Friday, February 01, 2019

ஸ்ரீகிரிஸ்னேஸ்வரர் ஜோதிர்லிங்க கோவில்,வீருல் -அவுரங்காபாத்

கடந்த வாரம் பிரம்மகிரி மற்றும் சித்தி ஹனுமான் கோவில்களை பற்றி பார்த்தோம். இந்தவாரம் நாம பார்க்கபோறது அந்த ஆதிசிவன் தன்னுடைய துணையான ஆதிசக்திக்கு ஜோதிவடிவாக காட்சிக்கொடுத்த இடங்களில் 12ஆவது இடமாக சொல்லப்படுவது இந்த ஸ்ரீகிரிஸ்னேஸ்வரர் கோயில் என்னும் ஸ்ரீகுஷ்மேஸ்வரர் கோயில்.இந்த ஸ்தல மூர்த்தி ஸ்ரீகுர்மேஸ்வர், ஸ்ரீகுஷுமேஸ்வர் என்றும் பல பெயர்களால் பக்தர்களால் வணங்கப்படுகிறார்.நாம வெளியூர்ங்கிறதுனால நிறைய வியாபாரிகள் நம்மை சூழ்ந்து கொள்வார்கள். நாம போறவழியில் குழந்தை வியாபாரிகள்  சுற்றி சூழ்ந்து எதையாவது வாங்க சொல்வாங்க. குழந்தைகள்ன்னா எப்பேர்பட்டவங்களும் மனசு இரங்கி பொருட்களை வாங்குவாங்க என்பது அவங்க வியாபார தந்திரம். அவங்களைத்தாண்டி வந்தா ஒரு இளைஞன் நான் படிக்கிறேன் படிப்புக்கு காசில்லை அதனால்தான் வியாபாரம் செய்கிறேன். என்னிடம் வாங்குங்க என்று ஆங்கிலத்தில் வியாபாரம் செய்கிறான்.  நம் இரக்கக்குணத்தை காசாக்குவதே அவங்க வியாபார உத்தி. பொருளை வாங்கும்போது கவனம் தேவை. 
கடைவீதிகளைலாம் தாண்டி கோவிலுக்குள் போனால், வழக்கமா இருக்கிற அறிவிப்புதான் இந்த கோவிலிலும் மொபைல் போன் தடைசெய்யப்பட்டுள்ளது. சுமார் 3000 வருடங்களுக்குமேல் பழமைவாய்ந்த கோவில்  இது என்று சொல்லப்படுகிறது. இந்தக்கோவில் மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத்திற்ரு அருகே உள்ள டவுலதாபாத்திலிருந்து 20 கி.மீ. தொலைவிலிருக்கிற  வீருல் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கோயில் எல்லோரா குகைகளிலிருந்து நடக்கும் தொலைவில்தான் இருக்கிறது .மிக பழமையான கோவில் என்றாலும்,வீருலின் மாலோஜி ராஜே போசலே என்பவரால் புணரமைத்து கட்டப்பட்டது. அவர் ராஜாவா இல்லை முக்கிய பொறுப்பில் இருந்தாரா என்பது பற்றி எனக்கு தெரிய வரவில்லை.  தெரிந்தவர்கள் சொல்லலாம் .
உள்ளூர்காரங்க என்ன சொல்றாங்கன்னா பண்டைக்காலம் தொட்டே போஸ்லே என்னும் பிரிவை சார்ந்தவர்கள் அவுரங்காபாத்தில் உள்ள இந்த ஸ்ரீகிரிஷ்ஷேஷ்வர் ஜோதிர்லிங்க கோயிலில் வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தாராம். அப்படி வந்த ஒரு குடும்பத்திலுள்ள ஒருவர் சிவவழிபாட்டிற்கு செல்லும்போது,பாம்புபுற்று ஒன்றில் தங்கபுதையலை கண்டெடுத்ததாகவும், அந்த புதையலை வைத்து இந்த ஆலயத்தை மறுசீரமைத்தனர் என்றும் சொல்றாங்க. சரி, நாம இப்ப கோவிலுக்குள் செல்லலாம். இக்கோவிலின்  தனிச்சிறப்பு என்னன்னா கேரளா கோவில்களைப்போல இந்த கோவிலுக்குள் நுழையும்போது ஆண்கள் மேல்சட்டை அணியக்கூடாது. அதேசமயம் தோலினால் ஆன பெல்ட் அணியக்கூடாது.  