Monday, September 24, 2018

பாம்புக்கு பால் வார்ப்பது ஏன் - ஐஞ்சுவை அவியல்

என்ன மாமா டல்லா இருக்கே?!


என்னன்னே தெரில ரெண்டு நாளாய் விக்கல் எடுத்துக்கிட்டே இருக்கு. எதையும் சாப்பிட முடில. சாப்பிட்டா விக்கல் வந்துடுமோன்னு ஒரு பயம். சாப்பிடாததால் டல்லா தெரியுறேன். அம்புட்டுதான். 


ம்ம்ம் ஊருக்கு போயிருந்த நான் உன் நினைப்பாவே இருந்தேனா?! அதான் உனக்கு விக்கல் எடுத்திருக்கு.  

ம்ம்ம் அப்புறம்?!

ம்ம் விழுப்புரம்..  நிஜமாதான் சொல்றேன் மாமா. நான் உன்னையே நினைச்சுட்டு இருந்தேனா?! அதான் உனக்கு விக்கல் எடுத்துச்சு. போன வாரம்லாம் நீ ஊருக்கு போயிருந்தியே! எனக்கு விக்கல் எடுக்கவே இல்ல, நீதான்  என்னை நினைக்கவே இல்லியே! அப்புறம் எப்படி எனக்கு விக்கல் எடுக்குமாம்?!


அடியேய்! இந்த டக்கால்டி வேலைலாம் என்கிட்ட வேணாம்.


நான் நினைக்கும்போதெல்லாம்
உனக்கு விக்கல் எடுப்பதென்றால்
இந்நேரம் நீ விக்கியே
செத்திருப்பாய்!!!

-ன்னு எனக்கு கவிதையாய் பேசத்தெரியும். ஆனா, எதார்த்தம் அதுவல்ல.   விக்கல் எடுப்பதும், புரை ஏறுவதும் எதுக்குன்னு எனக்கு தெரியும்.  நமது வயிற்றையும், மார்புப் பகுதியையும், ‘டயபரம்’ என்கிற உதரவிதானம் பிரிக்குது.  சிலநேரங்களில், அதன் தசைநார்கள் திடீரென்றும், தன்னிச்சையாகவும் சுருங்கி விரிந்து செயல்படும்போது விக்கல் உண்டாகுது. சாதாரணமா நாம் சுவாசிக்கும்போது காற்றை உள்ளுக்குள் இழுப்போம். அப்ப மார்புத் தசைகள் விரியும். மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் நுரையீரலை ஒட்டியுள்ள உதரவிதானமும் அப்ப விரியும். உடனே, தொண்டையில் உள்ள குரல்நாண்கள் திறக்கும். அப்ப நுரையீரலுக்குள் காற்றின் அழுத்தம் குறையும். . அந்த நேரத்துல நுரையீரலுக்குள் காற்று செல்ல அதிக இடம் கிடைக்கும். இதனால் நாம் சுவாசிக்கும் காற்று, திறந்த குரல்நாண்கள் வழியாகத் தங்கு தடையின்றி நுரையீரல்களுக்குள் நுழைந்துவிடும். இது எப்பவுமே நாம சுவாசிக்கும்போது நடக்குறது. 

