Friday, July 05, 2013

திருக்கழுகுன்றம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்

நாலாவதோ! அஞ்சாவதோ படிக்கும்போது ஸ்கூல்ல டூர் புரோகிராம் போட்டாங்க.  மகாபலிபுரம், திருக்கழுகுன்றம், மதுராந்தகம், மேல்மருவத்தூர்ன்னு. நானும் போய்  வரேன்னு அப்பாக்கிட்ட கேட்டதுக்கு போய் வான்னு சொல்லிட்டார். ஆனா, என் பாட்டி,  அழகோடும், அறிவோடும் ஒத்தை புள்ளையை வெச்சிருக்கோம்(யார் அந்த அழகான,  அறிவான ஒத்தைப்பிள்ளைன்னு கேக்கப்படாது..,) எதாவது ஆகிட்டா என்ன பன்றது?!  அதனால, டூரும் வேணாம், கீரும்  வேணாம்ன்னு சொல்லிடுச்சு. என்னை போல நல்லவிதமா வளரலை என் அப்பா. உடனே அம்மா பேச்சை கேட்டு டூர் போக வேணாம், எப்பவாவது கூட்டி போறேன்”ன்னு சொல்லிட்டார். அன்னிக்கு குடுத்த வாக்கை போன மாசம் வரை காப்பாத்தலை. என்ன தோணுச்சோ?! திடீர்ன்னு இந்த விடுமுறைக்கு கூட்டி போய் வந்துட்டார். நான் 5 வது படிக்கும்போது போக ஆசைப்பட்ட ஊரை என் பிள்ளை 9வது படிக்கும்போது போய் பார்க்குறேன். What a pity?! What a pity!?அப்படி ரொம்ப நாளா போக  ஆசைப்பட்ட ஊரான,  செங்கல்பட்டு பக்கத்தில இருக்கிற ”திருக்கழுகுன்றம்” ஊருக்குதான் நாம புண்ணியம் தேடி போகப் போறோம்... ஓகே போலாமா?! 

நாம "திருகழுகுன்றம்" போறதுக்கு முன்னே ,செங்கல்பட்டு புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து கொஞ்ச தூரத்தில ,மிகவும் பழமை வாய்ந்த ஒரு இராமர் கோவில் இருக்கு அதிகாலையே கோவிலுக்கு போய்ட்டதாலே அங்கே விஷயம் தெரிஞ்சவங்க யாரையும் பார்க்க முடியல அதனால அதன் வரலாறு தெரியலை அடுத்த முறை போகும் போது கேட்டு வரணும் 
ராமர் கோவிலின் உள்பக்க தோற்றம்


அப்புறம்  அங்கிருந்து புதிய பஸ் ஸ்டேண்டிலிருந்து நிறைய பஸ் திருக்கழுகுன்றம் போகுது.  அங்கிருந்து  திருக்கழுகுன்றம் வந்து சேர்ந்தோம் .காலையிலயே  போய்டுறது நல்லது ஏன்னா!  அங்க 2 கோவில்கள் இருக்கு. ஒண்ணு  மலைமேல், இன்னொண்ணு,  ஊருக்குள் . மலைமேல இருக்குற கோவில் ” திருமலை” ஊருக்குள்ளே இருக்கும் கோவில் “ தாழக்கோயில்”ன்னு சொல்றாங்க..
இந்த இரண்டுமே பெரிய கோவில்கள் அதனால கோவிலை சுத்தி பார்க்க நிறைய நேரம் ஆகும் முதல்ல மலைமேல் இருக்கும் கோவிலை பற்றி பாப்போம் .. 
இறைவர் திருப்பெயர்:வேதகிரீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்:சொக்கநாயகி
இந்த தலம் வேதமே, மலையாய் மாறினதால,  'வேதகிரி' ன்னு பேரு வந்துச்சாம்.  ”வேதாசலம், கதலிவனம், கழுக்குன்றம்” என்றா பேருலயும் இத்தலம் சொல்லப்படுதாம்.  500 அடி உயரமுள்ள இம்மலையில தினமும் ”உச்சிப்பொழுதில், ரெண்டு  கழுகு வந்து உணவு பெற்றுச் செல்லுவதால் இதற்கு 'பட்சிதீர்த்தம்' ன்னும்; திருக்கழுக்குன்றம் ன்னும் பேராச்சு.
புராண கதைகளின் படி, தேவர்களின் தலைவனான இந்திரன்,  இடி மின்னல் வடிவில் வந்து இங்குள்ள இறைவனை வழிபாடு செய்வதாக சொல்லப்படுது. இதுக்கு ஆதாரமா, 1930ம் ஆண்டு நவம்பர் 10ம் நாள் மிகப்பெரிய இடி ஒன்று திருமலைக் கோயில் கலசத்தை தாக்கி,  அந்த துளை வழியா கருவறையில் நுழைந்து சிவனை அடைந்ததாகவும், அதனால் உருவான தாங்கமுடியாத வெப்பம் மற்றும் அதிர்வுகளை மறுநாள் கோயில் கதவை திறந்ததும் உணர்ந்ததாகவும் கூறுகின்றனர். இப்பவும் இந்த வழிபாடு நடைபெற்றுக்கொண்டு இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

மலைக கோவிலினுள் செல்வதற்கு நுழைவு கட்டணம் உண்டு கோவிலின்  கீழே எல்லா பூஜை பொருட்களும் கிடைகின்றன 
படிகள் கொஞ்சம் அதிகமாகவும் சாய்வுதளம் கொஞ்சம் கடினமானதாகவும் இருகிறதுனால வயசானவங்களும் கொஞ்சம் பருமனான உடல் இருகிறவங்களும் ,ஏறி செல்ல பக்கவாட்டில் கம்பிகள் பதிக்க பட்டு இருக்கு 
வழி நெடுக என் ப்ரெண்ட்ஸ் பட்டாளம் .பார்த்து ரொம்ப நாளாச்சேன்னு நலம் விசாரிச்சிட்டே  போனேன் . 

