Wednesday, February 20, 2019

பூவொன்று புயலான கதை, அம்பை- வெளிச்சத்தின் பின்னே

Image result for மகாபாரத அம்பை
அன்புக்கொண்ட பெண் உள்ளம் எந்தளவுக்கு விட்டுக்கொடுத்து போகுமோ அதே அளவுக்கு  தன் அன்போ அல்லது தானோ  புறக்கணிப்பு, அவமானம்ன்னு சந்திச்சா பழிவாங்கவும் தயங்காது. இதுக்கு ஒரு உதாரணமா மகாபாரத்தத்தின் அம்பையை சொல்லலாம். தந்தைக்காக தனது திருமண வாழ்வை விட்டுக்கொடுத்தவர், அம்பைக்காக கொஞ்சம் மனமிரங்கி இருக்கலாம். இறைவன் விதிச்சது இப்படி இருக்கும்போது அவர் மட்டும் என்னதான் செய்வார்?! அம்பையை பத்தின விவரங்கள் சிலதை போனவாரம் பீஷ்மர் கதையில் பார்த்தோம். இன்னும் விவரமாய் அம்பையின் கதையை பார்க்கலாம்.

தந்தையின் காதலுக்காக வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாய் இருப்பேனென  பீஷ்மர் சபதமெடுத்ததும், பீஷ்மரின் தந்தை சந்தனு சத்யவதியை மணந்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர்.   மூத்தவனான சித்ராங்கதன் அதேபெயருடைய கந்தர்வனால் கொல்லப்பட இளையவனான விசித்திரவீரியன்  அரியணை ஏறுகிறான். பீஷ்மர் அரசியல் ஆலோசகராக, படைத்தலைவராக இருந்து அஸ்தினாபுரத்து அரியணைக்கு சேவகம் செய்துக்கொண்டிருந்த வேளையில், விசித்திரவீரியனுக்கு திருமண பருவம் வருகிறது. காசி நாட்டு இளவரசிகளான அம்பை, அம்பிகா, அம்பாலிகா என்னும் மூவருக்கும்  சுயம்வரம் நடக்கவிருப்பதை கேள்விப்பட்ட சத்யவதிவிசித்திரவீரியனுக்கு மணமுடிக்க வேண்டி  பீஷ்மரிடம் அம்மூவரை பற்றி சொல்ல பீஷ்மர் காசிநாட்டுக்கு பயணப்பட்டு, சுயம்வரம் நடக்கும் மண்டபத்துக்கு செல்கிறார்.

