Wednesday, September 05, 2018

ஆசிரியர் தின கொண்டாட காரணமானவர்

நம் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொருவரும் நமக்கொரு பாடத்தை கத்து கொடுத்துட்டு போவாங்க. அவங்கக்கிட்ட இருந்து பாசம், அன்பு, உழைப்பு, நேர்மை, துரோகம்ன்னு விதம்விதமா வாழ்க்கை  பாடத்தை கத்துக்குவோம்.  வாழ்க்கை பாடத்தை நாமளே கத்துக்கிட்டாதான் உண்டு. ஆனா, ஏட்டு படிப்பை கத்துக்கொடுக்க ஆசிரியர்கள் வேணும். அந்த ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமா ஒவ்வொரு வருடமும் செப் 5 ஆசிரியர் தினமா இந்தியாவில் கொண்டாடப்படுது. அது ஏன் செப் 5ல கொண்டாடுறாங்கன்னு தெரிஞ்சுக்கனும்ன்னா, முன்னாள் ஜனாதிபதி தத்துவமேதை டாக்டர். ராதாகிருஷ்ணன் அவர்களை பத்தி தெரிஞ்சுக்கனும். . 
டாக்டர் ராதாகிருஷ்ணன்  அன்றைய   திருத்தணிக்கு அருகிலிருக்கும்  சர்வபள்ளின்ற ஊரில்  1888ம் வருடம், செப்டம்பர் 5ம் நாள் தெலுங்கு பிராமண குடும்பத்தில் பிறந்தார்.  இவர் தந்தை பெயர் வீராசாமி, தாயார் சீதம்மா. இவர் தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்டவர். ஏழைக்குடும்பத்தில் பிறந்த இவர், அரசு உதவித்தொகையில்தான் தனது படிப்பை தொடர்ந்தார்.  ஆரம்பக் கல்வியைத்  திருவள்ளூரிலுள்ள ‘கௌடி’  பள்ளியிலும்,  பின்னர் திருப்பதியிலுள்ள ‘லூத்தரன் மிஷன் உயர் பள்ளியிலும்’ படித்தார். அவர் வேலூரிலுள்ள ஊரிஸ் கல்லூரியில் சேர்ந்த பின், சென்னையிலுள்ள கிறிஸ்துவர் கல்லூரிக்கு மாறினார். தத்துவத்தை முதல் பாடமாக தேர்ந்தெடுத்த அவர், அதில் இளங்கலை (பி.ஏ) மற்றும் முதுகலைப் பட்டமும் (எம்.ஏ) பெற்றார்.
தன் கல்லூரி படிப்பை முடித்ததும்  கல்வித் துறையில் அரசு ஊழியராகச் சிறிது காலம் பணியாற்றினார். பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் 1909 ஆம் ஆண்டு தத்துவ இயல் துறையில் பணிக்குச் சேர்ந்தார். கல்வி கற்பித்தலில் பட்டம் பெறுவதற்கு சைதாப்பேட்டை ஆசிரியர் கல்லூரியில் பயிற்சி பெற்றார். பயிற்சி முடிந்ததும் சென்னை மாநிலக் கல்லூரியே  இவரை சேர்த்துக்கொண்டது. டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன், மாணவர்களால் சிறந்த ஆசிரியர் என்று அழைக்கப்பட்டார். மாணவர்களின் நலனிலும், முன்னேற்றத்திலும், தனி அக்கறை காட்டினார். ஆசிரியர்களுக்கு எல்லாம் ஆசிரியராக சிறந்து  விளங்கினார்.
ஆசிரியர் பணியோடு ’பன்னாட்டு அறிவியல்’, ‘ஆசியவியல் மறுசீராய்வு’ போன்ற பன்னாட்டு இதழ்களுக்கு ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதினார்.  மைசூர் பல்கலைக்கழகத்தில் தத்துவ இயல் பேராசிரியராக 1918ம் ஆண்டு பொறுப்பேற்றார். பின்பு கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும்போது,  மகாகவி இரவீந்தரநாத் தாகூருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை பெற்றார். அங்கு தத்துவ இயல் பேரவையைத் தோற்றுவித்தார். அந்தப் பேரவையில் நிகழ்ந்த முதல் சொற்பொழிவாற்ற இரவீந்திரநாத் தாகூரை அழைத்தார்.
லண்டனில்  நடைபெற்ற பிரிட்டிஷ் பேரரசுப் பல்கலைக்கழகங்களின் பேரவைக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு, கல்கத்தா பல்கலைக்கழகத்தின் சார்பாக கலந்து கொண்டார். அங்கு, மான்செஸ்டர் கல்லூரியில் சொற்பொழிவாற்றினார். அவரது அறிவார்ந்த சொற்பொழிவுகள் அங்கு கூடியிருந்த அறிஞர் பெருமக்களிடையே  பாராட்டினை பெற்றது. சிகாகோ நகரில் ஹாஸ்கெல் சொற்பொழிவுகளை ஆற்றினார். ஹார்வார்டில் நடைபெற்ற பன்னாட்டுத் தத்துவப் பேரவையில் கலந்து கொண்டு, ‘உலக நாகரிகங்களை வளர்ப்பதில் தத்துவத்தின் பங்கு’ன்ற தலைப்பில்  சொற்பொழிவை நிகழ்த்தினார்.
கல்கத்தா பல்கலைக்கழகத்தின் முதுகலை கல்விக் கழகத்தின் தலைவராகவும், பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினராகவும், பல்கலைக்கழக அமைப்பாண்மைக் குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். புகழ் பெற்ற பெனராஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம் பெற்றர். அப்போது, நாட்டின் விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்தது. அடக்கு முறையை எதிர்த்து மாணவர்கள் கிளர்ந்து எழுந்தனர்; பிரிட்டிஷ் அரசு பல்கலைக்கழக வளாகத்திற்குள் இராணுவத்தை அனுப்பி, மாணவர்களை ஒடுக்க முயன்றது. ஆனால் துணை வேந்தராய் இருந்த டாக்டர். எஸ்.இராதாகிருஷ்ணன், நாட்டுப்பற்று மிக்க நல்லறிஞர் என்பதால், மாணவர்கள் சார்பாக நின்றார். இராணுவம் பல்கலைக் கழகத்திற்குள் நுழைவதைத் தடுத்து நிறுத்தினார்.