மொபைல் போன் எடுக்கக்கூடாது.  இவ்வளவு கட்டுப்பாடுகள் இருக்கின்றன .முக்திதாம் ,கோரா ராம் மந்திர்  போன்றவை வெள்ளை மார்பில் கற்களாலும் .காலா ராம்மந்திர்,திரிம்பகேஸ்வரர் கோவில் எல்லாம் கருப்பு மார்பிள் கற்களாலும் கட்டப்பட்டவை. அந்தவகையில் இந்த  ஸ்ரீகிரிஸ்னேஸ்வரர் கோவில் முழுக்க முழுக்க சிவப்பு மார்பிள் கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது பார்பதற்க்கே கொள்ளை அழகு .
ஒருவழியாக கோவிலுக்குள் வந்துவிட்டோம். கூட்டமாக இருந்தாலும் ஸ்பெஷல் டிக்கெட் எதுவும் இல்லை. சரி திருக்கோயிலுக்குள் நுழையும்முன்பு இக்கோவில் வரலாற்றை தெரிஞ்சுக்கலாம். ஒருமுறை அந்த ஆதிசக்தி மானிட வடிவெடுத்து பூவுலகில் அவதரித்தபோது இந்தப் பகுதியில் பாயும் ஏலா எனும் நதியில் தினமும் நீராடி, சிவபரம்பொருளை நினைத்து இங்கிருக்கும் லிங்க திருமேனிக்கு குங்குமத்தின் மூலம் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தார்.  ஒருநாள் ஏலா நதியில் நீராடிவிட்டு, தன்னுடைய இடது உள்ளங்கையில் இருந்த குங்குமத்தை, வலது கை மோதிர விரலால் எடுத்தபோது, கயிலையிலிருந்து ஒரு  ஜோதிப்பிழம்பு தோன்றி, தேவியின் கரத்தில் இருந்த குங்குமத்துடன் ஐக்கியமாகி, பிறகு அம்பிகை வழிபட்டு வந்த சிவலிங்க மூர்த்தியில் சங்கமித்தது. அதனால்  அந்தச் சிவலிங்க மூர்த்தம் குங்குமம் போன்று சிவந்து, ஜோதியைப் போன்று பிரகாசித்தது. பார்வதி தேவி குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்தபோது தோன்றியதால், இந்தத் தலம் `குஸ்ருணேசுவரம்' (குங்குமமேசுவரம்) என்று பின்னாளில் அழைக்கப்பட்டதென கோவில் ஸ்தல வரலாற்றில் சிவபுராணத்தை மேற்கோள்காட்டி சொல்லியிருக்கிறாங்க.
இதுதான் கோவிலின் உள்பக்க நுழைவாயில்.  இதுவழியாகத்தான் மூலவர் பிரகாரம் செல்லவேண்டும். இங்க நீண்ட வரிசை நின்னுட்டு இருக்கு. அந்த கூட்டத்தோடு நாமளும் நின்னுக்கிட்டே  இந்த கோவில் தலவரலாற்றினை இன்னும் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்.  