Thursday, September 27, 2018

பறவையா பறக்கனும் - உலக சுற்றுலா தினம்


தண்ணி ஒரே இடத்தில் தேங்கி நின்னால் சாக்கடையாகிடும். அதனால ஓடிக்கிட்டே இருக்கனும். அதுமாதிரிதான் மனுஷங்களும் ஒரே இடத்தில் இருந்தால் பல விசயங்களை அறிய முடியாது. அடிக்கடி, வெளில போய்ட்டு வரனும்ன்னு சொல்வார்.  ஆதி மனிதன் உணவுக்காகவும் தோதான உறைவிடத்துக்காகவும் ஒவ்வோர் இடமாக சுற்றித்திரிந்து பின்னர் வாழ்வதற்கு ஏற்ற சூழல் பொருந்திய ஓரிடத்தை தேர்வு செய்து அங்கே நாகரிகத்தை வளர்த்தான் அவனும் வளர்ந்தான். பயணமென்பது ஒவ்வொரு மனிதனின் மரபணுவிலுமே பொதிந்து கிடக்குது. அதன் பரினாம வளர்ச்சிதான் இன்றைய சுற்றுலான்னு அப்பா அடிக்கடி சொல்வா அதுப்படி வருசம் ஒருமுறை எங்காவது கூட்டிட்டு போவார்.  கன்னியாகுமரி முதற்கொண்டு ரிஷிகேஷ் வரை டூர் போய் வந்தாச்சுது. பல்வேறு இடங்கள், மனிதர்கள், பழக்க வழக்கங்களை பார்த்தால் நம்மை மேம்படுத்திக்க உதவும்ன்றது அவரது எண்ணம்.  அவரது நினைப்புப்படியே எப்பேற்பட்ட உணவுக்கும், தண்ணிக்கும், சுற்றுச்சூழலிலும் வாழ என் பிள்ளைகள் உடலும் மனசும் ஒத்துக்கும். 
ஒரு பயணமென்பது வெறும் இடம் மாற்றம் மட்டுமல்ல. பல நினைவுகளின், அனுபவங்களின் தொகுப்பு. உலகை பல்வேறு பார்வையில் பார்க்க பயணம் உதவது. அதனால்தான் வெளிநாட்டில்லாம் வாரக்கடைசியில் குடும்பத்தோடு வெளிச்செல்வதும், வருடமொருமுறை சுற்றுலா போறதும் வாடிக்கை.  சுற்றுலான்ற வார்த்தைக்கு வழக்கமான இடத்தை விட்டு வேறு ஒரு இடத்துக்கு சென்று ஓய்வு, ஆராய்ச்சி மாதிரியான நோக்கத்துக்காக செல்வதுன்னு அர்த்தம். மனுசனுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் 
சுற்றுலா ஒரு மனுசனை மட்டும் மேம்படுத்துவதில்லை. மனுசனோடு சேர்த்து ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுலா உதவுது. உலகின் பளா நாடுகள் தங்களது கலாச்சாரத்தில் சுற்றுலாவுக்கென ஒரு இடத்தை வைத்துள்ளது. சுற்றுலா மூலம் மனித குலத்தை மேம்படுத்தும் வகையில், செப். 27ம் தேதியை உலக சுற்றுலா தினமாக 1970ம் ஆண்டு ஐ.நா.சபை யால் அங்கீகரிக்கப்பட்டு அறிவித்தது. அதனால், உலக சுற்றுலா தினம் உலக சுற்றுலா நிறுவனத்தின் (WTO) ஆதரவில் 1980ல் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.  அதுக்கு அப்புறம்தான் சுற்றுலாவுக்கான தினம் என தனியாக கொண்டாடப்படுது. இப்ப சுற்றுச்சூழல் சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா, கலாச்சார சுற்றுலா, கல்வி சுற்றுலா என பல அவதாரமெடுத்துள்ளது.
ல்வித்துறை, மருத்துவத்துறை மாதிரி சுற்றுலாதுறைதான் உலகின் மிகப்பெரிய துறை. அதேப்போல, உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொழில் சுற்றுலா. போக்குவரத்துறை, உணவுத்துறை, இடவசதி, ஓய்வு மற்றும் கேளிக்கை என 5 துறைகளை சார்ந்து சுற்றுலா துறை விளங்குகிறது. வளரும் நாடுகளுக்கு மிகப்பெரிய பலம் சுற்றுலாதான். 2010ன் கணக்குப்படி 940 மில்லியன் சர்வதேச சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2009ல் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தின் காரணமா 2008ன் இரண்டாம் பாதியிலிருந்து 2009ன் இறுதிவரை சரிவைக் கண்டது. சுற்றுலாத்துறை பல உலகநாடுகளின் முக்கிய தொழில்துறையாக இன்றளவும் இருக்கு. ஐரோப்பியர்கள்தான் சுற்றுலா செல்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களில் முதலிடத்தில் இருக்காங்க. தங்களது வருமானத்துல ஒரு பகுதியை இப்படி சுற்றுலா போறதுக்காவே  ஒதுக்கி வைக்குறாங்க. 
சுற்றுலா செல்ல மிக சிறந்ததாய் பத்து நாடுகள் தேர்வாகி இருக்கு. பேங்காங்க்(தாய்லாந்து) ஆடம்பர மாளிகை மற்றும் தண்ணீரில் மிதக்கும் சந்தையும், பழங்கால மாளிகை, கோயில்லாம் சுற்றுலா செல்ல காரணம். லண்டன் தேம்ஸ் நதியே முக்காவாசிப்பேர் லண்டன் செல்ல காரணம்.  அறிவியல் வளர்ச்சியோடு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முந்தைய அழகை அப்படியே தக்க வச்சிக்கிட்டிருக்கு இந்த இடம். பாரீஸ் (பிரான்ஸ்) செலக்ட் மக்களால் உருவாக்கப்பட்ட இந்த  பாரிசி என அழைக்கப்பட்டு இப்ப பாரீஸ் என அழைக்கப்படுது. இங்கிருக்கும் செய்னி ஆறு, நோட்ரே கதீட்ரல் தேவாலயம், புனித செப்பல் தேவாலாயம் மற்றும் ஈபிள் டவர் இதுலாம் மக்களை ஈர்க்கும் அம்சம். துபாய் ஏழு அரபு நாடுகளின் தலைநகரமாய் விளங்கும் இந்த இடம் சிறந்த கடைத்தெருக்களையும் கொண்டு மக்களை ஈர்க்கின்றது. நியூயார்க் நகரம்  புல்வெளிகள், காடுகள், ஆறுகள், பண்ணைகள், மலைகள், ஏரிகள் மற்றும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நகரத்தினை கொண்டு மக்களை ஈர்க்கின்றது.

