Friday, February 15, 2019

திருமலை முத்துக்குமாரசுவாமி கோயில்-பண்பொழி(பைம்பொழில்)

ரொம்ப நாட்களாகவே வடநாட்டு  சுற்றுப்பயணம் செஞ்சதால உள்ளூர் சாமிகளாம் கோவிச்சுக்குது. அப்படி சொல்லத்தான் ஆசை. ஆனா, வடநாட்டு டூரினால் அங்க சாப்பிட்ட ரொட்டி, வறட்சியான இடங்கள்ன்னு சுத்தி, சுத்தி நாக்கும், உடலும், மனசும் சோர்ந்து போச்சுது. குற்றாலம், திற்பரப்பு, பாபநாசம் மாதிரியான இடத்துக்கு  போய் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு, அப்படியே கண்ணுக்கு குளிர்ச்சியா வாய்க்கா, வரப்பு, தோட்டம், தொறவுன்னு கூலாய் இருந்துட்டு வரலாம்ன்னு நினைச்சு, உள்ளூரில் எங்க போகலாம்ன்னு ஹவுஸ் பாஸ்கிட்ட ஆலோசிக்க, குற்றாலம்லாம்  பழசு. போரடிக்குது, அதனால் திருநெல்வேலியில் ஒரு ஊட்டி ன்னு சொல்லப்படும் பண்பொழிதான் அவங்களுக்கு நினைவுக்கு வந்தது போல! அதையே சபையில் முன்மொழிய, ஹவுஸ்பாஸ் பேச்சுக்கு மறுபேச்சேது?! வழக்கம்போல நான் அதை வழிமொழிய, பொட்டி, படுக்கைலாம் கட்டிக்கிட்டு பண்பொழிக்கு கிளம்பிட்டோம்.  ஒரு இடத்துக்கு போகும்முன் அந்த இடத்தை பத்தி தெரிஞ்சுக்கிட்டு போறது எப்பயுமே நல்லது. அதனால், கல்யாணம் கட்டும்முன் வரனை பத்தி ஊருக்குள் விசாரிக்குற மாதிரி பண்பொழி ஊரை பத்தி கூகுளார்கிட்ட கேட்க, அட, எரும! அந்த ஊர் பேரு பண்பொழி இல்ல. பைம்பொழில்ன்னு சொல்ல, என்னடா! ஆரம்பமே பல்பா இருக்கேன்னு சொல்லி பொட்டி படுக்கை, கட்டுச்சோத்தை கட்டிக்கிட்டு ரெடியாகி, வண்டி கட்டிக்கிட்டு, போவோமா ஊர்கோலம்ன்னு சின்னத்தம்பி குஷ்பு மாதிரியும், பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க...ன்னு உயிரே உனக்காக நதியா மாதிரியும் ட்ரீமில் அருவி, புல்வெளியில் பாடி, ஆடி பைம்பொழில் ஊருக்கு போய் இறங்கினா.... அந்த ஊரிலிருக்கும் திருமலை முத்துக்குமார சுவாமியை தரிசிக்க கூட்டிக்கிட்டு போய்ட்டாங்க. பிரியாணின்னு சொல்லி புளிச்சோறு வைத்த கதையாகிட்டுது. பயணக்கட்டுரை எழுதவேண்டிய என்னைய புண்ணியம் தேடி எழுத வச்சுட்டாங்க :-(
 திருநெல்வேலி வழியா தென்காசி, தென்காசியிலிருந்து பண்பொழி, அங்கிருந்து  மேக்கரைன்ற கிராமத்தை அடைந்தோம். எல்லோரும் சொன்னதுபோல திருநெல்வேலியில் ஒரு ஊட்டி என்பது சரியாகத்தான் இருந்தது. எங்கு பார்த்தாலும் பச்சைபசேலென மலைகள், வயல்வெளிகள், சின்ன சின்ன கிராமங்கள், அழகான குடிசைவீடுகள், எப்பொழுதும் தூறிக்கொண்டிருக்கும் சாரல் மழை. ஆகா! திருநெல்வேலியில் இப்படியொரு இடமா?! என ஆச்சர்யமாக இருந்தது. இந்த இடம் கேரளா பார்டரில் இருக்கிறது .இந்த வழியா சென்றால் கேரளாவின் அச்சன்கோவில் வழி, புனலூருக்கு சென்றுவிடலாம். நாங்க சென்ற நேரம் மேகம், தூறல், வெயில்ன்னு மாறிமாறி கிளைமேட் சூப்பரா இருக்கு. உண்மையில் அங்கே இருப்பவர்கள் புண்ணியம் செய்தவர்கள்தான் போல! நாங்க சென்ற நேரம் அதிகாலை நேரம்.  பனிபடர்ந்த சாலைகளை பார்ப்பதற்கே கொள்ளை அழகு.  அதிலிருந்து வரும் சில்லென வீசும் காற்று முகத்தில்பட்டு மனசு ஆனந்தத்தையும், மனசு  முருகனின் அருளையும் ஒருசேர உணர்ந்தது.
இந்த பண்பொழியை தாண்டிச்செல்லும் வழி அழகோ அழகு. சுமார் 30 வருடங்களுக்கு முன்பு இந்த இடம் பைம்பொழில்ன்னு அழைக்கப்பட்டிருக்கு.  பொழில்ன்னு சொன்னா  வெப்பமண்டலத்தில் செழிப்பாகப் பெய்யும் மழையை  அல்லது பொழில் என்னும் சொல் மழைக்காடு என்பதையும் பொருள்படும். பசுமையான இந்த இடத்துல அடிக்கடி பெய்யும் மழையால்கூட இந்த இடத்திற்கு பைம்பொழில் ன்னு அர்த்தத்தில் வந்திருக்கலாம். நாளடைவில் அது சுருங்கி பண்பொழி ஆகிவிட்டது. இந்த பண்பொழிலிருந்து கொஞ்ச தூரத்துல இருக்கிறது மேக்கரை கிராமம். இங்குதான் திருமலை முருகன் கோவில் இருக்கிறது. காலை உணவை முடித்துக்கொண்டு கோவிலுக்கு செல்லத் தயாரானோம் முக்கியமா இங்கே சொல்லவேண்டியது என்னன்னா, இந்த இடத்தில நல்ல ஹோட்டல் கிடையாது. உணவுக்கான ஏற்பாட்டை தென்காசியிலேயே முடிச்சுக்கனும்.  எந்த உணவுனாலும் பரவாயில்லைன்னா இங்கிருக்கும் சின்னசின்ன  ஹோட்டல்களில் சாப்பிட்டுக்கலாம்.