வழியில சின்ன சின்ன கல்மண்டபங்கள் இருக்கு. நாம கொண்டு போற நொறுக்ஸ் நொறுக்கி ரிலாக்ஸ் பண்ண கல்லால செஞ்ச இருக்கைகள் இருக்கு 
சாமி படி ஏறிகிட்டே கோவிலின் ஸ்தல வரலாறை கொஞ்சம் பார்க்கலாம் 

இந்த பகுதிக்கு இரண்டு வெள்ளை கழுகுகள் மதிய வேளையில் வருது. சிறு குழந்தைக்கு உணவு ஊட்டுவது போல அந்த இரண்டு கழுகுகளுக்கு பண்டாரங்கள் உணவு ஊட்டுவாங்க. ஒரு கிண்ணத்துல நல்ல தண்ணி, ஒரு கிண்ணத்துல நல்ல எண்ணெய், ஒரு கிண்ணத்துல சீயக்கா பொடியும் வச்சிருப்பாங்க பண்டாரங்கள். கழுகுகள் வந்ததும் முதலில் நல்ல தண்ணியில் முங்கி, அடுத்து நல்ல எண்ணெயில் முங்கி, சீயக்காஇயில் முஞ்கி கட்ட கடைசியா மீண்டும் நல்ல தண்ணில முங்கி சுத்தாமான பின் ...,

பண்டாரங்கள் வைத்திருக்கும், சர்க்கரை பொங்கலையும், வென்பொங்கலையும் சாப்பிட்டு கோவிலை வலம் வந்துட்டு  பறந்து போய்டுமாம். யார் இந்த கழுகுகள்? பிரம்ம புத்திரர்கள் எட்டு பேர், சாரூப பதவி வேண்டி கடும் தவம் இருந்தாங்க. சிவப்பெருமானும் இவர்களின் தவத்தை மெச்சி காட்சி கொடுத்தாராம். தங்கள் தவத்தை ஏற்று சிவன் வந்ததை கண்டு பேரானந்தம் அடைந்து, பதட்டத்தில் ”சாரூப பதவி” வேணும் ன்னு கேட்பதற்கு பதிலாக ”சாயுச்சிய பதவி” ன்னு  கேட்டுட்டங்களாம். “நீங்கள் 8 பேர். இரண்டு இரண்டு பேர்களாக பிறந்து இறைவனுக்கு பணி செய்வீர்கள்.”ன்னு சிவன் இவர்களுக்கு வரம் தந்தார். இவர்கள்தான் முந்தய யுகங்களில் ”சண்டன், பிரசண்டன்” எனவும், ”சம்பாதி, சடாயு” எனவும், ”சம்புகுந்தன், மாகுத்தன்” எனவும் இரண்டு இரண்டு பேராக கழுகுகளாக பிறந்து இறைவனை தொழுது வந்தாங்க. எட்டில் மீதி இரண்டு பேர் இந்த கலியுகத்தில பூஷா, விதாதா என்ற இரண்டு கழுகுகளாக பிறந்து இன்றுவரை பக்தர்களுக்கு தரிசனம் தர்றாங்கன்னு ஸ்தல வரலாறு சொல்லுது. 

சரியா பகல் பன்னிரெண்டு மணிக்கு இரண்டு கழுகுகள் திருக்கழுகுன்றம் வந்து பண்டாரங்கள் கொடுக்கும் சர்க்கரை பொங்கலை சாப்பிடுகிறது என்பதை 03.01.1681 வருடம்  இந்த அற்புத சம்பவத்தை ஆலயத்தின் கல்வெட்டில் டச்சுக்காரர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். மலை அடிவாரத்தில் வேதங்கள் நான்கு சிகரங்களாக இருப்பதால் ”வேதகிரி” ன்னு பெயர் பெற்ற இடத்தில் ”வேதகிரி ஈஸ்வரர்” உறையும்  ஆலயத்தை இரண்டு வெள்ளை கழுகுகள் வட்டமிட்ட பிறகுதான் உணவே உட்கொள்கிறது. இந்த இரண்டு கழுகுகளும் காசியில் கங்கையில் ஸ்நானம் செய்கின்றன. மதிய உணவு உண்ண திருக்கழுகுன்றம் வந்து உணவு சாப்பிட்டு, இரவு இராமேஸ்வரம் கோயில் கோபுரத்தில் நித்திரை செய்கிறது என்று ஸ்தல புராணம் சொல்கிறது.
வேதகிரி ஈஸ்வரர் ஆலயத்தின் கர்ப்ப கிரகத்தை பல்லவ மன்னவன் மகேந்திர வர்மானால் மலையை குடைந்து உருவாக்கப்பட்டது
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயில் 1400 ஆண்டுகால பழமை வாய்ந்தது. திருக்கழுக்குன்றம் திருமலைக் கோயிலின் ஒரு கல் மண்டபம் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (கி.பி. 610-640) காலத்தில் கட்டப்பட்ட சிவனுக்குரிய குடைக்கூளி என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்
7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர், சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன
கோவிலை விட்டு வெளியே வரும் போது பல சிறிய விக்ரகங்கள் கொண்ட சிவலிங்கங்கள் காணபடுகின்றன 


அதெல்லாம் தொழுது விட்டு கழுகுகள் உணவு உண்ட மேடைக்கு வந்தோம் பூமியில் இபொழுது அநியாயங்கள் ,ஒழுக்ககேடுகள் நிறைய நடக்குறதால!!??அந்த 2 கழுகுகள் வருவது 16 வருடங்களுக்கு முன்பே நின்னுடுச்சாம் ஆனால் வீடியோ காமரா அவுளவாக வராத காலத்திலேயே இந்த காட்சியினை வீடியோவாக எடுத்து வைத்துள்ளனர் 
வேதகிரிஸ்வரரை வணங்கிய பிறகு மலையை விட்டு இறங்கி வரும் போது பல அற்புத சிற்பங்களை காணலாம். 