சிங்கப்பூர் பூங்காக்களை கொண்டு நம்மை ஈர்க்கும். மிகச்சிறந்த வர்த்தக உலகின் முக்கிய வர்த்தக நகரம். கோலாலம்பூர்(மலேசியா) ஆல்பா  வோர்ல்ட் சிட்டி என அழைக்கப்படும் இந்நகரம் கலாச்சாரம், நிதி மற்றும் பொருளாதாரம், வர்த்தக மையமாக திகழுது. பெட்ரோனஸ் இரட்டை கோபுரம் மக்களை பெரிதும் கவர்ந்திழுக்குது. இஸ்தான்புல் (துருக்கி) பாரம்பரிய நகரமென யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட இடம். மர்மர காடும், கருங்கடலும் பிரசித்தம். டோக்கியோ (ஜப்பான்) ஹோன்சு, இஜூ, ஒகசாவரா ஆகிய தீவுகள் சுற்றுலாவுக்கு என சிறப்பு பெற்றது. சியோல் (தென் கொரியா)  இங்குள்ள ஹான் நதி 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வரலாற்று சிறப்பு பெற்றது. இந்த நகரில் உள்ள ஜேங்டியோக் அரண்மனை, Hwaseong கோட்டை, Jongmyo கோவில், Namhansanseong மற்றும் Joseon வம்சத்தின் அரச கல்லறைகள் ஆகிய ஐந்து இடங்களை யுனஸ்கோவால் பாரம்பரிய பகுதிகள் என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
வீட்டு வாசலை தாண்டி சாலையில் கால்பதிக்கும்போதே சுற்றுலா தொடங்கி விடுது. அதனால், நமது உடல்நிலை, பொருளாதார சூழல், கால அவகாசத்தைக்கொண்டு முன்கூட்டியே திட்டமிடனும். குடும்பத்தோடு செல்வதென்றால் கூடுதல் கவனம் தேவை. நாம் செல்லுமிடத்தின் போக்குவரத்து, தங்குமிடம் ஆகியவற்றின் விவரங்களை முன்கூட்டியே விசாரிச்சு வச்சுக்கனும். என்னதான் கிரடிட், டெபிட் கார்ட்லாம் இருந்தாலும் கைவசம் பணத்தை இருப்பு வச்சுக்கனும்.  பணத்தை ஒருத்தரே வச்சுக்காம ஆளுக்கு கொஞ்சம்ன்னு பிரிச்சு வச்சுக்கனும். அப்படி ஆளுக்காள் வச்சிருக்கும் பணத்தையும் ஒரே இடத்தில் வச்சுக்காம வெவ்வேறு இடத்தில் வச்சுக்கிட்டா வழிப்பறி, விபத்து, திருட்டு போது பணமில்லாம திண்டாட வேண்டி இருக்காது. என்னதான் ஆளுக்கொரு போன் இருந்தாலும் முக்கியமான தொலைப்பேசி எண்களை ஒரு நோட்டில் குறிச்சு வச்சுப்பது நலம். பாதுகாப்பு குறைவா இருக்கும் இடத்தில் தங்க நேர்ந்தால் ஆளுக்கு கொஞ்ச நேரம்ன்னு காவலுக்கு ஒருவரை வச்சுக்கனும். ஹோட்டல் அறைகளில் தங்க நேரும்போது குளியலறை, படுக்கையறைகளில் கேமரா எதாவது இருக்கான்னு பார்த்துக்கனும். எங்க போய் தங்குறோமோ அந்த ஊர் போலீஸ் ஸ்டேஷன், இன்ஸ்பெக்டர், மருத்துவமனை தொலைப்பேசி எண்களை வாங்கி வச்சுக்கனும்.  பயணச்சீட்டுகளை முன்கூட்டியே பதிவு செய்துடனும். எந்த ரயில், பஸ், ப்ளைட்ன்னும்,  கோச், இருக்கை  எண்கள்  முதற்கொண்டு எல்லா விவரங்களையும், குடும்பத்தில் எல்லாரும் தெரியப்படுத்தனும்.
சோப்பு, சீப்பு, தே.எண்ணெய், பேஸ்ட், பிரஷ், பொட்டு, ஷாம்பு, குடிதண்ணீர் பாட்டில், சின்னதா ஒரு கத்தி, பேட்டரி, டம்ப்ளர், துணி காய வைக்கும் கயிறு, பயணங்களை குறிச்சு வச்சுக்க சின்னதா ஒரு டைரிலாம் எடுத்துக்கனும், இதுலாம் போற இடத்துலயே கிடைக்கும்தான். விலை கூடுதலா இருக்கும். இல்லன்னா அலைஞ்சு திரிஞ்சு வாங்க வேண்டி வரும். குழந்தைகள், பெரியவங்களை அழைச்சுக்கிட்டு போகும்போது அவங்களுக்கு தேவையான மருந்துகள், படுக்கை வசதி, சுடுதண்ணி வைக்க சின்னதா ஒரு கெட்டில், கொஞ்சம் பிஸ்கட், பழங்கள், பால்பவுடரை கொண்டு செல்லனும். சாப்பாடு சரியில்லாத போது இதை வச்சு சமாளிச்சுக்கலாம். துண்டு, பெட்ஷீட் எடுத்துக்கனும். ஹோட்டல் ரூம்ல எத்தனை சுத்தமா இருக்கும்ன்னு தெரியாதுல்ல! ஆதார்கார்ட், வாக்காளர் அடையாள அட்டை மாதிரியான அடையாள அட்டையின் ஒரிஜினலை பத்திரமா வச்சுக்கிட்டு டூப்ளிகேட்டை பர்ஸ்ல வச்சுக்கலாம்.  முக்கியமா மொபைல் பவர் பேங்க், ஹாட்ஸ்பாட் எடுக்க மறக்காதீங்க. 
டூருக்கு போறேன்னு டமாரம் அடிச்சு ஊர் புல்லா சொல்லாம  பால், பேப்பர், சிலிண்டர் மாதிரியான நம்பிக்கையான முக்கியமானவர்களுக்கு மட்டும் சொல்லிட்டு போகனும். எல்லோரும் கிளம்புறதா இருந்தால் நம்பிக்கையானவங்களை வீட்டில் தங்க வைக்கலாம்.  நகை, பணம்லாம் பேங்க் லாக்கர்ல இல்லன்னா நம்பிக்கையானவங்கக்கிட்ட கொடுத்து செல்லலாம். அவசியாமான நகைகளை மட்டும் போட்டுக்கிட்டு போகனும், இருக்குங்குறதுக்காக அள்ளி போட்டுக்குறது வீண் ஆபத்தை வரவைக்கும். கேஸ், பேன், லைட்லாம் ஆஃப் பண்ணிட்டு போகனும்.  வெளி இடங்களில் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்கனும்.   என்னென்ன எடுத்து போறோம்ங்குறதை குறிச்சு வச்சுக்கனும். அதேப்போல என்னென்ன வாங்கிட்டு  வரனும்ங்குறதையும்  குறிச்சு வச்சுக்கனும். முக்கியமா போற இடத்துல கண்ட இடத்துல குப்பைகள் போடாம, எச்சில் துப்பாம சுத்தமா பராமரிச்சுக்கனும்.  நம்ம வீடு மாதிரியே இருக்கும் இடத்தையும் சுத்தமா வச்சுக்கனும்