அரசர்கள், இளவரசர்கள் பலர் கூடியிருந்த மண்டபத்தில் பீஷ்மரும் நின்றிருந்தார். தனது தம்பிக்காக பீஷ்மர் வந்திருப்பதை உணராத சில மன்னர்கள் பீஷ்மரை பார்த்து "நரை டிய கிழப்பருவத்தில் திருமண ஆசையா?!.உன் பிரம்மசரிய விரதம் என்னவாயிற்று?!" என சிரித்தனர். இளவரசிகள் சுயம்வர மாலையோடு சபைக்கு வந்தனர்.  சால்வ நாட்டு மன்னனான சால்வனை மனசுக்குள் நினைத்திருந்த காரணத்தால் அம்பை பீஷ்மரை தவிர்த்தாள். பீஷ்மரின் வயதினைக் கண்டு  அம்பிகா, அம்பாலிகா  விலகினர்.
Image result for சிகண்டி
 பீஷ்மர் கடுங்கோபமடைந்து,  மூன்று பெண்களையும் பலவந்தமாக தேரில் ஏற்றிக்கொண்டு  அஸ்தினாபுரத்துக்கு விரைந்தார். சுயம்வரத்துக்கு வந்திருந்த மன்னர்களும், இளவரசர்களும், காசி நாட்டு படைகளும் பீஷ்மரை சூழ்ந்தது. ஆனாலும், அனைவரும் தோற்று ஓடினர். அம்பையின் மனம் கவர்ந்த சால்வன் கடுமையாய் போராடி தோற்று நாடு திரும்பினான். காதலியையும் இழந்து, போரிலும் தோற்றதில் அடிப்பட்ட புலியாய் சீறிக்கொண்டிருந்தான் சால்வன்.
Image result for சிகண்டி
அஸ்தினாபுரம் வந்த பீஷ்மர் மூன்று பெண்களையும் தன் மகள்போல நினைத்து, விசித்திரவீரியனுக்கு திருமணம் செய்விக்க ஏற்பாடுகள் செய்தார்.  அம்பை தான் சால்வன்மீது காதல்கொண்டிருப்பதாகவும், அவரையே மணாளனாக அடைவேனென சகோதரிகளிடம் சொல்லிவிட்டு இரவோடு இரவாக அம்பை சால்வ நாடு நோக்கி சென்றாள். காடுமலை கடந்து, பல்வேறு இடர்பாடுகளை தனியாளாய் சமாளித்து, சால்வனை சந்தித்த அம்பை, 'மன்னா! நாம் முன்னரே உள்ளத்தால் கலந்துள்ளோம்..இப்போது முறைப்படி மணம் செய்துக்கொள்வோம்' எனக்கூறி அவன்முன் நின்றாள்.  அதற்கு சால்வன் 'பெண்ணே! உன் ஆசைக்காதலனிடம் நான் போரில் தோற்றிருக்கலாம்., ஆனால், அவன் மிச்சம் வைத்த எச்சிலை உண்ணுமளவுக்கு தரந்தாழ்ந்து போகவில்லை நீ திரும்ப செல்' என்றுக்கூறி அம்பையை ஏற்க சால்வன் மறுத்தான்.   ஆத்திரத்தில் நிதானமிழந்து பேசாதீர்கள், பீஷ்மர் எங்களை கவர்ந்து சென்றது தனது தம்பி விசித்திரவீரியனுக்கு மணமுடிக்கத்தான்.
என்னை காதலித்தது நிஜமென வாதிடுகிறாய் அம்பை என சால்வன் கத்தினான். அதனால்தான், உங்களிடம் என் காதலுக்காக மன்றாடுகிறேன் அம்பை எதிர்வாதம் செய்கிறாள். மாற்றான் ஒருவன் உன்னை தொட்டபோதே நீ இறந்திருக்கலாம். என் காதலி வீரமகள் என மார்த்தட்டி இருப்பேன், அந்த வாய்ப்பை எனக்கு தராமல் என்னை ஏமாற்றிவிட்டாய் அம்பை! என கொக்கரித்தான் சால்வன். நான் முழுசாய் திரும்பி வந்ததில் உங்களுக்கு ஆறுதலாய் இல்லையா என வாதிட்டாள் அம்பை. திரும்பி வந்தது உண்மை. முழுதாய்?! என்பதற்கு என்ன ஆதாரம் என சால்வன் கேட்க, நம்பிக்கையைவிட எதுவும் ஆதாரம் இல்லை. உம்மை காதலித்தது தவறில்லை. ஆனால், உம்மை நம்பி அஸ்தினாபுரத்திலிருந்து வந்தது தவறு என அம்பை அழுதாள்.