திருத்தணியில் அவரை கௌரவிக்கும்பொருட்டு... 
வால்டேரில் உள்ள ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகப் பணியாற்றிய போது, அந்தப் பல்கலைக்கழகத்தினைத் தனித்தகுதி பெற்ற கல்வி நிறுவனமாக உயர்த்தினார். அப்பல்கலைக்கழகத்தில் சிறந்த நூலகத்தையும் உருவாக்கினார். கீழ்த்திசைச் சமயங்களுக்கான பேராசிரியராக ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். பிரிட்டிஷ் கழகத்தில், 1937 ஆம் ஆண்டு புத்தரைப் பற்றி ‘தலைமை ஞானி’ என்ற தலைப்பில் உரை நிகழ்ந்தினார்.
டாக்டர். ராதாகிருஷ்ணன் பெயரில் ஆண்கள் பள்ளி
ந்தியா விடுதலை பெற்றவுடன் டாக்டர். எஸ். இராதாகிருஷ்ணன் தலைமையில் கல்வி நலன் சார்ந்த பத்து உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழுவை இந்தியாவில் உள்ள இருபத்தைந்து பல்கலைக்கழகங்களுக்கு அழைத்துச் சென்றும், நேரில் ஆய்வு செய்தும், சிற்ப்பான அறிக்கையை அரசுக்கு அளித்தார். அந்த அறிக்கை தற்கால இந்தியக் கல்வி முறைக்கு நல்வழிகாட்டும்  துணையாக இன்றும் விளங்குகிறது. உயர்கல்வி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் களைவதற்கும், கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கும் அக்குழுவின் பரிந்துரைகள் துணை நிற்க்கும். ஆனா, இக்குழுவின் பெரும்பாலான பரிந்துரைகளின்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவை செயல்படுத்தப்படாததால், உரிய பலனைத் தராமல் தூசு படிந்து இன்றைய கல்வித்துறையே பாழ்ப்பட்டு கிடக்குது.
ரஷ்யாவிற்கான இந்தியத் தூதராக டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் 1949ம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். “இந்த மனிதர் பிற வழக்கமான தூதுவர்களைப் போல இல்லை. இவர் தனது இதயத்தில் மனித நேயமும், அன்பும் கொண்டவர்” என்று ரஷ்ய நாட்டுத் தலைவர் ஸ்டாலின் இவரைப் புகழ்ந்துள்ளார். இந்தியக் குடியரசின் துணைத்தலைவராக டாக்டர். இராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு 1954 ஆம் ஆண்டு ‘பாரத் ரத்னா’ விருது வழங்கப்பட்டது. இந்தியக் குடியரசுத் தலைவராக 1962 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டாக்டர். ராதாகிருஷ்ணன் ஆண்கள் பள்ளியின் ஒரு தோற்றம்
1967ல் ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.  தனது 86வது வயதில், ஏப்ரல் 17, 1975ம் ஆண்டு சென்னையில் காலமானார். இவர் பிறந்த தினமான செப்டம்பர் 5 ஆம் நாளை ஆசிரியர் தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுது. இவரது பெயரில் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதும் வழங்கப்படுது. 
42 முறை பட்டம் பெற்ற இவருக்கு பாரதிய வித்யாபவன் தலைவர் கே.எம் முன்ஷி, டாக்டர். எஸ்.இராதாகிருஷ்ணனுக்கு ‘பிரம்ம வித்யா பாஸ்கரர்’ என்னும் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார். சாகித்திய அகாடமி, பென் அனைத்திந்திய மையம் போன்ற உயர் நிறுவனங்களைத் தமது அறிவாண்மையால் நடத்திச் சென்றார், சாகித்திய அகாடமியின் ஆட்சிக்குழு உறுப்பினராக 1968ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். தத்துவ இயல் ஆய்வில் அவர் ஆற்றிய பணிக்காக டெம்ப்லீடன் பரிசு (Templeton Prize) வழங்கப்பட்டது. 
ராதாகிருஷ்ணன் குடும்பம் வசித்ததா சொல்லப்படு இடம்... 
ராதாகிருஷ்ணன் அவர்கள், தனது தூரத்து உறவினரான சிவகாமு, என்பவரை தனது பதினாறாவது வயதில் மணமுடித்தார். இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகளும், சர்வபள்ளி கோபால் என்ற மகனும் உள்ளனர். சர்வபள்ளி கோபால், இந்திய வரலாற்றுத் துறையில் மிக முக்கியமான ஒருவர். 1956-ம் ஆண்டு, ராதாகிருஷ்ணன் அவர்களின் மனைவி சிவகாமு இறந்தார்.  மேற்காணும் வீட்டை அவரோட சொந்தக்காரங்கதான் இந்த வீட்டை கோயிலுக்கு எழுதி கொடுத்துட்டாங்க. அப்போ இருந்து கோயில் நிர்வாகம்தான் இந்த இடத்தை பராமரிச்சுட்டு வர்றாங்க.    ஆரம்பத்துல அங்க ஒரு கல்லூரி நடத்துனாங்க. அதுக்கப்புறமா கோயில் சார்பா நடக்கற கல்யாணம்லாம் அங்கதான் நடந்துச்சு. 1964-ல் இருந்து நூலகத்தையும், 1997ல் இருந்து சிறுவர்களுக்கான விடுதியையும் நடத்தி வர்றாங்க. 15 பசங்க இருக்கற இந்தக் காப்பகத்துக்கு மட்டும் அரசு சார்பா பணம் வருகிறது. நான் 9 டூ 12வரை திருத்தணிலதான் படிச்சேன். இந்த வீட்டுக்கு பக்கத்துலதான் டியூஷன் போவேன். அப்ப இத்தனை விவரம் தெரியாது. லைப்ரரி இருந்தது மட்டுமே தெரியும். 

