செவ்வாய், ஜூலை 02, 2013

சென்னை அண்ணா நகர் பூங்கா காதலர்களுக்கு மட்டும் தானா ?!


தூயா சென்னை, அண்ணா நகர்ல தங்கி படிக்கும்போது, அவளும் அவ ஃப்ரெண்ட்ஸும் வாரக்கடைசில படையெடுக்கும் இடம் ஒண்ணு அமைந்தகரையில இருக்கும் ஸ்கை வால்க் இல்லாட்டி ”அண்ணா நகர் டவர்”.அந்த பார்க்குக்கு போய் எடுத்துட்டு வந்த புகைப்படங்களை பர்த்ததும்.., சின்னது ரெண்டுத்துக்கும் அங்க போய் வரனும். 

அவ என்ன ஒசத்தி அவ மட்டும்தான் போவாளா?!ன்னு படுத்தி எடுத்துட்டுதுங்க.  அப்புறம் வேற என்ன சட்டி பொட்டி எல்லாம் தூக்கிட்டு அண்ணா நகர் டவர் பூங்காவிற்கு மட்டும் ஒரு விசிட்..., பின்ன, ஸ்கை வால்க் கூட்டி போய் ஒரு மாச சம்பளத்தை ஒரு நாளில் தீர்த்துட்டு வூட்டுக்காரர்க்கிட்ட யார் திட்டு வாங்குறது.., அதனால ஒன்லி பார்க்குக்கு மட்டும் போய் வந்துட்டோம்..., இதோட முழு பேரு விஸ்வேஸ்வரய்யா கோபுர பூங்கா” வாம். 

நாமதான் பிரபல பதிவராச்சே!!?? சரி சை, இதுக்கெல்லாமா முறைக்குறது.., பாருங்க மானிட்டர் பொசுங்குதுல்ல உங்க அனல் பார்வை பட்ட!!  ஒரு பதிவு தேத்தலாம்ன்னு அங்க இருக்குறவங்ககிட்டயும்.., கூகுள்லயும் கேட்டு தெரிஞ்சுக்கிட்டு ஒரு பதிவு தேத்தியாச்சு.., 1964ம் ஆண்டுதான் அண்ணா நகர் அப்போதுதான் உருவானதாம்.  இப்போ,  ”சென்னை, அண்ணா நகர்” ன்னு சொல்ற  இந்தப் பகுதியின் பழைய பேரு  ”முள்ளம் கிராமம்”.  அதாவது  ”கோயம்பேடு”ன்ற பெரிய கிராமத்துக்கு உட்பட்ட ”பொன்பாடி”ன்ற  கிராமத்துக்குள் அடங்கிய ”முள்ளம் கிராமம்”தான் இப்போதைய ”அண்ணா நகர்”. 


1967 வது வருசம் , அண்ணா தலைமையில ”இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு” இங்கு நடத்தப்பட்டதாம். “உலகப் பொருட்காட்சி” நடத்திய பகுதியைச் சுற்றி .., ஒரு புறம் உலகப் பொருட்காட்சி நுழைவாயில் அமைக்கப்பட்டதாம் .  மறுபக்கம் இரு யானைகளின் சிலைகளை வைத்து  கேரளா பெவிலியன் அமைந்திருந்த இடத்தில் ”அண்ணா நகர் கிளப்” தொடங்கினார்களாம் .  விஸ்வேஸ்வரையா கோபுரம் என்று பெயர் சூட்டி ஒரு டவரைக் கட்டினார்களாம்.  அந்த டவர்தான் இன்னிக்கு “அண்ணா நகர்” டவர் ன்னு அழைக்கப்படுதிறதாம்.இந்த இடத்தில்  நிகழ்ச்சிகள் நடத்த ஒரு மேடையும் சுத்தி உட்காருவதற்கு காலரியும் அமைக்கபட்டுள்ளது  


அந்த கேலரி சுவத்துல  பலவைகையான ஓவியங்களை வரைஞ்சு இருக்காங்க. அதன் பின்,  அழகான வட்டவடிவ பகுதி காணப்படுகிறது. அங்கிருந்து பார்த்தால் ஒரு நீர் நிறைந்த குளமும்,  அதனுள் மீன்களும் இருக்கின்றன.  பார்பதற்கு ரொம்ப அழகா இருந்துச்சு.