ஆனா சிலநேரத்தில், மார்புப் பகுதியில் உள்ள நரம்புகள் உதரவிதானத்தை எரிச்சல்படுத்தினால், அது மூளைக் கட்டுப்பாட்டையும் மீறி, தன்னிச்சையாகத் திடீர் திடீரென்று சுருங்க ஆரம்பிக்கும். அப்ப,  குரல்நாண்கள் சரியாகத் திறக்காது. அந்த மாதிரி நேரங்களில் நாம் சுவாசிக்கும் காற்று குரல்நாண்களின் குறுகிய இடைவெளி வழியாகத்தான் நுரையீரல்களுக்குள் சென்று திரும்பனும். உள்ளுக்குள் நுழைஞ்ச  காத்து, புல்லாங்குழலில் காற்று தடைபடும்போது இசையொலி உண்டாவதைப் போல, தொண்டையில் ‘விக்... விக்...' ன்ற மாதிரியான ஒரு விநோத ஒலியை எழுப்பும். அதுதான் ‘விக்கல்'.
வேக வேகமா சாப்பிடுவது, ரொம்ப சூடா சாப்பிடுவது, தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததுதான் விக்கலுக்கு முக்கியக் காரணங்கள். வலிநிவாரணி மாத்திரைகள், ஸ்டீராய்டு மாத்திரைகளைச் சாப்பிட்டாலும் விக்கல் வரும். இரண்டு நாட்களுக்கு மேல் விக்கல் தொடர்ந்தால், அது நோய்க்கான அறிகுறி. உதாரணத்துக்கு, இரைப்பையில் அல்சர் இருக்கும்போது, சிறுநீரகம் பழுதாகி ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கும்போது விக்கல் வரும். உதரவிதானத்தில் நோய்த்தொற்று, கல்லீரல் கோளாறு, நுரையீரல் நோய்த்தொற்று, குடல் அடைப்பு, மூளைக் காய்ச்சல், கணைய அழற்சி, பெரினிக் நரம்புவாதம் போன்றவற்றாலும் விக்கல் வரும். விக்கல் வந்தால், மூச்சை நன்றாக உள்ளிழுத்து . 20 எண்ணும் வரை மூச்சை வெளியில் விடாமல் அடக்கிக்கனும்  பிறகு மூச்சை வெளியில்விட வேண்டும். இப்படி 5 முறை செய்தால் விக்கல் நின்றுவிடும். வேகமாக ஒரு சொம்பு குளிர்ந்த தண்ணீர் குடித்தால், விக்கல் நின்றுவிடும். ஒரு தேக்கரண்டி சர்க்கரையை நாக்கில் வைத்து அதைத் தானாகக் கரையவிட்டால், விக்கல் நிற்கும். ஏதேனும் ஒரு வகையில் தும்மலை உண்டாக்கினால், விக்கல் நிற்கும்.  ஒரு பிளாஸ்டிக் பைக்குள் மூச்சை விட்டு. பிறகு அந்தக் காற்றையே மீண்டும் சுவாசிக்கனும். இந்த மாதிரி 20 முறை செஞ்சா, ரத்தத்தில் கார்பன் டை ஆக்சைடு அதிகரித்து, விக்கல் நின்னுடும். பொதுவா ஒருவர் நிமிடத்திற்கு நான்கு முதல் 60 தடவைகள் விக்கலாம். குறைந்தளவு நேரம் மட்டும் நீடிக்கும் அத்தகைய விக்கல்களுக்கு எவ்வித மருத்துவ சிகிச்சையும் தேவையில்லை. ஆனா, விக்கலின் அளவு நீண்டுக்கிட்டே போனால் அவசியம் டாக்டரை பார்க்கனும்.  சில நிமிடங்கள் நீடிக்கும் விக்கலுக்கே பயந்துபோகிறோம். அமெரிக்காவில் சார்லஸ் ஆஸ்பார்ன் என்பவர் 68 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து விக்கல் எடுத்துக் கின்னஸ் ரிக்கார்டு செய்திருக்கிறார்ன்னா பார்த்துக்க. 

ம்க்கும். அப்படியா! என்னைதான் நினைச்சுக்கிட்டிருந்தியா?! நானும் உன்னைதான் நினைச்சுக்கிட்டிருந்தேன்னு ஃபார்மாலிட்டிக்குகூட சொல்லாத மனுசன்கூட அல்லாடனும்ன்னு என் தலையில் எழுதி இருக்கு. என்னதான் பாம்புக்கு  பால் வார்த்து வளர்த்தாலும் அது நேரம் வரும்போது கொத்தத்தான் செய்யும்..

ஏய்! இரு! இப்ப எதுக்கு இந்த டயலாக். பாம்பு பால் குடிக்கும்ன்னு யார் சொன்னது?!  பாம்பினுடைய நாக்கு பிளவுபட்டு இருக்குறதால பாம்பினால் பால் குடிக்க முடியாதுன்னு விஞ்ஞான ரீதியாக சொல்றாங்க. ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள், அப்பலாம்  மனிதர்களைவிட பாம்புகள்தான்  அதிகம் இருந்தன. ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை. அதனால், அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த பாம்புக்கு பால் ஊற்றினாங்க. பாலுக்கும் பாம்பின் இனப்பெருக்கத்துக்கும் என்ன காரணம்ன்னு பார்த்தால், பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசமான முறையில். பெண் பாம்பு தன்  உடலில் இருந்து ஒரு வித வாசனைத் திரவத்தை வெளிப்படுத்தும். அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பைத் தேடி வரும். இப்படி ஆண் பாம்பு, பெண்பாம்பை தேடி வராம தடுக்க, பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையைக்  கட்டுப்படுத்தும் வேலைக்காக, பாம்பு புத்தில் பால் முட்டையை ஊத்துனாங்க. பால் ,முட்டையிலிருந்து வரும் வாசனை பெண் பாம்பின் வாசனையை  தடுக்கும். எனவே, அதனால் இனப்பெருக்கம் செய்ய முடியாதுன்றதுதான் உண்மையான காரணம். அதைவிட்டு, நாகராஜா பால் கேட்டாரு, மாரியாத்தா முட்டை கேட்டால்ன்னு சொல்லிக்கிட்டு... 