மலையை விட்டு இறங்கி வரும் போது அடிவாரத்தில் இருக்கும் “சித்தாதிரீ கணபதி”யை வணங்க வேண்டுமாம். 
பதிவின் நிளம் கருதி, மலை அடிவாரத்தில் உள்ள ”தாழக்கோயில்” பற்றி அடுத்த பதிவுல பார்க்கலாம். வர்ட்ட்ட்ட்ட்டா?

Thursday, July 04, 2013

”காதல் கடிதம்”போட்டிக்காக பதிவர்களை வைத்து, “மீண்டும் ஒரு திருவிளையாடல் ”

 ஐயோ! ஐயோ! நான் என்ன பண்ணுவேன்?! என்ன பண்ணுவேன்?! யாரை கேப்பேன்?! ஒண்ணா!? ரெண்டா?! ஐநூறு ரூபாயாச்சே?! இந்த நேரம் பார்த்து எனக்கு எழுத வர்ல்லே! எழுத வர்ல்லே! என் பிளாக்குல குப்பையை கொட்டுறதுக்கே முடியலை இதுல போட்டிக்குலாம் ஏன் பேர் குடுக்கனும்?! எனக்கில்ல, எனக்கில்ல, வேற யாரோ! வேற யாரோ! பரிசை அடிச்சுட்டு போகப்போறங்க... சொக்கா! சீனு கேட்ட லெட்டர் எழுதி அந்த ஐநூறு ரூபாயையும் எனக்கே கிடைக்குற மாதிரி அருள் புரிய கூடாதா?! எல்லாரும் எழுதி அனுப்பிட்டாங்க. கடைசி தேதி இந்த மாசம் 20ம் தேதி ஆச்சே! இன்னும் ஒரு வார்த்தையும் சிக்கலியே!! வேணும் வேணும் எனக்கு இதும் வேணும் இன்னமும் வேணும், காலம் போன காலத்துல இந்த காதல், கடிதம், போட்டிலாம் தேவையா?!

அன்பே! ஆருயிரே!ன்னு ஆரம்பிக்கலாம்னா ஓல்டா இருக்குன்னு சொல்லி ஓட்டுவாங்க, அழகான ராட்சசின்னு ஆரம்பிக்கலாம்ன்னா! முதல்வன படத்திலிருந்து சுட்டுட்டேன்னு கிண்டல் அடிப்பாங்க, முரட்டு பிசாசு, ஆசை புயல்ன்னு ஆரம்பிக்கலாம்ன்னா எல்லா வார்த்தையையும் நம்மாளுங்க யூஸ் பண்ணி கடிதத்தை அனுப்பிட்டாங்க..., என்ன செய்வேன்! எங்க தேடுவேன்!?

ராஜி!

யாருங்க?!

”நாந்தான் கூப்பிட்டேன்” 

ஏன் கூப்பிட்டீங்க? நீங்க யாரு?!

லவ் லெட்டரு, மொக்கை ஜோக்கு, காதல் கவிதை, கடை, தகவல்கள், ஆன்மிகம், நட்பு கவிதை, புனைவுன்னு கலந்து கட்டி தரும் கூகுள் நான்..

இந்த பிளாக்குல காதல் கடிதம் எழுதுற போட்டின்னு போட்டதை நீயும் படிச்சுட்டியா?! என் வயித்துல அடிக்குறதுக்குன்னே வந்திருக்கியா நீ?! 

”திடங்கொண்டு போராடு” சீனு கேட்ட கடிதம் உனக்கு கிடைத்தால் பரிசு உனக்கே கிடைக்கும்தானே!

ஐய்ஹோ! ஐய்ஹோ! அந்த லெட்டர் மட்டும் கிடைச்சுட்டா! அடுத்த செக்கண்ட் என் கையில ஐநூறு ரூபா இருக்கும்!

கவலைப்படாத, அந்த லெட்டரை நான் தரேன்.

இன்னாது, லெட்டரா?! நீயா?! சொந்தமா எழுதுனாலே அங்க பார்த்தேன், இங்க படிச்சேன்னு கிண்டல் அடிக்கவே ஒருத்தர் அமெரிக்காவுல லேப்டாப் வாங்கி உக்காந்திருக்கார். இருந்தாலும், பதிவர்ன்னு போனா போகுதுன்னு ஒத்துக்கிட்டு இருக்காங்க. அதையும் கெடுக்கலாம்ன்னு பார்க்குறியா?! நீ எழுதுறது எப்படின்னு தெரிஞ்சுக்கனும்ன்னா நீயே மெயில் தட்டேன்.. அதான் நீ எப்படி குடுப்பே! கமெண்ட்ல கிழி கிழின்னு கிழிப்பாங்கன்னு பயம் உனக்கு. அதான் என் தலையில் கட்டப் பார்க்குறே?!

என் திறமை மீது உனக்கு டவுட் இருந்தா, என்னை டெஸ்ட் பண்ணி பாரேன், உனக்கு டேலண்ட் இருந்தா?!