,

சின்ன பிள்ளைங்க  ”ஸ்கேட்டிங்” விளையாடி பழக ஒரு அரங்கம் இருக்கு.  நிறைய சிறுவர்கள் ஸ்கேட்டிங் விளையாடிட்டு இருந்தாங்க.  பார்க்குறதுக்கு  அழகாவும் இருந்துச்சு. நாம் அதை பார்த்து ரசிப்பதற்கு காலரியும் கட்டி இருக்காங்க. நீங்கள்லாம் என்னடா ஸ்கேட்டிங் பண்ணுறிங்க. உங்க அம்மா, பாட்டிலாம் இந்த மாதிரி எந்த பயிற்சியும் இல்லாம ஹாலுக்கும், கிச்சனுக்கும், சாமி ரூமுக்கும், துணி துவக்கும் கல்லுக்குமா என்னமா பறக்குறாங்க?!ன்னு நினைச்சுக்கிட்டே ரசிச்சேன்.


அதிசயமா இந்த காலத்துலயும் குளம் நிறைய தண்ணி இருந்துச்சு. அதிசயத்தோட அதிசயமா அதுக்குள்ளே  நிறைய மீன்களும் இருந்துச்சு..,

பூங்காக்குள்ளே நிறைய கலர் கலரான பூக்களும், செடிகளும் நிறைய மரங்களும் அந்த இடமே குளுகுளுன்னு இருந்துச்சு.., இந்த பூவோட பேரு ஞாபகத்துல இல்லை. சின்ன பிள்ளைல எங்க ஸ்கூல்ல இந்த மரம் நிறைய இருக்கும். இதுல ஒரு மாதிரி கோன் ஷேப்புல அரும்பு விடும். அதை பிரிச்சா ஒரு மாதிரி கொக்கொ போல மகரந்தம்லாம் இருக்கும். அதை வச்சு அடுத்தவங்க மகரந்தத்தை உடைக்குற விளையாட்டு விளையாடுவோம்.  நல்லா இருக்கும். இப்போலாம் பசங்க அந்த மாதிரி விளையாடுதுங்களான்னு தெரியலை.இந்த பூவோட பேரும் தெரியலை. ஆனா, பார்க்க அழகா இருக்கும் எனக்கு ரொம்ப பிடிச்ச பூ.  இந்த பூங்காவுல குழந்தைங்க விளையாட” புதிய விளையாட்டு திடல்”, பொதுமக்கள் தியானம் செய்ய ”தியான மேடையுடன் கூடிய மையம்”, மாலை வேளைகள்ல பொதுமக்கள் குழந்தைகளுடன் அமர்ந்து பொழுது போக்குவதற்க “திறந்தவெளி கலையரங்கம்”, குழந்தைகள் விளையாட “ஸ்கேட்டிங்க் மையம்” ஆகியவை புதுசா கட்டுறாங்க. அங்குள்ள ஏரிக்கரையை ரசிக்க “சிமெண்ட் திட்டுகள், லேக் ஐலேண்ட், நடைப்பாதைகள்” கூட அமைக்கப்படுகின்றது.


நாட்டிய அரங்கம் சுற்றிலும் பச்சை பச்சையாக புல் வளர்த்து அருமையாக காட்சியளிக்கிறது 

சென்னையில் உள்ள மிகப்பெரிய மற்றும் உயர்ந்த டவரைக் கொண்ட பூங்கா இதுதான். இது அண்ணா நகர் ரவுண்டானாவுக்கு மிக அருகில் அமைந்திருக்கிறது. 
இந்த டவரின் உச்சியில் இருந்து பார்த்தா, சென்னையின் பரந்து விரிந்த அழகை பார்க்கலாம். மாலை 5 மணி முதல் இந்த டவர் மேல ஏறலாம். மத்த நேரத்துல அனுமதி இல்லை.  பூங்கா மிக அழகா பராமரிக்குறாங்க. ஏராள்மான பொழுது போக்கு அம்சம் இருக்கு.   

இத்தனை நல்ல விசயங்கள் இருந்தாலும், காதலர்கள் பண்ற சேட்டைகள் முகம் சுளிக்குது. மெரினாவுல 144 போட்ட பிறகு, அங்கெல்லாம் நிஜமான காதலர்கள் போய் டீசண்டா இருந்துட்டு வந்துடுறங்க. இதுப்போல பூங்காக்களில் மத்த காதல்ர்கள் வந்து சேட்டைகளை தொடர்ந்திருக்காங்க. இது தெரிஞ்ச காவல் துறை இப்போ அண்ணா நகர் பூங்காவை கண்காணிக்க ஆரம்பிச்சு இருக்காங்க.

