Monday, September 04, 2017

கடவுளே மனிதனிடம் தானம் கேட்ட கதை - ஓணம் பண்டிகை



தமிழ்நாட்டுக்கு உழவர் திருவிழா, அறுவடை திருவிழான்னு சொல்ற பொங்கல் திருவிழா மாதிரி மலையாளத்தவருக்கு  ஓணம் பண்டிகை. கடவுளின் தேசம்ன்னு சொல்லப்படும் கேரளா மக்களின் முக்கிய பண்டிகைகளில் இது முதன்மையானது.  பொதுவா , கடவுள்கிட்டதான் எல்லாரும் நமக்கு வேணுங்குறதை கேட்போம். ஆனா, கடவுளே மனிதன்கிட்ட தனக்கு வேணுங்குறதை கேட்டதன் நினைவாதான் இந்த பண்டிகை கொண்டாடப்படுது. அது என்ன கதைன்னு தெரிஞ்சுக்கலாம்... 


விஷ்ணு அவதரித்ததும், விஷ்ணுவின் அம்சமான வாமணன் அவதரித்ததும் இந்நாளில்தான்னு சங்கக்கால ஏடுகள் சொல்லுது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இப்பண்டிகை கொண்டாடப்படுத்தா கிபி 861 ம் தேதியிட்ட செப்புத்தகடு சொல்லுது.  இந்த பண்டிகை சாதி, மத, பேதமின்றி கொண்டாடப்படுது.  கேரள மக்கள் மட்டுமின்றி கன்யாக்குமரி, கோவை, மார்த்தாண்டம் மாதிரியான கேரள, தமிழக எல்லையோரத்து மக்களும் இப்பண்டிகையை கொண்டாடுகின்றனர். இப்ப, சென்னையிலும், மற்ற ஊர்களிலும் ( சில அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகளிலும்) கொண்டாடப்படுது. 


கொல்லவர்ஷம்ன்னு சொல்லுற மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் அஸ்தம் தொடங்கி திருவோணம் வரை இப்பண்டிகை கொண்டாடப்படுது.  விஷ்ணு பகவான் அவதரித்ததால் திருவோணம் நட்சத்திரம் விஷ்ணுவுக்கு உகந்தது. இந்நாளில் இவரை வணங்குவோருக்கு திருமணத்தடை நீங்கும், குழந்தைப்பேறு கிடைக்கும்,  பேரோடும், புகழோடும் வாழ்வர்.



ஒருமுறை சிவன் கோவிலில் இருந்த விளக்கு அணையும் தருவாயில் இருந்தது. அந்த வழியே சென்ற எலியின் வால் பட்டு விளக்கின் திரி தூண்டப்பட்டு விளக்கு பிரகாசமாய் எரிந்தது, எலி அறியாமல் செய்த இந்த புண்ணிய காரியத்துக்காக மறுபிறவியில் அரசனாய் பிறந்தது. அந்த அரசன் தான் இன்றைய கேரளா உள்ளிட்ட மலையாள தேசத்தை ஆண்டு வந்த , மகாபலி சக்ரவர்த்தி. 


மகாபலி சக்ரவர்த்தி தன் நாட்டு மக்கள்மீது மிகுந்த அன்பு கொண்டு, அசுர குருவான சுக்ராச்சாரியார்  வழிக்காட்டுதலின்படி  நாட்டை மிகச்சிறப்பாய் ஆண்டு வந்தான். சிறந்த கொடையாளியாகவும் இருந்தான்.   அவனின் ஆட்சியில் மக்கள்  மகிழ்ச்சியோடு இருந்தனர். இதனால், மகாபலி சக்ரவர்த்திக்கு லேசாய் தலைக்கணம் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது. தன்னால் தானமாய் கொடுக்க முடியாதது எதுமில்லை என அகங்காரம் கொண்டார். இதனை அறிந்த மகாவிஷ்ணு  வாமணன் என்ற சிறுவனாய் அவதரித்து மகாபலி அரண்மனை நோக்கி சென்றார். அந்த நேரத்தில் மகாபலி சக்ரவர்த்தி யாகம் ஒன்றை நடத்தி கொண்டிருந்தார். யாகத்தின் ஒருபகுதியாக மக்கள் விரும்பியவற்றை அவர்கள்  விருப்பப்படி தானதர்மங்களை செய்து வந்தார். 


