Thursday, September 13, 2018

வினாயகனே! வினை தீர்ப்பவனே! வேழை முகத்தோனே! ஞான முதல்வனே!

’வி’ ன்னா சிறப்பு. “நாயகன்’ ன்னா தலைவர். சிறப்புமிக்க தலைவர்ன்னு குறிப்பதே வினாயகன்.  கடவுளுக்கெல்லாம் மேலான தலைமைக் கடவுளாக விநாயகப்பெருமான்னும்.  விக்னம்ன்னா பிழை, இடர்ன்னு பொருள். நமக்கு ஏற்படும் பிழைகளை, இடர்களை தீர்ப்பதால் விக்னேஸ்வரன்னும் பூதகணங்களுக்கு அதிபதியா இருக்குறதால கணேசன்னும்,  மனித உடலும், யானை தலையையும் கொண்டதால இந்த ’பிள்ளை’ யார்ன்னு கேட்க போய் பிள்ளையார்ன்னும்  பாசம், அங்குசம், அபயம், வரதம், மோதகம் ஆகியவற்றை தாங்கிய நான்கு கரங்களோடு தும்பிக்கையும் சேர்ந்து ஐந்து கரங்களை கொண்டதால் ஐங்கரன்னும் பேர் உண்டானது. 

ஐந்தாவது கரமான தும்பிக்கையின் மூலமா, படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைதல் என்னும் ஐந்தொழில்களை ஆற்றுவதால் மும்மூர்த்திகளும் இவருள் அடக்கம் என்கிறது விநாயக புராணம். அதன் அடிப்படையிலேயே இவரை முழுமுதற் கடவுளாக வழிபடுகின்றனர்.  இந்துக்கள் எந்தவொரு காரியத்தைத் தொடங்குவதற்கு முன்பும் விநாயகப்பெருமானை வணங்கியப்பின்னரே தங்கள் செயலை செய்ய தொடங்குவாங்க. பிள்ளையார் நம்ம அப்பாக்கள் போல எளிமையானவர். நாம எப்படி இழுத்தாலும் வந்துடுவார்.  சாணம், மஞ்சள், சந்தனம், அரச இலைன்னு எதிலும் வந்திடுவார்.

இன்று நாம கொண்டாடும் இந்த விரதத்தை அன்று பார்வதிதேவிதான் தொடங்கி வைத்தாள்.  தன் கணவரான சிவனை அவமதித்து யாகம் நடத்திய தந்தை தட்சனிடம் நியாயம் கேட்க போனாள் பார்வதி என்ற தாட்சாயணி. ஆனால், தட்சனோ மிகவும் கர்வம் பிடித்தவன். மருமகனை அவமானப்படுத்தியது போதாதென்று, மகளையும் கேலி பேசினான்.  இந்த அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாத தாட்சாயணி, தட்சன் வளர்த்து வைத்திருந்த யாகக்குண்டத்தில் அப்படியே பாய்ந்துவிட்டாள்.
அதன்பிறகு, பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து பார்வதின்ற  பெயரில் வளர்ந்து வந்தாள்.  சிறு வயதிலிருந்தே கயிலைநாதன்தான் தன் கணவன் என்று தீர்மானமாக இருந்தாள். அவளுடைய அந்த எண்ணம் பலிக்க வேண்டும்ன்னா அவள் விநாயகரை நினைத்து சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டுமென்று அவளுடைய தந்தையான பர்வதராஜன் யோசனை சொன்னார்.  அவர் சொன்னபடியே, மண்ணால் ஒரு விநாயகர் உருவத்தை செய்து,  கூடவே தங்கத்தாலும் ஓர் உருவம் செய்து இரண்டையும் பொற்கும்பம் ஒன்றின் பக்கத்தில் வைத்தாள்.

 அந்த விக்ரகங்களுக்கு ஆகம விதிப்படி பூஜைகளை செய்தாள். ஆவணி மாத அமாவாசைக்கு அடுத்த சதுர்த்தியில் இப்படி பூஜையை ஆரம்பித்து, பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி வரையில் தினமும் பூஜை செய்தாள். அதற்குப் பிறகு மண் பிள்ளையாரை, மேள தாளத்தோடு ஊர்வலமாக எடுத்துப் போய் நதியிலே இறக்கி விட்டாள். அந்த பதினைந்து நாட்களும் நியம நிஷ்டைகளை மீறாமல் இருந்த விரதத்தின் பலனாக, தான் ஆசைப்பட்டாற்போல கயிலைநாதனை கைப்பிடித்தாள்.

