Tuesday, September 04, 2018

முருங்கைக்கீரை சாம்பார் - கிச்சன் கார்னர்

முருங்கையை நட்டு வளர்ப்பவன் பசியோடு தூங்குவதில்லைன்னு நம்மாழ்வார் சொல்வார். வருடத்தைல் எல்லா நாளிலும் கிடைக்கும் கீரை இது. அதும் பைசா செலவில்லாம கைக்கு அருகாமையிலேயே கிடைக்கும் இந்த கீரை  கிட்டத்தட்ட 300 வியாதிகளுக்கு  மருந்தாகிதாம். முருங்கைக் கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டுவர உடல் சூடு தணியும். முருங்கைக்கீரையை சாப்பிட்டு வந்தால் வெப்பத்தின் காரணமாக முடி உதிர்வது நிற்கும். முடி நீண்டுவளரும். நரை முடி அகலும்.தோல் வியாதிகள் நீங்கும். முருங்கைகீரையில் இரும்புச் சத்து,  தாமிரம்,  சுண்ணாம்புசத்து  அதிகளவு இருக்கு.  முருங்கையின் அனைத்து பாகமும் மருந்தாகிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும். முருங்கைக்காய் உடலுக்கு நல்ல வலுவினை கொடுக்கும். சிறுநீரகம் பலப்படும்.  விந்துவில் உயிரணுக்கள் அதிகரிக்கும். அதனாலாயே முருங்கைக்கீரைக்கு விந்து கட்டின்னு பேர்.  முருங்கைக்கீரை, காய் நாள்பட்ட கோழையையும் அகற்றும். முருங்கைக்கீரையின் துளிர்களை காம்புடன் சேர்த்து நசுக்கி ரசம் வைத்தால் உடல்வலி நீங்கும். 

முருங்கைக்கீரையை நெய்யில் வதக்கி ரத்தசோகை நீங்கும். ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். பல் கெட்டிப்படும்!!. ரத்த சீதபேதி கட்டுப்படும்.  வயிற்றுப்புண், தலைவலி, வாய்ப்புண்லாம் ஆறும்.  முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியினை போக்கும்.  முருங்கைக்கீரையை துவரம்பருப்பு, தேங்காய் துருவலோடு சேர்த்து பொரியலாக்கி சாப்பிட்டால் கருப்பை பலம்படும். தாய்ப்பால் சுரக்கும். 

100 கிராம் முருங்கைக்கீரையில்  92 கலோரி இருக்கு. நீர் சத்து  75.9%, புரதம்  6.7%,  கொழுப்பு  1.7%, தாதுக்கள்  2.3%, கார்போஹைட்ரேட்கள்  12.5%, கால்சியம் 440 மி.கி,  பாஸ்பரஸ்  70 மி.கி, இரும்பு சத்து  7 மி.கி, வைட்டமின் சி 220 மி.கி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்ன்னு ஏகப்பட்ட ஐயிட்டம் முருங்கைக்கீரையில் இருக்கு.  ஆனா, நமக்குதான் நல்லதுலாம் பிடிக்காதே!!!

ஈசியா செய்யக்கூடிய முருங்கைக்கீரை சாம்பார் செய்முறையை பார்க்கலாம்...

தேவையான பொருட்கள்
துவரம்பருப்பு
முருங்கைக்கீரை  100  கிராம்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 10பல்
மிளகாய் தூள்
உப்பு
பெருங்காயத்தூள்
எண்ணெய்
கடுகு
காய்ந்த மிளகாய் - 1
கடுகு
புளித்தண்ணி

முருங்கைக்கீரையை இலை இலையாய் இல்லாம காம்போடு சேர்த்து ஆய்ஞ்சுக்கனும். புளியை ஊற வச்சுக்கனும்.  வெங்காயத்தை தோல் நீக்கி கழுவி வெட்டிக்கனும். தக்காளியையும் கழுவி வெட்டிக்கனும். பூண்டை உரிச்சு நசுக்கிக்கனும்.  துவரம்பருப்பை மஞ்சப்பொடி சேர்த்து வேக வைக்கனும்.
துவரம்பருப்பு குழைய குழைய வேக வைக்கனும்ன்னு இல்ல. நல்லா மலர வெந்தால் போதும். அதோடு மிளகாய் தூளை பேருக்கு சேர்க்கனும். 

 வெட்டி வச்ச வெங்காயம், தக்காளியை சேர்த்துக்கனும்.

 பூண்டை நசுக்கி சேர்த்து கொதிக்க விடனும்.