வந்திருப்பது அந்த மகாவிஷ்ணு என்பதை  சுக்ராச்சாரியார் தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்துகொண்டார். மகாபலியிடம் சென்று வந்திருப்பது அந்த மாயவன். அதனால, எந்த வாக்கையும் கொடுத்துவிடாதே! அதனால,  உன் ராஜ்ஜியம் உட்பட உன் உயிருக்கேகூட ஆபத்தாக முடியும் என எச்சரித்தார். 


குருவே! எல்லாரும் கடவுளிடம் வரம் கேட்பர். ஆனால், கடவுளே என்னிடம் வரம் கேட்பதென்றால் எத்தனை சிறந்த பாக்கியம்!!  அதனை இழக்க நான் விரும்பவில்லை எனக்கூறி வாமணனை வரவேற்க சென்றான் மகாபலி. வாமணனை வரவேற்று, தாங்கள் வேண்டி வந்தது யாதென வணங்கி நின்றான். எனக்கு மூன்றே மூன்றடி நிலம் வேண்டுமென வாமணன்  கூறினான். சிறுவன்தானே!  மூன்றடி நிலம் எவ்வளவு இருந்திடுமென்ற அலட்சியத்தோடு அப்படியே ஆகட்டுமென வாக்களித்தார் மகாபலி. ம்ஹூம். நீர் விட்டு வாக்களிக்க வேண்டுமென வாமணன் பிடிவாதம் பிடித்தான். 



இப்போதும் மனம் கேட்காத சுக்ராச்சாரியார், மகாபலியை தடுத்தார். இதை எதையும் காதில் வார்க்காத மகாபலி நீரூற்ற கமண்டலத்தை எடுத்தார். சுக்ராச்சாரியார் வண்டாய் மாறி கமண்டலத்தின் நீர் வரும் வாயிலை அடைத்துக்கொண்டார்.  எத்தனை முயன்றும் நீர் வெளிவரவில்லை.  சுக்ராச்சாரியாரின் செயலை உணர்ந்த வாமணன் அருகிலிருந்த  தர்ப்பைப்புல்லை கொண்டு வாயிலை குத்த சுக்ராச்சாரியாரின் பார்வை பறிபோனதோடு நீரும் வந்தது. மகாபலியும் வாமணன் கேட்ட வரத்தை தந்தார். 


உடனே, வானுக்கும், மண்ணுக்குமாய் உயர்ந்து நின்ற வாமணன், ஓரடியில் நிலத்தையும், இரண்டாமடியில் ஆகாயத்தையும் அளந்து மூன்றாவது அடிக்கு என்ன செய்யவென மகாபலியிடம் கேட்டான். ஐயனே! மூன்றாம் அடியை என் தலையில் வையுங்கள் எனக்கூறி தன் தலையைக்காட்டி பணிந்து நின்றார். வாமணனும் மூன்றாவது அடியை மகாபலி தலையில்  வைக்க,  மகாபலி பாதாளலோகம் சென்றார்.  அங்கிருந்தபடியே, ஐயனே! எந்நாட்டு மக்களை பிரிந்து என்னால் இருக்க இயலாது அதனால், வருடம் ஒருமுறை எம்மக்களை சந்திக்க வரம் கொடுங்கள் என வேண்டி நிற்க விஷ்ணுவும் அவ்வாறே அருளி மகாபலியை ஆட்கொண்டார். 