இன்னாது, என்கிட்ட, என்கிட்டயே மோதப் பார்க்குறியா?! படிக்க சுமாரா இருந்தாலும் அதையும்!? நல்லா இருக்குன்னு சொல்ல ஒரு கூட்டத்தை சேர்த்து வச்சிருக்கேன். என்னை பத்தி தெரியாது உனக்கு.., ரெடியா  இரு.

ம்ம் கேள்விகளை நீ கேக்குறியா?! இல்ல நான் கேக்கட்டுமா?!

ஆங்.., நீ கேட்காத, நானே கேக்குறேன். எனக்கு கேக்கதான் தெரியும். அப்போதான் பதில் தெரியலைன்னாலும் சமாளிச்சுக்கலாம்.

பிரிக்க கூடாதது என்னவோ!? பதிவும்,  கலகலப்பும்,
பிரியக்கூடாதது என்னவோ?! சொந்த சரக்கும், ஓவர் பில்டப்பும்,
சேர்ந்தே இருப்பது?! கமெண்டும், சண்டையும்
சேராதிருப்பது?! உன் பிளாக்கும், உபயோகமான பதிவும், 
ம்ஹ்ம், ம்ஹ்ம், சொல்லக்கூடாதது?! பிளாக்குல உண்மையான விவரம்,
சொல்லக்கூடியது?! பிளாக்குல கற்பனைக் கதை,
பார்க்கக்கூடாதது?! பதிவு போட நேரம், காலம்,
பார்த்து ரசிப்பது?! கமெண்டுல செல்ல சண்டை,
பிளாக் என்பது?! கொஞ்சம் உன்மை, நிறைய பொய்,
பாட்டுக்கு?! “தென்றல்” சசிகலா?!
நாட்டு நடப்புக்கு?! ”வேடந்தாங்கல்” கருண்
வடநாட்டு பதிவுக்கு?! சகோ.”வெங்கட் நாகராஜ்”,
சாப்பாட்டு பதிவுக்கு?!   ”கோவை நேரம்” ஜீவா,
மொக்கைக்கு?! உன் பிளாக்,
என்னையே கலாய்க்க!? அவர்கள் உண்மைகள்” மதுரை தமிழன்,

 ஐயா! ஆளை விடு!? நீர்தான் கூகுள், எங்கே அந்த லெட்டர்?! குடு அப்படியே மெயில் தட்டி விடுறேன். கிடைக்கும் பரிசை நெட் கார்டு போட்டுடுறேன்.  

ம்ம்ம்ம், இந்தா கடிதம், 
கலர் ஜெராக்ஸ் எடுத்த கருங்குரங்கே...,
ரொம்ப நாளாய் ஏங்கி, தவித்து, உருகி, அந்தா இந்தான்னு ஒரு வழியா உன் மீதான என் காதலை சொல்ல ஒரு காதல் கடிதம் எழுதிட்டேன் உனக்கு.., 

 செந்தமிழில் - உனக்கு
கடிதம் எழுதி முடித்த பின்,
ஏற்பட்ட உணர்வுதான்..,
வில்லை உடைத்து சீதையை
கைபிடித்த போது இராமனுக்கும்
ஏற்பட்டிருக்குமோ ? ...........
.
.
.
.
.
.
.
.
 இப்படிக்கு,
உன்  ஆசை ஜில்லு
 




Wednesday, July 03, 2013

திருமண வாழ்வு சரியாய் அமையாமல் போக யார் காரணம்?!

 நல்லா தெரிஞ்சுக்கோங்கப்பா!

 நண்பேன்டா... (ராஜி, மரியாதை இல்லாம, “டா” போட்டு  பேசுதுன்னு ஏழரையை கூட்டாதீங்கப்பூ)

கல்யாண மாப்பிள்ளைக்கு நல்ல நேரம் முடியப் போகுதாம்..,

மகிழ்ச்சியாய் இருக்க 5 வழிகள்...,

1990ல குற்றாலத்தோட ஃபோட்டோ!

புதுவிதமான விமானம் போல?!
யார்? யாருக்குலாம் வேணும்?! கொஞ்சமாதான் இருக்கு.., ரெஜிஸ்டர் பண்ணிக்கோங்க, சகோ’ஸ்..
 
எம்புட்டு நேரம்தான் கண்ணாடி பார்ப்பே! நீ கிளம்பி வர்றதுக்குள்ளே முகூர்த்தமே முடிஞ்சிடும்...

நிஜமதானுங்கோ!

கந்தையானாலும் கசக்கி கட்டுனா மட்டும் போதாது.., சுருக்கம் போக ஐயர்ன் பண்ணியும் கட்டிக்கனும்..

பயப்புள்ளைங்க இதையும் கெடுத்து வச்சிருக்கானுங்க..,

 எடை சரியா இருக்காப்பா?!






Tuesday, July 02, 2013

சென்னை அண்ணா நகர் பூங்கா காதலர்களுக்கு மட்டும் தானா ?!


தூயா சென்னை, அண்ணா நகர்ல தங்கி படிக்கும்போது, அவளும் அவ ஃப்ரெண்ட்ஸும் வாரக்கடைசில படையெடுக்கும் இடம் ஒண்ணு அமைந்தகரையில இருக்கும் “ஸ்கை வால்க்” இல்லாட்டி ”அண்ணா நகர் டவர்”.அந்த பார்க்குக்கு போய் எடுத்துட்டு வந்த புகைப்படங்களை பர்த்ததும்.., சின்னது ரெண்டுத்துக்கும் அங்க போய் வரனும். 