இதுதான் கோவிலின் மலையடிவார நுழைவு வாயில். இங்க மலைமேல்வரை வாகனத்திலும் போகலாம். ஆனா, அதுக்குன்னு தனியா கட்டணம் வசூலிக்கப்படுது. ஆனா நாங்க படிக்கட்டுகளில் நடந்தே போகணும்ன்னு முடிவெடுத்து நடக்க ஆரம்பித்தோம். இந்த திருமலை முத்துக்குமாரசுவாமி முருகன் திருக்கோயில்.  இது ஒரு தேவார வைப்புஸ்தலமாகும். அது என்ன வைப்புஸ்தலம்?!ன்னு பார்க்கலாமா?! தேவாரத்தில் தனிப்பாடல்களா  பாடப்பெறாமல், பதிகத்தின் இடையிலும், பொதுபதிகத்தின் இடையிலும் குறிப்பிடப்படும் தலங்களாகும். இவை சைவர்களால் போற்றப்படும் தலங்களாகும். இந்த தேவார வைப்புத் தலங்கள், தேவாரத்தலங்கள்  276-லில் இருந்து வேறுபட்டவை.  மொத்தமுள்ள 147  வைப்புத்தலங்களில் இந்த தலம் 89 வது வைப்புதலமாகும் .
இங்கிருந்துதான் படிக்கட்டுகள் ஆரம்பிக்கின்றன.இந்த திருமலை 500 அடி உயரமுடையமலைமீது ஏறிச்செல்ல 626 படிக்கட்டுகள் இருக்குறதான் சொன்னாங்க.  இந்த மலையை  திரிகூடமலைன்னும் சொல்வாங்க. மூன்று நதிகள் சேருமிடத்தை திரிவேணி சங்கமம்ன்னு சொல்றமாதிரி  இரண்டு மலைகள் இந்த மலையினைத் தொட்டுக்கொண்டிருப்பதுபோல் அமைந்திருப்பதால் இந்த பெயர். இன்னொரு  ஆச்சர்யப்படும் தகவல் என்னன்னா இந்த படிக்கட்டுகளில் ஏறி மூச்சுவாங்கியபடி நின்னுக்கிட்டிருந்தால்  உள்ளூர் பாட்டி ஒன்னு அசால்ட்டா மலையேறிக்கிட்டு இருந்துச்சு. மலையேறினா மூச்சுவாங்குதா?! ,இதுக்கேவான்னு கிண்டலா கேட்டு. இங்கிருந்த ஒரு அம்மா பத்தின  கதை சொல்ல ஆரம்பிச்சது. மூச்சு வாங்கியபடியே நாங்களும், கதைக்கேட்க ஆரம்பிச்சோம். 
இந்தஇடம் தான் படிக்கட்டுகளின் பின்பக்கம். அதாவது மேலிருந்து பார்த்தால் தெரியும் நுழைவுவாயிலின் பின்பக்கம். அந்தக்காலத்தில் இவ்வளவு பெரிய படிக்கட்டுகளை கட்டவும், கோவிலின் கல்தூண்கள், உத்திரங்களையும் கொண்டு செல்ல யானைகளைதான் பயன்படுத்தினார்களாம்.  இப்ப இருக்குறமாதிரி கயிறுகள் இல்லாததால் அந்த கற்களை இழுத்துச்செல்ல பனைமட்டைகளில் உள்ள நார்களில் இருந்து தயாரிக்கப்படும் கயிறுகளினால் அந்த தூண்களை கட்டி இழுத்து செல்வார்களாம். என்னதான் உறுதியாக இருந்தாலும் சிலநேரம் கற்களோடு உரசும்போது கயிறுகள் அறுந்து கற்கள் வேகமாக உருண்டுவிழுமாம். அப்பொழுது இந்தப்பகுதியில் வசித்த சிவகாமி பரதேசி அம்மையார் என்ற பெண்துறவி தன் உயிரையும் பொருட்படுத்தாது "முருகா " ,"முருகா" என்று கூறிக்கொண்டு அந்த தூண்களை தன் தலையால் தடுத்து நிறுத்துவாராம்!! மறுபடியும் கயிறுக்கொண்டு அந்த தூண்களை யானைகளை கொண்டு இழுப்பதுவரை அந்த அம்மையார் தாங்கிக்கொண்டு இருப்பாராம் இந்த அற்புதமான சக்தியினை மலைமேலிருக்கும் முருகன் அவருக்கு அருளியதாக சொல்வார்களாம். சிலநேரங்களில் வாழைமட்டைகளை ஒன்றாய் கட்டி அதன்மேல் கற்ககளை வைத்து இழுத்து மலைமேல் கொண்டுசெலவாராம். இவருக்கு இந்த கோவிலில் சிலை வைக்கப்பட்டுள்ளதாம்.
யார் இந்த சிவகாமி அம்மையார் என்று கேட்டதற்கு பக்கத்தில இருக்கிற பண்பொழிக்கு அருகில் இருக்கிற அச்சன்புதூர் என்கிற கிராமத்தில்தான் அந்த அம்மையார் பிறந்து வளர்ந்தாங்களாம். அவருடைய கணவர் பெயர் கங்கைமுத்து, கல்யாணமாகி ரொம்பகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாததால இந்த கோவிலுக்கு வந்து இங்கிருக்கும் முருகப்பெருமானிடம் மனமுருக வேண்டிநின்றாராம் .உனக்கு கல்மண்டபம் கூட கட்டுகிறேன் என்று சொல்லி கற்களை எல்லாம் வாழைமட்டையில் வைத்து இழுத்து இருவரும் ஒருவழியாக ஒரு கல்மண்டபத்தை கட்டி முடித்தார்களாம். அப்பொழுதும் அவருக்கு குழந்தைபாக்கியம் கிடைக்கவில்லை. அதற்காக அவர் முருகனை பழிக்கவில்லையாம்.சரி முருகனுடைய விருப்பம் அதுவானால் நான் மனமுவந்து அதை ஏற்றுக்கொள்கிறேன் எனச்சொல்லி மனதை சாந்தப்படுத்திக்கொண்டு முருகப்பெருமானுக்கு தொண்டு செய்து கொண்டிருந்தாராம்..