ஜெய்ப்பூர் அரண்மனை, கலர்புல் காஷ்மீர், காதல் சின்னமான ஆக்ரா, மீனாட்சி அம்மன் கோவில், அமிர்த சரஸ் பொற்கோவில், மெரினா பீச், கடவுளின் தேசமான கேரளா, செங்கோட்டை,  காசி,  மகாபலிபுரம், செஞ்சி கோட்டை, வேலூர் கோட்டை, தஞ்சாவூர், கன்னியாகுமரி என கணக்கிலடங்கா வரலாற்று இடங்களையும், ஆன்மீக இடங்களையும் கொண்டிருந்தாலும்  மோசமான ஆட்சியாளர்கள், பொறுப்பில்லாத மக்களால் இந்தியா இந்த பத்து இடங்களில் வரமுடியலை என்பது வேதனையான விசயம் மட்டுமல்ல! வெட்கப்படவேண்டிய விசயமும்கூட! இனியாவது அரசாங்கமும், மக்களும் விழிச்சுக்கிட்டா சுற்றுலாவினால் பெரிய வருவாயை ஈட்டுவதோடு நம்ம நாட்டு அருமை பெருமைலாம் பார் எங்கும் பரவும்! 
 கஷ்டம், துன்பம், கவலை மறந்து
சுற்றி பறக்கும் பறவைப்போல
சுற்றுலா சென்று 
நாமும் சுகமாய் புத்துணர்வு  பெற்று வருவோம்.... 
நன்றியுடன்,
ராஜி.