அவ என்ன ஒசத்தி அவ மட்டும்தான் போவாளா?!ன்னு படுத்தி எடுத்துட்டுதுங்க.  அப்புறம் வேற என்ன சட்டி பொட்டி எல்லாம் தூக்கிட்டு ”அண்ணா நகர் டவர் பூங்கா”விற்கு மட்டும் ஒரு விசிட்..., பின்ன, ஸ்கை வால்க் கூட்டி போய் ஒரு மாச சம்பளத்தை ஒரு நாளில் தீர்த்துட்டு வூட்டுக்காரர்க்கிட்ட யார் திட்டு வாங்குறது.., அதனால ஒன்லி பார்க்குக்கு மட்டும் போய் வந்துட்டோம்..., இதோட முழு பேரு “விஸ்வேஸ்வரய்யா கோபுர பூங்கா” வாம். 

நாமதான் பிரபல பதிவராச்சே!!?? சரி சை, இதுக்கெல்லாமா முறைக்குறது.., பாருங்க மானிட்டர் பொசுங்குதுல்ல உங்க அனல் பார்வை பட்ட!!  ஒரு பதிவு தேத்தலாம்ன்னு அங்க இருக்குறவங்ககிட்டயும்.., கூகுள்லயும் கேட்டு தெரிஞ்சுக்கிட்டு ஒரு பதிவு தேத்தியாச்சு.., 1964ம் ஆண்டுதான் அண்ணா நகர் அப்போதுதான் உருவானதாம்.  இப்போ,  ”சென்னை, அண்ணா நகர்” ன்னு சொல்ற  இந்தப் பகுதியின் பழைய பேரு  ”முள்ளம் கிராமம்”.  அதாவது  ”கோயம்பேடு”ன்ற பெரிய கிராமத்துக்கு உட்பட்ட ”பொன்பாடி”ன்ற  கிராமத்துக்குள் அடங்கிய ”முள்ளம் கிராமம்”தான் இப்போதைய ”அண்ணா நகர்”. 


1967 வது வருசம் , அண்ணா தலைமையில ”இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு” இங்கு நடத்தப்பட்டதாம். “உலகப் பொருட்காட்சி” நடத்திய பகுதியைச் சுற்றி .., ஒரு புறம் உலகப் பொருட்காட்சி நுழைவாயில் அமைக்கப்பட்டதாம் .  மறுபக்கம் இரு யானைகளின் சிலைகளை வைத்து  கேரளா பெவிலியன் அமைந்திருந்த இடத்தில் ”அண்ணா நகர் கிளப்” தொடங்கினார்களாம் .  விஸ்வேஸ்வரையா கோபுரம் என்று பெயர் சூட்டி ஒரு டவரைக் கட்டினார்களாம்.  அந்த டவர்தான் இன்னிக்கு “அண்ணா நகர்” டவர் ன்னு அழைக்கப்படுதிறதாம்.



இந்த இடத்தில்  நிகழ்ச்சிகள் நடத்த ஒரு மேடையும் சுத்தி உட்காருவதற்கு காலரியும் அமைக்கபட்டுள்ளது  


அந்த கேலரி சுவத்துல  பலவைகையான ஓவியங்களை வரைஞ்சு இருக்காங்க. அதன் பின்,  அழகான வட்டவடிவ பகுதி காணப்படுகிறது. அங்கிருந்து பார்த்தால் ஒரு நீர் நிறைந்த குளமும்,  அதனுள் மீன்களும் இருக்கின்றன.  பார்பதற்கு ரொம்ப அழகா இருந்துச்சு.

,

சின்ன பிள்ளைங்க  ”ஸ்கேட்டிங்” விளையாடி பழக ஒரு அரங்கம் இருக்கு.  நிறைய சிறுவர்கள் ஸ்கேட்டிங் விளையாடிட்டு இருந்தாங்க.  பார்க்குறதுக்கு  அழகாவும் இருந்துச்சு. நாம் அதை பார்த்து ரசிப்பதற்கு காலரியும் கட்டி இருக்காங்க. நீங்கள்லாம் என்னடா ஸ்கேட்டிங் பண்ணுறிங்க. உங்க அம்மா, பாட்டிலாம் இந்த மாதிரி எந்த பயிற்சியும் இல்லாம ஹாலுக்கும், கிச்சனுக்கும், சாமி ரூமுக்கும், துணி துவக்கும் கல்லுக்குமா என்னமா பறக்குறாங்க?!ன்னு நினைச்சுக்கிட்டே ரசிச்சேன்.


அதிசயமா இந்த காலத்துலயும் குளம் நிறைய தண்ணி இருந்துச்சு. அதிசயத்தோட அதிசயமா அதுக்குள்ளே  நிறைய மீன்களும் இருந்துச்சு..,

பூங்காக்குள்ளே நிறைய கலர் கலரான பூக்களும், செடிகளும் நிறைய மரங்களும் அந்த இடமே குளுகுளுன்னு இருந்துச்சு.., இந்த பூவோட பேரு ஞாபகத்துல இல்லை. சின்ன பிள்ளைல எங்க ஸ்கூல்ல இந்த மரம் நிறைய இருக்கும். இதுல ஒரு மாதிரி கோன் ஷேப்புல அரும்பு விடும். அதை பிரிச்சா ஒரு மாதிரி கொக்கொ போல மகரந்தம்லாம் இருக்கும். அதை வச்சு அடுத்தவங்க மகரந்தத்தை உடைக்குற விளையாட்டு விளையாடுவோம்.  நல்லா இருக்கும். இப்போலாம் பசங்க அந்த மாதிரி விளையாடுதுங்களான்னு தெரியலை.