அப்படி இறைபக்தியிலும்,  கோவிலுக்கு தொண்டுசெய்வதிலும் தன்காலத்தை ஒட்டிக்கொண்டிருந்த ஒருசமயம் அந்த கோவிலுக்கு வரதர் மஸ்தான்ன்ற ஒரு மகான் வந்து தங்கினாராம். அவரிடம் தன் குறைகளை கூறினாராம் இந்த சிவகாமி  அம்மையார். சிறிதுநேரம் கண்மூடி மௌனத்தில் அமர்ந்திருந்த அந்த மகான், அவரிடம் நீ இந்த முருகனையே மகனாக ஏற்றுக்கொள் என்று கூறினாராம். மகானின் வாக்கு அந்த முருகனின் வாக்காகவே எடுத்து புளியரைன்ற கிராமத்திகிருந்த தனது சொத்துக்களை முருகப் பெருமானுக்கு எழுதி வைத்துவிட்டார். அவரது கணவர் காலமானபிறகு சிவகாமி  அம்மையார் துறவறம் பூண்டு, சிவகாமி பரதேசி அம்மையார் என அழைக்கப்பட்டார். அப்பொழுதும் அவருக்கு சோதனை விடவில்லை. இப்பொழுது இருக்கிற அரசியல்வாதிகளைப்போல் ,அப்போதிருந்த சிலர், இந்த அம்மையார் கோவிலுக்கு எழுதிவைத்த சொத்துக்களை அபகரித்துவிட்டனர். அப்பொழுது அந்த இடங்கள் எல்லாம் திருவிதாங்கூர் கட்டுப்பாட்டில் இருந்ததால் சிவகாமி அம்மையார் திருவனந்தபுரம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அவர் கோவிலுக்கு தானமாக கொடுத்த நிலத்தின் கல்வெட்டு சாசனங்களை கோர்ட்டில் காட்டி, அந்த சொத்துக்களை கோவிலுக்கே திரும்ப கிடைக்க வழிசெய்தார். அந்த கல்வெட்டுகளின் நகல் படிவம் இன்றும் கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று அந்த உள்ளூர் பாட்டி சிவகாமி பரதேசி அம்மையார் பற்றி சொல்லிகொண்டுவந்தார்
மலைப்பாதையின் துவக்கத்தில் வல்லப விநாயகர் சன்னதி இருக்கு அதுப்போல அங்கிருக்கும் அதே இடத்தில இருக்கும் பாதமண்டபத்தை தரிசித்துதான் நாம் மலையேற வேண்டுமாம். அங்கு இரண்டு பாதங்கள் இருக்கின்றன. இப்ப பாதையின் நடுவில் ஒரு விநாயகர் சன்னதி இருக்கிறது. இந்த சந்நிதிக்கு பெயர்தான்  நடுவட்ட விநாயகர் சன்னதி என்று அழைக்கப்படுகிறார். பின்னர் அங்கேயே ஒரு இடும்பன் சன்னதி இருக்கிறது. அதேப்போல் மலையுச்சியில் ஒரு உச்சிப்பிள்ளையார் சன்னதி இருக்கிறது. அந்த சன்னதியில் 16 படிக்கட்டுகள் இருக்கிறது. வாழ்வில் ஒருமனிதன் அடையவேண்டிய 16 பேறுகளை குறிப்பதாய்  என்று சொல்லப்படுது .
இந்த கோவிலின் தல வரலாற்றை பார்த்தால்,  இத்திருமலையில் ஆதிகாளி கோவிலின் அர்ச்சகராக இருந்த பூவன் பட்டர்தான் இங்கு பூஜைகள் செய்துவந்தார். தினமும் அங்கிருந்த வேலுக்கு அபிஷேகம், பூஜைகள் செய்த்துவந்தார். ஒருநாள் பூஜையை முடித்துவிட்டு மதியம் ஓய்வாக ஒரு புளியமரத்தடியில் படுத்திருந்தபோது, அவரது கனவில்  முருகப்பெருமான் தோன்றி அச்சன்கோயிலுக்குப் போகிற வழியில் புழுதியாற்றுக் கோட்டையில் ஓர் வனத்தில்  தான் கோயில் கொண்டிருந்ததாகவும், மழை வெள்ளத்தில் குமரன் கோயில் அழிந்து, குமரப்பெருமானின் திருஉருவம் ஆற்று மணலில் புதைந்தது இருப்பதாகவும். அதை தோண்டியெடுத்து எனக்கு கோவில் எழுப்பு. நான் புதைந்திருக்கும் இடத்தை ஒற்றை வரிசையாகச் செல்லும் எறும்புக்கூட்டம் நின்று காட்டும் என அடையாளம் கூறினார். இதே செய்தியைப் பந்தள அரசர் கனவிலும் தெரிவித்திருப்பதாக முருகன் கூறி மறைந்தார்.
கனவில் முருகன் இட்ட கட்டளையை ஏற்று பூவன் பட்டரும்  பந்தள மன்னரும்  முருகன் சிலை புதைந்து கிடந்த இடத்தைக் கண்டுபிடித்து, பயபக்தியுடன் எடுத்து வந்து திருமலையின் மீதுள்ள குவளைப் பொய்கையின் அருகே உள்ள புளியமரத்தினடியில் வைத்து முதன்முதலில் பூஜைகள் செய்தார்கள். அப்போது பந்தளத்தை ஆண்ட மன்னர் உடனே மலைமேல் ஏறுவதற்கு வசதியாக 623 படிக்கட்டுக்கள் கொண்ட இக்கோவிலை எழுப்பினார். அந்த படிக்கட்டுகள் ஸ்கந்த கோஷ்டப்பித்ருக்கள் வசிக்கும் தேவ படிக்கட்டுக்கள் எனச் சொல்லப்படுகிறது. ஆகையால், இந்த தலத்திற்கு வந்து முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் நம்  சந்ததிகளுக்கு நல்ல சிறப்பான வாழ்வு அமையும், நல்ல வாரிசுகள் உருவாகுமென ஐதீகம் உள்ளது. 