நண்டு, சிண்டுன்னு குடும்பத்தோட வர்றவங்களுக்கு மட்டும் அனுமதி,  ஜோடியா வர்றவங்கள்ல நிஜமான தம்பதி, காதல்ர்கள்ன்னு கேள்விகளுக்கு பிறகு அனுமதிக்குறாங்க. சந்தேகப்படும்படி யாராவது ஜோடியோடு வந்தால் ”நோ அனுமதி”. அதுக்காக ஒரு வாட்ச்மேனை காவலுக்கு போட்டிருக்காங்க. இப்போ பரவாயில்லைன்னு பக்கத்துல இருந்த குடும்பம் சொல்லுச்சு.

 பார்க் வாசல்ல சுண்டல், ஐஸ்கிரீம்ன்னு நிறைய நொருக்ஸ் கிடைக்குது. கொஞ்சம் தள்ளி சரவண பவன் ஹோட்டல் இருக்கு. அதுமில்லாம நிறைய ஹோட்டல்ஸ் இருக்கு. பக்கத்தில ஒரு ஐயப்பன் கோவில் இருக்கு அது பேமஸ் அண்ணா நகர் ஐயப்பன் கோவில் . 

பதிவு கொஞ்சம் நீளமாகிட்டுதுன்னு நினைக்குறேன். மன்னிச்சூ சகோ’ஸ்                        


21 கருத்துகள்:

 1. அழகிய படங்களுடன் அறியாத தகவல்களும் இணைத்து உங்கள் பாணியில் அசத்தி விட்டீர்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
 2. அண்ணாநகர நாங்களும் உங்களோட சுத்தி பாத்துட்டோம்...

  அடுத்த எங்கக்க மெரினா பீச்சா.. டவுட்டு...

  பாவம் அந்த ஏரியா காதலர்கள்.. இனி எங்க போவாங்களோ....

  பதிலளிநீக்கு
 3. இவுளவு நாளும் அண்ண நகர் ன்னு தான் நினைச்சு இருந்தேன் இப்பதான் அதன் உண்மையான பெயர் தெரிந்தது நன்றி படங்கள் நேரில் செனற ஒரு அனுபவம் கிடைத்தது

  பதிலளிநீக்கு
 4. அண்ணாநகர் டவரை இவ்வளவு அழகா உங்களைவிட யாரும் ப்ரொஜெக்ட் பண்ண முடியாதுன்னு நெனக்கிறேன். ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க...

  அப்புறம் அந்த மஞ்சள் கலர்ல கொத்து கொத்து பூத்திருக்கிற மரம் 'சரக்கொன்றை'... அந்த சிவப்பு கலர் பூ 'மயில் கொன்றை' வகைன்னு நெனக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 5. ///இத்தனை நல்ல விசயங்கள் இருந்தாலும், காதலர்கள் பண்ற சேட்டைகள் முகம் சுளிக்குது///

  .பார்க் பீஸ் என்பது காதலர்களுக்காக உருவாக்கப்பட்டது அது தெரியாம இந்த குடும்ப பெண்களுக்கு வேற வேலையே இல்லையப்பா குழந்தைகளை வேற கூட்டி வந்துடுறாங்க. அதுதங்க சேட்டைகள் தாள முடியல...நாங்க வந்தோமா ஜாலிய இருந்தோமான்னு இருக்க முடியலையப்பா எப்பதான் இவங்க திருந்த போறாங்களோ அந்த கடவுளுக்குதான் வெளிச்சம் உஷ்ஷ்ஷ்ஷ்ச்

  இது காதலர்களின் புலம்பல்

  பதிலளிநீக்கு
 6. அசத்தல்.... இதுபோல் ஆராய்ச்சி பண்ணி அழகிய படங்களுடன் எழுதும் கட்டுரைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்...வாழ்த்துக்கள் சகோதரி...

  பதிலளிநீக்கு
 7. படங்கள் மூலம் நல்லா சுத்திப் பார்த்தாச்சி... நன்றி...

  பதிலளிநீக்கு
 8. ராஜி மேடம்...
  காவல் துறை ஒருபக்கம் கண்கணிக்கும் பொழுது
  பதிவு வேற போட்டுட்டீங்களா...?
  பாவம் தான் காதல் ஜோடிகள்.