இந்த பூவோட பேரும் தெரியலை. ஆனா, பார்க்க அழகா இருக்கும் எனக்கு ரொம்ப பிடிச்ச பூ.  இந்த பூங்காவுல குழந்தைங்க விளையாட” புதிய விளையாட்டு திடல்”, பொதுமக்கள் தியானம் செய்ய ”தியான மேடையுடன் கூடிய மையம்”, மாலை வேளைகள்ல பொதுமக்கள் குழந்தைகளுடன் அமர்ந்து பொழுது போக்குவதற்க “திறந்தவெளி கலையரங்கம்”, குழந்தைகள் விளையாட “ஸ்கேட்டிங்க் மையம்” ஆகியவை புதுசா கட்டுறாங்க. அங்குள்ள ஏரிக்கரையை ரசிக்க “சிமெண்ட் திட்டுகள், லேக் ஐலேண்ட், நடைப்பாதைகள்” கூட அமைக்கப்படுகின்றது.


நாட்டிய அரங்கம் சுற்றிலும் பச்சை பச்சையாக புல் வளர்த்து அருமையாக காட்சியளிக்கிறது 





சென்னையில் உள்ள மிகப்பெரிய மற்றும் உயர்ந்த டவரைக் கொண்ட பூங்கா இதுதான். இது அண்ணா நகர் ரவுண்டானாவுக்கு மிக அருகில் அமைந்திருக்கிறது. 




இந்த டவரின் உச்சியில் இருந்து பார்த்தா, சென்னையின் பரந்து விரிந்த அழகை பார்க்கலாம். மாலை 5 மணி முதல் இந்த டவர் மேல ஏறலாம். மத்த நேரத்துல அனுமதி இல்லை.  பூங்கா மிக அழகா பராமரிக்குறாங்க. ஏராள்மான பொழுது போக்கு அம்சம் இருக்கு.   

இத்தனை நல்ல விசயங்கள் இருந்தாலும், காதலர்கள் பண்ற சேட்டைகள் முகம் சுளிக்குது. மெரினாவுல 144 போட்ட பிறகு, அங்கெல்லாம் நிஜமான காதலர்கள் போய் டீசண்டா இருந்துட்டு வந்துடுறங்க. இதுப்போல பூங்காக்களில் மத்த காதல்ர்கள் வந்து சேட்டைகளை தொடர்ந்திருக்காங்க. இது தெரிஞ்ச காவல் துறை இப்போ அண்ணா நகர் பூங்காவை கண்காணிக்க ஆரம்பிச்சு இருக்காங்க.

நண்டு, சிண்டுன்னு குடும்பத்தோட வர்றவங்களுக்கு மட்டும் அனுமதி,  ஜோடியா வர்றவங்கள்ல நிஜமான தம்பதி, காதல்ர்கள்ன்னு கேள்விகளுக்கு பிறகு அனுமதிக்குறாங்க. சந்தேகப்படும்படி யாராவது ஜோடியோடு வந்தால் ”நோ அனுமதி”. அதுக்காக ஒரு வாட்ச்மேனை காவலுக்கு போட்டிருக்காங்க. இப்போ பரவாயில்லைன்னு பக்கத்துல இருந்த குடும்பம் சொல்லுச்சு.

 பார்க் வாசல்ல சுண்டல், ஐஸ்கிரீம்ன்னு நிறைய நொருக்ஸ் கிடைக்குது. கொஞ்சம் தள்ளி சரவண பவன் ஹோட்டல் இருக்கு. அதுமில்லாம நிறைய ஹோட்டல்ஸ் இருக்கு. பக்கத்தில ஒரு ஐயப்பன் கோவில் இருக்கு அது பேமஸ் அண்ணா நகர் ஐயப்பன் கோவில் . 

பதிவு கொஞ்சம் நீளமாகிட்டுதுன்னு நினைக்குறேன். மன்னிச்சூ சகோ’ஸ்                        


Monday, July 01, 2013

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு -ஐஞ்சுவை அவியல்


என்ன மாமா! பூஜை முடிச்சுட்டீங்களா?!வயக்காட்டுக்கு போகனுமே! நான் இட்லி எடுத்து வைக்கவா?!

ம்க்கும், எங்கே ஒழுங்கா பண்ணா விட்டே?! ஒரு பக்கம் டிவி, ஒரு பக்கம் குக்கர் சத்தம், தெருவுல காயகறிகாரம்மா கூட வாக்குவாதம், கூடவே உன் பையன் சின்ன ம்னடையன் கூப்பாடு வேற.  நிம்மதியா சாமி கூட கும்பிட முடியலை. இனி தனியா ஒரு வீடு கட்டி உங்க யாரையும் அதுக்குள்ள சேர்க்காமதான் பூஜை கும்பிடனும்போல! 

ஏன் மாமா! அப்படிலாம் சொல்லுதீய?! 

பின்ன சாமிகிட்ட நமக்கு வேணுங்குறதை கேட்க, இப்படிலாம் கடுமையா கும்பிட்டாதான் நாம நினைச்சதுலாம் நடக்க்கும் புள்ள. நேத்து டிவில கூட ஒரு படத்துல ஒரு முனிவர் தவம் பண்றார், இடி, மழ, மின்னல் பார்க்காம இருக்கார். அவரை சுத்தி புத்து கூட எழும்பிடுது. அப்பவும் கண் விழிக்காம சாமி கும்பிட்டு வேணும்ங்குற வரத்தை வாங்கிட்டார்.