இப்பொழுதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. தேர் கொடுத்து அனுப்பி வைக்கிறேன். உன் ஆசை நாயகனிடமே செல் என்றான் சால்வன். கொதித்தெழுந்தாள் அம்பை,சிங்கம் சிறுநரியிடம் உதவி கேட்டதாய் சரித்திரம் இல்லை. இன்றுமுதல் நீ என்னைப்பொறுத்தவரை இறந்தவனாகிறாய் எனக்கூறி சால்வதேசத்திலிருந்து அஸ்தினாபுரம் வந்தாள் அம்பை. 
சால்வனின் இந்த முடிவினால் என்ன செய்வதென அறியாத அம்பை மீண்டும் அஸ்தினாபுரம் சென்றாள். அதற்குள், விசித்திரவீரியனுக்கும் அம்பிகா, அம்பாலிகைக்கும் திருமணம் நடந்து முடிந்துவிட்டிருந்தது. பின்னர், பீஷ்மரின் மாளிகைக்கு சென்றாள். ஆண்களும் வரத்தயங்கும் தனது மாளிகைக்கு வந்த பெண் யாரென உணர்ந்த பீஷ்மர், மரியாதைக்கருதி, அம்பையை வா என்றும் சொல்லவில்லை. அம்பையும் அந்த மரியாதையை எதிர்பார்க்கவுமில்லை. அம்பை அருகில் வந்ததும் அவ்விடமிருந்து பீஷ்மர் நகர பார்த்தார். அம்பை, அவரை நோக்கி உங்களிடம் பேசவேண்டுமென்றாள்.  இப்பொழுது இங்கிருந்து செல். நாளை  அரண்மனையில் பேசிக்கொள்ளலாம். உனது தங்கைகளுக்கு திருமணம் ஆகிவிட்டதை அறிவாயா?! உனது சால்வன் நலமா?! என தனது பதட்டத்தை மறைத்தபடி பீஷ்மர் கேட்டார்.

ஏன் இப்படி பதறுகிறீர்கள் பீஷ்மரே! உமக்கு வயதாகிவிட்டாலும் உடல் இன்னமும் வலுவாய்தான் உள்ளது. ஒருமுறை தொட்டு பார்க்கட்டுமா என அம்பை கேட்டாள். ச்ச்சீ பெண் என்பதை மறந்து பேசாதே அம்பை! என பீஷ்மர் கத்தினார்.  ஓ! நான் பெண் என்பது நினைவுக்கு வருகிறதா?! மாட்டை ஓட்டிக்கொண்டு வருவதுப்போல ஓட்டி வரும்போது தெரியவில்லையா?! சால்வனிடம் என்னை ஒப்படைத்துவிட்டேன் என எப்படி கதறினேன். எனது கதறலைவிட சபையோரின் கேலிப்பேச்சுதானே உங்களுக்கு முக்கியமானதாய் பட்டது?! வயதான தங்களது தந்தையின் காதலுக்கு முக்கியத்துவம் தந்த நீங்கள் எனது காதலுக்கு முக்கியத்துவம் தரவில்லையே!?  ஏன்?! என அம்பை கேட்டாள்.
உனது காதலுக்கு நான் முக்கியத்துவம் தரவில்லையா?! நீ அரண்மனையிலிருந்து வெளியேறுவது எனக்கு தெரியவந்தது. நான் நினைத்திருந்தால்  உன்னை அப்போதே தடுத்திருக்க முடியும். ஆனால், அப்படி செய்யாமல் நீ உன் காதலனை தேடிச்செல்ல மறைமுகமாய் அனுமதித்தேன் என்றார் பீஷ்மர்.

உங்களுக்குள் பெண்ணை மதிக்கும் குணம் இருப்பதைக்கண்டு நான் வியக்கிறேன். அது உண்மையானால் நான் வந்த வேலை சுலபமாயிற்று. சுயம்வர மண்டபத்திலிருந்து கவர்ந்து வந்த நீரே தர்மசாத்திரப்படி என்னை மணம் புரிய வேண்டும்' என்றாள். அது நடவாத காரியம். 'நான் பிரமச்சரிய விரதம் பூண்டுள்ளேன்' எனக்கூறி மறுத்தார்.  அப்படியெனில் என்னை ஏன் சிறையெடுத்தீர் என அம்பை கேட்டாள்.