விநாயகருக்கு    மோதகம், கொழுக்கட்டை படைப்பது வழக்கம். மோதகம் என்பது  தேங்காய் பூர்ணத்தை உள்ளே வைத்து செய்யப்படுவது.  மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம்.  உள்ளே இருக்கும் வெல்லப் பூர்ணம்தான் பிரம்மம்.    அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூர்ணம் நமக்கு கிடைப்பதுப்போல நமக்குள் இருக்கும் இனிய குணங்களை அண்டத்திலுள்ள அனைத்துவித மாயைகளும் மறைக்கிறது. இந்த மாயையை உடைத்தால் பிரம்மத்தை அடையலாம் என்பதை இந்த மோதகம் உணர்த்துது.  விநாயகருக்கு முதன் முதலாக இந்தக் கொழுக்கட்டையை நிவேதனம் செய்தது வசிஷ்ட முனிவருடைய மனைவியான அருந்ததி.

விநாயகருக்கு யானை முகம் வந்ததுக்கு பல காரணம் சொல்றாங்க. அதுல ஒண்ணு, ”கஜமுகாசுரன்”ன்ற அசுரன், பிரம்மாவிடம் ஆண், பெண் சம்பந்தமில்லாமல் பிறந்த ஒருவனாலேயே தனக்கு அழிவு வரனும்ன்னு வரம் கேட்டான். ஆண், பெண் சம்பந்தமின்றி, உலகில், குழந்தை பிறப்பு என்பது சாத்தியம் இல்லைன்னு அவன் போட்ட கணக்கு.  அவன் நினைச்ச மாதிரியே அப்படி யாருமே உலகில் பிறக்கலை. எனவே, அவன் சர்வலோகங்களையும் வளைத்து, தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தான். ’
தேவர்களை வதைத்தான். அவர்கள் துன்பம்  தாளாமல் தவித்தனர். அவர்களது துன்பம் தீர்க்க லோகமாதாவான பார்வதிதேவி முடிவு செய்தாள். தன் மேனியில்  பூசியிருந்த மஞ்சளை (அழுக்குன்னும் சிலர் சொல்றாங்க. நாம நல்லதையே எடுத்துப்போமே!)  வழித்தெடுத்து உருண்டையாக்கினாள். அந்த மஞ்சளில் உடல் உறுப்புகளையும், உயிரையும் கொடுத்தாள். அந்தக் குழந்தைக்கு, பிள்ளையார் என பெயர்  சூட்டினாள். அந்தப்பிள்ளை தன் அன்னையின் அந்தப்புர காவலனாக இருந்தான். சிவபெருமான் அங்கு வந்தார். அவர் மனதில் தேவர்கள் படும் துன்பத்தை  நினைத்து கருணை உண்டாயிற்று. இதற்காக ஒரு திருவிளையாடல் செய்தார். அம்மையார் குளிக்கும்போது, உள்ளே போக முயன்றார். அப்போது காவலுக்கு  இருந்த பிள்ளையார் தடுக்க,  என் அந்தப்புரத்தில் இருக்கும் நீ யாரடா? எனக் கேட்டு, பிள்ளையாரின் கழுத்தை  வெட்டிவிட்டார். தன் பிள்ளை மாண்டு கிடப்பதை பார்த்த பார்வதி தேவி, தன் மகனை மீண்டும் உயிர்ப்பிக்க சிவனை வேண்டி நின்றாள். “வடக்கு நோக்கி யார் படுத்திருந்தாலும் அவர் தலையை கொண்டு வந்தால், மீண்டும் உன் பிள்ளையை உயிர்ப்பிக்குறேன்னு வாக்கு கொடுத்தாராம் சிவன். அதன்படி, உலகை சுற்றி வந்தாள் பார்வதி தேவி, வடக்கு நோக்கி தலை வைத்து படுப்பது தனக்கும், தான் வாழும் உலகத்துக்கும் ஆகாது என்பதை  உணர்ந்த எல்லா ஜீவன்களும் அப்படி படுக்கலை. என்னை போல சொல்பேச்சு கேளாத ஒரே ஒரு யானை மட்டுமே வடக்கு நோக்கி படுத்திருந்தது. அதன் தலையை கொய்து கொண்டு வந்து சிவப்பெருமானிடம் தர, சிவன் மீண்டும் பிள்ளையாரை உயிர்பித்ததா ஒரு வரலாறு இருக்கு.