13 comments:

  1. ஒரே இடத்தில, ஒரே மாதிரி போரடித்துக் கொண்டு இருக்காமல் வருடத்துக்கொரு முறையாவது சுற்றுலா செல்லுதல் நலம். எனக்கும் பிடிக்கும். ஆனால் என் சூழல் செயல் படுத்தத்தான் முடியவில்லை

    ReplyDelete
    Replies
    1. இப்படிதான் எல்லாருமே சொல்றோம். வருடத்துக்கு ஒருமுறையாவது ஆஃபீஸ், வீடுன்னு எல்லாத்தையும் மூட்டை கட்டி வச்சிட்டு ஒரு ரெண்டே ரெண்டு நாள் எங்காவது போய் வரனும். அது ஆண், பெண் இருவருக்குமே நல்லது.

      Delete
  2. நாம் வசிக்கும் உலகமே சூரியனை சுற்றிக்கொண்டிருக்கிறது. மேலும் தன்னைத்தானே ஒருமுறை தினமும் சுற்றிக்கொள்கிறது அது நமக்கு தெரிவதில்லை. இருந்தாலும் உலகம் என்ற குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவதில் பலருக்கு ஆர்வம் இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம் அவங்கக்கிட்ட கேட்டால் அதான் தினத்துக்கு பஸ் ஏறி வேலைக்கு போறேன்ல. லீவ் கிடைச்சா அக்கடான்னு வீட்டுல இருக்கலாம்ன்னு நினைச்சா நொய் நொய்ங்குறியேன்னு சொல்வாங்க

      Delete
  3. ஆலோசனைகள் நன்று சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. எல்லாமே அனுபவம்தான்ண்ணே

      Delete
  4. அருமை அருமை
    பயணம் நம்மைப் புதுப்பிக்கும்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. இதை சொன்னா ஊர் சுத்திக்கிட்டே இருக்கனுமான்னு கேப்பாக.

      Delete
  5. படங்கள் எல்லாம் சூப்பர் ராஜி க்கா..

    நமக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்..இந்த ஊர் சுத்துறது..

    ReplyDelete
    Replies
    1. ஊர் சுத்துறதுன்னா பெண்களுக்கு பிடிக்கும். ஆனா ஆண்களுக்கு பிடிக்காது

      Delete
  6. சுற்றுலா மனதிற்கு சுகமளிக்கும். புத்துணர்ச்சி தரும்.

    ReplyDelete
  7. பயணம் நல்ல பல விஷயங்களை நமக்குத் தருகிறது. ஆதலினால் பயணம் செய்வோம்!

    ReplyDelete