Monday, April 13, 2020

மணல் கடிகாரம் டூ டிஜிட்டல் கடிகாரம்.. - ஐஞ்சுவை அவியல்

மாமா!  சமையல் கட்டில் மாட்டியிருந்த கடிகாரம் ரிப்பேர் ஆகிட்டுது. புதுசு ஒன்னு வாங்கிட்டு வாங்களேன். 

எதுக்கு அதான் ஹால்ல, பெட்ரூமில்ன்னு 3 கடிகாரம் இருக்கு. உனக்குன்னு செல்போன் இருக்கு. அதில்லாம, உன் கைக்கடிகாரம் இருக்கு.இத்தனை இருக்கும்போது எதுக்கு சுவர் கடிகாரம் கேட்குறே?!

காலையில் எல்லாருக்கும் டப்பா கட்ட சரியான டைமுக்கு சமைக்கனுமே!  கையில் ஈரம் இருக்கும்போது செல்போன், வாட்ச்ல எப்படி டைம் பார்க்கமுடியும்?! அதனால்,   சின்னதா ஒரு நூறு ரூபாயில் வாங்கி வந்தால் போதும். 


டைம் பார்க்க செல்போன், வாட்ச்ன்னு இன்னிக்கு பலவழிகள் இருக்கு. முன்னலாம் சூரியன் நகர்வதை வச்சும் பொருட்களின் நிழல்களைக்கொண்டுமே நேரத்தை   கணக்கிட்டாங்க.  முதல்ல நேரத்தை கணக்கிட்டது சுமேரியர்கள்தான். இவங்கதான் மணி, நாள், வாரம், மாசம், வருசம்ன்னு பிரிச்சாங்க.  பிறகு எகிப்தியர்கள், சூரியன் நகர்வதைப் பின்பற்றி 24 பெரிய கம்பங்களை வட்டப்பாதையில் நிறுவி, ஒளியும் நிழலும் அவற்றின்மீது விழுவதை வச்சு நேரத்தை அளவிட முயற்சி செய்தனர். தொடர்ந்து நேரத்தை அளவிடும் முயற்சிகளில் மற்ற நாடுகளும் முயற்சி செய்துக்கிட்டே இருந்தாங்க.     கிரேக்க நாடு தண்ணீரைப் பயன்படுத்தி நேரத்தை அளவிடும் சோதனை முயற்சி செய்தாங்க.  தண்ணீர் ஒவ்வொரு துளியாக ஒரு கல் பாத்திரத்தில் விழுமாறு ஏற்பாடு செய்து, அப்படி விழும் தண்ணீரின்  அளவை அடிப்படையாகக் கொண்டு நேரம் அளவிடப்பட்டது. இது நடந்தது கி.மு. 320ல் நடந்தது. 



கிரேக்கர்களும்  ரோமானியர்களும் இந்த தண்ணீர் கடிகாரத்தில் பல மாற்றங்களை உண்டாக்கினர். மணற்கடிகாரமும் சோதனை முயற்சியில் கண்டுபிடிச்சாங்க.   கி.பி.1510-ம் ஆண்டுவாக்கில்  ஜெர்மன் நாட்டைச் சார்ந்த பூட்டு செய்யும் தொழிலாளியான பீட்டர் ஹென்கின்  நேரத்தைக் காட்டும் நின்ற நிலையிலான கடிகாரம் ஒன்றை உருவாக்கினார். பின்னர் 1656-ம் ஆண்டு வாக்கில் டச்சு நாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர் ஹியூஜன்ஸ் என்பவர் ஊசலாடும் (pendulum) கடிகாரத்தை உருவாக்கினார். 