பாதிமலையில் இரண்டாக பிரிந்து செல்லும் வகையில் பாதையை அமைத்துள்ளனர். எல்லா கோவில்களைபோல் இங்கும் கேமரா தடை செய்யப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை சொல்லுவேன்னு எதிர்பார்க்காதீங்க!  தாராளமாய் போட்டோ எடுத்து தள்ளலாம். எல்லா கோவில்களைப்போல் இங்கும் காதலர்களின் சேட்டை இருக்கு. சில்  என்ற காற்று,மலைப்பாதை,பெருசுகள் ஏறிவர ஆகும் காலதாமதம்லாம் இளசுகளுக்கு வசதியாகிட்டுதுது போலும் ,குறிஞ்சி நிலத்து கடவுள் வள்ளியை காதல்மணம் புரிய எப்ப மலையை தேர்ந்தெடுத்தாரோ அப்பத்திலிருந்து வழிவழியா இப்பவரை காதல்,  மலைகளில் தொடர்கிறதுபோல! சரி நமக்கு எதுக்கு இந்த ஆராய்ச்சி?! நமக்குதான் வயசாகி காலங்கடந்துட்டுதே! ,வந்தமா சாமி கும்பிட்டமா போகணும்ன்னு இருக்கனும்ன்னு மனசை தேத்திக்கிட்டு கோவிலுக்கு போகலாம். 
திருமலை கோவிலினருகே செல்லும் வகையில் பாதைகள் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. மலையேற முடியாதவர்கள், ,மலைக்கோவிலில் வாகனம் மூலமும் மேலே செல்லலாம். இருசக்கர வாகனங்களுக்கும் அனுமதி உண்டு. நல்ல கார் பார்க்கிங்க் வசதியும் இருக்கிறது. அந்த இடத்திலிருந்து குறைவான படிகள் ஏறினால் கோவிலுக்கு சென்றுவிடலாம் .
இளைப்பாற படிக்கட்டுகளில் ஆங்காங்கே மண்டபங்கள் கட்டி வச்சிருக்காங்க.  கால்வலிச்சுதுன்னா இளைப்பாறிவிட்டு செல்லலாம். ஒருவழியாக மலை கோவிலுக்கு மேலே வந்துவிட்டோம்.  இங்க ஒருவிஷயம் கவனிச்சோம்னா தெரியும். நெல்லை மாவட்ட கிராமப்புறங்களில் நிறைய பேருக்கு மூக்கன், மூக்காயி, மூக்கம்மாள்ங்கிற பெயர்கள் இருக்கும். ஆண் பிள்ளைகளும் பதினைந்து வயது வரைகூட மூக்கு குத்தி ஒரு சிறிய வளையம் அணிந்திருப்பதை இப்பகுதியில் காணமுடியும். மேலும், குழந்தை பிறந்து தொடர்ந்து இறந்துக்கொண்டே இருந்தால் மூக்கு குத்தி, மூக்கன் என பெயரிடுவதாக வேண்டிக்கொண்டால் அந்தக் குழந்தை பிழைத்துக் கொள்ளும் என்பது நீண்டகால நம்பிக்கை.  இரண்டு குழந்தைகள் தவறி, மூன்றாவது பிறக்கும் குழந்தைக்கு இந்தச் சடங்கை செய்வது மரபாக இருந்து வந்துள்ளது. காரணம் இந்த திருமலை முருகனின் இன்னொரு பெயர்தான் மூக்கன். இதற்கும் சுவாரஸ்யமான கதை ஒன்று சொல்லப்படுது.
முருகப்பெருமான் கனவில் வந்து பூவன் பட்டரிடம் சொன்னவுடன், பந்தளமன்னரிடம் தகவல் சொல்லிவிட்டு ஊர் பொதுமக்கள் புடைசூழ கோட்டைத்திரடு கிராமத்திற்கு சென்று முருகப்பெருமான் சுட்டிக்காட்டிய இடத்தை தோண்டும் போது, தவறுதலாக முருகன் சிலையின் மூக்கில் கடப்பாரை பட்டு சிறுதுளி உடைந்துவிட்டது. அதோடுகூட முருகன் சிலை பார்ப்பதற்கு அழகாக இருந்தது. உடனே கிராமப்புரத்து மக்கள் இதைப்பார்த்து முருகன் என்று சொல்வதற்கு பதிலாக மூக்கன் என்ற செல்லப்பெயரை சுவாமிக்கு வைத்து விட்டார்களாம்  பந்தளத்தை ஆண்ட ராஜாக்கள்தான் பூவன் பட்டரின் வேண்டுகோளின்படி இப்பொழுது கேரள எல்லையாக இருக்கிற திருமலைக் கோயிலையும் எழுப்பியுள்ளனர். இந்தஇடத்தை  சுற்றிதான் ஐயப்பன் ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழை இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.
ஒருவழியாக மலையுச்சிக்கே வந்துவிட்டோம். இங்கே முதலில் ஆதிஸ்தானம்ன்ற ஒரு கோவில் இருக்கிறது. இதுதான் முதலில் வேல் இருந்த இடம் எனச் சொல்லப்படுது. இங்கு நாகராஜருக்கும் ஒரு சந்நிதி இருக்கிறது. எல்லோரையும் வழிபட்டு நாம இப்ப மூலஸ்தானம் செல்லலலாம்.  