மகாபலி சக்ரவத்தி வருடமொரு முறை வரும் நாளையே ஓணம் பண்டிகை என கேரள மக்கள் கொண்டாடுகின்றனர். புத்தம் புது ஆடை, அணிகலன் அணிந்து, வீட்டு அழகூட்டி, வாசலில் அத்தப்பூ கோலமிட்டு, சுவையான உணவு உண்டு தாங்கள் மகிழ்ச்சியாய் இருப்பதை மகாபலி சக்ரவர்த்திக்கு உணர்த்துகின்றனர்.  படகு போட்டி, மேள , தாளம் உட்பட பல கலை நிகழ்ச்சிகளோடு இப்பண்டிகையை கொண்டாடுகின்றனர். 

அத்தப்பூ கோலம்...

ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும். அதனால் ஓணத்தையும் மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுறாங்க. ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண் பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவை பறித்துக் கொண்டு வரனும். பூக்கோலத்தில் அதைதான் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். அதன்பின், தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவார்கள். முதல் நாள் ஒரே வகையான பூக்கள், இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று எனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் இந்த அத்தப்பூக் கோலம் அழகுபடுத்தப்படும். தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூக்களுக்கு முதலிடம் கொடுப்பாங்க. பத்தாம் நாள் கோலம் பத்துவகையான பூக்கள் இருக்குறதால மிகப்பெரியதாய் இருக்கும். 

ஓண சத்யா....


கானம் விற்றாவது ஓணம் உண்’ என்ற பழமொழி ஓணம் பண்டிகையை முன்னிட்டு சமைக்கப்படும் அறுசுவை உணவான  ‘ஓண சத்யா’வின் சிறப்பை உணர்த்துது. இதில் அறுசுவையில் ஒன்றானா கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகை உணவு தயாரிக்கப்படும். புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரைப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு, பப்படம், சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்கு படைக்கப்படும். பெரும்பாலான உணவு வகைகளில் தேங்காய் மற்றும் தயிர்நிறைய சேர்த்துக்குவர்.  வகை வகையாக செய்யப்படும் உணவு செரிமானம் ஆவதற்காகத்தான் உணவில் இஞ்சிக்கறி, இஞ்சிப்புளி போன்றவை சேர்க்கப்படுது.

புலிக்களி ஆட்டம்


மலையாளத்தில் ‘களி’ ன்னா நடனம்ன்னு பொருள். ‘புலிக்களி’ அல்லது ‘கடுவக்களி’ ன்னு சொல்லப்படுற இந்த  நடனம் ஓணம் பண்டிகையின் 4–ம் நாள் விழாவில் நடைபெறும். இந்த நாளில் சிவப்பு, கறுப்பு மற்றும் மஞ்சள் நிறத்தால புலி வேஷமிட்டு நடனம் ஆடி ஊர்வலமாக வருவார்கள். புலிக்களி நடனம் 200 ஆண்டுகளுக்கு முன்பு கொச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் ராமவர்ம சக்தன் தம்புரான் என்பவரால் ஓணம் விழாவில் தொடங்கி வைக்கப்பட்டது.

கசவு, நேரியல்ன்னு சொல்லப்படுற வெண்ணிறமும், ஜரிகையும் சேர்ந்த புடவை, வேட்டியையையே இந்நாளில் அணிகின்றனர். வயதான பெண்கள் முண்டுன்னு சொல்லப்படுற இரண்டு துண்டுகளால் ஆன புடவையை கட்டி கொள்வர்.  ஓணம்  பண்டிகையன்று,  வயது வித்தியாசமில்லாம அனைத்து பெண்களும் "கைகொட்டுக்களி”ன்ற நடனத்தை ஆடுவர்