எனது தம்பிக்காக என்றார் பீஷ்மர். அவன் என்ன பேடியா?! அவனுக்காக நீங்கள் சிறைப்பிடிக்க வந்தீர்?! என்றாள் அம்பை. வார்த்தையில் மரியாதை தேவை அம்பை. அவன் இந்த நாட்டின் மன்னன்.  இருக்கட்டுமே! பெண்ணை மதிக்க தெரியாதவன் அரசனாய் இருந்தால் என்ன?! ஆண்டவனாய் இருந்தால் என்ன?! அவனுக்கு மரியாதைதான் ஒரு கேடா?! என் தந்தை சுயம்வரத்துக்காய் ஓலை அனுப்பியது விசித்திரவீரியனுக்கு. ஆனால் அவனோ ஒரு அடிமையை பெண்ணை சிறைப்பிடித்து வர அனுப்பினான். அவனுக்கு மரியாதையை எப்படி கொடுப்பது என அம்பை சீறினாள்.
யாரை பார்த்து அடிமை என்றாய்?! என்றார் பீஷ்மர். உம்மை பார்த்துதான் பீஷ்மரே! அரசனுக்கு அடிபணிபவம் அடிமை மட்டுமல்ல தளபதியாயும் இருக்கலாமே! என்றார் பீஷ்மர். அது அடிமைக்கு இடப்பட்ட பெயர் என்றாள் அம்பை., அப்படியென்றால் அரசன் மகள் அடிமையை விரும்புவாளா?! ஆண்மையில்லாத அரசனை மறந்து அந்தபுரத்தில் வாழ்வதைவிட ஆண்மையுள்ள அடிமையை மணந்து கங்கைக்கரையில் மகிழ்ச்சியோடு வாழலாம் என நினைத்திருக்கலாமென அம்பை கூறினாள். அப்படியென்றால் அம்பிகையும் அம்பாலிகையும் மகிழ்ச்சியாய் இல்லையா என பீஷ்மர் கேட்க, கணவனை இழந்த தாயார் சத்யவதி சாப்பிடும் சாப்பாட்டைத்தான் இருவரும் சாப்பிடுவதாய் எனக்கு சேதி வந்தது என அம்பையின் சொல்லுக்கு மறுப்பேச்சின்றி நின்றார் பீஷ்மர்.... 
பதில் இல்லாது நின்ற பீஷ்மரை நோக்கி, எப்போது நமது திருமணம் என அம்பை கேட்க, நான் என் தாய்மீது சத்தியம் செய்துள்ளேன். அதனால் அது நடவாத காரியம். இது பீஷ்மர். அப்படியென்றால் எனது கதியென்ன எனக்கேட்டாள் அம்பை. அது உன் விருப்பம். இந்நேரம் உன் காதலனை தேடி நீ போகாமல் இருந்திருந்தால் உன்னை என் தம்பிக்கு திருமணம் செய்வித்திருப்பேன். அதை நீயே கெடுத்துக்கொண்டாய் என்றார் பீஷ்மர். இத்தனைக்கும் காரணம் நீர் என்பதை மறந்துவிட்டீர் பீஷ்மரே! பாதிக்கப்பட்டவன் பழிவாங்க தயங்கமாட்டான் என்பதை அறிவீரா பீஷ்மரே! எனக்கேட்டாள் அம்பை. 

