துறேனே தவிர, செல்பிலாம் எடுக்க மாட்டேன். செல்பிக்கும் நமக்கும் ரொம்ம்ம்ம்ம்ம்ப தூரம். செல்பிக்குன்னே என் சின்ன பொண்ணை பெத்து வளர்த்து வச்சிருக்கேன். அதுதான் விதம்விதமா ரகம்ரகமா போட்டோவா எடுத்து தள்ளும். சரி, சுயபுராணம்லாம் போதும். கூட்டம் அதிகம் இருந்தா பக்தர்கள் ஹனுமானை தரிசிக்க எல்லா கோவில்களில் வைத்திருப்பது போன்றே இங்கும் ஒரு கண்ணாடி வழியாக அனுமனை தரிசிக்கலாம். சரி செல்பி கதை பேசிக்கிட்டே கோவிலின் வரலாறை பார்க்க மறந்திட்டோம் .
பத்ராவதின்ற அழைக்கப்பட்டு வந்த இந்த ராஜ்ஜியம், இந்த ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னனின் மகளின் பெயராலே அழைக்கப்பட்டதென சொல்லப்படுது. அதைபத்திய வரலாற்று குறிப்பும் இங்கே செவிவழி கதையாக சொல்லப்படுது. முன்பொருகாலத்தில் பத்ரசேனன்ன்ற அரசன் நீதிநேர்மை தவறாமல் இந்த ராஜ்ஜியத்தை ஆண்டுவந்தானாம். அவன் ஶ்ரீராமரின் பரம பக்தனாக விளங்கினானாம். இராம ராஜ்ஜியத்தை போலவே தன் குடிமக்களும் மிகவும் சந்தோஷமாக இருக்கவேண்டுமென விரும்பினானாம். அதற்கு ஶ்ரீராமரை உதாரண புருஷராகவும், பரம பவித்திரமானவருமாக இந்த அசரன் கருதினானாம். ஸ்ரீராமரை வழிபடுமுன் இங்கிருக்கும் பத்திரகுண்ட் என்னும் திருக்குளத்தில் நீராடிவிட்டுதான் இராமரை வழிபட செல்வானாம். இராமரின் அருளால் அரசனுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்ததாம். அதற்கு பத்திரா என்று திருநாமம் சூட்டி வளர்த்துவந்தானாம் கல்வி ,கலை,ஞானங்களில் வல்லவராக திகழ்ந்த பத்திராவின் பெயரால்தான் இந்த இடத்திற்கு பத்ராவதி என்று பெயர்வந்ததாக சொல்றாங்க.
சரி கதையை கேட்டுகிட்டே மூலவர் அருகில் வந்துட்டோம். எல்லா கோவில்களையும் போல இங்க நாம் உள்ளே சென்று வழிபடமுடியாது. நாம் மேடைமேல் நின்று வழிபடலாம். கீழிருக்கும் பள்ளத்தில் ஹனுமான் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரிகிறார் .எல்லோரும் தரிசனம் செய்யும் அளவிற்கு வட்டவடிவமாக இந்த மூலவரை சுற்றி பாதை போன்று வழிவமைத்துள்ளனர். வடநாட்டில் எல்லா கோவில்களைப்போல், இந்த கோவிலும் வெள்ளை மார்பிள் கற்களால் கட்டியிருக்கிறார்கள் .கோவிலின் உள்ளே வேலைப்பாடுகள் பார்பதற்கே அழகாக இருக்கிறது .