ஒருகாலத்தில இந்த இடத்தில போசலேன்னு ஒரு சிவபக்தன் இருந்தான் அப்படி ஒருமுறை சிவவழிபாட்டுக்கு செல்லும் போது,வழியிலிருந்த ஒரு பாம்பு புற்றிலிருந்து ஒரு சிவலிங்கம் வெளிப்பட்டதாம். உடனே தன்கிட்ட இருந்த பொன்,  பொருள் ,ஆஸ்தி எல்லாவற்றையும் விற்று சிவபரம்பொருளுக்கு ஒரு கோவில் கட்டினானாம். இந்த நிகழ்வு நடந்த காலம் பற்றி சரியான குறிப்பு இல்லை. அதன்பிறகுதான் சத்ரபதி சிவாஜியின் பாட்டனார் மல்ரோஜி ராஜே போஸ்லே இந்த சிவபெருமான்மேல் கொண்ட பற்றினால் கோவிலை புணரமைத்தாராம், அதன்பிறகு 18 - ம் நூற்றாண்டில் அகில்பாய் ஹோல்கர் என்பவர்தான் இப்ப இருக்கும் சிவப்பு மார்பிளாலான ஐந்து நிலை கோபுரங்கள் கொண்ட இந்த அழகான கோவிலை காட்டினார் என்று குறிப்புகள் சொல்லுகின்றது.
கோபுரத்திலிருக்கும் சிலைகளும் வேலைப்பாடுகளும் மரத்தில் செதுக்கிய சிற்பங்கள் போலவே கற்களில் அவ்வளவு தத்ரூபமாக செதுக்கியுள்ளனர். இந்த கிரிஸ்னேஸ்வரரை குஷ்மேஸ்வரர்ன்னு சொல்லுவாங்க காரணம் குஷ்மேஸ்வரர்ன்னா  கருணையே வடிவானவர்ன்னு அர்த்தம். அதற்கேற்றார்போல் ஒரு வரலாறு இருக்கிறது. ஒருகாலத்தில் இந்த இடத்தில் சுதர்மன் என்ற பிராமணன்  அவன் மனைவி சுதேஹாவுடன் வாழ்ந்து வந்தான். திருமணமாகியும் நீண்டநாள் குழந்தைப்பேறு இல்லாததினால் சுதேஹா தன்னுடைய தங்கை குசுமாவை தன்னுடைய கணவனுக்கு இரண்டாவதாக திருமணம் செய்துவைத்தாள். தீவிர சிவபக்தையான குசுமா தினமும் களிமண்ணால் ஒரு சிவலிங்கத்தை செய்து வழிபாடு செய்து, வழிபாடு முடிந்ததும் ,அந்த சிவலிங்கத்தை அங்கிருந்த ஏரியில் போட்டுவிடுவாள். இப்படி தினமும் தவறாது செய்துவந்தாள்.
அனுதினமும் சிவபெருமானை வழிபட்டத்தினால் குசுமா ஒரு அழகான ஆண்குழந்தையை பெற்றெடுத்தாள். சுதர்மனோ குழந்தையுடனும் குசுமாவிடமும் அதிக நேரம் செலவழித்தான். சுதேஹாவை கவனிக்கவே இல்லை. அவள்பக்கமும் வருவது இல்லை. அதுவரை தன் தங்கையை அன்புடன் கவனித்துவந்த சுதேஹா மனம்மாறினாள். யாரும் செய்ய துணியாத காரியமான, தன் தங்கையின் குழந்தையை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி சிவாலய ஏரியில் வீசிவிட்டாள். இதைக் கேள்விப்பட்ட குசுமா, சிவபெருமானிடம் தனது குழந்தையை காப்பாற்றும்படி அழுதுபுலம்பி வேண்டினாள். .தாயிற் சிறந்த தயாபரன் அல்லவா?! தன் பக்தையின் குரலுக்கு செய்வி சாய்க்காமல் இருப்பானா?! சிவன் அருளால் குசுமாவின் மகன் உயிர்பெற்று ஏரியில் நடந்து வந்ததை ஊர்மக்கள் பார்த்து சிவனின் கருணையை நினைத்து கண்ணீர்மல்கி தன்பக்தையான குசுமாவுக்கு அருள்புரிந்ததால் இந்த தல இறைவனை குஷ்மேசுவரர் என்றும் அழைத்தனர் குஷ்மேசுவரர் என்றால் கருணையே வடிவானவன் என்பதால் குழந்தை வரம் வேண்டியும் பக்தர்கள் கிரிஸ்னேசுவரைத் தரிசித்து செல்கிறார்கள்.
கோவிலுக்குள் ஆண்களுக்கு மேல்சட்டையும்,தோலினால் ஆன பெல்ட்டுகளுக்கும் தடை. அவைகளை கழற்றி நம் பைகளில் வைத்துக்கொள்ளலாம். முதல் நிலையில் நந்தியம்பெருமான் இருக்கிறார் . அவரைத்தாண்டி சென்றால் முன்பக்க மண்டபம். தூண்கள்லாம் சிற்ப வேலைப்பாடுகளுடன் அழகாக காட்சிதருகிறது .