மனிதனின் வாயும், உதடும் தெளிவாக வெளியே  தெரிகிறது. மற்ற மிருகங்களுக்கும் கூட அப்படித்தான். ஆனால், யானையின் வாயை தும்பிக்கை மூடிக் கொண்டிருக்கிறது; அது வெளியே தெரியாது. தேவையின்றி பேசக்கூடாது என்பதும், தேவையற்ற பேச்சு பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதும்உலகத்துக்கு உணர்த்தவே இப்படி ஒரு திருவிளையாடல்ன்னு அன்னையை சமாதானம் செய்தார் சிவன்.  
தன் பிறப்பின் நோக்கம் அறிந்து கஜமுகன்மீது படை எடுத்து சென்று அவன் மீது போர் தொடுத்தார். விநாயகரிடமிருந்து தப்பிக்க எலி உருக்கொண்டு தப்பிக்க பார்த்தான். அவனை வதம் செய்து. அவனின் வேண்டுக்கோளுக்கிணங்கி,  தன் வாகனமாக்கி கொண்டார்.

அனலாசுரன் என்ற அசுரன் தேவர்கள் மனிதர்களை துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பபர்களை அனலாய் மாறி தகித்து விடுவான், அவனை பிரம்மா, இந்திரனால் கூட அடக்க முடியவில்லை.  சிவனிடம் சென்று முறையிட்டனர். சிவன், பிள்ளையாருக்கு கட்டளை இட்டார், பிள்ளையார் அசுரனிடம் மோதினார். ஆனால், அவனை வெற்றி கொள்ள முடியலை.பிள்ளையாருக்கு கோவம் வந்து அனலாசுரனை விழுங்கி விட்டார். வயிற்றுக்குள் போன அனலாசுரன் அனலாய் தகிக்க தொடங்கினான், குடம் குடமாக கங்கை நீர் கொண்டு வந்து பிள்ளையார் மீது ஊற்றியும் பலனில்லை. இந்நிலையில் ஒரு முனிவர் ஒரு அருகம்புல்லை கொண்டு வந்து பிள்ளையார் தலையில் வைக்க அனல் மறைந்து அனலாசுரனும் ஜீரணமாகி விட்டான், தன்னை அருகம்புல் கொண்டு அர்சிக்க வேண்டுமென ஆணையிட்டார். 
விநாயகர் ஒரு கொம்பு (தந்தம்), இரண்டு காதுகள், மூன்று திருக்கண்கள், நான்கு தோள்கள்,  ஐந்து கரங்கள், ஆறுஎழுத்து மந்திரம் கொண்டவர். அவரை வழிபட்டால் ஏழேழு பிறவிகள் நீங்கும். எண்திசைகளும் புகழும். நவமணிகளும் பெற்று செல்வவளத்துடன் வாழச் செய்வார்.   விநாயகருக்கு இடைக்கு கீழே பூத உடம்பும், இடையிலிருந்து கழுத்துவரை தேவவுடம்பும், மிருகத்தலையும் உள்ளது. ஒரு கொம்பு ஆண்மையையும், கொம்பில்லாத பகுதி பெண்மையையும் கொண்டு உலகம் அனைத்தும்  தன்னுள்ளே  இருப்பதை விநாயகரின் உருவம் உணர்த்துது.
கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு,நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன்,பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலிய பொருட்களை விநாயகருக்கு நிவேதனம் செய்யலாம். இந்நிவேதனப் பொருட்களை அருணகிரிநாதர் திருப்புகழில் குறிப்பிடுகிறார்.
வினாயகரின் புது அவதாரமான சுற்றுச்சூழலை காக்கும் விதை வினாயகர்.
விநாயகரின் சக்திகளாக சித்தி, புத்தி உள்ளனர். அவர் எப்போதும் பிரம்மச்சாரியாக விளங்குபவர். தம்மை வழிபடும் அன்பர்களுக்கு காரிய சித்தியும், அதற்கு புத்தியும் அருள்பவர். அதனால், சித்தி புத்தி என்ற பண்புகளை இரு மனைவிகளாக்கி சித்தி புத்தி விநாயகர் ஆனார். அடியார்களின் இடையூறுகளை அகற்றுவதற்கு வல்லபம் (வல்லமை) வேண்டும். எனவே, இவர் வல்லபை என்னும் சக்தியுடனும் இருப்பார். விநாயகரின் சக்தியாகிய வல்லபை மரீச முனிவரது புதல்வி.