முட்டைன்னு சொன்னதும்தான் எனக்கொரு சந்தேகம் வருது மாமா.  கோழியால் மட்டும் எப்படி பத்து, பதினைஞ்சு நாளுக்கு தினத்துக்கு ஒரு முட்டை போட முடியுது?! அதுமாதிரி மத்த எந்த மிருகமும் தொடர்ந்து தினத்துக்கு முட்டையோ குட்டியோ போடுவதில்லையே! இப்படி தினத்துக்கு ஒரு முட்டை போட்டால் அந்த கோழி உடம்பு என்னத்துக்கு ஆகும்?!

ஒரு மனித பெண் உடலில் 4 லட்சம்  வரை கருமுட்டைகள் உருவானாலும், அதில் முழு வள்ர்ச்சியடைய தகுதியான 400 மட்டுமேன்னு அறிவியல் சொல்லுது.   கரு முட்டை தானம் செய்யும் பெண்களுக்கு ஒரு விசேச ஹார்மோன் ஊசி போட்டு அதிக முட்டைகள் எடுப்பாங்க. அதேமாதிரிதான், நாட்டுகோழியில் ஒரு முறை கருவுறும் போது அதில் 10ல் இருந்து 15 முட்டை மஞ்சள் கரு உருவாகும்.  உண்மையில் அதுதான் முட்டை, அதை சுற்றி இருக்கும் வெள்ளை கரு, மஞ்சகரு கோழியாக உருவெடுக்கும் பொழுது அதற்கு இருக்கும் உணவு பொருள். அந்த மஞ்சள் கருவை சுற்றி கால்சியம் ஓடு அமையும் பொழுது அது முட்டையாக வெளி வரும், அவை தொடர்ச்சியாக 15 நாட்களுக்கு நாட்டு கோழிக்கு நடக்கும். பிராய்லர் கோழிக்கு இயற்கையான உடல் உறவு மூலம் முட்டை உருவாவது இல்லை, முன்னர் மனித பெண் கரு தானம் பெற விசேச ஹார்மோன் ஊசி போடுவார்கள்ன்னு சொன்னேனே!  அதேமாதிரிதான் பிராய்லர் கோழிக்கு ஊசி போடப்படும், அந்த கோழி தன் வாழ்நாளில் உருவாகும் முட்டையைவிட இரு மடங்கு முட்டையை தொடர்ச்சியாக வெளியேற்றும்.  முட்டை நின்றதும்  அதன்பின் அந்த கோழியால் பயனில்லை. அதனால், அதை இறைச்சுக்குன்னு வித்துடுவாங்க. ஒரு முட்டை ஈன்று 24 மணி நேரத்தில் மற்றொரு முட்டை  உருவாக தேவையாக அனைத்து சத்து பொருட்களும் கோழியின் உடம்பில் இருக்கு. அதில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால் அதனால் அப்படி தொடர்ச்சியாக முட்டையிட முடியாது, அதனால் தான் முட்டை கோழிகளுக்கு விசேச உணவு கொடுக்கப்படுகிறது. 

ரொம்ப பேசிட்டே. இந்த மீம்சை பார்த்து கொஞ்சம் ரிலாக்சாகிட்டு நான் கேட்கும் விடுகதைக்கு பதில் யோசிச்சு வை. அதுக்குள் உனக்கு விக்கல் நிக்க சர்க்கரையும், தண்ணியும் கொண்டாரேன். 

 மாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன ?


நன்றியுடன்,
ராஜி

15 comments:

 1. அடியாத்தி பாம்பு விசயம் இதுவா ?
  நிறைய விடயங்கள் அறிந்தேன் சகோ.

  ReplyDelete
  Replies
  1. விசயம் இதுதான்னு இப்பவாவது தெரிஞ்சுதாண்ணே!?

   Delete
 2. பாம்பு விஷயம் தெரியும். விக்கல் விஷயம் ஏறக்குறைய தெரியும். சுவாரஸ்யமான விஷயங்கள். விடுகதைக்கு இடை சொல்ல DDயை அன்புடன் அழைக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. இனி விடை சொல்ல உங்களுக்கு நோ பர்மிஷன் டிடி அண்ணா

   Delete
 3. பாம்பு விஷயம் கேள்விப்பட்டுள்ளேன். இப்போது சற்றே அதிகமாக அறிந்தேன்.

  ReplyDelete
  Replies
  1. இதும் அவசரத்துல அள்ளி தெளிச்சுதுப்பா.

   Delete
 4. ஒவ்வொன்றையையும் நன்றாகவே விளக்கி எழுதியுள்ளீர்கள்...

  ReplyDelete
 5. ஒரு மாறுதல் தேவையான சங்கதிகள் கொண்ட பதிவு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. அப்பப்ப உருப்படியான விசயமும் சொல்லனும்ல்ல!

   Delete
 6. நல்லா எழுதியிருக்கீங்க. ரசித்துப் படித்தேன்.

  ReplyDelete
 7. சுவையான அவியல். பாராட்டுகள்.

  ReplyDelete