இந்த கோவில் மஹாராஷ்டிராவில் இருக்கும் ஜோதிர்லிங்க தலத்தில் ஐந்தாவதாகும். போனபதிவில் நாம் பார்த்த கோதாவரி நதிக்கரையோரம் அமைந்த திரியம்பகேஸ்வரர், அடுத்து மகாராஷ்டிரம் ஓளண்டா என்னுமிடத்தில் அமைந்துள்ள தருகவனத்தில் எழுந்தருளியிருக்கும் நாகநாதேஸ்வரர்கோவில் அடுத்தது மகாராஷ்டிராவில் அமைந்துள்ள பரளி என்னுமிடத்தில் அமைந்துள்ள வைத்தியநாதேஸ்வரர். அடுத்து பூனாவில் உள்ள மலைக்கோவிலான பீமசங்கரர் இவை ஐந்தும் மகாராஷ்டிராவில் அமைந்துள்ளது.இறைவனின் திருவருளும்,  நேரமும் இருந்தால் மீண்டும் இந்த கோவில்களை பற்றி பதிவு எழுதவேண்டும்
இந்த மண்டபத்தை தாண்டி சென்றால் மூலவர் இருக்கும் கருவறை. இங்க என்ன சிறப்புன்னா மூலவர் ஆவுடையாரை சுற்றி அய்யரும் இருக்கிறார்கள். நாமும் நம் கையினால் அபிஷேகமும், வில்வ இலையையும் சாற்றி வணங்கலாம். நம்மூர் மாதிரி பால், தயிர் போன்றவற்றால் அபிஷேகம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. குங்குமம் மற்றும் வில்வ இலை கொண்டு மட்டும் நாம் அர்ச்சனை செய்யலாம். எல்லா கோவில்களலையும்  போல,இங்கேயும் அர்ச்சகர்களின் கை ஓங்கியே இருக்கிறது. நாமாக சென்று மூலவரை தொட்டு வணங்கி ,வில்வஇலை அபிஷேகம் செய்தால் உடனேஅடுத்தவங்க வாங்கன்னு சொல்லிவிடுவார்கள். நாம் காசுகொடுத்தால் மூலவரை சுற்றி உட்காரவைத்து நம்மை பொறுமையாக அபிஷேகம் செய்யவிடுகிறார்கள். 
திருக்கோவிலின் சுவர்கள்லாம் கற்களினாலானது. அவற்றில் மிக அழகாக சிற்பம் செதுக்கி இருக்கிறார்கள். கோவிலைப்போலவே லிங்க திருமேனியும் சிறப்பாக காணப்படுகிறது. குங்குமம் கொண்டு இந்த மூலவருக்கு அபிஷேகம் செய்தால் மறுபிறப்பில்லை என்ற நம்பிக்கையும் உண்டு. அதேப்போல நாம மனத்தில் என்ன எண்ணி இந்த லிங்கத்திருமேனிய தொட்டு வணங்குகிறோமோ அந்த எண்ணம் ஈடேறும் என்ற நம்பிக்கையும் இருக்கு மகாசிவராத்திரி இங்கு மிக சிறப்பாக கொண்டாடப்படுமாம் .மகாசிவராத்திரி அன்று இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி இந்த இறைவனை வழிபட்டால் அவர்கள் மோட்சம் செல்வார்கள் என்பதும் நம்பிக்கை. 
ஒருவழியாக தரிசனத்தை முடித்துவிட்டு கோவிலைவிட்டு வெளியேவந்தோம். வட இந்திய கோவில்களில் பெரும்பாலும் உள்ளே நுழைவதற்கும், வெளியே செல்வதற்கும் தனித்தனி வழிகள்தான் உபயோகப்படுத்துறதுனால கூட்ட நெரிசல் இல்லாம தரிசனம் செய்ய மிகவும் உதவியா இருக்கிறது .