அவர் வசித்த தெருவுக்கும், ஒரு பள்ளிக்கு அவர் பேரை வைத்தும், திருத்தணியில் ஒரு சிலையை வைத்ததோடு தன் கடமை முடிந்ததென அரசு நினைக்குது போல! அவரின் நினைவிடத்தில் பாட்டில்களும், அழுக்கு துணிகளுமா இருக்குறதா படிச்சேன்.  1990 வாக்கில் அத்தனை அழகா இருக்கும் அந்த வீடு. மூன்று மாடி கொண்டது. மிகப்பெரிய தாவாரம்ன்னு.. படிக்க போனதைவிட ஓடிப்பிடிச்சு விளையாட போனதே அதிகம். 
அந்தந்தப் பகுதிகளின் தாய் மொழியிலேயே பல்கலைக்கழகக் கல்வியை வழங்குவதுதான் சிறந்தது. ஆசிரியர்கள், தம்முடைய துறையில் நிகழும் அண்மைக்கால வளர்ச்சிகளையும், கண்டுபிடிப்புகளையும் அறிந்து கொண்டிருக்க வேண்டும். அறிவுத் தாகம் கொண்ட மாணவர்களை முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்லும் திறன் படைத்தவர்களாகவும் விளங்க வேண்டும். அனைவருக்கும் உயர்க்கல்வி அளிப்பது அரசின் கடமையாகும். கல்வியானது மனிதனை நெறிமுறைப் படுத்துவதோடு சுதந்திரச் சிந்தனையாளனாக்க வேண்டும். பல்கலைக் கழகங்கள், மனித நேயத்தையும்,  கருத்துப் புதுமையையும், உண்மைத் தேடலையும் நோக்கமாகக் கொண்டு கற்பிக்க வேண்டும். ஆற்றல்மிகு எழுத்தாளர்கள், அறிவியல் வல்லுநர்கள், கவிஞர்கள்,  கலைஞர்கள், புதியன கண்டுபிடிப்பவர்கள் மறைந்துள்ளவற்றைத் தேடி அறிபவர்கள் ஆகியோரை நம்புதல் வேண்டும். அவர்களுக்குப் பல்கலைக் கழகங்களில் பயிற்சிகள் தருதல் வேண்டும்.  பல்கலைக் கழகங்கள், ஆய்வுக்கும், ஞானத்துக்கும் வழிகாட்ட வேண்டும். ஒழுக்க உணர்வுக்கும், உள்ளத் தூய்மைக்கும் பயிற்சி அளித்திட வேண்டுமென கல்வி சார்ந்து அறிவுறுத்தினார். 
சாதியம், சுய  சிந்தனையின் வளர்ச்சியைத் தடைசெய்கிறது. ஊகத்தின் அடிப்படையிலான கருத்துக்கள் வளர்வதை ஊக்கப்படுத்துகிறது. இதனால் ஒழுக்கம் கெட்டுவிடுகிறது. ஒருவரை ஒருவர் அவமதிக்கும் செயல்கள் பெருகின. எனவே, எந்தச் சாதியும், சமயமும், தத்துவமும் மனிதகுல முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்தால் தூக்கி எறிந்துவிட வேண்டும்.  கடமைகளையும் உரிமைகளையும் பிரித்துப் பார்த்துச் செயல்பட வேண்டும். அணு ஆயுதங்களின் கொடுமையால் ஒட்டுமொத்த சமூகமும் அழிந்து பாழாகிறது. எனவே, அணு ஆயுதங்களை எந்த நாடும் போரில் பயன்படுத்தக் கூடாது என சமூகம் சார்ந்து அறிவுறுத்தினார்.  தன் வாழ்நாள் முழுவதும் கல்வி உலகம் வளம் பெற அயராது பாடுபட்டவர்.  சோதனைக்காலத்திலும் நிமிர்ந்து நின்று, நடுநிலையுடன் செயல்பட்டவர்.  மக்களிடம் நம்பிக்கை விதையை நட்டவர்.  எழுதியவாறே நடந்துக்கொண்டவர். இலட்சிய ஆசிரியர் வளமான அறிவுத் திறம் படைத்தவர்! அவரைத் ‘தத்துவமேதை’ என்று உலகம் புகழ்வது மிகவும் பொருத்தமாகும். 