  (இனி எங்கே போவாங்க...? சொன்னால்
  நான் அடுத்தப்பதிவைத் தொடங்குகிறேன்...)

  பதிலளிநீக்கு
 9. பூங்கா கண்டுகொண்டோம்.

  பதிலளிநீக்கு
 10. அண்ணா நகர் பூங்கா நானும் ஒரு தடவை போய் இருக்கிறேன்.அம்மணிகளின் தரிசனம் பெற்றிருக்கிறேன்.இங்க பக்கத்துல ஒரு லேடிஸ் காலேஜ் இருக்கு எல்லாரும் இங்க தான் குவிவாங்க....ஒரு மாசம் நமக்கு இது தான் வேலை.அங்க....
  நிறைய ஷூட்டிங் நடந்திருக்கு இந்த டவர்ல

  பதிலளிநீக்கு
 11. சகோதரி ராஜி அவர்களுக்கு பதிவு அப்படி ஏதும் ரொம்ப நீளமாக இல்லை. படிக்க ஒன்றும் அலுப்பு தட்டவில்லை.

  பதிலளிநீக்கு
 12. படங்கள் பார்த்தேன். ரசித்தேன்.

  நாங்களும் அண்ணா நகர் பார்க் சென்று வந்த உணர்வு. நன்றி ராஜி.

  பதிலளிநீக்கு
 13. அண்ணா நகர் பார்க்குக்கு நானும் கூட வந்து சுத்திப் பார்த்த உணர்வு. அந்தக் குளத்தில அதிசயமா தண்ணி இருந்துச்சு. அதிசயத்துலயும் அதிசயமா மீன்களும் இருந்துச்சு... நல்லாப் பாத்தியாம்மா... முதலை எதும் இருந்துரப் போவுது. ஹி... ஹி...!

  பதிலளிநீக்கு
 14. காதலர்களை நிம்மதியா இருக்க விடுங்கப்பூ...!

  போகும்போது அருவாள் கையில இருந்துச்சா இல்லையா ஹி ஹி ?

  அண்ணா நகர் பற்றிய தகவலுக்கு நன்றி...!

  பதிலளிநீக்கு
 15. அண்ணா நகர் டவர் பற்றி பல தகவல்கள் தந்து அசத்திட்டீங்க ராஜி. பலருக்கும் தெரியாத விவரங்கள். பார்க்க ரம்மியமாகவும் பொழுதுபோக்க ஏற்ற இடமாகவும் உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 16. //இந்த டவரின் உச்சியில் இருந்து பார்த்தா, சென்னையின் பரந்து விரிந்த அழகை பார்க்கலாம். மாலை 5 மணி முதல் இந்த டவர் மேல ஏறலாம்.// அப்படியா நான் சமீபத்துல போனப்போ ஏற அனுமதி இல்லன்னு சொல்லிடாங்க, ஒருவேள சின்னபையன்னு என்ன ஏமாத்திடான்களோ

  பதிலளிநீக்கு
 17. எங்க போனாலும் இந்த காதலர்கள் தொல்ல விடாது போல

  பதிலளிநீக்கு
 18. பழைய நினைவுகளை கிளறி விடுகிறது உங்களது பதிவு.......2005இல் சென்னையை விட்டு வந்த பிறகு மீண்டும் இதை நினைத்து பார்க்கிறேன். நன்றி !

  பதிலளிநீக்கு
 19. நான் சென்னை முகப்பேரில் இருக்கும் போது என் மகளின் விருப்ப இடம் இந்த பூங்கா, ஐயப்பன் கோவில், அதே சாலையில் இருக்கும் அடையாறு ஆனந்தபவன், தலப்பாக்கட்டு பிரியாணிக் கடைதான் ...

  இப்போ பூங்கா நிறைய மாறியிருப்பது போல் தெரிகிறது... நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
 20. படங்களும் பகிர்வும் அருமை. கர்நாடகத்தைச் சேர்ந்த விஸ்வேஸ்வரய்யா பெயரில் பல்கலைக்கழகம், மியூசியம் மற்றும் பல கல்விநிறுவனங்கள் உள்ளன இங்கே. பாரத ரத்னா பட்டம் பெற்றவர். கல்வியாளர், பொறியாளர். செப்டம்பர் 15, அவர் பிறந்ததினம் இஞ்சினீயர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது நம் நாட்டில். அவர் பெயரில் அங்கே டவர் புதிய செய்தி.

  கொன்றை மலர்கள் அழகு.

  பதிலளிநீக்கு