தினமும் காலையில் 5:30 மணிக்கு நடைதிறந்து இரவு 9:30க்கு நடையாடைப்பார்களாம். ஆனா கார்த்திகை மாசம் மட்டும் அதிகாலை 3 மணிக்கு நடைதிறந்து இரவு 11 மணிக்கு நடையடைப்பார்களாம். பொதுவாக நாம கவனிக்கவேண்டியது என்னன்னா மத்த கோவில்களைப்போல இங்கு தள்ளுமுள்ளு அதிகம் இல்லை. கூட்டம் குறைவாக இருந்தால் பொறுமையாக நின்று, மூலவரை  தொட்டு வணங்கலாம். இராமேஸ்வரம், சிதம்பரம் ,திருச்செந்தூர் போன்ற சிலகோவில்களில் நாம சென்றவுடனே நம்மை சூழ்ந்து அந்தபூஜை, இந்த பூஜை ,ஸ்பெஷல் கியூன்னு மொய்க்குறமாதிரி இங்க யாரும் காசு கேட்பதில்லை நாமாக வேண்டுமானால் அதிகநேரம் நிற்கவேண்டுமென்றால் அர்ச்சகர்களை அணுகினால் போதும் விருப்பம் இருந்தால் அன்னதானத்திற்கு உதவிசெய்யலாம். அவர்களாக கேட்பதில்லை. மொத்தத்தில் மனஅமைதிக்கு உகந்த கோவில். தரிசனம் செய்து வெளியே வரும்போது மனசுக்கும் ஒரு நிம்மதி இருக்கும் .
அதேபோல் பூவிற்பவர்களிடம் கவனமாக இருக்கவேண்டும். முதலில் விலைகுறைத்து சொல்லி பின்னர் நாம் வாங்கும்போது விலையை கூட்டிவிடுவார்கள். தெளிவாக பேசி வாங்குங்கள் இல்லை அகன்றுவிடுங்கள் .செருப்புகளை பாதுக்காக்க,  கோவில்நிர்வாக கடைகளில் இட்டுச்செல்லுங்கள் .மொபைல்  போன் அனுமதி கிடையாது.  உங்கள் வாகனத்தில் பத்திரப்படுத்திவிட்டு போகனும். இல்ல கோவில் நிர்வகிக்கும் காப்பகத்தில் கொடுத்து டோக்கன் வாங்கிட்டு போகனும். நாங்க போனபோது மொபைல் வாங்கவில்லை. ஆனா உள்ளே படம் எடுக்காதீர்கள் ன்னு மட்டும் சொல்லி அனுப்பினார்கள். ஆனா நாம கேட்டுக்கிட்டால் சில இடங்களில் படம் எடுத்துக்கலாம். ஆனால் அந்த ஊர்க்காரங்க அவங்க பாட்டுக்கு போட்டோ செல்ஃபி எல்லாம் எடுத்துகிட்டுதான் இருக்கிறாங்க .
  வழக்கமா எல்லா சுற்றுலா ஸ்தலங்களில் இருக்கும் ஊசி, பாசி மணி கடைகளை இங்கேயும் பார்க்கலாம். கோவிலின் வெளியே நிறைய கடைகள் இருக்கு. அதேசமயம் எல்லோரா குகை பக்கத்தில் இருப்பதால் எல்லோரா ,அஜந்தா பத்தின புத்தகங்கள் இங்கே விற்கப்படுகின்றன .எல்லா மொழிகளிலும் இருக்கு .நமக்கு தேவைப்பட்டா வாங்கிக்கலாம். ஏன்னா நிச்சயம் எல்லோரா குகையை சுற்றிப்பார்க்க அந்த குறிப்பு உபயோகமா இருக்கும். மீண்டும் ஒரு வட இந்திய கோவிலிலிருந்து அடுத்தவாரம் உங்களை சந்திக்கிறேன்..