ம்க்கும் இப்படிலாம் சாமி கும்பிட வேணாம்.., இயல்பா சாமி கும்பிட்டு, யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாம இருந்தாலே போதும்.., சாமி நாம கேக்குற வரத்தை தரும்.., ஒரு முறை.., புத்தர் ஒரு மரத்தடியில் உக்காந்து தவம் செஞ்சுக் கிட்டிருந்தார். தான் பார்த்த உயிரற்ற உடல், முதுமை... இதுக்கெல்லாம் என்ன காரணம்ன்னு தெரிஞ்சுக்குறதுக்காக பண்ணுற கடுமையான தவம்.சாப்பிடலை, தூங்கலை, கொஞ்சம் கொஞ்சமா நினைவு தப்பிட்டு வருது. 

அப்போ, ஒரு கோஸ்டி பாட்டு  பாடியபடியே அந்த மரத்தை கிராஸ் பண்ணி போனாங்க. . அந்த பாட்டுச்சத்தம் புத்தரோட  தவத்தைக் கலைச்சது.”வீணையின் நரம்பினை  முறுக்கினால் இசை வரும்! முறுக்காத நரம்பினால் என்றுமே பலனில்லை! அதிகமாய் முறுக்காதே நரம்புகள் அறுபடும்! அளவோடு முறுக்கிடு வாழ்வும் அது போலே”!ன்னு அர்த்தம் வர்ற மாதிரியான பாட்டு அது. அந்தப் பாட்டு புத்தரின் சிந்தனையைக் தூண்டியது.  ஒரு விஷயத்தை அறிய அளவுக்கு மீறிய தவம் தேவையில்லை. ஏன்னா, ஒரேயடியாக பட்டினி கிடந்து மூச்சடக்கி தவம் செஞ்சா  இந்த உயிர் பறந்துடும். அதுக்கப்புறம்  என்ன காரணத்துக்காக தவமிருந்தோமே, அந்த லட்சியம் நிறைவேறாம போய்டும்ன்னு தெரிஞ்சுக்கிட்டவர், அன்னையிலிருந்து தவத்தின் கடுமையைக் குறைத்துக் கொண்டார்.  நாம கூட நம்ம வாழ்க்கையில அனுஷ்டிக்கும் விரதங்களுக்கு கூட ஒரு அளவவை வச்சுக்குறது நல்லது. அளவுக்கு மிஞ்சினால் எடுமே விஷம்தானே மாமா!?

நிஜம் தான் புள்ள.  இனி கடுமையான விரதம்லாம் இல்லாம இயல்பா விரதமிருக்கேன். நான் எதுக்கு விரதமிருக்கேன்னா! அக்க மகளுக்கு கல்யாணம் ஆகி ரொம்ப நாள் கழிச்சு கருத்தரிச்சிருக்கு.., அதான் அவ நல்லபடியா குழந்தை பெத்துக்கனும்ன்னு வேண்டிக்குறேன் புள்ள/

அப்படிங்கள்! ரொம்ப சந்தோசமான விசயம். அதுக்கு விரதம் மர்ரும் போதுமா?! நாமளும் கொஞ்சம் கேர் எடுத்துக்கனுமே! எனக்கு தெரிஞ்ச ஒரு சில டிப்ஸ் தரேன்..,

* கர்ப்பமா இருக்கும் போது முக்கியமான விசயம் என்னன்னா,  வீட்டு தரைங்கலாம்  ஈரமில்லாம இருக்கனும்.  ஏன்னா!  அப்படி  இருந்தா, எந்த நேரத்திலும் வழுக்கிடும் வாய்ப்பு இருக்கு. அதனால,  வீட்டுல இருக்குறவங்க, , இந்த விஷயத்துல  கவனமா இருக்கனும்.

* கர்ப்பத்தின் போது  சூடான பானத்தையோ, உணவையோ சாப்பிடும் போது கவனமா இருக்கனும். ஏன்னா,  தெரியாம  தடுமாறி உடல் மேலே விழுந்து காயம் பட்டுட்டா,  அது பிரசவத்தின் போது பிரச்சனை வர வாய்ப்பு இருக்கு
* கர்ப்பிணிகளுக்கு ஒருசில வேலை  செய்யும் போது  கஷ்டமா இருக்கும். உதாரணத்துக்கு உயரமான கட்டில்ல  படுத்து எழுந்திருக்கும் போது, உட்கார்ந்து எழுந்திருக்கும் போது ன்னு கஷ்டம் ஏற்படும். இதனால பெல்லியில் சிறிது அழுத்தம் ஏற்பட்டு, சிலசமயங்களல  ஆபத்து ஏற்படுற வாய்ப்பு இருக்கு.  அதாவது, வழுக்கிவிடும் நிலை ஏற்படும். அதனால், டைல்ஸ், மார்பிள்ஸ் தரை இருக்குறவங்க ரொம்ப கவனமா இருக்கனும்.

* கர்ப்பிணி பொண்ணுங்க  போட்டுக்குற ட்ரெஸ் அவங்க உடம்பு வாகுக்கு ஏத்த மாதிரி போட்டுக்கனும்.  ரொம்ப டைட்டான சுடிதார், ஜீன்ஸ், லெகிம்ஸ்லாம் போட்டுக்குறதை தவிர்க்கனும்.

* பாட்டி, சொன்னாங்க, மாமியார் சொன்னாங்கன்னு கடினமான வேலையை செய்ய வேணாம். சின்ன சின்ன வேலைங்க செஞ்சாலே போதும். . அதுக்காக வேலை செய்யாமலும் இருக்க கூடாது.
* கர்ப்பத்தின் போது பெண்கள் ஓடவோ, குதிக்கவோ கூடாது. இதனால் கருவில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும். அதற்காகத் தான், நிறைய மருத்துவர்கள் கர்ப்பமாக இருக்கும் பெண்களை பயணம் செய்யக்கூடாது ன்னு சொல்றாங்க.  அதனால, பயணத்தை தவிர்ப்பது நலம்.