ஹியூஜன்ஸ்தான்  ஒரு நாளை 24 மணிகளாகவும், ஒரு மணியை 60 நிமிடங்களாகவும், ஒரு நிமிடத்தை 60 நொடிகளாகவும் பிரித்து, கடிகாரம் செய்வதில் புதுப்புது  உத்தியை கையாண்டார். கூடவே,  ஒரு நாளை A.M.–Ante meridiem,( befor e noon) P.M.– Post meridiem, (after noon)   பிரித்தார்.  இங்கிருந்து கடிகாரம் பல்வேறு மாறுதலுக்குட்பட்டு  விதம்விதமா தயாரிக்கப்பட்டு  மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்துச்சு.  ஆரம்பத்துல மரத்துலதான்  கடிகாரத்தின் பாகம்லாம் செய்யப்பட்டது.  பிறகு இரும்பில் செய்தாங்க. இப்ப பிளாஸ்டிக், பைபர்ன்னு வர ஆரம்பிச்சுட்டுது. 
19 ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை   பெண்டுலம் வச்ச கடிகாரங்கள்தான் வழக்கத்துல இருந்துச்சு.  இந்த பக்கமும் அந்த பக்கமுமாய் அசைந்தாடும் பெண்டுலம் கடிகாரத்தின் இரு முட்களையும் இயக்கி சரியான நேரத்தை காட்டுச்சு. இந்த கடிகாரங்களை ஸ்கூல், அலுவலங்களில், வசதியான சில வீடுகளில் நாமலாம் சின்ன பிள்ளையா இருக்கச்சே பார்த்திருப்போம்.  இப்ப மாதிரி பேட்டரியால் இந்த கடிகாரம் இயங்காது. அதுக்குன்னு இருக்கும் ஒரு சாவியை கொண்டு குறிப்பிட்ட இடைவெளிகளில் நாம சாவி கொடுக்கனும். அப்பதான் கடிகாரம் இயங்கும். 
ம்ம்  என் பிரண்டோட அப்பா ,  ஒரு சாவியால் கடிகாரத்துக்கு சாவி கொடுப்பதை பார்த்திருக்கேன் மாமா. அப்புறம் அந்த பெண்டுலத்தை ஆட்டி ஓட வைப்பார். அந்த சாவியை பத்திரமா பீரோவுக்குள் வைக்குறதையும் பார்த்திருக்கேன்.

மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டபின் பெண்டுலம் வச்ச கடிகாரங்களின் மவுசு குறைய ஆரம்பிச்சது. அலெக்சாண்டர் பெயின், 1840ல பேட்டரியில் இயங்கும் கடிகாரத்தை கண்டுபிடிச்சார். சாவி கொடுக்கலைன்னா கடிகாரம் இயங்காது. சாவி கொடுக்கும் கால இடைவெளியை மறக்கக்கூடாதுன்ற நடைமுறை சிக்கல்கள்  எல்லாரையும் பேட்டரி வச்ச கடிகாரத்திற்கு மாற வச்சது. ரோமானிய எழுத்தக்களிலிருந்து அவரவர் வட்டார வழக்கு எழுத்து வர ஆரம்பிச்சது. எண்கள் இல்லாத கடிகாரம், படம் வைத்தது, கல் வச்சதுன்னு பல கிரியேட்டிவான கடிகாரங்கள் மார்க்கெட்டில் வர ஆரம்பிச்சது. 


1920ல குவாட்ஸ்ன்ற கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டது.  கடிகாரம் வந்தது. குவாட்ஸ்ன்னா கல் மாதிரியான ஒருவகை கிரிஸ்டல் (Crystal). இந்த குவாட்ஸ்ஸினூடாக கரெண்டை பாய்ச்சும்போது சீராக துடிக்கும் (Osillates) இந்த துடிப்பை வைத்து கடிகாரத்தின் ஓட்டத்தை உண்டு பண்ணி இயங்க வைக்குது. பெண்டுலம் கடிகாரத்தைவிட குறைவான பராமரிப்பு இந்த குவார்ட்ஸ் கடிகாரத்திற்கு போதும்ன்றது இதன் சிறப்பம்சமாகும். அதுமில்லாம பெண்டுலம் கடிகாரம் தயாரிக்கப்படுவதைவிட இது குறைச்சலா செலவாகுது. பேட்டரி, ஒரு மைக்ரோசிப் சுற்று, ஒரு மின் மோட்டார், கியர்கள், கைகள், கடிகார முகம், மற்றும் ஒரு குவார்ட்ஸ் கிரிஸ்டல் இது போதும். 