நன்றியுடன்

13 comments:

 1. குஷ்மேஸ்வரர் பற்றிய தகவல்கள் அருமை...

  ரொம்ப உசாரா இருக்கணும் போல...!

  ReplyDelete
  Replies
  1. சுற்றுலா ஸ்தலங்கள்,கோவில்கள் எல்ல இடமும் நான் கொஞ்சம் கவனமாக இருக்கணும் அண்ணா,ஏன் நம்ம ஊர்ல கூட சமயபுரம்,பழனி இங்கெல்லாம் அவர்கள் சொல்லும் விலை ஒன்று நாம் வாங்கினால் கடைசியில் அவர்கள் சொல்லும் விலை ஒன்றாக இருக்கும்.நாம் தான் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும்.

   Delete
 2. நம்ம திருப்பதியிலும் உள்ளே போவது ஒருவழி, வெளியில் வருவது ஒரு வழிதானே? வியாபாரிகள் எல்லா ஊரிலும் ஒரே மாதிரிதான் போல! அழகிய படங்கள்.​

  ReplyDelete
  Replies
  1. இங்கேயாவது பரவாயில்லை வரிசை போய்கிட்டே இருக்கும்,பக்தர்கள் போயிட்டே இருப்பாங்க,திருப்பதியில் ஏன் ரூம்ல அடைச்சு வைக்கிறாங்கன்னே தெரியல,அதற்கு ஒருஅவசியமும் இல்ல,ஒன்னு கூட்டத்தை கட்டுறதுக்காக இருக்கலாம்,இல்ல அதைவச்சு ரூம் வாடகை,சாப்பாடு இப்படி வியாபாரம் பண்ணுவதற்காக இருக்கலாம்,கடவுள் என்பது அரசனுக்கும்,ஆண்டிக்கு ஒரே மாதிரித்தான் அனுக்கிரகம் செய்யும்,எப்படி சூரியன் தன கதிர்களை நல்ல தண்ணீர் உள்ள எரிக்கும் ,சாக்கடை நீர் இருக்கிற குட்டைக்கும், விளைநிலத்திற்கும் ,தரிசுநிலத்திற்கும்.நல்லவருக்கும் ,கெட்டவருக்கும் என்று வேறுபாடு காட்டாமல் தன் ஒளிகதிரை அளிக்கிறானோ,அதுபோலத்தான் கடவுளும்,இது ஏழுமலையானின் குற்றம் இல்லை.அவரை வைத்து வியாபாரம் செய்யும் மனித உள்ளங்களின் குற்றம்,ஆகையால் யாரை குற்றம் சொல்லுவது,எதை யாரோடு ஒப்பிடுவது தெரியல ...

   Delete
  2. திருப்பதியில் கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக இலவச தரிசனத்தில் இன்னும் அப்படி நடக்கிறதோ என்னவோ... முன்னூறு ரூபாய் தரிசனம் ஆன்லைனில் புக் செய்து அதில் தரிசன நேரம் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்துக்கு அங்கு செல்லலாம். எளிதாக தரிசனம் செய்து வரலாம்.

   Delete
  3. சில சமயம் ஆன்லைன்ல புக் செய்த நேரத்திலிருந்து கூட 2 முதல் 3 மணிநேரம் ஆக்கிவிடுகிறார்கள், குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பதுபோல்,எதுநடந்தாலும் நடக்கட்டும்ன்னு நம்ம மன அமைதி கெடாம சாமிதரிசனம் செய்து வருவது நல்லது.எல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

   Delete
 3. சிறப்பான தகவல்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றிண்ணே,இந்த கோவிலுக்கு போயிருக்கிறீங்களாண்ணே,நம்ம ஊர்லயும் சரி,இப்ப மத்திய இந்தியாவில நிறைய கோவில் உங்களுக்கு சுத்தி காட்டிட்டேன்.அடுத்து வட இந்தியாதான் டார்கெட்,நீங்கதான் வழி சொல்லணும்....

   Delete
 4. மேலும் ஒரு கோயிலை பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. விரிவான தகவல்களுக்கு மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி சகோ...இறையருளும் வாய்ப்புகளும் இருந்தா கடல் கடந்த தேசங்களுக்கும் போய்,பதிவு எழுதணும்ன்னு ஆசை,இறைவா சீக்கிரம் என் வேண்டுகோளை நிறைவேத்துன்னு எனக்காக பிராத்தித்து கொள்ளுங்கள் சகோ.

   Delete
  2. கண்டிப்பாக பிராத்திக்கிறேன் சகோ.

   Delete
 5. வழக்கம் போல் மிக சிறப்பு ராஜி க்கா...படங்களும் தகவல்களும் ..

  அப்புறம் அந்த சுதேஹா என்ன ஆனங்க..பாவம் ...தங்கை மேல் பொறமை வந்துடுச்சு ...

  ReplyDelete
  Replies
  1. அனு இந்து ரொம்ப பழைய நூற்றாண்டுகளில் நடைபெற்றதாக ஐதீகம்.ஐயோ இப்ப நான் சுதேஹா என்ன ஆனங்க எப்படி கண்டுபிடிக்க,டைம்மெஷின் வேறே ஒர்க் ஆகலையே,சரி அடுத்த முறை போகும் போது எப்படியாவது கேட்டு சொல்லிவிடுறேன்...

   Delete