வாங்க! மலையிலிருந்து பார்க்கும்போது   பச்சைப்பசேலென்ற வயல்வெளிகளும், தென்றல் காற்றும், மலைகளும் நம் மனதுக்கு ரொம்ப சந்தோஷமாகவும் இருக்கு. இந்த மூலஸ்தானம் என்று சொல்லப்படுகிற மரம்  சுமார் 2000 ஆண்டுகள் பழமையான மரமாகும். அதனாடியில் உள்ள சன்னதியை இன்றும் உத்தண்ட வேலாயுதம் எனச்சொல்கிறார்கள். பல நூறாண்டுகளுக்கு முன்னர் நெல்லையம்பலம் மயிலப்பன்ன்ற முருக பக்தர்தான் இப்பொழுது இருக்கும் ஆலயதை தொடக்கி முருகன் திருவுருவத்தைப் பிரதிஷ்டை செய்து, மானியங்களையும் கொடுத்தாராம். அதை தொடர்ந்து சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வடகரையார் என்னும் சொக்கம்பட்டி ஜமீன், அம்பலவாண முனிவர் மற்றும் நெல்லை மாவட்டம் நெடுவயலைச் சார்ந்த சிவகாமி பரதேசி என்னும் அம்மையார் ஆகியோர் பல்வேறு திருப்பணிகளைச் செய்துள்ளனர். அதில் சிவகாமி அம்மையாருடைய பணிகளை பற்றி நாம ஏற்கனவே பார்த்துவிட்டோம்.
இதுதான் மூலவர் சன்னதி முருகப்பெருமானுக்கு உரிய நட்சத்திரங்களாக விசாகம், கார்த்திகை, உத்திரம் உள்ளது. ஆகவே, விசாக நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு சமயம் கிட்டும்பொழுதெல்லாம் இந்த தலம் வந்து முருகனை வணங்கினால் நலம் பல பெற்று வாழலாம் என்பது ஐதீகம்.இங்கே நிறையபேர் கோவில் பிரகாரங்களில் தீபம் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தி வணங்கிக் கொண்டு இருந்தனர்.
மூலஸ்தானத்தில் நுழையும்போது மயில் நம்மை வரவேற்கிறது கருவறையில் பாலமுருகன் உள்ளார். அடுத்த பிரகாரத்தில் சாஸ்தா, கஜலஷ்மி, சண்டிகேஸ்வரர், பைரவர் காளிகாம்பாள் ஆகிய தெய்வங்கள் அருள்பாலிக்கிறார்கள்.விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்தக் கோயிலுக்கு வாழ்வில் ஒருமுறையாவது வந்து வழிபட்டால் அவர்கள்வாழ்க்கை விருத்தியாகும் என்பது ஐதீகம்.‘வி’ என்றால் உயர்வானது, ‘சாகம்’ என்றால் ஜோதி எனப்படும்.‘விசாகம்’ என்றால்  மேலான ஜோதி என்று பொருள். இந்த நட்சத்திரம் விமலசாகம், விபவசாகம், விபுலசாகம் என்ற மூவகை ஒளிக் கிரணங்களை உடையது என்றும், இந்த மூன்று ஒளிக்கிரணங்களும் இந்த மலை மீது படுவதால், விசாக நட்சத்திரக்காரர்கள் இங்கு வந்து வழிபட, தங்கள் தோஷங்கள் அனைத்தும் நீங்கி, புனர்வாழ்வு கிட்டுமென்றும், செல்வங்கள் பெருகும் என்றும் விசாக நட்சத்திரத்தினர் ஆயுள் முழுவதும் சென்று வழிபடுவதற்கு ஏற்றது என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.
இந்த தலத்து மூலவரான திருமலை முருகன் நான்கு கைகளுடன் மேல்நோக்கிய வலது கையில் சக்தி ஆயுதமும், மேல்நோக்கிய இடது கையில் வச்சிராயுதமும், கீழ்நோக்கிய வலது கையில் அபயக்கரமும், கீழ்நோக்கிய இடது கையில் சிம்ம கர்ண முத்திரையுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். இம்முருகனுக்குப் பார்வதி தேவி தன் வாயால் அருளிச் செய்த “தேவி பிரசன்ன குமார விதி”ப்படி எட்டுக்கால பூசைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இக்கோவிலில் மற்ற கோவில்கள் போன்று பள்ளியறையில் சுவாமியைப் பாதுகை செய்வது இல்லையாம்,மூலவருக்குப் பால், பழம், ஊஞ்சலுடன் சயனப் பூஜை மட்டுமே செய்யப்படுகிறதாம்.
இதுதான் திருமலைக்காளி கோவில். இங்கு காளிதேவி மலைமேல் நின்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருமலையின் வெளிப்பிரகாரத்தில் வடமேற்குப் பகுதியில் தனிக்கோயிலாகத் திருமலைக்காளி கோயில் அமைந்துள்ளது. இங்கே காளியம்மன் வடதிசை நோக்கி (கோட்டைத் திரடு) அமர்ந்து அருள்பாலிக்கிறார். இத்திருக்கோயில் முருகக் கடவுள் பிரதிஷ்டைக்கு முன்பே அமைந்தது என்பர். இந்த சந்நிதி இடும்பன் சன்னதி படிகள் செல்லுமிடத்தின் மேற்கே, தனிச்சன்னதியாக அமைந்துள்ளது.இந்த காளி  திருமலையின் காவல் தெய்வமாகும். திருமலைக்கோயிலின் உள்பிராகாரத்தில் வடகிழக்கில் ஈசானத்தில் தெற்கு நோக்கி கால பைரவர் சன்னதி அமைந்துள்ளது. ஐந்தரை அடி உயரமுள்ள கம்பீரமான தோற்றத்துடன் பைரவர் இங்கு வீற்றிருக்கிறார்.