யார் யாரை பழிவாங்குவது எனக்கேட்டார் பீஷ்மர். என் பெண்மையை மதிக்காத உம்மை , என் இந்நிலைக்கு காரணமான உம்மை, எத்தனை கெஞ்சியும் என் கெஞ்சலுக்கு செவிசாய்க்காத உம்மை நான் பழிவாங்கப்போகிறேன் என்றாள் அம்பை.   நான் சூரியன், நீ அகல்விளக்கு ,நீ என்னை எரிப்பதாய் சொல்வது அபத்தம் என்று ஏளனம் செய்தார் பீஷ்மர். அடர்ந்த கானகத்தை சாம்பலாக்க சிறு பொறி போதும் பீஷ்மரே!  உமது மரணம் என்னாலே நிகழும் என்பதை மறவாதே என சூளுரைத்து அங்கிருந்து புயலென கிளம்பினாள்.  பீஷ்மரின் மாளிகைக்குள் நுழையும்போது அவளிடமிருந்த அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு அகன்று மதங்கொண்ட யானையாய் அவ்விடம் அகன்றாள் அம்பை. சிங்கத்தின் நடையில் இருக்கும் கம்பீரமும் தீர்க்கமும் அவளது நடையில் இருந்தது. 
பீஷ்மரின் மாளிகையை விட்டு வெளியேறிய அம்பை,  பீஷ்மரை வீழ்த்தும் உபாயத்தை வேண்டி இமயமலை சாரலை அடைந்து, அங்குள்ள பாகூத நதிக்கரையில் கட்டை விரலை ஊன்றி நின்றுகடுந் தவம் செய்தாள். பன்னிரெண்டு ஆண்டுகள் நீடித்தன அவளது தவம். திக்கற்றவருக்கு தெய்வமே துணைன்ற வாசகத்துக்கேற்ப அம்பைக்கு முருகன் காட்சியளித்தார். அழகிய மாலை ஒன்றை அவளிடம் கொடுத்து.. 'இனி உன் துன்பம் தொலையும். அழகிய இந்த தாமரை மாலையை அணிபவனால் பீஷ்மர் மரணமடைவார்' எனக்கூறி முருகன் மறைந்தார்.