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகிறான். பாடம் கத்துக்கொடுக்கும் எல்லாருமே இறைவனுக்கு சமம். எழுத்தறிவித்த ஆசிரியர்களுக்கும், வாழ்க்கை பாடத்தை கத்துக்கொடுக்கும் சக மனிதர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள். ஸ்பெஷலா கவிதைவீதி சௌந்தர், வேடந்தாங்கல் கருண், ராஜப்பாட்டை ராஜா, கரந்தை அண்ணாக்கு வாழ்த்துகள்.  ஏன்னா எனக்கு தெரிஞ்சு நம்ம செட்டுல இவங்கதான் ஆசிரியரா இருக்கார். 

நன்றியுடன்,
ராஜி

8 comments:

  1. பரிந்துரைகளின் மீது நடவடிக்கை எடுத்தால், சம்பாதிக்க முடியாதே... ம்...

    ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. அப்பல்லாம் எழுத்தறிவித்தாங்க... இப்போ எழுத்தறிவை விக்கறாங்க!

    ReplyDelete
  3. போற்றுதலுககு உரியவர்

    ReplyDelete
  4. நல்ல பகிர்வு..

    அவரின் வாழ்ந்த இடத்தை கூட சுத்தமாக பேணாமல் இருக்கும் படங்கள் காணும் போதே வருத்தம் மேலிடுகிறது...

    ReplyDelete
  5. ஆசிரியர் தினவாழ்த்துகள் சகோ

    ReplyDelete
  6. என்வீட்டில் இரண்டு ஆசிரியைகள் இருக்கிறார்களொரு பழைய மாணவன் அவனது ஆசிரியருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதினானாம் நான் இந்தநிலையில் இருக்கநீங்களே காரணம் என்று தெரிவித்தானாம் அதற்கு ஆசிரியர் நான் எவ்வளவோ முயன்றும் உன்னை மாற்ற முடியவில்லை என்றாராம்

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. அருமையான ஆசிரியர் தினப் பதிவு........சிறந்த ஆசிரியரும்,முன்னாள் ஜனாதிபதியுமான சேர்.ராதாகிருஷ்ணன் அவர்களின் வாழ்க்கை,வரலாறுமாக அமைந்ததில் மகிழ்ச்சி.உலகின் பல்வேறு நாடுகலிலும்,வெவ்வேறு தினங்களில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.இந்தியாவில் ஒரு மா மேதையின் பிறந்த நாளில் கொண்டாடப்படுவது சிறப்பு. நன்றி தங்கச்சி பதிவுக்கு.......

    ReplyDelete