Monday, September 17, 2018

புரட்டாசி மாசத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது. ஏன்?! - ஐஞ்சுவை அவியல்

மாமா! இன்னிக்கு புரட்டாசி மாசம் ஆரம்பிச்சுட்டுது. இது பெருமாளுக்கு உகந்த மாசம். அதனால், எதாவது பெருமாள் கோவிலுக்கு போய் வரலாமா?! திருப்பதிக்கு போய் வரலாம்ன்னா கூட்டமா இருக்குமே! 

புரட்டாசி விரதம் ஏன்? எதுக்கு? எப்படி கும்பிடனும்ன்னு தெரியுமா?!

எல்லாம் தெரியும். இருந்தாலும் லெக்சர் கொடுக்குறதுன்னா உனக்கு பிடிக்குமே! அதனால் எப்பயும் போல நீ சொல்லு மாமா! நான் கேட்டுக்குறேன். 
நாறு நறும் பொழில் 
      மாலிருஞ்சோலை நம்பிக்கு நான் 
நூறு தடாவில் வெண்ணெய் 
      வாய்நேர்ந்து பராவி வைத்தேன் 
நூறு தடா நிறைந்த 
      அக்கார அடிசில் சொன்னேன் 
ஏறு திருவுடையான் 
      இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ?      
தடான்னா பானை. நூறு பானை வெண்ணெய், நூறு பானை அக்கார அடிசில்(சர்க்கரை பொங்கலில் ஒருவிதம்)  சமர்ப்பிதாகவும், அதை பகவான் ஏற்றுக்கொள்ள வேணுமென ஆண்டாள் வேண்டிக்கொண்டாள். 

இந்த வரிகளை படிக்கும்போது ராமாஜுனருக்கு ஆண்டாள் வேண்டுதல் நிறைவேறிச்சான்னு ஒரு சந்தேகம் உண்டானது.   அதனால் ஆண்டாள் சார்பா    நூறு அண்டா வெண்ணெயும், நூறு அண்டா அக்காரவடிசலும் நிவேதனம் செய்து அழகரை ஆராதனை செய்தார். ஆண்டாளின் வேண்டுதலை தானே நிறைவேற்றினார். அதனால், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அவர் வந்தபோது, வாசலுக்கே ஓடிவந்து, வாருங்கள் அண்ணா...! என்று கூப்பிட்டாளாம் ஆண்டாள்.  இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வருடத்துக்கு ஒருமுறை இந்த சம்பவத்தை  கொண்டாடுகிறார்கள். அதனால், புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு அக்கார வடிசல் செய்து வணங்கினால் பெருமாளிடம், நாம் என்ன கேட்டாலும் கிடைக்கும்

பெருமாளுக்குரிய கிரகமான புதன் கன்னி ராசியில் புகுவதும், உச்சம் பெறுவதும் புரட்டாசியில் நிகழ்கிறது. அதே நேரம் புரட்டாசி மாதத்தில்தான் சூரியனும் கன்னி ராசியில் புகுகிறது.  புதனுக்கு சனிபகவான் நட்பு கிரகம். அதனால் சனிக்கிழமைகளில்  பெருமாளை ஆராதனை செய்தால் சனியின் சங்கடத்திலிருந்து  பெருமாள் நம்மைக் காப்பார்ன்னுதான் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து வேண்டிக்குறாங்க.  புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும்ன்னு  சொல்லப்படுவதால் புரட்டாசி மாசம் விரதம் இருக்காங்க.

புரட்டாசி  சனிக்கிழமையில்தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.   இங்கு பீமன் என்ற குயவர் திருப்பதி மலையடிவாரத்தில் வசித்தார். இவர் பெருமாள் பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம்  இருப்பதாக சங்கல்பம் எடுத்துக்கிட்டார். ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலில் மூழ்கிக் கிடப்பார்.  சனிக்கிழமைகளில் கோயிலுக்கு போக நேரம் இருக்காது. போனாலும் பூஜை முறையும் தெரியாது. தப்பித்தவறி போனால், "" பெருமாளே, நீயே எல்லாம் என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு வந்து விடுவார். ஒருமுறை மனதில் ஒரு எண்ணம் உதித்தது. பெருமாளைப் பார்க்க கோயிலுக்கு போக நேரமில்லை. பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன என்று யோசித்தார்.
படபடவென களிமண்ணால் ஒரு சிலையைச் செய்தார். பூ வாங்குமளவுக்கு அவரிடம் பணம் கிடையாது. எனவே, தான் வேலை செய்து முடித்த மீந்து விடும் மண்ணை சிறு சிறு பூக்களாகச் செய்து அதைக் கோர்த்து சிலையின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார். அவ்வூர் அரசர் தொண்டைமானும் பெருமாள் பக்தர். அவர், சனிக்கிழமைகளில் தங்கப்பூ மாலை ஒன்றை அணிவிப்பார். ஒருமுறை இப்படி அணிந்து விட்டு, மறுவாரம் வந்தார். பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை தொங்கியது. பட்டர்கள்தான் ஏதாவது தவறு செய்கிறார்களோ என குழப்பத்தில் சென்றார். அன்று கனவில் தோன்றிய பெருமாள், நடந்ததைச் சொன்னார். அந்த குயவரின் இல்லத்திற்கு நேரில் சென்ற அரசர், அவருக்கு வேண்டிய அளவு பொருளுதவி செய்தார். அப்பொருளைக் கண்டும் மயங்காமல், பெருமாள் பணியே செய்து வந்த குயவர் இறுதிக்காலத்தில் வைகுண்டத்தை அடைந்தார். பெருமாளின் ஆணைப்படி, அந்த பக்தரைக் கவுரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம் செய்யப்படுகிறது.

 திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம். இயன்றவர்கள் திருப்பதிக்கே சென்று வேங்கடவனை வணங்கலாம். இல்லையேல் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருப் படத்தை வைத்தும் கும்பிடலாம். புரட்டாசி சனிக்கிழமைகளின் காலையில் புத்துருக்கு நெய்யை பெரிய உருளியில் இட்டு, தூய பருத்தியினை  ஒரு புதிய துணியில் வைத்து திரி போல் செய்து உருளியில் உள்ள நெய்க்கு நடுவே வைத்து அதை தீபமாக ஏற்றி மலையப்பனாக ஆவாஹனம் செய்து, இந்த தீபத்திற்கு வெங்கடேச சஹஸ்ரநாமம் சொல்லி  அர்ச்சனை செய்வர். துளசி, சாமந்தி மலர்கள் விசேஷம். இந்த தீபம் மாலை வரை எரியும். பின் மாவிளக்கும் ஏற்றி, மாலையில்  சர்க்கரைப் பொங்கல், வடை, எள் சாதம் முதலியன நிவேதனம் செய்வது வழக்கம். பூஜைக்குபின்  அன்னதானம் செய்வது மிக முக்கியம். இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும். பெரும்பாலும் புரட்டாசி சனிக்கிழமைகளில் திருப்பதி வெங்கடேசப்பெருமாளை நினைத்து வழிபடும் விழாவானதால், அன்று வீட்டிலுள்ள பிள்ளைகளின் நெற்றியில் நாமம் இட்டு, அவர்கள் கையில் நாமமிட்ட பாத்திரம் ஒன்றை அளித்து, நாலைந்து வீடுகளுக்குச் சென்று பிட்ஷை எடுத்து வரச் சொல்லுவர்.  அப்படி கொண்டுவந்த அரிசியை கொண்டு பொங்கல், விதம்விதமான காய்கறிகள், வடை, பாயாசம் என நைவேத்யம் செய்வர். ஆனாலும், அன்போடு ஒரு துளசி இலையை கொடுத்தாலும் ஏற்பேன் என கண்ணன் தன் அவதாரத்தில் சொல்லி இருக்கார். 

புரட்டாசி மாதம் முழுவதுமே அசைவம் சாப்பிடாம இருக்குறது நல்லது. இயலாதவர்கள் சனிக்கிழமை மட்டுமாவது அசைவம் சாப்பிடாமல் இருக்கலாம். புதன் சைவத்திற்குறிய கிரகம் ஆதல் அசைவம் சாப்பிடக்கூடாது பெருமாளை நினைத்து விரதமிருந்து துளசி நீர் குடிக்க வேண்டும் என சாஸ்திரம் கூறுது. புரட்டாசி மாதத்தில் பிரண்டையும் காயும்ன்னு சொல்வாங்க. பிரண்டை தண்ணீர் இல்லாமல்கூட வளரும்.  அப்பேற்பட்ட பிரண்டையே இந்த மாசத்தில்  காயும்  அளவிற்கு புராட்டாசியில் வெயில் இருக்கும்.   சைவ உணவு நமது உடலிற்கு எல்லா வகையிலும் உகந்தது. இந்த மாதிரியான வெயில் காலங்களில் அசைவ உணவுகளைத் தவிர்த்தால் நமக்கு நல்லது.  இதில்லாம, புரட்டாசி மாதம் புதனுடைய வீட்டில் சூரியன் இருக்கக்கூடியது. புதன் என்பது ஒரு சாத்வீகமான கிரகம். செளமியன் என்று புதனைக் குறிப்பிடுவது உண்டு. செளமியன் என்றால் சாது. சாத்வீகமானவர், அதிர்ந்து கூட பேசமாட்டார் ன்னு பொருள். என்று சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் அதிகாலை எழுந்து நெற்றியில் திருநாமம் தரித்து ‘ஓம் நமே நாராயணாய’ என்ற திரு மந்திரத்தை ஓதி நாராயணனை வழிபட வேண்டும். அன்று ஒரு பொழுது மட்டுமே உணவு எடுத்துக் கொள்வது நல்லது. அதுவும் சாத்வீகமான எளிய உணவாக இருத்தல் வேண்டும். உப்பு சப்பில்லாத துவர்ப்பு சக்தி அதிகமுள்ள உணவுகளெல்லாம் புதனுடைய உணவு. இந்த புதனுடைய உணவாக அசைவ உணவுகள் வரவே வராது. காய், கனிகள், பிரசாதங்கள் இதுபோன்ற உணவுகளெல்லாம்தான் புதனுக்கு வரும்.  அதனால்தான் அந்த மாதத்தில் அசைவ உணவுகள் தவிர்க்கப்படுகிறது.  

இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது. இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும்.அதனால் தான் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை ஒதுக்கினர் நம் முன்னோர். அது மட்டுமன்றி சரிவர பெய்யாத மழை திடீர் வெப்ப மாறுதல் நோய்கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல் சளி தொந்தரவு அதிகரிக்கும்ன்றதாலயும் புரட்டாசி மாதத்தில் அசைவம் தவிர்க்கப்படுது.


 புரட்டாசி சனிக்கிழமைகளில் சொல்ல வேண்டிய விஷ்ணு காயத்ரி மந்திரம் :
ஓம் நாராயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்

இந்த மந்திரத்தை தினமும் சொல்வதால், ஆபத்துகளில் இருந்து விடுபடலாம். பாவங்கள் அகலும். நல்ல குணமும், அழகும் கொண்ட சந்ததிகள் உருவாகுவார்கள்ன்னு ஐதீகம்.

நான் உன்னை புரட்டாசி மாசம் பொறந்துடுச்சே! கோவிலுக்கு போகலாமான்னுதானே கேட்டேன். அதுக்கு எதுக்கு புரட்டாசி மாசம் முடியுமளவுக்கு லெக்சரர் கொடுக்குறே?!

இதுவே உனக்கு லெக்சரா?! புரட்டாசி பத்தியும், பெருமாள் மகிமையையும், பெருமாள் கோவில்களில் வழிப்பட வேண்டிய முறைகளையும் பார்க்கப்போறோமே அதுக்கு என்ன சொல்வே?!

நன்றியுடன்,
ராஜி

16 comments:

  1. தகவல்கள் சிறப்பு.

    ReplyDelete
  2. மிக அருமையான பதிவு.
    புரட்டாசி மாதம் சிறப்பாக ஆரம்பித்து விட்டது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்மா. வீடு தேடி திருப்பதி லட்டு வீடு தேடி வந்துச்சும்மா.

      Delete
  3. சிறப்பான தகவல்கள்.

    இந்த மாதத்தில் சனிக்கிழமைகளில் நண்பர்கள் இல்லங்களில் "தளுவ" போடறேன்... சாப்பிட வாங்க" என்று அழைப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. எங்க வீட்டிலும் இந்த வாரம் (22/9/18)அன்னிக்கு தளுகை போடுறோம், வந்துடுங்க. செமையா இருக்கும்.

      Delete
  4. அசைவ உணவைத் தவிர்க்கச் சொல்வதற்கான காரணம் அறிந்து மகிழ்ந்தேன் சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. நானும் பெருமாளுக்காகத்தான் அசைவம் சாப்பிட கூடாதுன்னு சொல்றாங்கன்னு நினைச்சேன். உண்மையான காரணம் இப்பதான் தெரியும்ண்ணே.

      Delete
  5. Replies
    1. எல்லாமே கேட்டது, படித்ததுண்ணே

      Delete
  6. மிக அவசியமான தகவல்கள் ராஜிக்கா...

    ReplyDelete
    Replies
    1. வெறுமனே சாமி கும்பிட்டால் எப்படி?! காரண காரியத்தை தெரிஞ்சுக்கனும்ல்ல!

      Delete
  7. நான் என்றைக்குமே அசைவம் உண்பது கிடையாது

    ReplyDelete
    Replies
    1. விரத நாட்கள், அனைத்து சனிக்கிழமைகள், புரட்டாசி மாசத்தில் மட்டுமே நான் சைவம்ப்பா,

      Delete
  8. பல அரிய தகவல்களுடன் சிறப்புப் பதிவு அருமையிலும் அருமை வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாட்கள் கழித்த வருகைக்கும், கருத்துக்கும் நன்றிப்பா

      Delete