இங்க முருகன் சந்நிதியை அடுத்து 16 படிகள் ஏறிச்சென்றால் விநாயகருக்கென தனி சன்னதி இருக்கு. அவர் உச்சிப்பிள்ளையார் என அழைக்கப்படுகிறார். விசாகம், கார்த்திகை, உத்திரம் ஆகிய முருகனுக்குரிய நட்சத்திர நாட்களில் இம்மலையில் தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் ஓடவள்ளி, நளமூலிகை, திருமலைச் செடி ஆகிய மூலிகைகளும் வளர்ந்தன. செல்வவிருத்திக்காக, திருமலைசெடியின் வேரையும், தனகர்ஷண யந்திரத்தையும் இணைத்து ஒரு காலத்தில் பூஜை செய்திருக்கிறார்கள். இன்று இந்த மூலிகைகளை அடையாளம் காண முடியாவிட்டாலும் இங்கு சென்று வந்தவர்களின் வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்பது பலருக்கு கண்கூடாக நடத்த அனுபவம்.
இதுதான் மலையுச்சியில் இருக்கும் அஷ்டபத்ம தீர்த்த குளம். அகத்திய முனிவரால் உருவாக்கப்பட்டதென சொல்லப்படுது ஆனா இப்ப பூஞ்சுனைன்னு சொல்லப்படுது. முருகப்பெருமானை தரிசிக்க செல்லும் முன்பு இந்த  தீர்த்தகுளத்தில் தீர்த்தம் அருந்தி செல்ல நல்ல பலன் உண்டு சொல்வார்கள்.ஆனால் இப்பொழுது பாசிபடர்ந்து தீர்த்தகுளம் காணப்படுகிறது. , இந்த சுனையில் தினமும் ஒரே ஒரு குவளை மலர் மட்டும் பூக்குமாம்   அதை வைத்து உமையவளின் ஏழு சக்திகளான சப்த கன்னியர் எழுவரும் முருகப்பெருமானை பூஜித்தனராம். அதேப்போல் சப்தகன்னியர் சிலை சிவாலயங்களில் மட்டுமே இருக்கும். ஆனா,முருகன் தலமாக இருந்தாலும் இங்குள்ள தீர்த்தக்கரையிலும் சப்த கன்னியர் இருப்பது வேறு முருகன் கோவில்களில் இல்லாத சிறப்புன்னே சொல்லலாம் .
இதுதான் திருமலைக்கோவிலில் இருக்கும் உச்சிப்பிள்ளையார் கோவில். இதைப்பத்தி நாம ஏற்கனவே பார்த்தாச்சு. இந்த திருமலை பற்றிய கல்வெட்டு ஆய்வு குறிப்புகள் ஆய்அண்டிரன் என்னும் அரசன் ஆண்ட கவிரமலை என்றும், சிலப்பதிகாரத்தில் வரும் நெடுவேள்குன்றம் எனப்படும் குன்று இதுதான் என்றும், கண்ணகி இக்குன்றைக் கடந்தே சேரநாடு சென்றாள் என்றும் ஆராய்ச்சிக் குறிப்பேட்டில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழில் திருமலை முருகனைப் புகழ்ந்து பாடியுள்ளார். தண்டபாணி சுவாமிகள் இத்தலத்து முருகன்மீது பல பாடல்கள் பாடியுள்ளார். கவிராசபண்டாரத்தையா என்னும் புலவர்பெருமான் திருமலைமுருகன் பிள்ளைத்தமிழ், திருமலையமக அந்தாதி போன்ற நூல்களைப் இயற்றியிருக்கிறார். திருமலைமுருகன் குறவஞ்சி,திருமலை முருகன் நொண்டி நாடகம்,திருமலை கறுப்பன் காதல் போன்ற நூல்களும் இந்த திருமலை முருகன் கோவிலை குறித்து பாடப்பட்டுள்ளன. திருமலை முருகன் அந்தாதி திருமலைக் குமாரசுவாமி அலங்கார பிரபந்தம், திருமணிமாலை,திருத்தாலாட்டு போன்ற நூல்களும் இந்த தலத்து முருகப்பெருமான் பற்றி பாடுகின்றன.
அரசு அன்னதான கூடம் ஒன்று இங்கு இருக்கின்றது. ஒவ்வொரு மாதப்பிறப்பன்றும் காலை 6மணி முதல் இரவுவரை தொடர்ந்து வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது .சித்திரை முதல் நாள் படித் திருவிழா கோலாகலமாக கொண்டாட படுகிறது.வைகாசி விசாகம், கந்த சஷ்டி, கார்த்திகையில் தெப்ப உத்சவம், தைப்பூசம், தமிழ், ஆங்கில புத்தாண்டு சிறப்பான திருவிழாக்களாக கொண்டாடபடும் விழாக்களாகும்.
ஒருவழியாக தரிசனத்தை முடிச்சுட்டு மலைமேலிருந்து இறங்கிட்டோம். இங்க ஒரு அணைக்கட்டும்,அருவிக்கரையும் இருக்குன்னு யானையை புத்துணர்வு முகாமுக்கு கூட்டிப்போறதுமாதிரி கூட்டிப்போய்  உடலும், மனசும் புத்துணர்வு கொள்ள செய்தாங்க.   இதேமாதிரி அச்சன்கோவில் அருகிலும் அழகான அருவி ஒன்னு இருக்குது. இந்த கோவிலுக்கு திருநெல்வேலியிலிருந்து தென்காசி வந்து அங்கிருந்து வடக்கு திசையில் 12 கிமீ தொலைவில் இருக்கும் பண்பொழி கிராமத்திற்கு வரவேண்டும் சென்னையிலிருந்து வருபவர்கள் மதுரை மார்க்கமாக செங்கோட்டை  பேருந்து அல்லது ரயிலில் வந்து அங்கிருந்து சுமார் 7 கிமீ தொலைவில் உள்ள பண்பொழிக்கு வரலாம். விமானம் மூலம் வருவதுன்னா மதுரை மற்றும் திருவனந்தபுரம் விமானநிலையம் வந்து இங்க வரலாம். இந்த திருக்கோவில் நடை காலை 6 மணிமுதல் பகல் 1 மணிவரையும், மாலை 5 மணிமுதல் இரவு 8.30 மணிவரையும் திறந்திருக்கும்.