அந்த மலர்மாலையை சுமந்துக்கொண்டு அம்பை, சுயம்வரத்துக்கு வந்த மன்னர்கள் உட்பட பல அரசர்களிடம் சென்று 'இந்த மாலை அணிபவர் பீஷ்மரைக் கொல்லும் வல்லமை பெறுவார். யார் பீஷ்மரைக் கொல்கிறார்களோ. அவருக்கு நான் மனைவி ஆவேன். யாராவது இம்மாலையை வாங்கிக் கொள்ளுங்கள்' என வேண்டினாள். பீஷ்மரின் பேராற்றலுக்கு பயந்து யாரும் முன்வராத நிலையில் ஆண்டுகள் பல கடந்தன. அம்பைக்கும் வயதாகி, திருமணப்பருவம் கடந்தது. ஆனாலும் அம்பை தன் முயற்சியைக் கைவிடவில்லை. பாஞ்சால அரசன் துருபதனை சந்தித்து'துயரக்கடலில் மூழ்கியுள்ள என்னை கைத்தூக்கி விடுங்கள்' என்றாள். துருபதனும்பீஷ்மருடன் போராடும் ஆற்றல் எனக்கில்லை' என்று ஒதுங்கினான்.இனி ஒன்றும் செய்யமுடியாது என்ற நிலையில்அம்மாலையை அம்மன்னனின் மாளிகையில் போட்டுவிட்டு..'பெண்ணே!மாலை எடுத்துச்செல்' என்றுக்கூறிய மன்னனின் வார்த்தைகளையும் புறக்கணித்து வெளியேறினாள் அம்பைதுருபதனும், அம்மாலையை காத்து வந்தான்.அம்பை பின் ஒரு காட்டிற்குச் சென்று..அங்கு தவமிருந்த ஒரு முனிவரை சந்தித்தாள்.அவர்..அவளை பரசுராமரைப் பார்க்கச் சொன்னார்.
அம்பையும் பரசுராமரை சந்தித்து தன் நிலமையை எடுத்து சொன்னாள். பரசுராமரும் பீஷ்மரை சந்தித்து அம்பையை மணக்கச்சொல்ல பீஷ்மர் இணங்கவில்லை. ஆகவே இருவருக்குள் போர் மூண்டது. 23 நாட்கள் யுத்தம் நீடித்தது. இருவரும் வல்லமை மிக்கவர்கள் ஆனதால்..யார் வெற்றிப் பெறுவார் எனக்கூற இயலாத நிலையில் பரசுராமர் விலகிச் சென்றார். மீண்டும், தோல்வியுற்ற. அம்பைஆறு மாதம் உணவில்லாமலும், எட்டு மாதம் நீர் இல்லாமலும்,  அடுத்த ஒரு வருடம் யமுனை ஜலத்தினுள்ளும்,  காய்ந்த இலையை மட்டும் உண்டு ஒரு வருடம் என மொத்தம் 12 வருடங்கள் தவம் செய்கிறாள்.  .சிவன் அவளுக்கு காட்சி அளித்து பெண்ணே! உன் கோரிக்கை இப்பிறவியில் நிறைவேறாது. அடுத்த பிறவியில் அது நடக்கும். உன்னைக் காரணமாகக் கொண்டே பீஷ்மருக்கு மரணம் எற்படும்'என்று அவளை தேற்றினார். தனக்கு மரணம் நேர்ந்து, பின் மறுப்பிறப்பு எடுத்து வளர்ந்து வந்து எப்போது அவரை பழிதீர்ப்பது?! இதற்கு காலநேரம் அதிகமாகும் என்பதை உணர்ந்த அம்பை உடனே, தீமூட்டி  இறங்கி உயிர்தியாகம் செய்தாள் அம்பை. 
அம்பையே அடுத்த பிறவியில் பாஞ்சால தேசத்து மன்னனான துருபதனுக்கு மகளாய், பாஞ்சாலி எனப்படும் திரௌபதிக்கு சகோதரியாய் சிகண்டினியாய் பிறந்து வளர்ந்து வருகிறாள். அம்பையால் அரண்மனை வாயிலில் விடப்பட்டு, துருபதன் பாதுகாப்பில் அரண்மனையில் ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்த அந்த தாமரை மலர்மாலையை சிகண்டினி அணிந்து அழகுப்பார்க்க, அந்த மாலையிம் விவரத்தினை அவளுக்கு சொல்லி, இந்த மாலையை அணிந்தவரே பீஷ்மரின் மரணத்துக்கு காரணமாவார். அதுமட்டுமில்லாமல் பீஷ்மரின் கோவத்துக்கும் ஆளாக வேண்டிவருமென சொல்லி அவளை காட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தனர். காட்டில் விடப்பட்ட சிகண்டினி சிவனை நோக்கி தவமிருந்து ஆணாய் மாறும் வரம் கேட்டாள். சிவனும் அவ்வாறே அருள சிகண்டினி சிகண்டியாய் ஆனாள்.  ஆணாய் மாறிய  சிகண்டி அர்ஜுனனிடம் சேர்ந்து அவனுக்கு தேரோட்டியானான்/ள். அவனே/ளே குருஷேத்திர போரில் பீஷ்மரின்மேல் அம்புதொடுத்து அவரின் மரணத்துக்கு முன்னுரை எழுதியது..
எந்த தவறுமே செய்யாத பெண்ணொருத்தி, அலைக்கழிக்கட்டதன் விளைவு இது. மற்றவர்களுடைய நடத்தையினால் பாதிக்கப்பட்டு, மனம் நொந்து மாபெரும் சக்தியாய் உருவெடுக்கும்போது வேறு எந்த சக்தியும் அதன்முன் செல்லுபடியாகாது என்பதற்கு இந்த கதையே உதாரணம். யாராலும் வீழ்த்தமுடியாத பீஷ்மரையே வீணாய் அலைக்கழிக்கப்பட்ட  வீழ்த்தினாள். பெண்பாவம் பொல்லாததுன்னு இதுக்குதான் சொல்வாங்களோ என்னமோ!?

அதிகம் பேசப்படாத கதாபாத்திரத்தோடு வெளிச்சத்தின் பின்னே தொடரும்....
நன்றியுடன்,
ராஜி.

13 comments:

  1. தெரியாத கதை சகோ
    தொடர்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. இன்னமும் தெரியாத கதைகள் வரும்ண்ணே! தொடர்வதற்கு நன்றி

      Delete
  2. அறிந்த கதை.