*  சாதாரணமாக இருக்கும் போது நாவில் இருக்கும் சுவை, கர்ப்பத்தின் போது கொஞ்சம் மாறும். இது ஒரு பெரிய பிரச்சனையே இல்ல. அதனால, சாப்பிடாம இருக்குறது, இல்லைன்னா உடம்புக்கு சேராததுலாம் சாப்பிட வேணாம்.  இந்த நேரத்துல கீரை, காஅய், பழம் போன்றதை சேர்த்துக்கலாம். அதிக காரம், மசாலா அயிட்டம்லாம் சேர்த்துக்க வேணாம்ன்னு சொல்லுங்க அவக்கிட்ட..,

கண்டிப்பா சொல்றேன். இதெல்லாம் யார் உனக்கு சொன்னது?!

நம்ம ராஜிதான். நான் சின்ன மண்டையனை உண்டான போது நெட்டுல படிச்சு வந்து சொன்னா..

ஓ! இதெல்லாம் செஞ்சுதான் அறிவான பிள்ளைகளை பெத்து, தன்  பசங்ககிட்டயே  அடிக்கடி பல்ப் வாங்குறாளா?!

ஏன் மாமா! என்னாச்சு?

அதுவா புள்ள. ராஜியோட பெரிய பொண்ணு தூயா மூணாவது படிக்குதுன்னு நினைக்குறேன். சின்னவ இனியா அப்போதான் எல்கேஜி ல சேர்த்திருக்காங்க. சாயங்காலம் இஸ்கோலு விட்டு வந்து கொஞ்ச நேரம் கழிச்சு ஹோம் வொர்க் பண்ண உக்காந்து இருக்குங்க.., உன் ஃப்ரெண்ட் பத்திதான் உனக்கு தெரியுமே! பொறுப்பா ஒரு வேலையும் செய்ய தெரியாது. பிள்ளைகளை படிக்க விட்டு சமையல் கட்டுல போய் வேலை பார்த்திருக்கா.

சின்னது, பெரியவளோட நோட்டு ஒண்ணுத்தை கிழிச்சுட்டுது.. அதனால, பெரியவ அழுதுகிட்டே, ராஜிக்கிட்ட போய், அம்மா! ”பாப்பா என் நோட்டை கிழிச்சுட்டா”ன்னு சொல்லி கம்பெளெய்ண்ட் பண்ணி இருக்கா.

ம்ம்ம்ம்ம் அப்புறம் ராஜிக்கு கோவம் வந்துடுமே அடிச்சுட்டாளா?!

அதான் இல்ல, ஏய், இனியா! எப்ப பாரு அக்காவை ஏன் வம்புக்கு இழுக்குறே!? இனி அப்படி வம்புக்கு இழுத்து கம்ப்ளெயிண்ட் பண்ணா, அடிச்சுடுவேன்”ன்னு மிரட்டி இருக்கா. அதுக்கு, இனியா! ஏய் தூயா! நல்லா கேட்டுக்க. நீ கம்பெளெயிண்ட் பண்ணுறது அம்மாக்கு பிடிக்கலியாம். இனி அப்படி கம்ப்ளெயிண்ட் வந்தா அடிச்சுடுவாளாம். ஓக்கேன்னு சொல்லி ராஜி வாயை அடைச்சிருக்கா.

ஹா! ஹா! சின்ன பிள்ளைல இருந்து ராஜி வாயாடுவா! படிக்கும்போது கூட கிளாசுல அடங்கி ஒடுங்கி இருக்க மாட்டா. ஆனா, அவ வாயடைக்க அவ பெண்ணே போதும் போல இருக்கு.

பொண்ணு மட்டும் இல்ல புள்ள! அவ பையன் அப்புவும் பலே ஆள்தான். அவன் கேட்ட விடுகதைக்கு விடை தெரியாமதான் குழம்பிட்டு இருக்கேன்..,

அப்படி என்னத்தை கேட்டுட்டான் மாமா! எங்கே சொல்லுங்க பார்க்கலாம்! என்னால முடியுதான்னு?!
விரிச்ச தலையை, 
முடிய தெரியாத பொம்பளைக்கு...,
அவ பெத்த பிள்ளைகளாலேயே பேரு..,
அவ யாரு?!
ன்னு கேட்டான். இன்னும் பதில் தெரியலை புள்ள.

ம்ம்ம்ம்ம் எனக்கும் தெரியலை மாமா!  நீங்களே சொல்லிடுங்க...

நான் ஒரு ஜோக் சொல்றேன் கேட்டாதான் பதில் சொல்லுவேன்..

சரி சொல்லி தொலைங்க...,

தாஜ் மகாலை பார்த்துக்கிட்டு இருந்த ஒரு ஜோடி..
மனைவி ; ஷா' மனைவி மேலே எவ்வளவு அன்பு வச்சிருக்கார் பார்த்தீங்களா ? நீங்களும் இருக்கீங்களே...

கணவன் ; என்ன அப்படி கேட்டுட்டே..இடம், பணம் எல்லாம் ரெடி..
உன் சைடுலே தான் டிலே ஆகுது.
இது ஜோக்கா?! இல்ல எனக்கு இதுல எதாவது சொல்றீங்களா?!

கண்டுப்பிடிச்சுட்டியே கள்ளி! என் பொண்டாட்டி ரொம்ப புத்திசாலின்னு அடிக்கடி என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்லுவேன். அது நிஜம்ன்னு ஃப்ரூஃப் பண்ணிட்டியே!

உங்களை....,