ஆரம்பத்தில் தயாரான கடிகாரங்கள் பெருசா இருந்ததால்  பெரிய மாளிகைகள், அரண்மனைகளில்தான் அதுவும் காட்சிப்பொருளாகத்தான் இருந்தது.  பயன்படுத்த எளிதான, சிறிய அளவில் கடிகாரங்கள் வந்தபின் சாமானியர்களும் வாங்கி பயன்படுத்த ஆரம்பிச்சாங்க.  ஆங்கிலேயர்கள் ஆட்சியின்கீழ் நாம இருந்தபோது எல்லா அரசு அதிகாரிகளுக்கு, அரசு அலுவலகத்துக்கும் அரசு செலவில் கடிகாரங்கள் கொடுத்தாங்க. அப்பதான் அதுவரை ஆடம்பர பொருளாய் இருந்த கடிகாரம் பொதுமக்கள் பார்வைக்கு வந்துச்சு. ஆங்கிலேயர்களுக்கு போட்டியா சமஸ்தான மன்னர்களும், ஜமீந்தாரர்கள், பண்ணையார்களும் கடிகாரங்களை வாங்கி தங்கள் மாளிகையில் வச்சுக்கிட்டாங்க.  ஆடம்பர பொருளாய் கடிகாரங்கள் இருந்ததால் கடிகார கம்பெனி  ஏஜெண்டுகள் பல நாடுகளுக்கு போய் தங்கள் கம்பெனி கடிகாரத்தின் பெருமைகளை சொல்லி விற்பனை செய்ததோடு, அந்த ஊர் கடிகாரத்தின் சிறப்பம்சங்களையும் தெரிஞ்சுக்கிட்டு வந்தாங்க.


ஐதராபாத் நிஜாம் அவரோட அரண்மனைக்கு யார்கிட்டயும் இல்லாத மாதிரியான  சுவர்கடிகாரம் ஒன்றினை வாங்க விரும்பி, ஸ்விஸ் நிறுவனத்துக்கிட்ட கேட்க, பெரும்பொருட்செலவில் ஒரு சுவர் கடிகாரத்தை  உருவாக்கி கொடுத்திருக்கிறது. இன்றும் அந்த கடிகாரம் “ஜலார் ஜங்” அருங்காட்சியகத்தில் அதிசய காட்சிப் பொருளாக இருக்காம் புள்ள!. நிஜாம்கிட்ட இருந்த அந்த அழகான கடிகாரத்தை பார்த்த பிறகு பல சமஸ்தானங்கள் சுவர் கடிகாரத்தை வாங்கி அரண்மனைகளில் மாட்டி இருக்காங்க. . கொஞ்ச காலத்திற்கு பிறகு பாக்கெட் கடிகாரம் மார்க்கெட்டுக்கு வந்துச்சு. . ஜமீன்தார்கள், அதிகாரிகள், பிரபுக்கள்ன்னு  அந்த கடிகாரத்தை வாங்கி கோட் பாக்கெட்டில் வச்சுக்கிட்டாங்க. அது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பளாவே அப்ப இருந்துச்சு. 



பாக்கெட் கடிகாரத்திலிருந்து, குறிப்பிட்ட நேரத்தில் ஒலி எழுப்பும் வசதிக்கொண்ட அலாரம் கடிகாரம் வந்தது. அதிகாலையில்  எழுந்து வேலைக்கு செல்வோரும், மாணவர்களுக்கும் இந்த கடிகாரம் பெரிய அளவில் பயன்பட்டது.  பெரும் பணக்காரர்கள் வீட்டை அலங்கரித்த கடிகாரங்கள் மெல்ல மெல்ல பரிணாம வளர்ச்சியடைஞ்சு சாமானியர் வீடுகளில் அத்தியாவசிய பொருளாக மாறியது. கடிகாரம் மெல்ல அடுத்த கட்டத்தை நோக்கி ஆரம்பித்தது. பாக்கெட் கடிகாரத்தை பயன்படுத்துவதிலும் ஒரு சிக்கல் இருந்துச்சு, ஒவ்வொரு முறையும் பாக்கெட்டில் இருந்து எடுத்து திறந்து மணி பார்க்கனும். இதுக்கு என்ன தீர்வுன்னு யோசிச்சாங்க..

சின்ன சைசில் வந்த பாக்கெட் கடிகாரத்தில் சில மாற்றங்கள் செய்து தோல், செயின் வைத்து கைக்கடிகாரமா மாற்றினாங்க. கைக்கடிகாரத்தை முதலில் ஆண்கள்தான் பயன்படுத்தி வந்தாங்க. பிறகுதான் பெண்களும் கைக்கடிகாரத்தை பயன்படுத்த ஆரம்பிச்சாங்க. பெண்கள் பயன்படுத்த ஆரம்பிச்சபிறகுதான் வாட்ச் விற்பனை சூடு பிடிக்க ஆரம்பிச்சது. காரணம், ஸ்கூல், அலுவலகம் போறவங்க மட்டுமில்லாம வீட்டிலிருக்கும் பெண்கள் கடைத்தெருவுக்கு போகும்போதுகூட வாட்ச் கட்டினதுதான். இதுக்கு ஸ்டைல் மட்டுமே காரணமில்லை. பொண்ணுங்களோட டைம் மேனேஜ்மெண்ட்கூடத்தான். 