புண்ணியம் தேடி பயணத்தில் மீண்டும் ஒரு கோவிலிலிருந்து அடுத்தவாரம் பார்க்க்கலாம்..
நன்றியுடன் 
ராஜி 

21 comments:

  1. கேள்வி பட்டதே இல்லை... நன்றி சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. நானும் தான்ணே,ஆனா அந்த மேக்கரை என்னும் ஊர்,ரொம்ப அழகு,அதேபோல் சுந்தரபாண்டியபுரம்,அது ரோஜா படத்தில வரும் கிராமம்,அங்கேயும் சென்று பார்த்தேன்.இப்ப விளைச்சல் சரியா இல்ல.அங்கேயும் இயற்கை சில இடங்களில் தன் எழிலை இழந்து நிற்கிறது.

      Delete
  2. புதிய இடம், புதிய தகவல்கள். வைப்புஸ்தலம் அறிந்தேன்.

    அங்கேயே செட்டில் ஆகிவிடலாம் போல அழகாக, அமைதியாக இருக்கிறது.

    அழகிய அறிமுகம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோ, உள்ளே ஒரு அடவி நயினார்அருவி என்று ஒரு இடத்திற்கு கூட்டி சென்றார்கள்அவ்வுளவு அழகு,சிறிய கிராமம் தான் என்றாலும் பார்ப்பதற்கு மனதிற்கு சந்தோஷமே,இங்கேயும் ஒரு அணைக்கட்டு இருக்கிறது முதலில் திருமலை என்றவுடன் இங்கேயும் ஒரு திருமலையா என்று நினைக்கும் போது,நாராயணர் கோவிலோ என்றுதான் நினைத்தேன்,பின்னர்தான் திருமலை முத்துக்குமார ஸ்வாமி கோவில் என்று அருகில் சென்றவுடன் தெரிஞ்சுகிட்டேன். நிச்சயமா வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்கவேண்டிய ஸ்தலங்கள் இவை.

      Delete
    2. ஓ அடவி போயிட்டு வந்தீங்களா..சூப்பர்...நான் கீழ சொல்லிட்டு கருத்துகள் பார்த்தா இங்க சொல்லிருக்கீங்க...

      ஸ்ரீராம் ஆமாம் கண்டிப்பா அங்க செட்டில் ஆகிடலாம் அருமையான இடம் ஸ்ரீராம் ரொம்ப ஆரோக்கியமான வாழ்வு கிட்டும்!!!

      கீதா

      Delete
    3. ஆமாம் கீதாக்கா, அங்கே சென்றோம்.அங்கே பாதுகாப்பு நடவடிக்கைகள் நிறைய,சில தனியார் இடங்களிலும் அருவிகள் இருப்பதாக சொன்னாங்க,ஆனா நாங்க அங்கே போகல,புது இடம் என்பதால்,உங்களை மாதிரி தெரிஞ்சவங்க இருந்தா இன்னும் நல்ல சுற்றிப்பார்த்து இருக்கலாம்.

      Delete
  3. மிக அழகான புகைப்படங்கள்! அருமையான விபரங்கள்!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோ ....

      Delete
  4. புதிதாக ஒரு கோயில்.
    நீங்கள் ஒவ்வொரு கோயிலாக சென்று வந்து எழுதுங்கள். நாங்கள் அதை படித்து தெரியாத கோயில்களையெல்லாம் தெரிந்து கொள்கிறோம். தொடரட்டும் தங்களின் பணி

    ReplyDelete
    Replies
    1. நமக்கு தெரிந்த இடங்கள்தான் சகோ,ஆனால் இப்படி ஒரு கோவில் இருப்பது பெரும்பாலானவர்கருக்கு தெரிந்திருக்காது.அதேசமயம் தெரிந்தவர்களும் அதிகம் பகிர்ந்துகொள்ள வாய்ப்பில்லாமல் இருப்பதினால் தான்,தெரியாமல் இருக்கிறது.அந்த இறைவனின் கருணையும் வாய்ப்பும் இருந்தால் இன்னும் நிறைய கோவில்களுக்கு சென்று பதிவு எழுத ஆவல்...எல்லாம் அந்த இறைவனின் சித்தம்.

      Delete
  5. //குற்றாலம், திற்பரப்பு, பாபநாசம் மாதிரியான இடத்துக்கு போய் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு, அப்படியே கண்ணுக்கு குளிர்ச்சியா வாய்க்கா, வரப்பு, தோட்டம், தொறவுன்னு கூலாய் இருந்துட்டு வரலாம்ன்னு நினைச்சு, //

    அதானே எங்கூர்ப்பக்கம் போனாத்தான் இதெல்லாம் கிடைக்கும்...நாரோயில் மட்டுமில்ல தின்னவேலியும் நம்ம ஊராக்கும்..

    செங்கோட்டை பக்கம் வரை போயிருக்கீங்க...அப்படியே தென்மலா போயிருக்கலாமே...தென்மலா ஃபால்ஸ், டாம் ஃபாரஸ்ட் ஏரியா...சூப்பரா இருக்கும்...

    அதே போல அடவி ஃபால்ஸ்..டாம், அங்கருந்து கொஞ்சம் அப்பால போனா குடவுருட்டி ஃபால்ஸ் கேரளா தொட்டுருவீங்க...அருமையான இடங்கள் இவை அனைத்தும்....