    நீண்ட நாட்களாய் எனக்கொரு கேள்வி இதில். அம்பை சால்வனை எப்படி மன்னித்தாள்? அவன் பக்கமும் தவறிருக்கிறதே... இதை வைத்து நானும் ஒன்று எழுதவேண்டும் என்று அடிக்கடி நினைப்பதுண்டு!

    ReplyDelete
    Replies
    1. சால்வனின் மீது தவறு இல்லை. இன்னொரு அரசன் போரில் வெற்றவளை திரும்ப மணம் செய்வது மரபல்ல. இது தோல்வியுற்றவன், திருட்டுத்தனமாகக் கவர்வது போன்றது.

      Delete
    2. நான் சொல்லவேண்டிய பதிலை சகோ. நெல்லைத்தமிழன் சொல்லிட்டார்.
      அதுமட்டுமில்லாம மனைவியை/காதலியை சந்தேகிப்பதுங்குறது ஆணின் மரபுரீதியான பொதுகுணம். அவனை ஒன்னுமே சொல்லமுடியாது. சால்வன் இப்படி சந்தேகப்பட பீஷ்மர்தானே காரணம். பிரச்சனையின் ஆணிவேரே பீஷ்மர்தானே?! அதான் அவரை அம்பை பழிவாங்கினாள் .

      அதுமட்டுமில்லாம, சால்வனுக்கு தண்டனை கொடுக்கலைன்னு எப்படி சொல்லமுடியும்?! அவனுக்கு தண்டனை கொடுத்தாள்.. உருகி உருகி காதலித்து, மாற்றான் அரண்மனையிலிருந்து தப்பித்து காடுமலை, நதியெல்லாம் நடந்தே சால்வதேசத்துக்கு வந்து சால்வனை அம்பை சந்திக்க காரணம் சால்வன்மீதான அன்பு, காதல்,ஆசை... யாருக்காக இத்தனை கஷ்டப்பட்டாளோ, அவளே,அவனை எனக்கு வேண்டாம், இன்றிலிருந்து என்னைப்பொறுத்தவரை இறந்தவன்னு சொல்லி தூக்கிப்போட்டுட்டு போனாளே! இதைவிடவா சால்வனுக்கு இனியொரு தண்டனை கொடுக்கனும்?! புறக்கணிப்பைவிட கொடுமையான தண்டனை வேறெதும் இல்லைன்னு நான் நினைக்கிறேன் சகோ

      Delete
  3. தெரிந்த கதைதான்
    சொல்லிச் சென்ற விதம் அருமை
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  4. பாரதத்தின் இந்தக் கதை/பகுதி எனக்கு ரொம்பவும் பிடிக்கும். உணர்வுபூர்வமான, பீஷ்மர் சறுக்கிய இடம் இது. அம்பையின் வாழ்வு மிகப் பரிதாபகரமானதற்கு பீஷ்மர்தான் காரணமாகிவிட்டார். பொயடிக் ஜஸ்டிஸ் போல, அம்பையினாலேயே அவர் பிற்காலத்தில் வீழ்த்தப்படுகிறார்.

    ReplyDelete
    Replies
    1. எந்த தப்புமே செய்யாத அம்பை அலைக்கழிக்கப்பட்டு அவள் வாழ்வு எப்படியெல்லாமோ மாறிட்டுது.

      Delete
  5. என்ன கொடுமை சகோதரி இது...?

    ReplyDelete
    Replies
    1. எதுக்குண்ணே இந்த ஷாக்?!

      Delete
  6. விஜய் தொலைக்காட்சியின் மஹாபாரதத்தில் இந்த கதையை பார்த்திருக்கிறேன். ஒரு கதையை பார்ப்பதற்கும் படிப்பதற்கும் வித்தியாயசம் இருக்கும். அந்த கதையை படிப்பதில் தான் சுவாரசியம் இருக்கும். அந்த விதத்தில் தாங்கள் எழுதிய இந்த கதை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது சகோ. அருமை

    ReplyDelete
    Replies
    1. save பண்ணி வச்சுக்கோங்க. அடிக்கடி படிக்கலாம்

      Delete