சின்ன வயசுல வினாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு அப்பாவோடு போய் பிள்ளையார் சிலை வாங்கி வருவேன். எங்க வீட்டில் அச்சுப்பிள்ளையார்தான் வைப்பாங்க. சிலை செய்றவர் ரெண்டு அச்சு வச்சிருப்பார். களிமண்ணை குழப்பி, ரெண்டு அச்சுலயும் நிரப்பி, ரெண்டு அச்சையும் ஒன்னா சேர்த்து, கொஞ்ச நேரம் கழிச்சு அச்சை கழட்டினா, பிள்ளையார் வந்திருவார். அவருக்கு தங்க கலர் ஜிகினா பொடியை கரைச்சு பிள்ளையார் சிலை முழுக்க தடவி கண்ணுக்கு கருப்பும் சிவப்புமா இருக்கும் குன்றின்மணி வச்சா பிள்ளையார் ரெடி. அச்சிலயே எலி இருக்கும். ஆனா, கண்ணுக்கு தெரியாது. அதனால், எலி செய்யவும், பிள்ளையாருக்கு பின்னாடி குடையை சொருகவும் கொஞ்சூண்டு களிமண் கொடுப்பார். என் பொண்ணு மண்டைக்குள்ளயே எக்கச்சக்கமா களிமண் இருக்கு. அதைக்கொண்டு ஊருக்கே பிள்ளையார் செய்யலாம்ன்னு அப்பா சொல்லாம வாங்கிட்டு வருவார்.
கடைக்காரர் கொடுத்த களிமண்ணை கொண்டு எலி செய்வேன். பிள்ளையார் பிடிக்க குரங்கான கதைதான் எல்லாருக்கும் தெரியும். ஆனா, எலி முயலான கதைலாம் நடக்கும். எலி பிடிச்சு, மிச்சமீதி மண்ணில் சின்னதா பிள்ளையார் செய்வேன். அந்த பிள்ளையாருக்கு பாண்ட்ஸ் பவுடர், கண்மை, நெல்மணி கொண்டு அலங்காரம் செய்வேன். பிள்ளையார் சுமாரா இருந்தாலும், நான் மேக்கப் போட்ட பின் அழகாகிடுவார். என் பாட்டு வாத்தியார் வீட்டில் ஒருமுறை நூலைக்கொண்டு அவரே செஞ்ச பிள்ளையாரை பார்த்ததிலிருந்து நானே பிள்ளையார் குடை செய்ய ஆரம்பிச்சுட்டேன். இந்த வருசமும் நம்ம கைவண்ணத்துல செஞ்ச குடைதான் பிள்ளையாருக்கு. போரடிக்குதுன்னு என்னிக்கு தூக்கி அடிக்க போறார்ன்னு தெரில!!
தேவையான பொருட்கள்:
வுல்லன் நூல்
குச்சி
பழைய நியூஸ் பேப்பர்
கற்கள்
பசை
மூங்கில் குச்சி, இல்லன்னா, சைக்கிள் போக்ஸ் கம்பில செஞ்சா வளையாது. எனக்கு இது ரெண்டுமே கிடைக்காததால் பயன்படுத்தாத தென்னந்துடைப்ப குச்சியை எடுத்துக்கிட்டேன். ஒரே அளவில் ஆறு இல்லன்னா எட்டு குச்சி எடுத்துக்கனும். ப்ளஸ் குறி மாதிரி குச்சியை வச்சு நல்லா இறுக்கமா கட்டிக்கனும்.
அடுத்து, இன்னொரு குச்சியை வச்சி கட்டிக்கனும். எங்க வீட்டுல இருக்குறதுங்க மூணு குச்சி போதும்ன்னு சொன்னதால் அத்தோடு விட்டுட்டேன். இன்னொரு குச்சியை கட்டிக்கிட்டா இன்னும் நல்லா இருந்திருக்கும்.
ஒவ்வொரு முறையும் குச்சில ஒரு நூலை சுற்று சுத்திக்கனும். இப்படியே நூலை சுத்திக்கிட்டே இருக்கனும். கலர் மாத்தனும்ன்னு நினைச்சா நூலை கட் பண்ணி, இன்னொரு நூலை முடி போட்டுக்கிட்டால் போதும்.
பிடிச்ச கலர் நூல்களை சுத்திக்கனும். நான் மிச்சம் மீதி நூலை சுத்திக்கிட்டேன்.