ஜமுகாசுரன் என்னும் அசுரன், தேவர்களுக்கு கொடுமைகள் செய்து வந்தான். தேவர்கள் தன்னைக் கண்டால் தோப்புக்கரணம் இடவேண்டும் என்று நிர்ப்பந்தித்தான். தேவர்களும் பயந்துபோய் இச்செயலைச் செய்து வந்தனர். அவனைச் சம்ஹாரம் செய்ய கிளம்பினார் விநாயகர். விநாயகரையும் தோப்புக்கரணம் இடுமாறு கஜமுகாசுரன் ஆணையிட்டான். கோபமடைந்த விநாயகர் தன் தந்தத்தால் அவனைக் குத்திக் கொன்றார். கஜமுகாசுரன் அழிந்ததும் அவனுக்கு போட்டு வந்த தோப்புக்கரணத்தை நன்றியுணர்வுடன் தேவர்கள் விநாயகப்பெருமானுக்குச் செய்யத் தொடங்கினர். இதுமுதல் தோப்புக்கரணம் போடும் வழக்கம் வந்தது.  தோப்புக்கரணம் போடுவதால் மூளைசெல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன. நாடிகள் சுத்தம் பெறுகின்றன. நம் உடலிலுள்ள நரம்பு மண்டலங்கள் அனைத்தும் சேருமிடம் காது மடல்கள். தோப்புக்கரணம் செய்யும் போது காது மடல்களை இழுப்பதால் அனைத்து நரம்புகளும் தூண்டப்படுகின்றன.

கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர் முதலியவைகளால் விநாயகரை வடித்து வழிபாடு செய்யலாம். இவற்றில் சுதை மற்றும் மரத்தாலான வடிவங்களுக்கு அபிஷேகம் செய்ய முடியாது என்பதால், மலர் அலங்காரம் மட்டும் செய்து கொள்ளலாம். மஞ்சள், சந்தனம், களிமண் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்தபின் தூய்மையான நீரில் கரைத்துவிட வேண்டும். மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் தாத்பர்யம்.  மூன்று, ஐந்து, ஏழு நாள்ன்னு பிள்ளையாரை கோலாகலமா பூஜித்து அவரை கொண்டு போய் கரைக்கனும்ன்னு உடக்குறதும், மிதிக்குறதும் காண சகிக்காத என் அம்மா வீட்டிலேயே கரைச்சு செடிகளுக்கு ஊத்திடுவாங்க, நானும் அப்படியே!
பிள்ளையார், சூரியன், அம்பிகை, விஷ்ணு, சிவன் என்று ஐம்பெரும் தெய்வங்களையும் ஒரே நேரத்தில் ஒரே பீடத்தில் வைத்து பூஜை செய்வதற்கு கணபதி பஞ்சாயதனம் என்பர். இதில் விநாயகப்பெருமானை ஐந்து தெய்வங்களுக்கும் நடுவில் வைத்து வழிபட வேண்டும்.
அதிகாலை எழுந்து வீடுகளை சுத்தம் செய்து மனையில் களிமண்ணாலான பிள்ளையாரை வைத்து அலங்கரித்து பொரி, அவல், பழங்கள், கரும்பு, சோளம், வேர்க்கடலை, நாவல்ப்பழம்,  மோதகம், சுண்டல் செய்து படைத்து, விநாயகர் அகவல் பாடி தொழ வேண்டும். அவரவர் வசதிப்படி 3, 5, 7,9 நாட்கள் வைத்து பூஜிக்க வேண்டும்.  கடைசி நாளில் படைத்து ஏதாவது நீர்நிலையில் கரைத்து விடவேண்டும்.
விநாயகரை தொழுவோம்... எல்லா வளமும் பெறுவோம்..
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்....
நன்றியுடன்,
ராஜி.

11 comments:

  1. விதை வினாயகர் இந்த வருட சிறப்பு...

    விநாயக சதுர்த்தி தின வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. சமூகத்தின்பால் கொண்டுள்ள அக்கறையால் கல்லூரி பிள்ளைகளின் கண்டுபிடிப்பு

      Delete
  2. விநாயகர் மீது இருக்கும் பக்தியை சுதந்திர உணர் வூட்டவும் உபயோகித்தனர் மகராஷ்ட்ராவில் ஓவிய வரைய நான் முதலில் தேடியது விநாயகர் படங்களையே

    ReplyDelete
    Replies
    1. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் உருவம் பயன்பட்டதுன்னு ட்விட்டர்ல படம் பார்த்தேன். படத்தை எடுத்து வச்சிருக்கேன்.

      Delete
  3. ​சுவாரஸ்யமான, விரிவான தகவல்கள். விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. படித்தவை, கேட்டவைதான் எல்லாமே!

      Delete
  4. விதை விநாயகர் மிக அருமை.
    நாங்கள் பல வருடங்களாக வீட்டில் பிள்ளையாரை கரைத்து தொட்டி செடிகளில் விட்டுக் கொண்டு இருக்கிறேன்.
    அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. என் அம்மாவும் உங்களை போலதான் செய்வாங்க. நான் கிணற்றில் கரைச்சுட்டு வருவேன்

      Delete
  5. விவரங்கள் சிறப்பு.

    பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. தலைப்பு தவறா இருக்கு. /வேழை முகத்தோனே// - வேழம் என்பது யானை. வேழ முகத்தோனே என்பதுதான் சரி.

    ReplyDelete