முருங்கைக்கீரைய சேர்த்துக்கனும்.  முருங்கைக்கீரையோடு உப்பு சேர்த்து கொதிக்க விடனும்.  

 மிளகாய் தூள் வாசனை போய், முருங்கைக்கீரை வெந்ததும் புளித்தண்ணியும், பெருங்காயப்பொடியும் சேர்த்துக்கனும்.
சாம்பார் கொதிச்சிட்டு இருக்கும்போதே இன்னொரு வாணலியில் எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் கடுகு போட்டு வெடிச்சதும் தோளோடு நசுக்கிய பூண்டு, கிள்ளிய காய்ஞ்ச மிளகாய் போட்டு தாளிச்சு கொட்டி இறக்கிடனும். கருவடகம் போட்டு தாளிச்சா இன்னும் சூப்பரா இருக்கும்.  இந்த சாம்பார் நீர்க்க இருந்தால்தான் நல்லா இருக்கும். 

முருங்கைக்கீரையை முன்னலாம் அலச மாட்டாங்க. மரத்துல இருக்கு அசுத்தம் சேராதுன்னும், கீரையை கழுவினால் சத்து போய்டும்ன்னு சொல்வாங்க. ஆனா, இப்பலாம் காத்துல ஏகப்பட்ட கிருமிலாம் இருக்கு. அதனால் கழுவியே சேருங்க. மத்த கீரைகளை போல லேசில் அலசிடமுடியாது. கைகளில், பாத்திரத்தில் ஒட்டிக்கும். அதனால்தான் கழுவக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க போல!   பருப்பு சேர்க்காம அரிசி கழுவிய 2 அல்லது 2 வது தண்ணில இந்த சாம்பாரை அம்மா செய்வாங்க. அத்தனை வாசமா இருக்கும்.  எத்தனை மசாலாக்கள் சேர்த்தாலும் அந்த ருசியும், மணமும் எனக்கு வருவதில்லை :-(

நன்றியுடன்,
ராஜி

16 comments:

 1. முருங்கைக்கீரை சாம்பார் இங்கேயும் அடிக்கடி உண்டு. ஆனால் பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்க்காமல்! சாம்பார்ப் பொடி போட்டு! நீங்க செய்திருப்பதும் சுவை தான். அடையும் பண்ணுவேன்.

  ReplyDelete
  Replies
  1. எங்க வீட்டில் அடையும் ராகி களியும்தான் அதிகம் செய்வோம்

   Delete
 2. எனக்கு முருங்கைக் கீரை பிடிக்காது என் மனைவி சமைக்கும் போது ஆடுகள் உணவை எனக்குத் தருகிறாய் என்றுகேலி பேசுவேன்

  ReplyDelete
  Replies
  1. அவ்வ்வ் நீங்களே இப்படி சொன்னால் பிள்ளைகள்லாம் என்ன சொல்லும்?!

   Delete
 3. அம்மா எது செய்தாலும் அமிர்தம் தான்...!

  ReplyDelete
 4. அருமையான குறிப்பு

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

   Delete
 5. நல்ல குறிப்பு. முன்பு வீட்டிலேயே மரம் இருந்தது. செவ்வாய் கிழமைகளில் சந்தை சென்று தான் காய்கறி வாங்குவோம். அது ஞாயிறு திங்களில் தீர்ந்து விட அம்மா முருங்கையை நாடுவார்! முருங்கைக் கீரை, காய், பூ என அனைத்திலும் சமையல் உண்டு! :)

  ReplyDelete
  Replies
  1. கீரை சமைக்கும்போது அம்மா பூவையும் சேர்த்து செய்வாங்க. தனியாய் முருங்கைப்பூவை சமைச்சதில்லை.

   Delete
 6. மிகவும் பிடித்தமானது

  ReplyDelete
  Replies
  1. உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதும்கூட....

   Delete
 7. எனக்கும் ரொம்ப பிடிக்கும் கா..

  தக்காளி 3 சேர்த்து புளி போடாம ....வடாம் தாளித்து செய்வேன்...ராகி களி க்கு அருமையா இருக்கும்...

  ReplyDelete
  Replies
  1. எங்க வீட்டிலும் அம்மா செய்வாங்க. ராகி களி செய்ய இன்னும் எனக்கு கைகூடல

   Delete
 8. உங்கள் பதிவுகளை http://valaippookkal.com தமிழ் திரட்டியில் இணைத்து உங்கள் எண்ணங்களையும், கருத்துகளையும் உலகமெங்கும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறோம்

  ReplyDelete
 9. அட்டகாசமான அவசியமான சமையல் குறிப்பு...

  ReplyDelete