சரி, தொடர்ந்து நாம இந்த கோவிலின் ஸ்தல புராணத்தை பார்க்கலாம். அரசராக இருந்தாலும் பத்திரசேனா சங்கீதத்திலும் பாடல்கள் புனைவதிலும் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். ஶ்ரீராமரின்மேல் பல பாடல்கள் எழுதி தினமும் மனமுருக பாடுவாராம். அப்படி பாடும்போது தன்நிலை மறந்து பாடுவாராம். மக்கள் எல்லோரும் அவர் படலைக்கேட்டு அவரது இசையில் மயங்கி விடுவார்களாம். மிகவும் நேர்மையாக அரசாட்சி செய்துவந்த, அவருக்கு தன் பதவிமீதோ, புகழ், கௌரவத்தின்மீதோ எந்தவித பற்றுதலும் இல்லாமல் வாழ்ந்துவந்தாராம். அவரது பற்றற்ற இந்நிலையை கண்ட மக்கள், அவர் ராஜாவானபோதிலும் ரிஷியைபோல் இருப்பதால் "ராஜரிஷி" என்றே அழைத்தனர். ஶ்ரீராமரின் பெயரில் இருந்த பக்தியினால் சிலசமயம் இரவு முழுவதும் கூட அரசன் பாடிக்கொண்டே இருப்பாராம்.
வாங்க! இப்ப கொஞ்சம் வசதியா நின்னு ஹனுமனை தரிசித்துக்கிட்டே தொடர்ந்து வரலாறை பார்க்கலாம் .இப்படியே அரசன் இராமரை குறித்து தினமும் பாடிக்கொண்டு இருந்ததால் எங்கெங்கெலாம் இராமரின் நாமங்கள் உச்சரிக்கப்படுகின்றதோ அங்கெலாம் ஶ்ரீராம பக்த ஹனுமார்,பக்தியுடன் வருவார் என்பது ஐதீகம். .அதேபோல் அரசன் பத்திரசேனா மனமுருகி இராமரின் பெயரில் பாடல்கள் பாடும்போதெல்லாம் ராமபக்த ஹனுமார் அவரது பாடல்களை கேட்க பத்திராவதி க்ஷேத்திரத்திற்கு வந்தார். அன்று பத்திரசேனரின் பாடல்கள் மிகவும் இனிமையாக இருந்தது. அவர் இதயத்தின் ஒவ்வொரு அணுவும் பக்தியில் உருகியது. அந்த பக்தியின் பிரபாவம் பாடலிலும் அவரது குரலிலும் வெளிப்பட்டது. க்ஷேத்திரமே ஸ்தம்பித்ததுபோல் பக்தியின் அலை அடித்தது. இரவிலும்கூட பறவைகள், பசுக்கள் அரசனது பாடலில் உருகின. மரங்கள் காற்றுகூட ஸ்தம்பித்தது. தங்கள் அசைவினால் சப்தம் வருமே என்று பயந்தன. அப்படி ஒரு பக்தியின் வெளிப்பாடு இருந்ததாம்.
அப்பொழுது அங்கு வந்திருந்த ஹனுமன் பத்திரசேனனின் பாடலிலும், இராம பக்தியிலும் தன்னை மறந்து சிறிது சாய்ந்த நிலையில் ரசிக்க ஆரம்பித்து :"பாவசமாதி" என்னும் யோக நிலையை அடைந்தார். இதேப்போல் இராமனிடம் ஒன்றி பரவசத்துடன் பாடிக்கொண்டிருந்த பத்திரசேனன் மெதுவாக சகஜ நிலைக்கு வந்தபோது அவர் அருகில் ஹனுமன் பாவசமாதி நிலையில் இருந்தததை கண்டார். இவ்வளவு அருகாமையில் அனுமனை கண்டவுடன் அரசனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஹனுமனின் கால்களில் விழுந்து வணங்கினார். ஸ்பரிசம் பட்டவுடன்தான் ஹனுமான் பாவசமாதி நிலையிலிருந்து வெளியே வந்தார். "பத்திரசேனா! உமது ஶ்ரீராம பக்தியை கண்டு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. ஶ்ரீராமரின் தரிசனம் உனக்கு சீக்கிரமே கிடைக்கும். உனக்கு ஏதேனும் வேண்டுமென்றால் தயங்காது கேள் என்று பத்திரசேனனிடம் ஹனுமன் கேட்டார்.