    கண்டிப்பா செட்டில் ஆகலாம் இந்த ஏரியாவுல அத்தனை அழகு ஊர்...பச்சை போர்த்திதான் இருக்கும் பின்ன மேற்குத் தொடர்ச்சி மலையாச்சே...அப்படியே புனலூர் கொல்லம் போயிரலாம்...வழியே செமையா இருக்கும்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. கீதாக்கா,நீங்க நரோயிலை ,நார்நாரா பிரிச்சது போலத்தான்,அவங்களும் பைம்பொழிலை.பண்பொழி ஆக்கிவச்சி இருக்கிறாங்க.

      ஆமாக்க,அங்கே அடவிநயினார் அருவி இருப்பதாகவும், இப்பொழுது சிலரின் தவறான நடவடிக்கைகளால் பொதுமக்களை மிகுந்த பாதுகாப்பு உறுதி செய்துவிட்டுத்தான் அனுப்பறாங்களாம்,அனுமதி வாங்கணும்ன்னு சொன்னாங்க. அப்புறம் அங்கே ஒரு டேம் இருக்கு அதையும் பார்க்கமுடியல,கோவிலின் உச்சியில் இருந்து பார்த்தால் டேம் அழகாக தெரிகிறது.நேரமின்மை தான் காரணம்.மாலையானா சில இடங்களில் யானை நடமாட்டம் இருக்கும் சொல்லி ,சிலவழித்தடங்களில் போக்குவரத்து உறுதி செய்துவிட்டுத்தான் விடுறாங்க ..

      அப்புறம் அச்சன்கோவில் பக்கமும் ஒரு அருவி இருப்பதாக சொன்னாங்க ,அந்தவழியா போனா புனலூர் பிரிட்ஜ் வருமாம்,அது நிறைய படங்களில் காட்டுவாங்களாம்,அதையும் பார்க்கமுடியாம போச்சு அடுத்தமுறை கட்டாயம் பார்க்கணும்ன்னு ஆசை ...அப்படியே புனலூர் வழியா கொல்லம் போய்பீச்சல ஒரு ரவுண்ட் அடிக்கணும்.

      அதுசரி கீதாக்கா உங்க ஊர்ல.."கொல்லம் போயோர்க்கு இல்லம் வேண்டே" அப்படின்னு ஒரு பழமொழி இருக்கே..அப்படின்னா என்ன,அடுத்த முறை கொல்லம் போய் எழுதணும்ன்னு ஆசை....

      Delete
  6. அண்மையில் விக்கிபீடியாவில் முழுமையான பட்டியலாக தேவார வைப்புத்தலங்கள் பதிவினைத் தொடங்கி, அதில் இல்லாத கோயில்களைப் பற்றி எழுதிவந்தேன். அப்போது இக்கோயிலைப் பற்றி படித்தேன்.
    வைப்புத்தலங்கள் குறிப்பு மற்றொரு செய்தி : நாயன்மார்கள் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே அத்தலத்திற்குச் செல்லாமல் பிறிதொரு தலத்திலிருந்தோ, இடத்திலிருந்தோ பாடும் கோயில்கள் வைப்புத்தலங்களாகும்.

    ReplyDelete
    Replies
    1. நல்லதகவல்பா..நானும் வைப்பு தலங்கள் பத்தி இப்பொழுதான் கேள்விப்படுகிறேன்.உங்கள் எழுத்துக்களின் தொகுப்பு லிங்க் கொடுத்தால் நாங்கழும் படித்து தெரிந்து கொள்வோம்...

      Delete
    2. விக்கிபீடியாவில் 700ஆவது பதிவு என்ற தலைப்பில் 26 ஜனவரி 2019 அன்று என் தளத்தில் எழுதியுள்ள பதிவில் பின்வருமாறு கூறியுள்ளேன். "அண்மைக்காலத்தில் மிகவும் முக்கியப்பணியாக நான் கருதியது தேவார வைப்புத்தலங்கள் என்ற தலைப்பில் 147 கோயில்கள் கொண்ட பட்டியலை உருவாக்கி, அதற்கேற்றவாறு தேவார வைப்புத்தலங்கள் என்ற வார்ப்புருவினை அமைத்து 90 விழுக்காட்டுப் பணியினை நிறைவு செய்துள்ளேன். பட்டியலில் இல்லாத கோயில்களைப் பற்றி புதிய பதிவிட்டும், பட்டியலில் உள்ள கோயில்களைப் பற்றிய பதிவுகளை மேம்படுத்தியும் செய்யும் பணியினை விரைவில் நிறைவு செய்யவுள்ளேன்."

      Delete
  7. குற்றாலம் திருநெல்வேலி போன்ற இடங்களுக்குப் போய் இருந்தாலும் இந்த ஊர் பற்றி இப்போதுதான் கேள்விபடுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. அடுத்த முறை செல்லும் போது கட்டாயம் சென்றுவாங்கப்பா.. அருமையான கோவில்.அதைபோல் கோவிலை சுற்றியும் பார்க்கவேண்டிய இடங்கள் நிறைய இருக்கின்றன...

      Delete
  8. அருமையான இடம் கா..

    இடமும், தகவல்களும் மிக மிக சிறப்பு ....

    ReplyDelete
    Replies
    1. அனு கூடவே நானும் சென்றது சிறப்பு....அப்படின்னு சொல்லிக்குவோம்,ஆனா பக்திலதான் இருக்கு நம்மில் நிறையபேர் அறிந்திடாத கோவில்..அழகான இயற்க்கை சூழலில் அமைந்த இடம்,ஒருமுறை சென்று வரவேண்டியதுதானே ...

      Delete
  9. nalla thagavalgal.itemathiti agastiarmalai mela subramaniasamy koil snru varavum(r.f.permission needed)
    nanri valga valamudan

    ReplyDelete
  10. my name is Rajagopalan RETD CIVIL NGINEER

    ReplyDelete