படகுபோட்டி, பல்வேறு கலைநிகழ்ச்சிகள்ன்னு ஒன்பது நாட்கள் கொண்டாட்டமாய் போகும் இத்திருவிழாவை இன்னும் சிறப்பாக மாற்றுவது யானைத் திருவிழாவால் தான். பண்டிகை என்றாலே பண்டங்களை ஈகை செய்வது தானே! கேரள மக்கள், தங்கள் சக மனிதர்கள் மட்டுமல்லாமல், சக உயிர்களுக்கும் ஈகை புரிந்து கொண்டாடும் திருவிழா இந்த ஓணம்.  யானைகளுக்கு பொன், மணிகளாலான தங்க கவசம் இட்டு, பூத்தோரணங்களால் அலங்கரித்து யானைகளுக்கு என தயாரித்த சிறப்பு உணவுகளை அளித்து வீதிகளில் ஊர்வலம் நடத்துவர். பார்க்கும் அனைவரும் பரவசமாய் கும்மாளமிட்டபடி தொடருவர். 


கோவில் முழுவதும் சுற்றிவரும் யானை, மகாபலி மண்டபத்தில் சிறிது நேரம் நிற்கும். ஸ்ரீவாமனமூர்த்தி, மகாபலியை பாதாள லோகத்துக்கு திரும்ப அனுப்புவதற்கான அவகாசம்.  பத்து நாட்களின் விருந்து,கலை நிகழ்ச்சிகள், உணவு படையல், போட்டி என அனைத்தையும் கண்டுகளித்து, தாம் விட்டு வந்த தம் நாட்டு மக்கள் எல்லா செல்வங்களுடனும், வளத்துடனும் மகிழ்ச்சியாக நிம்மதியாகவே வாழ்கின்றனர் என்கிற மனநிறைவுடன் மகாபலி மன்னர் பாதாள லோகத்திற்கு திரும்பி செல்வதாய் ஐதீகம். 




மகாபலி மன்னன் எத்தனை உயர்ந்த குணமிருந்தாலும் ஆணவம், அகங்காரம் கொண்டதால் அழிந்துபோனான். அதனால, ஆணவம், அகங்காரம், ஈகோவை ஒழித்து நலமாய் வாழ்வோம்....


தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...

நன்றியுடன்,’
ராஜி.

16 comments:

  1. நிறைய கதைகள் சொல்லி முடிவில் மகாபலி மன்னனைப்போல் ஆணவம் கொண்டதால் நம்மை ஆண்ட"வரும் அழிந்து போனார் என்பதை அழகாக இன்றைய அரசியல்வாதிகளோடு முடிச்சு போட்ட விதம் அருமை சகோ.

    ReplyDelete
    Replies
    1. என்னை எதுலயோ கோர்த்து விட பார்க்குறீரோ! வொய் திஸ் கொலைவெறிண்ணே!!!!

      Delete
  2. படங்களும் பதிவும் அருமை பாராட்டுகள் த.ம. வாக்குடன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  3. ஓணம் வாழ்த்துகள்! ஹப்பா அந்த இலையைப் பார்த்ததும் நாவில் நீர் ஊறுகிறது சகோ/ராஜி

    ReplyDelete
    Replies
    1. எனக்கும்தான். அடபிரதமனை நினைச்சாலே எச்சில் ஊறுது

      Delete
  4. தகவல்கள் அனைத்தும் அருமை!!!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  5. ஓணம் விக்கிபீடியா படித்ததுபோல் இருந்தது...பாட்டு தான் மிஸ்ஸிங்...நம்ம பக்கம் வாங்க...படிச்சிடலாம்....
    http://psdprasad-tamil.blogspot.com/2017/09/onam-2017-song.html

    ReplyDelete
    Replies
    1. எனக்கு வீடியோ இணைப்பு சிலநேரம் சொதப்புது. அதான் இணைக்கல. வருகிறேன் சகோ.

      Delete
  6. ஓணம் GIF படங்களை ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  7. படங்களைத் தேர்வு செய்வதில் ராஜி நம்பர் 1 பதிவர்.

    ReplyDelete
    Replies
    1. பதிவை டைப் பண்ண அரைமணிக்கூர் போதும். ஆனா, படங்களை தேடத்தான் நாள்கணக்குல நீளுது. அப்பயும் சிலநேரம் திருப்திபட்டுக்க முடியுறதில்லப்பா.

      Delete