உடனே பத்திரசேனன், அனுமனிடம் பிரபோ! ஶ்ரீராமரின் பரிபூர்ண ஆசிகள் பெற்ற நீங்களே என்பாட்டில் மகிழ்வடைந்ததே நான் செய்த புண்ணியம். அந்த புண்ணியத்தின் பலன், தாங்கள் எனக்கு தரிசனம் தந்ததால் நான் புனிதமடைந்தேன். அஞ்சனை மைந்தனே! ராமனின் பக்தனே! இந்த பாவசமாதி நிலையில் எனக்கு ஆசிகள் வழங்கியதுபோல், இங்கு வரும் பக்தர்களுக்கு நீங்கள் அருள் புரியவேண்டும் என்று வேண்டினான். மேலும் இங்குவரும் கன்னிப்பெண்களுக்கு . நல்ல வரன் அமைய நீங்கள்தான் அனுகிரகிக்க வேண்டும்."என்று வேண்டி நின்றான் அரசன். பத்திரசேனனை ஆசிர்வதித்த ஹனுமன் அவருக்கு கொடுத்த வாக்குபடியே இந்த க்ஷேத்திரத்தில் பாவசமாதி நிலையிலிருந்து பக்தர்களுக்கு அருள்புரிந்து எல்லா மங்களங்களும் பக்தர்களுக்கு வழங்குகிறார்.என்பது ஐதீகம்.
தரிசனம் முடிந்து வெளிவரும் வாயிலில் சனிபகவானது சந்நிதி ஒன்று இருக்கிறது. அங்கேயும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபடுகின்றனர் கோவிலினுள் ஒரு பஜனை மண்டபம் இருக்கு. நிறைய பக்தர்கள் அங்க பஜனை பாடல்களை பாடுகின்றனர். படுத்த நிலையில் அனுமன் அருளும் இந்த வித்தியாசமான தரிசனம் மனதுக்குள் ஒரு தனி ஆனந்தத்தைப் பொங்கச் செய்கிறது. நாங்களூம் ஒருவழியாக ஸ்லீப்பிங் ஹனுமான் மந்திரில் இருந்து தரிசனம் முடித்து வெளியேவந்தோம். வெளியே சிறுவர்களுக்கான ராட்டினங்களும், கடைகளும் நிறைய இருக்கின்றன, இங்கே பால்கோவா விஷேசமாக தயாரிக்கிறாங்க போல! எல்லா கடைகளிலும் பால்கோவாவை விற்பனைக்காக வைத்திருக்கிறார்கள் .
இந்த யாத்திரை நல்லபடியா முடிச்சிட்டு, வெளியே வரும்போது அருகில் உள்ள யூனஸ்கோவின் உலக வரலாற்று பிரதான சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ள எல்லோரா குகைகளுக்கும், அஜந்தா ஓவியங்களையும் பார்க்க ஆவலாக இருந்தோம். இதுவரை நாம இந்த பயணத்தில் கோவில்களை பற்றி பார்த்தோம் இனி அடுத்தவாரம் வேறு கோவிலிருந்து உங்களை சந்திக்கிறேன் .அதேசமயம் அஜந்தா எல்லோரா குகைகளுக்கும் விரைவில் உங்களை அழைத்துச்செல்கிறேன் .
நன்றியுடன்ராஜி
கேள்விப்படாத கோவில்...
ReplyDeleteஉங்கள் கடமைக்கு பாராட்டுகள் சகோதரி...
அந்த ஊர் கோவில்கள் வித்தியாசமாக இருக்கின்றன.
ReplyDeleteபண்பாடு, கலாச்சாரம், சூழல் மாறும்போது கட்டிட அமைப்பும் மாறும் சகோ.
Deleteநம்மூர்லயே பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர பேரரசர்கள்ன்னு கட்டிடக்கலை காலக்கட்டத்துக்கு ஏற்ப வித்தியாசப்படும்...
"//சரி கதையை கேட்டுகிட்டே மூலவர் அருகில் வந்துட்டோம்//" - உங்க கதையை நாங்களும் படிச்சுக்கிட்டே கீழே பின்னூட்டம் பகுதிக்கு வந்துட்டோம்
ReplyDeleteவந்துதானே ஆகனும்.. ஆரம்பிக்கும் எதுமே முடிஞ்சுதானே தீரனும்?! அதுக்கு பதிவும் விதிவிலக்கில்லையே!
Delete