ஸ்கூல், காலேஜ் போற பிள்ளைக கறுப்பு, பிரவுன் கலர் பட்டை வாட்சையும்,  வேலைக்கு போகும்போது மெட்டாலிக் வாட்சையும், விருந்துக்கு போகும்போது அழகிய வேலைப்பாடுகள் கொண்ட தங்க (நிற), வெள்ளி வாட்சையும் பெண்கள் கட்டுவாங்களாம். வளையல், பிரேஸ்லெட், கல் பதித்தது, ட்ரெஸ்சுக்கு மேட்சா பட்டை மாத்தும் வாட்சுகள்..இவைதான் டீன் ஏஜ் பொண்ணுங்களோட விருப்பமாம்.  உன்கிட்ட எத்தனை வாட்ச் வச்சிருக்கே புள்ள?!

ம்க்கும் விதம்விதமா வாங்கிக்கொடுத்துட்டுதான் மறுவேலை செய்வீரு?!  என்னைய கோவப்படுத்தாத மாமா!!



கோவத்துலகூட நீ அழகா இருக்கேன்னு பொய்லாம் சொல்ல மாட்டேன்.  ஆனா, இந்த பாப்பா கோவத்துலயும் அழகா இருக்கும் பாரு..

சரி, ரொம்ப நாளா புதிர் இல்லன்னு டிடி அண்ணா சொல்லிக்கிட்டே இருக்காரு. எதாவது விடுகதை சொல்லலாமா?!

வேணாம் புள்ள! ட்விட்டரில் ரொம்ப நாளா ஒரு படம் சுத்துது. படத்துல இருக்கும் காட்சிகளை வச்சு அது என்ன படம்ன்னு சொல்லனும். ஒருவாரமாகியும் இதுவரை யாரும் சொல்லல. உங்க டிடி அண்ணனாவது சொல்வாரான்னு பார்க்கலாம்.
பதில் சொல்லிடுவீங்கதானே டிடி அண்ணா?!

நன்றியுடன்,
ராஜி


8 comments:

  1. கடிகாரம் பற்றிய தகவல்கள் வெகு சுவாரஸ்யம். அந்தப் புதிருக்கான விடைக்காக நானும் காத்திருக்கிறேன்!

    ReplyDelete
  2. விதவிதமான கடிகாரங்கள் பார்க்கவும், படிக்கவும் அருமை. பார்போம் டிடி பதில் சொல்லுகிறாரா என்று..

    ReplyDelete
  3. விதம் விதமான கடிகாரங்கள். ஜோத்பூர் அரண்மனைக்குச் சென்றபோது பார்த்த கடிகாரங்களை எனது பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறேன்.

    ReplyDelete
  4. இனிய சித்திரைத்திருநாள் வாழ்த்துகள்...

    கடிகாரம் பற்றிய விளக்கங்கள் அருமை... கடைசி கடிகாரம் கோரோனோ மாதிரியே தெரியுது சாமி...!

    கொஞ்சம் யோசித்து சொல்கிறேன் சகோதரி...

    ReplyDelete
  5. தகவல்கள் எல்லாம் ஸ்வாரஸ்யம் ராஜி.

    பாப்பா செம க்யூட்.

    ஆஹா இந்தப் படம் இங்கயும் வந்திருச்சா...ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
  6. தேன் சிந்துதே வானம் ??

    கீதா

    ReplyDelete
  7. அழகான படங்களுடன் கடிகாரம் பற்றிக் கணப்பொழுதில் சிந்திக்க வைத்து விட்டீர்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
    இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

    ReplyDelete
  8. டிக்....டிக்...டிக்....அருமை.
    பெண்டுலம் கடிகாரம் எங்கள் அப்பாவினுடையது எங்கள் கிராமத்து வீட்டில் இப்பொழுதும் இருக்கிறது.
    அலாரம் கடிகாரம் படிப்பதற்கு பெரிதும் உதவியுள்ளது.

    ReplyDelete