குஞ்சலத்துக்கு வுல்லன் நூலை கையில் சுத்தி வளையமாக்கிக்கனும்...
நூல் பிரிஞ்சுடாம இருக்க, வளையத்துக்குள் இன்னொரு நூலை நுழைச்சு முடி போட்டுக்கனும். முடி போட்ட எதிர் முனையை கட் பண்ணிக்கிட்டால் குஞ்சலம் ரெடி.
ஆறு குச்சிக்கு ஆறு குஞ்சலம் ரெடி.
க்ளூ போட்டும் ஒட்டிக்கலாம் இல்ல ஒரு நூல் கொண்டும் குச்சியில் இணைக்கலாம்.
இப்படியே எல்லா குஞ்சலத்தையும் இணைச்சுக்கனும்.
அங்கங்க கற்களை ஒட்டிக்கிட்டா குடையின் மேல்பகுதி ரெடி.
குடையின் கைப்பிடிக்கு பழைய நியூஸ் பேப்பரை கனமான கொம்பு மாதிரி சுத்திக்கனும். நியூஸ் பேப்பர் தெரியாம இருக்க வுல்லன் நூலை சுத்திக்கனும்.
இப்படி வெறுமனே இருந்தால் நல்லா இருக்குமா?! அதனால் சில்க் த்ரெட் நூலில் பத்து இழை எடுத்து சுத்திக்கிட்டேன்.
குடையின் கைப்பிடி ரெடி.
குடையின் மேல்பகுதிக்குள் க்ளூவை வச்சு ஒட்டிக்கனும்.
பிள்ளையார் குடை ரெடி. ஒரு மணி நேரத்தில் ரெடி பண்ணிட்டேன்.
கடைகளில் பத்து ரூபாய்க்கு குடை கிடைக்கும். ஆனா, நம்ம கையால் செஞ்சால் ஒரு திருப்தி. எங்க வீட்டு சாமிக்கு வச்சு அழகு பார்த்தாச்சு.
பிள்ளையாருக்கு மட்டும்தான் குடையான்னு என் வீட்டு கடைக்குட்டி என் மூத்தார் பேரன் தன் தலையில் வச்சுக்கிட்டு அழகு பார்த்தபோது...
அடுத்த வாரம் இன்னொரு பிள்ளையாருக்கு பழைய சிடியில் செஞ்ச குடையை பார்க்கலாம்...
நன்றியுடன்,
ராஜி
மிகவும் அழகு...
ReplyDelete10 ரூபாய்க்கு எல்லாம் குடை கிடைக்காது...
அப்படியாண்ணே!? நான் பஜாருக்கு போயே ரொம்ப நாள் ஆச்சுது. எனக்குதான் கிச்சன்ல பாத்திரத்தோடு மல்லுக்கட்டவே சரியா இருக்கே!
Deleteதன் கையே தனக்குதவி! சிறப்புதான்.
ReplyDeleteஇதைவிட அழகான குடை கிடைக்கும். ஆனா, நம்ம கையால் செஞ்சால் ஒரு சின்ன திருப்தி கிடைக்கும். அதான் இந்த மெனக்கெடல்
Deleteஅடடே சைடு வருமானம் ஸூப்பர்.
ReplyDeleteஓசிலதான் வாங்கிட்டு போவாங்க. இல்லன்னா, பைசா குறைச்சு கேப்பாங்கண்ணே.
Deleteஅழகு. குடை இப்போதெல்லாம் விதம்விதமாக கடைகளில் கிடைக்கிறது. நம் ஊரில் தான் இந்தக் குடை எல்லாம். தில்லியில் கிடையாது!
ReplyDeleteஆமாம்ண்ணே. பேப்பர் தட்டிலிருந்துகூட செய்றாங்க. எனக்கென்னமோ, வீட்டில் செஞ்சாதான் திருப்தி.
Deleteபன்முகத் திறமையாளர்
ReplyDeleteஅப்படிலாம் இல்ல சகோ.சும்மா பொழுதுபோக்குக்காக...
Deleteகுடை அழகு. தயாரிப்பதைப் பகிர்ந்த விதம் அருமை.
ReplyDeleteநன்றிப்பா
Deleteநூலிலே குடை வண்ணம் கண்டாள்
ReplyDeleteபாட்டாவே படிச்சாச்சா?! நைஸ்ப்பா
Delete